மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Friday, September 30, 2022

வராமல் வந்த தேவதை-25

 


அத்தியாயம்-25

 

சுரபி- காஞ்சிபுரத்தை சேர்ந்த சகுந்தலை மற்றும் குமரனுக்கு  பிறந்த செல்ல மகள்.  

சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட,  சிங்கில் மதர் ஆக,  அவள் தாய் தன்னை  கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குவதை  கண் கூட பார்த்து வளர்ந்தவள் சுரபி.  

தாயின் கஷ்டம் சிறுவயதிலேயே புரிந்ததாலயோ  என்னவோ சுரபியும் நன்றாகப் படித்து ஒரு நல்ல வேலைக்குப் போய் தன் அன்னையை கஷ்டப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மட்டும் குறிக்கோளாக கொண்டு வளர்ந்தவள்..!

அவளிடம் செல்வமும், கருணையும், அன்பும்,  மகிழ்ச்சியும் எப்பொழுதும் குறையாமல் அமுதசுரபியாக இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தான் பார்த்து பார்த்து தன் மகளுக்கு சுரபி என்று பெயர் வைத்தார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை போல அன்பும்,  கருணையும் மகிழ்ச்சியும் சுரக்கவில்லை அவளிடம்...மாறாக  ஓயாத வலியும் வேதனையும் கவலைகளும் தான் சுரந்து கொண்டிருந்தது என்பதை அறியவில்லை அவள் பெற்றோர்..!  

12 ஆம் வகுப்பு முடிந்ததும் எளிதாக வேலை கிடைக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் எடுத்து படித்தாள்.  

கேம்பஸ் தேர்வில் ஒரு சிறிய நிறுவனத்தில் தேர்வாகி விட,  தன் அன்னையுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தாள் சுரபி.

அதற்கு அடுத்து வந்த வருடங்கள் எல்லாம் சுரபியின் வாழ்வில் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் மட்டுமே..!  

எந்த ஒரு  கவலையுமின்றி தன் அன்னையுடன் உற்சாகமாக தன் நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள்.  அதற்கு ஆப்பு வைக்க என்றே அந்த விதியார் தன் அடுத்த காயை நகர்த்தினார்.

******

சுரபிக்கு திருமண வயது வந்து விட்டதாக சொல்லி அவளின் திருமணப் பேச்சை ஆரம்பித்தார் சகுந்தலை.  

சுரபிக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை..!  

தான் திருமணம் ஆகி கணவன் வீட்டிற்கு சென்றுவிட்டால்,  தன் அன்னையை பிரிய வேண்டுமே என்று தவிப்புடன் திருமணத்தை மறுக்க, சகுந்தலையோ வேற சொன்னார்.

அவளுக்கு திருமணத்தை  முடித்து விட்டு தங்கள் சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கே  சென்று விடுவதாக சொல்லி தன் மகளை திருமணத்திற்காக வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

அவளும் கழுவுற மீனில் நழுவுற மீனாய் எதுவும் பிடிகொடுத்து பேசாமல் நழுவி கொண்டிருந்தாள்.

அந்த நிலையில்தான் திடீரென்று ஒருநாள் சுரபியின் அன்னையிடம் வந்து நின்றான் ஷ்யாம் சுந்தர்.  

*******

சுரபி வேலை செய்த மென்பொருள் நிறுவனத்தில், மற்றொரு  ப்ராஜெக்ட்டில் மேனேஜராக இருந்தவன்.

வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அவனின் மனதை கொள்ளை கொண்டு விட்டாள்  சுரபி.  

இன்று இருக்கும் நாகரீக பெண்களின் மத்தியில்,  சுரபி மட்டும் அவன் கண்களுக்கு தனித்து நின்றாள்.

எந்த ஒரு ஒப்பனையும்  இல்லாத அவளின் எழிலான முகமும்... பெண்மைக்கே உரித்தான மென்மையான குணம்

தானும் பொறியியல் படித்துவிட்டு, கை நிறைய சம்பாதிக்கிறேன் என்ற மெத்தனம் சிறிதும் இல்லாத எளிமையும், அவளின் ஒவ்வொரு அசைவிலும், செயலிலும்  தெரிந்த  நளினம்...!

அவளை பார்த்த முதல் நாளே அவன் மனதில் பசக் என்று ஒட்டிக் கொண்டுவிட்டாள் சுரபி.

ஆனாலும் அவனுக்கு அடுத்து ஒரு தம்பி,  தங்கை என்ற நடுத்தர  குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்துவிட்டதால், அவனுக்கு என்று சில பல பொறுப்புகள் காத்துக் கொண்டிருக்க,  அதையெல்லாம் விடுத்து காதல் என்று சுரபியின் பின்னால் சுற்ற அவனுக்கு மனம் வரவில்லை.

அது பிடிக்கவும் இல்லை..!  

அதனாலேயே தன் மனதை கொள்ளை கொண்ட தேவதையை தள்ளி நின்று ரசித்து பார்த்தவாறே தன் காதல் பயிரை வளர்த்து வந்தான் ஷ்யாம்.  

தன்னை ஒருவன் பின் தொடர்கிறான்...தன்னை மறைந்து நின்று காதலிக்கிறான் என்று தெரியாத சுரபியோ, தன்  டீம் மேட்ஸ்களுடன் கலகலவென்று பேசி சிரித்தபடு உற்சாகமாக வளைய வந்து கொண்டிருந்தாள்.

*****

ருநாள் கேன்டீனில் சுரபி நண்பர்களுடன் ஏதோ சாப்பிட்டபடி வளவளத்துக் கொண்டிருந்தாள். வழக்கமாக எல்லாரும் கலகலவென்று பேசி சிரிக்கும் கூட்டம் தான் அது.

அன்று வித்தியாசமாக எல்லாரும்  சுரபியை ஓட்டிக் கொண்டிருந்தனர்..!  

அவர்களுக்கு அடுத்து பின்புறமாய் இருந்த  இருக்கையில் அமர்ந்திருந்த ஷ்யாம் தன் காதை தீட்டி வைத்துக் கொண்டு என்ன பேசுகிறார்கள் என்று கேட்க,  அப்பொழுதுதான் சுரபி சொன்ன செய்தி அவன் உள்ளே மின்னாமல் முழங்காமல் இடியை இறக்கியது.  

“சோ...சீக்கிரம் கல்யாண சாப்பாடு போட போறா  சுறா... இந்த இளவரசிக்கு மாலையிட்டு தன் ராணியாக ஆக்கிக்க போற இளவரசன் யார் என்று தெரிந்து கொள்ள எங்களுக்கெல்லாம் ஆர்வமாக இருக்கிறது...!

சீக்கிரம் உன் இளவரசனுடைய போட்டோவையாவது கண்ணுல காட்டுடி....”  தோழி ஒருத்தி சுரபியை ஓட்டியது அரைகுறையாக அவன் செவியை எட்டியது.

அவன் கேட்ட அரைகுறை பேச்சினாலயே  அவனுக்கு இந்த உலகமே நின்றுபோனது போல இருந்தது..!

“கல்யாணமா?  என் சுரபிக்கு கல்யாணமா?  அதுவும் அவளை மாலையிட்டு மணந்து கொள்ள, எங்கிருந்தோ இளவரசன்  வரப் போகிறானாமே?  

யார்  அந்த இளவரசன்? இத்தனை வருடங்களாக என்  கண்ணுக்குள் பொத்தி வைத்து பாதுகாத்துக் கொண்டிருக்கும் என்னவளை என்னிடம் இருந்து  பறித்துச்  செல்ல வரப்போகிற அந்த இளவரசன் யாரோ? “  என்று தனக்குள்ளே உடைந்து போனான் ஷ்யாம்.  

அவன் இதயத்தை யாரோ கத்தியை வைத்து திருகுவதை போனற் வலி..!

அவள் மீது தான் இந்த அளவுக்கு காதல் கொண்டுள்ளது அந்த கணம்தான் அவனுக்கு தெள்ளத்தெளிவானது.

பக்கத்து இருக்கையில் இருந்து பேச்சுக்கள் அவனையும் மீறி காதில் விழத்தான் செய்தது..!  

“அடச்சீ...!  சும்மா இருடி...!  இன்னும் மாப்பிள்ளையையே  பார்க்க ஆரம்பிக்கலயாம். அதுக்குள்ள கல்யாண சாப்பாடாம்...  இளவரசனாம்...” என்று  தன் தோழியை செல்லமாக முறைக்க, அதைக்கேட்ட ஷ்யாமுக்கு  அப்பொழுதுதான் போன உயிர் திரும்பி வந்ததை போல இருந்தது.  

“ஊப்ப்ப்ப்ப்ப்...” என்று பெருமூச்சு விட்டான்.

சற்று முன்னால் தொலைந்து போயிருந்த  அவன் உற்சாகம் மீண்டும் தொற்றிக் கொள்ள, மனதிற்குள்ளே விசில் அடித்தபடி  தொடர்ந்து அவர்களின் உரையாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான்.  

“என்னடி சொல்லற? “  என்று அருகில் இருந்த மற்றொரு தோழி கேட்க,  

“ஆமான் டி.. என் மேரேஜ் பத்தி அம்மா ரொம நாளாவே நச்சரிச்சுகிட்டு இருக்காங்க... அவங்க தொல்லை தாங்க முடியாமல், சரி மாப்பிள்ளையை பார்க்க ஆரம்பிங்கனு சொல்லிட்டு வந்தேன்...

அதுக்குத்தான் இந்த கூஜா என்னை ஓட்டிகிட்டு இருக்கா...” என்று தன் தோழியான பூஜாவின் கையில் நறுக்கென்று கிள்ளி சிரித்தாள் சுரபி.

அவளின் சிரிப்பையே ஓரக்கண்ணால் ரசித்து பார்த்துகொண்டிருந்தான் ஷ்யாம்.!

*****

டச்சே... இதுதான் மேட்டரா? நான் கூட இந்த கூஜா உன்னை ஓட்டினதை  வச்சு, பக்கமாகவே கல்யாண சாப்பாடு போட போற ? உன் மேரேஜ் பங்சனுக்கு எந்த சேரி கட்டறது? எந்த ஹேர் ஸ்டைல்? ஜுவெல்லரிஸ் என்று ப்ளான்  போட ஆரம்பிச்சுட்டேன்.

நீ என்னடான்னா இப்பதான் ஜாதகத்தையே கையில் எடுத்திருக்காங்கனு சொல்ற...” என்று சலித்துக் கொண்டாள் கல்பனா,,!  

“ஹ்ம்ம்ம் இப்பதான் அம்மா என் ஜாதகத்தை எடுத்து இருக்காங்க..!  இன்னும் என் ஜாதகத்துக்கு பொருத்தமான ஜாதகத்தை தேடி அலசி ஆராய்ந்து ஒரு மாப்பிள்ளையை கொண்டு வர எப்படியும் இன்னும் இரண்டு வருடம் ஆகும்..!

அதனால்தான் சரி பிராசஸ் ஆரம்பிக்கட்டும் என்று அம்மாக்கு இன்னைக்கு ஓகே சொன்னேன்..!  அதுக்கு போய் இந்த கூஜா என்னை இப்படி ஓட்டறா “  என்று செல்லமாக கோபித்துக் கொள்ள,

மற்றவர்களோ அந்த கூஜா என்கிற பூஜாவை மொத்த ஆரம்பித்து இருந்தனர்.

அதைத் தொடர்ந்து அந்த  நட்பு வட்டத்தின்  அரட்டை தொடர்ந்து கொண்டிருந்தது..!  ஆனால் ஷ்யாம் முகம் தான் ஏதோ யோசனையாக இருந்தது.

சுரபிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று தெரிந்ததுமே அவனுக்கு மனதை பிசைந்தது தான்.  

அவனுக்குமே இப்பொழுது 29 வயது ஆகியிருந்தது.  

அவன் வீட்டிலும் அவன் அன்னை சுந்தரி , அவனின் திருமணத்திற்காக நச்சரித்துக் கொண்டிருக்கிறார் தான். .  

ஆனாலும் அவன் தான் தன் கடமையை முடிக்காமல் தனக்கான வாழ்க்கையை தேடிக்க  கூடாது என்று பிடிவாதமாக இருந்தான்.  

அதோடு சுரபியை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க அவனுக்கு மனம் வரவில்லை..! அவள் என்னவள் என்ற உணர்வே மேலோங்கி நிக்க, கடமையா, காதலா என்று பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்தான்.

இறுதியில் இரண்டுமே ஜெயிக்க ஒரு வழியை கண்டுபிடித்தான்..!

சுரபியை பற்றி நன்றாக தெரிந்ததால், திருமணத்திற்கு பிறகு  என் கடமையை செய்ய அவளும் கண்டிப்பாக துணை நிற்பாள். என்  தம்பி தங்கையை அவளும் தன் தம்பி, தங்கையாக ஏற்றுக்கொள்வாள்  என்று தோன்ற, அவளை மணக்க முடிவு செய்தான்.

தன் மனதில் இருக்கும் காதலை அவளிடம் நேரடியாக சொல்லாமல், அரேஜ்ட் மேரேஜ் ஆக இதை எடுத்து செல்ல திட்டமிட்டான்.

அந்த வார இறுதியில் சுரபியின் வீட்டிற்கே வந்து அவள் அன்னையை சந்தித்து   நேரடியாகவே சுரபியை பெண் கேட்டான் ஷ்யாம்.

*****  

திடீரென்று முன்பின் தெரியாத ஒருவன் வந்து தன் மகளை பெண்  கேட்கவும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார் சகுந்தலை.

அவனை ஒரு மார்க்கமாக மேலிருந்து கீழாக பார்த்து அவனை அளவிட்டு கொண்டு இருக்க, ஷ்யாம் கொஞ்சமும் யோசிக்காமல்,

“அத்தை நீங்க எதுவும் யோசிக்க வேண்டாம். நீங்க சுரபியை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து இருக்கீங்கன்னு எனக்கு தெரியும்.  

இத்தனை நாள் நீங்க எப்படி பார்த்துக்கிட்டிங்களோ, அதை விட பலமடங்கு அவளை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு..!  அதோடு உங்களையும் பார்த்துக் கொள்வதும் என் பொறுப்பு தான்.  

எனக்கு நல்ல வேலை...கை நிறைய சம்பளம் வருகிறது.  சென்னையில் சொந்தமாக வீடு இருக்கிறது.  ஒரே ஒரு கடமை மட்டும் பாக்கி இருக்கிறது.  அது என் தம்பி, தங்கைகளை கரை சேர்ப்பது.

இப்பொழுது தான் அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது என்னுடைய கடமை.

சுரபியை நான் நல்லா பார்த்துக்குவேன்.. நீங்க நம்பி அவளை    என்கிட்ட கொடுங்க...”  

என்று நேரடியாக கேட்க,  அவனின்  இந்த வெளிப்படையான பேச்சும், தன் குடும்பத்தின் மீதான் அவனின் அக்கறையும்,   அவன்  கண்களில் தெரிந்த சுரபியின் மீதான காதலும் சகுந்தலைக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது.

அதோடு கடந்த ஒரு வாரமாக,  சுரபியின் ஜாதகத்தை வைத்துக் கொண்டு அவர் சுற்றாத இடமில்லை.

அவளின் ஜாதகத்தை பார்த்த ஜோசியர்கள் எல்லாருமே

“இந்த பெண்ணுக்கு அவ்வளவு எளிதாக திருமணம் நடக்காது. முப்பது வயதுக்கு மேலதான் கல்யாண யோகம் கூடி வருது.

அதுக்கு முன்னாடி நீங்க என்னதான் முட்டி மொதி, குட்டிக்கரணம் போட்டாலும், இந்த ஜாதகக்காரிக்கு கழுத்தில் தாலி ஏறாது.

வீணாக நீங்க மாப்பிள்ளையை தேடி அலைந்து, உங்க நேரத்தையும் காசையும் வீணடிக்க வேண்டாம். அப்படியே விட்டுடுங்க.. முப்பது வயதுக்கு மேல இந்த பொண்ணு ஜாதகத்தை எடுங்க.

அப்பவும் திருமணம் நடக்க சில பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் கட்டாயம் திருமணம் நடந்து விடும். இந்த பொண்ணு கழுத்துல தாலி ஏறும்.

ஆனால் அதற்கு பிறகு அமோகமான வாழ்க்கையை உங்க பொண்ணு வாழப்போறா... அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க...” என்று சொல்லி திருப்பி அனுப்பி  வைத்தனர்.

அதைக்கேட்ட சகுந்தலை ரொம்பவுமே இடிந்து போய்விட்டார்..!

ஒருவருக்கு பதிலாக கிட்டத்தட்ட எல்லா ஜோசியர்களும் அதையே  சொல்ல,  அவருக்கு தலையில் இடி விழுந்ததைப் போல ஆகிவிட்டது.  

தன் ஒரே செல்ல மகளுக்கு திருமணம் நடக்காதா?  அதைத் தன் கண்குளிர பார்க்க மாட்டோமா என்று அவரின் மனம் அடித்துக் கொண்டது தான்.  

ஆனாலும் தன் மன சஞ்சலத்தை சுரபியிடம் காட்டிக் கொண்டிருக்கவில்லை.

இந்த நிலையில்தான் ஷ்யாம் சுரபியை பெண் கேட்டு வந்தது.  

சகுந்தலைக்கோ என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது.

ஷ்யாமின் அலட்டிக் கொள்ளாத எளிய தோற்றமும், கம்பீரமும், தன் குடும்பத்தை காக்கும் கடமையை பெரிதாக கருதும்,  அவனின் அக்கறை...கூடவே அவனின் வெளிப்படையான பேச்சு என எல்லாமே சகுந்தலைக்கு பிடித்து விட்டது.

தன் மகளுக்கு பொருத்தமான இளவரசன் இவன்தான் என்று மனதுக்குள் முடிவு செய்தார்.

அதோடு மாப்பிள்ளையை தேடி அலையாமல், மாதா  மாதம் கல்யாண புரோக்கர்களுக்கு ஒரு தொகையை கொடுத்து அழுவாமல், வீடு தேடி வந்த வரனை  கைவிட மனம் வரவில்லை..!   

தன் மகளிடம் பேசிவிட்டு சொல்வதாக ஷ்யாமை அனுப்பி வைத்தார்.

*****

ன் மனம் முடிவு செய்தாலும், இந்த கட்டங்கள் என்ன சொல்கிறதோ என்று தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது.

அதனால் ஷ்யாமின்  ஜாதகத்தை வாட்ஸ்அப்பில் பெற்றுக்கொண்டவர் , திரும்பவும் இருவரின் ஜாதகத்தை கொண்டு சென்று அதே ஜோசியர்கள் இடம் காண்பிக்க அச்சமாக இருந்தது.  

அவர்கள் எதிர்மறையாக ஏதாவது சொல்லி விட்டால், அதை எதிர்த்து செயல்படும் தைர்யம், துணிச்சல் அவரிடம் இல்லை.

அவர் அப்படித்தான்...ஜாதகத்தில் அலாதி நம்பிக்கை.

அதனால் பழைய  ஜோதிடர்களிடம் செல்லாமல், வேற ஒரு புது ஜோசியரிடம் சென்று இரண்டு பேர் ஜாதகத்தையும் காண்பிக்க,  அவரும் தொழிலுக்கு புதிதாக வந்திருந்தவர் போல.  

சகுந்தலையின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை கண்டவர், அவர் போட்டு வைத்த  கட்டம் சொல்வதை சொல்லாமல்,  சகுந்தலை எதிர்பார்ப்புக்கு தகுந்த மாதிரி பதிலை மாற்றி சொன்னார்.  

இரண்டு பேருக்கும் ஜாதக  பொருத்தம் அமோகமாக இருக்கிறது.  தாராளமாக ரெண்டு பேருக்கும் திருமணம் செய்யலாம்...”  என்று சொல்லி விட,  சகுந்தலை மனதில்  நிம்மதி ஏற்பட்டது.  

அந்த நிம்மதியில், மகிழ்ச்சியில் ஜோதிடர் பீஸ் உடன் இன்னும் கொஞ்சம் சேர்த்து கொடுத்து விட்டு திரும்பி வந்தார்.

சகுந்தலை மனதில் உற்சாகம் பொங்கி கொண்டிருக்க, அந்த நிம்மதியில், உற்சாகத்தில்,  முன்பு மற்ற ஜோதிடர்கள் சொன்னது எல்லாம் பின்னுக்குத் தள்ளி திருமணத்திற்கான தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.

******

ன் மகளிடம் விஷயத்தை சொல்ல அவளுக்கோ பேரதிர்ச்சி..!

எப்படியும் அம்மா மாப்பிள்ளையை தேடி கண்டு பிடித்து கொண்டு வர, இன்னும் ஒரு வருடம் ஆகி விடும்.

அப்படியே கொண்டு வந்தாலும்,  அந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று சொல்லி இன்னொரு ஒரு வருடம் கடத்திடலாம்.

ஆக மொத்தம் மாப்பிள்ளை தேடும் படலத்தை சொல்லியே ஒரு  இரண்டு வருடங்களை ஓட்டி விடலாம் என்று எண்ணியிருக்க,  தன் அன்னை அவளின்  திருமணப் பேச்சை ஆரம்பித்த இரண்டு வாரத்திலேயே மாப்பிள்ளையோட வந்து நிற்பதை கண்டதும் ஷாக்காகி போனாள் சுரபி..!

“மா....எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேண்டும்...”  என்று கெஞ்ச

“இது நல்ல வரன் சுரபி மா... மாப்பிள்ளை  பையனும் உன் கம்பெனில தான் வேலை செய்யறாராம்...” ன்று சொல்லி அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார் சகுந்தலை.

“வாட்? என் ஆபிஸ் லயா? யாருமா அது? எனக்கு தெரியாமல்..? “ என்று ஆர்வமாக கேட்க, அதுவரை சுரத்தே இல்லாமல் தான் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த தன் மகள்,  இப்பொழுது மாப்பிள்ளையை பற்றி ஆர்வமாக கேட்கவும் சகுந்தலைக்கு நம்பிக்கை வந்திருந்தது.

எப்படியும் தன் மகள் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விடுவாள் என்று பூரிப்புடன்  ஷ்யாம் வந்து சென்றதை... அவன் பெண் கேட்ட விவரத்தையும் தன் மகளுக்கு தெளிவாக சொல்ல,  சுரபிக்கு ஆச்சரியம்.  

ஷ்யாம் சுந்தர்..பெயர்  கேள்விப்பட்ட பெயராகத்தான்  இருந்தது.  தன்  குட்டி மூளையை கசக்கி பிழிந்து யோசித்ததில் கொஞ்சம் புரிந்தது.

மற்றொரு டிபார்ட்மென்ட் உடைய ப்ராஜெக்ட்ல்,   ப்ராஜெக்ட் மேனேஜர் என்ற அளவில் ஷ்யாம் சுந்தரை  தெரியும்.  மற்றபடி அவனை சந்தித்தது இல்லை.  ஓரிரு வார்த்தை பேசியது கூட இல்லை.  

அப்படி இருக்க அவன் எப்படி என்னை பெண் கேட்டு வந்திருக்கிறான்? அதுவும் என்கிட்ட நேரடியாக எதுவும் பேசாமல்,  அம்மாகிட்ட நேரடியாக வந்து பெண் கேட்டு வைத்திருக்கிறான்? “  

என்று ஷ்யாம் மீது சிறு கோபமும், கூடவே  சிறு புன்னகையும் எட்டிப் பார்க்கத்தான் செய்தது.  

ஆனாலும் ஏனோ உடனேயே திருமணம் செய்து கொண்டு தன் அன்னையை விட்டு பிரிந்து செல்ல மனம் வரவில்லை.  

மா... இப்ப வந்திருக்கிறது நல்ல வரனாகவே இருந்துட்டு போகட்டும்.  இன்னும் ஒரு வருடம் கழித்து இதைவிட நல்ல வரனாக கூட வரலாம்.   

இன்னும் ஒரு வருஷம்...ஒரே ஒரு வருஷம் உன் கூடவே ஜாலியா இருந்துட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேனே..ப்ளீஸ் மா...”  என்று தன் அன்னையின் தாடையைப் பிடித்து இடவலமாக ஆட்டி செல்லம் கொஞ்சினாள் பெண்.

தன் மகளின் கொஞ்சலில் கொஞ்சம் உருகித்தான் போனாள்  சகுந்தலை.

அவருக்கும் ஆசை தான்..!  

தன் மகளுடன் இன்னொரு வருடமாவது தங்கியிருக்க வேண்டும் என்று ஆசைதான்.

ஒருவேளை அப்படியே விட்டிருந்தால் இன்னும் ஒரு வருடமாவது அவர் இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கலாமோ என்னவோ..!  

ஆனால் அந்த விதியார் போட்ட கணக்கு வேறாக இருந்து விட்டதே..!  

மற்ற ஜோதிடர்கள் தன் மகளின் திருமணத்தை பற்றி சொன்னது நினைவு வர ஏனோ சகுந்தலைக்கு  ஷ்யாமை விட்டுவிட மனம் வரவில்லை.  

ஒருவேளை இந்த வரன் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்,  பிறகு தன் மகளுக்கு மற்ற வரன்கள்  கூடி வராது போய்விட்டால்?

அந்த  ஜோதிடர்கள்  சொன்னது போல, முப்பது வயதில்தான் அவளுக்கு திருமண யோகம் வரும்  என்றால் என்ன செய்வது என்று அச்சம் மேலிட,  அதுவரை தன் மகளை  அப்படியே விட்டுவிட மனம் வரவில்லை.

அதோடு இடையில் தனக்கு ஏதாவது ஆகி விட்டால், தன் மகளை அனாதையாக விட்டு செல்ல வேண்டி இருக்குமே..!

அதற்கு பேசாமல் இப்பயே ஒருவனிடம் தன் மகளை பிடித்து கொடுத்து ஒப்படைத்து விட்டால், அவரின் பாதி பாரம் குறைந்து விடும்.

அதனால்  ஆனது ஆகட்டும்..ஷ்யாம் தான் மாப்பிள்ளை என்று முடிவு செய்தவர் , தன் முடிவுக்கு சம்மதம் சொல்ல வேண்டி தன் மகளை நெருக்கினார்.

“இல்லடா மா...  இந்த ஒரு வருடத்திற்குள் உனக்கு திருமணத்தை முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.  அதனால் கண்டிப்பாக இந்த வருடம் நான் உனக்கு திருமணத்தை பண்ணியே  தீர  வேண்டும்.

இந்த ஷ்யாம் இல்லையென்றால் வேற ஒருவனை கண்டுபிடித்தாக வேண்டும்.  அதனால் வேறு எதையும் யோசிக்காமல் இந்த அம்மாவுக்காக ஓகே சொல்லுடா...  என் தங்கம் இல்ல...என்  பட்டு குட்டி இல்ல...”

என்று திரும்பி தன் மகளை கொஞ்ச,  அவளும் அதற்குமேல் மறுக்க முடியாமல்  கொஞ்சம் தளர்ந்து போய் சரியென்று தலையை ஆட்டி வைத்தாள் சுரபி.

சுரபிக்கும் அவள் மறுப்பதற்கு காரணம் எதுவும் இல்லாமல் போக,  தன் அன்னையின் சந்தோஷத்திற்காக சரி என்று தலையை அசைத்து வைத்தாள்.

தன் மகளின் சம்மதம் கிடைத்ததும் துள்ளி குதித்தார் சகுந்தலை.

அவளை கட்டி அணைத்து, உச்சி முகர்ந்தவர், தன் அலைபேசியை எடுத்து ஷ்யாம் ஐ    அழைத்து விஷயத்தை சொல்ல அவனும் யாகூ... என்று துள்ளிக் குதித்தான்.  

******

டுத்த வாரமே தன் குடும்பத்தோடு பெண் பார்க்க சுரபியின் வீட்டிற்கு வந்துவிட்டான்.

ஷ்யாமின் அன்னை  சுந்தரி,  அவன்  அப்பா சந்திரசேகர், மகள் ஷ்யாமளா, இளைய மகன் ஷ்யாம் ப்ரகாஷ் என  எல்லாருமே வெகு இயல்பாக பழக,  அந்த குடும்பத்தை சகுந்தலைவுக்கு ரொம்ப பிடித்துவிட்டது.  

அதோடு இதுவரை ஒற்றை பிள்ளையாக வளர்ந்த தன் மகள்...  இனிமேல் கலகலப்பாக இத்தனை பேர் வசிக்கும் ஒரே வீட்டில் வசிக்க போகிறாள்  என்று பூரித்துப் போனார்.  

அதன் பிறகு இருபக்கமும் பேசி முடித்து அடுத்த மூன்றாவது மாதத்தில் திருமணம் என்று நிச்சயித்தனர்.

ஷ்யாமால் இன்னுமே நம்ப முடியவில்லை.

தன் காதல் இவ்வளவு எளிதாக கை கூடும்.. தன் மனம் கவர்ந்தவளே தனக்கு மனையாளாக வரப்போகிறாள் என்று அவனால் நம்பவே முடியவில்லை.

சுரபி தனக்கு கிடைப்பாள் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாமல் எதுக்கும் முயன்று பார்க்கலாமே என்று தான் சுரபி வீட்டிற்கு சென்று பெண் கேட்டது.

அது தன் நிச்சயம் வரை வந்து நின்றதை அவனால் இன்னுமே நம்பமுடியவில்லை.

அன்று இரவு, தன் அறையில் குத்தாட்டம் போட்டும், தலையணையை கட்டிக்கொண்டு முத்தமழை பொழிந்தான் ஷ்யாம்.

ஆனால் அவனுடைய சந்தோஷத்திற்கு அடுத்த நாளே ஆப்பு வைத்தார் திருவாளர் விதியார்..! 
Share:

2 comments:

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *