மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Sunday, September 25, 2022

வராமல் வந்த தேவதை-7

 


அத்தியாயம்-7


றுநாள் காலை, அலார்ம் ஒரு முறை அடித்ததுமே எழுந்து, பரபரப்பாக  வேலை எல்லாம் முடித்து,   ஒன்பதரை மணிக்கே  வீட்டை பூட்டிக்கொண்டு, தன் மகளுடன்  அலுவலகத்துக்கு கிளம்பி விட்டாள் சுரபி.

நேற்றைப் போலவே இன்றும் கருப்பு நிறத்திலான ஜீன்ஸ்ம் , சந்தன நிறத்திலான டாப்ஸ் அணிந்திருந்தவள், தன் மகளுக்கும்  அழகான தங்க நிறத்திலான  ப்ராக் அணிவித்திருந்தாள்.

காலில் டோரா படம் பூட்ட பிங்க் நிற செருப்பும், அவளின் பின்புறமாய் பெரியதாய் டோரா படம் போட்ட குட்டி பேக்பேக் ஒன்றையும் மாட்டிக்கொண்டு தன் அன்னையின் சுண்டுவிரலை பிடித்தபடி சாலையின் ஓரமாக நடந்து கொண்டிருந்தாள் அந்த குட்டி தேவதை.

சுரபி வசிக்கும் வீடு, அலுவலகத்தின்  அருகில் இருந்ததாலும், அதோடு கொஞ்ச நேரமாவது காத்தாட நடக்க வேண்டும்...மற்றும் தன் மகளுக்கு நடக்கும் பொழுதே ஆங்காங்கே  தெரியும் காட்சிகளை விவரிக்கும் நோக்கிலும் இன்று அவளின் கை பிடித்து நடத்தியவாறு அழைத்து சென்றாள் சுரபி.    

அதே நேரம் தன்னுடைய ஃபெர்ராரியில் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தான் விகர்த்தனன்.

இன்று காலையில் எழுந்ததில் இருந்தே அவனுள் உற்சாகம் குமிழிட்டு கொண்டிருந்தது.

வழக்கமாக காலையில் எழும்பொழுது வரும் எரிச்சலோ, வெறுமையோ இல்லாமல், அவன் மனதில் இனம் புரியாத பரவசம் சூழ்ந்து கொண்டிருந்தது.

அதற்கான காரணம் அவன் அறிந்ததே..!

“மை ஏஞ்சல்... மை ப்ரின்ஸஸ்... “ என்று புன்னகையோடு முனுமுனுத்தவன், துள்ளலுடன் எழுந்து உடற்பயிற்சிகளை முடித்து சீக்கிரம் கிளம்பி அலுவலகத்துக்கு வந்து விட்டான்.

அவளை... அந்த குட்டி தேவதையை எப்பொழுது பார்ப்போம்  என்ற தவிப்புடன் காரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவனுக்கு, கும்பிட போன தெய்வம் நேரிலயே வந்ததை போல, முகம் பிரகாசித்தது.

கார் அவனுடைய அலுவலகம் இருக்கும் பகுதியில் நுழைந்த பொழுதே,   சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த   அவர்கள் இருவரையும் கண்டு கொண்டான்.  

அந்த குட்டி தேவதையை தொலைவில் இருந்து கண்டு கொண்டதுமே,  அவன் உடலில் ஒரு பரவசம்.  

அதுவும் குட்டி ப்ராக்கும், பேக்பேக்குமாய், தன் அன்னையின் கையை பிடித்துக் கொண்டு  தளிர்  நடையிட்டு  நடந்து செல்வதை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு.

பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவன், முன்னால் இருந்த  டிரைவர் முத்துவிடம் காரை அவர்களின் பக்கமாக நிறுத்த சொன்னான்.  

முத்துவும் ஆச்சரியத்துடன் தன் எஜமானனை பார்த்துவிட்டு, காரை அவர்களின் அருகில் சென்று நிறுத்த, திடீரென்று தங்கள் அருகில் வந்து நின்ற காரை கண்டதும் திடுக்கிட்டவள், அனிச்சையாய் தன் மகளை இழுத்து தன் பின்னால் நிறுத்திக்கொண்டு, காரை   திரும்பிப் பார்த்தாள் சுரபி.  

அதே நேரம் பின்பக்க கதவை   திறந்து கொண்ட விகர்த்தனன், தலையை மட்டும் வெளியில் நீட்டி,

“ஹாய் ப்ரின்சஸ்...” என்று அந்த குட்டியை பார்த்து கை அசைக்க, அவ்வளவுதான்.. அவனைக்கண்டதும் முகம் விகாசிக்க,

“அப்பா..... “ என்று பாசத்தோடு  அழைத்தவாறு அவள் பிடித்து இருந்த தன் அன்னையின் கையை உதறிவிட்டு, பாய்ந்து பின் இருக்கையின்  கதவுக்கு அருகில் ஓடி வந்தாள் அந்த குட்டி.

பாய்ந்து வந்தவளை அப்படியே அள்ளிக்கொண்டவன், தன் மடியில்  அமர வைத்துக் கொண்டான்.  

அவன்  மடியில் அமர்ந்ததும், வெகு இயல்பாக  அவன் கழுத்தை கட்டிக்கொண்டவள், அவன் கன்னத்தில் முத்த மழை பொழிந்தாள்.  

சற்று முன்னர்தான் வீட்டிலிருந்து கிளம்பியபொழுது, வரவேற்பறையில் மாட்டி இருந்த ஷ்யாம் புகைப்படத்திற்கு    முத்தம் கொடுத்துவிட்டு டாட்டா காட்டிவிட்டு வந்தவள்...  

இப்பொழுது புகைப்படத்தில் பார்த்த அதே அப்பா நேரில் வந்துவிட்ட ஆச்சர்யம்...சந்தோஷம்...அந்தக் குட்டியின் முகத்தில்.

திடீரென்று அங்கே நடந்தேறிய அந்த சம்பவத்தால் அதிர்ந்து நின்றாள் சுரபி..! 

என்ன நடக்கிறது இங்கே என்று உணர முடியாமல், அவள் மூளை வேலைநிறுத்தம் செய்திருந்தது.

சற்று நேரத்தில் தன்னை  சுதாரித்துக்கொண்டு எட்டு வைத்து காரின் பின்பக்கத்திற்கு வேகமாக  சென்றவள், குனிந்து காருக்குள்ளே பார்த்தவள்,  

“என்ன சார் பண்றிங்க? “ என்று ஹை பிச்சில் கத்த ஆரம்பித்தாள்.

அவளின் சத்தம் கேட்டு,  அந்த சாலையில் ஓரமாக ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் திரும்பிப் பார்த்து வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க,

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆபிஸ்க்கு தானே போற... காரில் உட்கார்.. ட்ராப் பண்றேன்...” என்ற விகர்த்தனின் அமர்த்தலான குரலை கேட்டு கோபம் பொங்கி வந்தது.  

“என்ன தேவைக்கு ? எனக்கு ரெண்டு கால்  இருக்கு சார்.. நான் நடந்தே போய்க்குவேன்...” என்று முறைக்க,

“அப்படியா..? நான் பார்க்கலையே....” என்று  குறும்பாக சிரித்தான் விகர்த்தனன்.  

“ஐய...  ஜோக்கு... சிரிச்சிட்டேன்.. “ என்று தன் வாயை இருகோட்டுக்கும் இழுத்து வைத்து சிரிப்பதை போல ஆக்சன் பண்ண, ஒரு நொடி ஆச்சர்யத்துடன் அவன் புருவங்கள் ஏறி இறங்கின.

அதை கண்டு கொள்ளாதவள், மீண்டும் கொதித்தாள்.

“என் புள்ளைய எதுக்கு சார் புடிச்சிங்க? “ என்று எகிற,

“வாட்? நான் புடிச்சேனா? பாத்துமா.. யாராவது கேட்டால் என்னை புள்ளை புடிக்கிறவன்னு நினைச்சிட போறாங்க... நான் ஒன்னும் புடிக்கலை.. என் ப்ரின்சஸ் தான் என்னை பார்த்ததும் என் கிட்ட ஓடி வந்தாள்...

நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கலாம்.. இப்ப முதல்ல கார்ல ஏறு...” என்று அவளுக்கு கட்டளையிட, அதில் இன்னுமாய் சிலிர்த்துக் கொண்டாள்.

“ஹலோ மிஸ்டர்... நான் தான் சொன்னேனே.. எனக்கு ரெண்டு கால் இருக்கு.. நான் நடந்தே போய்க்குவேன்.. நீங்க என் புள்ளைய கொடுத்துட்டு கிளம்புங்க....” என்று முறைக்க,      

“ஆஹான்... ரெண்ட் கால்கள்  இருக்கிறவர்கள் எல்லாம் அலுவலகத்திற்கு நடந்தேதான்  செல்லணும்  என்றால்,    நம்மளை நம்பி இருக்கிற அத்தனை  கார் கம்பெனிகள் என்னாவதாம்? “ என்றான் உதட்டை சுளித்து நக்கலாக சிரித்தவாறு.

“ஹலோ மிஸ்டர்... அவங்க என்ன ஆனா எனக்கு என்ன? அவங்களை தூக்கி பிடிக்கத்தான் உங்களைப்போன்ற ஆட்கள்... வெட்டி பந்தாவிற்காவது வீட்டிற்கு ரெண்டு , மூனு கார் வாங்கி நிறுத்தி வச்சிருப்பிங்களே... “ என்று திருப்பி கொடுத்தவள்

“ஆமா... நான் எதற்கு இவனுடன் காரை  பற்றி வெட்டியா பேசிக்கிட்டு இருக்கேன்... “ என்று அவசரமாக யோசிக்க, அவனும் அதையேதான் சொன்னேன்.

“இப்ப நடு ரோட்ல நின்னுகிட்டு அவங்களுக்காக நாம ஏன் சண்டை போட்டுக்கணும். காரில் ஏறுமா... சீக்கிரம் இடத்தை காலி பண்ணலாம். சுத்தி நிக்கிறவங்க எல்லாரும் நம்மளையே பார்க்கறாங்க..” என்றான் குறுநகையுடன்.

“ஹலோ மிஸ்டர்... நான் எதுக்கு உங்க கார்ல ஏறனும்?.. என் புள்ளைய கொடுங்க... நான் நடந்தே போய்க்கிறேன்..” என்று மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க,

“ஸ்அப்பா.. திரும்பவும் முதலில் இருந்தா?  ...  லுக் கியர் பெண்ணே...  உன்னுடன் விவாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை...” என்று முடிக்கும் முன்னே

“எனக்கு மட்டும் வேலை வெட்டி இல்லையா? “ என்று முறைக்க,

“சரியான அவசரத்துக்கு பொறந்திருப்பா போல... “ என்று முனுமுனுக்க,

“நான் ஒன்னும் அவசரத்தில பொறக்கலை.. ஆற அமர எங்கம்மாவுக்கு  டைம் கொடுத்தேதான் பொறந்தேன்...” என்று தலையை சிலிப்பிக் கொண்டாள் சுரபி.

தன் மனதில் இருப்பதை அவள் கண்டு கொண்டு பதில் சொன்ன அவளை கண்டு,  அவன் கண்களில் ஒரு நொடி மின்னல் வெட்டிச் சென்றது.

அதோடு அவள் தலை சிலுப்பும்பொழுது, அவள் போட்டிருந்த ஒற்றைப் பின்னலும் சிலுப்பி ஆட, அவள் மூக்கும், இதழும் கூட அவனைப்  பார்த்து சிலுப்பிக் கொண்டு முறைப்பதை போல இருக்க, தன்னை மறந்து ஒரு நொடி அவளை ரசித்து பார்த்தான் விகர்த்தனன்.

அதுவரை அவனுடன் வாயடித்தவள் அவனின் ரசனையான பார்வையை கண்டதும், ஒரு கணம் தானாக அவள் கன்னங்கள் சிவந்தன.

தன் கீழ் உதட்டை கடித்துக்கொண்டு, தன் பார்வையை தழைத்துக்கொண்டவள், மீண்டும் சிலுப்பிக் கொண்டு தன் பிள்ளையை கொடுக்க சொல்லி அவனுடன் சண்டைக்கு நின்றாள்.

அவள் மகளோ அவர்களின் சண்டையை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு, அவன் மடியில் சட்டமாக அமர்ந்து கொண்டு அவன் கையில் அணிந்திருந்த கடிகாரத்துடன் விளையாண்டு கொண்டிருந்தாள்.

“சை.. எல்லாம் இவளால்... “ என்று தன் மகளை பார்த்து முறைத்தவள்,

“வாடி..... “ என்று காருக்குள் தலையை விட்டு அவளை தூக்க முயல, அவளோ மீண்டும் தலையை இருபக்கமும் ஆட்டி மாட்டேன் என்று மறுத்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

அதே நேரம் பின்னால் வந்து இருந்த ஒரு பெரிய லாரி ஒன்று செல்வதற்கு வழியில்லாமல் காரை நகரச்சொல்லி ஹார்ன் பண்ண,

“முதல்ல கார்ல   உட்கார் பெண்ணே...மற்றதை அப்புறம் பேசிக்கலாம்... எல்லாருக்கும் இலவசமா ஒரு சீன் காட்ட வேண்டாம்... “

அதுவரை தன்மையாக பேசிக்கொண்டிருந்தவன் இப்பொழுது  அடிக்குரலில் சீற, அதே நேரம் பின்னால் இருந்த லாரி மீண்டும் ஹார்ன் அடித்தது.

எல்லாரும் மீண்டும் அவர்களையே திரும்பி பார்ப்பது தெரிந்தது.

ஒரு சிலர் என்ன விஷயம் என்று விசாரிக்க கார் அருகில் வருவது தெரிந்தது.  

அவர்கள் வந்து விசாரித்தால்,   எல்லார்  முன்னிலையிலும் தன் மகள் இந்த நெட்டையை தன் அப்பா என்று அழைத்து வைத்தால்,  அவளுக்குத்தான் மானம் போகும் என்று அஞ்சியவள், வேற வழியில்லாமல் காருக்குள் உட்கார வழி தேடினாள்.

அப்பொழுதுதான் அவன் காரின் இருக்கையின் ஓரமாக அமர்ந்து இருப்பது புரிய, உடனே       தன் தோளை குலுக்கிக் கொண்டவன், இருக்கையில்  நகர்ந்து அமர்ந்து கொள்ள, அவளோ மீண்டும் அவனை முறைத்து விட்டு  இருக்கையின் ஓரமாக பட்டும் படாமலும் அமர்ந்து கொண்டாள்.  

அதுவரை அவர்களின் வாக்குவாதத்தை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த குட்டி,   இப்பொழுது நிமிர்ந்து விகர்த்தனன் தாடையை தடவி

“அப்பா....  சாக்கி.... “ என்று சாக்லெட்டை கேட்டவள், அவன் அணிந்திருந்த பார்மல் சட்டையில் இருந்த பாக்கெட்டையும் திறந்து பார்த்து சாக்லெட்டை தேடி    பார்த்தாள்.  

அந்த குட்டியின் முகத்தில் தெரிந்த தேடலும்  , ஆவலும் ,  அவன் பாக்கெட்டை திறந்து பார்த்து எதுவும் இல்லாமல் உதட்டை பிதுக்கிய அழகிலும்  சொக்கி போனான் விகர்த்தனன்.

அவளை அப்படியே அள்ளி மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக   முத்தமிட்டான்.  

அதே இருக்கையில் சற்று தள்ளி அமர்ந்திருந்தவள், அந்த காட்சியை கண்டு ஒரு கணம் உருகி நின்றாலும், அடுத்த கணம் முகம் சிவக்க, கோபமானவள்  

“மிஸ்டர்.. இது என்ன   பழக்கம்? முன்ன பின்ன தெரியாதவர்கள், யாரும் இப்படி  முத்தம் கொடுக்கக் கூடாது...நான் அதை அனுமதிக்க மாட்டேன்...”   என்று எகிற , அவனோ அவள் பேச்சை எதுவும்  சட்டை செய்யவில்லை.  

“அம்மு...  என்ன சாப்டிங்க...?” என்று அந்த குட்டியை  விசாரிக்க,

அவளோ “ இட்டி.....” என்று தன் பால் பற்கள் தெரிய புன்னகைத்தாள்.

“எத்தனை சாப்டிங்க.....?  “ என்று கொஞ்ச,

அவளோ  ஒன்னு என்று தன் இரண்டு கை விரல்களையும் விரித்து,  பத்து விரல்களை   கை காட்டினாள்.

“குட் கேர்ள்....” என்று புன்னகைத்து அவள் கன்னத்தை செல்லமாக கிள்ள, அவளும் மலர்ந்து சிரித்தவள்  

“அப்பா....மம்மு ? “ என்று அவன் வாய்க்குள் கை வைத்து  அவனை கேள்வியாக பார்க்க, அவன் சாப்பிட்டானா என்று கேட்கிறாள் என்பதை கண்டு கொண்டவன்,   இன்பமாய் அதிர்ந்து போனான்.  

******

துவரை அவனை சாப்டியா என்று யாரும் கேட்டதில்லை அவன் மனைவியாக வந்தவள் உள்பட

பசித்தால் அவனாகத்தான் டைனிங் டேபிளுக்கு செல்வான்...  

சாமி இருந்தால் ஓடிவந்து பரிமாறுவான்.  இல்லையென்றால் அவனே  எதையாவது எடுத்து போட்டு  சாப்பிடுகிறேன் என்று பேர் பண்ணி விட்டு சென்று விடுவான்...    

அப்படி இருந்தவனை  அந்த குட்டி   சாப்டீங்களா என்று கேட்டதும் அதில்  மெய்சிலிர்த்து போனான்.  

“இல்லையே.... “  என்று பாவமாக கையை விரிக்க,  அதில்  என்ன புரிந்ததோ, அடுத்த கணம், அந்த குட்டி,  எட்டி  சுரபியின்  கையில் இருந்த பெரிய பையை இழுந்த்தாள்.

“ஏய்.... என்னடி பண்ற? “ என்று சுரபி பையை தன் பக்கம்  இழுக்க,

“அம்மா.... மம்மு....”  என்று பையில் இருந்த டிபன் பாக்ஸை எட்டி இழுக்க முயல, அவள் தனக்காகத்தான் டிபன் பாக்ஸை எடுக்கிறாள் என்று புரிந்தவன், ஒரு கணம் உறைந்து போனான்.

இன்பமாய்   அதிர்ந்து போனான்.  

“யார் இந்த குட்டி தேவதை? நேற்றுதான் அனிச்சையாய் பார்த்தேன்... பார்த்ததும் அப்பா என்று கட்டிக் கொண்டாள். இன்றோ நான் சாப்பிடவில்லை என்றதும் எனக்காய் கொடுக்க தன் சாப்பாட்டை எடுக்கிறாள்...

இரண்டு வயதே ஆகி இருந்த இந்த குட்டிக்குள் இவ்வளவு அறிவா? என் மீது ஏன் இவ்வளவு பாசமாக இருக்கிறாள்? யார் இந்த தேவதை ? என்று ஆச்சர்யத்தோடு அவசரமாக யோசிக்க, அதே நேரம் காரில் இருந்த எப்.எம் ல் அந்த பாட்டு ஒலித்தது...

 

யார் இந்த தேவதை?  யார் இந்த தேவதை..?

ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு...

இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா...?  

 

அந்த பாடல் ஒரு கதாநாயகிக்காக பாடியது என்றாலும், இந்த குட்டிக்கும் பொருந்தும்தான் என்றுதான் தோன்றியது... 

“உண்மைதான்... உலகெங்கும் இருக்கும் பூக்களை விட அழகான பூ இவள் தான்...

என் தனிமையை விரட்டி என்னை ரட்சிக்க வந்த தேவதை... என் குட்டி தேவதை..... “  என்று அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டவன்,

“அப்பாக்கு இந்த குட்டி டப்பா எல்லாம் பத்தாது குட்டிமா... உன்னுடைய குட்டி வயிருக்குத்தான் இது பத்தும்... நீ சாப்பிடு.. அப்பா ஆபிஸ்ல சாப்டுக்கறேன்...” என்று அவளின் குட்டி வயிற்றை மெல்ல அழுத்தி  கொடுக்க, அவளோ அதில் கூச்சமடைய  கிளுக்கி சிரித்தாள்.  

அவர்கள் இருவரின் கொஞ்சலை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு இருந்த சுரபிக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை.  

அதோடு ஒரு தாய்க்கு...பெண்ணுக்கே...  உரிய எச்சரிக்கை உணர்வில், அருகில் அமர்ந்து இருந்தவனை ஓரக்கண்ணால் ஆழ்ந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.

*****

பெண்களுக்கு, அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் தொல்லைகளை பற்றி படித்ததில் இருந்தே அவளுக்கு திக் என்று இருந்தது.

குழந்தையை பாசமாக தூக்கி, ஆசையாக முத்தமிடுவதை போல நடிக்கும் எத்தனையோ கயவர்கள்..அவர்களால் விவரம் தெரியாத குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களை ஒரு கட்டுரையில் படித்து இருந்தாள்.

அதிலிருந்தே யாராவது தன் மகளை தூக்கினாலோ, முத்தமிட வந்தாளோ உடனே தடுத்து விடுவாள்.

தன் சிறகுகளுக்குள் பொத்தி வைத்து அடை காக்கும் தாய்க்கோழியாய்... தன் மகளை தன் உள்ளே பொத்தி வைத்துக்கொள்வாள்.

அப்படி இருப்பவள்... இப்பொழுது யார் என்று தெரியாத இவன்  தன் குழந்தையை தூக்கி வைத்துக்கொள்வதும், அவளை கொஞ்சுவதும், அவளுக்கு முத்தமிடுவதும் பெரியவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆனாலும் தன்னால் எதுவும் செய்ய முடியாமல், தன் மகளே அவனை அப்பா என்று அழைத்து வைத்து,  அவனுடன் ஒட்டிக்கொண்டதுதான் அவள் கையை கட்டி போட்டிருந்தது.

ஆனாலும் தன் மகளிடம் எதுவும் தவறாக நடக்க முயற்சிக்கிறானோ என்ற எச்சரிக்கை உணர்வில், அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டாள்.

ஆள் பார்க்க டீசன்டாகத்தான் தெரிந்தான். அதுவும் அவன் உடுத்தியிருக்கும் ஆடையும், அவனின் கம்பீரமான தோரணையும், கண்களில் தெரிந்த ஒரு நிமிர்வும்,  கண்ணியமும், ஒரு நல்ல பொசிசனில் இருப்பவனை போலத்தான் காட்டியது.

ஆனாலும் எந்த புற்றுக்குள் எந்த பாம்பு இருக்கும் என்று யாருக்கு தெரியும் என்று படித்து இருக்கிறாளே...

படித்தவன்...பண்பானவனாக வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும்,  அவன் ஆழ் மனதில் என்ன வக்கிரம் இருக்கிறது என்பது அவளால் கண்டு பிடிக்க முடியாதே..!

அதனாலயே அவனை ஆராயும் ஆழ்ந்த பார்வையை பார்த்து வைத்தாள்.

அவள் பயந்த மாதிரி எந்த ஒரு செய்கையும் இல்லை அவனிடத்தில்.

அவனின் முத்தத்திலும் காமம் இல்லை. அவனின் அணைப்பிலும் எந்த ஒரு வக்கிரமமும் இல்லை..  

அவன் கண்களிலும், அவனின் அணைப்பிலும் , முழு மொத்தமாக தந்தை பாசம் தான் கொட்டி கிடந்தது அவள் கண்ணுக்கு தெரிந்தது.  

“யார் இவன்?  எதற்காக என் பிள்ளையிடம் இப்படி செல்லம் கொஞ்சறான்> இவளும் ஏன் தான் அவனிடம் இப்படி ஒட்டிக்கொள்கிறாளோ? என்று தன் உள்ளே புலம்பியவள் அப்பொழுதுதான் கவனித்தாள்.

அவள் காரில் ஏறி அமர்ந்து சில நிமிடங்கள் ஆகி இருந்த பொழுதும், இன்னும் கார் அலுவலகத்தை அடையாதது கண்டு அதிர்ச்சியாக இருந்தது.

திடுக்கிட்டு திரும்பி வெளியில் பார்க்க, காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சைக்கிள்காரன் கூட பெல் அடித்துவிட்டு கெத்தாக காரை ஓவர் டேக் பண்ணிச் சென்றான்.

அப்பொழுதுதான் கார் அந்த அளவுக்கு ஆமை போல ஊர்ந்து செல்வதை கண்டாள்.

ஏன் இவ்வளவு மெதுவாக காரை ஓட்டுகிறான் இந்த ட்ரைவர் என்று முன்னால் அமர்ந்து இருந்த ஓட்டுநரை பார்க்க, அவனோ காரில் இருந்த பின்பக்க கண்ணாடி வழியாக பின் சீட்டையை பார்த்துக்கொண்டு, மெதுவாக காரை ஓட்டி..இல்லை..இல்லை..நகர்த்திக் கொண்டிருந்தான்.

யாரை பார்க்கிறான் என்று அதிர்ந்தவள், மீண்டும் உற்று பார்க்க, அந்த கண்ணாடி வழியாக தன் எஜமானனையும், அவன் முகத்தில் பொங்கி கொண்டிருந்த சந்தோஷத்தையும் தன்னை மறந்து வாஞ்சையுடன் ரசித்தவாறு காரை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தான்.

உடனே அவளுக்கு விஷயம் புரிந்து விட்டது.

வேகமாக ஓட்டினால் அடுத்த நிமிடம் கார் அலுவலகத்துக்குள் நுழைந்து இருக்கும். இந்த நெட்ட கொக்கு தன் மகளை கொஞ்ச முடியாது என்று மெதுவாக ஓட்டுகிறான் போல.

“தன் எஜமானன் மீது இம்புட்டு பாசமாக்கும்... ஆனாலும் ட்ரைவர் வைத்து காரை ஓட்டும் அளவுக்கு பெரிய ஆள்தான் போல...” என்று உள்ளுக்குள் நக்கல் அடித்து கொண்டாலும், அந்த ட்ரைவரை பார்த்து முறைத்தவள்,

“அண்ணா.... காரை கொஞ்சம் வேகமா ஓட்டறிங்களா? “ என்று  சத்தமாக சொல்லி வைக்க, அதில் அதிர்ந்தவன் திடுக்கிட்டு விழித்து கொண்டவன்,  ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்து காரில்  கொஞ்சம் வேகத்தை கூட்டினான் முத்து.

ஆனாலும் கார் உடனே சீறி பாய்ந்து பறந்து விடவில்லைதான்.

எப்படியோ பல்லை கடித்துக்கொண்டு சுரபி அமர்ந்து இருக்க, எவ்வளவு மெதுவாக ஓட்டினாலும் சற்று நேரத்தில்  கார் அலுவலகத்தை அடைந்து இருந்தது.

*****

லுவலகம் வந்ததும் தன்னை மறந்து அதன் வெளிப்புற தோற்றத்தில் லயித்து போனாள் சுரபி.

அவனின்  காரை பார்த்ததும், காவலாளி விரைப்பாக எழுந்து நின்று  சல்யூட் வைத்ததை கவனிக்கவில்லை சுரபி.

கார் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து போர்டிகோவில் நின்றது.  

எப்பொழுதும் விகர்த்தனன், அலுவலகத்தின்  முன்னால் இறங்கிக் கொள்ள, முத்து காரை பார்க்கிங் ல் சென்று விட்டு வருவான்.   

இன்றும் அதே வழக்கத்தில், காரை நிறுத்தி இருக்க, விகர்த்தனன் தன் மடியில் அமர்ந்து இருந்தவளை பிரிய மனம் இல்லாமல்,  

“முத்து... காரை பார்க்கிங் ற்கு விடு...”  என்று கட்டளையிட, அவனும்  சரியென்று தலையசைத்துவிட்டு பார்க்கிங் ஐ நோக்கி காரை ஓட்டினான்.

“இல்ல...நாங்க இங்கயே இறங்கிக்கறோம்...” என்ற சுரபியின் குரல் காற்றில் தான் கரைந்தது. அவன் செவியை எட்டவில்லை.

அதில் கடுப்பானவள்,

“என்ன ஒரு திமிர்... நான் எது சொன்னாலும் காதிலயே போட்டுக்க மாட்டேங்கிறானே... இவன் நினைப்பதை மட்டுமே செய்யறான்... சரியான திமிர் பிடித்தவன்...” என்று உள்ளுக்குள் பல்லை கடித்து அவனை முறைத்து பார்த்தாள்.

அவனோ அவள் ஒருத்தி அங்கே இருப்பதையே கண்டு கொள்ளாதவனாய், தன் மடியில் அமர்ந்திருந்த குட்டியிடம் கொஞ்சி கொண்டிருந்தான்.  

முத்து காரை அதன் உரிய இடத்தில் நிறுத்திவிட்டு,  எஞ்சினை அணைக்க,  அவளும் பின்பக்க கதவை திறந்து கொண்டு, கீழ இறங்கிக்  கொண்டவள்,  தன் மகளை வாங்குவதற்காக கை நீட்ட, அவனோ இறங்க மனம் இல்லாமல்,  அந்த குட்டியை தன் மார்போடு அனைத்துக் கொண்டு,  அவளிடம் கதை பேசிக் கொண்டிருந்தான்.  

அதை கண்டவளுக்கு சுறுசுறுவென்று கோபம் தலைக்கு ஏறியது

“ஹலோ மிஸ்டர்.... திஸ் இஸ் டூ மச்...  என் குழந்தையை அனுமதியில்லாமல் காருக்குள் தூக்கிக் கொண்டது தப்பு.  

இப்பொழுது ஆபிஸ் வந்தும், அவளை என்கிட்ட கொடுக்காம  இப்படி பண்ணுவது நல்லா இல்லை...”  என்று கோபத்தில் வெடித்தாள்.

அவனோ அவள் கோபத்தை சட்டை செய்யாதவனாய்,  

“அப்படியா...?  உன் மகள் உன்கிட்ட வந்தால் வாங்கிக்கோ...  குட்டிமா...  அம்மாகிட்ட போ...” என்று கொஞ்சலாக சொல்ல, அவளோ  அவன் கழுத்தை இறுக்கி  கட்டிக்கொண்டு, அவன்  தோளில் முகம் புதைத்து மாட்டேன் என்று தலையை இருபக்கமும் உருட்டினாள்.  

“பார்த்தியா...? என்று ஒரு தன் புருவங்களை ஏற்றி இறக்கியவன், இதழ்களில் தவழ்ந்தது  வெற்றிச் சிரிப்பு ஒன்று..!  

அவளைப் பார்த்து நக்கலாக சிரிப்பது போலவும் இருந்தது.

அதைக்கண்டவளுக்கோ  முகம்  கன்றி போனது..!  உள்ளுக்குள் மீண்டுமாய் பல்லை நரநரவென்று  கடித்தாள்.  

“ஹலோ மிஸ்டர்... அவ  குழந்தை... அவளுக்கு  என்ன தெரியும்...?  திடீரென்று அவள் அப்பாவை போல ஒருவரை  பார்த்ததும்  அப்பா என்று ஒட்டிக்கிறா...

நான் உங்க அப்பா இல்லை என்று நீங்க தான் அவளுக்கு எடுத்து சொல்லணும்.

அதை விடுத்து நீங்களும் அவளோடு சேர்ந்து கொண்டு.... நல்லாயில்லை..இதோட நிறுத்திக்குங்க...”  என்று படபடவென்று பொரிந்தாள் சுரபி.

அதே நேரம்  விஷ்வா அவனுக்கு அழைக்க,  அப்பொழுதுதான் இன்னும் ஐந்து நிமிடத்தில் அவனுக்கு இருக்கும் மீட்டிங் நினைவு வந்தது.

உடனே தன் அழைப்பை ஏற்றவன்,

“ஐ வில் பி தேர் இன் டு மினிட்ஸ்...” என்று  அமர்த்தமாக சொல்லிவிட்டு தன் அழைப்பை துண்டித்தான். 

அதுவரை தன் மகளிடம் அப்படி கொஞ்சிக் கொண்டிருந்தவன்... அடுத்த நொடி  அவனிடம் இருந்து வந்த அதிகார தோரணையில் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள் பெண்.

“இதில் எது இவன் குணம்? அதிகாரம் செய்பவனா? இல்லை தண்மையாக பழகுபவனா? “ என்று தனக்குள்ளே அவசரமாக யோசித்தவள்,

“சை... இவன் எப்படிப்பட்டவனா இருந்தால் எனக்கென்ன? “ என்று தலையை சிலுப்பிக்கொண்டவள், மீண்டும் தன் மகளை வாங்கிக் கொள்ள முயல, அவனும் இப்பொழுது அந்த குட்டியை  சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

“குட்டிமா...  அப்பாக்கு இப்ப வேலை இருக்கு. ஒரு அர்ஜென்ட் மீட்டிங் அட்டென்ட் பண்ணனும் டா...  நீ அம்மா கிட்ட போ... உனக்கு சாக்லேட் தருவேன்...”  என்று டீல் பேச,  அந்த குட்டியும் அவன் முகத்தையே ஏக்கமாக பார்த்தவள்,

பின் போனால் போகட்டும் என்று அவன் கழுத்தில் இருந்து கையை விலக்கி கொண்டு,  தன் அன்னையிடம் தாவினாள்.

அவனும் காரிலிருந்து இறங்கியவன்,  தன் ப்ரீப்கேஸ் ஐ எடுத்துக் கொண்டு பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பாரின் சாக்லெட்டை   எடுத்து அவள் முன்னே நீட்டினான்

அவள் முகம் பூவாக  மலர்ந்து,  புன்னகைத்தவாறு எட்டி அந்த சாக்லெட்டை வாங்கிக் கொண்டவள்,  மீண்டும் அவன் கையைப் பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு டாட்டா காட்டினாள்.  

அதில் ஒரு நொடி கண் மூடி,  அந்த இன்பத்தை அனுபவித்து விட்டு மனமே இல்லாமல் விடைபெற்று வேகமாக அங்கிருந்த லிப்டை நோக்கிச் சென்றான் விகர்த்தனன்.

அவனுக்கான பிரத்யேக லிப்ட் அது. அவனுக்காகவே திறந்து கொண்டு காத்திருந்தது.

அதன் அருகில் சென்றவன்,  உள்ளே செல்லும் முன்னே  அனிச்சையாக திரும்பி பார்க்க,  சுரபி தன் மகளை கையில் தூக்கி வைத்தவாறு அவளும், அந்த குட்டியும் அவனையே  பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.

அந்த காட்சியை கண்டவன் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.  

ஒரு கணம் அவனுடைய மனைவியும்,  மகளும் அவனுக்காக கை அசைத்து விடை கொடுப்பதை போல தோன்ற,  அதில் அப்படியே உறைந்து போனான்.  

அவன் பார்வை தன் மீது இருப்பதை  உணர்ந்த சுரபி, முகம் கன்ற, தன் கீழ் உதட்டை கடித்து கொண்டு,  அவசரமாக தன் பார்வையை மாற்றிக் கொண்டாள். 

அந்தக் குட்டியோ அவனை  பார்த்து மீண்டும் கை அசைத்து டாட்டா காட்ட, அதில் தன் வெண்பற்கள் தெரிய, பளிச்சென்று புன்னகைத்தவன், கை அசைத்து, அவளுக்கு ஒரு ப்ளையிங் கிஸ் கொடுத்துவிட்டு,  வேகமாக லிப்ட் உள்ளே சென்றான் விகர்த்தனன்..!


Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *