மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Wednesday, September 28, 2022

வராமல் வந்த தேவதை-19

 


அத்தியாயம்-19

 

லது காலை எடுத்து வச்சு  உள்ள வா சுரபி மா...”  என்ற சுந்தரியின் அறிவுரைப்படி,  தனது வலது காலை எடுத்து வைத்து அந்த பங்களா உள்ளே வந்தாள் சுரபி.  

உடல் எங்கும் சந்தன நிற ரோஜாக்களை வாரி இறைத்தது போன்ற சந்தன நிறத்தில், அரக்கு கலரில் பார்டர் வைத்த காஞ்சிபுரம்  பட்டுப் புடவை சரசரக்க, கழுத்தில் கனமான சம்பங்கி மாலை அணிந்து,   அந்த பங்களாவின் உள்ளே தயக்கத்துடன்  அடி எடுத்து வைத்தாள் சுரபி.

அவள் அடி எடுத்து வைத்ததன்  அதிர்வால் சிறு குலுங்கு குலுங்கி அவளின் பார்வைக்கு வந்தது அவள் மார்பில் தொங்கிய புத்தம் புதிய தங்கத்தாலி.  

அதைக்  கண்டதும் அவளின் உடலில் லேசான அதிர்வு. முகம் வெளிற, நடை தள்ளாடியது.  

கண்கள் இருட்டிக் கொண்டு வர,  சிறு தள்ளாட்டத்துடன் கீழே சரிய இருந்தவளின்  கரத்தை பற்றிக் கொண்டான் அவள் அருகில் மணக்கோலத்தில் மணமகனாக நின்று இருந்த விகர்த்தனன்.

அவனுமே பட்டு வேஷ்டி... சந்தன நிறத்திலான பட்டு சட்டை...  கழுத்தில் அதே சம்பங்கி மாலை...ஒரு கையில் சுரபியின் கையை பற்றி இருக்க,   மற்றொரு  கையில் அந்த குட்டி தேவதையை தூக்கி கொண்டு நின்றிருந்தான் விகர்த்தனன்.

அவன் முகத்திலோ அப்படி ஒரு பூரிப்பு...! பெருமிதம்...! உற்சாகம்..! ஆனந்தம்...!  பரவசம்..!  என்று அத்தனை உணர்வுகளின் கலவையாய்..!  

இதுநாள் வரை அவ்வளவு பெரிய மாளிகையில் தனி ஒருவனாய் தனியாளாய் வாழ்ந்தவனுக்கு...  வாழுகின்றவனுக்கு துணையாய் அவன் கரம் பிடித்து தளிர் நடைபோட...

அவனை அப்பா என்று அழைத்து ஓடி வந்து அவன் காலை கட்டிக்கொள்ள...  குட்டி தேவதையாய்... அவன் மகள்... அவனுடனேயே வந்து விட்டாள்.

கூடுதல் போனஸ் ஆக மனைவி என்ற பாத்திரத்திற்கும் ஒருத்தி...!  

இனி மனைவி...மகள்... என்று அவனுக்கே அவனுக்கு என்றான அவன் குடும்பம்..!  

தனிமை சிறையிலிருந்து விடுபட்டு விட்டான்..!  இனி அந்த குட்டி தேவதை அவன் வாழ்வை வண்ணமயமாக்கி விடுவாள் என்ற பூரிப்புடன்,  லேசாக தள்ளாடிய தன் மனைவியாகிவிட்டவளை கை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தவாறு,  அவனும் தனது வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தான் விகர்த்தனன்.  

நெடுநெடுவென்று ஆறடிக்கும் மேலான உயரத்தில்...அதுவும் மணக்கோலத்தில் இன்னுமே ஆண்மை ததும்பும் ஆளுமையுடன்  அவளை ஒட்டி நின்றிருந்த அவன், தன் கைப்பற்றியதும் சுரபிக்குத் தான் திக்கென்று இருந்தது.

உடல் குப்பென்று வியர்த்து கொட்ட, மெல்ல யாரும் அறியாமல்  அவன் கைக்குள் இருந்து தன் கையை உருவிக் கொள்ள முயல,  அவனோ அவள் கையை விடாமல் இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்தான்.

பெண்ணவளோ  ஓரக்கண்ணால் அவனை பார்த்து முறைக்க,  அவளின் பார்வைக்காகவே காத்திருந்தவன் போல, குறும்பாக கண்சிமிட்டி மந்தகாசமாக புன்னகைத்தான் விகர்த்தனன்.  

அதில் இன்னுமாய் கடுப்பானவள், அவனை எரிக்கும் பார்வை பார்த்து விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.  

அதற்குள் வீட்டிற்கு உள்ளே வந்தவர்களை அழைத்து சென்று, அங்கிருந்த சோபாவில் அமர வைத்து பால் பழம் கொடுத்தார் சுந்தரி.  

அவரின் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி..!  

இத்தனை நாட்கள் தங்கள் குடும்பத்திற்காக ஓடி உழைத்தவள்... இன்று அவள் வாழ்வில் அவளுக்காக ஒரு நல்லது நடந்திருக்கிறது எனும் பொழுது அவரின் மனமும் குளிர்ந்து போனது.

அவரை ஒட்டி நின்ற அவரின் மகள் ஷ்யாமளா, அவரின் இளைய மகன் ஷ்யாம் ப்ரகாஷ் அனைவருக்குமே சுரபியை மணக்கோலத்தில் பார்க்க கண்கள் பணித்தது.

ஆனாலும் ஒரு ஓரத்தில்,  தங்கள் வீட்டிற்கு அண்ணியாக வந்திருக்க வேண்டியவள்... வேற ஒரு வீட்டிற்கு சென்று விட்டாளே என்ற சிறு வருத்தம்...ஏக்கம்...

இன்னாருக்கு இன்னாருனு எழுதி வச்ச படிதானே நடக்கும். நாம என்ன செய்ய முடியும் என்ற பெருமூச்சு விட்டு, இனிமேலாவது தன் அண்ணி நன்றாக, மகிழ்ச்சியாக, சந்தோஷமாக வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டனர்.

விகர்த்தனன், சுந்தரி கொடுத்த பாலை வாங்கி குடித்துக்  கொண்டிருக்க , அவன் மடியில் அமர்ந்து இருந்த நிகா குட்டியோ  

“அப்பா.... எக்கு.... “  என்று ஆர்வமாக கேட்க, அதில் புன்னகைத்தவன்

“உனக்கு இல்லாததா செல்லம்...!  இதோ என் பிரின்சஸ்க்கு...” என்றவாறு அவன் கையில் இருந்த டம்ளரில்  மீதமிருந்த பாலை அவளுக்கு புகட்டினான்.  

நாக்கை சுழற்றி அதை குடித்தவள்,  

“அப்பா...  நல்லா இருக்கு...”  என்று சர்டிபிகேட் கொடுத்தாள்.

அவளின் மலர்ந்த முகத்தை கண்டதும் அப்படியே குனிந்து அழுந்த முத்தமிட்டான் விகர்த்தனன்.

இப்படி ஒரு மலர்ச்சியை அவள் முகத்தில் காண எப்படி தவித்து போனான்..! இந்த மழலையை கேட்க எத்தனை நாள் காத்து கிடந்தான்..!

*****

காரில் அடிபட்டு, ட்ரீட்மென்ட் முடிந்தும் இரண்டு நாட்களாக கண் முழிக்காமல் கிடந்தவளை கண்டதும் அவன் உயிரே அவன் இடத்தில் இல்லை.

தன் அலுவலக வேலையை கூட மறந்து அவளின் அருகிலேயே அமர்ந்து விட்டான்.

மருத்துவரின் அறிவுரைப்படி எதையாவது அவளுடன் பேசிக்கொண்டே இருந்தான்.

அவள் யாரோ ஒருவனின்  மகள் என்ற பொழுதே  அவள் மீது பாசத்தை கொட்டியவன்...இப்பொழுது அவள் தான்  தன் மகள்... அவன் தன் உயிரில் ஜனித்தவள்  என்ற உண்மை தெரிந்த பிறகு,  ஒரு கணம் கூட அவளை விட்டு அவன் பிரியவில்லை.

அந்த குட்டியின் அருகிலயே அமர்ந்து விட்டான். அவளுடன்  தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க,  அவனின்  விடாமுயற்சியால் அடுத்த நாளே கண் விழித்தவள் முதலில் தேடியது அவனைத்தான்.  

அவனைக் கண்டதும் அப்பா என்று சந்தோஷத்தில்  கூச்சலிட்டவாறு அவள் படுத்து இருப்பது  படுக்கை என்பதையும் மறந்து துள்ளி எழுந்தாள்.  

அதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது அவன் கண்களில். அவன் முகத்தில் அப்படி ஒரு பரவசம்.

இதையெல்லாம் ஒருவித அதிர்ச்சியோடுதான் பார்த்துக் கொண்டிருந்தாள் சுரபி.

அடுத்து வந்த சில நாட்களில் கர்ணிகா முழுவதுமாக  குணமடைந்து விட்டாள்.  

சுரபி எவ்வளவு மறுத்தும் கேட்காமல், அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான் விகர்த்தனன்.  

அதன் பிறகு அவன் கடகடவென்று எடுத்த சில அதிரடி ஆக்சனில் இப்பொழுது சுரபியும் அவனுடைய மனைவியாக அவன் வீட்டிற்கே வந்துவிட்டாள்.

*****

ணக்கோலத்தில் சோபாவில் அமர்ந்து இருந்தவள்... அருகில் அமர்ந்து இருந்தவனும்,  அவள் மகளும் பண்ணும் அலப்பறைகளை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

பின் அனிச்சையாய் அவள் பார்வை சுழன்று அந்த இடத்தை ஆராய்ந்தது.  

கிட்டத்தட்ட ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சிற்கு இருந்தது அந்த பங்களா...

கண்ணைக் கவரும் லஸ்தர் விளக்குகள்,  அலங்கார , விலைமதிப்பற்ற கலைப்பொருட்களும் ஆங்காங்கே வீற்றிருந்தன.  

வரவேற்பறையில் விலையுயர்ந்த நீண்ட சோபாக்கள் போட்டிருக்க, தரையில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு,  கிட்டத்தட்ட அரண்மனை போலத்தான் இருந்தது அந்த பங்களா.

அந்த பங்களாவின் பிரம்மாண்டத்தை பார்க்கும் பொழுதே கண்ணைக் கட்டியது சுரபிக்கு.

அவள் கடைசியாக குடி இருந்த வீடு, இப்பொழுது அவள் அமர்ந்து இருக்கும் நீண்ட ஷோபா  போட்டிருக்கும் பகுதி மட்டுமானதாய்தான் இருக்கும்.

இவ்வளவு பெரிய இடத்தில் அவள் வாழ வந்திருக்கிறாள்  என்பதே அவளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.  

இன்னுமே அவளால் நம்ப முடியவில்லை.  

கடந்த இரண்டு வாரத்தில் அவள் வாழ்க்கையே  தலைகீழாக மாறிப் போனது போல இருந்தது. போல என்ன..? மாறித்தான் போனது...அவள் வாழ்க்கையை  தலைகீழாக மாற்றியிருந்தான் அந்த நெட்டை.

அவள் எவ்வளவு தூரம் மறுத்துப் பார்த்தும்... மன்றாடி பார்த்தும்...  கெஞ்சி கேட்டும்  அவன்  பிடிவாதத்தை கொஞ்சமும் விடவில்லை.  

அவன் சொன்னதிலயே  உறுதியுடன் நின்று  அவளை தன் மனைவியாக்கி இருந்தான் அந்த பிடிவாதக்காரன்.   

*****  

ப்ப நாங்க கிளம்பறோம் சுரபி மா.. தம்பியின் மனசு அறிஞ்சு நடந்துக்கோ இது உன் வாழ்க்கை...நீதான் இத சந்தோஷமா வச்சுக்கணும்...  நேரம் கிடைக்கிறப்ப  எங்களையும் வந்து பாரு...”  என்று பொதுவான அறிவுரைகளை சொல்லி விட்டு தன் குடும்பத்துடன் கிளம்பினாள் சுந்தரி...

மற்றவர்களும் கலைந்து செல்ல, இறுதியில் அவர்கள் மூவர் மட்டும்தான் அந்த வரவேற்பறையில் எஞ்சி இருந்தனர்.

விகர்த்தனன் அங்கிருந்த வேலையாளை அழைத்தவன், சாமியை பார்த்து,  

“சாமி...  அம்மாவுக்கு வீட்டை சுத்தி காட்டுங்க..”  என்றவன்,  சுரபியின் பக்கம் திரும்பி

“ஸ்வாதி....”  என்று தன்னை மறந்து அழைத்து வைக்க,  அதைக்கேட்டவள் முகத்தில் அப்பட்டமான வேதனை வந்து போனது.

ஒரு நொடி  வேதனையுடன் தன் முகத்தை சுருக்கி  அவனைப் பார்த்தவள்,  

“சுரபி....”  என்று  திருத்தினாள்.  

அவனுக்குமே தன் தவறு புரிய, தன் கீழுதட்டை கடித்துக்கொண்டு

“சாரி சுரபி...  உன் திங்க்ஸ் எல்லாம் மேல இருக்கு.  அங்க இருக்கும் ரூம்க்கு போயிட்டு கொஞ்ச நேரம்  ரெஸ்ட் எடு.  நான் அம்முவை பார்த்துக்கிறேன்... “ என்று பட்டியலிட,  

அவனருகில் அமர்ந்து இருப்பது என்னவோ போல் இருந்தது சுரபிக்கு.

விட்டால் போதும் என்று அவளும் தன் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள,  அங்கு வந்த சாமியும் வாயெல்லாம் பல்லாக வாங்கம்மா என்று பவ்வியமாக அவளை  மாடிக்கு அழைத்துச் சென்றான்.  

*****

மாடிப்படியில் ஏறும் பொழுது திடீரென்று அவள் கால்கள் அப்படியே நின்று விட்டன.

பக்கவாட்டு சுவற்றில் மாட்டி இருந்த ஒரு புகைப்படத்தில் அவள் பார்வை குத்திட்டு நின்றது.

அங்கிருந்த புகைப்படத்தில் மணக்கோலத்தில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தான் விகர்த்தனன்.

அதில் இன்னுமே கொஞ்சம் சிறுவயதில்,  வசீகர சிரிப்புடன் இருந்தான் விகர்த்தனன்.  

அவனையே  ஒரு கணம் இமைக்க மறந்து  ரசித்து பார்த்தவள்,  மறுகணம் இன்பமாக அதிர்ந்து போனாள்.  

அந்த புகைப்படத்தில், விகர்த்தனன் அருகில் மணக்கோலத்தில் இருந்த பெண் கிட்டத்தட்ட இவளின் சாயலில் இருந்தாள்.  

சுரபிக்கு அழகாக கன்னத்தில் குழி விழும். அவளுக்கு அது மிஸ்ஸிங்...  மற்றபடி மேலோட்டமாக பார்த்தால்  இருவரும் ஒரே மாதிரி தான் இருந்தார்கள்.  

“அதனால் தான் அவளை அடிக்கடி ஸ்வாதி என்று அழைத்து வைக்கிறானோ?  அந்தளவுக்கு அவள் மீது அவனுக்கு காதல் போல..!  

ஆனாலும் இவ்வளவு சிறுவயதில் இறந்திருக்க வேண்டாம்...”  என்று அந்த பெண்ணிற்காக பரிதாப பட்டு நெஞ்சை அடைத்தது.  

மாடியிலிருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான் சாமி.  

உங்க பொருட்கள் எல்லாம்  இங்கதான்  கொண்டு வந்து வச்சிருக்கேன் அம்மா...நான்தான் இந்த வீட்டின்  சமையல்காரன். பேரு சாமி.  

உங்களுக்கு என்ன வேணும்னாலும் இங்க இருந்து ஒரு போன் அடிங்க.  உடனே உங்க ரூமுக்கு கொண்டு வந்திடுவேன்...”   என்று நட்புடன் புன்னகைத்து விட்டு நகர்ந்து சென்றான்.  

சுரபிக்கு இருந்த உடல் அசதியில் அவசரமாக ஒரு காட்டன் புடவையை கட்டிக் கொண்டு அப்படியே படுக்கையில் விழுந்தாள்.  

படுத்தவளுக்கு பழைய நினைவுகள் எல்லாம் அடித்துக் கொண்டு வந்தது..!  ஆனாலும் அதை பின்னுக்குத் தள்ளி அப்படியே கண்மூடி கண்ணயர்ந்தாள்.

*****  

மாலை ஐந்து  மணி அளவில் கதவை தட்டு சத்தம் கேட்டு மெல்ல கண் விழித்தாள் சுரபி.

கண்களை கசக்கி கொண்டு, எழுந்து சென்று கதவை திறக்க, அங்கே வாயெல்லாம் பல்லாக  நின்றிருந்தாள் பெண்ணொருத்தி.

“மன்னிச்சுக்கிடுங்க மா... உங்க  தூக்கத்தை கெடுத்துட்டேனா?  ஆனா பாருங்க மா...மதியம் எதுவும் சாப்பிடாம தூங்கிட்டா வியாதி வருமாம்.  

அதுதான் உங்களுக்கு மதிய சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்.  என் பேரு பூங்கோதை மா...”  என்று  எட்டாக வளைந்து, நெளிந்து  நின்றாள் பூங்கோதை.

சுரபியும் லேசாக புன்னகைத்து அந்த பெண்ணை உள்ளே வரவேற்றாள்.  

“இதுல மதிய சாப்பாடு இருக்குமா...  சாப்பிட்டுட்டு வேணா  ரெஸ்ட் எடுங்க...”  என்று சிரிக்க, அப்பொழுதுதான் மணியை பார்த்தாள்  சுரபி

அது மாலை ஐந்து என காட்டியது.  அதைக் கண்டு பதறியவள்,

“ஓ மை காட் இவ்வளவு நேரமா தூங்கிப் போனேன்?. குட்டிமா என்ன பண்ணினாளோ?  அவள் சாப்பிட்டாளோ  இல்லையோ?  அவளை கண்டுகொள்ளாமல் எப்படி உறங்கி போனேன்? என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவள், 

“பூங்கோதை அக்கா... வந்து  அம்மு சாப்பிட்டாளா? என்று  தடுமாற்றத்துடன் கேட்க,  அவளோ மீண்டும் வாயெல்லாம் பல்லாக

“சின்னம்மாங்களா?  ஐயாவே சின்னம்மாவுக்கு ஊட்டி விட்டாங்க...  சின்னம்மாவும் சமத்தா சாப்பிட்டுகிட்டாங்க... ரெண்டு பேரும் பக்கத்துல ஐயா ரூம்ல தான் இருக்காங்க..  

நீங்க அசதியில் உறங்கிட்டதால உங்களை எழுப்ப வேண்டாம் னு  ஐயா தான் சொல்லிட்டாங்க மா... “ என்று தலையைச் சொரிந்தாள்.  

“சரி நீங்க  போங்க...  நான் வருகிறேன்...”  என்றவள், அந்த பெண்ணை அனுப்பி விட்டு,  குளியலறைக்கு சென்று நல்ல குளிர்ந்த நீரை முகத்திற்கு அடித்து கழுவினாள்.  

உடலில் இருந்த அசதியெல்லாம் ஓடி மறைந்தது போல இருந்தது.  

கண்ணாடி முன்னால் நின்று தலையை வாரிக் கொண்டவள் அப்பொழுதுதான் உச்சி வகிட்டில் கவனித்தாள்.  

காலையில் அவன் அணிவித்த குங்குமம்... இன்னுமே லேசாக ஒட்டியிருந்தது.  அதோடு அவன் கட்டிய தாலியும்  முன்னால் வந்து விழுந்து அவளைப் பார்த்து குறும்பாக கண் சிமிட்டி சிரித்தது.

அவளுக்கு மீண்டும் விகர்த்தனன் தன் கழுத்தில் மூன்று முடிச்சிட்ட தருணமும்.. நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்த பொழுது அவன் விரல்நுனி பட்டதில் உண்டான படபடப்பு... மீண்டும் இப்பொழுது அவள் உடலில் பரவ,   ஒரு கணம் சிலிர்த்து தான் போனாள் பெண்ணவள்...!   

அடுத்த நொடி தன்னை உலுக்கிக்கொண்டு சமனபடுத்தியவள்,  முகத்திற்கு லேசாக ஒப்பனை செய்துகொண்டு, லேசாக கசங்கியிருந்த புடவையை சரி செய்து கொண்டு, வெளியில் செல்ல எத்தனித்தாள்.  

அதே நேரம் அவள் பார்வை , பூங்கோதை வைத்துச் சென்ற உணவு பாத்திரங்கள் மீது படிய, அதுவரை உறங்கி கொண்டிருந்த அவள் வயிற்று பசி துள்ளி எழுந்து குதித்தது.

அதன் ஆட்டத்தில் , உணவை எடுத்து சாப்பிட்டு பசி ஆற  தோன்றினாலும், தன் மகளின் நினைவு வர, உடனேயே அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது.

இதுவரை இத்தனை நேரம் அவளை பிரிந்து இருந்ததில்லை. உறங்கும்பொழுது கூட தன் மகளை உடன் படுக்க வைத்துக்கொண்டுதான் உறங்குவாள்.

இன்றுதான் முதல் முறையாக அவள் தன்னை விட்டு பிரிந்து இருந்தது.

தன் மகளின் நினைவில், அவள் கால்கள் வேகமாக முன்னே நடக்க, அறையை விட்டு வெளியில் வந்தாள்.

அருகில் இருந்த விகர்த்தனன் அறை கதவு லேசாக திறந்திருக்க,  உள்ளே அனிச்சையாய் பார்வையை சுழற்ற அங்கே அவர்கள் இல்லை.  

வேற எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்தவாறு மாடியில் இருந்து கீழே இறங்கி வர,  அங்கே வந்த சாமி அவர்கள் இருவரும் தோட்டத்தில் இருப்பதாக கூறி சென்றான். .  

தோட்டத்திற்கு   போகலாமா? வேண்டாமா?  என்று தயங்கி நின்றவள்,  பின் தன் மகளை  பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் அந்த பங்களாவின்  பக்கவாட்டில் இருந்த வாயிலின் வழியாக தோட்டத்திற்கு சென்றாள்.

தோட்டத்திற்கு உள்ளே இறங்கி தன் மகளை தேடியபடி நடை பாதையில் நடந்தாள்.

சற்று தொலைவில் இருவரும் விளையாடுவது தெரிந்தது.

காலையில் மாப்பிள்ளை கெட்டப்பில் இருந்தவன்...  இப்பொழுது முற்றிலும் வேறாக மாறி இருந்தான்.    

முட்டிக்கு சற்று கீழான பெர்முடாஸ்  ட்ராயரும் ஆம் கட் டீ-ஷர்ட்ம் அணிந்திருந்தான் விகர்த்தனன்.  

அந்த கையில்லாத, உடலை ஒட்டிய டைட்டான டீ-சர்ட்டில், அவனின் இறுகிய புஜங்களும்,  திண்ணிய மார்பும்,  முறுக்கேறிய வலுவான கரங்களும்,  அவளை காந்தமாய் கட்டியிழுத்தது.  

ஆண்மையின் இலக்கணமாய்..ஆனால் சிறு பிள்ளையாய் தன் மகளுடன் ஓடி பிடித்து விளையாடும் அவனின் மீது ஒரு கணம் அவள் பார்வை   நிலைத்து நிற்க,  

“எத்தனை மார்க் போட்ட சுரபி?  ஏதோ பாஸ்மார்க் வாங்கி பாஸ் ஆனேனா? இல்லை பெயிலா?  என்று அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு அதிர்ந்து விழித்தாள் சுரபி.  

கொஞ்சம் தள்ளி தன் மகளுடன் விளையாண்டு கொண்டு இருந்தவன்...  இப்பொழுது அவளை  கைகளில் அள்ளிக்கொண்டு சுரபியின் அருகில் நின்றிருந்தான்.  

அவள்  அவனை இமை தட்டாமல் பார்த்து வைத்ததை கண்டுகொண்டானோ என்ற சந்தேகத்தில்  தன் கீழுதட்டை கடித்துக்கொண்டு தரையை பார்த்தாள்.

அதே நேரம் அவனை வெகு அருகில் கண்டதால் அவள் உள்ளே படபடக்க, ஒரு நொடி தன் கால் கட்டை விரலை தரையில் அழுத்தி தன்னை  சமனபடுத்தியவள், வரவழைத்த கடுப்புடன்

“நான் மார்க் போடற அளவுக்கு நீங்க ஒன்னும் பெரிய மன்மதன் இல்லை...அதோடு உங்களுக்கு மார்க் போட்டு ரசித்து பார்க்கும் அளவுக்கு நான் ஒன்றும் உங்களிடம் மயங்கி கிடக்கவில்லை...”

என்று வெடுக்கென்று சொல்லி விட்டு , அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல்,  தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் சுரபி.

“ஆஹான்... அப்படியா? உன் வாய் அப்படி சொன்னாலும் உன் கண்ணு வேற சொல்லுதே..!” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

“என்ன சொல்லுதாம்...?” என்றாள் இப்பொழுது மீண்டும் அவனை பார்த்து முறைத்தவாறு.

“ஹ்ம்ம் என்னென்னவோ சொல்லுது... அதெல்லாம் எனக்கு மட்டும் தெரியும் ரகசிய பாஷையாக்கும்...” என்று குறும்பாக  கண் சிமிட்ட, அவனின் அந்த கண் சிமிட்டலில் தலை குப்புற விழுந்தாள் பெண்.

இதுமாதிரி இதுவரை விகர்த்தனன் அவளிடம் உல்லாசமாக பேசியதில்லை... ஏன் அவள் ஒருத்தி இருப்பதையே அவன் கண்டு கொண்டதில்லை.

அவளின் மகள் மட்டும்தான் அவன் பார்வையில் நிப்பாள்.

இப்ப என்ன திடீரென்று இவ்வளவு உல்லாசமாக...அதுவும் குறும்பாக கண் சிமிட்டி பேசுகிறான் என்று கேள்வியாக யோசித்தவளுக்கு, அவளின் மார்பில் தொங்கிய தாலி விடை சொன்னது.

“ஓ...இதுதான் காரணமா? இப்பொழுது நான் அவனுடைய மனைவி... அந்த உரிமையில் உல்லாசமும், கிண்டலும், கேலியும் சேர்ந்து கொண்டதோ?

ஆனால் இந்த திருமணமே வெறு கண் துடைப்புக்காகத்தானே.! இந்த மனைவி என்ற பாத்திரம் கூட அவன் மகள் அவன் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே..!  

அப்படிப்பட்ட இந்த திருமணம் வேண்டாம்...அவன் கொடுக்கும் மனைவி கதாபாத்திரத்திற்கு அவள் செட்டாக மாட்டாள்  என்று எவ்வளவு தூரம் மறுத்தாள்.  

ஆனால் அவன் அவளை கட்டாயப்படுத்தி பிடிவாதமாக நின்று அவளை  தன்  மனைவியாக்கி கொண்டானே..!

அதுவும் பேருக்காக ஊருக்காக மனைவி மட்டும் தான் என்று சொல்லித்தானே அவளை மணந்தான்...”   என்ற உண்மை  உரைக்க, அடுத்த கணம்  அவள் முகம் வாடிப்போனது.

நெஞ்சம் பிசைந்தது.. துக்கம் தொண்டையை அடைத்தது.  

ஆனாலும் கஷ்டப்பட்டு தன்னை  இயல்பாக்கி கொண்டவள்,

“எல்லாம் என் அம்முவுக்காகா... அவள் நன்றாக இருக்க வேண்டும். அவளுக்காக எத்தனை கஷ்டத்தையும் தாங்கி கொள்வேன்...”  என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.

அவனின் கேலிப்பேச்சுக்கு பதில் சொல்லாமல் அவனை முறைத்துவிட்டு அவன் கையிலிருந்த அந்த குட்டியை பார்த்தவள்,

“அம்மு சாப்டியா டா?  என்று விசாரிக்க,  அவளோ

“எஸ் மாம்... அப்பா தான் ஊட்டி....  சூப்பரா இருந்துச்சு...”  என்று கைவிரல்களை மடக்கி சூப்பர் என்பதை அபிநயம் பிடித்து காட்டினாள்.  

தன் மகளின் முகத்தில் இருந்த சந்தோசத்தில்,  அவளின் கோபம் கொஞ்சம் தணிந்தது.  

இவளுக்காகத்தானே இந்த ட்ராமா வுக்கு ஒத்துக்கொண்டாள். எது எப்படியோ... இவள் நன்றாக இருந்தால்  போதும். இனி இந்த வாழ்க்கைக்கும் பழகிக்கொள்ள வேண்டும்   என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள்

“குட் கேர்ள்.... சமத்து குட்டி...”  என்று அவள் கன்னம் தட்டிவிட்டு,

“சரி...  நீங்க போய் விளையாடுங்க...”  என்று புன்னகைத்து இருவரையும் அனுப்பி வைத்தாள்.

“அம்மா... நீயும் வா....” அழைத்தாள் பிள்ளை.

அவன் அவளையே குருகுருவென்று பார்க்க, அவளுக்குத்தான் மீண்டும் உள்ளே படபடத்தது.

இவனுடன் சேர்ந்து  விளையாடுவதா? தள்ளி நின்று பார்க்கும்பொழுதே என்னவோ போல இருக்கிறது. இவன் கிட்ட வந்தாளே தடுமாறி போகிறது இந்த பாவி மனம்..!

அப்படி இருக்க, அவனோடு ஒன்றாக எப்படி சிரித்து, பேசி விளையாடுவதாம்.. நோ வே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவள்,

“இல்லடா அம்மு.. அம்மாவுக்கு டயர்ட் ஆ இருக்கு. நாளைக்கு வர்ரேன். இன்னைக்கு நீ அப்பா கூட விளையாடு..” என்று ஏதேதோ காரணத்தை சொல்லி சமாளித்தவள், அந்த நடைபாதையில் மீண்டும் நடையை தொடர்ந்தாள்.

நடந்தவாறே அந்த தோட்டத்தை சுற்றி பார்த்தாள்.  அழகாக பராமரிக்கப்பட்டு இருந்தது.  அங்காங்கே அழகுச் செடிகள் வண்ண வண்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின.

அதுவும் அந்த தோட்டத்தின் ஓரத்தில் சற்று இடைவெளி விட்டு குல்மொஹர் மரங்கள் நடப்பட்டு இருக்க, அதில் பூத்து குலுங்கிய மலர்களை பார்த்ததும் அவள் கண்கள் வாவ் என்று பெரிதாக விரிந்தன.

இயல்யிலேயே சுரபிக்கு நல்ல ரசிகை மனம் என்பதால் தன் மனதில் இருந்த குழப்பம் பாரம் எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு,  அந்த தோட்டத்தின் அழகை ரசித்தபடி தன் நடையை தொடர்ந்தாள்.  

தன் மகளுடன் விளையாண்டு கொண்டிருந்தாலும் விகர்த்தனனின் பார்வை அடிக்கடி சுரபி இடம் வந்து சென்றது.  

ஓரக்கண்ணால் அதை கண்டு கொண்டாலும், காட்டிக்கொள்ளாமல் தன் நடையை தொடர்ந்தாள் சுரபி.

*****

ற்று நேரம் காலார நடந்தவள்,  அங்கிருந்த பென்சில் அமர்ந்தவள் திரும்பி  தன் மகளை பார்க்க,  அவளோ தோட்டத்தில் இருந்த பட்டாம்பூச்சியை துரத்தியபடி ஓடிக்கொண்டிருந்தாள்.   

“மெதுவா ஓடுடா ப்ரின்சஸ்...” என்றபடி அவளின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான் விகர்த்தனன்.

இருவரையும் ஒரு கணம் ரசித்து பார்த்தவள்,  மீண்டும் மறுபக்கமாக இருந்த தோட்டத்தை ரசித்தாள்.  

“என்ன பிடிச்சிருக்கா?”  என்ற குரல் வெகு அருகில் கேட்க,  மீண்டும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.

அந்த குட்டியை தன் மடியில் வைத்துக்கொண்டு,  அவளின் அருகில் அவளை ஒட்டியபடி வெகு இயல்பாக வந்து அமர்ந்து இருந்தான்  விகர்த்தனன்.  

அவன் உடலில் இருந்து வந்த பிரத்தியேக வாசமும் மற்றும் வியர்வையினால் அவனின் டைட்டான டீசர்ட் இன்னுமே உடலோடு ஒட்டிக்கொள்ள, அதில்  மிளிர்ந்த அவனின் ஆண்மை... அவளை புரட்டிப் போட்டது.

உள்ளே  படபடக்க அவசரமாக சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள்.  

“சொல்லு சுரபி....  புடிச்சிருக்கா...? என்று மீண்டும் கேட்க,  

“ஹ்ம்ம்ம்..” என்று தலையசைத்தாள். குரல் வெளிவரவில்லை. வெறும் காத்துதான் வந்தது.

“என்னைய வா..?”  என்று கண்சிமிட்டி குறும்பாக சிரிக்க, அவள்  முகம் தான் அந்தி வானமாக சிவந்து போனது.

அவளின் அந்த சிவந்த கன்னத்தை வருட தவித்தன அவன் கரங்கள்.  

அதே நேரம் அவனுடைய அலைபேசி ஒலிக்க,  அதில்  விஷ்வாவின் பெயரை  பார்த்தவன்...  ஏதோ அலுவலக வேலை என்று புரிய, தன் மடியில் இருந்த  அந்த குட்டியை சுரபியிடம் கொடுத்துவிட்டு தன் அலைபேசியை எடுத்து காதில் வைத்தபடி தோட்டத்தில் நடந்த படி பேசிக்கொண்டிருந்தான்.  

அதுவரை இலகுவாய்...சிறு பிள்ளையாய்...தன் மகளுடன் விளையாண்டவன்...குறும்புக்கார கண்ணனாய் அவளிடம் கண் சிமிட்டி, சீண்டி பேசிக் கொண்டிருந்தவன்...

இப்பொழுது படு அமர்த்தலாய்...ஆளுமையுடன் விஷ்வா சொன்ன விவரங்களை கேட்டு,  அதற்கு கடகடவென்று தன் கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

இதில் எது அவனின் உண்மையான முகம்? எப்படி இப்படி நிமிடத்திற்கு ஒரு விதமாய் முகத்தை மாற்றுகிறான்..? “ அவனையே ஆராய்ச்சியோடு பார்த்திருக்க, அனிச்சையாய் இவள் பக்கம் திரும்பியவன், சுரபியின் பார்வையை எதிர் கொண்டான்.

ஏனோ அந்த பார்வையில் அத்தனை அத்தனை வித்தியாசம்...!

அவளை விழுங்கி விடும் காந்த பார்வை... அவள் தன்னவள் என்ற உரிமை பார்வையோ..?

“சே...சே... அவனுக்கு நானேல்லாம் பொருத்தமே இல்லாதவள்.. இதோ இந்த அம்முகுட்டிக்காகத்தான் வேற வழியில்லாமல் என்னை அவன் மனைவியாக்கி இருக்கிறான்..”

என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவள், அவளின் பார்வையை கவ்விக்கொள்ள முனைந்த அவன் பார்வையை தவிர்த்து,  வேற பக்கம் பார்த்து வைத்தாள்.

அவனோ இவளை பார்த்து அதே குறும்பாக கண் சிமிட்டி ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன என்று பார்வையால் விசாரிக்க, அவளோ மீண்டுமாய் முகம் கன்ற மறுபக்கம் திரும்பி கொண்டாள்.

அவனோ உல்லாசமாக சிரித்தபடி , தன் பின்னந்தலையை சிறு வெட்கத்துடன் தடவியபடி, விஷ்வா உடன்  தன் உரையாடலை தொடர்ந்தான்.

Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *