மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Sunday, September 25, 2022

வராமல் வந்த தேவதை-12

 


அத்தியாயம்-12

 

ண்ணிமைக்கும் நேரத்தில்,  அவள் இருந்த இடத்தை விட்டு சற்று தள்ளியிருந்த, விலை உயர்ந்த பைவ் ஸ்டார் ஹோட்டல் முன்னே கார் நிற்க, அதைக்கண்டு அதிர்ந்து போனாள் சுரபி.

குழந்தைக்கு  இவ்வளவு பெரிய ஹோட்டலா என்று அதிர்ந்து திரும்பி அவனைப் பார்க்க,  அவனோ தன் தோளை குலுக்கி விட்டு,  எதுவும் பேசாமல் அந்தக் குட்டியை அள்ளிக்கொண்டு கீழே இறங்கியவன், சாவியை வேலட் பார்க்கிங் சிப்பந்தியிடம் கொடுத்து விட்டு, விறுவிறுவென்று ஹோட்டலை நோக்கி சென்றான்.

காரிலிருந்து இறங்கிய பெரியவளும்,  வேறு வழியில்லாமல் அவன் பின்னே வேக நடை எடுத்து வைத்து சென்றாள்.

ஹோட்டலின் நுழை வாயிலை அடைந்ததும், உள்ளே செல்லாமல் அவளுக்காக காத்திருந்தவன், அவள் அருகில் வந்ததும் உள்ளே நுழைந்தான்.

அதே நேரம் அங்கு நின்றிருந்த காவலாளி இடைவரை குனிந்து அவனுக்கு சல்யூட் வைக்க,   அவனோ சிறு தலையசைப்புடன்  உள்ளே செல்ல, அவன் பின்னால் வந்த  அவளுக்கும், அதே போல இடைவரை குனிந்து வணக்க சொல்ல,  அதையெல்லாம் பார்த்து என்னவோ போல் இருந்தது சுரபிக்கு.

உள்ளே சென்றவனை அடையாளம்  கண்டு கொண்டு,  அந்த ஹோட்டலின் மேனேஜர்  ஓடிவந்து அவனை வரவேற்க,  அவனும் மெல்ல புன்னகைத்து

“ஒரு ஃபேமிலி ரூம் வேண்டும் டேவிட்...”  என்க,  உடனேயே அவனுக்கு தனியாக இருந்த ஒரு அறையை ஏற்பாடு செய்தனர்.

ஏசி அறையில் ஆங்காங்கே ரோஜாக்கள் பூச்சாடிகளில் சொருகி வைத்திருக்க, சுவற்றிலும் ஆங்காங்கே அழகான மாடர்ன் ஓவியங்கள் மாட்டி இருந்தது.

மேஜையின்  மீது அலங்கார பொருட்கள் வீற்றிருக்க, மங்கிய விளக்கொளியில், அந்த மேஜை மீது இருந்த மெல்லிய மெலுகுவர்த்தியின் ஒளி இன்னுமே அந்த அறைக்கு ரம்மியத்தை கூட்டியது.

அதுவரை இந்த மாதிரி ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு  சென்று இராதவள் அந்த ரம்மியமான  அறையைப் பார்த்ததும், தன்னை மறந்து தன் கண்களை அகல விரித்து  வாவ்....  என்றாள்...   

அதைக்கேட்டு மென்னகை புரிந்தவன்,  அவளின் ரசனையான முகத்தை ஒரு நொடி ரசனையுடன் பார்த்தவன், பின் அங்கிருந்த சர்வரை அழைத்து,  அந்தக் குட்டியின் உயரத்திற்கு ஏற்ற இருக்கையை கொண்டு வரச் சொன்னான்.  

மேஜையின் உயரத்திற்கு இருந்த அந்த பெரிய இருக்கையில் அந்த குட்டியை அமர வைத்து விட்டு,  அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

அடுத்து மேஜையை ஒட்டி  நின்று கொண்டிருந்த சுரபியை பார்க்க,  அவளோ அவன் அருகில் அமராமல், அவன் எதிரில் சென்று அமர்ந்து கொண்டாள்.  

அதை கண்டு தன் தோளை குலுக்கியவன், தன்  மெனு கார்டை எடுத்து அவள் பக்கமாக நீட்டி,  

“என்ன சாப்பிடற? என்றான் அமர்த்தலாக.  

அவளோ

“எனக்கு எதுவும் வேண்டாம்...  பசியில்லை...”  என்று மறுக்க, அவளை முறைத்தவன்

“இன்னைக்கு ஒரு நாள்,  உன்னுடைய வீணாப்போன இட்லியையும், சட்னியையும்   ஒதுக்கி விட்டு,  நல்ல சாப்பாடா  சாப்பிடு...”  என்றான்.  

அடுத்து அருகில் இருந்த குட்டியை பார்த்தவன்,  

“அம்மு என்ன சாப்பிடுவா...”  என்றான் சுரபியை பார்த்தவாறு.

சுரபியும்  அவள் மகளுக்கு கொடுப்பதை பட்டியலிட,  

“ஹே... இதெல்லாம் வெஜிடேரியன்...!  நான்வெஜ்  என்ன சாப்பிடுவா?”  என்று கேட்க

“வாட்?  நான்வெஜ்  ?  நாங்க வெஜிடேரியன்...” என்றாள் அவனை முறைத்தபடி.  

“நீ வெஜ் ஆ இருந்துக்கோ... குழந்தைக்கு நல்லா  நான்வெஜ் ஐட்டமா கொடுக்கணும்...”  என்றவன்,  தன் ஐபோனை  எடுத்து அதில் இரண்டு வயது குழந்தைக்கு என்ன நான்வெஜ் உணவு கொடுக்கலாம் என்று இணையத்தில் தேடி பார்த்தான்.

பின் கடகடவென்று அந்த குட்டி சாப்பிடுவதற்கு தகுந்த ஐட்டங்களை ஆர்டர் பண்ண,  எதிரில் அமர்ந்திருந்தவளோ பதறி,  

“சார்...  வேண்டாம்...”  என்று மறுக்க, 

“ஏன் வேண்டாம்....” என்றான் புருவத்தை உயர்த்தி.

“அதான் சொன்னேனே... நான் வெஜ்... “

“அதைத்தான் நானும் சொல்றேன்.. நீ நான்வெஜ்... “ என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்லி வைக்க, அவள் மீண்டும் முறைக்க,     

“ஆல்ரைட்... உன் வழிக்கே வரலாம்... நான் கொடுக்கிற புட் ஐ அம்மு சாப்பிட மறுத்தால்,  நான் கொடுக்கலை...டீல் ?  என்று கட்டை விரலை உயர்த்தி காட்டியவன்,

அப்பொழுது கொண்டு வந்து வைத்த ஐட்டங்களில்,  முதலாவதாக  சிக்கன் சூப்பை எடுத்து அந்த குட்டியின் வாயில் கொஞ்சமாக புகட்ட,   அவளோ முதலில் கண்ணையும், மூக்கையும் சுருக்கி பார்த்தவள், பின்  சப்புக் கொட்டி குடித்தாள்.  

அதுவரை குடித்திராத அந்த சூப் வித்தியாசமாக இருக்க,  அதை ஆர்வமாக குடிக்க, அவள் குடிப்பதையே ரசனையுடன் பார்த்தவன் , பின் சுரபியை பார்த்து,  

“எப்படி? என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்த, சுரபியோ தன் மகளை வெட்டவா குத்தவா என்று முறைத்து பார்த்து வைத்தாள்.  

அந்த சூப் மட்டுமல்ல...அவன் ஆர்டர் செய்து இருந்த எல்லா நான்வெஜ் ஐட்டங்களையுமே, அந்த குட்டி நாக்கை சுப்பு கொட்டியபடி ருசிக்க, அவனும் பாசத்தோடு அவளுக்கு ஒவ்வொரு ஐட்டமாக ஊட்டிக்கொண்டிருந்தான்.

அதைக்கண்ட சுரபிக்கு ஒரு கணம் அவளையும் மறந்து பொறாமை வந்து போனது.

******

சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டவள் சுரபி..!

அவளுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அவள் பார்த்து வளர்ந்தது எல்லாம் அவள் அன்னையின் முகத்தை மட்டும்தான்.

திருமணம் முடிந்து சில வருடங்களில் ஒரு புள்ளையையும் கொடுத்துவிட்டு, ஒரு விபத்தில் இறந்து போனார் சுரபியின் தந்தை.

இளம் விதவையாய், கையில் சிறு குழந்தையுடன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட ஆரம்பித்தாள் சுரபியின் அன்னை சகுந்தலை.

தன் கணவனை இழந்து விட்டாலும்,  தன் தைரியத்தை விட்டு விடாமல் சிறுவயதிலேயே வாழ்க்கையில் போராட ஆரம்பித்து விட்டார்.  

எத்தனையோ  ஆண்களின் வக்கிர பார்வையில் இருந்து தப்பி,  தன்னை தற்காத்துக் கொண்டு, தன் மகளையும் தன் சிறகுக்குள் பொத்தி வைத்து  அடைகாத்து பத்திரமாக வளர்த்தாள் சகுந்தலை.  

சுரபிக்கு ஆறு வயது ஆனதும், காஞ்சிபுரத்தில் இருந்த ஒரு தனியார் பள்ளியில் தன் மகளை சேர்த்துவிட்டார் சகுந்தலை.

அங்குதான் அவருக்கு முதல் பிரச்சனை ஆரம்பமானது..!

சுரபி வகுப்பில் படிக்கும் பிள்ளைகளை, காலையில் கொண்டு வந்து விடவும்,  மாலையில்  அழைத்துச் செல்லவும் என  அப்பா என்று ஒருவர் வந்து நிற்க கண்டாள் சுரபி.

அவள் வகுப்பு தோழிகளும் உயரமான அந்த  ஆணை கண்டதும் அப்பா.... என்று பாசத்தோடு அழைத்து, ஓடிச்சென்று அவர்களின் காலைக் கட்டிக் கொள்வதும்,  

அந்த தந்தையும் வாஞ்சையுடன் காலை கட்டிக்கொண்ட மகளை வாரி எடுத்து தலைக்கு மேலே தூக்கி  போட்டு பிடித்து, பின் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சுவதையும் ஏக்கத்தோடு பார்த்திருந்தாள் சுரபி.

அந்த பிள்ளைகளும், சலுகையாக தன் தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு, வளவளத்தவாறு சுரபிக்கு கை அசைத்து டாட்டா காட்டி விட்டு செல்வார்கள்.

அதைக் காணும்பொழுது அவளுக்கு இன்னுமே ஏக்கமாக இருக்கும். எல்லாருக்கும் அப்பா இருக்கும் பொழுது எனக்கு மட்டும் ஏன் அப்பா இல்லை என்ற முதல் கேள்வி எழுந்தது.  

வீட்டிற்கு சென்றதும் கை கால்களை கூட கழுவாமல், உடை மாற்றாமல், தன் அன்னையின் முந்தானையை பிடித்து இழுத்து

“என் அப்பா எங்கேம்மா? “ என்று கேட்டு வைத்தாள்.

அதைக்கேட்டதும் முதன்முதலாக சகுந்தலையின் கண்களில்  நீர் தழும்பியது. நெஞ்சம் விம்மியது...

எவ்வளவு முயன்றும் அடக்க முடியாமல் கேவல் வெளிவர, கண்களில் மடை திறந்த வெள்ளமாய் அதுவரை பூட்டி வைத்திருந்த அணையை உடைத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பதில் சொல்ல முடியாமல், முந்தானையை இழுத்து வாயில் வைத்து அடைத்து கொண்டு கேவி அழுதாள் சகுந்தலை.

அதுவரை தன் அன்னையின் கண்ணீரை பார்த்திராத குட்டி பெண்ணுக்கோ அன்னையின் கண்ணீரைக் கண்டதும் பதட்டம் ஆகியது.  

உடனே தன் அன்னையை கட்டிக்கொண்டு  அவளும்  குலுங்கி அழுதாள்.

சற்று நேரம் தன் கணவன் நினைப்பில் அழுது கரைந்த சகுந்தலை, தன்னை பார்த்து தன் மகளும் அழுகிறாள் என்பதை உணர்ந்து உடனே தன் அழுகையை கட்டு படுத்திக் கொண்டாள் .

இதற்காகத்தான் தன் காதல் கணவனை இழந்த துயரத்தைக்கூட வெளியில் காட்டாமல் மனதுக்குள் போட்டு பூட்டிக்கொண்டு, மருகி வந்தாள்.

தான் அழுதால் தன் மகளும் சேர்ந்து அழுவாள் என்றுதான் அவள் முன்னே சிரித்த முகமாக வளைய வந்தாள்.

இன்று தன் மகளின் ஒரு கேள்வி அவரை மொத்தமாக உடைய வைத்து விட்டது.   

தன் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டவள், தன் காலை கட்டிக்கொண்டு அழுத தன் செல்ல மகளை வாரி எடுத்தவள், அருகில்  சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்தை காட்டி

“அவர் தான் உன் அப்பா கண்ணு..  உன் மேல ரொம்பவும் பாசமாக இருந்தார். நீயென்றால் அவருக்கு உசுரு. ஆனால் இப்ப நம்மளை இப்படி அனாதையாக தவிக்க விட்டுட்டு சாமிகிட்ட போய் விட்டார்...”  

என்று தாங்க முடியாத துயரத்துடன், ஆற்றாமையுடன் சொல்ல,  அதைக்கண்டு சுரயின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது.  

அதிலிருந்து தனக்கு அப்பா இல்லை என்பதை மனதில் பதித்து கொண்டவள், அதன்பிறகு தன் அப்பாவை  பற்றி அன்னையிடம் பேசாமல் தவிர்த்தாள்.  

ஆனால் தந்தைக்கான அவள் ஏக்கம் மட்டும் அவளின் ஆழ்  மனதில் பதிந்து போனது

*****

ப்பொழுது அதே மாதிரியான ஒரு பாசத்தைத் தான்,  தன் மகளும் தேடுகிறாள்  என்று அறிந்த பொழுது அவள் மனம் சுட்டது

“ஒருவேளை தப்பு செய்து விட்டேனா?  என்னுடைய சுயநலத்துக்காக தவறான முடிவை எடுத்து விட்டேனா? என்று முதன் முறையாக அவள் மனம் அவளை  கேள்வி கேட்டது.

அதே நேரம் அவளுக்காக ஆர்டர் பண்ணி இருந்த உணவு வந்து விட, பேருக்கு ஏதோ கொரித்தாள்.

அவளை  கண்டுகொள்ளாமல்,  அந்தக் குட்டிக்கு ஊட்டுவதும், அதே தட்டில் இருந்த உணவை எடுத்து அவன்  சாப்பிடுவதுமாய்,  வேற உலகத்தில் சஞ்சரித்தான் விகர்த்தனன்.

சாப்பிட்டு முடித்ததும் அந்த குட்டியை பார்த்தவன்

“பிரின்சஸ்... ஐஸ்க்ரீம்  வேணுமா?  என்று  கேட்க, அதற்குள் பதறிய சுரபி

“சார்... அதெல்லாம் வேண்டாம்...அவளுக்கு சளி பிடிக்கும்.. “ என்று தடுக்க முயல, அவளை சட்டை செய்யாமல்,  அங்கிருந்த  ஐஸ்க்ரீம் வகைகள் இருந்த மெனுகார்டை அந்த குட்டியிடம் காட்டி, அதில் இருந்த ஐஸ்க்ரீம் ன் ஒவ்வொரு பெயரைச் சொல்லி,  

“அம்முவுக்கு எது வேணும்...? ” என்று கேட்க,

அவளோ எல்லா புகைப்படத்தையும் கை  காட்டி  எல்லாமே வேணும் என்று கையை தட்டி சொல்ல,  அவனும் மலர்ந்து புன்னகைத்தவன், பின் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீமை  ஆர்டர் பண்ணி விட்டு சுரபியை பார்த்தான்.  

“உனக்கு என்ன வேண்டும் ? “ என்று கேள்வி  இருந்தது அவன்  பார்வையில்.

அவளோ எதுவும் வேண்டாம்  என்று தலையை சிலுப்பினாலும், பார்வை என்னவோ அவன் கையில் வைத்திருந்த ஐஸ்கிரீம் புக்லெட்டின் மீதே  இருந்தது.

அதுவும் அந்த புக்லெட்டின் அட்டையை பார்த்ததும், அவள் நாக்கில்  எச்சில் ஊற,  அவள் பார்வையோ  அதிலிருந்த வெண்ணிலா மீதே குத்தி நின்றது.

சுரபிக்கும்  ஐஸ்கிரீம் என்றால் ரொம்ப பிரியம் தான்.  

அவள் மகள் பிறந்ததிலிருந்து,  தான் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தன் மகளுக்கும்  சளி பிடிக்கும்...அதோடு  தன் மகளை விட்டுவிட்டு தான் மட்டும் எப்படி சாப்பிடுவது என்று ஐஸ்க்ரீமை   தவிர்த்து விட்டாள்.  

ஆனால் இப்பொது அவளுக்கு பிடித்த வெண்ணிலாவை பார்க்கவும் அவளையும் மறந்து நாக்கில் எச்சில் ஊறியது.  

அவளின் மனதை கண்டு கொண்டன விகர்த்தனன்  விழிகள்.

“ஒரு வெண்ணிலா... ஒரு பட்டர் ஸ்காட்ச்...” என்று ஆர்டர்  கொடுக்க, அவனை முறைத்தாலும் சற்று நேரத்தில்  சர்வர்  எடுத்து வந்த ஐஸ்கிரீம் ஐ சாப்பிட மறக்கவில்லை சுரபி.  

முதன் முதலாக ஜில்லென்று தொண்டைக்குள் இறங்கிய ஐஸ்க்ரீமை சுவைத்ததும், அந்தக் கர்ணி குட்டிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

இரு கையையும் தட்டி மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தவள், எக்கி  விகர்த்தனன் கன்னத்தில் அழுந்த  முத்தமிட்டாள்.

அவள் இதழில் இன்னுமே ஒட்டியிருந்த ஐஸ்க்ரீம் கலந்த சில்லென்ற  முத்தம் அது.  

அவன் அதுவரை சாப்பிட்ட ஐஸ்க்ரீம் ஜில்லிப்பை விட, அவளின்...அந்த குட்டியின் ...செல்ல முத்தம்...   உடலெல்லாம் சில்லென்று பரவியது ஒரு பரவசம்.

அவன் இதுவரை அனுபவித்திராத  பரவசம் அது..!

கண் மூடி அதை ரசித்து அனுபவித்தான்..! 

ஓரக்கண்ணால் அவனை பார்த்துக் கொண்டிருந்த சுரபிக்கோ, அவன் கண் மூடி இலகிய நிலையில் அமர்ந்து இருப்பதை கண்டு ஆச்சர்யமாக இருந்தது.

அதுவரை அவனிடம் நல்ல முறையில் எதுவும் பேசாமல் இருந்தவள்அவன் தன் மகளின் மீது ஏனோ  உண்மையாகவே பாசம் வைத்திருக்கிறான்... எதுவும் கெட்டது செய்ய முயலவில்லை என்று உறுதியாகி விட,  முதன் முறையாக அவனைப் பற்றி விசாரித்தாள் சுரபி.

*****

ங்க பெயர் என்ன? நீங்க எந்த ப்ராஜெக்ட்டில் வொர்க் பண்றிங்க? என்று மெல்ல  விசாரிக்க, அதைக்கேட்டதும் அவனுக்கு புரை ஏறியது. 

தன் தலையை தட்டிக்கொண்டவன்,  

“அடிப்பாவி... என்னைப் பற்றி தெரியாமல் தான்  இவ்வளவு நாளா பழகிகிட்டு இருக்கியா? எந்த ப்ராஜெக்ட் ஆ? பல ப்ராஜெக்ட் களுக்கு சொந்தக்காரன் மா...”  என்று உள்ளுக்குள் நக்கலாக  சிரித்துக் கொண்டவன்,

அவள் தன் பதிலுக்காக தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து  அவன் நிறுவனத்தில் உள்ள பல ப்ராஜெக்ட்டுகளில் ஒன்றன் பெயரை சொல்லி வைத்தான் விகர்த்தனன் தன் சிரிப்பை அடக்கியபடி.

அதைக்கேட்டவளின் விழிகளோ ஆச்சர்யத்தில் விரிந்தன..!

“வாவ்...இந்த ப்ராஜெக்ட் ஆ? இதைப்பற்றி என் டீம்ல ரொம்ப பெருமையா பேசிகிட்டாங்க... இந்த கம்பெனிக்கு லாபம் வரும் ப்ராஜெக்ட்டில் இதுதான் பர்ஸ்ட் ஆம்... இந்த ப்ராஜெக்ட்டில் வேலை செய்ய கொடுத்து வச்சிருக்கணும்னு பேசிகிட்டாங்க...

நீங்க அதுல வேலை செய்யறது சூப்பர்....” என்று சிலாகித்து சொல்ல, அவனோ அவள் முகத்தில் மின்னி மின்னி சென்ற ஆச்சர்ய ரேகைகளையும், கண்களில் மின்னிய நட்சத்திரங்களையும் தன்னை மறந்து ஒரு நொடி ரசித்து பார்த்தான்.

“ஆமா... உனக்கு இந்த ஆபிஸ் பிடிச்சிருக்கா? நியூ ஜாய்னிதான..எப்படி ப்ராஜெக்ட் போகுது..? “ என்று முதன்முதலாக அவனும் அவளைப்பற்றி விசாரித்தான்.

அவ்வளவுதான்.. அதுவரை  போட்டு வைத்திருந்த பூட்டு திறந்து கொண்டதை போல கடகடவென்று கொட்டினாள் சுரபி.

“பிடிச்சிருக்காவா? பென்டாஸ்டிக்கா இருக்கு சார் இந்த ஆபிஸ்...என் ப்ராஜெக்ட் ம் இன்ட்ரெஸ்டிங் ஆ தான் இருக்கு. டீம் லயும் நல்ல சப்போர்ட்... இதையெல்லாம் விட எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த ஆபிஸ் எம்.டியைத்தான்...” என்றாள் கண்கள் விரிய.

அதைக்கேட்டவனோ ஒரு நொடி இன்பமாய் அதிர்ந்து போனான்.

என்ன சொல்கிறாள்? என்று தன் புருவத்தை சுளித்தவன்,

“எம்.டி யையா ? “ என்று கேள்வியாக அவளை ஊடுருவி பார்க்க,

“ஐ மீன் அவருடைய திட்டமிடுதல்இந்த அலுவலகத்தை நடத்தி செல்லும் விதம்...அமேசிங்..!

இல்லைனா  நடுக்கடலில் முழுகிக் கொண்டிருந்த கப்பலை காப்பத்தி,  அதை கரை சேத்த மாதிரி, நஷ்டத்தில போய்க்கிட்டிருந்த  பழைய கம்பெனியை வாங்கி,  கொஞ்ச வருசத்திலயே, இந்த அளவுக்கு கொண்டு வந்திட்டாரே..!

சச்  அ பிரில்லியன்ட் மேன்...!”  என்று அவனைப் பற்றி அவனிடமே புகழ, அவனுக்கோ ஜிவ்வென்று இருந்தது.

இதுவரை எத்தனையோ பேர் அவனை புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்கள் தான்...

கடந்த மூன்று வருடங்களாக சிறந்த தொழிலதிபர் என்ற விருதையும் பெற்றிருக்கிறான்  தான்.  

ஆனால் அப்பொழுதெல்லாம் அவன் மனதில் எந்த ஒரு உற்சாகமும் பெருமிதமும் இல்லை.

இதையெல்லாம் அவன் எதிர்பார்த்தது போல,  அதோடு இன்னும் இன்னும் முன்னேற வேண்டும் என்று மட்டும்தான் தோன்றியது அந்த தருணத்தில்

ஆனால் ஏனோ இந்தப் பெண் அவனைப்பற்றி புகழ்ந்து சொல்லவும் அவனுக்கு பெருமையாகவும் கர்வமாகவும்  இருந்தது.  

மானசீகமாக தன் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு உள்ளுக்குள் விசில் அடித்தான்.  

அதோடு இன்னும் அவளின் வாய்மொழி வழியாக தன்னைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்ற அவளின் வாயை கிளறினான்.

“அப்படியா?  அப்படி என்ன பெருசா செஞ்சிட்டார்? என்று ஏளனமாக சொல்ல,  அவளோ அவனை முறைத்தவள்,

“ஏன் சார்... கடனில் முழுகிக் கொண்டிருந்த நிறுவனத்தை,  இப்பொழுது பல மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியதே பெரிய சாதனை இல்லையா..! “  என்றாள் பெருமிதத்துடன்.

“அது மட்டுமா? அவர் லாபத்தை மட்டும் பார்க்கவில்லை நம்ம நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு எம்பிளாய்ஸ்ன்  நலனில் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார்..!  இங்கே இருக்கிற மாதிரி சலுகைகள் வேற எங்கயாவது இருக்கா?.  

இத்தனை மணிக்கு கரெக்ட்டா வரணும் என்று கட் அன்ட் ரைட்டாக கட்டுப்பாடுகள் இல்லாமல் அவரவர் விருப்பபட்ட நேரத்திற்கு வருவதும், அவர்களுக்கு மூன்று வேளையும் உண்ண, கொறிக்க, குடிக்க என்று எல்லாமே இலவசமாக வழங்குவதும் எவ்வளவு பெரிய விஷயம்..!

அதைவிட, வேலை செய்பவர்கள் வீட்டை பற்றியும், வீட்டில் இருக்கும் தங்கள் குழந்தைகளை பற்றியும்,  எந்த கவலையும் இல்லாமல் வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அலுவலக வளாகத்திலயே க்ரெச் ஐ அமைத்தது இன்னும் எவ்வளவு பெரிய விஷயம்..!

இதை எல்லாத்தையும் விட எனக்கு ரொம்ப பிடித்தது நம்ம அலுவலகத்தின் வெளித்தோற்றம் தான்...!

நம்ம அலுவலகத்தை ஒரு நிமிஷம் வெளில இருந்து பார்த்திருக்கிங்களா? செமயா இருக்கும்..!

நம்ம பாஸ் ஒரு  நல்ல ரசிகன் போல...!  

பல விதமான  மன அழுத்தத்தில் ஆபிஸ்க்கு வருகிறவர்கள் கூட , உள்ளே நுழைந்ததுமே இங்க இருக்கும் டெகரேசனை கண்டால்,  அத்தனை பாரமும் விலகி,  மனம் லேசாகிடும்.  

கண்ணுக்கு குளிர்ச்சியா எவ்வளவு ஏற்பாடு செய்திருக்கிறார்..! தி கிரேட் மேன்..! “

என்று இமைகள் படபடக்க அவனைப் பற்றி புகழ்ந்து சொல்ல, அவனுக்கோ இன்னுமாய் பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது.

அதோடு அவனே மனதில் குறித்திராத , பார்த்து ரசித்திராத  தன் அலுவலகத்தின்   அழகை அவள் வாய்மொழியாக கேட்கவும் இன்னுமாய் ஆச்சர்யமாக இருந்தது.

******

சுரபி எண்ணுவதைப்போல அவன் ஒன்னும் பெரிய கலா ரசிகன் இல்லை...

பச்சை பசேல் என்று பரந்து விரிந்திருக்கும் பலவித இயற்கை காட்சிகளைக்கூட ஒரு நொடி நின்று ரசித்து பார்க்க நேரம் இருந்ததில்லை.

அப்படியே நேரம் இருந்தாலும் அவனுக்கு நின்னு ரசித்து பார்க்க தோன்றியதில்லை.

ஆனால் தன் அலுவலகத்தை பெரிய அளவில் கொண்டு வர, பல வாடிக்கையாளர்களை கவர,  தன் அலுவலகத்தின் முகப்பை அட்ராக்டிவ் ஆக மாற்ற வேண்டும் என்று தோன்றியது.

ஏனென்றால் பர்ஸ்ட் இம்ப்ரெஸ்ஸன் இஸ் பெஸ்ட் இம்ப்ரெஸ்ஸன் என்பதில் நம்பிக்கை உடையவன். கிட்டதட்ட தொழில்களில் வெற்றி பெற இது ரொம்பவும் முக்கியம் என்று அறிந்து இருந்தவன்.

அதனாலேயே தன்னுடைய அலுவலகத்தின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டெக்கரேசனை அதற்கு என்று இருந்த ஒரு இன்டீரியர் டெக்கரேசன் நிறுவனத்திற்கு  விட்டுவிட்டான்.

சுரபி ரசித்து வர்ணித்த அழகெல்லாம், அந்த நிறுவனத்தின் ஐடியா தான்..!

ஆனால் இவள் என்னவோ அந்த ஐடியா எல்லாம் அந்த நிறுவனத்தின் உரிமையாளனான  அவனுடையதாக அவள் சொல்லவும்,  அடக்கப்பட்ட சிரிப்புடன் தலையை குனிந்து கொண்டான் விகர்த்தனன்.

ஆனால் அவன் கண்கள் சிரித்தன. அனிச்சையாய் அவனை பார்த்தவள்..அவன் கண்களில் இருந்த குறுஞ்சிரிப்பையும், இதழ் ஓரம் கசிந்திருந்த கீற்று புன்னகையும் கண்டு கொண்டவள்,

“எதற்காக இப்பொழுது சிரிக்கிறான்..? நான் ஜோக் எதுவும் சொல்லவில்லையே..” என்று குழப்பத்துடன் அவனை பார்க்க, அதற்குள் தன் சிரிப்பை அடக்கி கொண்டவன்,

“ஆல் ரைட்... உன் பாஸ் ஐ பற்றி பெருமை அடித்தது போதும் மா... இப்ப ஐஸ்க்ரீமை பார்த்து சாப்பிடு...” என்று புன்னகைத்து விட்டு அவனும் சாப்பிட ஆரம்பித்தான்.

சுரபியும் குழப்பமாய் சாப்பிட ஆரம்பித்தவள், அப்பொழுதுதான் அவன் பெயர் கேட்டது நினைவு வர,    

“ஆமா... உங்க  பெயர் என்ன? “ என்று மீண்டும் கேட்க,  அவனும் ஏதோ சொல்ல வாயை திறந்தான்.  

அதே நேரம் அவனுடைய அலுவலக தொடர்புக்காக வைத்திருந்த அலைபேசி ஒலித்தது.  

அதை எடுத்து காதில் வைத்தவன் ஏதோ பேச ஆரம்பித்தான், அலுவலக சம்பந்தமான பேச்சு என்பதால், எக்ஸ்க்யூஸ் மி என்றவாறு எழுந்து சென்றான்.

அதன் பிறகு திரும்பி வந்தவன், மற்ற பேச்சுக்கு தாவி விட, அவன் பெயர் அவளுக்கு தெரியாமலயே போயிருந்தது.   

ஒருவேளை அவன் பெயர் அப்பொழுதே தெரிந்திருந்தால்,  அவள் மகள் அவனிடம் ஏன் அப்படி ஒட்டிக் கொள்கிறாள் என்றதற்கான விடை கிடைத்து இருக்கும்.

அந்த விடை கிடைத்து இருந்தால், பின்னாளில் அவள் அடையப்போகும் பலவித வலியையும் வேதனையையும் தவிர்த்து இருந்திருக்கலாம்...!

ஆனால் இது அந்த விதியார் ஆடும் ஆட்டமாச்சே...!  அவன்  போட்ட முடிச்சை  அவ்வளவு சீக்கிரம் அவிழ்த்து விடுவானா?   

இந்த மனிதர்களை இன்னும் கொஞ்சம் சுத்த வைக்கவேண்டும் என்று தானே இந்த ஆட்டத்தை ஆரம்பித்து, அதில் இந்த மானிடர்களை நடிக்க வைத்து  ரசித்துக் கொண்டிருக்கிறான்..!  என்னதான் அவன் திட்டமாம்..? நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்..!   .

*****

ந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடித்ததும், இன்னுமே  அந்த குட்டியை பிரிந்து செல்ல மனமில்லை விகர்த்தனனுக்கு.  

“நேரமாகிறது...நாங்க கிளம்பனும்...”  என்று மெல்ல முனகினாள் சுரபி..

அவனும் எழுந்தவன்,

“வீட்டிற்கு போய்  படுத்து தூங்கத்தான போற. கொஞ்ச நேரம் நடந்து விட்டு செல்லலாம்..” என்றவன், ஹோட்டலை விட்டு வெளியில் வந்து,  அங்கே ஓரமாக இருந்த நீச்சல் குளத்தின் அருகே நடந்தவாறு இன்னும் கொஞ்சம் நேரத்தை  கடத்தினான்.  

அந்த இரவு நேரத்து ஏகாந்தத்தில், அந்த குட்டியின் பிஞ்சு கையை பிடித்துக் கொண்டு அவளுடன் நீச்சல் குளத்தின் கரையை  சுற்றி நடப்பது  அவ்வளவு பிடித்து இருந்தது அவனுக்கு.  

சுரபியோ அவர்களுடன் இணைந்து நடக்காமல், ஓரமாக நின்று கொண்டு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதோடு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஹோட்டலின் வெளிப்புற தோற்றத்தின் அழகை  ரசித்து கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் நேரமாவது தெரிய, பதற்றத்துடன் அவர்கள் அருகில் சென்றவள்,

“சார்.... நேரம் ஆகுது...அவளை சீக்கிரம் தூங்க வைக்க வேண்டும்.. அப்பதான் நாளைக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருப்பா....“ என்று முறைத்தாள்.

அதற்கு மேல் தாமதிக்க முடியாமல்,  இருவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் விகர்த்தனன்.

தாங்களாகவே போய்க்கிறோம் என்று சொன்ன சுரபியை,   முறைத்து விட்டு தன் காரை செலுத்தினான் விகர்த்தனன்.

அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு சன்னல் வழியாக வெளியில் தெரிந்த  இரவை ரசித்து வந்தாள்.

திடீரென்று கார் ப்ரேக் இட்டு நிக்க, திடுக்கிட்டு விழித்தவள்... அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ பார்வையால் பக்கவாட்டில் காண்பிக்க, அப்பொழுதுதான் அவள் வீடு வந்திருப்பது உரைத்தது.

திடுக்கிட்டு என் வீட்டு அட்ரஸ் எப்படி தெரியும் என்று கேள்வியாக புருவத்தை உயர்த்த,  அவனோ

“எனக்கு எல்லாம் தெரியும்... உன் வீட்டு அட்ரஸ் கண்டுபிடிப்பது பெரிய விஷயமா ? “ என்று குறும்பாக கண்சிமிட்டி தோளை குலுக்கியவன், பார்வையை அந்த குட்டியின் பக்கம் திருப்பி,  

“பை ப்ரின்சஸ்...சமத்தா போய் தூங்கணும்...அப்பா உன்னை நாளைக்கு பார்க்கறேன்...குட் நைட்... “ என்று அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்...

சுரபியும் தன் மகளை அள்ளிக்கொண்டு கீழ இறங்க,  இருவருக்குமாய்  பொதுவாக கையசைத்து விடை பெற்று சென்றான் விகர்த்தனன்.

தன் அறைக்கு வந்து படுக்கையில்  விழுந்தவனுக்கோ மனம் எல்லாம்   சந்தோசம் பொங்கி வழிந்தது.

இதுவரை இந்த மாதிரி ஒரு உற்சாகத்தை...மன நிறைவை அனுபவித்தது இல்லை அவன்...! மனம் கொள்ளா மகிழ்ச்சியும், நிறைவுமாய், தூக்க மாத்திரையின் உதவியின்றி சந்தோஷமாக, நிம்மதியாக உறங்கினான் விகர்த்தனன்.

அவனின் நிம்மதி, உற்சாகம் நீடிக்குமா?  பார்க்கலாம்..!


Share:

1 comment:

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *