மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Saturday, September 24, 2022

வராமல் வந்த தேவதை-4

 


அத்தியாயம்-4

 

விகர்த்தனன் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ்  என்ற பொன்னிற எழுத்துக்கள் பளபளத்த அந்த  பிரம்மாண்டமான வணிக  கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாள் அவள்..!  

அவள் வந்திருந்த ஆட்டோ, அந்த  வணிக  கட்டிடத்தின் முன்னால்  வந்து நின்றிருக்க, அதிலிருந்து  கீழ இறங்க  கூட மறந்து, அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள்.  

கிட்டத்தட்ட பதினைந்து தளங்களை  கொண்டிருந்தது அந்த நிறுவனம்.

சுற்றிலும் அலங்கார கண்ணாடிகள்  பதிக்கப்பட்டிருக்க, அதில் சூரிய ஒளி பட்டு, அந்த பகுதியே பிரகாசமாக ஜொலி ஜொலித்தது.

அதற்கு இன்னும் அழகு சேர்க்கும் விதமாக, கண்ணாடி சுவற்றின் மீது  விதவிதமான இயற்கையான பச்சை கொடிகள், மொட்டை மாடியிலிருந்து கீழ் நோக்கி வளரும்படி  அந்த அலுவலகத்தை சுற்றிலுமே தொங்கவிடப்பட்டு இருந்தது.

பெங்களூர் என்றாலே எங்கு பார்த்தாலும் பசுமை கண்ணுக்கு தெரியும்தான். எல்லா பகுதியிலுமே சிறு சிறு பூங்காக்கள் அமைத்து கண்ணுக்கு குளுமை தரும் மரங்கள் நிறைந்து தான் இருந்தது.

ஆனாலும் அந்த பசுமை,  அலுவலகத்தின் சுவற்றிலயே தெரிய, ஆவென்று வாயை பிளந்து அதிசயித்து பார்த்தாள் அவள்.  

வெளிப்புற தோற்றம் மட்டும் அல்லாது, அலுவலகத்தின் உள்ளேயும், பெயர் தெரியாத உயரமான அழகு செடிகள் வளர்ந்து நின்றது, காம்பவுண்ட் கேட்டிற்கு  வெளியிலிருந்து பார்க்கும்பொழுதே தெரிந்தது.

அந்த அலுவலகத்தை பார்த்ததுமே அதுவரை உள்ளுக்குள் இருந்த டென்ஷன், ஒரு அழுத்தம் மறைந்து, மனதுக்குள் இதமான உணர்வு பரவியது.  

எல்லாரும் வேண்டாவெறுப்பாக அந்த அலுவலகத்தின் வளாகத்தின் உள்ளே நுழையும் பொழுது,  இந்த குளிர்ச்சியான காட்சிகளை பார்க்கும் பொழுது, கட்டாயமாக சோர்வு, மன அழுத்தம் மறைந்து அனைவருக்குள்ளும் ஒரு உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்.

வேலையிலும் அவர்களால் உற்சாகத்தோடு ஈடுபட முடியும்..!  

“ஒருவேளை அதற்காகத்தான் இந்த நிறுவனத்தின் எம்.டி இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறானோ? கெட்டிக்காரன் தான்...” என்று  அந்த நிறுவனத்தின் எம்.டியை தன் மனதிற்குள் மெச்சிக் கொண்டாள்.

******

துதான் மா... நீங்க சொன்ன ஆபிஸ்...” என்று பின்னால் திரும்பி அவளிடம் ஆட்டோ டிரைவர் சொல்ல,  அப்பொழுதுதான் ஆட்டோ வந்து நின்றும் இன்னும் ஆட்டோவிலிருந்து இறங்காமல் பராக்கு பார்த்துக்கொண்டு உள்ளேயே உட்கார்ந்து விட்டது உறைக்க,  முகம் கன்றியவள், தன்  கீழுதட்டைக் கடித்துக் கொண்டாள்.  

கூடவே அந்த ட்ரைவரை பார்த்து ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தி  வைத்தாள்.  

தன் ஹேன்ட்பேக்கை திறந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து ஆட்டோ ட்ரைவரிடம்    கொடுத்தாள்.  

அவள் தங்கியிருக்கும் வீட்டில்  இருந்து இங்கே நடந்து வர , ஒரு பத்து நிமிடங்கள்  தான் ஆகும்.   

ஆனால் இன்று ஏற்கனவே நேரமாகி  விட்டதால்,  அதற்கு மேல் நேரத்தை வீணாக்க வேண்டாமே என்று ஆட்டோ பிடித்து வந்திருந்தாள்.  

“அந்த பத்து நிமிஷத்துக்கு ஐம்பது ரூபாய் அதிகம் தான்...  இனிமேல் சீக்கிரம் வந்து விட வேண்டும்... “  என்று உறுதி செய்து கொண்டவள்,  ஹேன்ட்பேக்கை மூடி,  தன் தோளில் மாட்டிக்கொண்டு, தன்னருகில் அமர்ந்திருந்த தன் மகளை கைகளில் அள்ளிக் கொண்டாள்.

பின் இரண்டு பைகளையும் எடுத்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து கீழ இறங்கி நின்றாள்.  

அந்தக் கட்டிடத்தின் வெளிப்புற தோற்றம்  அவளை மீண்டும் கட்டி இழுக்க,   மீண்டும் ஒரு முறை அன்னாந்து அந்தக்கட்டிடத்தின் உயரத்தையும் அதன் அழகையும் தன்னை மறந்து ரசித்தாள்

அந்த நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பதை அவளால் இன்னுமே நம்ப முடியவில்லை.  

*****

கிட்டத்தட்ட இரண்டு  வருடங்களுக்கு முன்னால்  சில பல  காரணத்தினால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு தன் வேலையை மாற்றிக்கொண்டு ஓடி வந்திருந்தாள் அவள்.

அதுவும் அவள் மகள் அப்பொழுது மூன்று மாத கைக்குழந்தை...!

அவளை பற்றிய ரகசியம் ஒன்று கசிந்ததும், கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தனியாக வசிக்கிறாள் என்ற அவளின் நிலை அறிந்ததும்,

சென்னையில் அவள் வீட்டை சுற்றிலும் இருந்த மக்களின் ஏளன பார்வையும், பரிதாப பார்வையும், ஒரு சில ஆண்களின் வக்ர பார்வையும் அவளை அங்கிருந்து துரத்தி விட்டிருந்தது.   

எங்கேயாவது கண் காணாத இடத்திற்கு ஓடி விடவேண்டும். அவளை பற்றி அறிந்திராதவர்கள் வாழும் இடத்துக்கு சென்று விடவேண்டும்.

எந்த விதமான பார்வை வீச்சுக்கும், ஏச்சுக்கும் ஆளாகாமல் தான் உண்டு, தன் மகள் உண்டு என்று நிம்மதியாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்றுதான் வேறு வேலையை தேட ஆரம்பித்தாள்.

அதனாலேயே,  இதமான சூழ்நிலை...நல்ல சம்பளம் கிடைக்கும்  பெங்களூரில் இருந்த சில ஐ.டி நிறுவனங்களுக்கு அப்ளை பண்ணி இருந்தாள்.  

நீண்ட நாட்கள் முயற்சி செய்து, பல  இன்டர்வியூக்கள் அட்டென்ட் பண்ணி சலித்த    பிறகே ஒரு சிறிய ஸ்டார்ட்டப் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.  

சம்பளம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், அதற்கு மேல் சென்னையில் இருக்க முடியாது என்று தீர்மானித்தவள், அந்த வேலையை ஒத்துக் கொண்டாள்.

******

வேலை செய்ய அலுவலகம் கிடைத்து விட்டது.

அடுத்து தங்க ஒரு கூரை வேண்டுமே என்று தங்க ஒரு வீட்டை சென்னையில் இருந்த படியே தேட ஆரம்பித்தாள்.

நேரில் வந்து,  வீட்டை பார்த்து முடித்து, மீண்டும் சென்னைக்கு  போய் எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு திரும்பி வருவது கஷ்டம் என்பதனால்,  

ஆன்லைனில் ரியல் எஸ்டேட் வெப்சைட்கள்  சிலவற்றில்  அவள்  வேலை செய்யப் போகும் நிறுவனத்திற்கு அருகில், எலெக்ட்ரானிக் சிட்டியை ஒட்டி  இருந்த பகுதியில் இரண்டு, மூன்று வீடுகளை தேர்ந்தெடுத்து வைத்து இருந்தாள்.

இப்பொழுதெல்லாம் வீட்டைப் பற்றிய புகைப்படங்களும்,  வீடியோவும் வெப்சைட்டிலயே  இருக்க,  நேரில் வந்து பார்க்க அவசியம் இன்றி,

ஆன்லைன் லயே   பார்த்து,  அவளுக்கு வசதியாக தோன்றிய  வீடுகளை தேர்ந்தெடுத்து விட்டு, அதன் உரிமையாளருடன் அலைபேசியிலும் அழைத்து பேசி இருந்தாள்.

அவர்களின் பதில் திருப்தி அளிக்க, பெட்டியுடன் முக்கியமான துணிமணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு நேரடியாக இந்த வீட்டிற்கு வந்து இறங்கி விட்டாள்.

புகைப்படத்தில் பார்த்ததில் இப்பொழுது அவள் தங்கி இருக்கும் அந்த வீடுதான் மனதுக்கு பிடித்து இருக்க,  முதலாவதாக அந்த வீட்டை பார்க்க வந்து விட்டாள்.

அப்பொழுது தான் அந்த வீட்டை கட்டி முடித்திருந்தார்கள்.  

நான்கு தளத்தை கொண்ட போதிலும், புது வீடு என்பதால், எல்லா போர்ஷனும் காலியாக  இருந்தது.

நாளைக்கு குழந்தை கொஞ்சம் வளர்ந்து விளையாட்டு போக்கில், மாடியில்  இருந்து எதுவும் தவறி விழுந்து விடக்கூடாது என்றும்,    அதேநேரம்  காற்றோட்டம் வேண்டுமென்று முதல் தளத்தில் கடைசியாக இருந்த போர்ஷனை எடுத்துக் கொண்டாள்.  

அதன் உரிமையாளர் தமிழ் தெரிந்தவர்... தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்பதால் இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.  

முதன்முதலாக பெங்களூர்க்கு வந்திருப்பதால், பாஷை தெரியாத ஊரில் வந்து எப்படி சமாளிக்க  போகிறோமோ என்று தவித்து இருந்தவளுக்கு,  அந்த ஹவுஸ் ஓனரின் அன்பான பேச்சும்,  அவர் மனைவியின் அவள் மீதான அக்கறையும், கொஞ்சம் தைர்யத்தை கொடுத்தது.

கூடவே அந்த பகுதியில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்ததும்,  அவளுக்கு அவள் சொந்த ஊரில் இருப்பதை போல ஒரு உணர்வு வர,  உடனே அந்த வீட்டையே தேர்ந்தெடுத்தாள்.  

அதோடு அந்த இடமும் பெங்களூர் சிட்டியில் இருந்து தள்ளி இருந்தது. 

சென்னையில் இருந்து வரும்பொழுது பெங்களூர் சிட்டிக்குள் நுழையும் பகுதியிலயே இருக்க, சென்னைக்கு சென்று வர வசதியாக இருக்க,  அந்தப் பகுதியை தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.  

சிட்டியை போன்ற ஆடம்பரம்... அடிக்கடி சாலையில் கார், பஸ் போன்ற வாகனங்களின்  இரைச்சல் எதுவும்  இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த பகுதி...  

அவள்  சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் இருப்பதை போன்று  அவள் மனதுக்கு பிடித்து  இருந்தது.

ஆனாலும் அங்கும், இங்கும் ஒரே ஒரு வித்தியாசம்.  

அங்கே ஒரு வீட்டுக்கும், மற்ற வீட்டுக்கும்  இடையில் காற்றோட்டமாக இருக்க,  இடைவெளி விட்டு வீட்டை கட்டி இருந்தார்கள்.

பெரும்பாலும் மாடி இல்லாத தனி வீடுகள் தான் அதிகம்.

ஆங்காங்கே ஒரு சில  ஒன்று அல்லது இரண்டு மாடி வீடுகளை பார்க்கலாம்.

ஆனால் இங்கயோ, வீட்டை கட்டி வாடகைக்கு விடுவதை ஒரு தொழிலாகவே பின்பற்றினர்.

எல்லாருமே வீட்டை  கட்டி வாடகைக்கு விடும் ஆர்வத்தில், குறைந்த சதுர அடியிலும்,  நான்கு  மாடி, ஐந்து  மாடி என்று உயரமான கட்டிடங்களை எழுப்பியும்,  ஒரு இன்ச் அடி நிலத்தை கூட வீணாக்காமல்,  மூன்று போர்ஷன்களாக இழுத்து கட்டியிருந்ததால்,  கொஞ்சம் காற்றோட்டம் கம்மியாகத் தான் இருந்தது.

அவள் தேர்ந்தெடுத்த வீட்டின் அருகில்,  மற்ற வீடுகள் இன்னும் கட்டி இருக்காததால் காற்றோட்டமாக  இருந்தது.  

பக்கத்து சைட்டில் வீடு கட்டாத வரைக்கும் பிரச்சினையில்லை என்று பெருமூச்சு விட்டவள், வீட்டை  பார்த்ததும், அட்வான்ஸ் முழு பணத்தையும் கொடுத்து விட்டாள்.

வீட்டைப் பார்த்து விட்டு நாளைக்கு சொல்றேன் என்று திரும்பி செல்லாமல்,  பார்த்தவுடனேயே அட்வான்ஸை கொடுத்தவளை,  ஹவுஸ் ஓனர்க்கு ரொம்பவும்  பிடித்துவிட்டது.  

*****

டுத்து அவள் கையில் குழந்தையுடன் நின்றிருந்தாள்...  

அதை கண்டதும் அடுத்த கேள்வி எழுந்தது.  

“எங்கம்மா உன் புருசன்? அவர் என்ன பண்றார்? “ என்று அவளின் கணவனைப் பற்றி விசாரிக்க,  அவளுக்கோ  திக்கென்றது.  

இதைப் பற்றி இதுவரை யோசித்ததில்லை அவள்.

சென்னையில் வேலை செய்தவள்...சொந்த வீட்டில் வசித்தவள்.  

பெங்களூரில் வேலை கிடைத்ததும்,  வாடகைக்கு வீட்டைப் பார்த்துக் கொண்டு பிள்ளையும் தூக்கிக் கொண்டு வந்து விட்டாள்.  

ஆனால் போகும் இடத்தில் இப்படி ஒரு கேள்வி எழும் என்று எதிர்பார்த்திருக்க வில்லை.  

முதன்முதலாக சொந்த ஊரைவிட்டு வெளியே வந்திருக்கிறாள்.  சொந்த ஊரில்...சொந்த வீட்டில்  இருந்தவரைக்கும்  இந்த மாதிரியான கேள்விகள் எழ வில்லை.  

ஆனால் இப்பொழுது தன் கூட்டை விட்டு வெளியேறி,  வாடகைக்கு வீடு தேடி வந்து நிற்கும் பொழுது  இப்படி ஒரு கேள்வி எழுவது வழக்கம் தான் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.

அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவள், தன்  கீழுதட்டை கடித்து கொண்டு அவசரமாக யோசித்தவள்,

“வந்து...  வந்து...  அவர் ஃபாரின்ல இருக்கிறார் அங்கிள்...”  என்றாள்  தடுமாற்றத்துடன்.  

அதைக்கேட்டதும் அதுவரை கேள்வியில் சுருங்கி இருந்த அந்த ஹவுஸ் ஓனரின் முகம் பிரகாசமானது.  

“அப்படியா மா? உன்னை இப்படி கைக்குழந்தையுடன் தவிக்க விட்டு விட்டு  எப்படி அவருக்கு வெளிநாடு போக மனசு வந்தது? “  என்று சற்று கோபத்துடன் அவள் மீதான அக்கறையில்  விசாரிக்க,  

“வந்து...  அவர் பாப்பா பொறக்கறதுக்கு முன்னாடி போய் விட்டார்.  அஞ்சு வருஷம் காண்ட்ராக்ட்.  அது முடிஞ்சதும் தான் திரும்பி வரமுடியும்...” என்று  வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தாள்.

“என்னமோ போ மா...  இந்த மாதிரி பொண்டாட்டி புள்ளைய கூட இருந்து பாக்காம எதுக்குத்தான் பணம்..பணம்... என்று  பணத்தை தேடி வெளிநாட்டுக்கு ஓடறாங்களோ?  என்று அங்கலாய்ந்தார்.

பணத்தை பற்றிய அவரின் கருத்தை கேட்டு  அவளுக்கு சிரிப்பு வந்தது.  

பணத்தை பற்றி பெரிதாக கருதாதவரா, சட்டத்துக்கு புறம்பாக இரண்டு மாடிக்கு மேல் நான்கு மாடி கட்டி,  அதையும் மூன்று போர்ஷனாக தடுத்து  வாடகைக்கு விட்டிருக்கிறார் .

அவருக்கும் சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை... இல்லை.. .இல்லை... பேராசைதான்....

ஆனால் அவர் பணத்தின் மீது பற்று இல்லாதவரை போல காட்டிக்கொண்டது கண்டு  சிரிப்பு வந்தது.

நம்ம மக்கள் தான் அடுத்தவர்களுக்கு அட்வைஸ் பண்றதுனா, அல்வா சாப்பிடுற மாதிரியாச்சே...

ஊருக்குத்தான் உபதேசம் என்பது போல பணத்தின் மீது அக்றை  இருக்கக் கூடாது என்ற சொல்லிய விதம் அவளுக்கு சிரிப்பைத்தான் வரவைத்தது.  

ஆனாலும் தன் சிரிப்பை மறைத்துக்கொண்டு, அதன் பிறகு அவர் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் அளித்தவள், வீட்டு சாவியை வாங்கி கொண்டு அன்றே பால் காய்ச்சி குடி  வந்துவிட்டாள்.

*****

றுநாள்  அலுவலகத்தில் சேர வேண்டும்..!

அப்பொழுதுதான் அடுத்த பிரச்சனை எழுந்தது..! குழந்தையை எங்கே விட்டுச் செல்வது என்று.

ஆனாலும் வேலைக்கு சேர்ந்த நாளன்று தன் குழந்தையையும்  தூக்கி கொண்டே சென்று பார்மாலிட்டிஸ் ஐ முடித்து வந்தாள்.

அவள் குழந்தையுடன் அலுவலகம் வந்ததைக் கண்ட, அவள் ப்ராஜெக்ட் மேனேஜர், குழந்தையை எங்கே விடுவாள் என்று யோசனையுடன் தாடையை தடவியபடி அவளிடம் விசாரிக்க,  டேக் கேரில் விட்டு விடுவேன் என்று அப்போதைக்கு வாயில் வந்ததை சொல்லி வைத்தாள்.

நல்லவேளையாக அவள்  சேர்ந்த அடுத்த நாளே கொரானா     தொற்று  தீவிரம் அடைய ஆரம்பித்திருக்க, எல்லா அலுவலகத்திலும் எம்ப்ளாய்ஸ்க்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்து வீட்டிலிருந்தே வேலை செய்யச் சொல்லி விட்டனர்.   

அந்த லாக்டவுனில் முதலில் சந்தோசப்பட்டது அவள் தான்.  

தன் மகளை அவளே  வீட்டிலிருந்தபடியே  பார்த்துக் கொள்ளலாம் என்று நிம்மதி அடைந்தாள். அதே மாதிரி டேக்கேரில் விடாமல் அவளாகவே இரண்டு வருடம் வளர்த்தும் விட்டாள்.

இப்படி, அப்படி என்று லாக்டவுனிலயே இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.  

அவளும் இரண்டு வருடங்களாக தன் மகளை சமாளித்து விட்டாள்.

இப்பொழுது நிலைமை முற்றிலும்  சீராகி விட, அவள்  வேலை செய்யும் நிறுவனத்தில் வொர்க் ப்ரம் ஹோம் ஆப்சனை கேன்சல் பண்ணிவிட்டு, எல்லாரையும் அலுவலகத்துக்கு வரச் சொல்லி விட்டனர்.  

அப்பதான் அவளுக்கு பிரச்சனை ஆரம்பமானது.

அலுவலகத்திற்கு சென்றால், தன் மகளை எப்படி பார்த்துக் கொள்வது என்று யோசனையாக இருந்தது.

டேக் கேரில் விடலாம் என்றால்  அச்சமாக இருந்தது.

டேக் கேர் ஐ பற்றி அவள் படித்து, கேள்விபட்ட  செய்திகள் யாவும் அவளுக்கு உவப்பானதாக  இல்லை தான்.  

அதுவும் அவள் குழந்தை பெண் குழந்தை.. இப்பொழுதுதான் இரண்டரை வயது முடிந்திருந்தது.

குழந்தை என்றும் பாராமல் மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் கொடுமை பண்ணிய செய்தி கண் முன்னே வர, அவள் உடல் நடுங்கியது.

அவள் மகள்..அதுவும் அவள் தவமிருந்து, பல தெய்வங்களை  வேண்டி பெற்ற மகள்...  எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்த  பிறகு பிறந்தவள்...

அவளின் வாழ்க்கையில் இருக்கும் ஒரே பற்றுக்கோல்...அதாரம்...

அவளைக்  கொண்டுபோய் டேக் கேரில் விட்டுவிட்டு அவளால் நிம்மதியாக  ஒரு எழுத்தைக் கூட லேப்டாப்பில் தட்ட முடியாது என்று புரிந்தது.  

அதற்காக வேலையையும் விட முடியாது.  

வேலையை விட்டுவிட்டு வீட்டில்   உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கெல்லாம் வசதி இல்லை.

மாதச் சம்பளம் வாங்கி, செலவு  போக எப்படித் சேமித்து வைப்பது  என்று பட்ஜெட் போட்டு வாழும் மிடிச் க்ளாஸ் இல்லத்தரசி.

அதனால் வேலையின்   ஒரு நாள் சம்பள  இழப்பை கூட அவளால் தாங்க முடியாது.  

*****

ன்ன செய்யலாம் என்று தலையை பிய்த்துக் கொண்டபொழுதுதான் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த அவளுடைய டீம் மேட் நேகா இந்த நிறுவனத்தைப் பற்றி சொன்னாள்.

இங்கே அதிக சம்பளமும் அதோடு வேலை செய்யும் பெண்களின் வசதிக்காக, அலுவலகத்தின் உள்ளேயே டேக் கேர் ம் இருக்கிறது.

அதனால்   அங்கே பிள்ளையை  விட்டு விட்டு நிம்மதியாக வேலை செய்யலாம். பால், சிற்றுண்டி, மற்றும் மூன்று நேரத்திற்குமே குழந்தைகளுக்கான உணவை அவர்களே    செய்து தருகிறார்கள்.

அதனால் நீ எந்த கவலையும் இல்லாமல் உன் குழந்தையை அங்கே விட்டு வேலை பார்க்கலாம். எதுக்கும் அப்ளை பண்ணி வை..” என்று சொல்ல, அவளுக்கு ஒரு வழி கிடைத்து விட்ட நிம்மதி.

ஆனால் அந்த நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டுமே என்ற அடுத்த கவலை வந்தது.

ஆனாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்ற, எப்படியாவது இந்த நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட வேண்டும் என்று தன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டே அப்ளை பண்ணினாள்.

முதலில் எந்த பதிலும் வரவில்லை..!

கொஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட, அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தாள்.

அப்பொழுதுதான் அவளுக்கு  விகர்த்தனன் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ் ல் இருந்து இன்டெர்வ்யூ  வந்தது.

அதைக் கண்டதும் துள்ளிக்குதித்தாள்

எப்படியாவது இந்த வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டே ஆரம்ப கட்ட  தகுதித் தேர்வை     ஆன்லைன் வழியாக அட்டென்ட் பண்ணினாள்.

அவளுடைய அதிஷ்டம் முதல் சுற்றில் தேர்வாகிவிட, அந்த உற்சாகத்திலயே அதற்கு பிறகு வந்த சுற்றுகளிலும் எளிதாக கிளியர் பண்ணி இருக்க, அடுத்த நாளே  ஆஃபர் லெட்டர் கொடுத்து விட்டனர்.  

அவளால் நம்பவே  முடியவில்லை..!

அவளுடன் விண்ணப்பித்த மற்ற யாருக்கும் அந்த வேலை கிடைக்காத பொழுது,  அவளுக்கு மட்டும் அந்த வேலை கிடைத்தது எப்படி என்று ஆச்சர்ய பட்டாள்.

வாழ்க்கை என்பது சில பல ஆச்சர்யங்கள்...  அதிர்ச்சிகள்...சஸ்பென்ஸ்கள்... திடுக்கிடல்கள்...எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் உள்ளடக்கியதுதானே...!

யாருக்கும் கிடைக்காத அந்த வேலை அவளுக்கு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு பின்னால் காலம் வேற ஏதோ ஒரு கணக்கை போட்டு வைத்திருக்கிறது என்று அறிய மறந்திருந்தாள் அந்த பேதைப்பெண்..!  

இன்றுதான் அந்த புதிய நிறுவனத்தில் அவள் வேலைக்கு  சேர வேண்டும்..!

அதற்காத்தான் காலையில் இருந்து தன் மகளுடன் மல்லுகட்டி எப்படியோ அவளை கிளப்பி, அவளை தூக்கிக்கொண்டு இதோ  அலுவலகத்துக்கும் வந்து விட்டாள்.

*****

மீண்டும் ஒரு முறை அண்ணாந்து பார்த்துவிட்டு, ஒரு துள்ளலுடன்  அந்த நிறுவனத்திற்குள்  சென்றாள் அவள்.

வெளியில் நின்றிருந்த காவலாளியிடம் அவளுடைய ஆபர் லெட்டரை காட்ட, அதை வாங்கி சரிபார்த்து விட்டு அவளை உள்ளே அனுப்பி வைத்தனர்.

கேட்டை தாண்டி வளாகத்தின் உள்ளே வந்ததும், இன்னுமாய் வியந்து போனாள். அவள் வாய் தானாக

“வாவ்.... “ என்று முனுமுனுத்தது.

கேட்டிலிருந்து அலுவலகத்தின் வளாகத்திற்கு செல்ல சிமென்ட்டிலான கான்க்ரீட் கற்கள் பதிக்கபட்ட நடை பாதை இருந்தது.

அதை ஒட்டி, வாகனங்கள் செல்லவென மற்றொரு பாதையும்  இருந்தது.

நடை பாதையின் இருபக்கமும், கண்ணுக்கு குளிர்ச்சியான பல விதமான அழகு செடிகள் அணிவகுத்து நின்றிருந்தன.

அதற்கு முன் வரிசையில் எல்லாமே வண்ண  வண்ண ரோஜாக்கள் பூத்து குலுங்கின. 

சற்று தொலைவில் அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு பக்க வாட்டில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு, அது நொடிக்கு ஒரு தரம் நீரை இரைத்துக் கொண்டிருந்தது.

அதன் அருகில்  விகர்த்தனன் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ் என்ற எழுத்துக்கள் வருமாறு  புற்களால் வளர்க்கபட்டிருக்க, அதை சுற்றிலும் சிறு பூக்கள்  எப்பொழுதுமே பூத்து குழுங்குமாறு செய்திருந்தனர்.

அந்த அழகிய இயற்கை காட்சி அவள் மனதை அள்ளியது.  

*****

தை ரசித்தபடியே, அலுவலகத்தின் நுழைவாயிலை  அடைந்தவள், அங்கே  வைக்கப்பட்டிருந்த மெட்டல்  டிடெக்டர் இயந்திரத்தில், தன் பைகைகளை வைத்துவிட்டு,  அடுத்து இருந்த  ஸ்கேன் மெசின் வழியாக  உள்ளே சென்றாள்.

அவளுடையை பைகளில் இருந்த பொருட்களை பரிசோதித்துக் கொண்டிருந்தவள்,  அவளுடைய பேக் பெருசாக இருக்கவும்,  திறந்து காட்டச் சொன்னாள்.  

அவளும் லேசாக முகம் சுளித்து, பின் தன் பெரியை பையை திறந்து காட்ட, உள்ளே இருந்த  வீட்டில் செய்து எடுத்து வந்திருந்த மதிய உணவை அடைத்து வைத்திருந்த டப்பாக்களையும்,  அவளின் குழந்தைக்கான பால் பிஸ்கட் போன்ற தின்பண்டங்களையும் கண்டதும்  மெல்ல புன்னகைத்தவள்,

“மேம் நீங்க சாப்பாடு கொண்டு வரவேண்டாம்.  மூன்று வேளையும் எம்பிளாய்ஸ்க்கு இங்க    சாப்பாடு ப்ரிதான். அதோடு குழந்தைக்கான எல்லா வகையான புட் ம் இங்க  இருக்கு..

இனிமேல் இந்த மாதிரி இங்கே எடுத்து வரவேண்டாம்...” என்று  அன்பாக எடுத்துச் சொல்ல

“ஆஹான்... அந்த நேகா இதைச் சொல்லலையே.. தெரிஞ்சிருந்தா  காலையில் எழுந்து அந்த அடுப்படியில்   போராடி இருக்க வேண்டாம்..

ஆனாலும் வொர்க்கிங் வுமன் படும் கஷ்டங்களை புரிந்து கொண்டு இந்த மாதிரி பெசிலிட்டிஸ் கொண்டு வந்திருக்கிற அந்த எம்.டி கிரேட் தான்...” என்று தன் மனதுக்குள் பாராட்டிக்கொண்டாள்.

“நான் இன்னைக்குத்தான் ஜாயின் பண்ண வந்திருக்கேன். அதனால   இதெல்லாம் தெரியாது...” என்று  தயக்கத்துடன் இழுக்க,

“இட்ஸ் ஓகே மேம்.... இனிமேல் எடுத்து வராதிங்க..அதோடு பாப்பாவை டேக் கேரில் விட்டுடுங்க... ஆபிஸ் உள்ள கூட்டிட்டு போக அலவ்ட் இல்ல... ” என்று புன்னகைக்க, அவளும் சரியென்று தலையசைத்து விட்டு உள்ளே சென்றாள்.  

அந்த அலுவலகத்தின் உள்ளே செல்வதற்கான கண்ணாடி கதவை திறந்ததும், உள்ளே  இருந்து ஜில்லென்ற ஏ.சி  காற்று ஓடி வந்து முகத்தில் வீச, அதில் சிலிர்த்தவாறு உற்சாகத்துடன் உள்ளே சென்றாள்.

அந்த அலுவலகத்தின் உள்ளே தெரிந்த  பிரம்மாண்டம் இன்னொரு வாவ் போட  வைத்தது.  

கண்களை ஒரு முறை சுழற்றி அவசரமாக ஒவ்வொன்றையும் ரசித்தவள்,  அங்கிருந்த ரிசப்சனிற்கு சென்றாள்.

அதே நேரம் அதுவரை தன் மகளை தூக்கி இடுப்பில்  வைத்திருந்ததில், இடுப்பு வலிக்க,  ரிசப்சனை  ஒட்டியிருந்த பார்வையாளர்களுக்காக போடப்பட்டிருந்த  சோபாவில்  தன் மகளை   அமர வைத்துவிட்டு,

அவள் கையில் ஒரு பொம்மையை எடுத்து கொடுத்துவிட்டு, தன்னுடைய  சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு ரிசப்சனை நோக்கி சென்றாள்.  

அவளுக்கு முன்பாக இன்னொரு நபர் நின்றிருக்க, அவர் நகரும் வரை காத்திருந்தவள், பின் தன்னுடைய ஆபர் லெட்டரை காட்டினாள்.

அந்த ரிசப்சனிஸ்ட்ம் அதை வாங்கி பார்த்துவிட்டு, அருகில் இருந்த கேபினுக்கு சென்று அவளுடைய சான்றிதல்களை கொடுக்குமாறு  வழி காட்டினாள்.

அவள் குழந்தையை திரும்பி பார்க்க, அவளோ தன் கையில் வைத்திருந்த பொம்மையுடன் சமத்தாக விளையாண்டு கொண்டிருந்தாள்.

அருகில் இருந்த கேபினும் பக்கமே என்பதால், தன் மகளை அங்கயே விட்டு சென்றாள்.

ஒரு நொடி யோசிக்காமல் அவள் எடுத்த முடிவு, அவள் வாழ்க்கையையே புரட்டி போடப்போவதை அறியவில்லை அந்த பேதைப்பெண்.

அறியாத பல ரகசியங்கள் கொட்டி கிடப்பதுதான் வாழ்க்கையாயிற்றே..! அந்த விதியார் போட்ட கட்டத்தில், அவன் விரித்த வலையில் தானாக வந்து மாட்டினாள் பாவையவள். 
Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *