அத்தியாயம்-20
அன்று இரவு உணவை முடித்துவிட்டு நிகா குட்டியை தூக்கிக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டான் விகர்த்தனன்.
சுரபிக்குத்தான் அவள் எங்கே உறங்குவது என்று குழப்பமாக இருந்தது.
தன் மகளை விட்டு அவளால் பிரிந்திருக்க
முடியாது...அதுவும் இரவில் சில நேரம் விழித்துக்கொண்டு அவளை தேடுவாள். அப்படி
இருக்க, அவளை அவன் அறையில் எப்படி விடுவது?
அவளும் தன் மகள் உடன் இருக்க வேண்டும்
என்றால் அவன் அறையில் தங்க வேண்டும்.
அவன் அறையில் எப்படி தங்குவது என்று
யோசனையுடன் கையைப் பிசைந்து கொண்டிருக்க, அப்பொழுது பூங்கோதை ஒரு ட்ரேயில் மூவருக்குமான பாலை காய்ச்சிக் கொண்டு வந்து
சுரபி இடம் கொடுத்தாள்.
“அம்மா... இதில் உங்களுக்கும் பால் கலந்து வச்சிருக்கேன். இதை குடிச்சிட்டு, ஐயாவுக்கும் பாப்பாவுக்கும் எடுத்துகிட்டு போங்க...” என்று புன்னகைத்தாள்.
அவளிடம் மறுத்து எதுவும் பேசாமல் அந்த ட்ரேயை
வாங்கிக் கொண்டு மாடி ஏறினாள் சுரபி.
கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே வர, அவளின் கால்கள் தயங்கின.
நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டது.
மெல்ல சுதாரித்து உள்ளே வந்தவள், அங்கே கண்ட காட்சியில்
அவளுக்கு இருந்த பதட்டம் மறைந்து சிரிப்பு வந்தது.
கட்டிலில் விகர்த்தனன் மல்லாந்து படுத்து இருக்க, அவன் மீது இரு
பக்கமும் காலை போட்டு அவன் வயிற்றில் அமர்ந்துகொண்டு அவன் மீசையை பிடித்து இழுத்தபடி
விளையாட்டு கொண்டிருந்தாள் நிகா...
அவன் முகத்திலோ அப்படி ஒரு பெருமிதம்...!
இன்று காலையில் இருந்தே இருவருமே ஒன்றாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சளைக்காமல் அவன் அவளுடன் நேரத்தை
செலவிடுவது கண்டு ஆச்சரியமாக இருந்தது.
தொண்டையை லேசாக செருமிய படி உள்ளே செல்ல, அவளைப் பார்த்ததும் புன்னகைத்தபடி எழுந்து
அமர்ந்தான் விகர்த்தனன் .
அவனை நேராக பார்க்காமல், தலையை குனிந்தபடி, ட்ரேயில் இருந்த
பாலை எடுத்து அவனிடம் நீட்ட, அவனோ அதை வாங்காமல்
குறுகுறுவென்று அவளை பார்த்திருந்தான்.
தலையை குனிந்து இருந்தவள் நிமிர்ந்து அவனை
கேள்வியுடன் பார்க்க,
“ஆக்சுவலா நமக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் இல்ல... ஆனால் உன்னைப் பார்த்தால், தயங்கி தயங்கி
வெட்கப்பட்டு பாலை கொண்டு வரும் புதுப் பொண்டாட்டி மாதிரியே இல்லையே...” என்று ஹஸ்கி குரலில், அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் கிசுகிசுத்து அவளை சீண்டினான்.
அவனின் குறுகுறு பார்வையில் பெண்ணவளின்
நெஞ்சம் படபடத்தது... ஹஸ்கி குரலில் இதயம் எகிறிது குதித்தது. ஆனாலும் முயன்று தன்னை
சமாளித்துக்கொண்டவள், வரவழைத்த எரிச்சலுடன்
“ஹலோ... அதெல்லாம் உண்மையான கணவன்
மனைவிக்கு. நீங்கதான் என்னை குழந்தைக்காக
தாலியை கட்டி மனைவியாக்கி இருக்கீங்க..அதனால் அதெல்லாம் நமக்கு பொருந்தாது....” என்று முறைத்தவள், மற்றொரு டம்ளரில்
இருந்த பாலை எடுத்து தன் மகளுக்கு
புகட்டினாள்.
அவள் குடித்து முடித்ததும் அவளின் வாயை
துடைத்துவிட்டு, குளியலறைக்கு அழைத்துச் சென்று, அவளின் பல்லை தேய்க்க
வைத்து, உடம்பு கழுவி படுக்கைக்கு தூக்கி வந்தாள்.
அவளுக்கு ஒரு இலகுவான ஆடையை அணிவித்தவாறு, மெல்ல அவனை பாராமல்
“அம்முவும் நானும் பக்கத்து ரூம்ல தங்கிக்கிறோம்...”
என்று தயக்கத்துடன் இழுக்க,
“ஏனோ? “ என்றான் கண்கள் இடுங்க. அவளை ஊடுருவி பார்த்தவாறு.
எப்படி சொல்வதாம் உண்மையை?
அவனை பார்க்கும் பொழுதெல்லாம் அவளின் இதயம்
படபடக்கிறது..! மனம் தறிகெட்டு அலைகிறது. எட்டி நின்று பார்க்கும் பொழுதே
தவிக்கும் அவளுக்கு அவனை இப்படி அருகில் வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பதாம்?
“ஆனால் அதை எப்படி வாய்விட்டு சொல்வது? அப்படியே சொன்னாலும் அவன் அதை எப்படி எடுத்துக் கொள்வான்? விருப்பமில்லாமல் குழந்தைக்காக என்னை மணந்தவனை நான் மயக்கியது
போல் ஆகிவிடாதா?
அதோடு இது ஷ்யாமுக்கு நான் செய்யும் துரோகம் இல்லையா? அவன் எனக்காக எவ்வளவு செய்திருக்கிறான்? அவனுக்காக நான் கடைசி வரை அவன் நியாபகத்தில் வாழ்ந்தாக
வேண்டும்.. ஆம்.. அவன் மட்டும்தான் என் மனதில்.
நான் அவனுக்கு மட்டும்தான் உரிமையானவள். என் மனம் வேற எதிலும்
அலைபாயக்கூடாது. அதுவும் இவனிடம் மயங்கி விடக்கூடாது. கூடவே கூடாது...” என்று தனக்குள் தீர்மானித்தவள்,
“வந்து....பிரைவசி வேண்டும்....” என்று இழுக்க,
“பிரைவசி ? “ என்று தன் ஒற்றை
புருவத்தை உயர்த்தி வினவினான் விகர்த்தனன்.
“ஆமாம்… ப்ரைவசிதான்... ஒரே அறையில் அவனோடு எப்படி
தங்குவதாம்... இந்த மரமண்டைக்கு அதுகூட புரியவில்லையே...” உள்ளுக்குள் புலம்ப, அவளின் மனதை படித்தவனாய்
“ஓ... உனக்கு ப்ரைவசி வேண்டுமா? ஏன் ஒரே அறையில் என்னோடு எப்படி தங்குவது என்று யோசிக்கிறாயா? டோன்ட் வொர்ரி.. நான் ஒன்றும் உன் மீது பாய்ந்து விட மாட்டேன்.
அந்த அளவுக்கு நான் ஒன்றும் காய்ந்து கிடக்கவில்லை. உன் அழகில்
மயங்கி, உன் மீது பாயும் அளவுக்கு நீயும் பெரிய ரம்பா, ஊர்வசி, மேனகாவும் இல்லை...
உன்னை விட எத்தனையோ அழகிகளை பார்த்தவன்...அவர்களுடன் உல்லாசமாக
இருந்தவன். அதனால் உன்மீது மோகம் கொண்டு உன் மீது பாய்ந்து விடுவேன் என்று எண்ணி
விடவேண்டாம்.
அந்த அளவுக்கு
நீயெல்லாம் வொர்த்தே இல்லை. எனக்கு என் ப்ரின்ஸஸ்... வேண்டும்...
அதுக்காகத்தான் நீயும் என் மனைவியாய் என்னுடன்...” என்று தோளை குலுக்கியவன், இதழை வளைத்து நக்கலாக சொல்லி வைக்க, பெண்ணவளுக்கோ வேதனையாக இருந்தது.
ஏற்கனவே இது கேட்டதுதான். அவளை மணப்பதற்காக அவன் சொன்ன காரணமும்
அதுதான்... நிகா குட்டி.. அவன் மகள். அது மட்டும்தானே அவன் கண் முன்னால்
நின்றது..நிற்கிறது.
இதில் அவள் கொசுறு.. இல்லை கொசுறு கூட இல்லை...ஏதோ ஒட்டுப்புல்
போலத்தான் தன் மகளோடு அவளும் ஒட்டிக்கொண்டு இங்கு வந்திருக்கிறாள்.
அப்படி ஒட்டுப்புல் போல
அவள் இவன் வீட்டிற்கு பெயருக்காக மனைவியாய் வரத் தேவையும் இல்லை...அவசியமும் இல்லை
என்றுதான் அவனை மணக்க அவள் மறுத்தது. ஆனாலும்....?
கடைசியில் அவன்தானே ஜெயித்தான்..! அவளால் ஒன்றும் செய்ய
முடியாமல் , அவனின் அடிமை
மாதிரி அவன் சொன்ன படி ஆடத்தான் முடிந்தது.
இப்பொழுது அவனும் அதையே சொல்லி வைக்க, பெண்ணவளின் மனமோ இன்னும் காயப்பட்டு போனது.
ஆனாலும் இந்த பாழாய்ப்போன மனம் ஏன் அவனையே சுற்றி வருகிறது... அவனை
பார்க்கும்பொழுதெல்லாம் உள்ளுக்குள் ஏதோ
ஒரு வித்தியாசமான உணர்வு தோன்றுவது ஏன்? என்றுதான் அவளுக்கு
புரியாமல் குழப்பமாக இருந்தது
நொடியில் பலதையும் எண்ணி அவள் மனம் சஞ்சலப்பட்டது. ஆனாலும் அடுத்த
நொடி தன்னை சமாளித்துக்கொண்டவள், தான் ஆரம்பித்த
பேச்சை அப்படியே நிறுத்தி விட தன்மானம் தடுக்க,
“ஹலோ..நான் சொன்னது உங்க ப்ரைவசிய... எங்களால உங்க ப்ரைவசி
கெட்டுட கூடாது இல்லையா? “ என்று அலட்சியமாக
தோளை குலுக்கி அவனைப் போலவே இதழை வளைத்து நக்கலாக சொல்லி வைத்தாள்.
அதைக்கண்டு ஒரு நொடி அவன் முகத்தில் மின்னல் வெட்டிச்சென்றது. கண்களில் பளிச் வந்து
போனது.
அவள் மீது தனக்கு எந்த ஒரு இன்ட்ரெஸ்ட்ம் இல்லை என்று காட்டி
விட எண்ணிதான் அவளை மட்டம் தட்டி பேசியது.
ஆனாலும் அவனின் ஆழ்மனம்
“டேய் விகா... இது உனக்கே ஓவரா இல்லை.. நிஜமா இந்த புள்ள உனக்கு
வொர்த்து இல்லையா/ உனக்கு உன் ப்ரின்ஸஸ் மட்டும் போதுமா? “ என்று முறைத்தபடி தலை சரித்து கேலியாக சிரித்து வைத்தது.
தன் மனஸ் ன் முறைப்பை கண்டு கொள்ளாமல், குறும்பாக கண் சிமிட்டி சிரித்தவன், இப்பொழுது அந்த வொர்த்தே இல்லாதவளின் சமாளிப்பை உள்ளூர
ரசித்தவன்,
“ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்... என் மகள் என்னோட தான் இருப்பாள். அதே மாதிரி அவளுக்கு அம்மாவும் வேண்டும். அதனால் நீயும் இந்த அறையில்தான் தங்க
வேண்டும்...
அதோடு நமக்குள் இருக்கும் நம்முடைய ஒப்பந்தம் நமக்குள்ள மட்டும் தான். வெளியில் பார்ப்பவர்களுக்கு நீயும் நானும்
ஹஸ்பண்ட் அன்ட் வைஃப்.
அதனால் நாம ரெண்டு பேரும் ஒரே அறையில் தான் தங்கியாக வேண்டும்.
இனிமேல் இதுதான் உன் அறை...அன்டர்ஸ்டான்ட்...” என்று அமர்த்தலாக கூறி அவள் வாயை அடைத்து
விட்டான்.
அதே நேரம் சுரபியின் கையிலிருந்த நிகா குட்டி அவனிடம் தாவ, அவளை லாவகமாக பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவளுடன் கதை பேச ஆரம்பித்தான் விகர்த்தனன்.
சுரபியை கண்டு கொள்ளவும் இல்லை. அவள் ஒருத்தி அங்கே இருப்பதாக
காட்டிக் கொள்ளவும் இல்லை.
அவளுக்கும் அவர்களுடன் இணைந்து கொள்ள மனம் தவித்தாலும், அவனின் இந்த ஒதுக்கம் அவளின் தன்மானத்தை சீண்டி விட்டது.
அதோடு ஒரே கட்டிலில் அவனோடு படுக்க என்னவோ போல இருந்தது. இருவரையும் ஒரு நொடி பார்த்துக்கொண்டு
இருந்துவிட்டு, பின் அந்த அறையை ஒட்டி இருந்த பால்கனிக்கு சென்றாள்.
*****
அந்த அடர்ந்த கார் இருளில், பளிச்சென்று ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த நிலவை பார்க்க
பொறாமையாக இருந்தது.
தானும் இது போல நிலாவாக பிறந்திருக்க கூடாதா? எந்த கவலையும் இல்லாமல், வளர்வது, தேய்வதுமாய்
வாழ்க்கையை ஓட்டி இருக்கலாம்.
இப்படி அல்லோகலபட்டு கொண்டிருக்க தேவையில்லை.
எங்கயோ பிறந்து, எங்கயோ வளர்ந்து, யாருக்கோ நிச்சயித்து, எப்படியோ குழந்தை பெற்று, இப்பொழுது யாருக்கோ
மனைவியாய்...அதுவும் பெயரளவில் மனைவி..!
யாரோ தன்னை ஆட்டி வைக்கும் பொம்மை போல...அவளை வைத்து இந்த
வாழ்க்கையும், விதியும் உருட்டி
விளையாண்டு கொண்டிருப்பது போல அல்லவா இருக்கிறது.
போல என்ன? அப்படித்தான்..
ஆனால் இதையெல்லாம் தடுக்க முடியாமல் அவளும் நீரோடு செல்லும் படகு போல வாழ்க்கையில்
ஒடிக் கொண்டிருக்கிறாளே..!
இதற்கெல்லாம் எப்பொழுது முடிவு வரும்? எப்பொழுது அவள் தன் ஓட்டத்தை நிறுத்திவிட்டு, நிம்மதியாக அமர்ந்து வாழ்க்கையை ரசித்து, ருசிப்பதாம்..? தெரியவில்லை
அவளுக்கு..!
சற்று நேரம் பால்கனியில் உலாத்தியவள், பின் கால்கள் வலிக்க ஆரம்பிக்க, தன் நடையை நிறுத்திவிட்டு, தயக்கத்துடன் அறைக்கு திரும்பி வந்தாள்.
உள்ளே வந்ததும் அவள் கண்ட காட்சியில் ஸ்தம்பித்து நின்றாள்
சுரபி.
விகர்த்தனன் மீது ஒற்றைக் காலை தூக்கி போட்டுக்கொண்டு, அவனை இறுக்கி கட்டிபிடித்தபடி உறங்கி கொண்டிருந்தாள் நிகா
குட்டி.
அவளின் அந்த அழுத்தமான அணைப்பே அவள் தந்தை பாசத்தை எவ்வளவு மிஸ் பண்ணினாள்..
தந்தைக்காக எப்படி ஏங்கி இருக்கிறாள் என்று புரிந்தது.
ஒருவேளை அவள் செய்தது தவறோ? அவளுடைய சுயநலத்திற்காக எடுத்த முடிவு, தன் மகளையும் பாதிக்கும் என்று அன்று ஆராயாமல் விட்டு விட்டாளோ?
எதையும் ஒருமுறைக்கு ஆயிரம் முறை சிந்தித்து, அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பவள்...தன் மகள் விசயத்தில்
அவசரபட்டு விட்டாளோ? நாலையும் ஆராயாமல் களத்தில்
இறங்கி விட்டாளோ?
அப்படித்தான் என்று இப்பொழுது விகர்த்தனனை ஆசையாக கட்டிக்கொண்டு
புன்னகையோடு உறங்கும் தன் மகளை பார்க்கும்பொழுது தெள்ளத்தெளிவானது.
இப்பொழுது மட்டும் அல்ல. அவள் எப்பொழுது இந்த நெட்டையை பார்த்தாளோ..!
பார்த்ததும் அப்பா என்று ஓடிச்சென்று
கட்டிக்கொண்டாளோ அந்த நொடியே அவளுக்கு புரிந்ததுதான்.
ஆனாலும்.....?
எது எப்படியோ..? அவள் அவசரபட்டு தன்
மகள் விசயத்தில் தவறாகவே முடிவு எடுத்து இருந்தாலும்…அந்த தவறை திருத்திகொள்ள ஒரு வாய்ப்பாக இப்பொழுது காலம்
சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது.
மீண்டும் தன்னுடைய சுயநலத்திற்காக தன் மகளின் சந்தோஷத்தை
அழித்து விடக்கூடாது..!
அவளுக்காக பேருக்காக மனைவியாக இந்த நெட்டையுடன் வாழ்ந்தாக
வேண்டும்...! ஹ்ம்ம் எவ்வளவோ பார்த்தாச்சு...இதை பாக்க முடியாதா? இது ஒன்றும் மலையை
புரட்டற அளவுக்கு கஷ்டமான வேலை இல்லையே.!
செய்துதான் பார்க்கலாம்...! எல்லாம் என் அம்முவுக்காக...” என்று
தனக்குத்தானே உறுதி செய்து கொண்டு ஏதேதோ சிந்தித்தபடி படுக்கையின் ஓரமாக
படுத்துக்கொண்டு நீண்ட போராட்டத்திற்கு பிறகு கண்ணயர்ந்தாள் சுரபி...!
ஆனால் பேருக்காக மனைவியாக நடிப்பது என்பது மலையை புரட்டுவதை விட
கடினமான வேலை என்று அறிய மறந்து போனாள் அந்த பேதைப்பெண்...!
******
மறுநாளிலிருந்து அலுவலகம் செல்ல ஆரம்பித்துவிட்டான்
விகர்த்தனன்..!
சுரபியை அவளுடைய வேலையை
விட்டுவிடச் சொல்லிவிட்டான்.
அவள் இல்லை முடியாது என்று மறுக்க, அவளை முறைத்து
பார்த்தவன்,
“லுக் ஸ்வாதி...” என்று
ஆரம்பிக்க, அதைக்கேட்டவள் இன்னுமே
அவன் தன் முதல் மனைவியின் பெயரைத்தானே நியாபகம்
வைத்து இருக்கிறான் என்று மனம் காயப்பட, அவனை வேதனையுடன் அடிபட்ட
பார்வை பார்த்து விட்டு
“சுரபி........” என்றாள்
வெறித்த பார்வையுடன்...
அவனும் தன் தவறை உணர்ந்து நெற்றிப்பொட்டில் கட்டை விரலை வைத்து
அழுத்தியவாறு கண்ணை அழுந்த மூடி திறந்தவன்,
“சாரி...லுக் சுரபி.... இதுவரைக்கும் நீ எப்படி வேணா இருந்திருக்கலாம்...
ஆனால் நேற்றிலிருந்து நீ என்னுடைய மனைவி. விகர்த்தனன் மனைவியாகத்தான் வெளி
உலகுக்கு அறியப்படுவாய்.
அதோடு நீதான் சட்டப்படி என்னுடைய மனைவி...! அப்படி இருக்க, நீ போய் அங்கு வேலை
செய்தால் நன்றாக இருக்காது.
அதனால் நீ இத்தனை நாட்களாக நிகா குட்டியை வைத்துக்கொண்டு ஓடி
உழைத்தது போதும். இனி சாவகாசமாக வீட்டில் இருந்து கொண்டு அவளோடு டைம் ஸ்பென்ட்
பண்ணு.
என் பொண்ணு எப்பவும் சிரிச்சுகிட்டே சந்தோஷமா இருக்கணும். அது
உன் கையில்தான் இருக்கு. கொஞ்ச நாள் வீட்டில் இரு...” என்றான் அதே அமர்த்தலான
குரலில்.
அதைக்கேட்டவளுக்கும் அவன் சொல்வதில் இருந்த உண்மை
புரிகிறதுதான்...
ஆனாலும்...? இத்தனை நாட்கள் ஓடி
உழைத்து, பம்பரமாக
சுற்றியவள்..இப்பொழுது எப்படி ஒரு இடத்தில் அமர்வதாம்?
அதோடு அவள் ஒன்னும் அவனின் உண்மையான மனைவி இல்லையே..! இதோ
இப்பொழுது கூட என் பொண்ணு எப்பவும் சிரிச்சுகிட்டே சந்தோஷமா இருக்கணும். அது உன்
கையில்தான் இருக்கு னு அவன் பொண்ணை பத்தி மட்டும்தானே யோசிக்கிறான்.
அப்படி இருக்க, அவன்
சம்பாத்தியத்தில் எப்படி உட்கார்ந்து சாப்பிடுவது? தனக்கான செலவை தானே பார்த்துக்கொள்ள வேண்டும்...அதுக்கு அவள்
வேலைக்கு போயாக வேண்டும்.
இதை எப்படி சொல்வது என்று யோசித்தவள்,
“வந்து...மதியம் அம்மு தூங்கிடுவா... அப்ப எனக்கு இங்க போரடிக்கும்...
அதான்.. கொஞ்ச நேரமாவது ஏதாவது வேலை செய்தால் நன்றாக இருக்கும்....” என்று
தயக்கத்துடன் இழுக்க,
அவளின் தயக்கத்திலிருந்தே அவள் மனதை அறிந்து கொண்டவன், அவளை ஆராயும் பார்வை பார்த்தபடி
“ஓஹோ.. அப்ப உனக்கு போரடிக்காம இருக்கணும்.. அவ்வளவுதானே..!
அப்படீனா வீட்டில இருந்தபடியே நீ எனக்கு ஹெல்ப் பண்ணு...!
“ என்று சற்று இளநகையுடன் சொல்ல, அவளோ அதிர்ந்து போனாள்.
“நான் போய் இவனுக்கு ஹெல்ப் பண்றதா? அவன் சிங்கம் போல எவ்வளவு பெரிய ஆள். நான் தம்மாத்துண்டு எலி மாதிரி.... நான் போய்
எப்படி உதவுவது? “ என்று மனதில் நினைக்க, அவளின் மனதை படித்தவனாய்,
தன் மகளுக்கு என்று அவன் தேடிபடித்த நீதிக்கதைகளில் ஒன்றான சிங்கமும் சுண்டெலியும் கதை நினைவு வந்தது.
யாரையும் குறைத்து எடை போட்டுவிடக்கூடாது என்ற நீதியை
போதிப்பதற்காக வந்த கதை.
அந்த கதையை அவளுக்கு நியாபக படுத்தியவன்
“அந்த கதையில் வந்த சுண்டெலி மாதிரி உன்னை நினைச்சுக்க...!
இல்லையா சுண்டெலினு ரொம்ப குறைவாக சொல்வதாக இருந்தால் உன்னை அணில் னு நினைச்சுக்க.
அந்த சிறிய அணில் கூட
ராமருக்கு பாலம் கட்ட உதவியது தானே..! அந்த மாதிரி இந்த ராமனுக்கு அணிலாக கூட இருந்து சின்ன சின்ன உதவிகளை செய்யலாம்...” என்று
புன்னகைத்தான்.
“அடப்பாவி... எல்லாரும் கட்டின பொண்டாட்டியை ராமனின் சீதை என்றுதான்
சொல்லி பார்த்திருக்கிறேன். அதே கட்டின பொண்டாட்டியை ஒரு அணில், சுண்டெலிக்கு இணையாக இணை கூட்டியது இவனாகத்தான் இருக்கும்...”
என்று நக்கலாக சிரித்துக்கொண்டாள் சுரபி
ஆனாலும் தன்னை அவனின் சரிபாதி...சகி... அவனின் சீதை என்று
சொல்லாமல், ஒரு அணில், சுண்டெலி என்று சொல்லியதில்
தன்மானம் சீண்டப்பட,
“ஓஹோ... எந்த மாதிரி உதவிகள் எல்லாம் செய்ய வேண்டும் மிஸ்டர் ராமர்
சர் ?” என்று பணிவுடன் கேட்க, அவள் குரலிலோ முழுமொத்த அதிருப்தியும், நக்கலும் சேர்ந்து இருந்தது.
அதை கண்டு கொண்டாலும் வெளியில் காட்டி கொள்ளாதவனாய் உள்ளுக்குள்
சிரித்தபடி தொடர்ந்தான்.
“ஹ்ம்ம் எவ்வளவோ செய்யலாம் அணில் டியர்...!
உதாரணத்திற்கு காலையில் நான் அசதியில் உறங்கினால், உருட்டி, மிரட்டி, அதட்டி எழுப்பி
விடலாம்.
காலையில் நான் எழுந்ததும் எனக்கு காபி கொண்டு வந்து
கொடுக்கலாம்.
நான் அலுவலகம் கிளம்புவதற்கு, உதவி செய்யலாம். எனக்கு பொருத்தமான என்னுடைய ஆடைகளை எடுத்து வைக்கலாம்...ஷூக்கு
பாலிஸ் போட்டு வைக்கலாம்.
நான் மாலை ஆபிஸ் முடிந்து வந்ததும் என்னை
கவனித்துக்கொள்ளலாம்...” என்று அவளை
குறுகுறுவென்று பார்த்தவாறு ஒரு பெரிய லிஸ்ட்டை சொல்லி வைக்க, அவளுக்கு குழப்பமானது.
“ஆஹான்... இதெல்லாம்
ஒரு டிபிக்கல் இந்திய மனைவி தன் கணவனுக்கு
செய்யும் பணிவிடைகள் அல்லவா?
மறைமுகமாக நான் அவன் பொண்டாட்டி...இதை எல்லாம் செய்ய வேண்டும்
என்று சொல்கிறானா? இல்லை பொதுவாக
சொல்லி வைக்கிறானா? “ என்று அவசரமாக யோசித்தவள்,
“ஹலோ சர்... ஆக்சுவலா நீங்க சொன்ன லிஸ்ட் எல்லாம், ஒரு டிபிக்கல் இந்திய மனைவி
தன் கணவனுக்கு செய்யும் பணிவிடைகள் ஆக்கும்....” என்று கழுத்தை நொடித்தாள்.
அதைக்கேட்டவனோ தன் நெற்றியை வருடியபடி,
“ஓஹோ... நீயும் என்னுடைய
மனைவி தானே. அப்போ நீயும் இதை எல்லாம் செய்யலாம்
இல்லையா?...” என்று தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு, அவளை ஒரு மார்க்கமாக
பார்த்தவாறு வினவ,
“ஹலோ மிஸ்டர்... நான் ஒன்னும் ஆசைப்பட்டு உங்க கையால தாலி வாங்கிகிட்ட உங்க
ஆசை மனைவி இல்லை.
என்னை அதட்டி உருட்டி மிரட்டி தான் இந்த தாலியை வாங்க
வச்சிருக்கீங்க. அதனால் என்னால் எல்லாம் அப்படி நடந்துக்க முடியாது...” என்று முறைக்க,
“எது எப்படியோ.. ! உன் கழுத்தில் தாலி ஏறியது ஏறியது தானே..! அதைக்கட்டியவன் நான்
என்பதால், நான் உன் கணவன்
தான்..! நீ என்னுடைய மனைவி தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லையே..!
அப்படி இருக்க நீ ஏன் அந்த மனைவிக்கான பாத்திரத்தை எடுத்துக்க
கூடாது...” என்று மீண்டும் இதழ்க்கடையோரம் அடக்கப்பட்ட
சிரிப்புடன் சொல்ல,
“எனக்கு எந்த ஒரு பாத்திரமும் வேண்டாம்... உங்க மனைவி என்ற பதவியும் தேவையில்லை. என் அம்முவுக்கு அம்மா என்ற பதவி மட்டுமே எனக்கு போதும்...” என்று பெண்ணவள் சிலிர்த்துக் கொள்ள,
“ஆனால் எனக்கு போதாதே..! எனக்கு மனைவி என்ற பாத்திரத்தை… பதவியை விரைவிலேயே நீ
ஏற்றுக்கொள்ள வேண்டிவரும்.
அந்த பதவிக்கான கடமைகளையும் நீ விரைவிலயே செய்ய வேண்டி வரும்.
பி ரெடி செல்லம்...” என்று அவள் கன்னத்தை செல்லமாக தட்டியவாறு, கண் சிமிட்டி
குறும்பாக சிரித்தவன்,
குனிந்து அவர்களின் உரையாடலையே புரியாமல் பார்த்தவாறு
நின்றிருந்த நிகா குட்டியை தூக்கி, அவளின் கன்னத்தில்
முத்தமிட்டவன்,
“பை பிரின்சஸ்...அப்பா ஆபிஸ் போய்ட்டு ஈவ்னிங் சீக்கிரம்
வந்திடறேன்... அப்புறம் நாம ரெண்டு பேரும் ஜாலியா விளையாடலாம்.. என்ன டீலா? “
என்று தலைசரித்து செல்லம் கொஞ்ச, அவளும் அவனைப்போலவே தலை சிரித்து புன்னகைத்தவள், தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி டீல் என்று சொல்ல,
“தட்ஸ் மை பேபி.. குட் கேர்ள்...” என்றபடி கண் சிமிட்டி விட்டு, மீண்டும் அவளுக்கு ஒரு
முத்தத்தை கொடுத்து, அவளை சுரபியிடம் கொடுத்துவிட்டு, இருவரையும் ஒருமுறை ரசித்து பார்த்துவிட்டு, தன்னுடைய ப்ரீப் கேஸ் ஐ
எடுத்துக் கொண்டு துள்ளலுடன்
வெளியேறினான்...!
சுரபிக்கோ சில விநாடிகள் முன்பு அவள் கன்னத்தை செல்லமாக
தட்டியதில், அவனின் விரல் பட்ட
இடம் குறுகுறுத்தது.
உள்ளுக்குள் மெல்லியதாய் அதிர்வலைகள் பொங்கி எழ, அவன் போவதையே சில நொடிகள் இமைக்க மறந்து, அசைவற்று நின்றபடி பார்த்து இருந்தாள் அவன் மனையாள்..!.
0 comments:
Post a Comment