மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Saturday, September 24, 2022

வராமல் வந்த தேவதை-1

 


அத்தியாயம்-1

 

பெங்களூர்..!  

ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்று விடாமல் அடித்துக் கொண்டிருந்தது அலார்ம்..!  

அதன் ஓசை நாராசமாக காதில் ஒலித்தாலும், படுக்கையில் இருந்து எழுந்து,  தன் அலைபேசியை எடுத்து, அதில் செட் பண்ணி வைத்திருந்த அலார்ம் ஐ  அணைக்க மனம் வரவில்லை அவளுக்கு..!  

போர்வைக்குள் இருந்தவள், இன்னுமே இழுத்து போர்த்திக்கொண்டு,  பக்கத்தில் கங்காரு குட்டியைப் போல தன் கழுத்தை வளைத்துக் கொண்டு

ஒற்றைக் காலைத் தூக்கி அவள் மீது போட்டுக்கொண்டு  அவள் உடலோடு உடலாக ஒட்டிக் கொண்டிருந்த,  தனது இரண்டரை  வயது மகளை,  இன்னுமாய் இறுக்கி தன்னோடு சேர்த்து கட்டிக் கொண்டு தூக்கத்தை  தொடர்ந்தாள் அவள்..!   

ஆனால் அவளின் மனநிலை புரியாத அந்த அலார்ம்,  இரண்டு நிமிட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்று அதன் வேலையை செவ்வனே செய்தது.  

இதுவரை கிணற்றுக்குள் இருந்து கேட்ட மாதிரி வந்து கொண்டிருந்த அந்த நாராச ஒலி,  இப்பொழுது அவளின் காதருகில்..  வெகு அருகில் கேட்டது.

முன்பு மாதிரி இழுத்து போர்த்திக் கொண்டு உறங்க முடியாமல்,  அந்த அலார்ம் ஓசையில் எரிச்சலுடன் கண் விழித்தாள் அவள்.  

“சை... இந்த அலார்ம் ஐ  யார் கண்டுபிடித்து தொலைத்தார்களோ?   அவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்...” என்று தனக்குள்ளே திட்டியபடி தன் கண்ணை திறக்க முயன்றாள்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால்,  தன் மகளுடன் ஊர் சுற்றிவிட்டு தாமதமாக படுக்கையில் விழுந்து இருக்க, அடித்து போட்ட  மாதிரி அசந்து உறங்கிக் கொண்டிருந்த அவளின் இமைகளோ பிரிய மறுத்தன.  

இன்னும் கொஞ்சம் நேரம் என்னை தூங்க விடேன்  என்று வேண்டுகோள் விடுத்து கெஞ்சின.

அவளுக்கும் ஆசைதான்... தன் இமைகளின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க...  

ஆனால் அதே நேரம் அவளுடைய அன்றைய பணிகளும்,  கடமைகளும் வரிசையாக அவள் முன்னே வந்து நின்று, இடுப்பில் கைவைத்து அவளை முறைக்க, அதில்  முழுவதுமாக திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள்.  

போர்வையை விலக்காமலயே எட்டி அருகில் இருந்த சிறிய டீபாய் மீது இருந்த தன் அலைபேசியை   அந்த நாராச ஓசை வந்த தன் அலைபேசியை எடுத்து,  அதில் மணி பார்க்க,  மணி எட்டை தாண்டி முப்பது  நிமிடம் ஆகி இருப்பதை காட்டியது.

அதைக் கண்டதும்

“ஓ...மை ....காட்...”  என்று தன் தலையில் கை வைத்துக் கொண்டாள்.  

“சை... இந்த அலார்ம் இடியட்...  8 மணிக்கு அலார்ம் வச்சா, எட்டறை மணிக்கு  அடிக்குது. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.

இதுக்குத்தான் அம்மா வேணுங்கறது...

நான் இரவு தூங்கும் முன்னே,  காலையில் எட்டு மணிக்கு எழுப்பி விடச் சொல்லி விட்டால் போதும். எப்படியாவது..எப்பாடு பட்டாவது என்னை  எழுப்பி விட்டுவிடுவாள்.

இன்று போல போர்வையை இழுத்து போர்த்தி தூங்கினால் கூட விளக்குமாறை எடுத்து வந்து நாலு சாத்து சாத்தியோ,  இல்லையென்றால் ஒரு மக் நிறைய தண்ணியை எடுத்து வந்து அவள் முகத்தில் கொட்டியாவது  அவளை எழுப்பி விட்டு விடுவாள்

இந்த அலார்ம் சும்மா நை நை னு அடிச்சுக்கிட்டு தான் இருக்கு.  என்னை அடிச்சு  எழுப்ப வேண்டாமா? என்று அந்த அலைபேசியை குற்றம் சாட்டியவள்,  அடுத்த கணம், தன் அன்னையின் நினைவில் கண்ணோரம் கரித்துக் கொண்டு வந்தது.  

தன் அன்னையின் மஞ்சள் பூசிய சிரித்த முகம்...எப்பொழுதும் நெற்றியில் வீற்றிருக்கும் பெரிய குங்குமம் என பார்க்கும் பொழுதே மனதில் அமைதியை கொடுக்கும் சாந்த சொரூபினியான தன் அன்னையின் மங்களகரமான முகம் அவள் கண் முன்னே வர,  நெஞ்சை அடைத்தது பெண்ணவளுக்கு.

ஒரு நொடி தான்...

அடுத்த நொடி, தன் தலையை சிலுப்பி தன்னை சமனபடுத்திக்கொண்டவள், வெளிவர இருந்த  கண்ணீரையும் உள் இழுத்துக்கொண்டு, தன்  மேல் இருந்த போர்வையை விலக்கினாள்.  

அவள் அலைபேசியில் இருந்த அலார்ம்மோ  தன்னை திட்டியதற்காக பொங்கி எழுந்து, அவளை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தது.  

“சை... நானும் அரை மணி நேரமா கதறிகிட்டு இருக்கேன். இந்த பொண்ணு காதிலயே போட்டுக்காம இப்ப நம்மளை இடியட் னு திட்டுதே...

ஒருவேளை அந்த பொண்ணு சொன்ன மாதிரி ஒரு குச்சியும்  சேர்த்து எடுத்து வைத்திருக்க வேண்டுமோ?  

நான் மணி அடித்தும்  எழுந்து கொள்ளாதவர்களை எல்லாம்  குச்சியால் அடிச்சோ, இல்லை  தண்ணீரை பீய்ச்சி அடித்தோ  எழுப்பி விடுமாறு ஒரு மாடலை இந்த மனிதர்கள் கண்டுபிடித்தால் தேவலை.  

ஹ்ம்ம்ம் சொல்ல முடியாது.  அந்த மாதிரி கூட சீக்கிரம் வந்துவிடும்...  

இப்பொழுது தான் வீட்டை கூட்டி,  பெருக்கி,  துடைக்க என ரோபோ வந்து விட்டதே.

அது  போல காலையில் இந்த மனுசங்களை எழுப்பி விடவும் சீக்கிரம் ஒரு ரோபோ வந்து விட்டால் போதும்.

நான்  நிம்மதியாக  இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கலாம்...” என்று  புலம்பியது அந்த அலார்ம்.

******   

ன் மீது இருந்த போர்வையை விலக்கியவள் மெல்ல திரும்பி பார்த்தாள்.

அவளின் அசைவினால்,  எங்கே தன் தாய் எழுந்து விடுவாளோ என்று இன்னும் அவளை  கட்டிக் கொண்டு,  கட்டை விரலை வாயில் வைத்து சூப்பிக் கொண்டே உறங்கும், தன் மகளைப் பார்த்ததும்,  சற்றுமுன் நெஞ்சை அடைத்திருந்த பாரம் காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமல் போனது.  

தன் மகளின் தலையை மெதுவாக வருடியவள்,  குனிந்து அவளின் பட்டுக் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.  

அந்தக் குட்டி உறக்கத்திலும் தன் அன்னையின் ஆசை முத்தத்தில் சிலிர்த்து , செப்பு வாயிலிருந்த தன் குட்டி இதழ்களை திறந்து அழகாக வெட்கத்துடன் புன்னகைத்தாள்.  

அந்த புன்னகையில் அதுவரை இருந்த சோம்பல் விலகி விட,  உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக்கொண்டது.

அதோடு காலையில் செய்யவேண்டிய அவளின் வேலைகள் கண் முன்னே வர,  அட்டை போல ஒட்டியிருந்த தன் மகளை அவளிடம் இருந்து பிரித்து எடுத்தாள்.  

அந்த குட்டி லேசாக சிணுங்கவும்,  உடனே டீப்பாய் மீது இருந்த, அவளின் உயரம் அளவில் இருந்த  டெடியை எடுத்து தன் மகளின் அருகில் படுக்க வைத்து,  அவள் கையை எடுத்து அதன் மீது போட்டு விட,  அந்த குட்டியும்  தானாகவே காலை தூக்கி அந்த டெடி மீது போட்டுக்கொண்டு அதை இறுக்கி கட்டிக் கொண்டது.

அந்த காட்சியை ஒரு நொடி ரசனையுடன் பார்த்து நின்றாள்  பெண்.

பின் மீண்டும் தன் தலையை உலுக்கிக் கொண்டு, கலைந்திருந்த தன் கூந்தலை  அள்ளி கொண்டையாக போட்டுக் கொண்டவள்,  அவசரமாகக் குளியலறைக்குள் சென்று காலைக் கடன்களை முடித்து வெளிவந்தாள்.

எதற்கும் இருக்கட்டும் என்று படுக்கையின்  இருபுறமும் தலையணையை வைத்து,  தன் மகள் கீழ விழுந்து விடாமல் பாதுகாப்பு கோட்டையை  அமைத்து விட்டு,  பின் படுக்கை அறையை விட்டு வெளியில் வந்தாள்.

*****

து ஒரு ஒற்றை படுக்கையறை கொண்ட போர்ஷன்..

பெங்களூரில் இருக்கும் பல ஐ.டி பார்க்குகளில்  ஒன்றான எலக்ட்ரானிக் சிட்டியை  சேர்ந்த  பகுதி அது.  

முப்பதுக்கு நாப்பது சதுர அடி நிலப்பரப்பில்,  நான்கு தளங்களை கொண்ட தனி வீடு.

ஒவ்வொரு தளத்திலும் மூன்று  ஒற்றை  படுக்கை அறை கொண்ட வீடுகளாக கட்டியிருந்தனர்.  

ஒற்றை  படுக்க அறை... பத்து  பேர் அமரும் வகையில் இருந்த சிறிய வரவேற்பறை... வரவேற்பறையை ஒட்டி இருந்த பாத்ரூம்.  

ஒருவர் மட்டுமே நின்று சமைக்கும் படியான சமையலறை... சமைக்கும் பொழுது மறந்து போய் கையை எட்டி நீட்டினால், சுவற்றில் இடித்துக் கொள்ளும் அளவுக்கு குறுகலான சமையலறை.  

மளிகை சாமான்களை வைப்பதற்கு என்று கப்போர்டு...  படுக்கை அறையிலும் வார்ட்ரோப்,  பாத்ரூமில் கீசர்  என்று அடிப்படை வசதிகள்  இருந்தது.

இருவர் மட்டும் வாழ்வதற்கு ஏற்றதான காம்பாக்ட் வீடு...!

****  

மையலறைக்கு சென்றவள்,  அப்பொழுது தான் பால் பாக்கெட்டை எடுக்கவில்லை என்பதை உணர்ந்து, வாயிலுக்கு விரைந்தாள்.  

கதவைத் திறந்து,  கதவில் வெளிப்புறமாக மாட்டியிருந்த பால்கவரில் போடப்பட்டிருந்த பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்து,  அவசரமாக கத்தரித்து பாத்திரத்தில் ஊற்றி,  அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்தாள்.

அடுத்த அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, தண்ணீரை ஊற்றி அடுப்பை பற்ற வைத்தாள்.

நேற்று மதியம்  அரைத்து,  சமையல் அறை மேடையின் மீது   வைத்திருந்த இட்லி மாவை பார்க்க,  அதுவும் அந்த நேரம்  சரியாக பொங்கி மேல வந்து, கீழ விழவா?  வேண்டாமா?   என்று யோசித்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததும் ஓ மை காட் என்று சத்தம் இல்லாமல் அலறியவள்,   வேகமாக திரும்பி,  ஒரு கரண்டியை   எடுத்து, மாவை  கலக்கிவிட்டு,  கொஞ்சமாக இன்னொரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டாள்.  

மீதி மாவை   ஃப்ரிட்ஜில் வைத்து வடித்து மூடியவள், வெளியில் எடுத்து வைத்த மாவில் கொஞ்சம் உப்பைப் போட்டு நன்றாக கலக்கி,  இரண்டு தட்டு  வைக்கும் இட்லி பாத்திரத்தில், ஏழு குழி உள்ள,  ஒரு தட்டில்  மட்டும் ஊற்றினாள்.  

ஏனென்றால் அவளின் மகள்  மிஞ்சிப்போனால் ஒன்று அல்லது இரண்டு இட்லி.  அவளுக்கோ எப்பொழுதும் மூன்று  இட்லிகள்தான். எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு சேர்த்து பெரிய தட்டில் ஊற்றி வைத்தவள்,  இன்னொரு அடுப்பில் தனக்கான காபியை  கலக்குவதற்காக தண்ணீரை ஊற்றி டிகாசன் தயாரித்தாள்.

ஒரே நேரத்தில் மல்டி டாஸ்க் செய்வதைப் போல, ஒரே நேரத்தில் சீக்கிரம்  சமையலை  முடிக்க வேண்டும் என்று,  மூன்று அடுப்புகள் கொண்ட கேஸ் ஸ்டவ்வை வாங்கியிருந்தாள்.  

இப்பொழுது அது வசதியாக இருந்தது.

பால் பொங்கியதும், அதை எடுத்து, ஏற்கனவே  எடுத்து வைத்திருந்த டிகாசனில்  ஊற்றி ஒரு ஸ்ட்ராங்கான காபி தயாரித்தவள் அதை எடுத்துச்சென்று ஹாலில் ஆற அமர, அமர்ந்து குடிக்க நேரமில்லை.

மதிய சமையலுக்கும் இப்பொழுதே  தயார் செய்ய வேண்டும் என்பதால், காபி கப்பை மேடை மீது வைத்து விட்டு, மதிய சமையலுக்கான  காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள்.

காபியில் ஒரு வாய் குடிப்பதும், பின் காய்கறிகளை வெட்டுவதுமாய் இருந்தாள். .

இடையிடையே திறந்திருந்த படுக்கை அறைக்கு உள்ளே உறங்கும் தன் மகள் மீது ஒரு கண் வைத்தவாறு, அவள் பார்வை அடிக்கடி அங்கு  சென்று வந்தது.  

அந்த குட்டியோ, அவள் அருகில் கிடந்த அந்த டெடியை தன் தாயாகவே பாவித்து, அதைக்  கட்டிக்கொண்டு அசந்து உறங்கிக் கொண்டிருக்க,  அவளும் மென்னகை தவழ,  அவசரமாக தன் சமையல் வேலையை தொடர்ந்தாள்.

அடுத்து சிறிய குக்கரை எடுத்து,  அரிசி,  பருப்பு, வெட்டி வைத்த காய்கறிகள் என அனைத்தையும்  ஒன்றாக போட்டு, சாதம்  நன்றாக குழைய வேண்டும் என்று கொஞ்சம் அதிகமாகவே நீர் விட்டு,  குக்கரை அடுப்பில்  வைத்துவிட்டு  திரும்பியவள்,  அப்பொழுதுதான் கப்பில் ஆறிப்  போயிருந்த மீதமிருந்த காபியை பார்த்தாள்.

அதை ஏக்கமாக பார்த்துவிட்டு, மீதமிருந்த காபியையும் எடுத்து வாயில் சரித்துக்  கொண்டு,  அவசரமாக வீட்டை சுத்தம் செய்தாள்.  

நேற்று இரவு தாமதமாக வீடு திரும்பி இருந்ததால், அசதியில் அப்படியே படுத்து விட்டாள்.

வீடெல்லாம் ஆங்காங்கே தன் மகளின் விளையாட்டு பொருட்கள்   இறைந்து கிடக்க,  அதையெல்லாம் எடுத்து அதற்கான பெட்டியில் போட்டு வைத்துவிட்டு, வீட்டை ஒழுங்கு படுத்தி முடித்தவள்,  மணியை பார்க்க ஒன்பது முப்பது எனக் காட்டியது.  

அதைப் பார்த்ததும், மீண்டும் இன்னொரு ஓ.மை.காட் சொல்லி அலறினாள்.

“சை...இதுக்குத்தான் எட்டு மணிக்கே எழுந்துக்கணும்னு அலார்ம் வச்சது. எட்டு மணிக்கு டான்னு  எழுந்து இருந்தால்,  இந்நேரம் வேலையை முடிச்சிருக்கலாம்.... வர வர நீ ரொம்ப சோம்பேறியாகிட்ட டி...”  

என்று தனக்குத்தானே கொட்டிக்  கொண்டவள்,  அவசரமாகக் கூட்டி பெருக்கி அதை அள்ளி குப்பை கூடையில் போட்டு விட்டு படுக்கை அறைக்கு ஓடினாள்.  

அதே நேரம், சமையலறையிலிருந்து குக்கரின் விசில் சத்தம் கேட்க,  தன் மகளை   எழுப்புவதை பின்னுக்குத் தள்ளி குக்கரை கவனிக்க , சமையலறைக்கு ஓடினாள்.

அதற்குள் ஒன்று, இரண்டு, மூன்று என விசில்கள் வந்தவண்ணம் இருக்க, ஓடிப்போய் அடுப்பை அணைத்தாள்.

குக்கரின் விசில் சத்தம் கேட்டு, படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டு     அம்மா...  என்று கண்ணை கசக்கிக்கொண்டு அழுதாள் அவளின் செல்லமகள்.

அவளின் அழு குரலைக் கேட்டு  மீண்டும் படுக்கை அறைக்கு ஓடினாள்.  

கண்ணை கசக்கிக் கொண்டு அமர்ந்து இருந்த தன் செல்ல மகளை வாரி, அணைத்து,  முத்தமிட்டு, அப்படியே தூக்கிச் சென்று அவளை முகம் கழுவ வைத்து,  பிரஷ் பண்ண வைக்க, என அடுத்த சில பல நிமிடங்கள் அவள் மகள் உடனே பறந்து சென்றது.  

பின் பாலை ஆத்தி,  பாட்டிலில் ஊத்தி கொடுக்க, அந்த குட்டியோ  தன் அன்னையை பால்பாட்டிலை பிடித்துக் கொள்ள சொன்னாள்.

“டேய் குட்டிமா..  அம்மா இன்னைக்கு புது ஆபீஸ் போகணும் டா. பத்து மணிக்கெல்லாம் ஆபீஸ்ல இருக்கணும் டா.  அதனால இன்னைக்கு மட்டும் சமத்தா பாட்டிலை நீயே புடிச்சிக்கிட்டு குடிப்பியாம்...”  என்று  கெஞ்சி, கொஞ்ச, தன் தாயின் கெஞ்சலை  எல்லாம் சட்டை செய்யாமல் தலையை இருபக்கமும் ஆட்டினாள்.

“அம்மா புடி.. “ என்று பிடிவாதமாக   சொல்ல,  அதற்கு மேல் அவளோடு  மன்றாட முடியாமல் பால் பாட்டிலை பிடித்துக் கொண்டாள்.  

அவளின் பொறுமையை  மெலும் சோதிக்க, வேகமாக உறிஞ்சி குடிக்காமல், மெது மெதுவாக குடிக்க,  பெரியவளுக்கு பொறுமை பறந்து கொண்டிருந்தது.  

“சீக்கிரம் குடிடா குட்டிமா...” என்று அவசரப்படுத்த,  அவளோ கொஞ்சமாக  குடித்துக் கொண்டிருந்ததையும்  நிறுத்திவிட்டு, தன் பால் பற்களைக் காட்டி சிரித்து  விளையாட,  ஏன்டா  சொன்னோம் என்றாகிவிட்டது பெரியவளுக்கு.

மீண்டும் சிரித்துக் கொண்டு  இருந்த வாயில்,  அந்த பால் பாட்டிலை திணித்து

குடிடா என்று முயன்ற அளவு தனிந்து சொல்ல,  அதுவும் ஆட்டம் காட்டி, தன் அன்னைக்கு போக்கு காட்டி ஒரு வழியாக  குடித்து முடித்தாள்.  

பின் அவளை அப்படியே அள்ளிக் கொண்டு போய்,  குளியல் அறையில் நிக்க வைத்தவள்,  ஏற்கனவே போட்டு வைத்திருந்த ஹாட் வாட்டரை திறந்து விட்டு அவசரமாக குளிக்க வைத்தாள்.

ஆழகான ஒரு பேபி பிங்க் நிறத்தினாலான ப்ராக் ஐ போட்டுவிட்டு, அடர்த்தியாக வளர்ந்திருந்த அந்த குட்டியின் முடியையும் அவசரமாக சீவி உச்சியில் தென்னைமரம் போல்,  ஒரு குடுமியை போட்டு விட்டாள்.  

லேசாக பவுடர் அடித்து,  கொட்டாங்குச்சியில் இருந்த வேங்கை பொட்டை கொஞ்சமாக உறைத்து சின்னதாக பொட்டு வைத்தாள்.  

அதுவும் தன் பொக்கை வாயை காட்டி மலர்ந்து சிரிக்க, தன் மகளின் வசீகர சிரிப்பில் தன்னை மறந்து நின்றாள்.  

“அம்சமா இருக்கடி என் குட்டித்தங்கம்..அம்மா கண்ணே பட்டுடும்... “ என்று செல்லம் கொஞ்சி   பின் அவள் முகத்தை இரு கையாலும் சுற்றி, நெற்றியில் வைத்து சொடக்கு எடுத்து நெட்டி முறித்தவள்,

பின் அப்படியே தூக்கி வந்து,  ஹாலில் இருந்த குட்டி சேரில் அமர வைத்து, அங்கிருந்த  சிறிய எல்.இ.டி டிவியை உயிர்ப்பித்தது அவள் விரும்பி பார்க்கும் டோரா புஜ்ஜியை  போட்டுவிட்டு வாயில் கதவை மீண்டும் ஒருமுறை அடைத்து இருக்கிறதா என்று சரி பார்த்துவிட்டு குளியல் அறைக்கு ஓடினாள்.  

குளியல் அறையில் இருந்த கதவை ஒருக்களித்து திறந்து வைத்துக்கொண்டு,  பாதி மறைந்து நின்றவாறு ஏதோ பேருக்கு குளித்தாள்.  

ஆனாலும் அவள் பார்வை வரவேற்பறையில் இருந்த தன் மகளிடமே இருந்தது.

அவள் திடீரென்று எங்கேயாவது அதுவும் குறிப்பாக சமையலறைக்குள் சென்று விட்டால்?  அவள் கைக்கு எட்டாத உயரத்தில் தான் எல்லா பொருட்களையும் வைத்திருக்கிறாள்.  

ஆனாலும் அவள் மகள் பொல்லாதவள் ஆயிற்றே...  

எப்படியாவது ஏதாவது ஒன்று கைக்கு தட்டுபட்டு விட்டால் போதும். அதை இழுத்து போடுவதுதான் முதல் வேலை.

பொருள் உடைவது பெருசில்லதான்.  காசு கொடுத்து புதுசு வாங்கிக்கலாம் ஆனால் அது அவள் மீது பட்டு விட்டால் என்றதில் தான் அவள் பதைத்துப் போவாள்.  

அதனாலேயே தனக்கு கூச்சமாக  இருந்தாலும் பூட்டியிருக்கும் கதவிற்குள் யாரும்  வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் குளியலறை கதவை திறந்து வைத்துக் கொண்டேதான் குளித்து முடித்தாள்.  

இல்லை என்றால் பொதுவாக தன் மகள் உறங்கும் நேரத்தில் தான் குளிப்பது.  

இன்று அலுவலகம் செல்லவேண்டும் என்பதால்,  காலையிலயே  இருவரும் கிளம்பியாக வேண்டிய கட்டாயம்...  

அதனால் தவிர்க்க முடியாமல் அவசரமாக குளித்துவிட்டு, உடலில் ஒரு டவலை சுற்றிக் கொண்டு படுக்கை அறைக்கு ஓடியவள்,  ஏற்கனவே தயாராக எடுத்து வைத்திருந்த அடர் நீல நிற ஜீன்ஸ்ம்,  இள மஞ்சள் நிறத்திலான ஆங்காங்கே பூக்கள் போட்டிருந்த காட்டன்  டாப்ஸ் அணிந்து கொண்டாள்.

இடைக்கு சற்று மேலாக தொங்கிய கூந்தலையும் பேருக்கு வாரி,  டேபிள் மேலே இருந்த ஒரு ஹேர் பேண்டை எடுத்து போட்டுக்கொண்டாள்.

தன் மகளுக்கு அடித்த அதே  ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரை அவளும் கொஞ்சமாக அடித்துக்கொண்டு, கண்ணாடியில் ஓரமாக ஒட்டி வைத்திருந்த  சிறிய ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டிக் கொண்டாள்.  

மறந்தும் அதற்கு மேல் ஒரு நொடி கூட  கண்ணாடி முன்னால் நின்று விடவில்லை.  

அவசரமாக வரவேற்பறைக்கு ஓடியவள்,  ஏற்கனவே வெந்து  இருந்த இட்லி பாத்திரத்தின் மூடியை வெறும் கையால் எடுத்து விட, ஆஆஆ வென்று அலறினாள்.

நன்றாக கையை  சுட்டுக் கொண்டவள்,  கையை இழுத்து  வாயில் வைத்து ஊதியவாறு, மற்றொரு கையால்  துணியை எடுத்து, பிடித்து திறந்து இட்லியை போட்டவள், அதை  தட்டில் போட்டுக் கொண்டு ஹாலுக்கு விரைந்தாள்.  

ஒரு வில்லை பிய்த்து, தேங்காய் சட்னியில் குளிப்பாட்டி தன் மகளுக்கு ஊட்ட, அந்த குட்டியோ,

“இட்டி வேண்டாம்...  தோச வேணும்... “  என்று  உதட்டைப் பிதுக்க,  அவ்வளவுதான் நொந்து போனாள் பெண்ணவள்.

இனிமேல் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அது காய்ந்து, பின் மாவை ஊத்தி தோசை சுட்டு எடுக்கும் அளவுக்கு அவளுக்கு நேரமில்லை...

“குட்டிமா... அங்க பாரேன்...  டோரா   கூட இட்டிதான்  சப்பிடறா.. தோசை  எண்ணை ஊத்தி செய்யறது.  

அதை காலையில் சாப்பிடக் கூடாது...இட்டிதான் நல்லது.. அதைத்தான் சாப்பிடணும்..”  என்று பெரிய மனுசிக்கு எடுத்து சொல்வதைப் போல பொறுமையாக எடுத்துச் சொல்ல,

அதை எல்லாம் கண்டு கொள்ளத அந்த குட்டியோ, மீண்டும் தலையை இரு பக்கமும் ஆட்டி இட்டி வேண்டாம் தோச வேணும் என்று அதே  பாட்டை பாட,  அவளோ உள்ளுக்குள் பல்லைக் கடித்தாள்.  

“இங்க பாரு செல்லம்... அம்மா கூட இட்டி  தான் சாப்பிடறேன்.  அப்பதான் நீயும் அம்மா மாதிரி சீக்கிரம் பெருசாகலாம்...  ஹேண்ட் பேக்கை  மாட்டிகிட்டு ஆபீசுக்கு போகலாம்...”

என்று  அவள் பாஷையிலேயே எடுத்துச் சொல்லியவாறு  அவளும் இட்லியை பிட்டு,  சட்னியில் தொட்டு,  வாயில் வைத்து சாப்பிட்டு காண்பிக்க,  அதில் சமாதானத்துக்கு வந்தவள், அந்த குட்டியும் ஆர்வமாக

“அப்படியா மா.. அப்பனா நான் இட்டியே சாப்டுக்கறேன்...” என்று சொல்லி, போனால் போகட்டும் என்று தன் செப்பு வாயை திறந்தாள்.  

அவ்வளவுதான்... கிடைத்தது சான்ஸ் என்று ஒரு பெரிய வில்லையாக பிட்டு,  அவள் வாயில்  திணித்துவிட,  அந்தக் குட்டியோ  அதை மெல்ல முடியாமல் தொண்டையில் சிக்கிக்கொண்டு இரும, அப்பொழுதுதான் தன் தவறு புரிந்தது.

குழைந்த சீக்கிரம் சாப்பிட வேண்டுமே என்ற அவசரத்தில் பெரிய துண்டாக திணித்தது எவ்வளவு தவறு என்று  உறைக்க, தன் மகளின் தடுமாற்றத்தை கண்டு அவள் கண்ணில் நீர் குளம் கட்டியது.

பதற்றத்துடன் அவள் தலையை தட்டிவிட்டவள், அருகில் இருந்த  நீரை எடுத்துக் கொடுத்து,  குடிக்க வைத்து, நெஞ்சை நீவிவிட்டு,  எப்படியோ தொண்டையில் சிக்கிக்கொண்ட அந்த வில்லையை உள்ளே தள்ளி விட்டாள்.

அதோடு  சக்ஸஸ்...எப்படியோ ஒரு துண்டு உள்ளே போய்டுச்சு...  என்று தனக்குத்தானே ஹை பை கொடுத்துக் கொண்டாள்

அடுத்த முறை கவனமாக கொஞ்சம் சிறியதாக பிட்டு, டோரா புஜ்ஜி யை காட்டி, அதற்கு  ஒரு கதையை சொல்லியவாறு ஊட்டிவிட,  எப்படியோ  அடுத்த அரைமணி நேரத்தில் அந்த குட்டி ஒரு இட்லியை உள்ளே தள்ளி இருக்க,  இவளும் இரண்டு இட்லியை தன் உள்ளே  தள்ளி இருந்தாள்.  

அதற்கு மேல் முடியாது என்பதால் மீதியை எடுத்து, டப்பாவில்  போட்டு மூடி வைத்தாள்.  

இரவு இட்லி உப்புமா செய்ய வேண்டியதுதான் என்று  இரவுக்கான மெனுவையும் மனதில் எண்ணிக் கொண்டவள், அடுத்து மகளின் வாயை  துடைத்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.  

அங்கே ஏற்கனவே வெந்திருந்த கலவை சாதத்தை இரண்டு டப்பாக்களில் நிரப்பிக்  கொண்டவள்,  மீதியை அப்படியே வைத்து மூடிவிட்டு டப்பாக்களையும், அந்த குட்டிக்கு தேவையான,  தண்ணீர்,  பால் பாட்டில் என எடுத்து அதற்கான பேக்கில் அடைத்தாள்.

பின் படுக்கை அறைக்கு சென்று அவளுடைய ஹேன்ட் பேக்கையும், சில சான்றிதழ்கள் அடங்கிய ஃபைலையும்  எடுத்துக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள்.

அந்த குட்டியோ டோரோ புஜ்ஜியில் லயித்து கை தட்டி சிரித்துக் கொண்டிருந்தாள்.

தன் மகளை பார்த்து ரசித்தவாறு, வரவேற்பறையில் ஒரு சிறிய ஸ்டான்டில் வைத்திருந்த சாமி படத்தின் முன்னால்   சில நொடிகள்  பௌனமாக நின்றாள்.

எதுவும் வேண்டிக்கொள்ளவில்லை...!

என்ன வேண்டுவது என்று அவளுக்கு தெரியவில்லை. அவள் மனம் எங்கும் ஏதோ வெறுமை சூழ்ந்ததை போல இருக்க, எதுவும் வேண்டிக்கொள்ளாமல் சில நொடிகள் அமைதியாக நின்று விட்டு, அங்கிருந்த விபூதியை எடுத்து பட்டும் படாமலும் சிறு கீற்றாக வைத்துக் கொண்டாள்

அதில் துளியை தன் மகளுக்கும் வைத்து விட்டவள், பின் நேரம் ஆவதை உணர்ந்து தன் மகளை அள்ளிக்கொண்டு, இரண்டு பைகளையும் எடுத்து த்லோல் மாட்டிக்கொண்டு  வாயிலுக்கு விரைந்தாள்.  

அதே நேரம் அனிச்சையாய் கையை திருப்பி   மணியை பார்க்க அதுவும் பத்தரை எனக் காட்டியது.  

மீண்டும் ஒரு ஓ மை காட் சொல்லி அவசரமாக கதவை அடைந்ததும், அதை  திறக்க முயல, அந்த குட்டி அப்பொழுதுதான் ஏதோ  ஞாபகம் வந்தவளாக

“அம்மா....  அப்பா.... “ என்று  அவள் தாடையை தடவ,  ஒரு நொடி திகைத்து நின்றவள்,  மீண்டும் திரும்பி, அங்கே ஹாலின் சுவற்றில் மாட்டியிருந்த ஒரு புகைப்படத்தின் அருகில் சென்று நின்றாள்.

முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் அந்த புகைப்படத்தில் வசீகரமாக சிரித்துக் கொண்டிருந்தான்.

அந்த குட்டியோ எட்டி, அந்த புகைப்படத்தில் இருந்தவன் கன்னத்தில் கை வைத்து தட்டியவள்,

“அப்பா...அப்பா... அப்பா.... “ என்று மலர்ந்து சிரித்தவள்

“அப்பா... பை... “   என்று அந்த புகைப்படத்தில் இருந்தவனுக்கு ப்ளையிங் கிஸ் கொடுத்து விட்டு,  கையசைத்து விடைபெற,  அதைக்கண்டவளோ தான் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்பதை மறந்து  சிலையாக சமைந்து நின்றுவிட்டாள்...!  

எவ்வளவு முயன்றும் கட்டுபடுத்த முடியாமல், கண்ணோரம் கரித்துக் கொண்டு வந்தது...!  


Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *