மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Sunday, September 25, 2022

வராமல் வந்த தேவதை-11

 


அத்தியாயம்-11

 

னால் அடுத்த கணம், பறக்க ஆரம்பித்த பட்டாம் பூச்சிகளை எல்லாம் பிடித்து இழுத்து கூட்டுக்குள்  போட்டு அடைத்து வைத்தாள் சுரபி..!  

அவனை நேராக பார்த்து

“ஹப்பாடா... இப்பயாச்சும் புரிஞ்சுதே...”  என்றாள் நெடுமூச்சு விட்டு.

“ஓஹோ... இதுல இப்படி ஒரு மேட்டர் இருக்கா? “ என்று தன் தாடையை தடவியபடி யோசித்தான்...

என்னது?  மேட்டரா? “ என்று தன் கண்களை அகல விரித்து தன்  அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிக்காட்டினாள் சுரபி..

ஏனென்றால்  மேட்டர் என்றால் அதுக்கு வேற அர்த்தம் கற்பித்து, தங்கள் நண்பர்களுக்குள்  கிண்டலடித்து சிரித்துக் கொண்ட கல்லூரி நாட்கள்  நினைவில் வந்தது.

இவளின் அதிர்ச்சியில் குடை போல பெரிதாக விரிந்த அவளின் கண்களை ஒரு கணம் இமைக்க மறந்து பார்த்திருந்தான் விகர்த்தனன்.

இதுவரை அவளை பெரிதாக கண்டு கொண்டிருக்கவில்லை அவன்.  

இப்பொழுது அனிச்சையாக அவளை ஆராய,  வெள்ளை நிறத்தில்  ஆங்காங்கே சிறு சிறு ரோஜாக்கள் பூத்திருப்பதாய் ஒரு காட்டன் சல்வார்   அணிந்திருந்தாள்.

ஒல்லியான தேகத்துக்கு அளவெடுத்து தைத்ததைப் போன்று சிக்கென்று இருந்த சல்வார் அவளின் எடுப்பான வரிவடிவங்களை இன்னும் அழகாய் எடுத்துக் காட்டியது.  

காதில் அதே ரோஜா மொட்டை போன்று ஒரு சிறிய ப்ளாஸ்டிக் தோடு...  மெல்லியதாகவும் இல்லாமல் தடிமனாகவும் இல்லாமல் மெல்லிய தங்கச் சங்கிலி...  

கைகளில் கண்ணாடி வளையல்கள்

எந்த ஒப்பனையும் இல்லாமல் பளிச்சென்று இருந்த வட்ட முகம்... உதட்டு சாயம் பூசாமலே சிவந்திருந்த கொவ்வை இதழ்கள்...  நிமிண்டி பார்க்க தூண்டும் குண்டு  கன்னங்கள்...  என பார்ப்பதற்கு லட்சணமாகத் தான் இருந்தாள்.

பல உலக அழகிகளை பார்த்தும், அவர்களின் அழகை ஆராதித்து அனுபவித்தவனுக்கு அவள்   ஒன்றும் பெரிய அழகி இல்லை தான்.

ஆனாலும் அவளின் முகத்தை  பார்ப்பதற்கு கண்ணிற்கு குளிர்ச்சியாய், மனதிற்கு இதத்தை கொடுப்பவளாகத்தான் இருந்தாள்

அவன் தன்னையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருப்பதை  கண்டவளின், கன்னங்கள் சூடேறி  சிவந்து போக,  அனிச்சையாய் குனிந்து தன் ஆடையை சரி பார்த்துக் கொண்டாள். 

கழுத்தில் இருந்த துப்பட்டா,  மூட வேண்டிய பாகத்தை எல்லாம் சரியாகத்தான் மூடியிருந்தது.

பின்ன ஏன் இப்படி பார்த்து வைக்கிறான் என்று மெல்ல நிமிர்ந்து ஓரக்கண்ணால் பார்க்க, அவனோ அவள் கன்னத்தில் வந்து போன அந்த வெட்கச் சிவப்பை கண்டு கொண்டான்.

இந்த மாதிரி வெட்க சிவப்பை அவன் இதுவரை  எந்த பெண்ணிடமும் பார்த்ததில்லை.  

சில பெண்கள், தங்கள் கன்னம் சிவப்பாக இருக்க வேண்டும் என்று செயற்கை முறையில் கன்னத்தை அழகாக்கி கொள்வதை பார்த்திருக்கிறான்.

“ஆனால் இவள் கன்னங்கள் அந்த மாதிரி செயற்கை முலாம் பூசாமலயே ஏன் இப்படி சிவந்து போகிறது? அதோடு இவள் ஏன் என்னை பார்த்து இப்படி சிவந்து வைக்கிறாள்? “ என்று தனக்குள்ளே ஆராய்ந்து கொண்டிருந்தான்.

பொதுவாக அவன் பழகிய பெண்கள் எல்லாரிடமும் வெறும் உடல் தேவைக்காக மட்டும் தான் நாடி இருக்கிறான். அவர்களுக்கும் இவனிடம் தேவை இருந்தது. அதனால் இருவரின் காம பசிக்கு அந்த கூடல் தற்காலிக தீர்வாகிப் போனது.

அவ்வளவுதான்அடுத்த முறை அந்த பெண் புளித்து விடுவாள்...அவளை நாட மாட்டான்...இப்படியாகத்தான் தன் வாழ்க்கையை அவன் இஷ்டத்துக்கு வாழ்ந்து கொண்டிருந்தான்.

அவன் பார்த்து பழகிய பெண்களில் ஒருத்தி கூட  அவனைப் பார்த்து வெட்கப் பட்டு, நாணி கோணி தலை குனிந்ததில்லை. அவன் மனைவியையும் சேர்த்துத்தான்..!

மனைவியின் உடனான தனிமையிலும், நெருக்கத்திலும்  கூட ஸ்வாதி இந்த மாதிரி கன்னம் சிவந்ததில்லை...!

இந்த பெண்ணின் கன்ன சிவப்பும், அடிக்கடி தன்னை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொள்வதும்  அவனை ஆச்சரியப்படுத்தியது.

அவசரமாய் அவளை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க, அவன் நினைவுகளின் நாயகியோ மீண்டும் கொதிக்க ஆரம்பித்து இருந்தாள்.  

“ஹலோ மிஸ்டர்...  நான் சொல்ல வந்தது இப்பயாவது புரிஞ்சுதா? “  என்று அவனை முறைத்துப் பார்க்க, அதற்குள் தன் ஆராய்ச்சியை பாதியில் நிறுத்தி விட்டு, விழித்துக்  கொண்டவன்,  ஒரு கணம் அவள் என்ன சொன்னாள் என்று அவசரமாக ரிவைண்ட் பண்ணி பார்த்தான்.

“ஹ்ம்ம்ம் நானும் நீங்களும் ஹஸ்பென்ட் அன்ட் வைப் னு   அர்த்தமாகும்...” என்று சொல்லியது நினைவு வந்தது.

“என்ன உளர்ற ஸ்வாதி....” என்றான் அவளை முறைத்தவாறு.

“சுரபி.....” மீண்டும் தன் பல்லைக் கடித்துக்கொண்டு சுரபி என்று தன் பெயரை திருத்தினாள்.

“ஓ..சாரி....சுரபி.... ஒரு குழந்தை என்னை அப்பானு சொன்னா,  உடனே நீயும் நானும் ஹஸ்பென்ட் அன்ட் வைப் ஆகிவிட முடியுமா?  முன்ன பின்ன விசாரிக்காமலயா அப்படி சொல்லுவாங்க... “  என்றான் நக்கலாக.  

அவனை ஒரு ஆச்சர்ய பார்வை பார்த்தவள்,

“உங்கள பார்த்தா பெரிய இடம் மாதிரி தெரியுது சார்... நம்ம கலாச்சாரத்தைப் பற்றியும்,  மக்களின் எண்ணங்களை பற்றியும் உங்களுக்கு  தெரியாது போல...

நாங்க எல்லாம் மிடிஸ் க்ளாஸ் மக்கள்...உங்களைப்போல வாக்கிங் போகக் கூட காரில் வந்து இறங்கும் ரகம் இல்லை.

இதே பகுதியில், இதே ரோட்டில் நடந்துதான் போகணும். அப்படி போகும் பொழுது  எல்லார் பார்வையும் எங்க மீதுதான் இருக்கும்.

நான் எந்த வீட்டில் குடி இருக்கிறேன் முதற்கொண்டு, என் வீட்டிற்கு யார் யார் வந்து போகிறார்கள் என்பது வரை எல்லாராலும் கண்காணிக்கப்படும்.

அவர்களுக்கு முன்னால், இவள் உங்களை அப்பா என்று அழைத்து வைத்தால், கண்டிப்பாக நீங்கதான் என் ஹஸ்பென்ட் னு அர்த்தமாகி விடும்.

அடுத்த கணம்  ஹஸ்பென்ட் னா ஏன் ஒன்னா இல்லை என்று கேள்வி வரும். அதைத்தொடர்ந்து உண்மையான  ஹஸ்பென்ட் தானானு அடுத்த கிளைக் கேள்வி வரும்...

அதைத் தொடர்ந்து என் கேரக்டரையே தப்பாக்கிடுவாங்க...”  என்றாள் வேதனையோடு தன் கண்களை அழுந்த மூடியபடி.

ஏனென்றால். இப்படிப்பட்ட ஏச்சுக்களுக்கும், பேச்சுக்களுக்கும் பயந்து தானே சென்னையிலிருந்து இங்க ஓடி வந்திருக்கிறாள்.

கடந்த இரண்டரை  வருடங்களாகத்தான் யார் பார்வையிலும், விமர்சனத்துக்கும் ஆளாகாமல் நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள்.

அதுவும் பொறுக்கவில்லை போல அந்த விதியார்க்கு..!

“இந்த நெட்டை வழியாக புது பிரச்சனையை ஆரம்பித்து வைத்து விட்டான்..” என்று தனக்குள்ளே நொந்து கொண்டிருந்தாள்.

“ஹ்ம்ம்ம் அவங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள்... இங்க அவங்கவங்க வேலையை பார்க்கவே நேரம் இல்லையாம்..

இதில் யார்,  யாருக்கு அப்பா?  யார் யார் ஹஸ்பென்ட் அன்ட் வைப் னு  ஆராய்ச்சி செய்யறதுதான்   அவங்க வேலையா ? “  என்றான் லேசாக உதட்டை வளைத்து ஏளனமாக சுளித்தபடி.  

“அப்படித்தான்... அவங்கவங்க வேலையை பார்ப்பதை விட, அடுத்த வூட்ல என்ன நடக்குதுனு பார்க்கறதுதான் முக்கியமாக்கும். அதோடு நான் தங்கி இருக்கும் வீடும் பகுதியும் ரொம்ப  கன்னியமானது.  

யாரும் என்னைப் பற்றி தவறாக சொல்லி விடக்கூடாது...” என்றாள்  இறுகிய முகத்துடன்.  

“ஏன் அப்படி?  நீ ஏன் ஏதாவது சொல்லிடுவாங்கனு பயப்படற...” என்று புரியாமல் கேட்க,

“பின்ன...தந்தை இல்லாத மகள், ஒருவரை  அப்பா என்று அழைத்தால், பார்ப்பவர்கள் என்ன சொல்வார்களாம்..” என்றாள் எங்கோ வெறித்து பார்த்தபடி.

அதைக் கேட்டு அதிர்ந்து போனான்  விகர்த்தனன்.  

“அப்ப உன் ஹஸ்பெண்ட் இல்லையா? “ என்று  அதிர்ச்சியோடு கேட்க, அப்பொழுதுதான் அவள் உளறி வைத்தது அவளுக்கு உரைத்தது.

உடனே தன் கீழ் உதட்டை அழுந்த கடித்துக்கொண்டு ,

“இருக்கிறார்....ஃபாரின்ல இருக்கிறார்...”  என்றாள் அவசரமாக.  

“ஓ... இந்த குட்டியை அவர் பார்க்கலையா? “ என்றான் தன் மடியில் அமர்ந்து இருந்தவளின் தலையை வாஞ்சையோடு வருடியபடி.

“இல்லை...” என்ற விதமாய்  தலையை இருபக்கமும் ஆட்டி. 

“பாப்பா பொறக்கறதுக்கு முன்னாடியே போயிட்டார்...”  என்று சொல்லும் பொழுதே பொய் சொல்கிறோமே என்று அவளுக்கு லேசாக உறுத்தியது.

தன் கணவன் வெளிநாட்டில் இருக்கிறான் என்ற  பொய்யை இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக சொல்லி விடுகிறாள். பொய் சொல்கிறோமே என்று ஆரம்பத்தில் இருந்த உறுத்தல், எந்த ஒரு சங்கடமும் இப்பொழுது இல்லை.  

இதைத்தான் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் உண்மையாகி விடும் என்பதோ?  

தன் கணவன் வெளிநாட்டில் இருக்கிறான் என்பதையே அவளும் திரும்பத் திரும்ப சொல்லி தன் மனதில் உண்மை போல பதிய வைத்துக்கொண்டாள்.  

இப்பொழுதெல்லாம் அவள் கணவன் எங்கே என்றால்,  

“வெளிநாட்டில் இருக்கிறார். ஐந்து வருட காண்ட்ராக்ட்... “  என்பது வெகு சரளமாக வாயில் வந்து விடுகிறது.  

இப்பொழுது விகர்த்தனனிடமும் அதையே சொல்லி வைக்க, ஏனோ அவனிடம் இப்பொழுது அதை சொல்லும்பொழுது ஸ்பெஷலாக லேசாக உறுத்தியது.

மற்றவர்களிடம் சொன்ன பொய் அவனிடம் கொஞ்சமாய் ஆட்டம் கண்டது.  

“சரி... உன்  ஹஸ்பெண்ட் போன் நம்பரை கொடு...” என்றான் இறுகிய முகத்துடன்.  

“எதுக்கு? “  என்றாள் அதிர்ச்சியோடு.  

“ஹ்ம்ம் அந்த இடியட் ஐ லெப்ட் அன்ட் ரைட் வாங்கத்தான்...”  என்றான் இன்னுமாய்  இறுகிய முகத்தோடு.  

“எதுக்கு? “   என்று மீண்டும் சுரபி அதிர்ச்சியோடு கேட்க

“பின்ன... இப்படி ஒரு அழகான பொண்டாட்டியையும்,  ஏஞ்சல் போன்ற புள்ளையையும், விட்டுட்டு அவன் ஏன் பாரின்க்கு  போனான்?    

இந்த பிரின்சஸ் அப்பாக்காக   எவ்வளவு ஏங்கி தவிக்கிறாள்.  என்னை பார்த்ததும் அப்பானு கூப்பிட்டு என்னை எப்படி கட்டிக்கிட்டா..?  

இதையெல்லாம் அவன் மிஸ் பண்றான்... அந்த இடியட் எப்படியோ போய் தொலையட்டும். என் பிரின்சஸ்க்கு  அப்பாவைப் பற்றிய ஏக்கம் எவ்வளவு இருக்கு.... எந்த காரணத்துக்காகவும் என் பிரின்சஸ் ஏங்க கூடாது.

அவ முகத்துல எப்பவும் சிரிப்புதான் இருக்கணும்... நீ போன் நம்பரை கொடு...உடனே அவனை கிளம்பி  வரச் சொல்றேன்...”  என்று பொரிய ஆரம்பித்தான் விகர்த்தனன்.

அதைக்கேட்டு பெண்ணவளுக்கோ ஆச்சர்யமாக இருந்தது.  

அதிலும்  என் பிரின்சஸ் என்று சொல்லி, தன் மகளை அவனின் இளவரசியாக பாவித்து,, அவளின்   ஏக்கத்தை போக்க  தவிக்கும் அவனைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது பெண்ணவளுக்கு.  

ஆனாலும் இருந்தால் தானே போன் நம்பரை கொடுக்க...! இல்லாத புருஷன் நம்பரை எப்படி கொடுப்பாளாம்...!  

“அதெல்லாம் தரமுடியாது... அவர்  ஐந்த வருட கான்ட்ராக்ட்டில்  போயிருக்கார்.  எப்படியும் சீக்கிரம் வந்து விடுவார்...” என்றாள் மீண்டும் அருகில் இருந்த ரோஜாவை வெறித்தபடி.

“அது என்ன ஐந்த வருட கான்ட்ராக்ட்?... இப்பதான்  அமெரிக்கா நம்ம பக்கத்து வீடுமாதிரி ஆயிருச்சே... வேலை இருந்தாலும் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்ல வேண்டியதுதான...” என்றான் அதே இறுக்கத்துடன்.

“ஹ்ம்ம் வரலாம்தான்... ஆனால் அதற்கு பணம் வேண்டுமே... ஒருமுறை  இந்தியா வந்து போக எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா? “ என்றாள் உதட்டை பிதுக்கியவாறு.

அவன் என்னமோ அமெரிக்காவுக்கே செல்லாதது போல,  அவள்  சொன்ன  . விதம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

மாதத்தில் பல நாட்கள் அமெரிக்காவில் தான் அவன் வாசம்.. இந்த ஐ.டி நிறுவனத்தை ஆரம்பித்ததும் அதுவும் இன்னும் வேகமாக எஸ்டாப்ளிஸ் பண்ண வேண்டும் என்ற வேகத்தில்தான் இந்த ஐ.டி நிறுவனத்தில் தன் கவனத்தை செலுத்தி வருகிறான்.

அதனால் தான் அவனின் அமெரிக்க பயணம் குறைந்து விட்டது...

இதழ்க்கடையோரம் மெல்ல புன்னகைத்தவன்,

“ஆமா....பணம் செலவாகிவிடும் என்று  பார்க்கிறாயே...பணம் சம்பாதித்து விட்டால் போதுமா?  என் பிரின்சஸ்க்கு  தந்தை பாசம் வேண்டாமா? 

அவளின் சைல்ட்குட் டேஸ்  ல அவளுக்கு கிடைக்க வேண்டிய தந்தையின் அரவணைப்பை இந்த  பணம் கொடுத்து விடுமா? “ என்று அவனின் இதழ்கள் இகழ்ச்சியாக விரிந்தன.  

“ஹ்ம்ம்ம் எங்களைப் போன்ற மிடில் கிளாஸ் மக்களுக்கு  எல்லாம் பணம் தான் சார் முக்கியம். அடுத்து தான் பாசம் எல்லாம்.  

அதோடு அவர்  ஒன்னும் பாசம் இல்லாமல் இல்லை.  திரும்பி வந்ததும் இவளைத்தான் கொஞ்சப் போகிறார்...”  என்று இல்லாத கணவனுக்காக வக்காலத்து வாங்கினாள் அந்த பேதைப் பெண்.  

“ரொம்ப ரொம்ப பாசம்தான்...” என்று ஏளனமாக உதட்டை பிதுக்கியவன், தன் தோளை  அலட்சியமாக குலுக்கியவன்  

“ஆல்ரைட்... அது உன்னோட பிரச்சனை. எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை.  என் பிரின்சஸ் எப்பவும் ஹாப்பியா இருக்கணும்.  அவ என்கிட்ட ரொம்ப கம்பார்ட்டபிலா  இருக்கா.  

எனக்கும் அவளை ரொம்ப பிடிச்சிருக்கு.  அதனால் நான் அவளை கொஞ்சுவதும், அவள் உடன் பழகுவதையும் யாராலும்  தடுக்க முடியாது...”  என்றான் அமர்த்தலாக.

அதைக் கேட்டு அதிர்ந்து போனாள் சுரபி.

“என்னவோ இவன் பெத்த புள்ள மாதிரி இவ்வளவு பில்டப் கொடுக்கறானே.. என் ப்ரின்சஸ் ஆம்... இவன் பண்ற அலப்பறையில இவன் என் பொண்ணுதானானு எனக்கே சந்தேகம் வருது...

பத்தாதற்கு இந்த குட்டி பிசாசும் அவன் கூட சேர்ந்துகிட்டு என்னை இவன் கூட மல்லுக்கட்ட வைக்கிறா... இதுவரைக்கும் தன்மையா பேசினவன் இப்ப மிரட்டற மாதிரி அமர்த்தலா வேற சொல்றானே.. இதை எப்படி சமாளிக்க...” என்று அதிர்ந்து முழித்தவள்

“என்ன மிஸ்டர்...மிரட்டலா? என்றாள் அவனுக்கு நிகராக வரவழைத்த அமர்த்தலான குரலில்.

“நான் எதுக்கு பெண்ணே உன்னை மிரட்டனும்...  இந்த குழந்தைக்கு அப்பா ஏக்கம் தீரும் வரைக்கும் என்னை அப்பா என்று கூப்பிட்டு விட்டு போகட்டுமே..”  என்று பொறுமையாக சொல்ல,  

“அதுதான் வேண்டாம்ங்கிறேன்... “ என்று மீண்டும் முதலிலிருந்து அவனுக்கு விளக்க ஆரம்பித்தாள் சுரபி.  அதில் கடுப்பானவன்

“ஸ்டாப் இட்.. இப்ப என்னதான் சொல்ல வர...” என்றான் முகத்தில் முழு மொத்த எரிச்சலுடன்.  

“நீங்கள் என் குழந்தையை பார்க்க கூடாது...”  என்றாள் முகத்தை கடினமாக இறுக்கிக் கொண்டு.

“அது முடியாது...அல்ரைட் வேணும்னா ஒன்னு செய்றேன். உன்னை பத்தி  தப்பா பேசுவாங்க னு சொல்ற இல்ல. அப்படி தப்பா பேசினா, அதை உன் ஹஸ்பென்ட் தானே பர்ஸ்ட் நம்ப வேண்டும்.

நீ  உன் ஹஸ்பென்ட்  நம்பரை கொடு.  நான் அவனுக்கு போன போட்டு உண்மையை சொல்லி விடுகிறேன்.  ஐ மீன் நீ வரும் வரை இந்த குழந்தைக்கு அப்பாவாக இருக்கிறேன். மற்றபடி உனக்கும் எனக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி வைக்கிறேன்

உன் ஹஸ்பென்ட் உன்னை நம்பினால் போதும் அல்லவா.. அதற்குப் பிறகு யாரும் உன்னை என்ன பேசினால் உனக்கு என்ன? “  என்று சொல்ல, இப்பொழுது  அவளோ வெளிப்படையாகவே தன் தலையில் அடித்துக் கொண்டாள்.  

இவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது?  தன் மகள் இவன் மீது வைத்திருக்கும் பாசத்தை அல்லவா பகடைக்காயாக பயன்படுத்துகிறான்? இவனை எப்படி தன் மகளிடம் நெருங்க விடாமல் தடுப்பது?

இவனை பார்த்தால் சொன்னால் புரிந்து கொள்ளக்கூடியவனாக தெரியவில்லை. என்ன செய்யலாம்..” என்று முகத்தில் வேதனையின் சுருக்கத்துடன், தன் தலையின் இரு பக்கமும் அழுந்த பிடித்தபடி கண் மூடி யோசித்தாள்.

அவள் முகத்தை பார்த்ததும் என்ன தோன்றியதோ...

“சு....ர....பி.....” என்று மென்மையாய், அவள் பெயருக்கே வலித்துவிடும் என்ற அளவில் மிக மென்மையாய் அழைத்தான்.

அந்தக் குரலை கேட்டதும், மீண்டும் ஒருமுறை அவள்  உள்ளுக்குள் சில்லிட்டது. அடி வயிற்றில் ஏதோ ஒரு சுரீர் என்ற இன்ப அவஷ்தையிலான வலி...

தன்னை மறந்து விலுக் என்று  நிமிர்ந்து பார்க்க

“ரொம்ப டென்ஷன் எடுத்துக்காத. நான் சொன்ன மாதிரி நான் எந்த தப்பான நோக்கத்திலும் உன் பொண்ணு கூட பழக வில்லை.  

அதேபோல அவளை வைத்து உன்னை மடக்க முயற்சி செய்வதாகவும் தப்பாக எண்ண வேண்டாம். இது ஜஸ்ட் எனக்கும் அம்முவுக்குமான ஒரு  ஈர்ப்பு...பாசம்... அவ்வளவுதான்.  

தப்பா எடுத்துக்க வேண்டாம். யாரோ தப்பா சொல்வார்கள் என்று பயப்படவும் வேண்டாம். வேணும்னா  நாம ரெண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ் ஆ இருக்கலாம்..

யாராவது கேட்டால் என்னை உன் ப்ரெண்ட் னு சொல்லிக்க...ப்ராப்ளம் சால்வ்ட்...”  என்று வெளிப்படையாகவே சொல்லி இயல்பாக புன்னகைக்க, பெண்ணவள் தான் தினறி போனாள்.

இப்படி வெளிப்படையாக பேசுபவனிடம் எப்படி கடின முகத்தை காட்டுவது..!

ஒருவேளை இவன் சொல்வதுதான் சரியோ..! அடுத்தவர்களுக்காக பார்த்து எத்தனை காலம் நம் வாழ்க்கையை பயந்து பயந்து வாழ்வது.

வாழ்ந்தாலும் ஏசும்..தாழ்ந்தாலும் ஏசும் சமுதாயம் இது...!

இந்த தெளிவு இரண்டு வருடத்திற்கு முன்னரே இருந்திருந்தால், சென்னையை விட்டு ஓடியே வந்திருக்க தேவையில்லை என்று இருந்தது அவளுக்கு.

அவளின் பதிலுக்காக விகர்த்தனன் அவள் முகத்தையே பார்த்தபடி இருக்க, அதில் தன்னை உலுக்கிக் கொண்டவள்,  அவளுக்கும் என்ன சொல்வது என்று குழப்பமாக இருக்க, தலையை மட்டும் மெதுவாக  அசைத்து வைத்தாள்.  

அவனும் தன் தோளை  குலுக்கியவன்,

“பை தி வே... உன் பேர் தெரிஞ்சிருச்சு. என் பிரின்சஸ் பேரென்ன?  இதுவரைக்கும் அவளுடைய பெயரை நான் கேட்கவே இல்லையே...”  என்றான் ஆர்வத்துடன்.

அவளும் முதல் முறையாக வாய் திறந்து  தன் மகளின் பெயரை சொன்னாள்  சுரபி.

“க ர் ணி..... க...ர்...ணி... கா... என்றாள்.

*****

துவரை எல்லாரையும் சுட்டெரித்துக்  கொண்டிருந்த ஆதவன்... கொஞ்சம் இளைப்பாற எண்ணி, கீழிறங்கி கொண்டிருந்தான்.

அவனின் பொன்னிற கதிர்கள் அந்த பூங்காவில்  பட்டு, பார்க்கும் இடமெல்லாம் பொன் போல தகதகக்க,  மறைய ஆரம்பித்திருந்த அந்த கதிரவனையே  வெறித்து பார்த்தவாறு மீண்டும் மெல்லமாய்

“க ர் ணி கா.... “  என்றாள் முனுமுனுத்தவாறு.

அதை சொல்லும் பொழுது அவள் முகத்தில் அப்படி ஒரு வேதனை..!

அதைக்கண்டவனுக்கோ பெரும் குழப்பமாக இருந்தது.

“எதற்காக தன் குழந்தையின்  பெயரை சொல்லும் பொழுது இவ்வளவு வேதனை கொள்கிறாள்? “  என்று ஒரு நொடி ஆழ்ந்து யோசித்தான்.

அவளின் பேச்சும், செயலும் எப்பொழுதும் அவனுக்கு புரியாத புதிர்தான் என்று எண்ணிக்கொண்டவன்,  தன் தோளை குலுக்கியவன், தன் மடியில் அமர்ந்து இருந்த அந்த குட்டியை  பார்த்தவன்

“நீங்க கர்ணிகா வா?  அப்பா உங்களை நிகா னு கூப்பிடுவேன். நல்லா இருக்கா?  “ என்றான் புன்னகையோடு.

கர்ணி குட்டியும் நல்லா இருக்கு என்பதாய்  தலையை மேலும் கீழும் ஆட்டி தன் சம்மதத்தை சொல்லியது.    

******

ப்பொழுது ஆதவன் முழுவதுமாகவே துகில் கொண்டு விட, அதுவரை தங்க நிறத்தில் தகதகத்து கொண்டிருந்த இடம் முழுவதுமே கரிய இருள் சூழ்ந்து விட,  அந்த பூங்காவில் இருந்த எல்லாருமே எழுந்து வீட்டிற்கு கிளம்ப ஆரம்பித்திருந்தனர்.

சுரபியும், நேரமாச்சு என்று பொதுவாக சொல்லிவிட்டு அவள் அமர்ந்து இருந்த சிபெண்ட் பெஞ்சில் இருந்து   எழுந்து கொள்ள, அவனும் தன் மடியில் அமர்ந்து இருந்தவளை தூக்கி கொண்டே எழுந்தான்.

அந்தக் குட்டியோ  மம்மு... என்று சொல்லி, தன் கையை எடுத்து வாய்க்குள் வைத்துக்கொண்டு அவனை பாவமாக பார்த்து வைத்தாள்.

அவளுக்கு பசிக்கிறது என்பதைத்தான் ஜாடையாக  சொல்லுகிறாள்  என்று    புரியாமல் விகர்த்தனன் பெரியவளை பார்க்க, அவளுக்கும் அப்பொழுதுதான் தன் குழந்தைக்கு இதுவரை எதுவும் கொடுக்கவில்லை என்பது உரைத்தது.

அந்த நெட்டையுடன் சண்டையிட்டு கொண்டிருந்ததில் தன் மகளை மறந்து விட்டாள் என்று  புரிய, குற்ற உணர்வில்,  முகம் கன்றி  தன் கீழ் உதட்டை கடித்துக் கொண்டாள்.

அனிச்சையாய் அவனின் பார்வை அவளின் இதழ்களுக்கு தாவியது

திரண்ட ஆரஞ்சு சுளை போல சிவந்து இருந்த அந்த இதழை, அவள்  பற்களால் அழுந்தக் கடித்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.  

அடுத்த நொடி தன் தலையை உலுக்கிக் கொண்டவன், தன்  பின்னந்தலையை தன் கைகளால் வருடி கொடுத்தான்.  

அதற்குள் மீண்டும்  பசி எடுத்து விட, அந்த குட்டியோ தன் அன்னையின்   சுடிதாரை பிடித்து இழுத்து,  

“அம்மா...  மம்மு.... ?“ என்று மீண்டும் வாயில் கையை வைத்துக் கேட்க,  அதற்குள்   அவளின் செய்கையை புரிந்து கொண்டான்  விகர்த்தனன்.  

“ஹே... பிரின்சஸ்...  மம்மு வேண்டுமா? “  என்று கேட்க, அவளும் ஆமாம் என்று  தலையசைத்தாள்.  

உடனே பதறிப் போனவன், அவளை  கைகளில் அள்ளிக் கொண்டு, சுரபியை பார்த்து  

“பக்கத்தில் ரெஸ்டாரண்ட் இருக்கு. வா போகலாம்...”  என்றவன் அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் முன்னே நடந்தான்.  

“இல்லை... அவளுக்கு வெளி புட்  ஒத்துக்காது...  நான் வீட்ல போய் செஞ்சு  கொடுப்பேன். இப்ப ஸ்னாக்ஸ் இருக்கு...”  என்று தன் பையை திறந்து,  அதில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துக் கொடுக்க,  அவனோ  அவளை முறைத்தான்.  

“புள்ளை பசிக்கு பிஸ்கட்டைத் தான் கொடுப்பாயா?” என்று எரிந்து விழுந்தான்.  

“பேசாம என் கூட வா.... “ என்று அடிக்குரலில் சீறிவிட்டு, கடகடவென்று அந்த பூங்காவின் நுழைவாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான்.  

அவளோ ஒரு நொடி அதிர்ந்து திகைத்து நின்றவள், பின் வேறு வழியில்லாமல்  அவன் பின்னே நடக்க, இல்லை ஓட வேண்டியதாயிற்று.  

பூங்காவை ஒட்டி வெளியில் நிறுத்தியிருந்த தன் காரை அடைந்தவன்,  அதன் கதவைத் திறந்து உள்ளே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டவன், அந்த குட்டியையும்   தன்னருகே அமர்த்திக் கொண்டு பெரியவளுக்காக காத்திருக்க,    

வேகமாக ஓடி வந்தவள் என்ன செய்வது என்று குழம்பி தன் மகளை தனியாக விட மனம் இல்லாமல்,    முன்பக்க கதவை திறந்து கொண்டு  தன் மகளின் அருகில்   அமர்ந்து கொண்டாள்.  

அடுத்த நொடி சீறி பாய்ந்தது  அந்த சொகுசு கார்..!   
Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *