மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Monday, September 26, 2022

கனவே கை சேர வா-1


 

அன்பான வாசகர் தோழமைகளே!!!

அனைவருக்கும் வணக்கம்..!

மீண்டும் ஒரு புதிய கதையை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

எனது என்னுயிர் கருவாச்சி  நாவலின் தொடர்ச்சிதான் இந்த கதை..!  என்னுயிர் கருவாச்சி  நாவலை படித்திராவிட்டால், அதை படித்துவிட்டு இந்த கதையை தொடருங்கள்..!

இந்த கதை 2000 லிலும், தற்போதுமாக பயணித்து பின் ஒன்றாக இணையும்.  இந்த கதையின் புதிய நாயகன் நாயகியோடு என்னுயிர் கருவாச்சி யின் நாயகன், நாயகி ராசய்யா , பூங்கொடி மற்றும் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த கதையிலும் உலா வருவார்கள்.  

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, ஜாலியான காதல் கதைதான். படித்துவிட்டு  மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்! 

 

அத்தியாயம்-1

அன்று:

தன்னுடைய  அன்றைய பணியை செவ்வனே செய்துவிட்ட திருப்தியில்,  தன் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்  அந்த ஆதவன்.  

அதுவரை அனைவரையும் சுட்டெரித்து கொண்டிருந்தவன்...  இப்பொழுது மனமிறங்கி பொன்மஞ்சள் கதிர்களால் அந்த வானின் மேற்கு திசை ம்உழுவதும் இள மஞ்சள் நிறமாக்கி கொண்டிருந்தான்..!  

அதுவரை

“சை... என்ன வெய்யில்..!  என்ன வெய்யில்..! ஏன் தான்  இந்த சூரியன் இப்படி சுட்டெரிக்கிறானோ?..” என்று திட்டிக் கொண்டிருந்தவர்கள்..!

“ஹலோ ப்ரதர்...  கொஞ்சம் உன் பவர் செட்டிங்ல் போய் கொஞ்சம் ப்ரைட்னெஸ் ஐ குறைக்க கூடாதா? “ என்று கிண்டல் அடித்தவர்கள் எல்லாம்   இப்பொழுது அந்த சூரிய அஸ்தமனத்தை காண ஆவல் கொண்டு  வானில் மேற்கு  திசையை நோக்கினர்..!

அடுத்த கணம்,

“வாவ்..!  சோ ப்யூடிஃபுள்...”  என்று தங்களை மறந்து அந்த சன்செட் ஐ ரசித்துக் கொண்டிருந்தனர்..! அப்படி ரசிக்க வைத்திருந்தான் அந்த ஆதவன்..!

“ஆம்...நன்பகலில் எரிப்பதும்  நானே ..! அந்தியில்  குளிர வைப்பதும் நானே ..!  அனைத்தும் நானே..”  என்றதாய் கர்வத்துடன் அவனும் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தான்..!  

அந்த மனதை மயக்கும் மாலை வேளையில்

“மாமோய்... நீ எங்க இருக்க? “ என்று சத்தமாக  கத்தி கொண்டே நெல் வயல்களின் நடுவில் இருந்த  வரப்பின் மீது  அசால்ட்டாக ஓடி வந்தாள் பூங்கொடி...

அந்த வரப்பின் இருபக்கமும் பச்சை பசேல் என்று நெற்கதிர்கள் வளர்ந்து பருவம் அடையும் நிலையில் இருந்தன..

ஒன்றிரன்டில் பூ வைத்திருக்க அதை பார்த்து ரசித்தவாறு ஒரு கையால் அதை தடவியவாறு வரப்பில் வேகமாக ஓடி வந்தாள் பூங்கொடி..

ஒவ்வொரு முறையும், அந்த நெல் வயலை பார்க்கும் பொழுதும், அவளுக்கு அந்த மழை நாள் நியாபகம் மறக்காமல் கண் முன்னே வந்து விடும்..!

திருமணம் ஆகியும் அவளை தள்ளி நிறுத்தி இருந்த தன் கணவனை வம்படியாக, வரப்பில் இருந்த அவன் காலை தட்டி விட்டு, சேற்றுக்குள் தள்ளி விட்டு, அவளும் அவன் மீதே விழுந்து,  அவனை மோகம் கொள்ள வைத்து, அவன் கட்டுபாட்டை இழக்க வைத்து,  அவனுடன் கூடிய அந்த மழை நாள்...!

முதன் முதலில் தன் கணவனுடன் இணைந்த அந்த நாள்...!

இப்பொழுதும்  அவள் உள்ளே தித்திக்கும் இனிய தருணம் அது..!

ஏழு ஆண்டுகள் முடிவடைந்து விட்டன ..! அவர்களின் கூடலின் பரிசாக கிடைத்த அவர்களின் செல்ல மகளுக்கு இப்பொழுது ஆறு வயது முடிந்து விட்டது..!

ஆனாலும் நேற்றுதான் நடந்ததை போல அந்த மழை நாள் சம்பவம் அப்படியே அவளின் நினைவடுக்கில் பதிந்து இருந்தது...!

அதை ஒவ்வொரு முறையும் நியாபகபடுத்தி பார்த்து சிலிர்த்து போவாள் மங்கையவள்..!

இப்பொழுதும் அந்த வயலை பார்த்ததும் , அவள் உள்ளே சிலிர்த்தது..! இதழில் தானாக புன்னகை அரும்பியது..! கன்னங்கள் சிவந்து போயின..!

ஓடி வந்தவள், ஒரு நொடி நின்று அந்த வயலை ரசித்து பார்த்தாள்..!  அதே நேரம், அந்த வயலில் செழித்து வளர்ந்திருந்த நெற்கதிர்களை பார்க்க, அவளுக்கு தன் கணவனின் அயராத உழைப்பு கண் முன்னே வந்தது..!

மாப்பிள்ளை சம்பா வகை நெல்ரகம் அது...!

அவனைப் போலவே நெடுநெடுவென்று வளர்ந்து அவள் உயரத்துக்கு நின்று இருந்தது..!

அழிந்து வரும் நெல் ரகங்களில் இந்த மாப்பிள்ளை சம்பாவும் ஒன்று...!

மாப்பிள்ளை சம்பா- அதன் பெயருக்கேற்ப, இந்த நெல் ரகம், திருமணத்திற்கு தயாராக இருக்கும்  மாப்பிள்ளைகளுக்கான பிரத்தியேக நெல் வகையாகும்.   

நமது முன்னோர்கள் காலத்தில், ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்றால், ஒரு ஆண் தனது பலத்தை, அவன் ஆண்மையை  நிருபிக்க, அந்த ஊரில் இருக்கும் இளவட்டக் கல்லை தூக்கும் வழக்கம் தமிழர்களின் வழக்கங்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது.

அதனால் திருமணத்திற்கு முன்னதாக ஆண்களுக்கு உடல்வலிமையை அதிகரிக்க வேண்டி, மாப்பிள்ளை சம்பா நெல்லின் அரிசியிலான உணவை  அதிகம் எடுத்துக்கொள்வார்களாம்.

இது வளர்வதற்கான கால அவகாசம் கிட்டதட்ட ஆறுமாதம் என்பதால், இப்பொழுது யாரும் இதை பெரிதாக பயிரிடுவதில்லை.!

குறுகிய காலத்தில் பலன் அளிக்கும் குறுவை, சம்பா, ஐ.ஆர். 20 போன்ற நெல் ரகங்களைத்தான் இப்பொழுது பெரும்பாலும் பயிரிடுகிறார்கள்..!

அதனாலயே இந்த நெல் ரகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது..!

ராசய்யா, இந்த நெல்லின் பெருமையை கேள்விபட்டு,  விவசாய அலுவலகத்தில் விசாரித்து, இந்த நெல்லை பயிரிடுவதை பற்றி தெரிந்து கொண்டு, தன் வயலில் இதை பயிரிட்டு இருந்தான்.!

ஒரு காலத்தில் தறுதலையாக, பொறுப்பற்று சுத்திக்கொண்டிருந்தவன்..! இன்று எல்லாரும் மதிக்கும் ஒரு முழு நேர விவசாயியாக மாறி இருந்தான்..!

பெரிதாக படுப்பறிவு இல்லை என்றாலும் விவசாயத்தின் மீது இருந்த ஆர்வத்தாலும் , தன் மனைவியையும் , அதுவும் குறிப்பாக தன் செல்ல மகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி அவளை பெரிய டாக்டராக்கி காட்டணும் என்ற வைராக்கியத்தில், கடினமாக உழைத்து கொண்டிருக்கிறான்..!

அதை பார்க்கும்பொழுது பூங்கொடிக்கு பெருமையாக இருந்தாலும் , வேகாத வெய்யிலில் அவன் உடல் வருந்த உழைத்து களைப்பது கஷ்டமாக இருக்கும்..

அவளும் அவனுக்கு உதவி செய்ய வயலுக்கு வந்தால் அவளை அனுமதிக்க மாட்டான்..!

“உனக்கு இதெல்லாம் வராது டி... நீயெல்லாம் இந்த சேத்துல  கால் வைக்க வேண்டாம்...நீ ஆசைப்பட்ட மாதிரி, சேத்துல இறங்க விடாம,  உன்னை ராணி மாதிரி பார்த்துக்கறது என் கடமை..! “ என்று கடுமையக அதட்டி அவளை தடுத்து விடுவான்..!

அதோடு அவள் படித்துக்கொண்டிருந்த டிகிரியை முடிக்க வைத்து, கூடவே டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு அவளை படிக்க வைத்தான் ராசய்யா.  

படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாதவளுக்கோ அதற்கு தயார் பண்ணுவது கஷ்டமாக இருந்தது.

ஆனாலும் அவளுக்கு உறுதுணையாக நின்று அவளை மோட்டிவேட் பண்ணி, கட்டாயப்படுத்தி அந்த பரீட்சையை எழுத வைத்தான்..!  

அவள் வேண்டா வெறுப்பாக தன் கணவனுக்காக என்று, சென்று,   பரீட்சையை எழுத, முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று விட்டாள்.  

இப்பொழுது அவள், அவளுடைய சொந்த கிராமத்திலயே  வி.ஏ.ஓ(VAO) ஆக பணியாற்றுகிறாள்..!

எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலை விரித்து ஆடும் நிலையில், நேர்மையாகவும், நியாயமாகவும், அந்த கிராம மக்களுக்கு தேவையான வசதிகளை,

அரசாங்கம் அளிக்கும் உதவிகளை அப்படியே மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க, இத்தனை வருடங்களில் சுற்றிலும் இருக்கும் கிராமங்களில் பிரபலமடைந்து விட்டாள் பூங்கொடி...!

இதற்கெல்லாம் தன் கணவன்தான் காரணம் என்று பெருமையில் அவள் மனம் ததும்பும்.    

அதோடு அவள் திருமணத்திற்கு முன்னர் கனவு கண்டதைப் போல சேற்றில் கால் வைக்காமல் நிழலில் இருந்து செய்யும் வேலைதான்.  

அதை நினைக்கும் பொழுது அவளுக்கு பூரிப்பாக இருக்கும்.

கை நிறைய சம்பாதிக்கும் ஒருவனை மணந்து இருந்தால் கூட,  அவள் இந்த அளவுக்கு சந்தோஷமாக வாழ்ந்து இருக்க மாட்டாள்..!

அவளுக்கு என்று ஒரு அடையாளம் இல்லாமல், தன் அக்காவை போல புருஷனையும் , புள்ளைகளையும் மட்டுமே பார்த்துக்கொண்டு, குளுகுளு வீட்டில் வீட்டிற்கு உள்ளேயே ராணியாக இருந்திருப்பாள்..!

ஆனால் தன் மனதுக்கு பிடித்த  சுத்தமான இந்த ஊர் காற்றும் , எப்பொழுதும் சிலுசிலுவென்று வீசும் காவிரி ஆற்றின் தென்றலும், கிராமத்து மக்களின் கள்ளம் கபடமற்ற பேச்சும், சிரிப்பும் என எல்லாவற்றையும் தொலைத்து இருப்பாள்..!

இப்பொழுதும் அவள் ராணிதான்..! ஆனால் தன் கணவனுக்கு மட்டும் ராணியாக இல்லாமல்,  தன் ஊரிலும், ஊரை  சுற்றி இருக்கும் பல கிராமங்களிலும் அவள் ராணியாகத்தான் உலா வருகிறாள்..!

ஏழு வருடம் முன்பு ஒரு லட்ச ரூபாய்க்காக அவளை கட்டாயபடுத்தி மணக்க இருந்த அந்த ராஜேந்திரன் கூட,  அவள் ஸ்கூட்டியில் வருகிறாள் என்று தெரிந்தாள், நின்று அவளுக்கு வணக்கம் வைத்துவிட்டு செல்கிறான்..!

பின்ன..அந்த கிராமத்தில் எது நடக்க வேண்டும் என்றாலும் அவளின் ஒப்புதலும் கையெழுத்தும் வேண்டுமே..!

வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேசன் ஆபிசர்..! அடிக்கடி தனக்குள்ளே பெருமையாக சொல்லிக்கொள்வாள்..!

இதற்கெல்லாம் காரணம் அவள் கணவன் தான்..!

தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்திராதவளை, அதைப்பற்றியெல்லாம் கண்டு கொள்ளாதவளை, தலையில் கொட்டி, கட்டாயபடுத்தி அல்லவா இந்த வேலையை வாங்கி கொடுத்து இருந்தான்..!

வேலை மட்டுமா? அது மட்டுமா அவளை இத்தனை சந்தோஷமாக வைத்திருக்கிறது..!

இல்லை... இல்லவே இல்லை...!

அவள் ராணியாய் உலா வர இன்னொரு முக்கிய காரணம் அவள் கணவன் அவள் மீது வைத்திருக்கும் எல்லையில்லா காதல்..!

அந்த எல்லையில்லா பாசத்தையும், அன்பையும் பங்கு போட இப்பொழுது இன்னொருத்தி வந்துவிட்டாள் என்று எண்ணும்பொழுதுதான்  அவளுக்கு உள்ளுக்குள் சுருக்கென்று வலிக்கும்..!

ஆனாலும் அவள் மீது அவன் வைத்துள்ள, காதலும், அன்பும், மோகமும், கொஞ்சமும் குறையாததால், அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை பூங்கொடி.

எல்லையில்லா  காதலையும் அன்பையும் தன்மீது பொழியும் தன் கணவனை எண்ணியபடி பெருமையுடன் சிரித்தவாறே, தன் முந்தானையை முன்புறமாக இழுத்து  ஸ்டைலாக சுற்றிக் கொண்டே,

என் மாமாவ பாத்தீங்களா?
மலவாழ தோப்புக்குள்ளே…
குயிலக்கா கொஞ்சம் நீ பாத்து சொல்லு..
வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே..?

என்று ராகம் போட்டு, சத்தமாக பாடிக் கொண்டே  மீண்டும் தன் நடையை தொடர்ந்தாள் பூங்கொடி

*****  

நெல் வயல்களை தாண்டி அடுத்து இருந்தது கரும்பு தோட்டம்...!  

இயற்கை விவசாயத்தின் பலனாகவும், ராசய்யா  தன் வியர்வை சிந்தி எந்நேரமும் அந்த தோட்டத்திலயே கிடந்து தான் பெற்ற பிள்ளையை போல பார்த்து பார்த்து வளர்த்ததாலும் கரும்புகள் உருண்டு திரண்டு கொலு கொலு வென்று அவனைப் போலவே கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தன....

நெல்வயல்களை தாண்டி ஓடி வந்தவள்... அடுத்து இருந்த கரும்பு தோட்டத்தை அடையவும் அங்கு தலைக்கு மேல வளர்ந்திருந்த கரும்புகளைப் பார்க்க

“ப்பா... இதுவும் அந்த கருவாயனைப்போலவே நல்லா உருண்டு திரண்டு வளர்ந்திருக்குதே..! எப்படித்தான் இவன் வளர்க்கிற எல்லாமே நல்லா செழுமையா இருக்கு...பக்கத்து வயல்ல வளர்றது எல்லாம் நோஞ்சான் மாதிரி இருக்கு..!

இவன் கையில என்னமோ இருக்கு...! பொண்டாட்டி,  புள்ளையில் இருந்து, வளர்க்கிற நெல் , கரும்பு, வாழைனு எல்லாமே இவன் கை பட்டாலே தானா செழிச்சு வளர்ந்திரும்... மச்சக்காரன் என் மாமா.....”

என்று மீண்டும் சிரித்துக் கொண்டவள், வளர்ந்திருந்த கரும்புகளுக்கிடையில் உற்று பார்த்தவள்

“மாமோய்... நீ எங்க இருக்க? “ என்று மீண்டும் இன்னும் கொஞ்சம் ஸ்ருதியை கூட்டி கத்தினாள்...

அப்பொழுது அவள் நின்றிருந்த இடத்தை விட்டு சற்று தள்ளி,  கரும்பு தோகை சரசரவென்று  வரிசையாக அசைய, அதை கண்டவள் முகம் மலர அந்த பகுதியை நோக்கி ஓடினாள் பூங்கொடி...

தன் தலையில்  கட்டியிருந்த மண்டகாட்டு துணியை அவிழ்த்துக் கொண்டே,   அந்த கரும்பு தோட்டத்தில் இருந்து வெளிவந்தான் ராசய்யா...!  

கரும்பு  தோகையில் இருக்கும் மொழங்கு பட்டு விடாமல் இருக்க,  ஒரு பழைய முழுக்கை சட்டையை அணிந்திருந்தான்.. கீழே ஒரு பழைய லுங்கியை காலை  மறைக்குமாறு அணிந்திருந்தான்..

கரும்பு மொழங்கு உடலில் கத்தாமல் இருக்க,  இரண்டு மூன்று சட்டைகள் அணிந்து வந்த பொழுதும்,  அவனின் திண்ணிய மார்பும்,  உழைத்து உழைத்து உரமேறிய அவனுடைய புஜங்களும்...  

ஜிம் போகாமல்,  உடற்பயிற்சி என்று எதுவும் செய்யாமலேயே,  உருவாகியிருந்த சிக்ஸ் பேக் தேகம்...  அப்படியே பெண்ணவளின் பார்வைக்கு வந்தது..!

கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் தன் முன்னே நின்றிருந்த தன்னவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள்  பெண்ணவள்

தன்னவளின் பார்வையில் இருந்த கிறக்கத்தையும் மயக்கத்தையும் கண்டவனுக்கும் உள்ளுக்குள்  சிலிர்த்தது..! உடலில் தானாகவே ஒட்டிக்கொண்டது ஒரு பரவசம்..!

அத்தனை நேரம் வேலை செய்திருந்த களைப்பு நொடியில் காணாமல் போயிருந்தது..!

திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆனவள்... கூடவே  ஒரு பிள்ளையை பெற்றெடுத்தவள் என்று யாரும் சொல்லிவிட முடியாது..!  

அந்த அளவுக்கு முன்பு இருந்ததை போலவே மெல்லிய சிற்றிடையும், குழந்தை பிறந்த பிறகு, அவள் அன்னை சிலம்பாயின் கண்டிப்பான உணவு பழக்க வழக்கத்தாலும்,

அவளுக்கென்ற தனி கவனிப்பாலும், கொஞ்சமும் சதைப் பிடிக்காமல் ஒல்லியாக, கொஞ்சம் மினுமினுப்பும் கூடி இருக்க,  சிக்கென்று இருந்தாள் பூங்கொடி..!  

எல்லாவற்றிற்கும்  மேலாக, இன்னுமாய் மெருகேறியிருந்த  அவளின் வனப்பான முன்னழகு.. அவனை  கட்டி இழுக்க,  கொஞ்சமும்  சலிக்காமல் தினமும் இரவில் அவளை நாடும் காங்கேயம் காளையாக அவனை வசியம் செய்து வைத்திருந்தாள் அவன் மனையாள்..!

தன்னையே கிறக்கத்துடன் பார்த்திருந்தவளை,  உச்சி முதல் பாதம் வரை ரசித்து பார்த்தவாறு,  அவள் அருகில் நெருங்கி வந்தவன், தன் தலையை லேசாக உலுக்கி, தன்னை  சமாளித்துக் கொண்டு,  

“ஓய் கருவாச்சி..!  எதுக்குடி மாமா எங்க இருக்கனு  கத்தி  என்னை ஏலம்  போட்டு கிட்டே வந்த? “  என்று செல்லமாக முறைத்தான் ராசய்யா..!  

அவன் கருவாச்சி என்றதும் அதுவரை மாதவியாய் தன் கணவனை ரசித்து இருந்தவள்... இப்பொழுது  கண்ணகியாய் அவதாரம் எடுத்திருந்தாள்..!  

அவனை எரிக்கும் பார்வை பார்த்தவள்

“யோவ்...  மாமா...  என்னை கருவாச்சினு  கூப்பிடாதனு எத்தனை தடவ சொல்லியிருக்கேன்... நீ பெத்து வச்சிருக்கியே குட்டி கருவாச்சி.. அவளை விடவா நான் கருப்பா போயிட்டேன்..! : என்று சண்டக்கோழியாய்  சிலிர்த்துக் கொண்டு நிற்க,

அந்த கோபத்திலும் விடைத்திருந்த தன்னவளின் நுனிமூக்கை ரசித்தவாறு,

“ஹா ஹா ஹா என் புள்ள கருப்பா? போய் உன் நொல்ல கண்ண நல்லா செக் பண்ணு..! அவ உலக அழகி டி... அவளை கட்டிக்க எத்தனை ராஜகுமாரன்கள் வந்து வரிசையில் நிக்க போறாங்கனு பாரு...” என்று தன் காலரை தூக்கி விட்டுக்கொள்ள,

“ஆமாமாம் சொல்லிகிட்டாங்க...ஒரு காலத்துல என் அப்பாவும் இப்படித்தான் சொல்லிகிட்டாக என்னை பார்த்து....கடைசியில் என்னை கட்டிக்க ஒரு ராஜகுமாரனும் குதிரை ஏறி வரல.. இந்த கருவாயன் தான் கிடைச்சான்...” என்று உதட்டை வளைத்து நக்கலாக சிரிக்க,

“நானும் ராஜகுமாரன் தாண்டி... உன்னை ராணி மாதிரிதான வச்சிருக்கேன்..! நீ என் இதயத்தின் ராணி டி...” 

என்று சமாதான கொடியை பறக்கவிட, அவன் சொல்வது உண்மைதான் என்றாலும் தன்னை கருவாச்சி என்று சொல்லிவிட்டவனை இன்னும் சீண்டி பார்க்க விளைந்தது பெண்.

“ஆமா... ஆமா.... ராணி தான்.. இதோ வரப்புல கால் கடுக்க ஓடி வந்த ராணிதான்...” என்று முகத்தை நொடிக்க, அதுவரை அவளை வம்பிழுத்து கொண்டிருந்த அவன் முகம் உடனே இலகி போனது..!

“உன்னை யாருடி ஓடி வர சொன்னா? சொல்லியிருந்தால் உன்னை நானே தூக்கிட்டு வந்திருப்பேனே... “ என்று அக்கறையுடன்  சொல்ல, அதில் ஒரு நொடி நெகிழ்ந்து தான் போனாள் பெண்ணவள்..!

அவளுக்கு சிறு காயத்தையும், வலியையும் கூட கொடுக்க கூடாது என்று எண்ணுபவன்..! அவள் பிரசவத்தின் பொழுது அவளைவிட செத்து பிழைத்தவன்..!

தன் கணவன் பக்கமாய் அவள் மனம் சாய்ந்தாலும், இன்னும் அவன் கருவாச்சி என்று சொன்னதுக்கு தண்டனை தரவில்லையே என்பது உரைக்க,

“அப்படியா... எங்க என்னை இப்ப தூக்கிக்க பாக்கலாம்..... “ என்று வம்பு இழுக்க, அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல் அவளை தன் கரத்தில் அள்ளி இருந்தான் ராசய்யா..!

ஒரு நொடி  திகைத்தாலும், அடுத்த நொடி மையலுடன் தன் கணவன் கழுத்தில் கரத்தை போட்டு வளைத்துக்கொண்டவள், இதுதான் சமயம் என்று

“மாமா.... இதெல்லாம் சரிதான்....ஆனால் என்னை  கருவாச்சினு கூப்பிடறத மட்டும் விட்டுத் தொலையேன்... எனக்கு பிடிக்கல..” முகத்தை சுருக்கி அவனை கெஞ்சலுடன் பார்த்து வைத்தாள் பெண்..!

“ஹா ஹா ஹா என்னமோ தெரியல டி.... உன்னை அப்படி கூப்பிட்டாதான் கிக் ஆ இருக்கு... “ என்று கண் சிமிட்டி மந்தகாசமாய் சிரிக்க,

அதில் மீண்டும் மலை ஏறினாள் பெண்ணவள்..!

“கிக் ஆ இருக்கா... இப்ப இருக்கும் பார் கிக்கு.... “ என்றவள் அடுத்த நொடி அவனின் திரண்ட இதழை கவ்விக்கொண்டாள்...!

“ஹே என்ன டி பண்ற? “ என்று அவன் பதற, வாயிலிருந்து வார்த்தை எதுவும் வெளிவரவில்லை..!

கழுத்தை வளைத்தவாறு அவனின் கீழ் அதரத்தை அழுந்த கடித்து சப்பி  சுவைக்க, முதலில் வலித்தாலும், அடுத்த நொடி , அவனுக்கு அந்த வலியும் கூட சுகமாகத்தான் இருந்தது..!

முதலில் அவளிடம் இருந்து திமிறி விடுபட முயன்றவன்... அவள் தந்த  தண்டனையில் அப்படியே கிறங்கி நின்றுவிட்டான்..!

பெண்ணவளும் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஆரம்பித்து, பின் அவளும்  அந்த தண்டனைக்குள் சிக்குண்டு போனாள்..!

இருவரும் தங்களை மறந்து...இந்த உலகத்தை மறந்து  வேற உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்க, அது பொறுக்ககாத அந்த மாலை தென்றல், கரும்பு வயலுக்குள் புகுந்து சலசலப்பை மூட்ட, அதன் அசைவில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டனர் இருவரும்..!

ராசய்யாதான் முதலில் சுதாரித்து கொண்டான்..!

அப்பொழுதுதான் அவர்கள் நின்றிருப்பது வயல்வெளி என்பது உரைக்க, அவசரமாக தன் கையில் கிடந்தவளை கீழ இறக்கி நிற்க வைத்தான்..!

அதற்குள் அவளும் சுதாரித்துக் கொண்டவள்,

“எப்படி மாமோய்  என் தண்டனை... இனிமேல் என்னை கருவாச்சினு கூப்பிட்ட, இதுதான் தண்டனை...” என்று விரல் நீட்டி மிரட்ட,

“அப்படினா இனிமேல் அடிக்கடி கூப்பிடுவேன் டி...என் செல்ல கருவாச்சி.... “ என்று உல்லாசமாக சிரித்தபடி  முனுமுனுக்க,

“என்ன? என்ன சொன்ன? இப்ப என்ன சொன்ன? “ என்று கொஞ்சம் புரிந்தும்,  கொஞ்சம் புரியாமலும் அவனை முறைக்க,

“ஹீ ஹீ ஹீ நீ கருப்பா இருந்தாலும் அழகி தான் டி...இந்த உலகத்திலேயே என் குட்டிம்மாவுக்கு அடுத்த பேரழகி நீதான் டி . உன்னை பார்க்கிறப்ப...  கருவாச்சினு கூப்பிடறப்ப எம்புட்டு கிக்கா இருக்கு தெரியுமா?  

என்றவன் அடுத்த கணம் அவளின் வெற்றிடையில்  கை போட்டு அவளை இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டான்..!

அவன் போட்டிருந்த சட்டையில் இருந்த  கரும்பு மொழங்கு  அவள் உடலிலும் குத்தினாலும்,  அந்த இனிய அணைப்பு பெண்ணவளுக்கு  சுகமாகத்தான் இருந்தது..!

சற்றுமுன் தன்னவன் மீதிருந்த கோபம் மறைந்து போய், அவனிடம் கிறங்கி போய் அப்படியே அவன் மஞ்சத்தில் சாய்ந்து கொள்ள,  அவனும் ஒரு முறை சுற்றிலும் பார்த்து விட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அவளின்  மோவாயை பிடித்து தூக்கி அவளின் இதழ் நோக்கி குனிந்தான்..!

“நீ கொடுத்த தண்டனையை இப்ப  நான் திருப்பி தரப்போறேன் பார்...”  என்று அவளின் காது மடல் ஓரம் மீசை உரச கிசுகிசுத்தவாறு இன்னுமாய் நெருங்க,

அவனின் இதழ் அணைப்பிற்காக அவள் இதழ்கள் துடிக்க, தன்னவன் முகத்தை காண முடியாமல் நாணம் சூழ்ந்து கொள்ள, பெண்ணவள் கண்கள் லேசாக மூடிக்கொண்டன.  

அவள் கண் இமைகளை லேசாக வருடியவன்...  அவனின் அணைப்புக்காக காத்திருந்த அவளின் இதழை நெருங்க, நூலிழை அளவு  இடைவெளியில், திடீரென்று  

“அப்பா.... எங்க இருக்க...”  என்று சத்தம் கேட்டது..!  

அவன்  செல்ல மகளின் உற்சாக குரல் அது..!

தன் மகளின் குரலைக் கேட்டதும்...  அவ்வளவுதான்..!  

அவனுள் கிளர்ந்து எழுந்த உணர்வுள்  எல்லாம் தண்ணீர் பட்ட பால் போல அடங்கி விட,  அடுத்த நொடி இறுக்கி அணைத்திருந்த தன்னவளை விட்டு விலகி நின்று கொண்டான் ராசய்யா...!

ஆனால் அவன் இறுக்கி அணைத்திருந்தவளோ   அவள் எட்டி பார்த்த சொர்க்கத்தை விட்டு வெளிவர மனம் இல்லாமல், அப்படியே ஏகாந்த நிலையில் கிறங்கி நின்றாள்..!  

தன்னவனின் இதழ் தீண்டலுக்காக இதழ் தவித்து கார்த்திருந்தவள்....அப்படி எதுவும் நடக்காமல் போக, அதோடு திடீரென்று தன்னை இறுக்கி அணைத்திருந்த கரம் விலகி, அவளை விட்டு விலகவும் அதிர்ந்து போய் கண் திறக்க,  அப்பொழுதுதான் அவள் மகளின் குரல் அவளுக்கும் கேட்டது..!  

இருவரும் திரும்பி குரல் வந்த திசையை பார்க்க,  தூரத்தில் லாவகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள்  ஒரு குட்டி தேவதை..!  

அவளைப் பார்த்ததும், பூங்கொடி முகத்தை நொடித்தாள்.

“அதான பார்த்தேன்... எப்படித்தான் இந்த குட்டி பிசாசுக்கு மூக்கு வேக்குமோ?   அதுதான் என் புருஷன் கூட செத்த நேரம் ஜாலியா ரொமான்ஸ் பண்ண விடமாட்டேன்றா..!

இவளுக்கு பயந்துகிட்டே என் புருஷன் ராத்திரி என் பக்கத்திலேயே வர்றதில்லை.

பகல் நேரத்திலயாவது இந்தக் குட்டி கருவாச்சி இல்லாத நேரம் என் புருஷன் கூட ரொமான்ஸ் பண்ணலாம்னு இங்க வந்தா,  இங்கேயும் வந்திட்டா இந்த குட்டி குரங்கு...”  என்ற மனதுக்குள் தன் மகளை கருவிக் கொண்டாள் பூங்கொடி..! 

Share:

Related Posts:

0 comments:

Post a Comment

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *