அத்தியாயம்-17
இரண்டு நாட்கள் கடந்திருந்தது.
அன்று மாலை மூன்று மணி அளவில் விகர்த்தனன் முக்கியமான
மீட்டிங்கில் இருந்தான்.
அந்த நிறுவனத்திற்கு கிடைக்கப் போகும் பல மில்லியன் டாலர் வருவாய்
ஈட்டித்தரும் புதிய ப்ராஜெக்ட்டிற்கான மீட்டிங் அது.
அதை கைப்பற்ற பல சாப்ட்வேர் நிறுவனங்கள் தீவிரமாக முயன்றாலும் விகர்த்தனன்
இந்த ப்ராஜெக்ட்டை, தான் தான் கைப்பற்ற வேண்டும் என்பதில் படு தீவிரமாக இருந்தான்.
அதனாலேயே கடந்த சில தினங்களாக இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறான்.
விஷ்வாவையும் இதற்காக
கடந்த ஒரு வாரமாகவே விரட்டிக் கொண்டிருந்தான்.
இந்த மீட்டிங் ல் அவன் பேசவேண்டிய, சொல்லவேண்டிய பாயின்ட்ஸ்களை
எல்லாம் பக்காவாக தயார் செய்து வைத்திருந்தான்.
அந்த விசாலமான கான்ப்ரென்ஸ் ஹாலில், முன்னால் இருந்த ப்ரெக்டரில், விகர்த்தனன் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை
பட்டியலிட்டு காட்டிக் கொண்டிருந்தான்
எல்லாரும் கவனமாக கவனித்துக் கொண்டிருந்தனர். கூடவே அவனுடைய விளக்கத்தில் இருந்து சில
கேள்விகளும், சந்தேகங்களும்
எழுந்தன.
விகர்த்தனன் அதற்கு புள்ளி விவரங்களைக் காட்டி பொறுமையாக விளக்க, புதிய வாடிக்கையாளர் சார்பாக வந்திருந்த அந்த நிறுவனத்தின்
உரிமையாளருக்கும் மேலும் அந்த நிறுவனத்தில் பெரிய மற்றும் முக்கிய பொறுப்பில்
இருக்கும் இன்னும் சிலருக்கும் ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்தது.
அதோடு விகர்த்தனன் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ் இப்பொழுது வேகமாக
முன்னேறி வருவதும், விரைவிலயே
மென்பொருள் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் என்று முன்னரே
அலசி இருந்தனர்.
அதற்கெல்லாம் முக்கிய காரணம் விகர்த்தனன்...!
அவனுக்கு பல தொழில்கள் இருந்தாலும், இந்த மென்பொருள் நிறுவனத்தின் கிளையை அவனே பொறுப்பேற்று
நடத்துவது எல்லாரும் அறிந்ததே..!
அவனின் ஸ்டைலான, வாடிக்கையாளர்களை
கவரும் வகையில் பேசும் நுனிநாக்கு ஆங்கிலம்... அவனின் கம்பீரமான ஆளுமையான தோற்றமும்...
எதையும் புள்ளி விவரங்களுடன் முன்னால் வைக்கும் சாதுர்யம்
எல்லாம் கண்டு இன்னுமே அவன் மேல் நம்பிக்கை
வந்திருந்தது.
கிட்டத்தட்ட எல்லாம் ஓகே ஆகும் நிலையில், திடீரென்று விகர்த்தனன்
இடது கண் படபடவென்று துடித்தது. அதை சமாளித்து, வந்திருந்தவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்க, அவன் இதயம் வேகமாக துடித்தது.
எதுவோ நடக்ககூடாது நடக்கப் போவதைப்போல அவன் ஆழ் மனது மணி அடித்துக் கொண்டது. யாருக்கோ பெரும் ஆபத்து வரப்போவதைப்போல
உள்ளுணர்வு உணர்த்தியது.
ஒரு நொடி கண்ணை இறுக்க மூடி என்னவாக இருக்கும்? யாருக்கு ஆபத்து? என்று யோசித்தவனுக்கு
அடுத்த கணம் கர்ணிகா குட்டியின் முகம் கண் முன்னே வந்தது.
அவள் முகத்தை கண்டதும் மீண்டும் ஒரு கணம் அவன் நெஞ்சை அடைத்தது.
சுவாசத்துக்கு தடுமாறுபவனை போல மூச்சு விட மறந்து அப்படியே
சிலையாக ஒரு கணம் நின்று விட்டான்.
பின் நொடியில் சுதாரித்துக்கொண்டவன் ஏன் இப்படி இருக்கு என்று
அவசரமாக யோசிக்க, அப்பொழுதுதான் இன்று
காலையில் அந்த குட்டியை பார்க்காமல் வந்தது என்னவோ போல் இருந்தது.
அவன் இந்த ப்ராஜெக்ட்டிற்காக அயராது உழைத்தாலும் நடு நடுவே அந்த
குட்டியின் நினைவு வர தவறவில்லைதான்.
அத்தனை வேலைக்கு நடுவிலும் சென்று அவளை பார்த்துவிட்டு ஒரு
ஐந்து நிமிடமாவது அவளோடு செலவிட்டு வந்தால்தான் நிம்மதியாக இருக்கும்.
இன்று காலையில் அலுவலகத்துக்கு சீக்கிரம் வந்து விட்டதால் அவளை பார்க்க
முடியவில்லை.
இப்பொழுது திடீரென்று அவன் இதயம் அடித்துக்கொள்ளவும், நெஞ்சம் பதைக்கவும் அந்த குட்டிக்கு தான் ஆபத்தோ என்று அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
சில நொடிகள் முயன்று தன்னை நிலை படுத்த முயன்றாலும், அந்த குட்டியின் மலர்ந்த முகமே கண் முன்னே வந்து வந்து செல்ல, அதற்குமேல் அவன் உடைய ப்ரசென்டேசனை தொடரமுடியாமல் தடுமாறிப்போனான்.
அடுத்த கணம், பக்கவாட்டில் அமர்ந்து
இருந்த விஷ்வாவை கண் ஜாடை காட்டி அருகில் அழைத்தான்.
தன் பாஸ் ன் அழைப்பை கண்டு கொண்டவன், தன் இருக்கையில் இருந்து எழுந்து வேகமாக விகர்த்தனன் அருகில்
வந்தான் விஷ்வா.
முன்னால் அமர்ந்து இருந்தவர்களை பார்த்து,
“சாரி... ஜென்டில்மென்...எனக்கு ஒரு அவசர வேலை. மை அசிஸ்டன்ட் வில்
கண்டினியு தி ரிமைனிங் பார்ட்...” என்று சொல்லிவிட்டு, அவர்களின் பதிலுக்கு
கூட காத்திருக்காமல் அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அங்கிருந்தவர்கள் முகத்திலோ அதிருப்தி தெரிந்தது. விஷ்வாவும்
கூட அதிர்ந்துதான் போனான்.
இது எவ்வளவு முக்கியமான ப்ராஜெக்ட் என்பது அவனுக்கும் தெரியும்.
“அப்படி இருக்க, இந்த பாஸ் ஏன் இப்படி பாதியில் விட்டு சென்றார் ? ஏன் இப்படி பண்ணினார்? “
என்று அதிர்ச்சியில் அவசரமாக
யோசித்தவன், பின் தன் யோசனையை பின்னுக்குத் தள்ளி அந்த ப்ரெசென்டேசனில், விகர்த்தனன் விட்டு சென்றதை தொடர்ந்தான்.
*****
அந்த கான்ப்ரென்ஸ் அறையைவிட்டு வெளியில் வந்தவன், தன்னுடைய பிரத்தியேக
லிட் இருந்த திசையை நோக்கி விரைந்தான்.
அதே நேரம் டேகேர் முன்னால் ரம்யாவும் அங்கே வேலை செய்யும் ஆயாவும்
பதட்டத்துடன் யாரையோ தேடிக் கொண்டிருந்தார்கள்.
விகர்த்தனன் வேகமாக லிப்ட்டை விட்டு வெளிவந்து, ஓட்டமும் நடையுமாய் டேகேர்க்கு ஓடிச் சென்று அவர்கள் முன்னால்
நிற்க, எதிர்பாராமல் தங்கள் முன்னே வந்து நின்ற
விகர்த்தனனை கண்டு திருதிருவென்று முழித்தனர்
இருவரும்.
என்னாச்சு என்று கேட்டவாறு அவன் பார்வை டேகேர் உள்ளே சென்று அந்த குட்டி
தேவதையே தேடியது.
டேக்கேர் உள்ளே மற்ற குழந்தைகள் எல்லாம் உறங்கி கொண்டிருக்க, கர்ணி குட்டியை மட்டும் காணவில்லை..
“ரம்யா... நிகா எங்கே? “ என்று பதட்டத்துடன் கேட்க, அந்த இரண்டு பெண்களும்
அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் திருதிருவென்று முழித்து பார்த்தவாறு கையை பிசைந்தனர்
“கேட்கிறேன் இல்லை... நிகா
எங்கே?” என்று மீண்டும் கர்ஜிக்க, அதற்குமேல் சமாளிக்க முடியாமல்,
“சர்... அது வந்து... வந்து... “ என்று இழுக்க, அதில் இன்னுமாய்
பதட்டமானவன்,
“சொல்லித்தொலை ரம்யா... நிகா எங்கே? வேர் இஸ் மை ஏஞ்சல் ? “ என்று அவர்களை பார்த்து உறுத்து விழிக்க, ரம்யாவுக்கோ வார்த்தை எதுவும் வெளிவராமல் நாக்கு
ஒட்டிக்கொண்டது. எச்சிலைக்கூட்டி விழுங்கியவள்,
“சாரி சார்... இங்கேதான் தூங்கிட்டு இருந்தா.... எல்லாக் குழந்தைகளும் தூங்குற நேரமிது.
நாங்களும் இப்பொழுதுதான் படுக்க வைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தோம்.
திடீர்னு பார்த்தால்
கர்ணிக்குட்டியை மட்டும் காணவில்லை....அதுதான் எல்லா பக்கமும் தேடிக்கிட்டு இருக்கோம்..” என்று
மென்று முழுங்கி எப்படியோ விசயத்தை சொல்லி முடித்தாள் ரம்யா.
அதைக்கேட்டவன் அதிர்ந்து
வாட்? என்ன உளர்ற? “ என்று மீண்டும் கர்ஜிக்க, அதற்குள் தன்னை ஓரளவுக்கு சமாளித்து இருந்த ரம்யா
“ஆமா சர். கர்ணிகாவை காணோம். எல்லாரும் அவளைத்தான் தேடிக்கிட்டு
இருக்கோம்...” என்று சொல்லி முடிக்கும் முன்னே
“வாட் நான்சென்ஸ்? ஒரு சின்ன குழந்தையை பத்திரமா பாத்துக்க
முடியலை ? குழந்தையை காணோம்னு
எவ்வளவு அஜாக்கிரதையாக பதில் சொல்றீங்க?
இங்க வரும் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கத்தானே உங்களை அப்பாயின்ட்
செய்திருக்கிறேன்.
எப்படி கேர்லஸ்ஸாக இருக்கலாம்...
“ என்று லெப்ட் அன்ட் ரைட் வாங்கினான்.
அதே நேரம் அவன் பார்வை நாலா பக்கமும் தேடியது.
ரம்யாவும் மற்ற ஊழியர்களும் குற்ற உணர்வுடன் தலை குனிந்து
நின்றனர்.
விகர்த்தனன் பார்வையால் தேடியவாறு அவசரமாக யோசித்துக் கொண்டிருந்தான்
‘எங்கே போயிருப்பாள் ? கண்டிப்பாக அலுவலக வளாகத்தை விட்டு வெளியில் சென்றிருக்க
முடியாது... வாயிலில் செக்யூரிட்டி இருக்கிறார்கள். அப்படி என்றால் உள்ளேதான்
எங்கயோ இருக்க வேண்டும்?
எங்க போயிருப்பாள் ?” என்று மீண்டும்
அவசரமாக யோசித்து பார்த்தான்.
சில நாட்களில் காலையில் அவளை சந்திக்க வில்லை என்றால் மதியம் அவளை
பார்க்க வந்து விடுவான் விகர்த்தனன்.
அப்பொழுது அவளை
தூக்கிக் கொண்டு அருகில் இருக்கும் பூங்காவிற்கு சென்று விடுவான்.
அவளுடன் அமர்ந்து கதை பேசிக் கொஞ்ச நேரம் நேரத்தை செலவிட்டால்
தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கும்.
ஒருவேளை இன்று நான் அவளை பார்க்க வரவில்லை என்று என்னை தேடிக்கொண்டு அந்த பார்க்கிற்கு சென்று
விட்டாளா? என்று யோசித்தவன்
அடுத்த கணம் அந்த பார்க்கை நோக்கி ஓடினான்.
அவன் எதிர்பார்த்ததை
போலவே அந்த குட்டி, பார்க்கில் தான் இருந்தாள்.
அங்கு வேலை செய்பவர்கள்... வேலை நேரத்திலும் மனதை ரிலாக்சாக
வைத்துக்கொள்ள, நடை பயில , பசுமையும், அழகு செடிகளும் சூழ்ந்த நடைபாதை...
குனிந்து நிமிர்ந்து
எளிதாக உடற்பயிற்சி செய்ய சில உடற்பயிற்சி
உபகரணங்கள்...
மற்ற நெருங்கிய நண்பர்களுடன் வேலை சம்பந்தமில்லாத மற்ற விசயங்களையும்
அங்கே அமர்ந்து மனம் விட்டு பேசிக்கொண்டிருக்க என ஆங்காங்கே கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட பென்ச்கள் என்றதாய் அந்த பூங்காவை அமைத்து இருந்தான்
விகர்த்தனன்.
ஒவ்வொரு பென்ச்க்கு அருகிலும் அதை கவரும்படி அழகிய நிழல்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
சில நிழல் குடைகள் ப்ரைவசிக்காகவும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
சில நேரம் உள்ளே இருப்பவர்கள் வெளியில் தெரியாதவாறு அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது.
விகர்த்தனன் நிகாவை தூக்கி கொண்டு வரும் நாட்களில் மற்றவர்களின்
பார்வையில் படாமல் இருக்க, இது போன்ற ஒரு நிழல்குடையின் கீழ் தான் அமர்ந்து
கொள்வான்.
இப்பொழுது அந்த நிழல்குடைக்கு கீழ இருந்த ஒரு பென்சில் தான் அந்த
குட்டி அமர்ந்து இருந்தாள்.
காலையில் அவனைக் காணத்தால் மதியமும் அவன் அந்த குட்டியை பார்க்க
வராததால், அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவலில், மதியம் மற்ற குழந்தைகள் உறங்கியபிறகு , எப்படியோ மற்றவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு நைசாக நழுவி
இங்க வந்து விட்டாள் போல.
ஆனால் இங்கே வந்ததும் அந்த குட்டியின் பார்வை நாலா பக்கமும்
விகர்த்தனனை தேடி சுழன்றது.
அவன் இங்கயும் இல்லாமல் போக, முகம் வாடிவிட, தன் குட்டி கண்களை பெரிதாக விரித்து அங்கேயும் இங்கேயுமாய் பார்வையால் தேடியபடி திருதிருவென்று முழித்த படி
ஒரு பென்சில் அமர்ந்து இருந்தாள்.
சற்று தொலைவிலிருந்தே அந்த குட்டியை பார்த்துவிட்டான்
விகர்த்தனன்.
அப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது...
ஊப்ப்ப் என்று வாயில் ஊதி நிம்மதி பெருமூச்சு விட்டான்.
அவளைக் காணாமல் தவித்த தவிப்பு கொஞ்சம் மட்டுப்பட, அவளைக் கண்ட சந்தோசத்தில் நிகா........ என்று தன்னை மறந்து கத்தி வைத்திருந்தான்.
இதுவரை தன் தந்தையானவனை காணாமல் தவித்துக் கொண்டிருந்த கர்ணி குட்டி...நிகா என்ற அழைப்பில் திரும்பி குரல்
வந்த திசையை பார்த்தாள்.
அங்கே விகர்த்தனன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்ததை கண்டதும், அதுவரை அனிச்ச மலராய் வாடியிருந்த அவளின் முகம் செந்தாமரையாய் மலர,
வேகமாக அவள் அமர்ந்து இருந்த பெஞ்சில் இருந்து வழுக்கி கொண்டு கீழ இறங்கியவள்
அப்பா.... என்று அழைத்தவாறு இரு கையையும் நீட்டியபடி அவனை நோக்கி ஓடி வர
ஆரம்பித்தாள்.
அப்பொழுதுதான் அவன் தவறு புரிந்தது.
டேகேர் இருந்த இடத்திற்கும், அந்த பார்க்கிற்கும் நடுவில்
ஒரு பாதை இருந்தது.
பேஸ்மென்ட் ல் இருக்கும் கார் பார்க்கிங் ற்கு கார்கள் செல்லும் பாதை அது.
அலுவலகத்தில் உள்ளே நுழையும் கார்கள் மறுபக்கம் இருக்கும்
பார்க்கிங் ற்கு செல்ல, அந்த அலுவலகத்தை
சுற்றிக்கொண்டு இந்த பாதை வழியாக பேஸ்மென்ட் உள்ளே செல்ல வேண்டும்.
பொதுவாக இந்த பார்க் க்கு பெரியவர்கள் மட்டுமே வந்து செல்வதால்
அந்த பாதை திறந்த வெளியாக இருக்கும். அதன் குறுக்கே நடந்து அந்த பாதையை
கடப்பார்கள்.
விகர்த்தனனை பார்த்த சந்தோசத்தில், அந்த குட்டி பார்க்கை
தாண்டி அந்த வழியாக குறுக்கே ஓடி வர, அப்பொழுது பேஸ்மென்ட்ல் உள்ள பார்க்கிங் ஐ நோக்கி வந்த கார் அந்த குட்டியை கவனிக்கவில்லை.
திடீரென்று பார்க்கில் இருந்தவள் பாதையின் குறுக்கே ஓடிவர, அதை கவனித்த அந்த காரின் உரிமையாளன் அவசரமாக ப்ரேக்கை அழுத்தினான்.
ஆனாலும் அதன் வேகத்தை கட்டுபடுத்த முடியவில்லை
எவ்வளவு முயன்றும் தடுக்க முடியாமல், கார் அந்த குட்டியின் மீது மோதி விட, அப்பா என்ற அலறலுடன் தூக்கி விசிறப்பட்டாள்
நிகா...
அதைக்கண்ட விகர்த்தனன் அப்படியே அதிரிச்சியில் உறைந்து
நின்றான்.
அவ்வளவு தான்.... அவன் உலகமே ஸ்தம்பித்து , எதுவும் இயங்காமல் நின்று விட்டதை போல ப்ரீஸ் ஆகி போனான்.
அவன் இதயம் துடிக்க மறந்தது. மூளை வேலை நிறுத்தம் செய்து
விட்டது. அனைத்து புலன்களும் இயங்க மறந்து சிலையாகி போனான்.
ஒரு கணம் தான் விகர்த்தனன் ஸ்தம்பித்து நின்றது.
அடுத்த கணம் தன்னை சுதாரித்துக்கொண்டு நிகா என்று அலறியவன் பாய்ந்து
சென்றான் அந்த குட்டியை நோக்கி..!
அவனின் அந்த அலறல் அந்த பகுதி முழுவதுமே எதிரொலித்தது..!
*****
பீப்...பீப்...பீப்...என்று அங்கிருந்த கருவியின் ஓசை மட்டும்தான்
அந்த அறையில் கேட்டுக்கொண்டிருந்தது
காலிலும், தலையிலும் பெரிய கட்டும், உடலில் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்த
ப்ளாஸ்டர்களுடன் வாடிய மலராக துவண்டு கிடந்தாள் கர்ணிகா குட்டி.
அவளின் சிறிய குட்டி கையில் ட்ரிப்ஸ் இறங்கி கொண்டிருக்க, அவள் கையை அசைக்க விட்டு
விடாமல் பிடித்தபடி படுக்கையை ஒட்டிய இருக்கையில் அமர்ந்திருந்தான் விகர்த்தனன்.
அவனின் மற்றொரு கையோ அந்த
குட்டியின் தலையை வாஞ்சையுடன் வருடி கொடுத்துக் கொண்டிருந்தது.
அவன் முகத்திலோ சொல்லொன்னாத துயரம்...
கண்களிலோ இரண்டு நாட்கள் உறங்காத தவிப்பு... இரண்டு நாள் சேவ் பண்ணாத தாடி… ட்ரிம் பண்ணாத மீசை... தளர்ந்த உடல்.. என்று இந்த இரண்டு
நாட்களிலேயே பத்து வயது கூடியவனாக காட்டியது.
ரொம்பவுமே தளர்ந்து போயிருந்தான் விகர்த்தனன்.
இரண்டு நாட்கள் முன்பு, அவனைத்தேடி ஆவலுடன் சுழன்ற அந்த குட்டியின்
விழிகள் இன்று அமைதியாக மூடிக்கிடக்க,
அவனைக் கண்டதும் அப்பா என்று அழைத்து தாவி ஓடிவந்த அவளின்
பிஞ்சு கால்கள் இன்று அசைவில்லாமல் கிடக்க,
எபொழுதும் ஒரு இடத்தில் நிக்காமல் துருதுருவென்று துள்ளிக்குதிக்கும் மான்குட்டி இன்று ஓய்ந்து போய் நினைவில்லாமல்
கிடப்பதைக் காண அவனுக்கு தாங்க முடியவில்லை.
அவனையும் மீறி அவன் கண்கள் கண்ணீரை சொரிந்தது.
இதுவரை எதற்கும் கலங்காமல், வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொண்டு வாழ்ந்து வருபவன்.
அவனை உயிராய் மதித்த அவன் பெற்றோர்கள்... அவனை அனாதையாய் விட்டு
சென்ற பொழுதும், இடையில் மனைவியாய் சொந்தம்
கொண்டாடி வந்தவள் பாதியில் பிரிந்து சென்ற பொழுதும் கூட இந்த அளவுக்கு அவன்
கலங்கியதில்லை.
ஜஸ்ட் லைக் தட் என்று தோளை குலுக்கிவிட்டு அடுத்து என்ன என்று
நகர்ந்து சென்றவன்...தன்னையும் தன்னை
சுற்றியும் எப்பொழுதும் கவலை என்ற ஒன்றை அன்ட விடாமல் எப்பொழுதும்
உற்சாகத்துடன் வலம் வருபவன்...!
இன்று கலங்கிப்போய், தளர்ந்து போய்
அமர்ந்து இருந்தான்..!
தொழிலில் பல கோடி ரூபாய் நஷ்டம் வந்த பொழுது கூட ஒரு நொடி கூட
கலங்கி அமர்ந்ததில்லை. கண்ணீர் விட்டு தன் வேதனையை காட்டியதில்லை.
அப்படிப்பட்ட இறுகிய இதயம் படைத்தவனையும் இலக வைத்துவிட்டாள்... கல் நெஞ்சையும் கரைய
வைத்து அவளுக்காக கண்ணீர் சொரிய வைத்துவிட்டாள் அந்த குட்டி தேவதை...!
“சை... எல்லாம்
என்னால் தான். சுரபி முன்பே சொன்னமாதிரி
அவளை நான் டேகேரில் இருந்து வெளியில் அழைத்துச்
சென்று இருக்கக்கூடாது. அதனால் தானே
என்னைத் தேடிக் கொண்டு தனியாக வந்து
விட்டாள்.
அப்படி வந்ததால் தானே அவளுக்கு இப்படி ஆகி விட்டது...எல்லாம்
என்னால் தான்...சாரி டா ப்ரின்சஸ்...என்னை மன்னிச்சிடு..” என்று லட்சத்து ஒன்றாவது
முறையாக தன்னைத்தானே குற்றம் சாட்டிக்கொண்டான் விகர்த்தனன்.
குற்ற உணர்வுடன் கண்களை இறுக்க மூடிக்கொண்டு, அவளின் தலையை ஆதூரமாக வருடிக்
கொடுத்தான் விகர்த்தனன்
சற்று தள்ளி மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்த சுரபியின் முகத்திலும்
வேதனை மண்டிக்கிடந்தது.
தொலைந்து விட்ட தன் வாழ்க்கையின் ஒரே ஆதாரமாக இருந்த தன் மகளை
அப்படி அசைவற்று பொம்மை போல படுத்துக்கிடப்பதைக் காண அவளுக்குமே தாங்க முடியவில்லை தான்.
வேதனையில் அவள் நெஞ்சம் விம்மியது..!
அதே நேரம் அவள் படும் துயரத்தை விட விகர்த்தனன் படும் துயரத்தை காண அவளுக்கு
தாளமுடியவில்லை.
“அவளை பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்தவள்... நான் பதறுவதில் அர்த்தம் உண்டு...ஆனால் எந்த
சம்பந்தமும் இல்லாமல் இவன் இந்த அளவுக்கு பதறுகிறானே? ஏன்?...”
அன்று கூட அவள் அடிபட்டதும் நிகா என்று அவன் அலறிய அலறல்
அலுவலகம் முழுவதுமே எதிரொலிக்க, அனைவருமே ஒரு நொடி
ஸ்தம்பித்து போயினர்.
எல்லாருமே ஓடிவந்து அவர்கள் இருந்த தளத்தில் இருந்து கீழ எட்டி
பார்த்தனர்.
சுரபியும் அவன் குரலைக் கேட்டு பதறி தவித்து கீழ ஓடி வர, அதற்குள் தூக்கி விசிறப்பட்டு கிடந்தவளை அள்ளி தன் மார்போடு
அணைத்துக்கொண்டு அவன் கதறிய கதறல் இன்னுமே கண் முன்னே நின்றது.
ஷ்யாம் இருந்திருந்தால் கூட இந்த அளவுக்கு பதறி இருந்திருக்க
மாட்டான்தான்..! அவ்வளவு ஏன்? அவளுக்குமே கூட அது
சிறிய விபத்து... தன் மகள் எழுந்து விடுவாள் என்றதில் பெரிதாக பாதிப்பு இல்லைதான்.
அவள் மீது மோதியவன் காரிலயே அவளை அள்ளி போட்டுக்கொண்டு
மருத்துவமனைக்கு விரைந்ததும், அடுத்த ஐந்தாவது
நிமிடத்தில் அனைத்து எக்ஸ்பர்ட்ஸ் டாக்டர்களையும் வரவழைத்து அவளுக்கு சிகிச்சை
அளிக்க ஏற்பாடு செய்ததும்....
தன் மகளின் மீதான அவனின் வெறித்தனமான பாசத்தை சொல்லாமல்
சொல்லியது..!
ஆனால்... ஏன் ? இந்த கேள்வி அவள் மட்டும் அல்ல.. அந்த அலுவலகத்தில் அனைவர் மனதிலும் எழுந்துள்ள கேள்விதான்
அது...!
அதற்குள் அவனையும், சுரபியையும் பற்றி
ஏதேதோ கதைகள் உலா வர ஆரம்பித்து விட்டன.
ஆனால் அவன் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.
அவன் எண்ணம், நினைவுகள் எல்லாம்
இந்த குட்டி தேவதை பிழைத்து எழுந்து வர வேண்டும்... அப்பா என்று அழைத்து அவனை
கட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான்...!
அதைத்தவிர வேற சிந்தனை எதுவும் அற்றவனாய் அந்த குட்டியின் தலையை
வருடியவாறு அமர்ந்து இருந்தான் விகர்த்தனன்.
கடந்த இரண்டு நாட்களாக அலுவலக வேலைகளை எல்லாம் மறந்துபோய்... அந்த குட்டி கண் விழிப்பதற்காக அவளே உலகமாய்
அவள் அருகிலேயே காத்து கிடக்கிறான்.
சுரபி எவ்வளவோ சொல்லி பார்த்துவிட்டாள்...!
நான் பார்த்துக்கொள்கிறேன்..நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க
என்று..!
ஆனால் கேட்கவில்லை அவன்..!
அவனின் கையொப்பம் தேவையாக இருந்த முக்கியமான கோப்புகளை விஷ்வா
மருத்துவமனைக்கு கொண்டு வந்து நீட்ட, அதை படித்து கூட பார்க்காமல் விஷ்வா நீட்டிய இடத்தில்
கையெழுத்து இட்டான்.
விஷ்வாவுக்கோ ஆச்சர்யம்..மற்றும் அதிர்ச்சி..!
அவன் பார்த்த விகர்த்தனன்...அவனுடைய பாஸ் இவன் அல்லவே..!
யோசனையுடன் விகர்த்தனனை பார்த்தவாறு சென்று விடுவான்.
சுரபிக்கும் அவன் நிலை புரிந்தது. அவனை அப்படிக்கான அவளுக்குமே கஷ்டமாக இருந்தது.
ஆனால் இதெல்லாம் ஏன்? ஏன் இந்த அளவுக்கு
அந்த குட்டியின் மீது பாசத்தை கொட்டுகிறான்? அவளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? என்ற விடை தெரியாத பல கேள்விகள் அவள் உள்ளே சுழன்று
கொண்டிருந்தன.
****
அதேநேரம் அந்த சொகுசு அறையின் கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே வந்தார் மருத்துவர்.
அவருக்கு உதவியாய் அவரின் உதவியாளர்..மற்றொரு நர்ஸ் ஒருவர்.
அவரைக் கண்டதும் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று டாக்டரை பார்த்து வரவழைத்து புன்னகைத்தான்
விகர்த்தனன்.
அவரும் புன்னகைத்தவாறே அவன் அருகில் வந்தவர்
“ஹவ் ஆர் யூ மிஸ்டர் விகர்த்தனன்? குட்டி எப்படி இருக்கா? “ என்று விசாரித்தவாறு
அருகில் வந்து அந்த குட்டியை
பரிசோதித்தார்.
விகர்த்தனனும் அவருக்கு பதில் அளித்தபடி, எதிர்பார்ப்புடன் அவரை
பார்த்துக் கொண்டிருக்க தன்னுடைய பரிசோதனையை முடித்தவர், விகர்த்தனன் பக்கம் திரும்ப, அதற்காக காத்துக்கொண்டிருந்தவன்,
“டாக்டர்....என் ப்ரின்சஸ் எப்ப கண் முழிப்பா... எல்லா
ட்ரீட்மெண்ட்ஸ் முடிஞ்சு இரண்டு நாள் ஆகியும் அவளிடம் எந்த முன்னேற்றமும்
இல்லையே..
எனக்கு ரொம்ப பயமா இருக்கு… எப்ப அவ கண் முழிப்பா? நான் வேணா பாரின் கூட்டிகிட்டு போய்டவா? “ என்று படபடத்தான் விகர்த்தனன்.
அவன் முகத்திலோ அப்படி ஒரு வேதனை..! அதைக்கண்ட மருத்துவரின்
பார்வை அருகில் நின்றிருந்த சுரபியின் மீது படிந்தது.
அவளும் வேதனையுடன், டாக்டர் என்ன
சொல்லப்போறாரோ என்ற அதிர்ச்சியுமாய் அவரின் முகம் பார்த்திருந்தாள்.
ஆனாலும் விகர்த்தனன் அளவுக்கு அவள் பதறி தவிக்கவில்லை. தன்னை
கட்டுபடுத்தி நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதைக் கண்டுதான் அந்த மருத்துவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
கூடவே விகர்த்தனன் அந்த குழந்தையின் மீது வைத்திருக்கும் பாசமும் புரிந்தது.
தாயை விட தவிக்கும் தந்தையை பார்த்த ஆச்சர்யம் அவர்
முகத்தில்..!
“நத்திங் டு வொர்ரி மிஸ்டர் விகர்த்தனன். உங்க பொண்ணு அபாய கட்டத்தை தான்டிட்டா...
இனிமேல் எந்த பயமும் இல்லை. சீக்கிரம் சரியாயிடுவா...கவலைப்படாதிங்க...”
என்று அவன் முதுகை ஆதரவாக தட்டிக்கொடுத்தவர் அவனை வெளியில் வரும்படி அவனுக்கு ஜாடை
காட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறிச் சென்றார்.
அவர் ஜாடையை புரிந்து கொண்டவன், சுரபியின் பக்கம் திரும்பி,
“ஃபைவ் மினிட்ஸ் சுரபி. நான் வந்திடறேன். நீ நிகா பக்கத்திலயே
இரு...” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறிச் சென்றான்.
*****
அருகில் இருந்த அந்த மருத்துவரின் அறைக்குள்
நுழைந்தவன், அவர் எதிரில் சென்று அமர்ந்துகொண்டு, அவரை பதற்றத்துடன் பார்த்தவன்
“சொல்லுங்க டாக்டர்... என்கிட்ட என்ன தனியா சொல்லனும்? நிகாவுக்கு உண்மையிலயே என்னதான் ஆனது? “ என்று பதற்றத்துடன்
கேட்டான்.
அவனை மெச்சுதலுடன் பார்த்தவர்,
“நான் முன்பு சொன்னதுதான் மிஸ்டர் விகர்த்தனன். நத்திங் டு வொர்ரி.
உங்க பேபியை பற்றி கொஞ்சம் பேசணும்.
உங்க வைப் பக்கத்துல இருந்ததால என்னால வெளிப்படையா பேச முடியல.
அதனால் தான் உங்களை தனியாக அழைத்தேன்...” என்று பீடிகையுடன் ஆரம்பிக்க, விகர்த்தனனுக்கோ பிபி எகிறியது.
“என்னை தனியாக அழைத்து சொல்ல வேண்டிய விஷயம் என்றால் ? விஷயம் பெரிதோ? நிகாவுக்கோ
உண்மையிலயே பெரிதாக ஏதும் ஆகிவிட்டதோ .? “ என்று அவன் மனம்
அவசரமாக பலதையும் எண்ணி கலங்கியது.
ஆனாலும் தன்னை மறைத்துக்கொண்டவன்
“ஹ்ம்ம் சொல்லுங்க டாக்டர்... என்ன பேசணும். எதுவாக இருந்தாலும்
ஓபனா சொல்லுங்க...” என்று மீண்டும் தவிப்புடன் சொல்ல,
“நீங்க பதற்றமாகும் அளவுக்கு ஒன்னுமில்லை மிஸ்டர் விகர்த்தனன். பொதுவாக
சில விஷயங்கள் பெண்களிடம் நேரடியாக கூற முடியாது. அவர்கள் சீக்கிரம் எமோசனல்
ஆகிடுவாங்க.
அங்க அறைக்கு உள்ள உங்க வைப் இருந்தாங்க. அதனால் தான் அவர்கள் முன்னால் எதுவும்
சொல்லாமல் , உங்களிடம் சொல்லலாம்
என்று அழைத்தேன்...” என்று மீண்டும் பீடிகையுடன் ஆரம்பிக்க,
விகர்த்தனனோ தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தான்.
அவனுக்கு இருந்த பதற்றத்தில், அவர் சுரபியை அவனுடைய
மனைவியாக எண்ணிக் கொண்டிருக்கிறார்... அதை திருத்த வேண்டும் என்ற எண்ணம் கூட
எதுவும் தோன்றாமல் அவர் நிகாவை பற்றி என்ன சொல்லப் போகிறாரோ என்று அதிர்ச்சியோடு
அவரை பார்த்திருந்தான்.
அவனை மீண்டும் டென்ஸன் படுத்தாமல் ஒரு மூச்சை இழுத்து விட்டு
தொடர்ந்தார்.
“ஒன்னும் பெரியதாக இல்லை மிஸ்டர் விகர்த்தனன். காலில் நன்றாக அடிபட்டு
இருப்பதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு ஒரு கால் நடப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்
அது சரியாவதற்கு இன்னும் ஒரு மாதமாவது ஆகும். அதுவரைக்கும்
கொஞ்சம் பத்திரமாக பார்த்துக்கங்க
அதோடு தலையில் பட்ட அடியினால் மூளையின் கொஞ்சம் ரத்தம் கசிந்து இருக்கிறது.
அதையும் சுத்தப் படுத்தி விட்டோம். பயப்படும்படி எதுவும் இல்லைதான்.
குழந்தைக்கு திடீர் என்று ஏற்பட்ட அதிர்ச்சியினால் தான் அவள்
நினைவு திரும்பாமல் இருக்கிறாள். நன்றாக ஓய்வு எடுத்தால் சீக்கிரம் விழிப்பு வந்து
விடும்.
ஆனாலும் உங்க பொண்ணு கண் விழித்து எல்லோரையும் அடையாளம் கண்டு கொண்டால்தான் எதையும்
உறுதியாக சொல்ல முடியும்...” என்று
முடிக்க, அதைக்கேட்டு இன்னும் பதட்டமானவன்,
“ஐயோ டாக்டர்... அப்படியெல்லாம் சொல்லாதீங்க...அவளை கண்டிப்பாக கண்
விழித்து, எழுந்து நடக்க
வைக்க வேண்டும். நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்... எவ்வளவு பணம் செல்வானாலும்
பரவாயில்லை.. என் ப்ரின்சஸ் எனக்கு வேண்டும்.
பழையபடி அவள் எனக்கு திரும்ப வேண்டும். என்னை அப்பா என்று
அழைக்க வேண்டும். என்னை ஓடி வந்து கட்டிக்க வேண்டும்...” என்றான் தழுதழுத்தவாறு.
“கண்டிப்பாக மிஸ்டர் விகர்த்தனன். அதுக்குத்தான் நாங்களும்
இவ்வளவு தூரம் போராடி அவளை காப்பாற்றி விட்டோம். அவள் அபாய கட்டத்தை தாண்டி
விட்டாள்.
மூளையில் அடிபட்டதாலும், நிறைய ப்ளட் லாஸ் ஆகியிருந்ததாலும் தான் அவளுக்கு இன்னும்
விழிப்பு வரவில்லை.
அதோடு அந்த குட்டியின் ப்ளட் க்ரூப் வெரி ரேர்... நல்ல வேளை... நீங்களே
உடனே உங்க ப்ளட்டை கொடுத்ததால் இன்னும்
சீக்கிரம் எங்களால புரசிஜரை பண்ண முடிஞ்சது...” என்று புன்னகைத்தார் அந்த மருத்துவர்.
“எஸ் டாக்டர்... எனக்கும் ஆச்சரியம் தான். என்னுடைய ப்ளட் க்ரூப்
எப்படி நிகாவுக்கு செட் ஆச்சுன்னு ஆச்சரியமாகத்தான் இருந்தது...” என்றான் கொஞ்சம் இயல்புக்கி திரும்பி.
“இதில் என்ன ஆச்சரியம் மிஸ்டர் விகர்த்தனன். உங்க பேபிக்கு உங்களோட ப்ளட் க்ரூப் செட் ஆகறதுல என்ன ஆச்சர்யம்
இருக்கு?” என்று அவனை யோசனையுடன்
பார்க்க,
“இல்ல டாக்டர்... நிகா என் பேபி இல்லை...” என்றான் முகத்தில் வேதனையுடன்.
அதை கேட்டு அதிர்ந்த
டாக்டர்,
“வாட்? என்ன சொல்றிங்க
மிஸ்டர் விகர்த்தனன். அந்த குட்டி உங்க பேபி இல்லையா? அந்த குட்டிக்காக நீங்க
பதறி, தவித்து... அப்படி பீல் பண்ணினிங்களே..!
அதோடு அந்த குட்டிக்கான புரசிஜர் பார்ம் எல்லாம் அப்பானுதானே சைன் பண்ணி இருக்கீங்க...” என்று சிறு புருவ முடிச்சுடன் விகர்த்தனனை நோக்கினார்
அந்த மருத்துவர்.
“அது வந்து டாக்டர்... அப்போதைக்கு இருந்த டென்சனில் என்ன ஃபில்
பண்றேன் என்று தெரியாமல் கடகடன்னு சைன் பண்ணிட்டேன் டாக்டர்.
அதோடு அவளுடைய அப்பா
ஜாடையில் நான் கொஞ்சம் இருப்பதால், அவள் என்னை அப்பா என்று தான் அழைப்பாள்.
எனக்கும் அவளை பார்த்ததும் ஒரு இனம் புரியாத பரவசம். அது ஏன்? என்னன்னு சொல்ல தெரியல. அவளை பார்க்கிறப்ப எல்லாம் அப்படி ஒரு
பீல்....” என்று இலகிய நிலையில் சிறு கர்வத்தோடு
புன்னகைத்தான்.
அதைக் கேட்ட அந்த மருத்துவரோ மீண்டும் யோசனையானார்.
“ஆர் யூ ஷ்யூர் மிஸ்டர் விகர்த்தனன்? அப்போ உங்களுக்கும்
அந்த பேபி க்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? “ என்றார் கேள்வியாக
“எஸ் டாக்டர்...அவள் என்னுடைய எம்ப்ளாயி உடைய மகள்....” என்றான் உண்மையான வேதனையுடன்.
இப்படிப்பட்ட தேவதை தன் மகளாக இல்லையே என்ற
வருத்தம்...ஆதங்கம்...அவன் முகத்தில் வந்து போனது.
“ஒருவேளை உங்களுடைய டிஸ்டன்ஸ் ரிலேசன்... அந்த மாதிரி ஏதாவது ரிலேசன்ஷிப் உண்டா...?” என்று இன்னுமாய் யோசனையோடு கேட்க, அவனோ இல்லை என்று
மறுத்தான்.
“ஆக்சுவலி சுரபி... அதாவது நிகாவுடை அம்மா சென்னையை சேர்ந்தவள்.
வேலைக்காக பெங்களூர் வந்திருக்காங்க. அவ
ஹஸ்பன்ட் இப்போ பாரின்ல இருக்கார்... ஏன்
டாக்டர் கேட்கறீங்க? “ என்று யோசனையோடு
விகர்த்தனன் அந்த மருத்துவரை பார்க்க
“ஒரு சின்ன டவுட்... ஆக்சுவலா உங்க பேபியின் ட்ரீட்மென்ட்க்காக ப்ளட்
குரூப் எல்லாம் மேட்ச் பண்ணி பார்த்தேன். அப்பொழுது எதேச்சையாக உங்களுடைய டி.என்.ஏ
வையும் மேட்ச் பண்ணி பார்த்தேன்.
உங்களுடைய ரெண்டு பேரோட டி.என்.ஏ 100% மேட்ச் ஆகுது. ஒருவேளை
முந்தையை தலைமுறை....பரம்பரை வழியாக வந்தால்
கூட ஆவரேஜ் ஒரு 60% அப்படித்தான்
மேட்ச் ஆகும். ஆனால் உங்களுடையது 100% மேட்ச் ஆகுது
எனக்கு என்னவோ அந்த பேபி உங்களுடைய பேபியா தான் இருக்கும். உங்க ரெண்டு பேருக்குமான சாயல் கூட பாருங்க.
உங்களை அப்படியே உரிச்சு வச்சிருக்கா அந்த குட்டி.
அவளுடைய மேனரிஷம் கூட உங்களைப் போலவே இருக்கும். உங்க ரெண்டு
பேருக்கும் நிறைய சிமிலரிடீஸ்.
கன்ஃபார்மா சொல்றேன். அவள்... உங்கள் குழந்தை தான்...” என்று டாக்டர் உறுதியாக சொல்ல, அதைக் கேட்டு பலமாக அதிர்ந்து
போனான் விகர்த்தனன்.! .
0 comments:
Post a Comment