அத்தியாயம்-16
மறுநாள் காலை உற்சாகத்துடன் கண் விழித்தான் விகர்த்தனன்.
நேற்று அரை நாள் பொழுதை அந்த குட்டி தேவதையுடன் கழித்த இனிய
நினைவுகள் இன்னுமே அவன் மனதில் குவிந்து கிடந்தது.
அவளின் அப்பா… என்ற விழிப்பும், அவனிடம் மழலையில்
கொஞ்சி பேசிய பேச்சுக்கள் எல்லாம் இன்னுமே அவன் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
இந்த வாழ்க்கைதான் எத்தனை புதிரானது..!
கொஞ்ச நாள் முன்புவரை தனிமையின் கோரப்பிடியில் சிக்கி
தவித்தவன்... காலையில் எழுவதற்கே எரிச்சல்
பட்டு கிடந்தவன்...வாழ்க்கையே வறண்ட பாலைவனமாய்... எதற்காக வாழ்கிறோம் என்று
இலக்கின்றி உழன்றவன்...!
இப்பொழுதோ அவன்
வாழ்க்கை வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் பசுஞ்சோலையாக மாறி இருந்தது.
வெளிறி வெற்றிடமாய் இருந்த வாழ்க்கையில் வானவில்லாய் வண்ணம்
சேர்த்து அவன் வாழ்க்கையே வண்ணமயமாக மாறிப்போனது போல இருந்தது.
இப்பொழுதெல்லாம் அவன் நடையில் ஒரு துள்ளல்...உடலில் உற்சாகம்... முகத்தில் குறுஞ்சிரிப்பு... வாழ்க்கையே
அழகானதாய் தோன்றியது.
ஐயோ விடிந்து விட்டதே என்று அலறிய காலம் மாறி இப்பொழுதெல்லாம்
எப்பொழுது விடியும் என்று காத்திருக்கும் படி ஆகிவிட்டது.
காலம்தான் எவ்வளவு
அற்புதமானது...! அவன் வாழ்க்கையும் இப்படி மாறும் என்று அவன் கனவிலும்
எண்ணியிருக்கவில்லை.
எல்லாம் அவளால்... அந்த குட்டி தேவதையால்... அவன் வாழ்வில் வராமல் வந்த தேவதையினால்..
“ஆல் பிகாஸ் ஆப் மை ஸ்வீட் லிட்டில் ஏஞ்சல்...” என்று மெல்ல முனுமுனுத்தவன், அருகிலிருந்த தலையணையை
இறுக்கி கட்டிக்கொண்டு அதற்கு முத்த மழை
பொழிந்தான்.
அந்த குட்டியின் பட்டு
கன்னத்தில் முத்தமிட்ட சுகத்தை போல
இல்லைதான். ஆனாலும் ஒரு அற்ப சந்தோசம்..!
அவனை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது..!
“எப்படி ஒரு குட்டி என்னை இப்படி மாற்றிவிட்டாள்? என் மனம் ஏன் அவளிடமே தஞ்சமடைகிறது? எப்பொழுதும் அவள் உடனே
பொழுதை கழிக்க வேண்டும் என்று ஏன்
தவிக்கிறது?
நிறைய முறை தனக்குள்ளே கேட்டுவிட்டான்.
ஏன் ? அந்த குட்டி தேவதையை
பெற்றவளும் இதையேதான் அவனிடம் அடிக்கடி கேட்டு வைக்கிறாள். ஆனால் அனைத்துக்கும் விடை தான் தெரியவில்லை.
“இட்ஸ் அ பீலிங்... அதற்கான காரணமும் விளக்கமும் தர முடியாது. உணரத்தான்
முடியும்.
காதல் என்பது எப்படி ஒரு உணர்வு...மயக்கம்... போதையோ அதே தான்
இந்த பாசமும். அதை விளக்கவும் முடியாது... விவரிக்கவும் முடியாது...
தனக்குத்தானே விளக்கம் சொல்லிக் கொண்டவன், துள்ளலுடன் எழுந்து
குளியலறைக்குச் சென்றான்.
முழு மொத்த உற்சாகத்துடன் கிளம்பி தன் அலுவலகத்திற்கு சென்றான்.
*****
வழக்கமாக அந்த குட்டியை சந்திக்கும் இடம் வந்ததும் அவன் பார்வை நிகா குட்டியை தேட, அவள் அங்கு இல்லை.
சிறிது நேரம் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காத்திருக்க, நீண்ட நேரமாகியும்
சுரபியையும், அந்த குட்டியையும் காணவில்லை.
ஒருவேளை முன்பே போய்விட்டாளோ என்று எண்ணியவன், முத்துவிடம் காரை ஸ்டார்ட் பண்ண சொல்லி, அலுவலகத்திற்கு வந்தவன், கால்கள் நேராக சென்று
நின்றது டேக்கேரில் தான்.
அவன் கண்கள் அவசரமாக அந்த குட்டியைத் தேட, அவளோ இன்னும் வந்திருக்கவில்லை.
டேக்கேர் ஐ விட்டு வெளிவந்தவன் காரிடரில் நடந்தவாறு, சிறு புருவ சுளிப்புடன், தன் அலைபேசியை எடுத்து
அவசரமாக சுரபிக்கு அழைக்க, அதுவோ முழுவதுமாக அடித்து நின்று போனது.
அவன் அழைப்பை ஏற்கவில்லை அவள்.
“என்ன ஆச்சு? “ என்று கொஞ்சம் பதற்றத்துடன் மீண்டும் அழைக்க, இந்த முறை அவன் அழைப்பை யாரோ ஏற்றார்கள்
ஹலோ என்ற ஆண் குரல் கேட்கவும், ஒரு நொடி திடுக்கிட்டு போனான் விகர்த்தனன்.
“சுரபியின் போனில் எப்படி ஆண்குரல்? ஒரு வேளை அவள் கணவனாக
இருக்குமோ? “ இன்று எண்ணுகையிலேயே அவன் இதயத்தில் சுருக்கென்று வலித்தது.
எதையோ இழந்து விட்டதைப் போன்ற வலி வந்து போனது.
ஆனாலும் தன்னை சமாளித்திக் கொண்டவன்,
“சுரபி இருக்காங்களா? “ என்று
தயக்கத்துடன் கேட்க
“இருக்காங்க... இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க...” என்று மறுமுனையில்
பதில் கிடைக்க, அதைக்கேட்டு
திடுக்கிட்டு அதிர்ந்து போனான் விகர்த்தனன்.
“வாட்? ஹாஸ்பிட்டலா? எந்த ஹாஸ்பிட்டல்? என்னாச்சு? “ என்று பதற்றத்துடன் விசாரிக்க,
“இங்க பக்கத்துலதான் சர்.. நாராயணா ஹாஸ்பிட்டல்...” என்று சொல்லி முடிக்கும் முன்னே
மறுமுனையில் அழைப்பு அணைக்க பட்டிருந்தது.
அதில் திடுக்கிட்டவன் பதற்றத்துடன் மீண்டும் முயற்சிக்க, அலைபேசி அணைந்து போய் ஸ்விட்ச் ஆஃப் இன்று வந்தது.
திரும்பவும் முயற்சிக்க, திரும்பவும் அதே பதில்தான் வந்தது.
யோசனையுடன் தன் அறைக்கு வந்தவனுக்கு எந்த வேலையும் செய்ய முடியவில்லை.
“யாருக்கு உடம்பு சரியில்லையாம்? என் ப்ரின்சஸ்க்கா? இல்லை சுரபிக்கா? என்னவாக இருக்கும்?...”
சற்று நேரம் தனக்குள்ளே போராடியவன் அடுத்த கணம் தன்னுடைய வேலையெல்லாம்
ஒதுக்கி வைத்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான் அந்த மருத்துவமனையை
நோக்கி
*****
சீறிப் பாய்ந்து கொண்டிருந்த காரில் படுடென்ஷனாக
இருந்தான் விகர்த்தனன்.
ஸ்டியரிங் ஐ பிடித்திருந்த அவன் கரங்கள் லேசாக நடுங்கின!
என் ப்ரினசஸ்க்கு…என் தேவதைக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று அவன் மனம்
அடித்துக்கொண்டது.
அடுத்த பத்தாவது நிமிடத்தில்
கார் மருத்துவமனையை அடைந்து இருக்க, போர்டிகோவிலயே காரை
நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குள் ஓடிச் சென்றான்.
ரிசப்ஷனில் சுரபியை பற்றி விசாரிக்க, அவர்களும் ஐ.சி.யூவில்
இருக்கிறார்கள் என்று சொல்லி ஐ.சி. யு இருந்த திசையை கைகாட்ட இப்பொழுது அவன்
பதட்டம் இன்னும் அதிகமானது.
“என்னவாயிற்று அவளுக்கு? “ என்று பதற்றத்துடன்
லிப்டுக்கு கூட காத்திருக்காமல், இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி ஐ.சியூ இருந்த தளத்தை
அடைந்தான்
அவசரமாக கண்களை சுழற்ற அடுத்த நொடி பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது
கொஞ்சமாக கசங்கிய சுடிதாரில் தன் கையில் தன் மகளை வைத்துக் கொண்டு, கொஞ்சம் சோகம், கொஞ்சம் கவலை, கொஞ்சம் இயலாமை என கலவையான உணர்வுகளடனான
முகத்துடன் நின்றிருந்தாள் சுரபி.
அவனின் பார்வை ஒரு நொடி அவளின் உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்து
அவள் நன்றாக இருக்கிறாள் என்று
தெரிந்ததும் தான் நிம்மதியுற்றது.
அடுத்ததாய் அவன் பார்வை அவள் கையிலிருந்த நிகா குட்டியிடம் சென்றது. அந்த
குட்டியும் இயல்பாகவே இருக்க, மீதி இருந்த
கலக்கம் மறைந்து முழு நிம்மதி வந்து சேர்ந்தது.
பார்வையை சுரபியிடம் இருந்து விலக்கி, அவளின் அருகில் பார்க்க, அவள் நின்றிருந்த இடத்தில் நீண்ட பென்ச் போடப்பட்டிருக்க, அதில் ஒரு இளைஞன் கலங்கிய
கண்களுடன், முகத்தில் சோகத்துடன் அமர்ந்து இருந்தான்.
சுரபி அவனிடம் தான் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.
“யார் இவன்? ஒருவேளை சுரபியின்
கணவனோ? “ என்று எண்ணும்பொழுதே அவன் உள்ளே பெரும் பாரம் கூடியது. எங்கேயோ ஒரு
மூலையில் லேசான சிறு வலி.
யோசனையுடன் அவர்களை நோக்கி செல்ல, அதுவரை தன் அன்னையின் இடுப்பில் அமர்ந்து கொண்டு, அவள் காதில் தொங்கிக் கொண்டிருந்த ஜிமிக்கி கம்மலோடு
விளையாண்டு கொண்டிருந்த நிகா குட்டி, ஏதோ உந்த சட்டென்று
திரும்பி விகர்த்தனனை பார்த்தாள்.
அடுத்த கணம் அப்பா.... என்று கத்தியவள்... வேகமாக சுரபியின் பிடியிலிருந்து கீழ இறங்க, திமிர ஆரம்பித்தாள்.
தன் மகளின் அப்பா என்ற அழைப்பை கேட்டு திடுக்கிட்ட சுரபி, திரும்பி பார்க்க, அங்கே அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த விகர்த்தனனை
கண்டதும் அவள் கண்களில் பளிச்சென்ற மின்னல் வந்து போனது.
அதுவரை முகத்தில் அப்பி இருந்த கவலை...சோகம்...வேதனை எல்லாம்
பறந்து போக, அவள் முகம்
மகிழ்ச்சியில் விகாசித்தது.
அவள் முகத்தில் வந்து போன வர்ணஜாலத்தை கண்டு கொண்டவன் உள்ளே
அதுவரை இருந்த பாரம் விலகி ஜில்லென்று பனிமழை பொழிந்தது.
அதே நேரம் நிகா குட்டியோ தன் அன்னையில் இடுப்பிலிருந்து நழுவி, வழுக்கி கொண்டு கீழே இறங்கியவள், தன் இரண்டு கையையும்
நீட்டியவாறு மீண்டும் அப்பா என்று அழைத்தவாறு அவனை நோக்கி ஓடிவர... அவ்வளவுதான்...
அனைத்தையும் மறந்து
போனான் விகர்த்தனன்.
இடம் பொருள் ஏவல் எல்லாம் மறந்து போய்விட, இரண்டு எட்டி முன்னால் எடுத்து வைத்து வேகமாக வந்து அந்த குட்டியை தூக்கிக் கொண்டு தலைக்கு மேல
தூக்கி போட்டு பிடித்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
அதன் குட்டியும் கிளுக்கி சிரித்தபடி அவன் கழுத்தை
கட்டிக்கொண்டு, பசக் என்று அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
இந்த காட்சியை கண்ட சுரபியின் இதழ்களிலும் அவளையும் மறந்து புன்னகை
வந்து போக, அங்கே அமர்ந்து இருந்தவனோ யோசனையுடன் மூவரையும் பார்த்திருந்தான்.
சில நொடிகள் இருவரும் கொஞ்சி முடிக்க, பின் அந்த குட்டியை
அள்ளிக்கொண்டு சுரபியின் அருகில் வந்தான் விகர்த்தனன்.
“வாட் ஹேப்பன்ட் சுரபி ? “ என்று கேள்வியாக அவளை பார்க்க, அவளுக்கோ ஒரு நொடி என்ன
சொல்வது என்று தடுமாறிப்போனாள்.
பின் சுதாரித்துக்கொண்டு, பெஞ்சின் நடுவில் சோகமாக அமர்ந்து இருந்த பெண்ணைக் காட்டி
“சர்... இவ என்னுடைய நாத்தனார்...ஷ்யாமளா ... ” என்று அறிமுகப்படுத்த, ஹாய் என்றான் லேசான புன்னகையோடு.
அந்த பெண்ணவளும் தன் இருகரம் குவித்து வணக்கம் என்றாள் தன் முகத்தில் இருந்த வேதனையை மறைத்துக்கொண்டு.
அடுத்ததாய் விகர்த்தனன் பார்வை அந்த பெண்ணின் அருகில் அமர்ந்திருந்த இளைஞனிடம் சென்று
நின்றது.
“ஒருவேளை இவன் தான் இந்த குட்டி தேவதையின் தந்தையோ ? “ என்று அவசரமாக யோசிக்க, அவன் மனதில்
இனம்புரியாத வலி பரவியது.
அவன் பார்வை சென்ற இடத்தை கண்ட சுரபி,
“இவர் ஷ்யாம்.... என்னுடைய... என்னுடைய....” என்று ஆரம்பித்து, தொண்டை அடைத்துக் கொள்ள, தயங்கி நிக்க, விகர்த்தனன் இதயம்
ஏனோ எகிறி குதித்தது.
அவன் நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டது. கண்களில் சிறு
வலியுடன் என்ன சொல்ல போகிறாளோ என்று சுரபியின் முகத்தை பார்க்க, அவளும் அடைத்து இருந்த தன் தொண்டையை லேசாக செருமிக்கொண்டு
“இவர் ஷ்யாம் ப்ரகாஷ்.... என்னுடைய...பிரதர் இன் லா....” என்று அறிமுகப்படுத்த, அப்பொழுதுதான் போன உயிர் திரும்பி வந்ததை போல இருந்தது
விகர்த்தனனுக்கு.
“தேங் காட்... இவன் என் தேவதையின் தந்தை இல்லை...” என்ற நிம்மதி மூச்சுவிட்டான்..!
ஏனோ மனதில் விவரிக்க முடியாத ஆனந்தம்...பரவசம்...உற்சாகம்..
அதே நேரம் அந்த பெஞ்சின் ஓரத்தில் தலையை குனிந்தபடி வேதனையுடன்
அமர்ந்திருந்த பெரியவள், எதேச்சையாக நிமிர்ந்து பார்க்க, அங்கு நின்றிருந்த விகர்த்தனனை
கண்டதும், சூரியனைக் கண்ட செந்தாமரையாய் அவர் முகம்
மலர்ந்தது.
அதுவரை அவர் முகத்தில் தெரிந்த வலியும் வேதனையும் நொடியில்
மறைந்து போக, வேகமாக அவர் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து
எழுந்தார்.
“ஷ்யாம்.....” என்று அழைத்தபடி
ஓடி வந்து விகர்த்தனனை கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டு
குலுங்கினாள் அந்த பெரியவள்.
அதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர் சில
நொடிகள்.
சுரபி தான் முதலில் சுதாரித்துக் கொண்டாள்.
அவள் நின்று இருந்த இடத்தில் இருந்து இரண்டடி எடுத்து வைத்து
முன்னால் வந்தவள், அந்த பெரியவளின் தோள்
பற்றி இழுத்து,
“அத்தை... இவர் ஷ்யாம்
இல்லை. ஷ்யாம் சாயலில் இருக்கிறவர். என்னுடைய எம். டி...” என்று அவரின் காதில் மெதுவாக கிசுகிசுத்தாள்
சுரபி.
அப்பொழுதுதான் சற்று நிதானத்திற்கு வந்த பெரியவள், அவன் மார்பில் இருந்து தன் தலையை தூக்கி, விகர்த்தனன் முகத்தை ஆராய்ச்சியோடு பார்த்தவர் அப்பொழுதுதான் இவன்
தன் மகன் இல்லை என்பது உரைத்தது.
உடனே மீண்டும் அவரின் முகம் வாடிப்போக, அவசரமாக விகர்த்தனனை விட்டு விலகியவள், திரும்பி சுரபியின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவர் குலுங்கி அழுவது அவர் வாயிலிருந்து சத்தம் வராவிட்டாலும், உடல் மொழியில்
தெரிந்தது.
விகர்த்தனனோ இன்னுமாய் அதிர்ந்து நின்றான்.
அந்த பெரியவள் எதற்காக
தன்னை கட்டிக்கொண்டார்... கூடவே என்ன
பெயர் சொன்னார்? என்று தலையை தட்டி
யோசித்தவன், பின் நினைவு வந்துவிட
“ஷ்யாம்...ஷ்யாம் என்றுதானே அழைத்தார்... அன்று கூட சுரபி முதன்முதலாக அவனை பார்த்த
பொழுது ஷ்யாம் என்றுதானே அழைத்து வைத்தாள்.
யார் அந்த ஷ்யாம் என்று மண்டைக்குள் குடைந்தது.
சுரபியை பார்த்து பார்வையால் வினவ, அவளும் சங்கடத்துடன்
நெளிந்தாள்.
“சாரி சர்... இவங்க என்
மாமியார். நீங்க சாயலில் கொஞ்சம் அவர்
மகன் போல இருப்பதால், உங்களை அவருடைய மகன் என்று நினைச்சுட்டாங்க. தப்பா எடுத்துக்காதீங்க...”
என்று தயக்கத்துடன் சொல்ல,
“இட்ஸ் ஓகே. வாட் ஹேப்பன்ட்..? “ என்று மீண்டும் விசாரித்தான்.
சுரபியும் நடந்ததை சுருக்கமாக
சொன்னாள்.
******
அவளின் மாமனார் சந்திரசேகர்... திடீரென்று நேற்று
இரவு நெஞ்சு வலியால் துடிக்க, அருகிலிருந்த மருத்துவமனைக்கு உடனடியாக கூட்டி
சென்றனர்.
அவரை பரிசோதித்துவிட்டு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்ய
வேண்டும் என்று சொல்லி விட்டனர்.
அவர்கள் சுரபியை அழைத்து விஷயத்தை சொல்ல, அவரை பெங்களூர்க்கு அழைத்து வர சொல்லிவிட்டாள் சுரபி.
இங்கே சிகிச்சை நன்றாக இருக்கும். அதோடு அவளும் அருகிலிருந்து பார்த்துக்கொள்ள
முடியும் என்று முடிவு செய்து சென்னையில் இருந்து பெங்களூர்க்கு அழைத்து வா
சொன்னாள்.
டாக்டரிடம் ஆலோசித்துவிட்டு, தேவையான முதல் உதவிகளை செய்து, உடனேயே பெங்களூருக்கு மாற்றி விட்டனர்.
இப்பொழுது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு முதலுதவிகள்
நடந்து கொண்டிருக்கிறது.
உடனேயே ஆப்பரேஷன் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கணிசமான தொகையை முன்பணமாக கட்ட
வேண்டும் என்று சொல்லிவிட, பணத்தை எப்படி
புரட்டுவது என்றுதான் சுரபி முழித்துக்
கொண்டிருந்தாள்.
அவ்வளவு பணம் இல்லை அவளிடம். யாரிடம் சென்று எப்படி உதவி கேட்பது என்றுதான் கையை பிசைந்து கொண்டிருந்தாள்.
சுரபி நிலைமையை தயக்கத்துடன் சொல்ல, அதைக்கேட்டதும் அந்த சூழ்நிலையை தன் கையில் எடுத்துக் கொண்டான்
விகர்த்தனன்.
“அவ்வளவு தான. டோன்ட் வொர்ரி சுரபி. ஐ வில் டேக் கேர்.. இந்த
ஹாஸ்பிட்டல் எம்.டி எனக்கு வேண்டியவர் தான். அதோடு எனக்கு நிறைய பெரிய டாக்டர்ஸ்
தெரியும்.
அவங்ககிட்ட கன்சல்ட் பண்ணிக்கலாம். உடனேயே ட்ரீட்மென்ட்
ஸ்டார்ட் பண்ணிடலாம்...” என்று சொல்ல, அதுவரை சுரபியின்
தோளில் முகம் புதைந்து குலுங்கி கொண்டிருந்த பெரியவள் விலுக் கென்று நிமிர்ந்து, அவனை பார்த்தவள்,
“ரொம்ப நன்றி தம்பி... எப்படியாவது என் புருஷனை காப்பாத்தி
கொடுத்துடுங்க... இப்பதான் என் மூத்த பையனை இழந்துட்டு நிக்கறோம்... அதுக்குள்ள
அடுத்ததாய் இவருக்கு இப்படி வந்து இருக்கு. இவருக்கும் ஒன்னுன்னா என்னால தாங்கவே
முடியாது.
எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. எப்படியாவது திருப்பிடறோம். என்
புருஷனை காப்பாத்திடுங்க,… “ என்று தழுதழுக்க, அவரின் கைகளை பற்றிக்கொண்டு ஆறுதல் அளித்தான் விகர்த்தனன்.
“கவலைப்படாதிங்க மா.. நான் இருக்கேன்.. நான்
பார்த்துக்கிறேன்... கண்டிப்பா
காப்பாத்திடலாம்... “ என்று ஆறுதல் அளிக்க, அவனின் அம்மா என்ற
அழைப்பில் நெஞ்சுருகி போனாள் பெரியவள்.
தன் மூத்த மகனே நேரில் வந்து அவரை அம்மா என்று அழைத்தது போல
இருந்தது.
தன் மகனின் நினைவில் மீண்டும் கண்களில் நீர் மல்க, நன்றியோடு அவனை
பார்த்தாள் பெரியவள்.
*****
அடுத்ததாய்
அங்கிருந்த கார்டியாலஜிஸ்ட் தலைமை மருத்துவரை சென்று சந்தித்து உடனேயே அறுவை
சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணினான் விகர்த்தனன்.
விகர்த்தனனே நேரில் வந்து சிபாரிசு பண்ணவும், அடுத்ததாய் அவர்களுக்கு ராஜ மரியாதைதான். இந்த துறையிலயே பெஸ்ட்
டாக்டரை ஏற்பாடு செய்தனர்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு சர்ஜரி செய்யப்பட்டு அது வெற்றிகரமாகவும்
முடிந்தது.
அதுவரை அவனும் அங்கயே தங்கி விட்டான். முக்கியமான மீட்டிங் ஐ
எல்லாம் கான்ப்ரென்ஸ் கால் மூலமாக அங்கிருந்தே பேசி முடித்தான்.
சுரபி அவனை கிளம்ப சொன்ன பொழுதும் ஏனோ அவனுக்கு செல்ல மனம்
வரவில்லை. ஒருவழியாக ஆப்பரேசன் சக்சஸ் என்று கேட்டதும்தான் அவனுக்கு ரிலாக்சாக இருந்தது.
அதைக் கேட்டதும் தான் அங்கிருந்தவர்களுக்கும் நிம்மதியாக இருந்தது.
சுரபியின் குடும்பத்தார், விகர்த்தனன் கையை பிடித்து கொண்டு நன்றி சொல்ல, சுரபிக்கும் எப்படி
நன்றி சொல்வது என்று தவிப்பாக இருந்தது.
கண்களாலயே அவனுக்கு நன்றி சொல்ல, அதை புரிந்து கொண்டவன், சிறு தலை அசைப்பும், முறுவலுடன் அதை
ஏற்றுக் கொண்டான்.
அதேநேரம் விஷ்வா விடம் இருந்து அழைப்பு வர, அப்பொழுது தான் சற்று
நேரத்தில் ஆரம்பிக்க இருக்கும் புது ப்ராஜெக்ட்டிற்கான க்ளைன்ட் விசிட் நினைவு
வந்தது.
இது அவன் அலுவலகத்தில் நேரடியாக அவர்களை சந்தித்து பேச வேண்டிய
சந்திப்பு... அதனால் அவன் உடனே கிளம்பி செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து
“ஆல் ரைட்.. இனிமேல் பயப்பட வேண்டாம். எனக்கு ஆபிஸ்ல கொஞ்சம்
அர்ஜென்ட் வொர்க் இருக்கு. வேறு ஏதாவது
உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்..
என் பி.ஏ விஷ்வா வை அனுப்பி வைக்கிறேன். அவன் கூட இருந்து
உங்களுக்கு வேண்டியதை செய்து தருவான். அப்ப நான்
கிளம்பறேன்...” .
என்று பொதுவாக சொல்லியவன், அதுவரை தன் கையிலயே வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்த நிகா
குட்டியின் கன்னத்தில் முத்தமிட்டு சுரபியிடம் கொடுத்தான்.
அவளோ தன் அன்னையிடம் போக மறுத்து அடம் பிடித்து, அவன் கழுத்தை
கட்டிக்கொண்டு அவன் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அதில் திகைத்தவன், எப்படி அவளை தன்னிடம்
இருந்து பிரிப்பது என்று தெரியாமல் முழித்தவன்,
“குட்டிம்ம்மா... இன்னைக்கு ஒரு நாள் அம்மாகிட்ட போங்க. அப்பாக்கு
ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் இப்ப கிளம்பனும் டா. நாளைக்கு
பார்க்கலாம்....”
என்று பொறுமையாக எடுத்துச்செல்ல, அந்த குட்டியும் தலையை
இருபக்கமும் உருட்டி
“மாட்டேன்...அப்பா கூத்தான் இப்பேன்... “ என்று மழலையில் பிதற்றி, அவன் கழுத்தை இன்னும் இறுக்கி கட்டிக் கொண்டாள்.
அந்த குட்டியின் அப்பா
என்ற அழைப்பில் அதிர்ந்துபோய், அங்கிருந்தவர்கள் எல்லாரும் ஒரு நொடி திரும்பிப் பார்த்தனர்.
முன்பு எல்லாரும் ஒருவித டென்சனில் இருந்ததால் அவளின் அப்பா
என்ற விளிப்பு யாருக்கும் புரிந்திருக்கவில்லை.
ஆனால் இப்பொழுது அந்த குட்டி அவனை அப்பா என்று அழைப்பதும், அவன் கழுத்தை கட்டிக்கொண்டு விடமாட்டேன் என்று அடம்பிடிப்பதும்
கண்டு ஆராய்ச்சியோடு இருவரையும் பார்த்து வைத்தனர்.
சுரபிக்கும் அது தர்மசங்கடமாக இருந்தது.
ஆனாலும் அத்தனை பேர் முன்னிலையில் தன் மகளை கடிந்து கொள்ள முடியவில்லை
அவளால்.
மற்றவர்களின் கேள்வி பார்வையோ அவளை ஊசியாய் குத்துவதை போல
இருந்தது. அவர்களுக்கு அவசரமாக விளக்கம் கொடுக்க எண்ணியவள்,
“வந்து....இவர் கொஞ்சம் ஷ்யாம் ஜாடையில் இருப்பதால், இவரை பார்த்ததில் இருந்து அப்பா என்றுதான் கூப்பிடுகிறாள்....
“ என்று தயக்கத்துடன் மென்று முழுங்கி குறுகி நின்றாள் சுரபி.
எல்லாரும் அவளை அருவருப்புடன் பார்ப்பதை போல இருந்தது.
தவிப்புடன் நின்றிருந்தவளை தாங்கி கொண்டாள் அவள் மாமியார் சுந்தரி.
அதுவரை தன் கணவனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று
தவித்து கொண்டிருந்தவர்…இப்பொழுது தன் கணவன்
உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்ததும் கொஞ்சம் தெளிந்து இருந்தார்.
அதோடு தங்களுக்காக இங்கும் அங்கும் ஓடி அலைந்து கலைத்திருந்த
தன் மருமகளின் இப்போதைய தர்மசங்கடமான நிலையும், அவளின் தவிப்பும் ஒரு பெண்ணாக அவருக்கு புரிய,
“அதனால் என்ன சுரபி மா... நான் கூட சாரை பார்த்ததும் நம்ம
ஷ்யாம் னுதானே நினைச்சேன். குழந்தை பாவம்.. அவள் என்ன பண்ணுவாள்...
கிட்டதட்ட இவர் ஷ்யாம் மாதிரிதான் இருக்கார்...” என்று
புன்னகைத்தவாறு தன் மருமகளின் தோளை ஆதரவாக அணைத்து விடுவித்தவர், விகர்த்தனன் அருகில் வந்து,
“அம்மு...உனக்கு பாட்டிய ரொம்ப புடிக்கும் தானே.. பாட்டி நிறைய
கதை வச்சிருக்கேன். உனக்கு நிறைய கதை சொல்றேன். இப்ப அப்பா ஆபிஸ் போகட்டும்..
பாட்டிகிட்ட வாடா...”
என்று கையை நீட்டி அவளை அழைத்தார்.
அதைக் கண்டதும் தான் சுரபிக்கு ரிலாக்சாக மூச்சு விட முடிந்தது.
அதுவரை முள்ளின் மேல் நிற்பவளைப்போல தன் கீழ் உதட்டை
கடித்துக்கொண்டு தவிப்புடன் நின்றிருந்தவள்... இப்பொழுதுதான் நேராக நிற்க முடிந்தது.
தன் மாமியாருக்கு மனதிற்குள் ஆயிரம் முறை நன்றி சொன்னாள் சுரபி.
பாட்டியிடம் பிரியமாக ஒட்டிக்கொள்ளும் அந்த குட்டியோ, இப்பொழுது பாட்டியா? அப்பாவா? யாரிடம் செல்வது? என்று பட்டிமன்றம் நடத்தினாள்.
அதே நேரம் தன் பேன்ட் பாக்கெடில் இருந்த சாக்லெட் பார் ஐ எடுத்து
அவள் கையில் கொடுத்தவன்,
“ப்ரின்சஸ்... இந்த சாக்லெட் ஐ வச்சுகிட்டு பாட்டிகிட்ட போங்க..
அப்பா அப்புறம் வந்து உன்னை தூக்கிக்குவேன்... “ என்று இன்னும் சமாதானம் சொல்ல, அரை மனதுடன் பாட்டியிடம் தாவியவள், கை அசைத்து அவனுக்கு பிரியா விடை கொடுத்தாள்.
அதையே கர்வத்துடன் தன் கண்களில் நிறைத்துக் கொண்டு கை அசைத்து
விடை பெற்று சென்றான் விகர்த்தனன்..!
0 comments:
Post a Comment