மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Sunday, September 25, 2022

வராமல் வந்த தேவதை-8

 


அத்தியாயம்-8

 

ந்த வார இறுதி சனிக்கிழமை..!  

சமையலறையில் நின்றபடி மதிய சமையலை செய்து கொண்டிருந்தாள்  சுரபி.  

ஒரு அடுப்பில் சாதத்தை  வைத்துவிட்டு,  காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள்.  

அவள் கை பாட்டுக்கு தன் வேலையை செய்தாலும்,  அவள் மனம் என்னவோ அங்கு இல்லை.  

ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்  அந்த  வார விடுமுறை இரண்டு நாட்கள் தான்.  

வாரத்தில் ஐந்து நாட்கள் சக்கையாக பிழிந்து எடுத்தாலும்,  இந்த இரண்டு நாட்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள,  தேவையாகத்தான் இருந்தது எல்லாருக்கும்.

சுரபி மட்டும் விதிவிலக்கல்ல...

அவளுக்கும் இந்த வார விடுமுறை ரொம்பவுமே தேவையாகத்தான் இருந்தது.  அதிலும் இந்த வாரம் எத்தனையோ எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தேறி இருக்க, அதை சமாளிக்க முடியாமல் மூச்சு முட்டியது அவளுக்கு.

அதில் இருந்து கொஞ்சமாவது வெளிவர, இந்த வார விடுமுறை ரொம்பவுமே தேவையாக இருந்தது.  

******

ழக்கம் போல ஏழு மணிக்கே அலாரம் வைத்து அடித்து பிடித்து  எழுந்திருக்காமல்,  ஒன்பது, பத்து  மணி வரைக்கும் தன் மகளுடன் கட்டிக்கொண்டு தூங்கி எழுந்தவள்,  ஸ்ட்ராங்கான பில்டர் காபியை கலந்து எடுத்துக் கொண்டு வந்து வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு சாவகாசமாக அந்த காபியை ரசித்து உறிஞ்சினாள்.

மற்ற நாட்களை போல கடனுக்கே என்று ஒரு வாய் குடிப்பதும், அடுத்து வேலை செய்வதுமாய் இல்லாமல், ஆர அமற உட்கார்ந்து அந்த காபியை உறிஞ்சுவதில் தனி சுகம்தான்.

தன் மனதில் இருந்த பல குழப்பங்களை பின்னுக்கு தள்ளியவள், அந்த இன்பமான காபி நேரத்தை ரசித்து அனுபவித்தாள்.   

அதற்குள் அவள் மகள் எழுந்து விடவும், அவசரமாக படுக்கை அறைக்கு விரைந்து, அவளை தூக்கி, காலை கடன்களை செய்ய வைத்து,  அவளுக்கும் பாலை புகட்டி விட்டு,  அடுத்து அவள் தலையில் எண்ணையை  தேய்த்து ஊற  வைத்தாள்.  

சனி நீராடு என்பது அவள் அன்னை சொல்லிக் கொடுத்திருந்த பாடம்.

வாரம் தவறாமல் சனிக்கிழமை கட்டாயம் எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் என்பது அவள் அன்னையின் அன்பு கட்டளை.

பள்ளி, கல்லூரியில்  படித்த பொழுதும் சரி... படிப்பை முடித்து வேலைக்கு சென்ற பொழுதும் சரி... இந்த பழக்கத்தை விடாமல் தன் மகளை பின்பற்ற வைத்தார் அவள் அன்னை சகுந்தலை.

சில நாட்கள் அவள் சோம்பி, குளிக்க மறுத்து செல்லமாக சிணுங்கி அடம் பிடித்தாலும்,  அவள் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்று, கொல்லைப் புறத்தில் இருந்த,  கிணற்றடியில்  அமர வைத்து நன்றாக எண்ணையை உச்சியில் கொட்டி சற்று நேரம் ஊற வைப்பார்.

பிறகு வீட்டிலயே சீயக்காயை வாங்கி, காய வைத்து, அதன் உடன் பச்சைப் பயிறு, மருதாணி, போன்ற இன்னும் சில பொருட்களையும் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் சீயக்காய் தூளை, சாதம் வடித்த அரிசி கஞ்சியுடன் கலந்து நன்றாக தலையில் தேய்த்து விடுவார்.

அவரின் மிருதுவான விரல்கள், அவள் கேசத்தில்  இங்குமங்குமாய் அலைய,  முதலில் எரிச்சலாக இருந்தாலும், விரைவில், அவரின் மசாஜினால், தலையில் இருக்கும் பாரமும்,  மனதில் இருக்கும் சோர்வும் போன இடம் தெரியாது.

பாவாடையை தூக்கி  நெஞ்சுவரை  கட்டிக்கொண்டு, கிணற்றடியில் அமர்ந்து கொண்டு,    அங்கிருக்கும் வாலியில்  நீரை இழுத்து இழுத்து ஊற்றி தலையோடு ஊற்றி, குளிப்பது போல் ஒரு சுகம் இந்த உலகத்திலயே இல்லை என்றுதான் சொல்வாள்.

சிலநேரம் அவளுக்காக அவள் அன்னையே கிணற்றிலிருந்து நீரை இழுத்து, அருகில் இருக்கும் அண்டாவில் ஊற்ற, அவள் மொண்டு மொண்டு ஊற்றி, உல்லாசமாக குளிப்பாள்.

அந்த எண்ணெய் குளியலை முடித்து விட்டு வரும்பொழுது புதிதாய் பிறந்தவளைப் போல அவ்வள வு புத்துணர்ச்சி அவள் உள்ளே பரவிக்கிடக்கும்.    

குளித்து முடித்ததும், அவளின் இடை தாண்டி தொங்கும்  ஈரக்கூந்தலை, சாம்பிராணி  புகைப் போட்டு,  உலர வைத்து, அவளை தன் அருகில்  அமர வைத்துக்கொண்டு, அவளின் கூந்தலில் இருக்கும்  சினுக்கை எடுத்து, தளர பின்னி விடுவார்.

கூடவே கொல்லைப் புறத்திலிருந்து பறித்து கட்டி வைத்திருந்த குண்டு மல்லிகையை  அவளின் தலையில் சூடி  அழகு பார்ப்பார் சகுந்தலை.

தன் கணவன் இறந்த பிறகு தன் மகள் மட்டுமே உலகம் என்று சுருங்கிவிட்டதில், அவரின் எல்லா நேரத்தையும் தன் மகளுடன் செலவிடுவதில் அலாதி பிரியம் அந்த பெரியவளுக்கு.

அதுவும் இந்த மாதிரி தன் மகளை குளிக்க வைத்து, தலைவாரி, பூச்சூடி, அலங்கரித்து பார்க்க அவருக்கு கொள்ளைப் பிரியம்.

அதற்காகவே சுரபியும், இந்த எண்ணை குளியலுக்கு மறுப்பு சொல்ல மாட்டாள்.

எண்ணை  குளியலில் இன்னுமாய் அழகு பதுமையாய் பளபளக்கும்  தன் மகளின் அதீத அழகை கண்டு,  அந்த அன்னைக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிடும்...

“என் ராஜாத்தி...அப்படியே செஞ்சு வச்ச  அம்மன் சிலை மாதிரி இருக்கடா கண்ணு...என் கண்ணே பட்டுடும்....”   என்று அவளுக்கு நெட்டி முறித்து சிலாகித்துக் கொள்வார்.

கூடவே

“இந்நேரம்  உன் அப்பா இருந்திருந்தால், உன்னை எப்படி கொண்டாடி இருப்பார்...” என்று ஒரு வேதனை கலந்த பெருமூச்சும் வரத் தவறாது..

அடுத்து சுடச்சுட ஆவி பறக்கும் தும்பை பூ போன்ற வெள்ளே வெளேரென்று ,இலவம் பஞ்சை பூன்ற மிருதுவான இட்லிகளை எடுத்து தட்டில் வைத்து, அதில் கொஞ்சம் காரம் குறைவாய் சேர்த்து அரைத்திருக்கும் தேங்காய், சட்னி, தக்காளி சட்னி, இட்லி பொடி என விதவிதமாய் தொட்டுக்கொள்ள வைத்து தட்டை நீட்டுவாள்.

குளித்து முடித்ததில் பசி வயிற்றைக் கிள்ள, ஆர்வத்துடன் வாங்கி, இட்லிகளை  விள்ளையாய் பிட்டு வாயில் வைத்தால் அது தேவாமிர்தமாக இருக்கும்.

மெல்ல அவசியமே இல்லாமல் வழுக்கி கொண்டு வயிற்றுக்குள் சென்றுவிடும்.

தேங்காய் சட்னி நன்றாக இருப்பதால் ஒரு இரண்டு இட்லி... தக்காளி சட்னிக்கு இரண்டு, பொடியில் இரண்டு என வழக்கமாக சாப்பிடும் அளவை விட, இரண்டு, மூன்று மடங்கு அதிகமாகவே வயிற்றுக்குள் தள்ளி விடுவாள் சுரபி.

சகுந்தலையும் தன் மகள் ருசித்து சாப்பிடும் அழகை ரசித்தவாறு அவள் தலையை வாஞ்சையுடன் வருடி விடுவார். 

தன் அன்னையின் நினைவில் அவள் கண்ணோரம் கரித்தது.  

எப்படி எல்லாம் அவளை சீராட்டினார்...கொண்டாடினார்... ஆனால் இப்பொழுது எங்கே போனது அந்த தாயின் அன்பும், பாசமும் , அரவணைப்பும்?

இப்பொழுது அவளும் ஒரு குழந்தைக்கு அன்னையாகி விட்டாலும், இன்னுமே மனம் சிறுபிள்ளையாய் அவள் அன்னையை தேடுகிறது தான். 

“ஐ மிஸ் யூ மா... ஐ லவ் யூ...” என்று அவள் இதழ்கள் முனுமுனுக்க, கண்ணோரம் துளிர்த்த நீரை சுண்டி விட்டுக் கொள்வாள்.

*****

ன் அன்னை  சொல்லிக் கொடுத்ததை எல்லாம் அவரை பிரிந்த இந்த நாளிலும், இன்னுமே பின்பற்றுகிறாள்.

ஒரு தாயாய்  தன் மகளுக்கும் சொல்லி கொடுப்பாள்  சுரபி.

அதனால் சனிக்கிழமை தோறும் தன் தலைக்கு எண்ணை தேய்த்து குளித்து விடுவாள்.

பழைய கிணற்றடி...ஜில்லென்று வாளியில் இறைத்து ஊற்றும் கிணத்து நீர்... அம்மா அறைத்து வைத்திருக்கும் சீயக்காய் எல்லாம் இல்லை என்றாலும், தலைக்கு எண்ணையை வைத்து, சேம்பூ போட்டே தேய்த்து குளித்து விடுவாள்.

அவளைப் போலவே தன்  மகளுக்கும் வாரம் தவறாமல் எண்ணை  குளியல்தான்.

அதிசயமாக அவளைப் போலவே, அவள் மகளும் எண்ணையை கண்டாலே   காத தூரம் ஓடுவாள்.  

வீட்டு ஹால், சமையல் அறை,  பெட்ரூம் கதவு, கட்டிலுக்கு அடியில் என்று மூலை முடுக்கு ஒன்று விடாமல் ஓடிப்போய் ஒளிந்து கொள்வாள்.

தன் மகள் ஒளிந்து இருக்கும் இடம் தெரிந்தாலும், அவளை தேடுவதை போல போக்குக் காட்டி,  சற்று நேரம் ஓடி பிடித்து விளையாண்டு, பின் சின்னவள் ஓய்ந்த பொழுது லாவகமாக கையில் அள்ளிக் கொள்வாள்.

அவளை அப்படியே தூக்கி கொண்டு சமையல் அறைக்கு செல்பவள்... அங்கிருக்கும், செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணையை  சிறு கரண்டியில் எடுத்து  கொஞ்சமாக நல்லெண்ணை விளக்கின் சுவாலையில்  சூடு பண்ணி,  அதில் ஒரு கற்பூரத்தையும் போட்டு,  லேசாக காய்ந்ததும், தன் மகளின் தலையில் சூடு போக தேய்த்து விடுவாள்.

பின் மீதமிருக்கும் எண்ணையை அவளின் உடல் எங்கும் தேய்த்து நன்றாக நீவி மசாஜ் செய்து நல்ல வெந்நீரில் குளிக்க வைப்பாள்.

******

ந்த வீட்டிற்கு குடியேறி வந்த புதிதில் முதன் முதலாய்  அவளுக்கு தலைக்கு  எண்ணை வைத்து தேய்க்க,  அந்த கட்டிடமே அதிரும் படி கத்தி வைத்தாள் அவள் செல்ல மகள்.

அவளின் அலறலை கேட்டவர்கள், தாய் தன் பிள்ளையை அடிக்கிறாள்  என்று எண்ணி, அருகில் இருந்த யாரோ ஒருவர் சைல்டு ஹெல்ப் லைன்க்கு  போன் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணி விட,  அடுத்த பத்தாவது நிமிடம் அவர்கள் வந்து கதவை தட்டி வைத்தார்கள்.  

ஐம்பது வயதை தொட்டிருக்கும் பெரியவளும், முப்பதை தாண்டி இருக்கும் இளைஞனுமாய் தன் வாசலில் வந்து நின்றவர்களை கண்டதும், என்னமோ ஏதோவென்று சுரபி திருதிருவென்று முழிக்க,  

“குழந்தையை அடிச்சீங்களா? “ என்று  விசாரணை செய்யவும் தான் அவளுக்கு நடந்தது விளங்கியது.

எல்லாம் இவளால் வந்தது என்று அங்கு வரவேற்பரையில் அமர்ந்து கொண்டு பொம்மைகளுடன் விளையாண்டு கொண்டிருந்த தன் மகளை முறைக்க, அவளோ புதிதாக வந்தவர்களை பார்த்ததும்,  கொஞ்சம் பயத்துடன் உதடு பிதுக்கி அழ தயாராக இருந்தாள்..

பெரியவள் முறைப்புக்குத்தான் குழந்தை பயந்து விட்டாள் என்று எண்ணியவர்கள்,

“என்ன மேடம்...எங்க முன்னாடியே அந்த பச்ச குழந்தையை இப்படி முறைக்கிறிங்க..

நீங்க வேலை செய்யும் இடத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். தாங்க முடியாத மன உளைச்சல் கூட இருக்கலாம். ஆனால் அதற்காக உங்க ஸ்ட்ரெஸ்ஸை எல்லாம் இந்த சின்ன புள்ளையிடம் காட்டக்கூடாது.

இப்பொழுதெல்லாம் முக்கால் வாசி பெற்றோர்கள்... தங்கள் மன அழுத்தத்தை குறைக்க வழி தெரியாமலே... அதே நேரம் அவர்கள் பிள்ளைகள் ஏதாவது சின்னதாக குறும்பு செய்தாலோ, தொல்லை செய்தாலோ, அவர்களை  போட்டு விலாசி விடுகிறார்கள்.

அதை தடுக்கத்தான் நாங்க இருக்கிறோம். சைல்ட் அப்யூஸ் எதுவாக இருந்தாலும் சட்டப்படி குற்றமாகும்..”  என்று பெரியவள், பெரிய லெக்சர் கொடுக்க, அவளோ நொந்து போனாள்.

“மேடம்.... நான் அப்படி எல்லாம் இல்லை... “ என்று மறுக்க முயல,

“என்ன அப்படி இல்லை... நாங்கதான் பார்த்தோமே...எங்க முன்னாடியே அந்த குட்டியை கண்ணாலயே மிரட்டுவதை...” என்று முறைத்த அந்த பெரியவள், தொடர்ந்து படபடவென்று பொரிந்து சுரபியை லெப்ட் அன்ட் ரைட் வாங்கி விட்டாள்.

அந்த குட்டியோ இன்னுமே உதட்டை பிதுக்கி அழுவதை போல பாவனை செய்ய, சுரபியோ பதறி

“அடிப்பாவி...இப்படி பாவமா பாத்து வச்சு, என்னை மாட்டி விட்டுட்டியே டி...” என்று மீண்டும் தன் மகளை முறைக்க ஆரம்பித்து, பின் அந்த பெரியவள் திட்டியது நினைவு வரமும்,  உடனே முறைப்பதை நிறுத்தி அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள்.

பின் அந்த பெரியவளிடம்,

நான் அப்படி இல்லை...என்று எடுத்துச்சொல்லி, மன்றாடி,  தன் மகளுக்கு தலைக்கு எண்ணையை தேய்த்து குளிக்க வைத்ததற்குத்தான் ஊரையே கூட்டி விட்டாள்  என்று விளக்கம் சொல்ல, அதற்கும் அவர்களிடம் வாங்கி கட்டி கொண்டாள் சுரபி.

“பாருங்க மேடம்... புள்ளைங்களுக்கு பிடிக்காதது எதையும் அவர்கள் மீது திணிக்க கூடாது. இதுவும் ஒரு வகையில் சைல்ட் அப்யூஸ் தான்..” என்று மீண்டும் தன் லெக்சரை ஆரம்பிக்க, சுரபியோ மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டாள்.

“அடக்கடவுளே... புள்ளைக்கு தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க வைப்பது எப்படி சைல்ட் அப்யூஸ் ஆகும்.. வர வர  நாட்டுல எதுக்கெல்லாம் தடை போடறதுனு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது..

தப்பு செய்யற மாணவர்களை  ஆசிரியர் கொஞ்சம் கடுமையாக கண்டித்தால்,  அதற்கும் தடா போட்டு விட்டார்கள்

அடியாத மாடு படியாது என்பது போல,  முன்பெல்லாம் ஆசிரியர் பிரம்பால் அடித்துத்தான் மாணவர்களுக்கு புத்தி சொல்லுவார்கள்.  

இப்பொழுதும் அது வன்கொடுமைகளில் சேர்ந்துவிட்டது.  

அதே போல விவரம் தெரியாத புள்ளைகளுக்கு,  பெற்றவர்கள் அடிச்சு புத்திமதி சொன்னால்,  அதற்கும்  தடா போட்டு விட்டார்கள்.

கூடவே சைல்டு ஹெல்ப்லைன் என்று ஒரு அமைப்பை  வேறு உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

இதனால்தான் பிள்ளைகளுக்கு பயம் விட்டு போய்,  உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என்ற நிமிர்வு வந்துவிடுகிறது.  

இந்த சலுகைகளை நிறைய பேர் தவறாக பயன்படுத்தவும் செய்கிறார்கள் என்று தனக்குள்ளே புலம்பி கொண்டாள் சுரபி.

அதன் பின்  இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று வாக்குறுதி பத்திரம் எழுதிக் கொடுக்காத குறையாக அவர்களிடம் கெஞ்சி வைக்க,  ஏதோ ஓரளவுக்கு சமாதானம் அடைந்தவர்களாக கிளம்பிச் சென்றனர்.

எதற்கும் இருக்கட்டும் என்று அவள் வேலை செய்யும் நிருவனம் முதற்கொண்டு அவளை பற்றிய எல்லா விவரங்களையும்  வாங்கி கொண்டு, மீண்டும் ஒரு முறை  வார்னிங் கொடுத்துவிட்டுதான் சென்றனர்.

அதிலிருந்து எண்ணை தேய்த்து விடும் நாளில், கதவு ஜன்னல்களை எல்லாம்  அடைத்துவிட்டு,  அவள் கத்தும் சத்தம் அதிகமாக வெளியில் கேட்டு விடக் கூடாது என்று கவனமாக  இருப்பாள் சுரபி.

*****

ன்றும் தன் மகளுக்கு  எண்ணை தேய்த்து  குளிக்க வைத்துவிட்டு சாம்பிராணி  புகை போட்டு அவள் முடியை உலர வைத்தவள்,  வரவேற்பறையில் அமர வைத்து விளையாட்டுப் பொருட்களை எடுத்து வைத்து விட்டு குளிக்கச் சென்றாள்.  

அவசரமாக தன் தலைக்கு எண்ணை  வைத்து தலைக்கு குளித்தவள்அப்படியே ஒரு துண்டை எடுத்து தலையில் சுற்றிக்கொண்டு மதிய சமையலை ஆரம்பிக்க வந்து விட்டாள்.  

தலையில் கட்டி இருந்த டவலில்  இருந்து ஒரு சொட்டு தண்ணீர் முன்னால் வந்து,  அவள்  வெட்டிக்கொண்டிருந்த  காய்கறிகளில் பட்டு தெரிக்க, வழக்கமாக இந்நேரம் அவள் நினைவு அவள் அன்னையை தொட்டு நின்றிருக்கும்...  

ஹ்ம்ம்ம் அம்மா இந்நேரம் இருந்திருந்தால்

என்ன கண்ணு இது? தலையை சரியாக துவட்டாமல் இப்படியா ஈரத்தோடு டவலை சுத்திக்கிறது.... சளி பிடிக்கும்... தலைநோவு வரும்... “   என்று செல்லமாக கடிந்தவாறு, தலையை  துவட்டி விட்டு இருப்பார்.  

அந்த நினைவு வந்து அவளை அலைக்கழித்திருக்கும்..!  

ஏனோ இன்று அந்த சொட்டு நீர் கண் முன்னே வந்து விழுந்தாலும்,  அவள் பார்வையில் பதியவில்லை.

அவளோ தனக்கு  புதியதாக வந்திருக்கும் பிரச்சனையை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்

இதுவரைக்கும் பிச்சனை இல்லைதான்...ஆனால் பிரச்சனையா யாக வந்து விடுவோமோ  என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தாள்.

*****  

யார் அவன்?  அவனை ஏன் தன் மகள்  அப்பா என்று அழைத்து ஒட்டிக் கொள்கிறாள்?  என்று அந்த நெடியவனை பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தாள் சுரபி.  

அவள் மனம் இந்த வாரத்தில் நடந்ததை திருப்பி அசைப் போட்டுக்கொண்டிருந்தது. 

அலுவலகம் சேர்ந்த முதல் நாளன்று,  தன் மகளை காணாமல் தவித்த பொழுது ஒரு நெடியவனிடம்  தன் மகள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டு போனாள் தான்.  

அவள் மகளும் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அப்பா என்று  செல்லம் கொஞ்சுகிறாள்..

அடுத்த நாளும் ரோட்டில் காரைக் கொண்டு வந்து அருகில் நிறுத்த, அவனை பார்த்ததும்,  இந்த குட்டியும் , அவளைக் கண்டுகொள்ளாமல் அப்பா என்று தாவிச் செல்கிறாள்.

நேற்று ஏதோ உதவினான்...இன்று பக்கத்தில் இருக்கும் அலுவலகத்துக்கு லிப்ட் கொடுத்தான்... இனிமேல் அவனை பார்க்காமல் தவிர்த்து விடலாம்.   

அவன் ஒரு சிறுகதையாக முடிந்துவிடும் என்று பார்த்தால்,  அடுத்து வந்த நாட்களிலும், அந்த நெடியவன் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருந்தான்.

அதற்கு அடுத்த நாளும் அவள் அலுவலகத்திற்கு செல்லும் அதே நேரம் அவனும் காரைக் கொண்டுவந்து  அருகில் நிறுத்தி விடுகிறான்.  

பார்த்ததுமே அவளின் செல்ல மகன் அவனிடம் தாவுகிறாள்.  

அவன் அப்பா இல்லை.... வேற யாரோ என்று எடுத்து சொன்னால்  புரிந்து கொள்ள மாட்டேங்கிறாள்.  

அவளை அடித்துச் சொல்லும் வயதும் இல்லை.  

சரி அந்த வளர்ந்து கெட்டவனிடமாவது அவன் அப்பா இல்லை என்று சொல்ல சொன்னால், அவனோ  

“அவள் குழந்தைதானே...  அவளுக்கு பிடித்ததைபோல  கூப்பிடட்டும்...” என்று மறுத்து விட்டான்.  

அவளும் அந்த நெடியவனை திட்டி பார்த்தாள்..  முறைத்து பார்த்தாள்... அடிக்குரலில் சீறி பார்த்தாள்.  விரல் நீட்டி மிரட்டி  எச்சரித்து   பார்த்தாள்.  

அவனோ அவளின் எந்த ஆக்சனுக்கும், ரியாக்சனை காட்டாமல், அந்த குட்டியுடன் கொஞ்சுவதிலயே பிசியாகிப் போனான்.

சிலநேரம் அவனை தவிப்பதற்காக சீக்கிரமாக    அலுவலகத்துக்கு கிளம்பி சென்றாள். சில நேரம் தாமதமாக வந்தாள்.

ஆனால் அவள் எப்படி திட்டமிட்டு வந்தாலும், அவள் வரும் நேரம் சரியாக ஆஜர் ஆகி விடும் அவன் கார்.

காரில் இருவரையும் வற்புறுத்தி ஏற்றிக்கொண்டு, சற்று நேரம் தன் மகளிடம் கொஞ்சி விட்டு, பின்  அவர்களை பார்க்கிங்கில் விட்டுவிட்டு,  அவன் அலுவலகத்திற்கு உள்ளே செல்வது  வழக்கமாகிவிட்டது.  

காரில் அவனுடனான அந்த ஐந்து நிமிட பயணத்தில், தன் மகளின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி தெரியும்.  அவளுக்குத்தான் தவிப்பாக இருந்தது.  

ஒரு நாள் என்றால் பரவாயில்லை...  அதுவே தொடர்ந்தால்...  யாராவது பார்த்தால் என்ன சொல்வார்கள் என்று தவிப்பாக இருந்தது.

*****

பேசாமல் வேலையை மாற்றி விடலாமா என்று பார்த்தால், இப்பொழுதுதான் இந்த வேலையில் சேர்ந்திருக்கிறாள்.

அவளுடைய புது வேலை அவளுக்கு ரொம்பவே பிடித்துப் போயிருந்தது.  

அவளுடைய ப்ராஜெக்ட்டில், புதிய லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை பயன்படுத்துவதால் அவளுக்கு நிறைய புதியதாக  கற்றுக் கொள்ளவும் வசதியாக  இருந்தது

அதோடு அவள் ப்ராஜெக்ட்டில் வேலை செய்பவர்கள் எல்லாருமே   சீனியர் ஜூனியர் என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல்,  சகஜமாக பழகவும் அவளுக்கு அந்த அலுவலக  சூழ்நிலை ரொம்பவும் பிடித்துவிட்டது

அதைவிட தன் மகளை பார்த்துக்கொள்ள வேண்டுமே என்ற கவலையும் நீங்கி இருந்தது.

அங்கிருந்த க்ரெச்சில் நன்றாகவே பிள்ளைகளை கவனித்துக் கொண்டார்கள். அதுவும் மேனேஜர், டைரக்டர்ஸ் போன்ற பெரிய பதவியில் இருப்பவர்களின் குழந்தைகள் கூட அங்கே இருப்பதால், நன்றாகவே கவனித்துக் கொண்டனர்.   

முதல் நாள் அன்று தன் அன்னையை பிரிய மறுத்து, சுரபியின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதாள் அந்த குட்டி.

அதைக்கண்டதும் சுரபியுன் கண்களில் நீர் கோர்த்தது.. அவளுக்குமே தன் மகளை பிரிய மனம் இல்லை.

ஆனால் அந்த க்ரெச் ஐ பார்த்துக்கொள்ளும் பெண், அந்த குட்டியிடம் நயமாக பேசி, அங்கிருந்த  விளையாட்டு பொருட்களை காட்ட,  கொஞ்சமாக முகத்தை திருப்பி, அருகிலிருந்த பலவிதமான விளையாட்டு பொருட்களை கண் விரிய பார்த்தாள்.

அதைக்  கண்டதும் உடனே முகம் மலர, தன் அன்னைக்கு   டாட்டா காட்டி விட்டு விளையாட ஆரம்பித்து விட்டாள்.  

அதோடு அங்கே இருக்கும் மற்ற குழந்தைகளை  முதலில் வித்தியாசமாக பார்த்தவள்...பின்  கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விட்டாள்.  

அப்பொழுதுதான் சுரபிக்கு தன் தவறு புரிந்தது

கடந்த இரண்டரை வருடங்களாக அவளை தன் கைக்குள் வைத்து பொத்தி பொத்தி வளர்க்கவும்,  மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பு தன் மகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது.  

ஏதாவது குடும்ப விசேஷம் என்று மற்ற உறவினர்களுடன் கலந்து கொள்ளவும், அவர்கள் பிள்ளைகளுடன் விலையாடவும்  வழியில்லை.  

அவளின் நாத்தனார் ஷ்யாமளா மட்டும் அவ்வபொழுது அவளைக் காண   வந்து சென்றாள். அவள் வரும்பொழுது அவளிடம் உல்லாசமாக விளையாடுவாள்.

அவளுக்குமே இப்பொழுது  கைக்குழந்தை இருப்பதால் அவளும் வருவதில்லை.

அதனால் எப்பொழுதும் தாயும் மகளுமாய் இருவர்  மட்டும்தான்  விளையாடுவார்கள். பல நேரம் பொம்மைகளும், டோராவும்தான் அவள் உலகம்.  

இதுவரை இந்த மாதிரி குழந்தைகளுடன் விளையாட வாய்ப்பு இல்லாமல் போய்விட,  இப்பொழுது அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, பிள்ளையையும் நன்றாக கவனித்து கொண்ட அந்த க்ரெச் நடத்தும் பெண்மணிக்கும்,  அதன் உரிமையாளருக்கும் மனதார நன்றி சொல்லிக் கொண்டாள்.  

வேலையும்,  மகளும் பிரச்சனை இல்லை என்று நிம்மதியாக இருந்தபொழுது தான்,  பிரச்சனை அந்த நெட்டை பனைமரத்தின் வழியாக வந்தது.

“யார் அவன்?  அவனை ஏன் தன் மகள்  அப்பா என்று அழைத்து ஒட்டிக் கொள்கிறாள்?  

எப்படி அவனை சமாளிப்பது? அவனை பார்த்தாலே ரொம்பவும் ஆளுமை மிக்கவனாய் தெரிகிறான். அமர்த்தலான குரலில் எல்லாரையும் அடக்கி விடும் ஆளுமை தெரிந்தது.

அவள் முதற்கொண்டு அவன் குரலில் அடங்கி விடுகிறாளே.. தன் மகளை எப்படி அவனிடம் இருந்து பிரிப்பது? “ என்றுதான்  இப்பொழுதும் யோசித்துக் கொண்டிருந்தாள் சுரபி.  

அதே யோசனையுடனே தன் மதிய சமையலை முடித்து, தன் மகளுக்கு ஊட்டி விட்டு,  பின் மற்ற  வேலையை தொடர்ந்தாள் சுரபி..!  

தனக்கு வந்திருக்கும் பிரச்சனையை அந்த பேதைப்பெண் எப்படி சமாளிக்க போகிறாள் என்று வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்..!

Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *