மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Monday, September 26, 2022

வராமல் வந்த தேவதை-14

 


அத்தியாயம்-14

 

மாலை ஐந்து மணி அளவில், சுரபிக்கு அட்மினிஸ்ட்ரேசன் டிபார்ட்மெண்ட் ல்  கொஞ்சம் வேலை இருந்ததால்,  பத்தாவது தளத்திற்கு சென்றாள்.  

தன் வேலை முடித்து விட்டு அனிச்சையாக திரும்பியவள், அங்கே  மேனேஜிங் டைரக்டர் என்று பெயர் பலகை பொறுத்தி இருந்த அறையை கண்டாள்.  

ஏனோ அவளுக்கு மதியம் பார்த்த க்ரெச்  நிகழ்வு மீண்டும் கண் முன்னே வர அனிச்சையாக அவள் கால்கள் அந்த அறையின் அருகில்  நின்று விட்டன.

எதையும் யோசிக்காமல் கதவை லேசாக தட்டிவிட்டாள்.  

உடனே

“எஸ்... கெட் இன் ...”  என்ற கம்பீரமான குரல் வெளி வந்தது

அந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்க, எங்கே என்று யோசித்தவாறு மெல்ல கதவை திறந்து உள்ளே தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தவள்,  

“மே ஐ கம் இன் சர்...” என்றாள் தயக்கத்துடன்.  

“எஸ்...கெட் இன் ...” என்றது அதே  அமர்த்தலான குரல்.  

இப்பொழுது முழுவதுமாக தன்னை உள்ளே நுழைத்து,  அறைக்கு உள்ளே சென்றவள்,   தயக்கத்துடன் நிமிர்ந்து பார்க்க, அங்கே அவளுக்கு முன்னால் இருந்த பெரிய இருக்கையில் கம்பீரமாக அமர்ந்து இருந்தவன், குனிந்து லேப்டாப்பில் எதையோ சீரியஸாக தட்டிக் கொண்டிருந்தான்.

தலையை குனிந்தபடி இருந்ததால் அவன் முகம் அவளுக்கு தெரியவில்லை. அவள் உள்ளே வந்து நின்றும் தன் பார்வையை நிமிர்த்தாமல், தன் வேலையில் மும்முரமாக இருந்தவாறு   

“எஸ்..?  “ என்றான்  கேள்வியோடு.  

அவளுக்கோ  அவள் சொல்ல வந்ததெல்லாம் மறந்து போனது.  

அதோடு விக்ரம் கொடுத்த ஹிட்லர் என்ற பில்டப் வேற அந்த நேரம்  ஞாபகம் வந்து தொலைத்தது.

அவள் பாட்டுக்கு முன்ன பின்ன  தெரியாமல்...எதுவும் யோசிக்காமல் அவசரப்பட்டு  உள்ள வந்துட்டாளோ?  என்று ஒரு நொடி நெஞ்சம் படபடத்தது.

ஆனாலும் அவள் கண் முன்னே ஒரு  தவறு நடந்து கொண்டு இருக்கிறது.  அதை சுட்டிக் காட்டுவது அவசியம். எது வந்தாலும் சரி. அதை பேஸ் பண்ணிக்கலாம் என்று தன்னைத் தானே சமாதானம் படுத்திக் கொண்டவள்,  

“சர்....  வந்து... நான் ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்...”  என்றாள் தயக்கத்துடன்.  

“என்ன  கம்ப்ளைன்ட்?”  என்றான் இன்னுமாய் தலையை நிமிர்த்தாமல்  அதே அமர்த்தலான குரலில்.

அதைக்கண்டு அவளுக்கு இன்னுமாய் நாக்கு ஒட்டிக்கொண்டது.  

தன்னிடம் பேசுபவரின் முகத்தை கூட பார்க்காமல் வேலை செய்யும் அளவுக்கு பிசியா? இல்லை... தான் தான் எம்.டி... தன்னை பார்க்க வருகிறவர்கள் எல்லாம் தனக்கு அடிமை என்பதாய் திமிரா?

எதுவாக இருந்துவிட்டு போகட்டும். நான் வந்த வேலையை முடித்துவிட்டு ஓடி விட வேண்டும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டவள், தன் தொண்டையை செருமிக்கொண்டு,

“வந்து...   நம்ம நிறுவனத்தின் அலுவலக  வளாகத்தில் நடத்தும் டேக் கேர் முறை சரியில்லை சர். இங்க பாதுகாப்பாக இருப்பதற்காக நாங்கள் பிள்ளைகளை விட்டுச் செல்கிறோம்.  

ஆனால் அங்கு பொறுப்பாக யாரும் பார்த்துக் கொள்ளவில்லை... குழந்தைகளின் சேப்டிக்கு உத்திரவாதம் இல்லை...”  என்று படபடவென்று பொரிந்தாள் சுரபி.  

“அப்படியா?  அப்படி என்ன நடந்தது? என்றான்  பார்வையை இன்னுமாய்  நிமிர்த்தாமல்.  

“வந்து... என் மகளையும் அங்கேதான் விட்டு இருக்கேன். மதியம் ஒருவன்  வந்து அவளை தூக்கிக் கொண்டு சென்று விட்டு பின் கொண்டு வந்து விட்டதை பார்த்தேன்.  

டேக்கேரில் சென்று யார் என்று கேட்டால்  சரியாக பதில் சொல்லாமல் ஏதேதோ சொல்லி மலுப்புகிறார்கள்.  அது எப்படி என் அனுமதி இல்லாமல் என் மகளை ஒருவர் தூக்கிக் கொண்டு செல்லலாம்?  

அப்படி என்றால் அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு? என்று மீண்டும் படபடவென்று பொரிய,  

“ஓஹோ... அது சரி... அது எப்படி?  முன்ன பின்ன தெரியாத ஒருவன்  உன் குழந்தையை தூக்கிக்கொண்டு செல்லும்பொழுது, உன் மகள்  அழவில்லையா?

குரலில் நக்கல் இருந்ததோ? அப்படித்தான் தோன்றியது சுரபிக்கு. அவளுக்குமே அந்த சந்தேகம் இப்பொழுதுதான் வந்தது.

அது எப்படி? யாராவது தூக்கினால் போக மாட்டாளே தன் மகள். அவள் விருப்பபட்டுதான் சென்றிருக்கிறாள். அப்படி என்றால் தூக்கி சென்றது அந்த நெட்டையா?

அவன் எதற்கு மதியம் வந்து தூக்கி செல்ல வேண்டும்? இன்று மட்டும்தானா? இல்லை தினம் தினம் இது நடக்கிறதா? என்று பல கேள்விகள் அவள் உள்ளே குமிழிட்டன..

“சொல்லு மா... அது எப்படி உன் மகள் அழாமல் சென்றாளாம்? “ என்று மீண்டும் நக்கல் இழையோட கேட்க,

“அது வந்து...   குழந்தை எல்லாரிடமும் இயல்பாக செல்பவளாக இருந்தால் போய்விடுவாள் தானே...  அங்கு பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி அதை அனுமதிக்கலாம்...திஸ் இஸ் நாட் பேர்...”   என்று  மீண்டும் பொரிய ஆரம்பிக்க,  

“சரி...  இப்ப என்ன பண்ணனுன்ற? “ என்று கேட்க, அவளுக்கு இருந்த பதற்றத்தில் அவன் ஒருமையில் அழைத்தது எதுவும் கருத்தில் எட்டவில்லை.  

“அது வந்து...  நீங்கதான் சர் டேக்கேர் பொறுப்பாளர்களிடம் சொல்லணும்... இன்னும் ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன்ஸ் ஐ டைட் பண்ணனும்...”

“ஒ.கே பண்ணிடலாம். தென்...?

“என் குழந்தையை தூக்கிட்டு போனவன் யாருனு கண்டுபுடிச்சு   பனிஷ்மென்ட் கொடுக்கணும்...”  என்று வரிசையாக அடுக்கினாள்  

“சரி கொடுத்திடலாம்...என்ன மாதிரி பனிஷ்மென்ட் தரலாம்..? நீயே அதையும் சொல்லு...அப்புறம் அந்த பனிஷ்மென்ட் ஐ எனக்கே தரலாம்...” என்றவாறு இப்பொழுது குனிந்திருந்த தலையை நிமிர்த்த,  அவனைக் கண்டதும் தூக்கிவாரிப் போட அதிர்ந்து போனாள் பெண்ணவள்.  

அதே நேரம் காலையில் அவனை காணாமல்,  மனதில் ஓரமாக இருந்த தவிப்பு உடனேயே சூரியனைக் கண்ட பனியாய் ஓடி மறைந்தது. தாமரையாய் மலர்ந்தது அவளின் மதிமுகம்.

அவள் கண்களில் வந்து சென்ற பளிச்சென்ற மின்னல் கீற்றும்,  முகத்தில் தெரிந்த மலர்ச்சியையும் கண்டுகொண்டன அவனின்  கழுகு கண்கள்.  

ஏனோ அதை கண்டதும் இன்பமாய் அதிர்வலைகள் அவன் உள்ளே..! முகத்தில் லேசான கர்வம்..இதழ்க்கடையோரம் குறுஞ்சிரிப்பு...

“சொல்லுமா...  என்ன பனிஷ்மென்ட் தரப் போற...ஐம் வெய்ட்டிங்...”  என்றான்  கண்களில் தேங்கி நின்ற  குறும்பு சிரிப்புடன்.  

அப்பொழுதுதான் அதிர்ச்சியில் இருந்து தன்னிலைக்கு வந்தவள்

“இவர்....  இவன் எப்படி?  அதுவும் எம்.டியின் அறையில்.? என்று அவசரமாக யோசித்தவளுக்கு ஏதோ புரிவதை போல இருந்தது.  

தினமும் காலையில் இவன் கார் வரும்பொழுதெல்லாம்,  செக்யூரிட்டி எழுந்து சல்யூட் வைப்பதும்,  பார்க்கிங் ல் இவன் காருக்கென்று தனியான  இடம்... அவன்  பயன்படுத்தும் ப்ரத்யேக லிப்ட்...

ஆங்காங்கே சிதறி கிடந்த புள்ளிகளை  எல்லாம் ஒன்றாக இணைத்து கோடு போட,   அப்பொழுதுதான் அவன் யாரென்ற  உண்மை மண்டையில் உரைத்தது.  

இவன் தான் இந்த நிறுவனத்தின்  மேனேஜிங் டைரக்டர் என்று இப்பொழுது புரிந்தது.

“ஓ..மை..காட்..! அப்படி என்றால் அன்று இவனைப் பற்றி  இவனிடமே அளந்து விட்டுக் கொண்டிருந்தேனே..!  அன்று எதுவும் திருப்பி சொல்லாமல்... தன்னை வெளிக்  காட்டவும் இல்லாமல் கல்லுளிமங்கன் போல கேட்டுக் கொண்டிருந்தானே..!

என்னைப்பற்றி எப்படியெல்லாம் உள்ளுக்குள் நக்கல் அடித்து சிரித்து  வைத்திருப்பான்

இப்படி இவனைப் பற்றி தெரியாமலயே இவன் உடன் உன் மகளை பழக விட்ட முட்டாள் நீயடி...” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டாள் சுரபி.  

அப்பொழுதுதான் இன்னொன்றும் உரைத்தது.  

ஹிட்லர் என்று எல்லாராலும் புகழப்படுபவன்...எப்படி அவளிடம் அவ்வளவு பணிவுடன் நடந்து கொள்கிறான்.  

நிக்க நிமிடம் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருப்பவன்... தினமும் ஐந்து நிமிடம் தன் மகளுடன் செலவளிப்பது எப்படி? நேற்று கூட கிட்டதட்ட மூன்று மணி நேரம் இவன்  தங்களுடன் நேரத்தை செலவிட்டு இருக்கிறான்  என்பது  உரைத்தது.  

இந்த நிறுவனத்தின் எம்.டி...ஒரு மல்ட்டி மில்லினர் என்ற கொஞ்சமும் பந்தா இல்லாமல்   எவ்வளவு இயல்பாக பழகினான்.  

அதோடு எத்தனையோ முறை அவனை திட்டியும்,  முறைத்தும் வைத்திருக்கிறாள்.  

அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாதவனாய்  மிக இயல்பாக அவளிடம் பழகியது அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

ஆனால் அடிக்கடி அவளிடம் அவன் காட்டும் அந்த அமர்த்தலான குரல்...அவனுக்கு எதிராய் அவள் எதுவும் செய்ய முடியாதவாறு அவளை கட்டுபடுத்தி வைக்கும்  அவனுடைய ஆளுமையான குரல்..!

அந்த குரல் மட்டும்,  அவன் சாதாரணமானவன் இல்லை..ஏதோ ஒரு பெரிய பொசிசனில் இருப்பவன்  என்று சொல்லாமல் சொல்லியது இப்பொழுது நினைவு வந்தது..

இவ்வளவு பெரிய ஆள்... பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியாக வளர்ந்து வருபவன்... தன் மகளிடம் தனிப்பிரியம் காட்டுவது ஏன் என்றுதான் புரியவில்லை அவளுக்கு..!

“சொல்லுமா..!  என்ன பனிஷ்மெண்ட் தரலாம்..? என்று குறும்பாக  கேட்ட அவனின் குரலில்,  மீண்டும் சுயநினைவுக்கு வந்தவள்,  அடுத்த கணம் தனது ஆச்சர்யம் மறைந்து கோபம் பொங்கி வந்தது.  

“இவன் எவ்வளவு தூரம் தன்னை மறைத்துக்கொண்டு என்னிடம் பழகி இருக்கிறான்... என்னை முட்டாளாக்கி இருக்கிறான்...”  என்று எண்ண இன்னுமாய் கோபம் பொங்கி எழ, தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து அவனை எரிக்கும் பார்வை பார்த்தவள்,  

“எதுக்கு இந்த டிராமா? என்றாள் அவன் கண்களை நேராக சந்தித்து அவனை முறைத்துப் பார்த்தவாறு

அவளின் முறைப்பில் சுழித்த திரண்ட இதழ்களையும்,  அவனை உருட்டி மிரட்டும் கண்களையும்  கண்டவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  

இதுநாள் வரைக்கும் தான் அவன்  யார் என்று தெரியாது. அதனால் அவனை ஒரு சாதாரண எம்பிளாய் என்று எண்ணி இவனை விரட்டுகிறாள்  என்று எண்ணியிருந்தான்.  

இப்பொழுது அவன் தான்  அந்த நிறுவனத்தின் உரிமையாளன்... மேனேஜிங் டைரக்டர் என்று  தெரிந்தபிறகும் அவனை நேருக்கு நேர் பார்ப்பதும், பார்த்து  முறைப்பதும்  கண்டு அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இதுவரை அவன் சந்தித்த, நெருக்கமாக பழகிய பெண்கள் யாரிடமும் இந்த நிமிர்வு இல்லை... அவனை நேருக்கு நேர் முறைத்து பார்த்ததில்லை. இந்த சில்வண்டு என்னிடமே....என்னையே மிரட்டுகிறாளே.. என்று இதழோரம் குறுநகை தவழ, அவன் புருவங்கள் ஒரு முறை ஆச்சர்யத்துடன் ஏறி இறங்கின.  

“என்ன ட்ராமா? “ என்றான் அவளை ரசனையுடன் குறுகுறுவென்று பார்த்தவாறு.

அவனின் அந்த குறுகுறு பார்வை அவள் உள்ளே என்னென்னவோ செய்தன...! அவள் இதுவரை அனுபவித்திராத உணர்வு அது..! புதுவித உணர்வு அது..! ஸ்யாமிடம் கூட இந்த மாதிரி உணர்ந்ததில்லை அவள்..!

அவனின் அந்த ஆளை ஊடுருவும் பார்வையை தாளாமல் அவள் தலை குனிந்து கொண்டாள்.. ஒரு சில நொடிகள் தான்.

அதற்குள் தன்னை  சமாளித்துக் கொண்டவள் பவுன்சிங் பேக் மாதிரி திரும்பவும் எகிறி குதித்தாள்.

“ஹலோ மிஸ்டர்...நீங்க ஏன் உங்களை எம்.டி...பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி என்று சொல்லவில்லை...? எதுக்காக உங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு என்னிடம் ட்ராமா பண்ணுனிங்க...” என்று மீண்டும் எண்ணையில் போட்ட கடுகாய் படபடத்தாள். 

ஹப்பா... என்ன ஒரு வேகம்... ஒரு நொடியில் ஓராயிரம் வார்த்தைகள் வந்து விழுகிறதே... பை தி வே ரொம்ப தேங்க்ஸ்...” என்றான் மந்தகாசமாய் புன்னகைத்தவாறு.

அவனின் அந்த மந்தகாச புன்னகையில் கட்டுண்டுதான் போனாள் காரிகை. தன்னை மறந்து ஒரு கணம் அவனையே  ரசித்து வைத்தவள், பின் தலையை உலுக்கி கொண்டு,

“எதுக்கு தேங்க்ஸ்?” என்றாள் வரவழைத்த மிடுக்குடன்.

“ஹ்ம்ம் என்னை பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி என்று புகழ்ந்ததற்கு...” மீண்டும் அதே மந்தகாச, காந்த புன்னகை...

அவனை பார்க்காதே...அவன் புன்னகையை ரசிக்காதே என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள், வேற பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டவள்,

“பேச்சை மாத்தாதிங்க...”  என்று முடிக்குமுன்னே

“நான் எங்கம்மா மாத்தினேன்... நான் அதே பேச்சில் தான் நிக்கறேன்..” என்று குறும்பு கூத்தாட புன்னகைக்க, சுரபிதான் பல்லை கடித்தான்.

“சரி..நேரடியாகவே கெட்கிறேன்...   எதுக்காக உங்களை மறைச்சு எங்ககிட்ட ட்ராமா பண்ணினிங்க...” என்று மீண்டும் முறைக்க ,

“வாட்? நான் என்னை மறைச்சேனா? மறைக்கிற உருவமா என் உருவம்? நான் ஆறரை அடிக்கும் மேலான ஹைட் மா... இந்த சர்க்கஸில் யானையை கூட மறைத்து விடலாம்..

ஆனால் என்னை போய் மறைக்க முடியுமா? “ என்று அவனின் பளீரென்ற வெண்பற்கள் தெரிய புன்னகைக்க,

சுரபிக்குத்தான் கண்ணை கட்டியது.

அவன் வேண்டுமென்றே தன்னிடம் பேச்சை வளர்க்கிறானோ? ஒருவேளை என்னை வைத்து காமெடி பண்ணிகிட்டு இருக்கிறானா? இல்லையே..அப்படி எல்லாம் நேரத்தை வீணடிக்கிறவன் இல்லை என்றுதானே இந்த விக்கியும், சினேகாவும் சொன்னார்கள்.

ஆனால் அப்படிப்பட்டவன் என்னிடம் ஏன் இப்படி வாய் வளர்த்துக்கொண்டு இருக்கிறான் என்று மண்டை குடைந்தது.

ஆனாலும் அவள் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியது நிறைய இருக்க, அவன் கிண்டலையும், கேலியையும், நக்கலையும் நையாண்டியையும் கூட்டி பெருக்கி குப்பையில் போட்டு மூடியவள் மீண்டும் சீரியஸ் மோட்க்கு வந்தாள்.

“மிஸ்டர்...  இப்படி எல்லாம் என்கிட்ட வளவளக்க வேண்டாம். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பதில் சொல்லுங்கள்...” என்று நிறுத்த,

“ஓ.கே டன்... வெட்டு ஒன்று துண்டு இரண்டு...” பதில் சொல்லிட்டேன்.. இது போதுமா?

என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்லி வைக்க, சுரபிக்கோ ஒரு பெரிய கட்டையை எடுத்து அவன் நடு மண்டையில் நச்சென்று போடவேண்டும் போல இருந்தது.

அவசரமாக கண்கள் கட்டையை துலாவ,

“ஹா ஹா ஹா சாரி மா... இங்க கட்டை எல்லாம் இல்லை...” என்றான் அதே குறும்பு சிரிப்புடன்.

அதைக்கேட்டு ஒரு நொடி அதிர்ந்து போனாள்.

அவள் மனதில் நினைத்ததை எப்படி கண்டறிந்தான் என்று திகைத்தவள் ,

ஆஹான்...அதான் அன்னைக்கே சொன்னானே..அடுத்தவர் மனதை படிக்க தெரிந்தவன் என்று. இவன் கிட்ட ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்...”  என்று எண்ணிக் கொண்டவள்,

“எதுக்காக உங்களை மறைச்சு.... “ மறைச்சிங்க என்று சொல்ல வந்தவள்... முன்பு இதற்கு அவன் நக்கலாக பதில் சொல்லியது நினைவு வர, பாதியில் முழுங்கி கொண்டு,

“ஏன் உங்களை பற்றி சொல்லவில்லை...” என்று மாற்றி சொன்னாள்.

“ஹா ஹா ஹா நீ என்னை பற்றி கேட்கவில்லை...நானும் என்னை பற்றி சொல்லவில்லை... இது எப்படி மறைச்சதாகும்? “ என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தினான்.

அப்பொழுதுதான் அவளுக்கும் மண்டையில் உரைத்தது.

எந்த இடத்திலும் அவனைப்பற்றி அவள் விசாரிக்கவில்லை. அவன் அவள் வேலை செய்யும் நிறுவனத்தில்தான் பநியாற்றுகிறான்...ஒரு கார் வைத்திருக்கிறான். அதற்கு ஒரு ட்ரைவரையும் போட்டு வைத்திருக்கிறான்  என்பது மட்டுமே அவள் அறிந்து வைத்திருந்தது.

அப்படி இருக்க, அவனைப்பற்றி மறைத்தான் என்று எப்படி சொல்ல முடியும்.. “ என்று தனக்குள்ளே யோசித்துக்கொண்டிருக்க, அவளின் முகத்தில் தெரிந்த சிந்தனைக்கோடுகளை கண்டவன்,

“வெல்.. நீ என்னை பற்றி எதுவும் கேட்கவில்லை.. நானும் சொல்லவில்லை. இதில் மறைத்தல் எங்கே..ட்ராமா எங்கே...? நீ என்னை பற்றி கேட்டு நான் வேற ஏதாவது மாற்றி சொல்லி இருந்தால் அது ட்ராமா...சீட்டிங் ஆக்கும்.

நான் எங்கயுமே என்னை பற்றி மறைக்கவும் இல்லை.. மறைக்க முயலவும் இல்லை...”  என்று தோள்களை ஸ்டைலாக குலுக்கி முறுவலித்தான்   இதழ்க்கடையோரம்  அடக்கப்பட்ட சிரிப்புடன்.

அப்பொழுதுதான் ஏதோ நியாபகம் வந்தவளாய்,

“ஏன் இல்லை....அன்னைக்கு நீங்க எந்த ப்ராஜெக்ட் ல்  வொர்க் பண்றீங்க என்று கேட்டதுக்கு, உங்களைப்பற்றி  ஏன் சொல்லலை? என்றாள் முறைத்தபடி

அவன் அப்பொழுதே அவனைப்பற்றி சொல்லி இருந்தால்,  இன்று இப்படி பல்ப் வாங்கி இருக்க தேவையில்லை...என்று கடுப்பாக வந்தது. .

அப்கோர்ஸ.. நான் எந்த ப்ராஜெக்ட் ல வொர்க் பண்றேனு கேட்டதுக்கு நான் வொர்க் பண்ணிகிட்டு இருக்கிற ப்ராஜெக்ட் பெயரைத்தான் சொன்னேன்.  

நான் இந்த ஆபீசுக்கு எம்.டி னாலும் அப்பப்பஅ ஒரு சில ப்ராஜெக்ட் ல நானும் வொர்க் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்

ஏனென்றால் எனக்கு அது பேஸன்... சோ அன்னைக்கு நீ நான் எந்த ப்ராஜெக்ட் னு கேட்டதுக்கு பதில் சொன்னேன்...”  என்று தோளை கேசுவலாக குலுக்கியபடி,  அவளை திருப்பி மடக்க, அப்பொழுதுதான் அவளுக்கும் உரைத்தது

அவனை  பற்றி சொல்ல விடாமல் இவள் தான் குறுக்கே புகுந்து அவனுடைய பெயரையும், அவன்  எந்த ப்ராஜெக்ட்ல் வேலை செய்தான் என்று கேட்டு வைத்தாள்.  

ஒரு கணமேனும் இவன்  இவ்வளவு பெரிய நிறுவனத்தின்  சொந்தக்காரன்  என்று எண்ணி இருந்திருக்கவில்லை. ஆனால் அப்பொழுது அவனைப் பற்றி எதுவும் கேட்கவில்லை என்று புரிந்தது.

இப்பொழுது அந்த உண்மை தெரிந்து விட, கூடவே அவன் ஏன்  தன் பிள்ளையிடம் இவ்வளவு பாசமாக இருக்கிறான்..? எப்படி என் அனுமதி இல்லாமல்  என் மகளை தூக்கி செல்ல முடியும்...”

என்றதாய் முக்கிய பிரச்சனை கண் முன்னே வந்து அவளை முறைத்து பார்த்தது.

“சை.. அவன் ஏன் அவனைப்பற்றி  சொல்லாமல்  விட்டானு நான் தெரிஞ்சுகிட்டு எனன பண்ண போறனாம்... முதல்ல ஒழுங்கான முக்கியமான கேள்விக்கு வரணும்...” என்று  மானசீகமாக தன் தலையில் அடித்துக்கொண்டவள்,

இப்பொழுது சுற்றி வளைக்காமல் நேராக  விஷயத்துக்கு வந்தாள்.

“எதுக்கு என் பொண்ணை வெளியில தூக்கிட்டு போனீங்க? என்றாள் அவனை முறைத்தபடி.

அவனும் அதற்குமேல் அவளை சீண்டாமல், போனால் போகட்டும் என்று மன்னித்து விட்டவனாய்,  ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தொடர்ந்தான்.

Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *