அத்தியாயம்-10
சற்று நேரம் அந்த குட்டியுடன் ஓடிப்பிடித்து விளையாண்டவனுக்கு
களைப்பாக இருந்தது.!
சமீபத்தில் இந்த மாதிரியெல்லாம் விளையாண்டது இல்லை.
கல்லூரி நாட்களில், மைதானத்தில்
விளையாண்டதோடு சரி.
காலையில் தினமும் தவறாமல் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது மட்டுமே
உடலுக்கு கொடுக்கும் வேலை.
மற்ற நேரமெல்லாம் மூளைக்கு மட்டும்தான் வேலை என்பதால், அரை மணிநேரம்
குழந்தையோடு ஒன்றிப்போய் ஓடி ஆடவும் களைத்துப் போனான்.
தண்ணீர் வேண்டும் போல தாகமாக
இருக்க, அப்பொழுதுதான்
அந்த குட்டியின் பின்னால் ஓடி வந்தவன், குனிந்து தன் முழங்கால்களை பிடித்துக்கொண்டு
மூச்சு வாங்க, அவன் முன்னே நீண்டது ஒரு தண்ணீர் பாட்டில் ஒன்று.
அதை விட, அந்த பாட்டிலை பிடித்து
இருந்த கரத்தில் இருந்த கண்ணாடி வளையல்கள் ஒரு நொடி அவனை ஈர்த்தது.
இன்றைய பெண்கள், இந்த மாதிரி கண்ணாடி
வளையல்களை அணிந்து பார்த்ததில்லை அவன்.
அதனால் அந்த மெல்லிய மென்கரத்தில், கண்ணாடி வளையல்கள் குலுங்க, குனிந்திருந்தவன் மெல்ல நிமிர்ந்து ஆர்வத்துடன் யார் அது என்று பார்க்க, அவன் முன்னே தண்ணீர் பாட்டிலை நீட்டியபடி நின்றிருந்தாள் சுரபி.
வெறுப்பும் இல்லாமல், நட்பும் இல்லாமல், துடைத்து வைத்ததைப்
போன்ற பளிச்சென்ற முகம்..!
இதழில் மருந்துக்கும் சினேகமான புன்னகை இல்லை...
“ஓடினதுல ரொம்ப டயர்டா தெரியறிங்க... இந்த தண்ணியை குடிங்க...
“ என்று இயல்பாக அவன் முன்னே பாட்டிலை நீட்டினாள்.
விகர்த்தனனுக்கோ ஆச்சரியமாக இருந்தது.
ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவன் உள்ளே எம்பி எம்பி குதித்துக் கொண்டிருந்தது.
இதுவரை அவன் முகம் பார்த்து யாரும் அக்கறையுடன் உபசரித்தது
இல்லை.
பசிக்கிறது என்றால் கூட அவனாகவே எடுத்து போட்டு சாப்பிட
வேண்டும்
அவன் பசி அறிந்து, சாப்டீங்களா... சாப்பிட வாங்க என்று யாரும் அழைத்ததில்லை சாமி
ஒருவனைத்தவிர.
அவ்வளவு ஏன்..! அவன்
மனைவி ஸ்வாதி கூட அவனிடம் அப்படி ஒரு அன்பை, பாசத்தை காட்டி இருக்கவில்லை.
“ஆனால் இந்தப் பெண் என்
முகம் பார்த்தே என் தேவையை கண்டுகொண்டாளே..எப்படி? “ என்று யோசித்தவாறு, அவள் நீட்டிய
தண்ணீர் பாட்டிலை வாங்கி, தன் தொண்டையில் சரித்துக் கொண்டான் விகர்த்தனன்.
அவனை பார்த்தவள்,
“எக்கு....” என்று அந்த
குட்டியும் அவன் காலை கட்டிக்கொண்டு குதித்தாள்.
எனக்கு என்பது எக்கு ஆகிப்போனது அவளுக்கு..!
“உனக்கு இல்லாமலா செல்லக்குட்டி...” என்றவாறு அவளின் உயரத்திற்கு கீழ குனிய முடியாமல், புல் தரையில் ஒற்றைக்காலை மடக்கி, மற்றொரு காலை பின்னால் இழுத்து அமர்ந்தவன், அவளின் வாயை அழகாக பற்ற, சுரபியோ பதறினாள்.
“இல்ல... அவளுக்கு
பாட்டில்ல குடிக்க வராது. இருங்க நான்
போய் சிப்பர் எடுத்துட்டு வர்றேன்...” என்று அவசரமாக நகர முயல,
“இட்ஸ் ஓ.கே. நான்
கவனமா கொடுப்பேன்...” என்றவன் அவளின் மோவாயை
நிமிர்த்த, அவளும் தன் குட்டி
வாயை ஆ வென்று திறந்து வைத்தாள்.
அதைப் பார்த்தவனுக்கு அப்படியே குஞ்சுப் பறவை, தன் தாயின் உணவுக்காக
வாயை பிளந்து கொண்டிருப்பதை போல தோன்ற, அதில் அப்படியே சொக்கி போனான்.
அவனே அந்த குழந்தையின்
தகப்பனாய் அந்த நொடி உணர்ந்தவன், அவன் உள்ளே தந்தை பாசம் பீரிட்டு பொங்க, வாஞ்சையோடு அவளின் வாயை
மெதுவாக பற்றி, கொஞ்சமாக தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரை அவள்
வாய்க்குள் சரித்தான்
அவள் மெதுவாக குடிக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சமாக
கட்டுப்படுத்தி சரிக்க, அந்த குட்டியும் லாவகமாக விழுங்கிக் கொண்டாள்.
அந்த குட்டி தண்ணீர் குடிக்கும் அழகு மனதை அள்ளியது. மெய்
சிலிர்த்துபோய் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நீரை புகட்டினான்.
ஏதோ பத்து குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்தவன் போல, லாவகமாக தண்ணீரை புகட்ட, அதை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணவளுக்கோ பெரும் ஆச்சரியம்
ஏனென்றால் அவளுக்கே தண்ணீரின்
அளவை கட்டுப்படுத்தி தன் மகள் வாயில் சரிக்க தெரியாது.
ஒரு முறை இப்படித்தான் அவள் தண்ணீர் வேண்டும் என்று கேட்க, வாட்டர் பாட்டிலில் இருந்த நீரை சரிக்க, அது நிறைய கவிழ்ந்து விட்டது.
அந்த குட்டி வாய் முழுவதும் நிரம்பி, விழுங்க முடியாமல் புரை ஏறிப்போய், முழி பிதுங்கி, ரொம்பவும் கஷ்டப்பட்டு போனாள்.
அதிலிருந்து எப்பொழுதும் சிப்பர் தான் அவளுக்கு. எங்கு
சென்றாலும் அதையும் எடுத்துக் கொண்டு சென்று விடுவாள்.
ஆனால் இந்த நெட்டை, லாவகமாக தண்ணீரை
புகட்ட, ஒரு கணம் தன்னை மறந்து அந்த காட்சியை ரசித்தவள், அடுத்தகணம் தன் தலையை உலுக்கிக்
கொண்டு, வேற பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
தண்ணீரை குடித்து முடித்ததும், அந்த குட்டியை தன் கரங்களில் அள்ளிக்கொண்டு, அவள் கன்னத்தில் முத்தமிட, அவளும் தன் ஈர
உதடுகளால் அவன் கன்னத்தை ஈரமாக்கினாள்.
அதேநேரம் அங்கே இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த பெரியவர்
ஒருவரின் செல்போனிலிருந்து அந்த பாடல்
ஒலித்தது...
நெஞ்சில் ஜில் ஜில்
ஜில் ஜில்
காதில் தில் தில்
தில் தில்
கன்னத்தில்
முத்தமிட்டால்..! நீ
கன்னத்தில் முத்தமிட்டால்..!
ஒரு தெய்வம் தந்த
பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும்
இடம் நீதானே!
வானம் முடியுமிடம்
நீதானே!
காற்றைப் போல நீ
வந்தாயே!
சுவாசமாக நீ
நின்றாயே!
மார்பில் ஊறும்
உயிரே..!
விகர்த்தனன் அப்பொழுதுதான் முதன் முதலாக கேட்கிறான் அந்த பாடலை.
ஏனோ அதன் ஒவ்வொரு வரிகளும் கேட்கும்பொழுதும் அவனுக்கு மெய் சிலிர்த்தது
அந்த குட்டியை தன் மார்போடு சேர்த்து அணைத்து கொண்டு, அங்கு சற்று தள்ளி
ஓரமாக இருந்த பெஞ்சில் சென்று அமர, சுரபியோ என்ன செய்வதென்று தெரியாமல்
திருதிருத்தாள்.
அவளுக்கு அங்கு நடப்பதை எல்லாம் கண்டு நெஞ்சுக்குள் அச்சமாக
இருந்தது.
“யார் இவன்? எதற்காக என் மகள் மீது இவ்வளவு பாசம் காட்டுகிறான்? ஒருவேளை என்னை மடக்க, என்னை இம்ப்ரெஸ் பண்ண, என் மகளிடம் பாசம் காட்டுகிறானா?” என்று அவசரமாக யோசித்தாள்.
ஆனால் கடந்த ஒரு
வாரத்தில், அவனின் பார்வை அவள் மீது ஒரு கணமும் தப்பாக படவில்லை.
இன்னும் சொல்லப் போனால் அவள் ஒருத்தி இருப்பதையே அவன் கண்டு கொண்டதில்லை.
அவனின் கவனம் முழுவதும் அவள் குழந்தையின் மீது தான் என்று உரைத்தது.
ஆனால் ஏன் என்றுதான் தெரியவில்லை? எதற்காக தன் குழந்தையையே சுற்றி சுற்றி வருகிறான் என்றுதான் குழப்பமாக இருந்தது.
“ஒருவேளை அவனுக்கு திருமணம்
ஆகி, குழந்தை இல்லையோ? குழந்தை இல்லாததால்
பிள்ளைப் பாசத்தில் இவள் மீது அக்கறை காட்டுகிறானோ?
அப்படி இருந்தாலும் இந்த உலகத்தில் குழந்தைகளுக்கா பஞ்சம்...? இதோ இந்த பூங்காவில் எத்தனை குட்டீஸ் பட்டாம்பூச்சிகளாய்
சுற்றி வருகிறார்கள்..!
அவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு எனக்கு இருக்கும் ஒரே சொந்தம்...
என் உலகமாய் இருக்கிற என் மகளை ஏன் நாட வேண்டும்...? “ என்று பல குழப்பங்கள்...கேள்விகள் அவள் உள்ளே முன்டி
அடித்தன.
அவளுக்கு இருந்த குழப்பத்தில், ஒன்றை கவனிக்க மறந்து விட்டாள்.
உலகத்தில் இருக்கும் குழந்தைகளில் ஒன்று கூட அவனை அப்பா என்று
பாசமாக அழைத்ததில்லை... அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டதில்லை..
அவள் மகள் மட்டும்தான் அவனை ஒட்டிக்கொள்கிறாள்.
அது ஏன் என்று ஆராய மறந்து போனாள்..! அதை ஆராய்ந்து இருந்தால், பின்னால் வரும் பல வலியும், வேதனையும் அவள் தவிர்த்திருக்கலாம்...
தனக்குள்ளே முன்டி அடிக்கும் பல குழப்பங்களுக்கு விடை
கிடைக்காமல், தள்ளாடியவள், அதற்கு மேல் தாங்க முடியாமல், நேரடியாகவே அவனிடம்
கேட்டு விட்டாள்.
*****
விகர்த்தனன் அந்த குட்டியை தூக்கி கொண்டு அருகில் பூச்செடிகளுக்கு
பின்னால் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு, தன் மடியில் அந்த குட்டியை வைத்துக்கொண்டு,
அவளிடம் இப்படியும்
அப்படியுமாக கையை ஆட்டி ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, அவளும் பெரிய மனுஷியாக
அதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
நின்ற இடத்தில் இருந்தவாறு சற்று நேரம் அவர்களையே முறைத்து பார்த்துக்
கொண்டிருந்தவள், இருவரும் தன்னை
கண்டு கொள்ளாமல் விட்டு விட, தலையை சிலுப்பியவள், வேறு வழியில்லாமல் அவன்
பின்னே சென்றாள்.
மற்றொரு பெஞ்சில் இருந்த அவளின் உடைமைகளை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று
அவர்கள் அமர்ந்து இருந்த பெஞ்சுக்கு சென்றாள்.
அவனை ஒரு முறை முறைத்து விட்டு, பெஞ்சின் மறுமுனையில் தள்ளி அமர்ந்து கொண்டாள்.
அவனோ ஒரு கணம் ஆச்சரியத்தோடு நிமிர்ந்து அவளை பார்த்துவிட்டு, மீண்டும் அந்த
குட்டியோடு கதை பேச ஆரம்பித்திருந்தான்.
என்ன பேசுகிறான் என்று அவளும் தன் காதை தீட்டி வைத்துக்கொண்டு
கேட்க, அவனோ
சின்ரெல்லா கதையை சொல்லிக் கொண்டு இருந்தான்.
சுரபி அந்த மாதிரி கதைகளை எல்லாம் தன் மகளுக்கு சொல்லியதில்லை.
அவ்வளவு ஏன்? இதுவரை கதையே சொல்லியதில்லை... பொதுவாக இரவில் உறங்குவதற்கு
பாட்டு பாடியிருக்கிறாள். மற்ற நேரம் அவளுடன்
ஏதாவது பேசி, சிரித்து, விளையாண்டு இருக்கிறாள்.
இந்த மாதிரி கதை சொல்லியதில்லை...!
அவனோ இளவரசி கதையை அவளுக்கு அழகாக சொல்ல, அந்தக் குட்டியும் தன்
கண்களை கொட்டி ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவன் கதையை முடிக்கும் வரை காத்திருந்தவள், பின் அவனை பார்த்து
“எதுக்காக?” என்றாள் மொட்டையாக.
அவளின் கேள்வியில் புருவத்தில் சிறு முடிச்சுடன் நிமிர்ந்து, அவளை பார்த்து, ஒற்றை புருவத்தை
உயர்த்தி என்ன? என்று கேட்காமல் கேட்டான் விகர்த்தனன்.
அதைக் கண்டவளுக்கோ எரிச்சல் பொங்கி வந்தது.
“இவன் பெரிய மைசூர் மகாராஜா... கேட்டால் வாயை திறந்து சொல்ல மாட்டாரு... ஒன்லி கண்ணாலயே ஆக்சன்
தான் பண்ணுவாராக்கும்...என்ன ஒரு திமிர்... ” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.
அதே நேரம் அதுவரை அந்த குட்டியிடம், குழைந்து, கனிவாக பேசிக்கொண்டு இருந்தவன், அவளைப் பார்த்த அந்த
ஒற்றைப் பார்வையில், ஆளுமையும் அமர்த்தலும், அதிகாரமும் இருந்தது.
“எப்படி இப்படி நொடியில் முகத்தை மாற்றுகிறான்? இதில் எது இவன்
உண்மையான முகம்? “ என்று ஆச்சர்யமும், அச்சமும் கூடவே வந்து
சேர்ந்தது.
“எதுக்காக இதெல்லாம்? “ மீண்டும் அவனை முறைத்தாள்.
மீண்டும் அவன் எதெல்லாம்? என்று, புருவத்தை உயர்த்தி
கேள்வியுடன் கேட்க, அவளும் இந்த முறை அவனைப்போலவே பார்வையால் அவன் மடியில் அமர்ந்திருந்த தன் மகளை
சுட்டிக் காட்டினாள்.
அதைக் கண்டவன் விழிகள் ஒரு நொடி மின்னி மறைந்தது.
அவனை அவள் இமிடேட் பண்ணுகிறாள் என்று கண்டு கொண்டவன் அழுத்தமான
இதழோரம் குறுநகை ஒன்று மெல்லிய கீற்றாய் வந்து சென்றது.
“ஓ... கதை சொல்றத சொல்றியா? இந்த வயதில் தான் பிள்ளைகளுக்கு
நிறைய கதை சொல்லனுமாம். அதோடு பிரின்சஸ்
எவ்வளவு ஆர்வமா கேட்கறா ? இந்த கதையை
இவளுக்காகவே நான் படித்துவிட்டு வந்தேன்...”
என்று கண்கள் பளபளக்க, முகம் பூரிக்க
சொல்ல, அவளுக்கோ
அவன் தன்னை ஒருமையில் விழித்தது எரிச்சலாக இருந்தது.
முன்ன பின்ன தெரியாத ஒருத்தியை இப்படியா மரியாதை இல்லாமல் ஒருமையில் அழைப்பது
என்று மீண்டும் கோபம் பொங்க, அவள் மனமோ
“ஹே சுரபி... இப்பொழுது அந்த மரியாதையை கேட்டு வாங்குவது நல்லதில்லை. முதலில் முக்கியமான பிரச்சனையை பார்...” என்று
அட்வைஸ் பண்ண, அதில் கொஞ்சம்
தாழ்ந்தவள், அவன் சொன்னதுக்கு
மறுகேள்வியாய்,
“அதுதான் ஏன் என்று கேட்கிறேன்? நீங்க ஏன் என் மகளுக்கு கதை சொல்ல வேண்டும்? “ என்று முறைக்க, அவனோ கூலாக
“ஏன்னா..... நான் அவளோட
அப்பா....” என்று அமர்த்தலாக சொல்ல,
“வாட்? “ என்று கத்தி அதிர்ந்தவள்,
“ஹலோ மிஸ்டர்.... யார் யாருக்கு அப்பா? “ என்று முகத்தில் கோபம்
கொந்தளிக்க, அவனை எரிக்கும் பார்வை
பார்த்து முறைக்க
“ஓ... சாரி சாரி.. டோன் பி டென்ஷன்...
நான் சொன்ன அப்பா...வேற அப்பா... இவள்தானே என்னை அப்படி கூப்பிடுகிறாள்... அதனால்
நானும் அதே மாதிரி சொன்னேன்...” என்று
சமாளிக்க
“லுக் மிஸ்டர்... அதைத்தான் அன்னைக்கே சொன்னேனே... அவள்தான் ஏதோ விவரம் தெரியாமல் உளறுகிறாள்
என்றால், நீங்களும் அப்படியே சொல்ல வேண்டாம்...” என்று முறைத்தாள்.
“ஓகே... டன்.... நான் சொல்லலை.... ஆனால் இந்த பிரின்சஸ் கிட்டயும் சொல்லு. என்னை அப்படி அப்பானு சொல்ல வேண்டாம் என்று....
“ என்று அவளை கார்னர் பண்ணி மடக்கினான்.
ஏனென்றால் கடந்த ஒரு வாரத்தில் அந்த குட்டியின் இயல்பு...அவளின் குணம் அவனுக்கு புரிந்து விட்டது.
அவளுக்கு தன்னை பிடிக்கிறது... எதனாலயோ அவனுக்கும் அவளை ரொம்ப ரொம்ப பிடித்துவிட்டது.
அவளை பார்த்ததிலிருந்து தன் தனிமை சிறைக்கு விடுதலை கிடைத்து விட்டது. அவன் வாழ்வில் இருந்த தனிமை
என்ற இருட்டை விரட்டி ஒளியேற்ற வந்த
தேவதை...குட்டி தேவதை அவள்..!
அவளுக்கும் அவனுக்கும் எந்த ஒரு சொந்தமும் இல்லை...பந்தமும்
இல்லை... என்றாலும், அவளின் மழலையில் அப்பா என்ற அழைப்பு, அவனுக்குள் முதன்
முதலாக தந்தை பாசத்தை சுரக்க வைத்திருந்தது.
சரியோ.. தப்போ... அவளை எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்க
வேண்டும்.. அவளை கொஞ்ச வேண்டும்...அவளின் அப்பா என்று அழைப்பை கேட்க வேண்டும் என்று மனம் தேடுகிறது.
அதை தடுக்கும் விதமாக சுரபி, அவனை முறைத்து அப்படி சொல்லாதே என்று தடா போட, அதனாலேயே அவள் எறிந்த பாலை திருப்பி குழந்தையின்
பக்கமாக போட்டுவிட்டான்.
“நீயே உன் மகளுக்கு சொல்லி புரியவை.. அவள் என்னை அப்பா என்று
கூப்பிட வேண்டாம் என்று சொல்லிக்கோ... உன் மகளை நீ கண்ட்ரோல் பண்ணிக்கோ... ”
என்று சொல்லிவிட, அவளும்தான் அதைத்தான் தன் மகளிடம் கடந்த ஒரு வாரமாக
சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
அவன் அவளின் அப்பா
இல்லை என்று சொன்னால், அவள் மகளோ தலையை இருபக்கமும் உருட்டி அப்பா... என்று சொல்லி வைக்கிறாள்.
அவளை எப்படி திருத்துவது என்று கவலையாக இருந்தது சுரபிக்கு.
அதுவரை கோபம் கொண்டு, அவனை முறைத்தபடி அமர்ந்திருந்த அவளின் முகத்தில், இருள் படர்ந்ததாய்...கூம்பி இருந்தவளின் கவலையை கண்டவன், மனம் ஏனோ தாங்கவில்லை.
அவள் முகத்தில் படர்ந்திருக்கும் கவலை என்ற இருளை விரட்டி
எப்பொழுதும் பௌர்ணமி நிலவாய் அவள் முகத்தை ஜொலிக்க வைக்க வேண்டும் என்ற வேகம்
அவனையும் அறியாமல் அவன் உள்ளே எழுந்தது.
“இட்ஸ் ஓகே ஸ்வாதி...ரொம்ப டென்சன் ஆகாத. ப்ரியா விடு...” என்று
சொல்ல, அவளோ ஸ்வாதி என்ற
அழைப்பில் விலுக்கென்று நிமிர்ந்தவள்,
“நான் ஸ்வாதி இல்லை... சுரபி...” என்றாள் அவனை முறைத்தவாறு.
“சாரி சுரபி....” என்று அழைக்க, அவளோ
“மிஸஸ் சுரபி...” என்று
திருத்தினாள்.
“அப்புறம் என்னை ஒருமையில் அழைக்க வேண்டாம்...” என்று அதட்டினாள்.
அவனோ பின்னால் சொன்னதை கண்டுகொள்ளாமல், அப்பொழுதுதான் அவள் பெயரை கவனித்தவன்,
“சு... ர.... பி....” என்று ஒவ்வொரு எழுத்தாக சொல்லி பார்த்து
“நைஸ் நேம்..” என்று .புன்னகைத்தான்.
ஏனோ அவன் உச்சரித்த விதமும், அவன் உச்சரித்த ஒவ்வொரு எழுத்தும் அவளுக்குள், பல நூறு பட்டாம்பூச்சிகளை பறக்க வைத்தது.
மனம் படபடப்பாக அடித்துக்கொண்டது.
அதை உணர்ந்ததும் தூக்கிவாரிப் போட, திடுக்கிட்டு அதிர்ந்து போனாள்.
அடுத்த நொடி தன்னை இறுக்கிக் கொண்டாள்..
“லுக் மிஸ்டர்... இனிமேல் என் குழந்தையை பார்க்க வராதிங்க.” என்றாள்
எங்கோ வெறித்தபடி.
“ஏனோ? “ என்று புருவம் முடிச்சிட, தன் புருவத்தை உயர்த்தினான் அமர்த்தலாக.
“பார்க்கிறவங்க தப்பா பார்ப்பாங்க...” என்றாள் மீண்டும் அருகில் இருந்த ஒரு அழகிய
ரோஜாவை வெறித்து பார்த்தவாறு.
“ஏன் தப்பா பார்ப்பாங்க? ஒருவேளை என்னை பார்த்தால், புள்ளை பிடிக்கிறவன்
மாதிரி இருக்கா? இந்த குட்டியை நான் தூக்கிக்கிட்டு போய்விடுவேனோ
என்று தப்பா பார்ப்பார்களா?
இல்லையே...என்னை பார்த்தால் கொஞ்சம் டீசன்டானவன் மாதிரி தானே இருக்கேன்...”
என்று குனிந்து தன்னையே பார்த்துக் கொள்ள, அவள் விழிகளும் அவன் மீது தான் படர்ந்து மீண்டது.
“இவனைப் பார்த்தால் புள்ளை புடிக்கிறவன் என்று யாராவது
சொல்லுவாங்களா? ஆள்.. படு
ஹேன்ட்சமா... ஹீரோ மாதிரி இல்ல இருக்கான்...
இங்க இருக்கிற எல்லா பொண்ணுங்களும் இவனைத்தானே சைட் அடிச்சாளுக..
இப்ப கூட மறைவில் இவன் அமர்ந்து இருந்தாலும், எத்தனை கண்கள் இவனை
வட்டமிடுகின்றன...
இப்படி ஒரு ஆணழகனைப்போய் எப்படி புள்ளை புடிக்கிறவன் என்று
சொல்வதாம்... ” என்று தனக்குள்ளே
சிரித்துக் கொண்டாள்.
“தேங்க்ஸ் சுரபி...” என்றான் உல்லாசமாக சிரித்தவாறு.
அவளோ திடுக்கிட்டு அதிர்ந்து விழித்தவள்,
“எதற்கு? “ என்பதாய் தன்
புருவத்தை உயர்த்த, அதில் மீண்டும் ஒரு
ஒளிக்கீற்று அவன் முகத்தில்.
“நான் ஹீரோ மாதிரி இருக்கேன் என்று ஒத்துக்கொண்டதற்கு...” என்று
இதழ் துடிக்க, கண் சிமிட்டி
குறும்பாக சிரித்தான்.
ஏனோ அவளுக்கு அந்த குறும்புக்கார கண்ணன் முன்னால் வந்து
நின்றான்... அதில் இன்னுமாய் அதிர்ந்தவள், தன் தலையை உலுக்கிக் கொண்டு, முயன்று அவனை முறைத்தவள்,
“ஹலோ..நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம்... நான் எப்ப உங்களை
ஹீரோ னு சொன்னேன்..” என்றாள் மிடுக்குடன்.
“ஹா ஹா ஹா.. நீ வாய் திறந்து சொல்லாவிட்டாலும் உன் மனம்
அதைத்தான் சொல்லியது...” என்று மீண்டும் அவன் விஷமமாக சிரித்தான்.
“ஐயோ.. நான் மனதில் நினைத்ததை இவன் எப்படி கண்டறிந்தான்..?” என்று திடுக்கிட்டு போனாள்.
“யெஸ்..யெஸ்... சுரபி.. எனக்கு அடுத்தவங்க மனசை படிக்க
தெரியும். அதனால் இனிமேல் என்னை பற்றி ஏதாவது நினைப்பதாக இருந்தால் ஜாக்கிரதையாக
நினை... “ என்று மீண்டும் விஷமமாக சிரிக்க,
“ஹலோ.. நான் எதுக்கு உங்களை நினைக்க போறேன்... பை தி வே நாம
பேசிக்கிட்டிருந்த விஷயத்துக்கு வருவோம்... “ என்று டாபிக்கை மாற்ற,
“என்ன பேசிக்கிட்டிருந்தோம்...” என்று அவனும் கேள்வியாக பார்க்க,
“அதான் சார்... இனிமேல் என் மகளை பார்க்க வராதிங்க... பார்க்கிறவங்க
தப்பா பார்ப்பாங்க...என்று சொன்னேனே...” அவனுக்கு நினைவு படுத்த முயன்றாள்.
“ஓ..ஆமாம் இல்ல... சரி.. என்ன தப்பா பார்ப்பாங்க..? அதுதான் எனக்கு புரியல.. “ என்று . புரியாமல் அவளை பார்க்க , அவளோ மானசீகமாக தலையில்
அடித்துக் கொண்டாள்.
“இவனுக்கு நான் சொல்ல வருகிறது புரியலையா? இல்லை புரிந்தும்
புரியாதவன் மாதிரி என் வாயை கிளறுகிறானா? “ என்று உள்ளுக்குள் நொந்து
கொண்டவள்,
“அது வந்து...இவள் உங்களை அப்பா என்று அழைத்தால், பார்க்கிறவர்கள் தப்பா பார்ப்பாங்க...” என்று இழுத்தாள்.
“என்ன தப்பா பார்ப்பாங்க? “ என்று அவனும் இடக்காக கேட்க
“ஹ்ம்ம்ம் உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு தப்பா பேசுவாங்க...” என்றாள் பல்லை கடித்தபடி
அதைக் கேட்டு இன்னும் குழப்பமானவன்
“வாட் யூ மீன்? உன்னையும் என்னையும்
எதுக்காக சேர்த்து வச்சு தப்பா பேசுவாங்க...” என்று குழப்பத்துடன் கேட்க
“ஐயோ... இவனுக்கு
எப்படி புரியவைப்பது? “ என்று மீண்டும் தலையில் அடித்துக் கொண்டாள்
“நான் என் குழந்தைக்கு அம்மா... அவள் உங்களை அப்பா என்று கூப்பிட்டால் என்ன
அர்த்தம்? “
“என்ன அர்த்தம்? “ என்று மீண்டும் அவளையே கேள்வி கேட்க
“உங்களை அவளுடைய அப்பா என்று தான் நினைப்பார்கள்...”
“நினைக்கட்டும்...”
“ஆனால் நீங்க அவளுடைய அப்பா இல்லையே...”
“சோ வாட்? குழந்தை ஆசைப்படுறா... கூப்பிட்டு போகட்டுமே ...” என்று தோள்களை
குலுக்கி, கேசுவலாக சொல்ல,
இவன் மண்டையில நங்கு
நங்குன்னு நாலு கொட்டு கொட்டி தான் புரிய வைக்க வேண்டும் போல என்று பல்லை கடித்துக் கொண்டவள்.
“ஹலோ மிஸ்டர்... அவள் உங்களை அப்பானு சொல்றது என்னையும் பாதிக்கும்...” என்றாள்
இழுத்து வைத்த பொறுமையுடன்.
“அப்படியா? அம்மு என்னை
அப்பான்னு கூப்பிட்டா, அது உன்னை எப்படி
பாதிக்கும்? “ என்று மீண்டும் குழப்பத்துடன் அவளை பார்க்க,
இவனுக்கு வெளிப்படையாக
சொன்னால் தான் புரியும் என்று மீண்டும் உள்ளுக்குள் திட்டிக் கொண்டவள்,
“சரி...நேரடியாகவே சொல்றேன்... நான் இவளுக்கு அம்மா னா, அவள் உங்களை அப்பா னு, கூப்பிட்டா, நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன ரிலேசன்ஷிப்? “ என்று திரும்பவும் மறைமுகமாக
கேட்க, அவனோ
“என்ன ரிலேசன்ஷிப்? “ என்று மீண்டும் புரியாதவன் போல கேட்க
இந்த முறை அவன் தலையை கொட்ட அவள் கை நீண்டே விட்டது.
கடைசி நொடியில் சமாளித்து, தன் கையை இழுத்துக்
கொண்டவள்,
“ஹ்ம்ம்ம்ம் நானும் நீங்களும் ஹஸ்பென்ட் அன்ட் வைப் னு அர்த்தமாகும்...” என்றாள்
பல்லை கடித்து, வார்த்தைகளை அழுத்தமாக கடித்து துப்பியபடி.
“இருந்துட்டு போகட்டும்...” என்று அனிச்சையாய் சொன்னவன், அப்பொழுதுதான் அவள்
சொல்ல வந்ததை புரிந்து கொண்டவன், உடனே தன் கீழ் உதட்டை கடித்துக் கொண்டான் விகர்த்தனன்.
அவனின் அந்த செய்கையை காண பெண்ணவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது..!
ஒரு ஆண் தன் உதட்டை கடித்துக் கொள்வதை இப்பொழுதுதான் பார்க்கிறாள்.
அவனுடைய கம்பீரமான தோற்றத்திற்கும், ஆளுமையான நிமிர்வுக்கும், அவன் தன் கீழுதட்டை
கடித்து லேசாக வெட்கப்படுவதை காண, அவளுக்கு ஆச்சர்யமாகவும், மனதை அள்ளுவதாகவும் இருந்தது.
உடனே மீண்டும் பட்டாம்பூச்சிகள்
அவள் உள்ளே குபீரென்று றெக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தன..!
0 comments:
Post a Comment