அத்தியாயம்-2
பெங்களூரில் ஏர்போர்ட் ரோட்டில் பல ஏக்கர்
பரப்பளவில் பறந்து விரிந்திருந்த சொகுசு பங்களாவில், தன் அறையில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அவன்...!
முன்னனி தொழில் அதிபர்களில் சமீபத்தில் முதலாம் இடத்தை பிடித்து
இருப்பவன்..!
ஆறடிக்கும் மேலான உயரம்...அவனுடைய அத்தனை அலுவல்களுக்கு
இடையிலும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் முறுக்கேறிய புஜங்கள்.. திண்ணென்றிருந்த
சிக்ஸ் பேக் படிக்கட்டு தேகம்...
பார்க்கும் பெண்கள் மட்டும் அல்லாது ஆண்களைக்கூட அவன் பக்கமாய்
கவர்ந்து இழுக்கும் வசீகர கண்கள்.
முப்பத்து ஐந்து வயது ஆகி இருந்தாலும், பார்ப்பதற்கு முன் இருபதுகளில் இருப்பவன் போலதான் அவன்
தோற்றம்.
அகன்ற நெற்றி...கொஞ்சமாக சதை கூடியிருந்த குண்டு கன்னங்கள்...
அழுத்தமான இதழ்கள்.. அதன் சற்று மேலே எப்பொழுதும் ட்ரிம் செய்யப்பட்ட கச்சிதமான
மீசை..
சிரிக்கும்பொழுது பற்பசை விளம்பரத்தின் மாடல் போல , வரிசையாய் வீற்றிருக்கும் வெண்பற்கள் இன்னுமாய் அவனுக்கு
வசீகரத்தை கூட்டும்தான்.
ஆனால் ஏனோ அவன் சிரிப்பதே அறிதாக இருந்தது. தொழில் ரீதியாக
பழகுபவர்களிடம் மெல்ல இதழ் திறந்து நட்புக்காக லேசாக புன்னகைத்து வைப்பதுதன்.
வாய் விட்டு, மனம் விட்டு
சிரிச்சே ரொம்ப நாள் ஆகி இருந்தது.
இப்பொழுது கூட, படுத்தாலே, வெண்மேகங்கள் மீது
படுப்பதை போல, அவ்வளவு மிருதுவாய், படுப்பவர்களை உள்வாங்கி கொள்ளும் விதமாய் மெத் மெத் என்று இருந்த அந்த விலை உயர்ந்த சொகுசு பஞ்சு மெத்தையில்
லேசாக புரண்டு கொண்டிருந்தான்.
வழக்கம் போல காலை ஆறு மணிக்கே விழிப்பு வந்து விட்டாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை
இரவு நீண்ட நேரம் அடித்த சரக்கும், பப்ல் அவன் போட்ட ஆட்டமும் அவன் கை கால்கள்
எல்லாம் விண் விண் என்று தெறித்தது.
நேற்று அடித்த சரக்கின் வீரியம் இன்னுமே மீதமிருக்க, அதன் பலனாய், தலை பாரமாக கனத்தது.
நன்றாக விடிந்துவிட்டது என்று அலார்ம் அடித்து அவனை விழித்துக்கொள்ள
சொல்லி அறிவு கட்டளை இட்டாலும், அவன் உடல் அதற்கு சம்மதிக்கவில்லை.
என்னை இன்னும் கொஞ்சம் தூங்க விடு கெஞ்சியது அவன் இமைகள்.
எப்பொழுதும் அலார்ம் வைக்காமலயே ஆறு மணிக்கு எழுந்து விடுபவன்...
அந்த பழக்கத்தில் இன்றும் விழித்துக்கொண்டது அவன் மூளை.
ஆனால் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் , எழுந்திருக்க விடாமல் அடம்பிடித்தது அவன் உடல்.
அதனால் சற்று நேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.
அதே நேரம் கொஞ்சம் தெளிந்திருந்த அவன் மூளையோ, அவனுக்கான இன்றைய பணிகளை
கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி அவனை பார்த்து
முறைத்தது.
அதுவும் அலுவலகத்தில் காலையிலயே முக்கியமான மீட்டிங் இருப்பதால்
அதற்கு அவன் சீக்கிரம் செல்ல வேண்டும் என்றும் எச்சரித்தது.
அடுத்த கணம் தன் நீண்ட வலிமையான கரங்களையும், கால்களையும் நீட்டியும், மடக்கியும், உடலை வில்லாக வலைத்தும் படுக்கையில் உருண்டு புரண்டு தன்
சோம்பலை அடித்து துரத்தினான்.
பின் எழுந்து, அறையை ஒட்டியிருந்த
குளியல் அறைக்குள் சென்று தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு, உடற்பயிற்சி
செய்வதற்காக ஒரு அரைக்கால் ட்ராயரும், டைட்டான கை இல்லாத நைக் ஸ்போர்ட்ஸ் டிசர்ட்ம் அணிந்தவன், தன் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றான்.
*****
அந்த அதிகாலை நேரம்...!
வியர்வை வடிய, தன் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருக்க, அவன் மனதில் என்னவோ வெறுமை
குடிகொண்டிருந்தது.
எதிலுமே மனம் ஒட்டாததை போல வெறுமையில் அவன் மனம் தவித்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அதே உணர்வு தான் அவனை ஆட்டிப்
படைத்துக் கொண்டிருந்தது.
மற்ற நாட்களில் அலுவலக வேலைகளில் பிசியாகி போய்விட, இந்த வார இறுதியை நெட்டி தள்ளுவதுதான் அவனுக்கு கடினமாக
இருந்தது.
என்னவோ எல்லாம் இருந்தும் இல்லாத ஒரு ஒட்டாத நிலை...
அள்ள அள்ளக் குறையாத கடல் தன்னை சூழ்ந்து
இருந்தாலும், அதில் இருந்து ஒரு
வாய் தண்ணீர் அள்ளி குடிக்க முடியாமல் தாகத்தில் தவிப்பவனை போல அவன் உள்ளே
தனிமையின் தவிப்பு.
தன் முன்னே பலவிதமான அறுசுவை உணவுகள் கடை பரப்பி இருந்தாலும் , அதில் ஒன்றைக்கூட எடுத்து சாப்பிட முடியாமல் தவிப்பனை போன்ற
ஒரு தவிப்பு.... தனிமையின் தவிப்பு...! வெறுமையின் தவிப்பு..!
அவ்வளவு பெரிய பங்களாவில் அவன் மட்டும் தனித்து வசிக்க, வெறுமை இருக்காதா? தனிமை வாட்டாதா?
வீட்டைக் கூட்டி துடைத்து பெருக்க என்று ஒவ்வொன்றுக்கும்
வேலையாட்கள் அவ்வப்பொழுது அந்த வீட்டின் உள்ளே நடமாடிக் கொண்டுதான் இருந்தனர்
ஆனாலும் அவனுக்கு என்னவோ தான் மட்டும் தனித்து விடப்பட்டதை
போன்ற வெறுமை ஆட்டி வைக்கத்தான் செய்தது.
மதியம் வரை அதன் உடன் போராடியவன், அதற்குமேல் சமாளிக்க முடியாமல் நேற்று மதியத்திற்கு மேல்
கிளம்பிச் சென்றுவிட்டான்.
மற்ற நாட்களில் தன் தனிமையை விரட்ட, நெருப்புக்கோழி மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொள்வதை போல, அவன் தன் அலுவலக
வேலைக்குள் தலையை நுழைத்துக் கொள்வான்.
அதனாலேயே அவனுடைய தொழில்கள் எல்லாம் கிடுகிடுவென வளர
ஆரம்பித்தது.
இரண்டு வருடங்களுக்கு முன் எங்கேயோ ஒரு சிறு புள்ளியாக இருந்த, பத்தோடு பதினொன்றாக இருந்தவன்... இப்பொழுது நம்பர் ஒன் பிசினஸ்மேனாக முன்னேறிக்கொண்டு
இருந்தான் என்றால் அதற்கு அவனின் அயராத
உழைப்புதான் காரணம்.
அந்த அயராத உழைப்புக்கு காரணம் அவன் தனிமை என்பது அவன் மட்டுமே
அறிந்த ரகசியம்.
*****
முப்பத்து ஐந்து வயதிலயே அனைத்தையும் ஆண்டு, அனுபவித்து ரசித்து
வாழ்ந்து விட்டான்.
உலகத்திலயே அதிக விலை உயர்ந்த பிரான்சு நாட்டு போதைப் பொருளான காக்னக் ஐ ருசித்து இருக்கிறான்.
அதன் பாட்டில்
ஸ்டெர்லிங் பிளாட்டினம் மற்றும் 24 கேரட் தங்கத்தாலும் 6,500 வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்டது.
அதன் விலை இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள்..!
ஆனாலும் அவன் விலையை பற்றி கவலைப்பட்டதில்லை.
எல்லாரும் பெருமையாக பேசிக்கொள்ளும் அந்த போதைப்பொருளில்
என்னதான் போதை இருக்கிறது என்ற ஆராய்ச்சியும், ஆவலும்தான் மேலோங்கி நின்றது.
அதனாலயே விலையை பார்க்காமல் அதை வாங்கி ருசித்து விட்டான்.
அதோடு நிறுத்தவில்லை..!
அடுத்ததாய் 6.2 மில்லியன் டாலர் விலை உயர்ந்த இஸ்லே விஷ்கி... ஒரு
மில்லியன் டாலர் பொருமான மெண்டிஸ்
கோக்கனட் பிராந்தி.... என்று எல்லா வகையான மதுபானங்களிலும், உலக புகழ் பெற்ற
விலை உயர்ந்த மதுபானங்களை ருசித்து விட்டான்.
வெளிநாட்டு மதுபானங்கள் என்று இல்லாமல் உள்நாட்டு சரக்குகளையும்
விட்டு வைக்கவில்லை.
அவ்வளவு ஏன்... கிராமத்தில் கிடைக்கும் பட்டை சாராயத்தில்
இன்னும் கிக் இருக்கும் என்று யாரோ ஒரு குடிமகன் சொன்னதைக்கேட்டு அதைக்கூட ட்ரை
பண்ணிவிட்டான்.
அவன் உடலுக்கு அது ஒத்துக்கொள்ளாமல் வாந்தி எடுத்து மயங்கி
சரிந்தது வேற கதை.
மதுவிலயே அத்தனையும் ருசித்தவன், மாதுவை மட்டும் விட்டுவிடுவானா என்ன?
வட இந்தியா, தென் இந்தியா என்று
உள் நாட்டின் அனைத்து விதமான பெண்களையும் அனுபவித்து விட்டான்...
அது போரடித்து போக, வெள்ளை வெளேர் என்ற
தோளுடன், வெட்கம் என்றால்
கிலோ என்ன விலை என்று கேட்கும் வெளிநாட்டு பெண்கள்... உலக அழகிகள்... என அனைத்து வகையான பெண்களிடமும் எல்லா விதமான சுகத்தையும்
அனுபவித்து விட்டான்.
உலகத்திலயே அபாயகரமான விளையாட்டான பங்கி ஜம்ப், போன்றவற்றையும் கூட அனுபவித்து விட்டான்.
இதெல்லாம் போதாது என்று , அமெரிக்காவிற்கு டாலர் சம்பளம் என்றால், இந்தியாவிற்கு பெருமை அழகான மனைவிகள் என்றதன் படி, நம்ம கலாச்சாரப்படி
திருமணம் முடித்து மனைவியுடனும் வாழ்ந்து விட்டான்.
இந்த குறுகிய காலத்திலேயே எல்லாவற்றையும் அனுபவித்து
விட்டவனுக்கு இப்பொழுது வாழ்க்கை வெறுமையாக இருந்தது.
வாழ்க்கையில் வெறுமை பரவாமல் இருக்க வேண்டும் என்றால்...ஒரு
பிடித்தம் இருக்க வேண்டும்.
ஒரு பிடித்தம் இருக்க வேண்டும் என்றால்
ஏதாவது குறிக்கோள், லட்சியம் இருக்க
வேண்டும்.
ஆனால் இந்த வளர்ந்தவனுக்கோ, குறிக்கோளாக வைத்து முன்னேற என்று எதுவும் இல்லாததால் மனதில்
வெறுமை சூழ்ந்து கொண்டது என்று கூட சில நேரம் யோசித்திருக்கிறான்.
அதற்காகவே தொழிலில் நம்பர் ஒன்னாக வர வேண்டும் என்ற குறிக்கோளை வைத்து, அயராது உழைத்தவன் அதில் கொஞ்சம் தனிமையை விரட்டியவன், இப்பொழுது அதையும்
சாதித்து விட அடுத்து இலக்கு
என்று எதுவுமே இல்லாமல் போனது.
மனதில் இருக்கும் வெறுமையை போக்க மதுவும், உடலில் அரிப்பு ஏற்படும் பொழுதெல்லாம் அதை தணிக்க, உடல் சுகத்திற்கு
என்று நிறைய பெண்கள் அவன் நாடாமலயே வலிய வந்து
விழுந்ததால் ஒரு எல்லைக்கு மேல் அதுவுமே இப்பொழுது வெறுத்து விட்டது.
நேற்று கூட அந்த பப்பில் அவன் ஆடிய நளினமான செக்சியான ஆட்டத்தில்
மயங்கி , முன்னணி கதாநாயகி ஒருத்தி ஓடி வந்து அவனை இறுக்க
கட்டிக் கொண்டு அவன் இதழோடு இதழ் சேர்த்து அழுந்த முத்தமிட்டு, அத்தனை பேர் மத்தியில்
அவனை படுக்கைக்கு அழைக்க, அவனுக்கு என்னவோ அதில் நாட்டம்
இல்லாமல் போனது.
அந்த பப்பில் இருந்த அத்தனை பேரும், அவளின் செழிப்பான, வனப்பான
முன்னழகிலும், சிக்கென்று இருந்த பளபளக்கும்
பளிங்கு மேனியையும் கண்டு, தேன் குடித்த நரிபோல, தலை சுற்றிப்போய், போதையுடன் எச்சிலை கூட்டி விழுங்கியவாறு அவளின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி தவித்துக் கொண்டிருக்க
, அவளோ அவன் தான் வேண்டும் என்று அடம்பிடித்தாள்.
அவனுக்குத்தான் அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
அதோடு அந்த ஆட்டமும் வெறுத்து விட, அட்டையாக தன்னோடு சேர்த்து ஒட்டிக் கொண்டிருந்தவளை பிரித்து தள்ளி விட்டு, காரை எடுத்துக்கொண்டு நேராக தன் வீட்டிற்கு வந்து பொத்தென்று மெத்தையில்
விழுந்து விட்டான்.
அது போன்ற எத்தனையோ அழகிகளுடன் உல்லாசமாக பொழுதை கழித்த
தருணங்கள் நினைவு வர, இப்பொழுது
அதெல்லாம் வெறுப்பாக தோன்ற, அவனுக்கே அவனை
நினைத்து குழப்பமானது.
“எனக்கு ஏன் பெண் சுகம் கூட சுகிக்கவில்லை? “ என்று தன்னையே சுய
ஆராய்ச்சி செய்தவன், அங்கிருந்த ட்ரெட்மில்லில்
வேகத்தை கூட்டி அதி வேகமாக ஓடத் தொடங்கினான்.
ஆனால் அந்த வேகம் கூட அவனுக்கு அமைதியை கொடுக்கவில்லை.
அதன் பின் சில பல உடற்பயிற்சிகளை செய்தவன், பின் அருகிலிருந்த நீச்சல்
குளத்திற்கு சென்று உடல் வலிக்க நீந்தி முடித்தான்.
அதற்கு மேல் நேரமாகிவிட்டது என்று உறைக்க, தன் அறைக்குத்
திரும்பியவன், குளியல் அறைக்கு
சென்று, அங்கிருந்த பாத்டப்பில் சுடுநீரை நிரப்பி, அதில் கொஞ்ச நேரம் மிதந்தான்.
அந்த இதமான வெந்நீர் அவன் மனதுக்கும் உடலுக்கும் இதத்தை கொடுக்க, இப்பொழுது கொஞ்சம்
பெட்டராக இருந்தது.
அந்த பாத் டப்பிலயே சற்று நேரம் மூழ்கி இருந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவனுக்கு இன்னுமே கொஞ்சம் பெட்டராக இருந்தது.
*****
குளியல் அறையில் இருந்து வெளிவந்தவனுக்கு, அவனுடைய உற்சாகம் கொஞ்சமாக திரும்பி இருக்க, ஏதோ ஓர் ஆங்கிலப் பாடலை
ஹம் பண்ணியபடி அலுவலகத்திற்கு கிளம்ப ஆரம்பித்தான்.
அன்று முக்கியமான மீட்டிங் இருந்ததால், கருப்பு நிற பார்மல் பேன்ட்டும், தும்பைப் பூ போன்ற உடலை
இறுக்கிப் பிடித்த ரேமண்ட் சட்டையும் அணிந்து கொண்டு, அதற்குப் பொருத்தமான டையையும் கட்டிக் கொண்டான்.
வார்ட் ரோபில் தொங்கி கொண்டிருந்த பல வகையான ப்ளேசரில், கருப்பு நிற ப்ளேசரை எடுத்து அணிந்து கொண்டு, கண்ணாடியில் அவன் பார்வை மிடுக்குடன் பதிந்தது.
அந்த கோட் சூட்டில் இன்னுமே கம்பீரமாக தெரிந்தான்.
அவனுக்குள்ளே சிறு திருப்தி பரவ, சின்ன புன்னகையுடன் திரும்பியவன், பார்வை எதிரில் மாட்டி
இருந்த புகைப்படத்தின் மீது படிந்தது.
ஒரு குட்டி தேவதை அவனை பார்த்து அழகாக புன்னகைத்தாள்..!
எத்தனையோ முறை அந்த படத்தை பார்த்து இருக்கிறான் தான். ஆனால்
அது ஏனோ அவன் கருத்தில் பட்டது இல்லை.
இன்று அந்த குட்டி தேவதையை பார்க்கும் பொழுது, அதுவரை கனத்து
இருந்த அவன் மனம் லேசானதை போல இருந்தது.
அதுவரை அவன் உள்ளே அழுத்தி வந்த பாரம்... தனிமை என்ற வெறுமை கொஞ்சமாக குறைவதை போல இருந்தது.
மீண்டும் அந்த மழலையின் புகைப்படத்தை ஆழ்ந்து பார்க்க, பல் இல்லாத பொக்கை வாய் சிரிப்பில் கொஞ்சமாக மயங்கி போனான் அந்த நெடியவன்.
மீண்டும் அந்த அறையைச் சுற்றி பார்க்க, அந்த அறை முழுவதுமே விதவிதமான குழந்தைகளின் புகைப்படங்கள் அவனை
பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
இந்த புகைப்படங்களை மாட்டிய அன்று,
“இத்தனை போட்டோவை எதுக்குடி மாட்டி வச்சிருக்க..இது என்ன
பெட்ரூமா? இல்ல நர்சரியா? “ என்று தன் மனைவியிடம் உச்சக் கட்டத்தில் கத்தியது நினைவு
வந்தது.
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... மெதுவா பேசுங்க... என் வயித்துல வளர்ற உங்க
பாப்பா பயந்துக்க போறா..
பொண்ணுங்க ப்ரெக்னென்ட் ஆ இருக்கிறப்ப இந்த மாதிரி அழகழகான பேபிஸ் போட்டோவா அடிக்கடி
பார்த்தா, இதே மாதிரி அழகா பாப்பா பொறக்குமாம்.
என் ஃப்ரெண்ட் சொன்னா... அதுக்கு தான் இவ்வளவு பாப்பா படத்தையும் மாட்டி
வச்சிருக்கேன்...” என்று கன்னம் குழிய சிரித்தாள் அவன் மனைவி...
“புல்ஷிட்... இதெல்லாம்
என்ன ஒரு மூடநம்பிக்கை...போட்டோவை பார்த்தால் அதே மாதிரியே குழந்தை பிறக்குமா? ரிடிகுலஸ்... ” என்று
எரிந்து விழுந்தான்..!
அதைக் கேட்டதும் அதுவரை மலர்ந்திருந்த அவளின் முகம் அனிச்சமலராய்
வாடிப் போனது.
ஏனோ அவளின் வாடிய முகத்தை காண சகிக்கவில்லை அவனுக்கு.
“சரி..சரி... என்னமோ
பண்ணித் தொலை...” என்று எரிச்சலுடன்
சொல்லிவிட்டு விடுவிடுவென்று வெளியேறிவிட்டான்...
அன்று அவன் வெறுத்த அதே புகைப்படங்கள் இன்று ஏனோ திடீரென்று அவன் உள்ளே
ஒரு பரவசத்தை கொடுத்தது.
எட்டி ஒரு குழந்தையின் கன்னத்தை தொட்டு வருட, அவனுக்குள் அப்படி ஒரு சிலிப்பு...
பரவசம்.
அதே நேரம் அவனுக்கு தன் குழந்தையின் நினைவு வந்தது...
0 comments:
Post a Comment