மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Monday, September 26, 2022

வராமல் வந்த தேவதை-13

 


அத்தியாயம்-13

 

றுநாள் துள்ளலுடன் அலுவலகத்திற்கு கிளம்பினாள்  சுரபி..!  

நீண்ட நாட்களுக்கு பிறகு அவளையும் அறியாமல் அவள் இதழ்கள் ஏதோ ஒரு பாட்டை முனுமுனுத்துக் கொண்டிருந்தது...!

வீட்டை பூட்டிக்கொண்டு உற்சாகத்துடன் தன் மகளின் கைபிடித்து நடந்து கொண்டிருந்தாள்.

அலுவலகம் செல்லும் சாலையின் தொடக்கத்தில் நுழைந்ததும்,  அவள் கண்கள் ஆர்வத்துடன் யாரையோ தேடியது.

மனதிலும் ஒரு உற்சாகம்...நடையில் சிறு துள்ளல்...என்றுமில்லாத அதிசயமாய், தன் மகளின் கரத்தை பிடித்தபடி, உதட்டில் மலர்ந்த புன்னகையுடன், யாரையோ தேடியபடி சாலையின் பக்கவாட்டில் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தாள்.

நடையில் துள்ளல் இருந்தாலும் வேகம் இல்லை...! யாருக்காகவோ காத்திருந்து மெதுவாக நடப்பவளை போல மெதுவாய், மிக மெதுவாய் நடந்தாள்.

எப்படி மெதுவாக நடந்தாலும், அவள் எதிர்பார்த்திருந்த இடம் வந்து விட்டது...

அந்த இடத்தை அடைந்ததும், அவள் கால்கள் அனிச்சையாய் ப்ரேக் இட்டு நின்றன. பார்வையோ பக்க வாட்டில் பார்த்து, பின் பின்னால் திரும்பி பார்த்து ஏமாந்து போனது.

இந்த இடத்தில்தான் வழக்கமாய் விகர்த்தனன் கார் வந்து நிக்கும். அவர்களை காரினுள் ஏற்றிக்கொள்வான்.

அந்த பழக்கத்தில் கால்கள் அந்த இடத்தில் நின்று விட, கண்களும் அவன் காரை தேடியது.

இப்பொழுது மட்டுமல்ல அவள் காலையில் எழுந்ததில் இருந்தே அவள் கண்களும் , மனமும் அவனைக்காண தவித்தது அப்பொழுது புரியாமல் இருந்தாலும் இப்பொழுது புரிந்தது.

நேற்று மாலை அவனுடன் கழித்த பொழுது இனிமையானதாய் இருக்க, அவள் மனதில் இருந்த கடின பனிப்பாறை உருகி,  கொஞ்சமாய் அவன்பால் கரைய ஆரம்பித்து இருந்தது அந்த பெண்ணவளுக்கு புரியவில்லை.

அவசரமாக அவன் காரை தேடிப் பார்த்தவள், அது இல்லாமல் போக , முகத்தில் ஏமாற்றம் வந்து போனது.

அவளைப் போலவே கர்ணி குட்டியும் இங்குமங்குமாய் தன் குட்டி கருந்திராட்சை போனற கருவிழிகளை உருட்டி தேடி பார்த்தவள் முகத்திலும் ஒஎருத்த ஏமாற்றம்.

பெரிய எதிர்பார்ப்புடன்  திரும்பி சாலையின் நுழைவாயிலை பார்க்க, அவன் கார் வருவதற்கான  சுவடு தெரியவில்லை...

ஏமாற்றத்துடன் தன் கை பிடித்து இருந்த,  தன் அன்னையின் கையை  பிடித்து இழுத்து

“அப்பா.....? “ அப்பா எங்கே என்று மழலையில் விசாரிக்க, சுரபிக்கும் என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழித்தாள். அவள் மகளோ விடாமல் அப்பா... அப்பா.... என்று அவளிடம் கேட்க, தன்னை மறந்து

“அப்பாவுக்கு ஆபிஸ்ல வேலை செல்லம். ஆபிஸ் போயிட்டார்...”  என்று சொல்லி வைத்தவள்,  உடனே தன்  உதட்டை கடித்துக் கொண்டாள்.  

அவளே அவனை அப்பா  என்று சொல்லி வைத்ததை எண்ணி  தன்னைத்தானே மானசீகமாக கொட்டிக் கொண்டாள்.

இருவரும் மீண்டும் காரை எதிர்பார்த்தவாறு நடக்க, அலுவலகம்  வந்திருந்தது. கடைசி வரைக்கும் கார் வந்திருக்கவில்லை. அதைக் கண்டதும் பெண்ணவளின்  மனம் படபடத்தது.

“என்ன ஆனது அவனுக்கு? ஒருவேளை உடம்புக்கு எதுவும் சரியில்லையோ? “ என்று யோசித்தவளுக்கு அவளையும் அறியாமல் மனம் அடித்துக் கொண்டது.   

“அப்படி எல்லாம் எதுவும் இருக்கக்  கூடாது...”  என்று இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டவள், அலுவலகத்தை அடைந்ததும், தன் மகளை டேக்கேரில்  விட்டுவிட்டு தன் க்யூபிக்கலுக்கு வந்தாள்.

அந்த குட்டியும் வாடிய முகத்துடனே உள்ளே சென்றாள்.

தன் இருக்கைக்கு   வந்த சுரபிக்கு ஏனோ வேலையில்  கவனம் செலுத்த முடியவில்லை.

அவன் ஏன் வரவில்லை என்ற கேள்வியே மனதினில் சுழன்று கொண்டிருந்தது.  

ஒருவேளை ப்ராஜெக்ட் விஷயமாக முன்னாடியே போய் விட்டாரோ? இல்லை உடம்புக்கு எதுவும் சரியில்லையோ? சை.. ஒரு தகவல் சொல்வதற்கு என்ன? “ என்று தன் மனதினில் அவனை திட்டிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு விழித்தாள்.

அவள் மனம் போகும் போக்கை எண்ணி தூக்கி வாரிப் போட திக்கென்றது.

“ஓ ஷிட்....நான் ஏன் அந்த நெட்டையை பற்றி அக்கறை கொள்ள வேண்டும்..? அவன் யாரோ? எவனோ?  அவனை காணவில்லை என்பதற்காக நான் ஏன் கவலை கொள்ள வேண்டும்?

இல்லை...அவனைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. இன்பேக்ட் என் பொண்ணை பார்க்காமல் இருந்தாலே எனக்கு பெரும் நிம்மதி தான்...” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள்,   முயன்று தன் வேலையில் கவனத்தை செலுத்த முயன்றாள்.

சில நிமிடங்கள் அவள் மனம் அவள்  கட்டளைக்கு அடங்கி இருந்தாலும், கொஞ்ச நேரத்தில் மேலும் அந்த தவிப்பு வந்து சேர்ந்தது.

அவனுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்ற கவலையும் , தவிப்பும் அவளை இம்சித்தது.  

அதற்குமே மூளை சும்மா இருந்தால், கிறுக்குதனமாக எதையாவது யோசிக்கும் என்று எண்ணியவள், பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்த சிநேகாவிடம் பேச்சு கொடுத்தாள்.

சிநேகா- பெயரைப்போலவே சுரபியுடன் நட்புடன் பழகுபவள்..அவளின் எளிமையான, கலகலப்பாக பழகும் சுபாவத்தால் , சுரபிக்கும் அவளை ரொம்ப பிடிக்கும்.

எப்பொழுதும் ஏதாவது ஒரு ஜோக்கை சொல்லி, தன்னை சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்து விடுவாள்.

இப்பொழுதும் அவள் சொன்ன ஒரு ஜோக்கை கேட்டு சுரபி விழுந்து விழுந்து சிரித்தவள், தன் மனதில் இருந்த தவிப்பு மட்டு பட்டு இருக்க, தன் வேலையில் மூழ்கி போனாள்.

*****

திய வேளை...!  

சாப்பிட்டு முடிந்ததும்,  அங்கேயே  காத்தாட  நடக்க காரிடர் அமைக்கப்பட்டு இருந்தது. அதோடு எம்ளாய்ஸ்க்காக  டேபிள் டென்னிஸ், பூஸ் பால், செஸ், மற்றும் பஸ்ஸில் போன்ற இன்டோர் விளையாட்டுக்கள் ஒவ்வொரு தளத்திலும் இருந்தன.

ஐந்தாவது மாடியில் வெளிப்புறம் ஒரு போர்சனை க்ரௌண்ட் ஆக மாற்றி,  க்ரிக்கெட் மற்றும் பாஸ்கட் பால் கோர்ட் அமைத்து இருந்தான் விகர்த்தனன்.

அதிக வேலை பளுவில், மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு சில நேரம் விளையாடுவது கூட மனதுக்கு புத்துணர்வை தரும் என்றதால் இந்த மாதிரி நிறைய சலுகைகள்..!

இன்றும் தன் டீம் உடன் மதிய உணவை சாப்பிட்டு முடித்தவள், பின் மற்றவர்கள் எல்லாம் க்ரிக்கெட் விளையாட சென்று விட, சுரபிக்கு அதில் விருப்பம் இல்லாததால், காரிடரில் நடந்து கொண்டிருந்தாள்.

நடந்த படியே வெளியில் தெரியும் இயற்கை காட்சிகள்... உச்சி வெய்யிலிலும்  அயராது தன் பணியை செய்து கொண்டிருந்த சூரியன் எப்பொழுதாவது அவ்வழியே செல்லும் விமானம்... என பார்ப்பதை எல்லாம் கூட ரசித்தபடி நடந்து கொண்டிருந்தாள்

அனிச்சையாக அவள் பார்வை  தரைதளத்தில் இருந்த க்ரெச்க்கு செல்ல,  ஒரு கணம் அதிர்ந்து நின்றாள்.

அது அவள் மகள் தானா என்று கண்களை சுருக்கி, மூளையை கசக்கி கூர்ந்து பார்க்க , அவளே தான்... அவள் மகளே தான்

அவள் காலையில் அணிவித்த பிங்க் நிற ப்ராக்... தலையில் போட்டுவிட்ட தென்னைமரம்... அது அவள் மகள்தான் என்று அடித்து சொல்லியது.

தன் மகளை தூக்கியபடி ஒரு நெடியவன் வெளியில் சென்றுவிட்டு இப்பொழுது க்ரெச்க்குள் நுழைந்து கொண்டிருந்தான். அவளுக்கு முதுகு காட்டியபடி நடந்ததால் முகத்தை பார்க்க முடியவில்லை.  

அதைக்கண்டு இன்னுமாய் அதிர்ந்து போனாள்.    

யார் இவன்?  எதற்காக என் மகளை உள்ளே தூக்கி செல்கிறான்?  

அப்படினா  இது வரைக்கும் அம்மு அவன் உடன்தான் இருந்தாளா?  எங்கே தூக்கி சென்றிருப்பான்? “ என்று எண்ணியவளுக்கு மனதில் சுரீர் என்ற வலி.

அவள் படித்து, கேட்டறிந்த சைல்ட் அப்யூஸ் நிகழ்வுகள் எல்லாம் கண் முன்னே வர, நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொணடது.

அதோடு  எப்படி ஒருவன் சர்வ சாதாரணமாக க்ரெச் உள்ளே சென்று குழந்தையை தூக்கிச் சென்று விட்டு,   திரும்ப கொண்டு வந்து விடுகிறான்? அப்படி என்றால் அந்த க்ரெச் நிர்வாகம் சரியில்லை...” என்று யோசித்தவளுக்கு சுறுசுறுவென்று கோபம் தலைக்கு ஏறியது.

உடனேயே அவள் கால்கள் லிப்ட் ஐ நோக்கி ஓடியது.

லிப்ட் இன்னும் பேஸ்மென்ட்க்கு கீழ இரண்டாவது தளத்தில் இருந்தது. அவள் இருந்ததோ ஐந்தாவது தளம்.

லிப்ட் வரும் வரைக்கும்  காத்திருக்க பொறுமை இன்றி, பக்கவாட்டில் இருந்த ஸ்டெப்ஸ் வழியாக தடதடவென்று கீழறங்கி  க்ரெச் ஐ நோக்கி ஓடினாள்.

உள்ளே சென்றவள் அவசரமாக  தன் மகளை தேடினாள்.  

அவளோ  அப்பொழுதுதான் இன்னொரு குட்டியுடன் சிரித்தபடி விளையாண்டு கொண்டிருந்தாள்.

அவசரமாக அவள் பார்வை, தன் மகளின் உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தது.

அவளிடம் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. காலையில் வாடியிருந்த முகத்திலும் இப்பொழுது பளிச்சென்று ஒளிவீச, மலர்ந்து சிரித்தபடி அடுத்த குழந்தையுடன் விளையாண்டு கொண்டிருந்தாள்.   

அதைப் பார்த்ததும் தான் நிம்மதியாக இருந்தது  பெண்ணவளுக்கு.  

நேராக அந்த க்ரெச் ன் பொறுப்பாளர் பெண் ரம்யாவிடம் சென்றவள், அவளை   லெப்ட் அன்ட் ரைட் வாங்கி விட்டாள் சுரபி.

*****

ந்த க்ரெச் மேனேஜ்மென்ட் ரம்யாவின் பொறுப்பில் இருந்தது.

வயது முப்பதை தொட்டு இருந்தது. அவள் கணவனும் அந்த நிறுவனத்தில் தான் வேலை செய்கிறான். வீட்டில் தனியாக இருப்பது போரடிக்க, இந்த க்ரெச் மேனேஜ்மென்ட் ற்கு வந்திருந்தாள்.

இங்கு அவள் வந்ததுக்கு இன்னொரு காரணம்...

இங்கு தரும் சம்பளத்தை விட, விதவிதமான அழகு , குட்டி தேவதைகளை பார்த்து மகிழவே..!

ஆம். அவளுக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகியும் இன்னும் பிள்ளைச் செல்வம் இல்லை. அதனாலயே குழந்தை என்றால் கொள்ளை பிரியம் ரம்யாவுக்கு.

குழந்தைகளுக்கு டைபர் மாற்ற, பாத்ரூம் அழைத்து செல்ல, பசிக்கிற நேரத்தில் பசியாற்ற, ஒன்றோடு ஒன்று அடித்துக் கொள்ளாமல் விளையாட, என்று மூன்று ஆயாக்கள் தனியாக இருந்தனர்.

அவள் இதையெல்லாம் மேனேஜ் பண்ணுவது மட்டும் தான்.

அதோடு நேரம் கிடைக்கும் பொழுது  ஒவ்வொரு பிள்ளையையும் தூக்கி மடியில் வைத்து கொஞ்சி மகிழ்வாள். அதுவும் சுரபியின் மகள் மீது அவளுக்கு தனி பாசம்..அக்கறை...

அந்த ரம்யாவைத்தான் சுரபி வறுத்து எடுத்து கொண்டிருந்தாள்.  

“அது எப்படி வெளியாட்கள் பிள்ளையை வெளியில் தூக்கி செல்ல அனுமதிக்கலாம்? “   என்று கத்த, ரம்யா அதிர்ந்து போய்  ஏதோ சமாதானம்  சொல்ல முயன்றாள்.

சுரபியோ அதில் இன்னும் கொதித்தவள் மீண்டும் பொரிந்து தள்ளினாள்.  

“இது நல்ல தரமான க்ரெச்... இங்கு சேர்க்கும் குழந்தைகளுக்கு ஆபத்தில்லை என்றுதானே குழந்தையை இங்க கொண்டு வந்து விடறோம்...” என்று சொல்லும் பொழுதே அந்த சிறியவள் இடை புகுந்து,

கண்டிப்பா மேம் இங்க விடும் குழந்தைகள் எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பார்கள்...”  என்று பெருமையுடன் சொல்ல,  

“எப்படி?  இப்படி யாராவது வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியில் செல்வதா பாதுகாப்பு? “  என்று உதட்டை ஏளனமாக வளைத்து,  கோபத்துடன் பொரிய,  

“அது வந்து...”  என்று தயங்கினாள் ரம்யா.

“என்ன மிஸஸ் ரம்யா.. வந்து போய்னு இழுத்துகிட்டு இருக்கிங்க? அது எப்படி என் அனுமதி இல்லாமல் என் குழந்தையை யாரிடமோ தூக்கி கொடுக்கலாம்? “  என்று மீண்டும் பொரிய,

“வந்து.... யாரோ இல்ல மேம்...”  என்று தயக்கத்துடன் இழுக்க,

“யாரோ  இல்லனா?  வேற யார்? “  என்று சுரபியின் புருவம் சுருங்கி, எதிரில் இருப்பவளை துளைத்த பார்வை பார்த்து,  கொக்கி போட,  அந்த ரம்யாவோ கையை பிசைந்தாள்.  

அவள் பிள்ளையை தூக்கிக் கொண்டு சென்றவனை காட்டிக் கொடுக்க முடியாது... இவளுக்கு என்ன பதில் சொல்வது என்று திருதிருவென்று விழித்தாள்...

அவள் முழிப்பதைக் கண்ட சுரபி இன்னும் கொதி நிலை அடைந்தாள்.

“இல்லை... இது வேலைக்கு ஆகாது... எனக்கு என்னவோ இந்த க்ரெச் மேனேஜ்மென்ட் சரியில்லைனு தோணுது. நான் நேரடியாக மேனேஜ்மெண்ட் இடமே கம்ப்ளைன்ட் பண்றேன்...

அதுவரைக்கும் என் பொண்ணுனு  இல்ல..  வேற எந்த குழந்தைங்களையும், பெத்தவங்க தவிர, பெத்தவங்க அனுமதி இல்லாம யார்கிட்டயாவது அனுப்ப அலவ் பண்ணினிங்க... அவ்வளவுதான் தொலைச்சுடுவேன்...”  என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தாள்.

பின் தன் மகளை விளையாட்டை களைக்க விரும்பாமல், தள்ளி நின்று அவளை பார்த்துவிட்டு,  விறுவிறுவென்று தன்னுடைய இடத்திற்கு வந்தாள்.

******

ன் இருக்கையில் வந்து  அமர்ந்தவள் முகத்தில் இன்னுமே கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

இதை எப்படி முழுவதுமாக தடுப்பது? அந்த ரம்பா முழிக்கிறதை பார்த்தால் அவளை யாரோ மிரட்டி வச்சிருக்காங்களோ? இல்லை.. அவள் சம்மதத்துடன் தானே அனுமதித்து இருக்கிறாள்.

அப்படீனா அவளை மிரட்டி ஒரு பயனும் இல்லை.  நான் சொன்ன மாதிரி மேனேஜ்மென்ட் இடமே புகார் செய்ய வேண்டும்...”  என்று தீர்மானித்தாள்.  

தன் இருக்கையில் இருந்து எழுந்து நேரடியாக சினேகாவிடம் சென்று நின்றாள் சுரபி.

“சினேகா...என்னோட ஒரு நிமிஷம் துணைக்கு வர முடியுமா? “ என்றாள் பதற்றத்துடன்  

திடீரென்று கேட்ட சுரபியின் குரலில் திடுக்கிட்ட சினேகாவும், கம்யூட்டர் பெரிய சைஸ் மானிட்டரில் இருந்து  பார்வையை விலக்கி, சுரபியை பார்த்தவள்,

“என்னாச்சு சுரபி? ஏன் எவ்வளவு டென்சனா இருக்க? “ என்றாள் யோசனையுடன்.

“சினேகா...என்னோட ஒரு நிமிஷம் துணைக்கு வர முடியுமா?” என்று மீண்டும் கேட்க

“ஸ்யூர் சுரபி... எங்க வரணும்?

“நம்ம எம்.டி யை பார்க்கணும். கூட வர்ரியா? "  என்றாள் சுரபி இன்னுமே கோபம் தணியாத முகத்துடன்.

அதைக்கேட்டதும்  சினேகாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.  

“என்னடி சொல்ற? “ என்று அதிர்ச்சியோடு கேட்க,  

ஆமாம் சினேகா.. நான் எம். டி யை பார்க்கணும்...” என்றாள் அழுத்தமாக.

“வாட்?  எம். டி யை பார்க்கணுமா?  என்ன விளையாடுறியா? அவர் என்ன உன் பக்கத்து வீட்டுக்காரரா? நினைச்ச உடனே பார்க்க.  அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?

நாங்களே வருஷம் ஒரு முறை  இல்லைனா ஆறு மாசத்துக்கு ஒரு தரம் நடக்கும் ஆல் ஹேன்ட்ஸ் மீட்டிங்கில் பார்ப்பது தான்.

நீ என்னவோ பக்கத்து வீட்டுக்காரரை பார்க்கணும்ங்கிறதைப் போல எம்.டிய பார்க்கணும் னு சாதாரணமா சொல்ற..? “  என்று நக்கலாக சிரித்தாள் சினேகா...

“எம்.டி னா மட்டும் என்ன கொம்பா முளைச்சிருக்கு?  நான் இதுவரை வேலை செய்த ஆபீஸ்ல எல்லாம் எம்.டி யை நேரடியாகவே போய் பார்த்து பேசியிருக்கிறேன்...”  என்றாள் தோளை குலுக்கி கேசுவலாக.

சுரபி இதுவரை வேலை செய்த நிறுவனங்கள் எல்லாம் சிறிய நிறுவனங்கள்...  ஐம்பதிலிருந்து நூறு பேர் மட்டுமே இருந்தார்கள்.  

அங்கே எம்.டியாக இருப்பவரும் இலகுவாக எல்லாரிடமும் பேசி பழக,  யாரும் எம்.டி, சி.இ.ஓ  என்று தூக்கி வைத்து கொண்டதில்லை.

சில நேரம் அந்த எம்.டி யே அவர்களுடன் ஒன்றாக க்யூபிக்களில் உட்கார்ந்து வேலை செய்ய பார்த்திருக்கிறாள்.  

அந்த பழக்கத்தில், தன்னுடையை குறையை  அந்த நிறுவனத்தின் எம் டி யிடமே சொல்லிவிட்டு இன்னும் பாதுகாப்பை பலபடுத்த  சொல்ல வேண்டும் என்று எண்ணியே எம்.டி யை பார்க்க வேண்டும் என்றாள் சுரபி.   

ஹ்ம்ம்ம் உன் பழைய ஆபீஸ் எல்லாம் எப்படியோ..!  ஆனால் இங்க எம்.டி யை அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது.

பாஸ்க்கு எவ்வரி மினிட்ஸ் கவுண்ட்ஸ் என்பதுபோல ஒரு நிமிஷமும் டைம் வேஸ்ட் பண்ணாமல் ஓடிக்கொண்டிருக்கிற ஆள்.  

அவரைப் பார்க்கவெல்லாம் அப்பாயின்மென்ட் இருக்கணும்...  இல்லைன்னா மீட்டிங் செட்யூல்  பண்ணியிருக்கணும்...”  என்று அடுக்கியவள், பின்  ஏதோ நினைவு வந்தவளாக

“ஹே சுரபி... வேணும்னா பாஸ் உடைய பி.ஏ விஷ்வா எனக்கு தெரிந்தவர் தான்.  நாம அவரை வேணா பார்த்து பேசலாம்...”  என்றாள் சினேகா

விஷ்வா என்று சொல்லும் பொழுதே அவளின் கண்களில் தெரிந்த நட்சத்திரமும்,  கன்னங்களில் பூத்திருந்த குட்டி குட்டி ரோஜாக்களும்,  இதழ்களில் தவழ்ந்த வெட்க புன்னகையும்,  சுரபிக்கு எதையோ உணர்த்துவதை போல இருந்தது.  

என்னாச்சு இவளுக்கு?  என்று சினேகாவை உற்றுப் பார்க்க,  அதற்குள் தன்னை சமாதானப் படுத்திக் கொண்டவள், முகத்தை  இயல்பாக வைத்துக்கொள்ள, தான் கண்டது கனவோ  என்று மானசீகமாக யோசித்தாள் சுரபி

அதே நேரம்

“என்ன இங்க சத்தம்? “  என்று கோவைசரளா  பாணியில் இழுத்தவாறு அங்கே வந்து நின்றான் விக்ரம்.  

சுரபி வேலை செய்யும் ப்ராஜெக்ட் மேனேஜர் அவன் தான்

இரு பெண்களும் சீரியஸாக ஏதோ விவாதித்துக் கொண்டிருப்பதை கண்ட விக்ரம் அங்கு வந்து நின்றான்.  

அவனைப் பார்த்து இரு பெண்களும் புன்னகைக்க,  சினேகா தான் விஷயத்தை அவனிடம் சொன்னாள்.

“விக்கி.... யு நோ... இவ நம்ம பாஸ் ஐ  பார்க்கணும்ங்கிறா...”  என்று அதிசயத்தோடு சொல்லி முடிக்கும் முன்னே,

“பாஸ் ஆ?  அதான் இங்கயே இருக்காரே...பார்க்க வேண்டியதுதான...” என்று பெருமையுடன் புன்னகைக்க,

“பாஸ் ஆ? இங்கயா?  எங்க விக்கி?  என் கண்ணுக்கு தெரியலையே...” என்றவாறு சினேகா நெற்றியில் கையை சாய்வாக வைத்து,  இங்கேயும் அங்கேயும் தேடுவதை போல ஆக்சன் பண்ண, அதைக் கண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்க படாதபாடு பட்டாள் சுரபி.  

அவளின் செய்கையை கண்டு கடுப்பானான் விக்ரம்.

“ஹலோ ஸ்நேக்.... உங்க பாஸ் நான்தானே...நான்தான் குத்துக்கல்லாட்டம் இங்கயே இருக்கனே... நீ நல்லா பாத்துக்க சுரபி...”  என்று அவனை இப்படியும் அப்படியுமாக திருப்பி காட்ட,  

சுரபியோ இன்னுமாய் பொங்கி வந்த சிரிப்பை அடக்க வேண்டி,  தன் கீழ் உதட்டை கடித்துக் கொண்டு தலையை குனிந்து கொண்டாள்.  

சினேகாவோ அவனை வெட்டவா குத்தவா  என்று முறைத்துப் பார்த்தாள்.  

“ஹே சினேக்... என்ன ஆச்சு?  ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? “  என்று  விக்ரம் புரியாமல் பார்க்க,  

“இல்ல....  கொஞ்ச நேரம் முன்னாடி ஏதோ சொன்னிங்களே...  என்னது அது?  என் காதுல சரியா விழல?   என்று சினேகா தன் காதுக்குள் விரலை விட்டு ஆட்டியபடி நக்கலாக கேட்க, அவள் குரலில் இருந்த நையாண்டியை கண்டு கொள்ளாமல்,     

“அதுவா...நீங்கதான சொன்னீங்க.. பாஸ் ஐ பாக்கணும் னு. நான்தான்  இந்த ப்ராஜெக்ட் மேனேஜர்.  அப்ப நான் தானே உங்களுக்கு பாஸ்...”  என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்ள,  

“போதும் விக்கி...விளையாடாதிங்க...” என்றாள் முறைத்தபடி.   

“விளையாட்டா? நான் சீரியஸ் ஆதான் சொல்றேன். ஏன் ஸ்நேக் என்னை பார்த்தா பாஸ் மாதிரி தெரியலை?“  என்று முறைத்தான் விக்ரம்.  

“போங்க விக்கி...காமெடி பண்ணாதீங்க.. உங்கள போய் யாராவது பாஸ்னு சொல்லுவாங்களா?  நீங்களே உங்கள பாஸ் னு சொல்லிக்கிட்டாலும்,  சின்ன புள்ள கூட அதை நம்பாதே...”    என்று நக்கலாக சிரித்தாள் சினேகா.

டேய் விக்கி..!  தேவையா உனக்கு.  இதுக்குத்தான் பொண்ணுங்களா  இருக்கிற ப்ராஜெக்ட்க்கு போக கூடாதுங்கிறது. நம்மளை கொஞ்சம் கூட மதிக்க மாட்டாங்க...கேட்டியா நீ? “  என்று தன் ஆள்காட்டி விரலை அவனைப் பார்த்து சுட்டிக் காட்டி புலம்ப,  

“ஆமா... அப்படியே பசங்க மட்டும் உங்களை பாஸ் னு தூக்கி வச்சிக்கிறாங்களாக்கும்...நாங்களாவது பரவாயில்லை. கொஞ்சம் மரியாதை கொடுத்து கூப்பிடறோம்.

அந்த ப்ராஜெக்ட் பசங்க எல்லாம்  டேய் விக்கி னு  கூப்பிடறது தெரியாதாக்கும்...” நக்கலாக சிரித்தாள் சினேகா....    

“சரண்டர்... தாய்க்குலமே...போதும்... இதோட நிறுத்திக்க... என் பெயரை இதுக்கு மேல டேமேஜ் பண்ணிடாத...ஒத்துக்கிறேன்...நான் பாஸ் இல்ல தான்.

அது சரி...வேற எந்த பாஸ் ஐ  பார்க்கணும்னு சொன்னீங்க? “  என்று அப்பொழுது தான் முக்கியமான பிரச்சனைக்கு  வந்தான்  விக்ரம்.  

அதுவரை தலையை குனிந்து கொண்டிருந்த சுரபி இப்போது நிமிர்ந்து பார்த்து,  

“நம்ம பாஸ் ஐ  பார்க்க வேண்டும் விக்கி...”  என்றாள் தயக்கத்துடன்

“நம்ம பாஸ் ஆ?  யாரது? “  என்று குழப்பமாக பார்க்க,

“நம்ம பிக் பாஸ்...  அதான் எம்.டி ஐ சொல்றா விக்கி...”  என்க,  அடுத்த நொடி அதைக்  கேட்டு அதிர்ந்து போனான் விக்ரம்.  

“வாட்?  எம்.டி யவா?  அந்த ஹிட்லரை நீ எதுக்குமா பார்க்கணும்?“  என்று அதிர்ச்சியோடு வினவ,  

“ஹிட்லரா?  அவர் பேரு வேற ஏதோ  இல்ல? “  என்றாள் சுரபி குழப்பத்துடன்.  

அதைக்கேட்டு சினேகா வெடித்து சிரிக்க,  விக்ரம் அசடு வழிந்து வைத்தான்.

“ஹீ ஹீ ஹீ அவருக்கு நாங்க  வச்ச பெயர்தான் ஹிட்லர்...” என்றான் அசட்டு சிரிப்புடன்.

“ஓஹோ? ஏன் அந்த பெயர்? “ என்று குழப்பத்துடன் கேட்க,

“பின்ன?  மனுஷன் பயங்கர ஸ்ட்ரிக்ட் ஆபிசர்.. எல்லாரையும் கடித்து குதறுவதில் அந்த ஹிட்லருக்கும் ஒரு படி மேல. மாதம் ஒருமுறை நடக்கும்  மேனேஜர்களுக்கான மீட்டிங் ல அவரை பார்க்கவே எங்களுக்கெல்லாம் உள்ளுக்குள் உதறும்.  

யாரை எப்ப கடித்துக் குதறுவாருனு தெரியாது..!  

அவ்வளவு ஏன் ?  லாஸ்ட் வீக் மீட்டிங்கிற்கு ஒரு பத்து நிமிஷம் லேட்டா போயிட்டேன். அதுக்காக என் சீட்டை கிழிக்க சொல்லிட்டார் அந்த ஹிட்லர்...”  என்று கடுப்புடன் சொல்ல,  அதைக்கேட்டு இரு பெண்களும் அதிர்ந்து போயினர்

“என்னது?  பத்து நிமிஷம் லேட்டா வந்ததுக்கு சீட்டை கிழிக்க சொல்லிட்டாரா? “  என்று இருவரும் கோரசாக கேட்க

“ஆமாம் தெய்வங்களே..  என்று பாவமாக சொல்ல

“அப்புறம் எப்படி இன்னும் உங்க சீட்ல உட்கார்ந்து இருக்கீங்க விக்கி?  சீட்டு கிழிஞ்ச மாதிரி தெரியலையே...”  என்றாள்  சினேகா நக்கலாக அடக்கப்பட்ட கேலி சிரிப்புடன்.  

அவளை பார்த்து முறைத்தவன்,  

“ஏன்?  என் சீட்டு கிழியனும்னு  உனக்கு ரொம்ப நாளா ஆசை போல?  என் சீட்டு கிழியறதுல உனக்கு என்னமா அவ்வளவு சந்தோஷம்..” என்றான்  அவளை  முறைத்தபடி.

“ஹீ ஹீ ஹீ எத்தனை நாளைக்குத்தான் ஒரே மூஞ்சியை மேனேஜரா பார்த்துக்கிட்டு இருக்கிறது விக்கி?

உங்க சீட்டு கிழிஞ்சாதான, அடுத்ததா, நம்ம  கிருத்திக் ரோஷன் மாதிரியோ...  இல்லை சல்மான்கான் மாதிரியோ ஒரு புது மேனேஜர் வருவார்..

செமயா இருக்கும்ல.. நாங்களும் போரடிக்காம வேலை செய்வோம்....அதான்...”  என்றாள்  சினேகா குறும்பாக கண்சிமிட்டி சிரித்தபடி.

சுரபிக்கோ சங்கடமாக இருந்தது. இந்த மாதிரி கேலி பேச்சில் எல்லாம் அவள் ஈடுபட்டதில்லை. ஆனாலும் அங்கிருந்து உடனே விலகி செல்ல முடியாமல், உள்ளுக்குள் தவித்தபடி நின்றிருந்தாள்.   

“அடச்சே...உன்  டேஸ்ட் இன்னும் ஏன் மா 80 ஸ் லயே இருக்கு. அவங்க எல்லாம் எனக்கு சீனியர். என்ன  மாதிரி யூத் கிடையாது...”  என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்ள

“அடச்சே...  நீங்க யூத்ன்னு சொன்னா,  அந்த யூத்க்கான மதிப்பு, மரியாதை   போய்விடும்...”  என்று மீண்டும் நக்கலாக சிரித்தாள் சினேகா. எவ்வளவு முயன்றும் தன்னை கட்டுபடுத்த முடியாமல்  சுரபியும் கலகலவென்று நகைத்தாள்.

இதுவரை சுரபி இந்த மாதிரி சிரித்து பார்த்ததில்லை அவர்கள்.

எப்பொழுதும் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவள். பொதுவாக மெல்ல இதழ் திறந்து புன்னகைப்பாள். வாய்விட்டு கலகலவென்று சிரித்ததில்லை.

இப்பொழுது அவள் சிரிக்க, மற்ற இருவரும் ஒரு நொடி,  ஆச்சர்யத்துடன் பார்த்து வைத்தனர்.  

“ஆமா விக்கி.. பாஸ் உங்க சீட்டை கிழிக்க சொல்லியும், உங்க சீட்டை கிழிக்காம எப்படி எஸ் ஆனிங்க? எப்படி தப்பிச்சுக்கிட்டீங்க? “  என்று சினேகா சந்தேகமாக கேட்க

“ஹி ஹி ஹி அதெல்லாம் தொழில் ரகசியம்....” என்று இழுத்தவனை சினேகா மீண்டும் முறைக்க,

“ஹ்ம்ம்ம் அதான் என் உயிர் காக்கும் என் நண்பன் விஷ்வா இருக்கானே...  நம்ம எம்.டிக்கு லெப்ட் ஹேன்ட், ரைட் ஹேன்ட்...  லெப்ட் லெக் ரைட் லெக் எல்லாம் அவன் தான். அவன்தான்  என்னை எப்படியோ  காப்பாற்றி விட்டான்.  

அதனாலதான் சொல்றேன்.  அவரை பார்க்கறது எல்லாம்  நமக்கு நாமே சூனியம் வச்சிக்கிட்ட மாதிரிதான்.  

என்ன பிரச்சனைனாலும் என் கிட்ட சொல்லுமா ... நான் அதை நம்ம  டைரக்டர் காதுல போட்டு வைக்கிறேன்.  

அது அவர் பி.ஏக்கு போய் அப்படியே பிக் பாஸ் கிட்ட போயிடும்...”  என்று புன்னகைத்தான்.

அதைக்கேட்டு சுரபியும் யோசனையானாள்.

க்ரெச் மேட்டர் இந்த மாதிரி கைமாறி செல்லும் பொழுது எந்தளவு சரியாக அது ரீச் ஆகும் என்று தெரியவில்லை.  

பேசாம நாமளே எம்.டிக்கு ஒரு மெயில் போட்டு விடலாம் என்று யோசித்தவள்,

“இட்ஸ் ஓகே விக்கி... நானே பார்த்துக்கிறேன்...”  என்று சமாளிக்க,  அதே நேரம் ப்ராஜெக்ட் மீட்டிங் ஆரம்பிக்க இருப்பதால், விக்ரம் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

அப்போதைக்கு அந்த பிரச்சினையை தள்ளிப்போட்டு,  வேலையில் கவனத்தை செலுத்தினாள்  சுரபி.  
Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

All Stories

Blog Archive

Contact Form

Name

Email *

Message *