மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Saturday, October 1, 2022

வராமல் வந்த தேவதை-26

 


அத்தியாயம்-26

 

ஷ்யாம் வேலை செய்து கொண்டிருந்த ப்ராஜெக்ட் சம்பந்தமாக இரண்டு மாதங்கள்  நியூயார்க் செல்ல வேண்டி வந்து நின்றது.

அதுவும் அடுத்த நாளே கிளம்ப சொல்லி அவனுடைய மேனேஜர் சொல்லி விட, எப்பொழுதும் ஆன்சைட் என்றால் துள்ளி குதிப்பவன் முகம் வாடிப் போனது.

“சை... இப்ப போயா இந்த ஆன்சைட் வந்து தொலைய வேண்டும்...” என்று எரிச்சல் பட்டு கொண்டான் ஷ்யாம்.

தன் மனம் கவர்ந்தவளே தனக்கு மனைவியாக  நிச்சயம் செய்த பிறகு அவளுடன் இனியாவது மனம் விட்டு பேசலாம்...  தன் காதலை சொல்லலாம் என்று எண்ணியிருந்த ஷ்யாமிற்கு அதை சொல்ல முடியாமலேயே போய்விட்டது.  

“சரி...  பேசாமல்  திருமணம் முடிந்ததும் ஃபர்ஸ்ட் நைட் இல் தன்னுடைய காதலை சொல்லிக்கொள்ளலாம்...”  என்று எண்ணியவன் அவளை  இனி நேரில்  பார்க்க வாய்ப்பு இல்லையே என்று மனதுக்குள் பருகியபடி,  மனமே இல்லாமல் நியூயார்க் கிளம்பி சென்றான்.

ஆனாலும் அவளின் இரவு நேரம் அவளை வாட்ஸ்அப்பில் அழைத்து பொதுவாக ஏதாவது பேசி வைப்பான்.  

அவளின் இரவு நேரம் அவனுக்கு வேலை நேரமாக  இருப்பதால் அதிகம் பேசிக் கொள்ள முடிந்ததில்லை.

அதனால் நேரம் கிடைக்கும்பொழுது தவறாமல் அவளை அழைத்து விடுவான்..!   

அவன் பேசும்பொழுது அவன் குரலிலிருந்த உற்சாகமும் துள்ளலும் ஏனோ சுரபிக்கு இருக்க வில்லை.  

பெரும்பாலும் அவன்  பேசுவதை உம் போட்டு  கேட்டுக் கொண்டிருப்பாள்.  இல்லையென்றால் பொதுவான சில விஷயங்களை பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஆனாலும் மற்ற காதல் ஜோடிகளை போல...திருமணம் நிச்சயித்த ஜோடிகளைப் போல  அவள் மனதில் ஒரு பீலிங்ம் வரவில்லை.  

ஷ்யாம் குரலை கேட்டதும் ஏனோ அவள் மனம் துள்ளியெல்லாம் குதிக்கவில்லை. பொதுவாக அலுவலகத்தில் தெரிந்த நபர் ஒருவருடன் பேசுவதைப் போலத்தான் இருந்தது.

முன்பெல்லாம் யாராவது தங்களது  மேரேஜ் அரேஞ்ச்ட்  மேரேஜ் என்று சொன்னால், அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும்

ஒருவரை ஒருவர் பார்த்து பேசி பழகாமல் அரேஞ்ச்ட்  மேரேஜ் என்ற பெயரில்  எப்படித்தான்  திடீர் என்று இணைத்து ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற கேள்வி அடிக்கடி அவள் மனதில் எழுந்தது.  

இப்பொழுது அதே நிலை அவள் திருமண விஷயத்திலும் வந்து நின்றது..!

ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும் அவள் ஷ்யாமை முன்ன  பின்ன பார்த்ததில்லையே..!

அவளுக்குத்தான் அவள், அவள் அம்மா...அக்கம் பக்கத்து குடும்பங்கள்... அப்புறம் அலுவலகத்தில் அவள் ப்ராஜெக்ட் டீம்...அவள் ப்ராஜெக்ட் உடன் தொடர்புடைய மற்றொரு டீம் என்ற அளவில் மட்டும்தான் பழக்கம்.!

அப்படி இருக்க, முன்ன பின்ன தெரியாத ஒருவனை எப்படி மணந்து கொள்வது? எப்படி திடீர்னு அவன் உடன் ஒன்றாக வாழ்வது என்று அச்சமாக இருக்க,

பார்த்து, பழகத்தானே திருமணம் நிச்சயித்த பிறகு, திருமணத்திற்கு முன்னால் கொஞ்ச காலம் இடைவெளி கொடுத்து இருக்கிறார்கள்.!

இந்த இடைவெளி இருவரும் பார்த்து, பேசி, பழகி காதலை வளர்த்துக்கத்தான்..! மற்ற காதலை போல, காதல் தோற்றுவிடுமோ என்ற அச்சம் இங்கே தேவையில்லை..!

இவன் தான் உனக்கு.. இவள்தான் உனக்கு என்று பெற்றோர்கள்... பெரியவர்கள்..சுற்றத்தார்...உற்றத்தார் என எல்லாரும் பார்த்து, பிடித்து சம்மதித்து ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர்.

அவர்கள் காதலை முன்னரே அங்கீகரித்து விட்டனர்..!

தனக்கென்று நிச்சயிக்கப்பட்டவனை (ளை)  தாராளமாக காதலிக்கலாம்.! இது வெற்றி பெறக்கூடிய, நிச்சயிக்கப்பட்ட காதல்..! என்று அவள் மனம் அவளுக்கு எடுத்து சொல்லியது.  

“ஆமாம்... நான் ஷ்யாமை காதலிக்க வேண்டும்... இனிமேல் அவன் தான் எனக்கு எல்லாம்...ஆனால் நிச்சயித்த உடனே அவன் மீது எனக்கு காதல் வந்துவிட்டதா?

இல்லையே...!

ஷ்யாமை பார்க்கும்  பொழுது எனக்கு ஏன்  உள்ளுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கவில்லை.  அவன்  குரலை கேட்டதும் ஏன் உள்ளுக்குள் எதுவும் புரளவில்லை?

அவனை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்ற தவிப்பு ஏன் எனக்குள்ளே எழவில்லை?”   என்று தனக்குத் தானே பலமுறை கேட்டுக்கொண்டாள்.

“இதெல்லாம் தானே காதலின் அறிகுறிகள் என்று திரைப்ப்டங்களிலும், காதல் கதைகளிலும் சொல்லி இருக்கிறார்கள்..! அப்படி என்றால் ஷ்யாம் மீது எனக்கு காதல் வரவில்லையா?”  என்று கேட்க

ஆம் அப்படித்தான் என்றது அவளின் ஆழ்மனம்.

“ஒருவேளை ஷ்யாமை நேரில் பார்த்தால் காதல் வருமோ? இல்லை  என்றாலும்  திருமணத்திற்குப் பிறகு பழக பழக காதல் வந்து விடுமோ? ஆம்..  அப்படித்தான் இருக்கும் போல...” என்று  தன்னைத்தானே தேற்றிக் கொண்டு வளைய வந்தாள் சுரபி.

ஷ்யாம் தினமும் அவளை அழைத்து பேசுவதைப் போலவே அவன்  குடும்பத்தில் இருந்து அவன் தம்பி, தங்கை, அவன் அம்மா ,அப்பா என  அனைவரும் அவளிடம் பேசி வைப்பார்கள்.  

திருமணத்திற்கு முன்னரே அவளையும் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக பாவித்த அந்த குடும்பத்தை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.  

இந்த குடும்பத்திற்காகவே  அவனை திருமணம் செய்து கொள்ளலாம் என்று உள்ளுக்குள் சிரித்துக் கொள்வாள் சுரபி.  

*****

நாட்கள் வேகமாக நகர,  திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் தான் இருந்தது.  

துரதிஷ்டவஷமாக ஷ்யாம் க்கு  அவன் சென்ற வேலை முடியாததால்,  இன்னும்  இரண்டு வாரங்கள் வெளிநாட்டு பயணத்தை  நீடித்து விட,  திருமண ஏற்பாட்டை எல்லாம் அங்கிருந்தபடியே நடத்திக்கொண்டிருந்தான்.  

அவன் தம்பி ஷ்யாம் பிரகாஷ் உதவி செய்ய,  ஓரளவுக்கு திருமண ஏற்பாடுகள் எந்த தடையுமின்றி திட்டமிட்டபடியே சென்றது.  

ஆனால் சுரபியை பார்க்க முடியவில்லை... இந்த திருமண ஏற்பாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் அவளின் அருகில் இருந்து பார்த்து ரசிக்க முடியவில்லை என்ற கவலை மட்டும்தான் ஷ்யாம் மனதில்.  

எப்படியோ பல்லை கடித்துக்கொண்டு, இரவு பகல் பாராமல், அயராது உழைத்து, அடுத்த இரண்டு வாரத்தில்  தன் வேலையை முடித்துவிட்டு இந்தியா திரும்பி வந்து விட்டான்...!

விமான நிலையத்டில் இருந்து வெளி வந்ததவன்,  தன் வீட்டிற்கு கூட போகாமல் நேரடியாக சுரபியை காண ஓடி வந்து விட்டான்.  

*******

திகாலையில் வாயிலில் காலிங் பெல் அடிக்க,  சுரபி தான் தூக்க கலக்கத்துடன் எழுந்து சென்று கதவை திறந்தாள்.  

அடுத்த கணம் அங்கே ஷ்யாமை கண்டதும்  ஒரு நொடி திகைத்து நின்றாள்.  

பின் சமாளித்து அவனை உள்ளே அழைக்க,  அவனுக்கும் தன் மனதில் இருப்பவளை...மனைவியாக போகிறவளை, இத்தனை நாட்களுக்கு பிறகு நேரில் காண, அவன் மனம் எகிறி  குதித்தது.  

அதுவும் அசந்து உறங்கி கொண்டிருந்தவள் அப்படியே எழுந்து வந்திருக்க, அவளின்  கசங்கிய நைட்டியும்,  கலைந்திருந்த தலை முடியும், எண்ணை வழிந்த முகமுமாய் அந்த  கோலத்திலும் பேரழகியாகத்தான் அவன் கண்ணுக்கு தெரிந்தாள்.

அப்படியே அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு, இத்தனை நாட்கள் அவளைக் காணாத ஏக்கத்தை எல்லாம் தீர்த்துக்  கொள்ள அவன்  கரங்கள் பரபரத்தன.

ஆனாலும் அதை அடக்கி, தன் பேன்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டுக் கொண்டு,  தன்னை  கட்டுப்படுத்தியவன்,  அவளை பார்த்து  காதலுடன் புன்னகைத்தான்.

அவன் கண்களில் பொங்கிய எல்லையில்லா காதலை அப்பொழுதுதான் கண்டாள்  சுரபி.  

தினமும் இரவில் அவளை அழைத்து பேசும்பொழுது மிகவும் கன்னியமாகவும் பொதுவாகவும் தான்  பேசிக்கொண்டிருப்பான்.

மறந்தும் காதல் மொழியில் எதுவும் பிதற்றியதில்லை..!அப்படி பிதற்றி இருந்தால் சுரபிக்கு எரிச்சலாகத்தான் இருந்திருக்கும். அவளுக்குத்தான் அவனிடம் ஒன்றுமே தோன்றவில்லையே..!

அதை உணர்ந்ததால் தானோ என்னவோ, அப்படி எதுவும் பேசி வைத்திருக்கவில்லை.  

இப்பொழுது அவனை நேரில் பார்க்க, அதுவும் அவன் கண்களில் தெரிந்த எல்லையில்லா காதலும், தன்னை பார்க்காமல் அவன் தவித்திருந்த தவிப்பும், ஏக்கமும் அவனையும் மீறி அவன் கண்களில் பிரதிபலித்திட, அதை கண்டு கொண்டாள் பெண்ணவள்.

அப்பொழுதுதான் அவன்  தன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறான்  என்று புரிந்து கொண்டாள்.  

அதுவரை அவனைப் பற்றி அவள் அன்னை  சொன்னது எல்லாம் அவள் தன் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை தான்.  

அவன்  தன்னை  மூன்று வருடங்களாக காதலித்து வந்தான்  என்பதே அவள் அன்னை  சொல்லித்தான் அவளுக்கு தெரியும்.  அதுவும் ஏதோ ஒரு பேச்சு வாக்கில் உளறி வைத்தார் சகுந்தலை.  

அதை நினைக்கும் பொழுது அவளுக்கு இப்பொழுது  ஆச்சரியமாக இருந்தது.

இப்பொழுது எல்லாம் பார்த்த ஒரு நாளிலேயே ஐ லவ் யூ என்று சொல்லி,  நீயும் என்னை காதலிக்க வேண்டும் என்று லவ் டார்ச்சர் பண்ணுபவர்கள் எத்தனை பேர்..!  

விதிவிலக்காக ஷ்யாம் தன்னை மூன்று வருடங்களாக  காதலித்திருக்கிறான்.  அதைக்கூட அவளிடம் நேரடியாக சொல்லாமல்,  தன் அன்னையிடம் நேரடியாக வந்து பேசி திருமணத்தை ஏற்பாடு செய்து விட்டான்.  

அவனை நினைக்கும்பொழுது பெருமையாக இருந்தது..!

“கெட்டிக்காரன் தான் ...”   என்று  உள்ளுக்குள் சிலாகித்து கொண்டாள்.  

ஷ்யாமின் குரல் கேட்டு, தன் அறையில் உறங்கி கொண்டிருந்த சகுந்தலையும் எழுந்து வந்து  அவனை வரவேற்க, சற்று நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்துவிட்டு,  சுரபியை விட்டு பிரிய மனமில்லாமல் கிளம்பி சென்றான் ஷ்யாம்.  

அதன் பிறகு இருவரும் அதிகம் சந்தித்துக் கொள்ள வாய்ப்புகள் இல்லாமல் போனது.  

அடுத்தடுத்து திருமண வேலைகள் புடவை எடுக்க,  இன்விடேசன் கொடுக்க என்று நாட்கள் பறந்து கொண்டிருந்தது.  

*****

திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்க, காஞ்சிபுரம் சென்றிருந்தார் சகுந்தலை.  

அங்கிருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தில்  தெரிந்தவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு  வரவேண்டும் என்று தனியாக கிளம்பி  சென்றிருந்தார்.  

சுரபிக்கு அன்று அலுவலகத்தில் முக்கியமான  முடிக்க வேண்டிய வேலை இருந்ததால் அவருடன் செல்ல இயலவில்லை.  

அடுத்த நாளிலிருந்து அவள் விடுமுறையில் செல்வதால் , அவள் செய்துகொண்டிருந்த வேலையை முடித்து விட்டு செல்லவேண்டும் என்று அவசரமாக தன் வேலையை செய்து கொண்டிருந்தாள்.

இரவு மணி ஏழு ஆகி இருந்தது..!

அவள் முடிக்க வேண்டிய ரிகுயர்மென்ட்டுக்கு, கோட் அடித்து முடித்து விட்டு, ரன் பண்ண, அதில் ஏதோ ஒரு எர்ரர் வந்து கொண்டிருக்க, அதை கண்டு பிடிக்க தீவிரமாக  ஆராய்ந்து கொண்டிருந்தாள்.  

அப்பொழுது சகுந்தலை அவளை அலைபேசியில் அழைத்திருக்க,  அப்பொழுது தான் காஞ்சிபுரத்தில் இருந்து திரும்பி ஸ்டேஷன் வந்திருக்கும் தன் அன்னையை அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று நியாபகம் வந்தது.  

அவள்  செய்து கொண்டிருக்கும் வேலையை பாதியில் விட்டுச் செல்லவும் முடியாது.

அவள் அன்னையவே தனியாக ஆட்டோ பிடித்து வரச்சொல்லவும் பயமாக இருந்தது..! பொதுவாக சகுந்தலை சென்னையில் எங்கயும் தனியாக சென்றதில்லை..!

எல்லா வேலையும் சுரபிதான் பார்த்துக்கொள்வாள்..! தன் மகளுடன் எப்பயாவது வெளியில் சென்று வருவார். அதனால் அவரையே தனியாக வரச்சொல்ல , சுரபிக்கு பயம்..!

தன் வேலையையும் இப்பொழுதே முடிக்க வேண்டும். இப்பொழுது அம்மாவையும்  கூட்டி வர வேண்டுமே. என்ன செய்ய ?  என்று கையை பிசைந்து  கொண்டிருக்க, அடுத்த நொடி  

“என்னாச்சு சுரபி..? ஏன் டென்சனா இருக்க?”  என்றவாறு  அவள் அருகில் வந்து நின்றான் ஷ்யாம்.

அவனுடைய வேலை முடிந்து விட்டாலும்,  சுரபி தனியாக அங்கே இருப்பதால் அவளுக்காக அவனும் காத்துக் கொண்டிருந்தான்.  

அப்பொழுதுதான் சுரபியின் முகத்தில் தெரிந்த பதற்றத்தை, சற்று தொலைவில் இருந்து  கண்டு கொண்டவன்,  அவள் அருகில் வந்தான்.

ஷ்யாமை பார்த்ததும் ஏனோ மனதிற்குள் ஒரு இதம் பரவியது..! அவனை பார்த்து மெல்லியதாய் புன்னகைத்தவள்,

“வந்து... அம்மாவை ஸ்டேஷன் ல இருந்து  கட்டிக்கிட்டு வரணும்.  என் வேலை இன்னும் முடியலை.  ஏதோ எர்ரர் வருது. அதுதான் டீபக் பண்ணிகிட்டு இருக்கேன். இதை பிக்ஸ் பண்ணாம  செக்கின்    பண்ண முடியாது.  

செக்கின் பண்ணலைனா  என்னுடைய கோட் ஐ வேற யாரும் கன்டினியூம்  பண்ண முடியாது. நாளையில் இருந்து நான் லீவ்... இன்னைக்கே இதை முடிச்சாகணும்... அதுதான் என்ன செய்யறதுனு தெரியல...”  என்று தயக்கத்துடன் இழுக்க,  

“ஊப்... அவ்வளவுதானே..! அதுக்கு ஏன் இவ்வளவு டென்சன்.?  நான் போய் அத்தையை பிக்கப் பண்ணிட்டு வந்திடறேன்.  நீ உன் வேலையை கன்டின்யூ பண்ணு. சீ

க்கிரம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்திடு...” என்று எளிதாக அவள் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல,  அவனை நன்றியோடு பார்த்தாள் சுரபி.  

“ரொம்ப தேங்க்ஸ்...”  என்றாள் மெல்லிய குரலில்.

“ஹே...இதுக்கு போய் எதுக்கு தேங்க்ஸ் சொல்ற? எனக்கு எங்க அம்மா வேற... உன் அம்மா  வேற இல்ல...இரண்டு பேரையும் நல்ல படியா பார்த்துக்கிற பொறுப்பு  என்னுடையது.

இன்பேக்ட்  அத்தை காஞ்சிபுரம் சென்று திரும்புவதை முன்னாடியே சொல்லியிருந்தால்,  நான் சீக்கிரமே  கிளம்பி போய் அவங்களை கூட்டி வந்து இருப்பேன்...”  என்று கன்னம் குழிய சிரித்தான்.  

அனிச்சையாய் நிமிர்ந்து அவன் முகம் நோக்க, அவன் இதழ்கள் சிரித்தாலும், கண்களில் பொங்கியது அவள் மீதான காதல்..!  

அதைக்  கண்டு ஒரு கணம் இன்பமாய் அதிர்ந்து தான் போனாள்.  

இந்த அளவுக்கு தன் மீது காதலா? என்று  ஆச்சரியத்தில் விழி விரிக்க,  அவளின் விழிகளுக்குள் உற்று பார்த்து தனக்கான காதலை அவள் கண்களில் தேடினான் ஷ்யாம்.

ஏனோ சுரபியால் அவனை காதலுடன் பார்த்து வைக்க முடியவில்லை..! அவள் மனதில் அப்படி எதுவும் பொங்கவும் இல்லை. ஆனால் அவன் கண்களில்...சிரிப்பில்... பேச்சில் அப்படி ஒரு காதல்.

இதுவரை அவள் அவனை ஆசையாக, காதலாக, நேசமாக பார்த்து வைத்ததில்லை.  

அவன்  தன் காதலை பற்றி  அவளிடம் மேலோட்டமாக பேசும்போதெல்லாம் அவள் முகத்தில்  பெரிதாக எந்த மாற்றமும் வந்ததில்லை தான்.  

அவனுக்கும் அது புரிந்தது..!

“அவள் ஒன்றும் அவனை காதல்கொண்டு மணக்கவில்லையே... பார்த்த உடனே அவளை   எனக்கு பிடித்ததைப் போல  அவளுக்கும் என்னை உடனே பிடித்து போக வேண்டும் என்று என்ன இருக்கிறது.

எத்தனையோ அரேன்ஜ்ட்  மேரேஜ்களில் திருமணத்திற்கு பிறகு காதல் வருவதில்லையா? அது போல சுரபியும்   என்னை சீக்கிரமே  காதலிப்பாள். என் காதலை புரிந்து கொண்டு, அவள் கண்களிலும்  காதல் பொங்கும்...”  என்று தன் மனதை தேற்றிக் கொள்வான் ஷ்யாம்.

இன்று முதன் முறையாக அவள் அவனை விழி விரித்து  ஆச்சர்யமாக பார்த்ததை கண்டு அவன் மனம் எகிறி குதித்தது.  

அவளின் குடை போன்று விரிந்த இமைகளை,  தன் இதழால் மூடி, அவளின்  ஆப்பிள் கன்னத்தை மெல்ல வருட அவன் கரம் நீண்டது.  

நொடியில் தன்னை சுதாரித்துக் கொண்டு, நீண்டிருந்த தன் கரத்தை இழுத்து பேன்ட்  பாக்கெட்டில் விட்டு பூட்டிக்கொண்டவன், தன் மறு கையால்  பின்னந்தலையை  வருடிக்கொண்டே,  சிறு வெட்கத்துடன் அவளைப் பார்த்து

“ஐ லவ் யூ சுரபி...”  என்றான்  இன்னுமாய் வெட்கத்துடன்.  

அதைக் கேட்ட பெண்ணவளோ ஒரு நொடி திகைத்து போனாள்.  

திடீரென்று ஏன் இப்படி சொல்கிறான்?

நிச்சயம் ஆன பிறகு, எத்தனையோ முறை அவளிடம் பேசி இருந்த பொழுதும் ஒருமுறை கூட அவளிடம் ஐ லவ் யூ என்று சொல்லி வைத்ததில்லை...!

அவன் காதலை மனம் திறந்து சொன்னதில்லை..!

இப்பொழுது ஏன் இப்படி சொல்கிறான்?  என்று ஆச்சரியத்துடன் மீண்டும் அவனை விழி விரித்துப் பார்க்க,  அவனுக்கும் அவன் சொன்னதை எண்ணி  ஆச்சரியம் தான்.

ஏன் திடீரென்று அவளிடம் ஐ லவ் யூ சொல்லி வைத்தான்?  அவன் எதுவும் அப்படி சொல்ல வேண்டும் என்றெல்லாம் எண்ணியிருக்கவில்லை தான்.  

திடீரென்று அவள் தன்னை  முதன்முறையாக விழி விரித்து  பார்க்கவும்,  அவனையும் மறந்து சொல்லியிருந்தான் அந்த மூன்று வார்த்தைகளை.

ஒருவேளை இப்பொழுது சொல்லாமல்  விட்டால்,  எப்பொழுதுமே தன் மனதில் உள்ள காதலை அவளிடம் சொல்ல முடியாமலேயே போய்விடும் என்று அப்போதே தெரிந்து தான் தன் காதலை அந்த இரவு வேளையில்  சொல்லியிருந்தானோ?

எந்த திட்டமிடலும் இன்றி...  ஒரு ஒற்றை ரோஜா கூட இல்லாமல்,  தன் மூன்று வருட காதலை இந்த மூன்று வார்த்தையில் சொல்லி விட்டான் ஷ்யாம்.  

“ஹ்ம்ம்ம் இன்னும் ஒரு வாரம் எப்பதான்  முடியும் என்று இருக்கிறது சுரபி மா... சீக்கிரம் உன்னை என்னவளாக்கி  கொள்ள வேண்டும் போல இருக்கிறது.  ஐ ரியலி மிஸ் யூ.  ஐ லவ் யூ சோ மச்  சுரபி மா...”  தொண்டை கமற, கரகரத்த குரலில் தன் காதலை  சொல்லிவிட்டான்.  

அதைக்கேட்டவளோ திக்பிரமை பிடித்ததை போல நின்றிருந்தாள் சுரபி.

அவளின் அந்த திகைத்த பார்வையை  கண்டு கொண்டவன்,  அடுத்த நொடி, தன்  தலையை உலுக்கி தன்னை சமனபடுத்திக் கொண்டு

“ஹே சாரி மா....எனக்கு என்னவோ ஆய்டுச்சு..! என்னையும் மீறி எதேதோ உளறிக் கிட்டிருக்கிறேன்... என்னவோ தெரியல... உன்கிட்ட நிறைய நிறைய பேசணும் போல இருக்கு...” என்று குரல் தழுதழுக்க, மீண்டும் தொண்டை அடைத்தது.

தன் தொண்டையை செருமிக் கொண்டு   மேலும் தன் பேச்சை தொடர்ந்தான் ஷ்யாம்..!  

“பேசலாம்... நிறைய பேசலாம்... இன்னும் ஒருவாரம் தானே...!  நீ என்னவளாய் என்னிடம் வந்த பிறகு,  உன்னிடம் பேச நிறைய நிறைய  கதைகள் இருக்கு.  எல்லாத்தையும் கேட்க தயாராக இரு கண்மணி...  

ஐ லவ் யூ மா.... சரி...  நான் இப்ப போய் அத்தையை கூட்டிக்கிட்டு   வந்திடறேன்...” என்றவாறு அவளின் பதிலுக்கு காத்திருக்காமல்,

அவளை உச்சி முதல் பாதம் வரை ஒரு முறை ஆழ்ந்து பார்த்து,  அவளை தன் கண்களுக்குள்  நிரப்பிக்  கொண்டவன்...  

உல்லாசமாக விசிலடித்தபடி, கையில்  தன் பைக் சாவியை ஸ்டைலாக சுழற்றியபடி ஏதோ ஒரு பாடலை ஹம் பண்ணியபடி துள்ளலுடன் அந்த தளத்தின் நுழை வாயிலை நோக்கி சென்றான்.

நுழை வாயிலை அடைந்தவன், என்ன தோன்றியதோ.. தன் நடையை நிறுத்தி விட்டு,  மீண்டும் சுரபியின் பக்கம் திரும்பி பார்த்து,  முன்பு செய்தது போல அவளை மீண்டும் ரசனையோடு பார்த்து தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டவன்

“பை சுரபி மா... பத்திரமா வீட்டுக்கு போய்டு...லவ் யூ...” என்று கை அசைத்து விட்டு வெளியேறிச் சென்றான்.

அதுதான் அவனை கடைசி முறையாக அவள் பார்த்தது...!  

அவனின் அந்த மலர்ந்த  சிரித்த முகமும் கண்களில் மிளிர்ந்த காதலும், உல்லாசமாய்  துள்ளிக் குதித்த நடையும், வாயிலிலிருந்து உற்சாகமாக வெளிவந்த  விசில் சத்தமும்  தான்,  அவள் கடைசியாக அவனை பார்த்தது...!

******

ன் பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தவள் முகம் வெளிறி போனாள்...!

ஷ்யாமின் அந்த கடைசி நிமிடத்தை நினைக்கும்பொழுதெல்லாம் அவள் உள்ளம் பதறும்..! இப்பொழுது கூட அவள் நெஞ்சம் அவனுக்காக துடித்தது.

“கொன்னுட்டேன்...! நானே ஷ்யாமை கொன்னுட்டேன்..!  நான்தான் அவனை  கொன்று விட்டேன்..!  எத்தனை எத்தனை கனவுகள்...  ஆசைகள்...  அவன் மனதில் இருந்திருக்கும்.  

அதில் ஒன்று கூட நிறைவேறாமல் அல்பாயுசில் போய்விட்டானே...! நான்...நான்...  நானே தான் அவனை கொன்று விட்டேன்..!  

ஒரு குடும்பத்தின் தலைமகனை கொன்று விட்ட  பாவியாகி விட்டேன்...!  என்னால்தான் ஷ்யாம்  செத்து போனான்..!  

எனக்காகத்தான் இந்த உலகை விட்டு, அவனின் உயிரான குடும்பத்தை விட்டு, அவனின் உயிருக்கு உயிரான என்னை விட்டுபிரிந்து போனான்...

எல்லாம் என்னால் தான்....”  என்று தலையில் மடார் மடார் என்று அடித்துக் கொண்டு,  சத்தமில்லாமல் கதறி அழுதாள் சுரபி..! 

Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews