அத்தியாயம்-7
அன்று:
கொக்கரக்கோ... என்ற விடாமல் கூவும் அவர்கள் வீட்டு சேவலின்
சத்தமும், சலப் சலப் என்று
தண்ணீர் தெளித்து பின் பரக் பரக் என்று பக்கத்து வீட்டில் வாசலை பெருக்கும்
சத்தமும் அந்த நாள் விடிந்து விட்டது என்று சொல்லாமல் சொல்ல, அசந்து உறங்கி கொண்டிருந்தவள் மெல்ல கண் விழித்தாள் மலர்க்கொடி..!
எப்பொழுதும் அலார்ம் வைக்காமல், இந்த சத்தத்திலயே விழிப்பு வந்து விடும் பெண்ணுக்கு..!
தன் அக்காவை போல விடிந்து விட்டதே என்று சலித்துக்கொள்ளாமல்
உற்சாகமாகத்தான் அந்த நாளை துவக்குவாள் பெண்..!
ஆனால் இன்று என்னவோ விழிக்கும் பொழுது வழக்கத்திற்கு மாறாக உற்சாகம் கொள்ளாமல், அவளின் நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டது..!
ஏதோ நடக்க கூடாதது நடப்பதைப் போல அவளின் உள்ளுணர்வு எச்சரித்தது..!
அப்படி என்ன நடக்க கூடாதது நடக்கப் போகிறது? என்னவாக இருக்கும்? என்று யோசித்தவாறே, கலைந்திருந்த கூந்தலை
அள்ளி முடிந்து கொண்டு, கட்டிலிலிருந்து எழுந்து வந்தாள் பெண்..!
கொல்லைபுறத்திற்கு சென்று முகத்தை கழுவிக்கொண்டு திரும்பி வர, அடுத்த நொடி அப்படியே
அதிர்ந்து நின்றாள்..!
எப்பொழுதும் அவள் படுக்கையில் இருந்து எழுந்து வரும்பொழுதே சுப்ரபாதம்
பாட ஆரம்பித்திருக்கும் சிலம்பாயி... இன்று தன் இளைய மகளை பார்த்து வாயெல்லாம் பல்லாக
சிரித்து வைத்தாள்..!
அதைக்கண்டு மலர்க்கொடிக்கு மயக்கம் வந்தது..!
ஒருவேளை இது கனவா என்று மறைமுகமாக தன் கையை கிள்ளி பார்த்துக்
கொள்ள, அவளுக்கு வலித்தது..!
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆ.. வலிக்குது..! அப்படி என்றால் இது கனவல்ல..! நிஜம் தான்..! என்னடா அதிசயம் இது? என்னைக்கும் இல்லாத
திருநாளா, சிலம்பு இன்னைக்கு இப்படி
பல்லை காட்டுதே..! இது தப்பாச்சே..! “
என்று யோசித்தவாறே அவளும் அசட்டு சிரிப்பை சிரிக்க, அடுத்த நொடி சிலம்பாயி குடுகுடுவென்று சமையல் கட்டுக்கு சென்று ஏற்கனவே தயாரித்து
வைத்திருந்த காபியை கொண்டு வந்து தன் மகளிடம்
கொடுத்தாள்..!
அதைக் கண்டு இன்னும் வியந்து போனாள் பெண்..!
வழக்கமாக மலர் எழுந்து வந்து பத்து முறை காபி கேட்டாலும்
“இருடி..! இப்ப உனக்கு என்ன அவசரம்..! வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து போட்டு
தர்றேன்... இல்லைனா நீயே போட்டுக்க.. உனக்குத்தான் ஏழு கழுதை வயசாயிடுச்சு இல்ல..! ஒரு காப்பி தண்ணி கூடவா நீயே போட்டுக்க முடியாது..!
போற இடத்துல உன் மாமியார் என்னத்தான் திட்டப்போறா..!
என்ன புள்ளைய பெத்து வச்சிருக்கா உன் ஆத்தா..! ஒரு காபி தண்ணி
கூட போட தெரியலைனு எனக்குத்தான் பாட்டு
கிடைக்கும்..!
என்னதான் பட்டணத்துல போய் எஞ்சினியருக்கு படிச்சாலும், ஒரு காப்பி தண்ணி போடகூட கத்துக்க கூடாதா? எல்லாம் உன் மாமன் உனக்கு கொடுக்கிற இடம் டி...“ என்று சரணத்தில் ஆரம்பித்து பல்லவியில் முடித்து
கழுத்தை நொடித்துக் கொண்டு சென்று விடுவார்..!
அப்படிப்பட்ட அவள் அம்மா...! இன்று அவள் கேட்காமலேயே காபியை
கொண்டு வந்து தரவும், நம்ப முடியாமல் பெண் விழி உயர்த்தி தன் அன்னையை
ஆச்சர்யத்துடன் பார்த்து வைக்க, தன் மகளின் மன ஓட்டத்தை அறிந்தவராய் மீண்டும் ஈஈஈஈ என்று ஒரு
அசட்டு சிரிப்பை சிரித்தவர்
“மலரு... வெளியில வாசலுக்கு தண்ணி தொளிச்சு பெருக்கி
வச்சுட்டேன்..! அதுல பெருசா ஒரு கோலம் போட்டுடுறியா? கூடவே செம்மன் கரைக்கட்டிடு..!
அப்புறம் பொங்கலுக்கு வாங்கி போட்டியே..! அந்த மீதி கலர்பொடி பத்திரமா எடுத்து வச்சிருக்கேன்...! அதையும் எடுத்து போட்டு நல்லா பளிச்சினு இருக்கிற மாதிரி ஒரு
கோலத்தை போட்டுடு கண்ணு..” என்று குழைவுடன் கேட்க, மலர்க்கொடிக்கு அடுத்த ஆச்சரியமாக இருந்தது..!
சந்தேகத்தோடு தன் அன்னையை பார்த்தவள்,
“என்னம்மா விசேஷம்? எதுக்கு கோலம் எல்லாம் போட சொல்ற? “ என்று மகள் தன்
அம்மாவை குறுகுறுவென்று பார்க்க, அதே நேரம்
கொல்லையில் இருந்து அப்பொழுதுதான் கரந்த பாலை எடுத்துக்கொண்டு உள்ளே வந்த தணிகாசலம், தன் மகளின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக,
“அதுவா சின்ன பாப்பா...” என்று ஏதோ சொல்ல வர, தன் கணவனை சொல்ல
வேண்டாம் என்று கண்ணால் ஜாடை காட்டி சைகை செய்தார் சிலம்பா..!
ஓரக்கண்ணால் அதை கண்டு கொண்ட மலருக்கு திக்கென்றது..!
தனக்கு தெரியாமல் ஏதோ வீட்டில் நடக்க இருக்கிறது என்று யோசித்தவள், விடாமல் தன் கேள்வியை
தொடர்ந்தாள்.
“சொல்லுமா என்ன விசேஷம்? “ என்று தன் அன்னையை ஊடுருவி
பார்த்தாள் மலர்..!
தன் மகளின் துளைக்கும் பார்வையை எதிர்கொண்ட சிலம்பாயி
“சும்மாதான் கண்ணு..! பக்கத்து வூட்ல எல்லாம் கோலம் போடுறாளுங்க..!
சரி நம்ம வூட்லயும் இருக்கட்டுமேனு கோலம் போட சொன்னேன்..! அதுக்கு எதுக்கு இத்தன கேள்வி கேட்கிற? “
என்று செல்லமாக முறைத்தவர் அதோடு
நின்றால், மகள் இன்னும் ஏதாவது தோன்றி துருவுவாள் என்று
சமையல் கட்டுக்கு சென்று கலர் பொடியை எடுத்துவர சென்றுவிட்டார்..!
தன் தந்தையை பார்த்தவள்,
“அப்பா.... உங்களுக்காவது தெரியுமா? “ என்று தந்தையை கேள்வியாக
பார்க்க,
“பாப்பா... நான்
வயலுக்கு தண்ணி வைக்கணும்... இதோ
வந்துடறேன்...” என்று அவசரமாக நழுவிச்
சென்றார் அவள் அப்பா..!
தன் பெற்றோர்களின் முழியில் இருந்தே ஏதோ வீட்டில நடக்குது என்று கண்டு கொண்டாள்
பெண்..!
“ஹ்ம்ம்ம் கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே
ஆகணும் அப்ப பாத்துக்கிறேன்...”
என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், தன் அன்னை கொடுத்த கோல
மாவையும், கலர்ப்பொடியையும் வாங்கிக்கொண்டு
வாசலுக்கு சென்றாள்..!
பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டவள்... தாவணியையும்
தன் பின்புறமாய் சுற்றி வந்து முன்னால் சொருகிக் கொண்டு குனிந்து வாசலில் கோலமிட ஆரம்பித்தாள்..!
கை தானாக கோலத்தில் இறங்கியது..!
*****
வாசலில் கோலமிடுவது மலருக்கு ரொம்பவும் பிடிக்கும்..!
மார்கழி மாதம் முழுவதுமே விதவிதமாக தன் வீட்டு வாசலில் கோலம் போட்டு
அசத்துவாள்..!
அதுவும் பொங்கலன்று யாருடைய வீட்டு கோலம் நன்றாக இருக்கும் பார்க்கலாம் என்று பெண்கள் தங்களுக்குள்ளே போட்டி வைத்துக் கொள்ள, எப்பொழுதும் மலர்க்கொடியின்
கோலம் தான் ஜெயிக்கும்..!
அதனாலயே இன்று அவள் அன்னை வாசலில் கோலம் போட சொல்ல, அந்த அதிகாலை வேளையில்...தன்
மன சஞ்சலத்தையும் மீறி அவளின் கரங்கள் இயல்பாக கோலத்தில் லயித்து போனது..!
முதலில் வெள்ளை கோல மாவினால் ஸ்கெட்ச் பண்ணி முடித்தவள்... ஏற்கனவே
கலக்கி வைத்திருந்த கலரையும் எடுத்து அழகான மலர்கள் பூத்துக் குலுங்குவதை போல ஒரு
பூஞ்சோலையை வரைந்திருந்தாள்..!
அந்த பூஞ்சோலையில், அழகு மயில் தோகை விரித்து ஆடுவதை போல தத்ரூபமாக
போட்டிருக்க, அவள் மனம் துள்ளிக்குதித்தது,,!
அதே நேரம் அவள் மனம் அவளின் மனதை கவர்ந்தவன் இடம் சென்று
நின்றது..!
அவர் இந்த கோலத்தை பார்த்தால் என்ன சொல்லுவார்? கண்டிப்பாக வாவ் என்று
சொல்லி என்னை தூக்கி சுற்றி இருப்பார்...
அவளைப் போலவே அவள் மனம் கவர்ந்தவனும் ஒரு கலாரசிகன்..! ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ரசிப்பதில் பெரிய
ரசிகன்..!
அதனால்தான் அழகு ஓவியமாய் இருந்தவளை ரசிப்பதோடு நிறுத்திக்
கொள்ளாமல் தன் மனதில் அவளை பதிய வைத்துக் கொண்டான்.!
அவள் மனதிலும் குடிபெயர்ந்து விட்டான்..!
ஒரு நொடி தன்னவன் நினைவில், மயங்கி கிறங்கி நின்றாள் பெண்ணவள்..!
அதே நேரம்
“வாவ்... கோலம் சூப்பரா இருக்கு...! இந்த மாமன் எனக்காகத் தானே
இம்புட்டு அழகா போட்டு வச்சிருக்க மலரு...” என்று குரல் கேட்டு திடுக்கிட்டு அதிர்ந்து
திரும்பி பார்க்க,
அந்த வழியாக தன் பைக்கில் சென்ற மலரின் முறைப்பையவன் ஒருவன் தன் பைக்கை நிறுத்திவிட்டு மலரை கலாய்க்க, அவனைக் கண்டதும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அவனை முறைத்து பார்த்தாள்...
“ஆமாமாம்... மாமனுக்காகத் தான் இம்புட்டு அழகா போட்டு வச்சிருக்கேன்..! ஆனால் அந்த மாமன், வெட்டியா ஊரை சுத்திகிட்டு இருக்கிற உதவாக்கரை
மாமன் அல்ல..!
என்னை கட்டிக்கப் போற என் வருங்கால மாமனுக்காக....” என்று கழுத்தை
நொடித்து நக்கலாக சொல்ல,
“ஹா ஹா ஹா உன் அக்கா பூங்கொடியும் இப்படித்தான் சொல்லிக்கிட்டு திரிஞ்சா..! கடைசியில என்னை மாதிரி வெட்டியா ஊரை
சுத்திக்கிட்டு இருந்த நம்ம பங்கு ராசு அண்ணனுக்குத்தானே வாழ்க்கை பட்டா...!
அந்த மாதிரி நான் தான்
டி உனக்கு தாலி கட்ட போறேன்..! பாத்துக்கிட்டே இரு...” என்று தன் மீசையை முறுக்கி விட்டுக்கொள்ள,
“அடி செருப்பால...டேய் கருவாயா... ஒழுங்கா ஓடிப் போயிடு..! காலங்காத்தால பல்லு கூட விளக்காம அந்த ஊத்த நாக்க போட்டு சொல்லி வச்சுட்ட..!
முதல்ல உன் வாயில பினாயில் ஊத்தி கழுவு..! அப்புறம் என்ன சொன்ன? எங்கக்கா ராசு மாமாவ கட்டிக்கிட்டது உனக்கு அவ்வளவு கேவலமா
இருக்கா?
இப்ப சொல்றேன் கேட்டுக்க.. எங்க மாமா நல்லவர் வல்லவர் னு எங்கக்காவுக்கு முன்னாடியே
தெரியும் டா..! அதனாலதான் எங்கக்கா அவர
கட்டிகிட்டா..!
உன்ன பத்தி... உன் வண்டவாளத்தை பத்தி தெரியாதாக்கும்.. உன்னை கட்டிக்கிறதும் ஒன்னு... கல்யாணம் ஆகாமலயே நம்ம ஊரு கோயிலுக்கு பொட்டு கட்டி விடறதும் ஒன்னு..
இன்னொரு தரம் என் ராசு மாமாவை பத்தி ஏதாவது சொன்ன...? அப்புறம் என் வாய் பேசாது...“
என்று தன் கையை ஸ்டைலாக உதறி, அதில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை பின்னுக்கு தள்ளி, கை முஷ்டியை இறுக்கி அவனை அடிப்பதை போல காற்றில் ஒரு குத்து
விட்டுவிட்டு,
மீண்டும் அவனை இன்னுமாய் ஏதேதோ கெட்ட வார்த்தை சொல்லி திட்டி
விட்டு விடுவிடுவென்று வீட்டிற்கு உள்ளே சென்று விட்டாள்..!
ஆனாலும் ஒரு மூலையில்
அந்த நாய் சொன்ன மாதிரி எதுவும் நடந்து விடுமோ என்று சிறு அச்சம் அவள் உள்ளே..!
சிறிதாக ஆரம்பித்த அவளின் அச்சம் நேரம் ஆக ஆக பெரிதாக வளர்ந்தது..!
*****
எப்பொழுதும் இந்நேரம் வீட்டு வேலையை முடித்து விட்டு
வயலுக்கு சென்று விடும் சிலம்பாயி... இன்று அரக்கப்பரக்க சமையலறையில் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தார்..!
அதோடு வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி வைக்க
சொல்லி... குப்பையாக இருப்பதை எல்லாம்
தூசி தட்டி வைக்க சொல்லி அவளையும் விரட்டிக் கொண்டிருந்தார்..!
சற்று நேரத்தில் ராசய்யாவும் தன் குடும்பத்துடன் அங்கு வந்துவிட, தன் வீட்டினர் இன்றைக்கு இவ்வளவு நேரமாய் பரபரப்பாக இருந்ததற்கான காரணம் ஓரளவுக்கு பிடிபட்டது..!
அதே நேரம் வீட்டிற்கு
உள்ளே வந்த பூங்கொடி தன் தங்கையை பார்த்தவள்,
“என்னடி மலரு? ரெடியாயிட்டியா? “ என்று விசாரிக்க, அதைக்கேட்ட மலருக்கோ
ஒன்றும் புரியவில்லை..!
“ரெடியா? எதுக்கு ரெடியாகணும்
? என்று கேள்வியாக தன் தமக்கையை பார்க்க, பூங்கொடியோ ஆச்சர்யமாக தன் தங்கையை பார்த்தவள்
“ஏன் டி..! உனக்கு
விஷயமே தெரியாதா? “ என்று கேட்டவாறு தன் அன்னையைப் பார்க்க, அவரோ இன்னும்
சொல்லவில்லை என்று வாய் அசைத்து ஜாடை
சொல்ல, ஓரளவுக்கு மலர்க்கொடிக்கு புரிந்து போனது..!
ஆனாலும் அவர்களாகவே சொல்லட்டும் என்று எண்ணியவள்,
“சொல்லுக்கா.. என்ன விஷயம்? எதுக்கு ரெடியாக சொல்ற? ஆமா நீ என்ன அதிசயமா காலங்காத்தாலயே கிளம்பி வந்து இருக்க..!
இன்னைக்கு லீவ் தானே..! லீவ் நாள் னா எப்பவும் 10 மணிக்கு தானே எந்திரிப்ப? “ என்று நக்கலாக தன்
அக்காவை பார்க்க,
“ஹ்ம்ம்ம்... எனக்கும் இழுத்து போத்தி தூங்க ஆசைதான்..! இந்த மனுஷன் விட்டாரா? ஆறு மணிக்கே எழுந்திருச்சு பரபரன்னு எதையோ உருட்டிகிட்டு
இருந்தார்..!
அப்புறம் இப்படியும் அப்படியுமா எத்தன நடை... என்னமோ ஊர்லயே இல்லாத அருமை மச்சினிக்கு பொண்ணு பார்க்க
வர்றாங்களாம்.! அதுக்குத்தான் இத்தனை அலப்பறை..!
இந்த அலப்பறையில் எனக்கு தூக்கம் வருமாக்கும்..” என்ற கழுத்தை நொடித்தவள்...சந்தடி சாக்கில்
விஷயத்தையும் போட்டு உடைத்து விட்டாள் அக்கா..!
அதைக்கேட்ட தங்கைக்கோ தூக்கிவாரிப் போட்டது..!
தன் அக்கா நீட்டி முழக்கி நெட்டூரம் இழுத்து சொல்வதின் அர்த்தம் புரிய, திடுக்கிட்டு போனாள் பெண்.
“என்னக்கா சொல்ற? பொண்ணு பார்க்க வர்றாங்களாம்? யாருக்கு? “ என்று குழப்பமாக தன் அக்காவை பார்க்க,
“ஹ்ம்ம்ம் எனக்குத்தான்... எனக்குத்தான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு
ஆசை...அதான் என்னை பொண்ணு பார்க்க
வர்றாங்களாம்...”
என்று தங்கையை முறைத்தபடி உதட்டை சுளித்து நக்கலாக சொல்லி வைக்க,
“ஹா ஹா ஹா அப்படி ஒரு வாய்ப்பு மட்டும் இருந்தால் நான்
தப்பிச்சேன்..! என்ன மலரு..நான் சொல்றது
கரிக்கெட்டுத்தானே...” என்று ராசய்யா தன் மச்சினிச்சியை பார்த்து குறும்பாக கண் சிமிட்ட, அதில் இன்னுமாய் சூடேறிய பூங்கொடி,
“ஹ்ம்ம்ம் அதுக்குனே காத்துகிட்டு இருக்கியா கருவாயா? அப்படியாவது என்னைய கழட்டி விட்டுட்டு நீயும் உன் பொண்ணு
கூத்தடிக்கலாம்னு தானே..! இந்த ஜென்மத்துல...இல்ல...
இல்ல எந்த ஜென்மத்துலயும் அது நடக்காது..!
சிவபெருமான் கழுத்தை சுத்தின
பாம்பு மாதிரி, உன்னை புடிச்ச
பாம்பு நான்..!
எப்பவும் இந்த ராசய்யாவுக்கு இந்த பூங்கொடி தான்...” என்று தன் கணவனிடம் மல்லுக்கு நிக்க, அதை காதில் போட்டுக்கொள்ளாமல் வேற உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள்
மலர்..!
இன்னுமே அவளால் தன் அக்கா சொன்ன விஷயத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை..!
அவள் பயந்தது போலவே..அவள் மனம்
சஞ்சலப்பட்டது போலவே இப்பொழுது விஷயம் வெளியில் வந்து விட்டது..!
ஆனால் திடீரென்று ஏன் இந்த ஏற்பாடு என்றுதான் புரியவில்லை.!
அதுவும் அவளிடம் எதுவும் சொல்லாமல், கேட்காமல் எப்படி
இந்த ஏற்பாட்டை செய்யலாம்.? அதற்கான விடை தன்
மாமானிடம்தான் இருக்கு..
ஏனென்றால் அந்த வீட்டில் சிறு துரும்பை அசைப்பது என்றால் கூட
ராசு மாமாவிடம் கேட்காமல் செய்ய மாட்டார்கள் அவளின் பெற்றோர்..!
அப்ப கண்டிப்பா அவர்கிட்டதான் கேட்கணும் என்று முடிவு செய்தவள்
தன் மாமனை பார்க்க, அவனோ தன்
பொண்டாட்டியை வாரிக்கொண்டிருந்தான்..!
அவள் அக்காவும் அவனுக்கு நிகராக மல்லுக் கட்டிக் கொண்டு நிக்க, அதற்கு மேல் பொறுமை இழந்த சிறியவள்...
“ஐயோ ஆண்டவா..! உங்க சண்டையை கொஞ்சம் நிறுத்தறிங்களா? முதல்ல என்ன மேட்டர்னு
சொல்லுங்க? யாரு வீட்டுக்கு வர்றாங்க? ஏன் அம்மா இன்னைக்கு
காலையில் இருந்து இப்படி அமர்க்களப்படுத்திகிட்டு இருக்காங்க?” என்று முக்கியமான
கேள்விக்கு வர,
“ஹ்ம்ம்ம் அதை உன் அருமை
மாமன் கிட்டயே கேளு...” என்று ராசய்யாவை கோத்துவிட்டு
“அம்மா... நான் சொன்ன
மாதிரி பதத்துல கேசரி ரெடியா? கொஞ்சம் கொடு... டேஸ்ட் பண்ணி பார்க்கறேன்...” என்றவாறு சமையலறைக்குள்
புகுந்து கொண்டாள் பூங்கொடி..!
அதுவரை அவர்கள் சண்டையை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
அந்த குட்டியும்,
“ஐ கேசரியா? ஆயா... எனக்கும் வேண்டும்....” என்றபடி தன் அன்னையை தொடர்ந்து சமையலறைக்குள்
ஓடினாள் அந்த குட்டி.
இப்பொழுது முற்றத்தில் இருந்தது ராசய்யாவும் மலர்க்கொடியும்
மட்டும் தான்..!
எப்பொழுதும் இனிப்பை விரும்பாத ராசய்யா,
“நானும் கொஞ்சம் கேசரியை டேஸ்ட் பார்த்துட்டு வந்திடறேன்
மலரு... வந்துட்டு நான் உனக்கு விளக்கமா
சொல்றேன்...”
என்றவாறு
சமையல்அறை வாசலை நோக்கி நழுவ முயல, எட்டி தன் மாமன் கையை
பிடித்து இழுத்து நிறுத்தியவள்..! பின் பற்றிய கையை விடாமல் அவனை இழுத்துக் கொண்டு பக்கத்து அறைக்கு சென்றாள்
மலர்க்கொடி..!
******
சிறுவயதிலிருந்தே ராசய்யாவுடன் சகஜமாக உரிமையுடன்
பழகி வந்ததால் இப்பொழுது ராசய்யா தன் அக்கா கணவன் என்றெல்லாம் பார்ப்பதில்லை
மலர்..!
எப்பவும் போலத்தான் சிறுபிள்ளையாக தன் மாமனிடம் பழகுவாள்...!
அருகில் இருந்த அறைக்குள் தன் மாமனை இழுத்து சென்றவள்... அந்த
அறைக்கதவை மூடிவிட்டு,
“என்ன மாமா நடக்குது இங்க? “ என்று இடுப்பில் இரண்டு பக்கமும் கையை ஊன்றியபடி, விரைத்துக் கொண்டு நின்றாள் அவனை முறைத்தபடி..!
“ஒன்னும் நடக்கலையே..! வேணும்னா நாமதான்
நடக்கிறோம்.. பத்தாததுக்கு கொல்லைப்புறத்தில் ஆடு, மாடு, கோழி தான் நடக்குது...” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல,
“ஐய...க்ரேட் ஜோக்கு...
அதோடு இப்ப இளிக்கிற நேரம் இல்ல..! ஒழுங்கா உண்மைய சொல்லுங்க? என்ன நடக்குது இங்கே..?” என்று மீண்டும் அவனை முறைத்து
பார்க்க,
“ஆஹான்... தணிகாசலம் மாமா பொண்ணுங்களுக்கு எது வருதோ, இல்லையோ...நல்லா
முறைக்க வருது...! எது தெரியுதோ இல்லையோ நல்லா
சண்டை போட தெரியுது...!” என்று வாய்விட்டு புலம்பியவன்
“ஹ்ம்ம்ம் உன் அக்கா மாதிரியே சூப்பரா முறைக்கிற மலரு..முறைக்கிறப்ப
கொஞ்சம் நல்லாதான் இருக்க...” என்று
பேச்சை மாற்ற மியலமுயல,
அதைக் கண்டு கொண்டவள்
“ஹீ ஹீ ஹீ உங்க பாராட்டுக்கு ரொம்ப தேங்க்ஸ் மாமா...! ஆனா இப்ப பேச்சை மாத்தாம உண்மைய சொல்லுங்க...” என்று மீண்டும் பாயிண்டை பிடிக்க,
“உண்மையா? எந்த உண்மை? “ என்று புரியாதவனைப் போல கேட்க
“போதும் மாமா.. ரொம்ப ஆக்ட் பண்ணாதிங்க... உங்களுக்கு அது செட்
ஆகல...! சரி நான் நேரடியாக கேட்கிறேன்..! இன்னைக்கு என்னை பொண்ணு பார்க்க வராங்களா?” என்று நேரடியாக கேட்க,
“ஆஹான்..! இதைத்தான் இம்புட்டு நேரமா கேட்டுகிட்டு இருந்தியா? நான் கூட அத்தை
உன்கிட்ட முன்னரே சொல்லி இருக்கும்னு நினைச்சேன்..! இன்னும் சொல்லலையா? உனக்கு விஷயம் தெரியாதா?“
என்று எங்கோ பார்த்தபடி
பதில் உரைக்க, அதில் அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம்
புசுபுசுவென்று பொங்கி வந்தது பெண்ணுக்கு..!
“மாமா...! இது அநியாயம்...! நான் ஏற்கனவே வேற ஒருத்தரை காதலிக்கிறது
உங்களுக்கும் தெரியும்..! அதுவும் உங்க
கிட்ட சொல்லி நீங்க தான் எப்படியாவது எங்களை சேர்த்து வைக்கணும்னு சொன்னேன்..!
ஆனால் இப்ப நீங்களே இப்படி யாரோ ஒருத்தனை பொண்ணு பாக்க
கூட்டிக்கிட்டு வர்றீங்களே..! இது நியாயமா?” என்று கோபத்தில்
ஆரம்பித்து வேதனையுடன் தழுதழுத்தவாறு முடித்தாள் மலர்..!
அதுவரை தன் மச்சினிச்சியுடன் கலகலத்துக் கொண்டு இருந்தவன்..
இப்பொழுது சீரியஸ் மோட்க்கு மாறியவன்..!
“இங்க பாரு மலரு..! காதலிக்கிறது எல்லாம் இந்த வயதில் வரும்
வியாதிதான்..!
நீ சின்ன பொண்ணு..! உனக்கு உலகம் தெரியாது..! உனக்கு எது நல்லது கெட்டது என்று இந்த மாமா
பார்த்துக்க மாட்டேனா? “ என்று அவளை அடக்க முயல
“கண்டிப்பா மாமா... என் மேல உங்களை விட வேற யார் அக்கறைப்பட போறா? அந்த நம்பிக்கையில்
தான் உங்ககிட்ட நான் என் காதலை பற்றி சொன்னேன்.
அதுவும் மதி என்னிடம் ப்ரொபோஸ்
பண்ணினப்ப கூட, உடனே ஏத்துக்க தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது..!
ஆனால் நீங்க இருக்கிற தைரியத்துல தான் மனதார அவர் காதலை ஏற்றுக்
கொண்டேன்..! இன்னுமே அவர்கிட்ட சொல்லக்கூட இல்லை..! ஆனால் அவர்தான் எனக்கானவர்
என்று முடிவு பண்ணி விட்டேன்..!
இப்பொழுது நீங்களே அதற்கு வில்லனாக வரலாமா?”
என்று குற்றம் சாட்டும் விதமாக அவனை உறுத்து விழித்தாள்
மலர்க்கொடி..!
ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன்
“இங்க பாரு மலரு... உன் நிலை எனக்கு புரியுது..! ஆனா இளம்கன்று பயமறியாது னு சொல்லுவாங்க..! அதனால உனக்கு
உன் வாழ்க்கையோட எதிர்காலத்தைப் பத்தி தெரியல..!
நீ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிச்சுட்டு சென்னையில வேலை
பார்க்கற..! மதி என்னை போல விவசாயம் பார்க்கறான்..!
ஒரு விவசாயியை கட்டிக்கிட்டு உன் அக்கா படற கஷ்டம் போதும்..! நீயும் அந்த கஷ்டத்தை படவேண்டாம்...” என்றான் கொஞ்சம் தழுதழுத்தவாறு..!
“அப்படியா? என் அக்கா என்னத்த
கஷ்டப்படறாளாம்.? “ என்று கேலியாக
சிரித்து, நக்கலாக தன் மாமனை பார்த்தவள், மீண்டும் நிமிர்ந்து தன் மாமனை நேராக பார்த்தவள்,
“அவர் விவசாயம் பார்ப்பதில் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா...”
என்று சொல்ல,
“இப்ப உனக்கு பிரச்சனை இல்லாத மாதிரி இருக்கலாம்..! நாளைக்கு அதுவே பிரச்சனையாக வந்துவிடக் கூடாது
இல்லையா...” என்று ராசய்யா முடிக்கும் முன்னே முந்திக் கொண்டது பெண்.
“அதெல்லாம் வராது...” என்றாள் உறுதியான, அதே நேரம் ஆணித்தரமான குரலில்.
அவள் குரலில் இருந்த உறுதியும், அவள் முடிவில் இருந்த தெளிவும் கண்டு ஒரு நொடி ஆச்சர்யமாகி
போனது மாமனுக்கு..!
ஆனாலும் அவள் சொன்னதை ஏற்று கொள்ளாதவனாய்,
“எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற மலரு? “ என்று யோசனையோடு கேட்க,
“ஏன்னா நான் உங்களையும் அக்காவையும் பார்த்து வளர்ந்தவ மாமா... பெருசா படித்திராத நீங்க... என் அக்காவை எவ்வளவு நல்லா பாத்துங்கறிங்கனு எனக்கு
தெரியும்..!
வேற, நல்லா படித்து, பெரிய வேலையில்
இருக்கிறவனை கட்டி இருந்தால்கூட என் அக்கா இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்க மாட்டா..!
இதுக்கெல்லாம் காரணம்.....?
காதல்..!
நீங்க அக்கா மேல வச்சிருக்கிற காதல்...!
அக்கா உங்க மேல வச்சிருக்கிற காதல்..!
அந்த காதல் இருந்தா போதும் மாமா... வாழ்க்கையில் எத்தனை
ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் சமாளிக்க முடியும்..!
எனக்கு மதியோட கண்ணுல இருக்கிற காதலை பார்க்கிறப்ப எல்லாம்
நீங்க அக்காவை பார்க்கிற அதே காதல் பார்வைதான் தெரியும்..!
சின்ன வயசுல இருந்தே உங்களை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ..
அடிமனசுல உங்களை மாதிரியே தான் என் புருஷனும் இருக்கணும்னு பதிஞ்சு போச்சு..!
அதனால தான் அடிச்சு சொல்றேன்..! மதிய கட்டிகிட்டா, கண்டிப்பா நான் சந்தோஷமா தான் இருப்பேன்..!
அதோட விவசாயம் பண்றது ஒன்னும் தப்பில்லை மாமா..! வருங்காலத்தில்
மற்ற தொழிலைவிட,
விவசாயத்துக்குத்தான் மதிப்பு அதிகம் ஆனாலும் ஆச்சர்யபடறதுக்கில்லை..!
ஏன்னா வருங்காலத்தில் தடுக்கி விழுந்தா எஞ்சினியரோ டாக்டரோ
இருக்கலாம்..! தெருவுக்கு ஒரு எஞ்சினியரையும், டாக்டரையும் பார்க்கலாம்..!
ஆனால் நாம எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும்..பெரிய
கோடிஷ்வரனாக இருந்தாலும், நாம உயிர்வாழ
சாப்பாடு வேணும் இல்ல.. அந்த சாப்பாட்டை படைக்கிறது ஒரு விவசாயிதான்..!
பசி என்று வந்து விட்டால், அதை தணிக்க எவ்வளவு விலை கொடுக்கவும் மக்கள் தயாராக இருக்கும்
காலம் சீக்கிரம் வந்திடும்..!
அப்ப நீங்க கேவலமா , தாழ்த்தி நினைக்கிற
விவசாயிதான் பெரிய கோடிஷ்வரனாக இருக்க போறான்..!
அதோட அவர் ஒன்னும் வேகாத வெய்யில மண்வெட்டியை எடுத்துகிட்டு
கஷ்டபடலை..! அவரும் அக்ரி படிச்சுட்டு விவசாயத்தில ஆராய்ச்சிதான் பண்ணிக்கிட்டு
இருக்கார்.
அவர் செய்யும் ஆராய்ச்சியை அவர் வயலிலயே செய்யறார்.. அதனால் அவர
ஒன்னும் விவசாயினு மட்டமா
நினைச்சிடாதிங்க..!
அப்படியே விவசாயம் பண்ணினாலும் அதுல எனக்கும் வருத்தம் இல்லை..!
உங்களை மாதிரியே கண்டிப்பா என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்..! “ என்று படபடவென்று பொரிந்து தள்ளி , தன் வருங்கால கணவனுக்காக வக்காலத்து வாங்கினாள் பெண்..!
அதைக்கேட்ட ராசய்யா இன்னுமாய் மலைத்து போனான்..!
“இந்த காலத்து பொண்ணுங்க எவ்வளவு தெளிவா இருக்காங்க..!
அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதிலும் எவ்வளவு உறுதியா இருக்காங்க..” என்று
ஆச்சர்யபட்டவன், ஆனாலும்
மலர்க்கொடியின் வாதத்தில் திருப்தி அடையாதவனாய்
“அது சரி..! உன்
படிப்பு என்னாகறது? மதியை கட்டிகிட்டா
நீ இங்க கிராமத்துலதான் இருக்கணும்..! மதியால அங்க வரமுடியாது..!
இவ்வளவு கஷ்டபட்டு இஞ்சினியரிங்க்கு படிச்சுட்டு, தோட்டத்துல வேலை
செய்யணும்..! நீ கஷ்டப்பட்டு படிச்ச படிப்பு வீணாக்க போறியா?” என்று லேசாக
முறைத்தபடி அதட்டலுடன் கேட்க
“இல்ல மாமா..! அதற்கு
அவசியமில்லை..! இப்பொழுதெல்லாம்
வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி நிறைய கம்பெனி இருக்கு..! நான் இப்ப வேலை
செய்யற ஆபிஸ்லயும் , வீட்ல இருந்தே வேலையை பார்த்துக்க வசதி இருக்கு..!
அதனால நீங்க கஷ்டப்பட்டு என்னை படிக்க வச்ச படிப்பு எப்பொழுதும்
வீணாகாது..! இங்க வீட்ல இருந்தே நான் என்
வேலையை பார்த்துக்குவேன்..! அவர் அவர்
வேலையை பார்க்கட்டும்...”
என்று இன்னும் சில பல காரணங்களை எடுத்துச் சொல்லி தன் மாமனை
சமாதானம் படுத்த முயல, ராசய்யாவோ அதை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை
“இங்க பாரு மலரு..! நீ
என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னால அதை ஏத்துக்க முடியாது..! இப்ப உன்னை பார்க்க
வர்ற பையனும் நல்ல பையன் தான்..!
உன்னை உள்ளங்கையில் வைத்து தாங்கற பையன் தான்...” என்று முடிக்கும் முன்னே
“வேண்டாம்...யாரும் எனக்கு வேண்டாம்... என் மதியை தவிர, அந்த ராஜகுமாரனே வந்தாலும் எனக்கு வேண்டாம்...” என்று மலர்க்கொடி மீண்டும் தன் பக்கம் மறுக்க, அவளை அழுத்தமாக பார்த்தவன்,
“நல்லது...! இந்த மாமா உனக்கு நல்லது தான் செய்வான் என்ற நம்பிக்கை உனக்கு இருந்தால் இந்த பொண்ணு பார்க்கும்
படலத்துக்கு நீ சம்மதிப்ப..! அப்புறம் உன் இஷ்டம்...! “
என்று அழுத்தமாக கூறிவிட்டு, அதற்கு மேல் அங்கு நிற்காமல், அறையின் வாயிலுக்குச் சென்று கதவைத் திறக்க, அப்பொழுதுதான்
பூங்கொடியும் அந்த அறைக்கு உள்ளே வர, வந்து கொண்டிருந்தாள்..!
மூடிய அறைக்குள் தன் கணவனும் தங்கச்சியும் இருப்பதைக் கண்டு
கொஞ்சமும் அதிர்ந்து போகாமல், இயல்பாக தன் தங்கையை பார்த்தவள்
“ஏன் டி..! மாப்பிள்ளை
வீடு வர்ற நேரம் ஆச்சு..! நீ இன்னும்
குளிக்காமல் உன் மாமன் கூட வாய் அடிச்சுகிட்டு நிக்கிற..! உன் அருமை மாமன் எங்க
போய்ட போறார்..!
அவர்கூட அப்புறம் பேசிக்கலாம்..! போய் சட்டுபுட்டுன்னு குளிச்சுட்டு வா உன்னை
நான் தயார் பண்ணனும்...” என்று பூங்கொடி
தன் தங்கச்சியை விரட்ட,
அவளோ அடிபட்ட பாவத்துடன் ராசய்யாவை பார்க்க, அவனோ கண்களால் நான் இருக்கேன் பார்த்துக்கிறேன் என்று சைகை
செய்து அவளை அமைதி படுத்த முயன்றான்..!
Paavam malar ....😪😢😢😢
ReplyDelete