அத்தியாயம்–4
அன்று:
தன் கழுத்தில் மாட்டி இருந்த ஸ்டெதஸை சரி செய்து, அதை சரியாக மாட்டிக்கொண்டு தன் எதிரில் அமர்ந்து இருந்த முதியவரின்
இதயத்தின் மீது ஸ்டெதஸை வைத்து அவரின் இதய துடிப்பை சரி பார்த்தாள் அந்த டாக்டர் பெண்.
உழைத்து உழைத்து காப்பு காச்சு போயிருந்த அந்த முதியவரின்
சொரசொரப்பான கையை எடுத்து, அவரின் நாடி
துடிப்பை சரி பார்த்தாள்..!
பின் இன்னும் சில பல புரசிஜர்களை பண்ணி முடித்தவள், இப்பொழுது நிமிர்ந்து அவரை கனிவாக பார்த்தவள்,
“உங்க இதயம் ரொம்ப வீக்கா இருக்கு மிஸ்டர் தணிகாசலம்..! அனேகமா இதயத்தில அடைப்பு இருக்க வாய்ப்பு
இருக்கு. எதுக்கும் ஒரு டெஸ்ட் எடுத்து பார்த்துடலாம்...
ஆனால் ரொம்ப உடல் அசந்து, உடம்பை வருத்தும்படியான வேலை எதுவும் இனிமேல் செய்யக்கூடாது. அப்புறம் கொழுப்புசத்து
அதிகமா சேர்ந்த உணவான தயிர்,
மோர், பால், சிக்கன் எல்லாம்
சேர்க்கக்கூடாது.
இந்த டெஸ்ட் எடுத்துட்டு ரிப்போர்ட் கொண்டு வந்து காமிங்க...அப்புறம்
பார்த்துட்டு சொல்றேன்... “ என்று சொல்லி புன்னகைத்தவாறு, தன் அருகில் இருந்த காகிதத்தில்
தன்னுடைய கையில் இருந்த பேனாவால் அழகாக கிறுக்கினாள்.
எதிரில் அமர்ந்து இருந்த முதியவரின் முகத்தில் லேசான கலவரம் வந்து
ஒட்டிக்கொண்டது..!
“டாக்டரம்மா... எனக்கு
ஒன்னும் ஆய்டாது இல்ல. என் மூத்த பேத்தி
கண்ணாலத்த கண்ணுல பாக்கற வரைக்கும் நான் உசுரோட
இருக்கோணும்...அதுக்கு தகுந்த மாதிரி ஏதாவது மாத்திரை எழுதிக் கொடு தாயி..” என்று
தழுதழுக்க, அவரின் கையை மெல்ல
அழுத்தி கொடுத்தவள்,
“கண்டிப்பா தணிகாசலம்... உங்க பேத்தி என்ன? உங்க கொள்ளு பேத்தி கண்ணாலத்தை
கூட ஜம்முனு பாக்கலாம். அதெல்லாம் உங்களுக்கு ஆயுசு கெட்டி... அதனால விசனப்படாம
வீட்டுக்கு போயிட்டு நல்லா ரெஸ்ட்
எடுத்துட்டு வாங்க...
அதோட நான் எழுதி கொடுத்த இந்த டெஸ்ட்டையும் மறக்காம எடுத்துட்டு
வாங்க...வெளில போனதும் இந்த டெஸ்ட்டெல்லாம் எதுக்குனு எழுதி கொடுத்த பேப்பரை
தூக்கி போட்டுட்டு போய்டக்கூடாது...
கண்டிப்பா இப்பவே டெஸ்ட் எடுத்து பார்க்கணும்... சரியா? “ என்று அதட்டலுடன் சொல்ல, அவரும் தன்னை மறந்து பெரிதாக புன்னகைத்தவர்,
“சரிங்க டாக்டரம்மா... நீங்க சொல்லி தட்ட முடியுங்களா? அப்ப நான் வரேனுங்க...“ என்று வந்த சிரிப்பை அடக்கி கொண்டு தன்
இருக்கையில் இருந்து எழுந்து வாயிலை
நோக்கி சென்றார்.
அந்த டாக்டரும் புன்னகைத்தவாறு, அடுத்த நபரை அழைப்பதற்காக, தன் இருக்கையில் இருந்த
அழைப்பு மணியை அழுத்த, அதன் சத்தம் கேட்டு
அடுத்து பின் நாற்பதில் இருந்த பெண்மணி ஒருவர்
உள்ளே வந்தார்.
“வணக்கம் டாக்டரம்மா.... “ வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி அவளின்
முன்னால் அமர, அவளோ மீண்டும் தன்
கழுத்தில் கிடந்த ஸ்டெதஸை சரி செய்து கொண்டு, ம்க்கும் என்று தொண்டையையும் சரி செய்து கொண்டு,
“ஹ்ம்ம்ம் சொல்லுங்க...உங்க பெயர் என்ன? “ என்று
மிடுக்குடன் கேட்க,
“என் பேருதான் உங்களுக்கு தெரியுமே டாக்டரம்மா...” என்று அந்த பெண்மணி புன்னகைக்க,
“அதெல்லாம் இல்ல.. நான் டாக்டர்.. நான் பேர் கேட்டா, குறுக்க கேள்வி கேட்காம பதில் சொல்லணும்.. உங்க பெயர் என்ன? “ என்று அந்த
மருத்துவரும் லேசாக முறைத்தபடி கேட்க,
“சிலம்பாயிங்க....” என்று இப்பொழுது பெரியவள் பயபக்தியோடு சொல்ல,
“ஹ்ம்ம்ம் என்ன வயசு? “
“ஹ்ம்ம்ம் அது சரியா தெரியலைங்களே..எனக்கு பதினாறு வயசுல
கண்ணாலம் ஆச்சு... அடுத்த வருஷமே மூத்த புள்ள பொறந்துட்டா... இப்ப மூத்தவளுக்கு
வயசு 29. அப்படினா 16 ம் 29 ம் கூட்டினா... என்று விரல் விட்டு எண்ணி, மனக்கணக்கை போட்டுவர்
“ஆங்...புடிச்சிட்டேன்…குத்துமதிப்பா ஒரு 45 வயசு இருக்கும்
டாக்டரம்மா... “ என்று வெற்றி களிப்புடன் முறுவலிக்க, அந்த டாக்ரருக்கும் சிரிப்பு வந்தது.
ஆனாலும் தன் சிரிப்பை அடக்கி கொண்டு,
“சரி சரி உங்க உடம்புக்கு என்ன? “ என்று மிடுக்குடன் பெரியவளை பார்க்க,
“அத நீங்கதான் கண்டுபுடுச்சு சொல்லோணும் டாக்டரம்மா...” என்று
மீண்டும் பெரியவள் புன்முறுவலிக்க,
“ஹ்ம்ம் அதுக்குத்தான்..முதல்ல உங்க உடம்புக்கு என்ன பண்ணுதுனு
சொல்லணும். அப்பதான் நான் என்ன மாதிரி வைத்தியம் செய்யறதுனு சொல்ல முடியும்..
சொல்லுங்க.. உடம்புக்கு என்ன பண்ணுது...? “
என்று மீண்டும் ஒரு டாக்டருக்கே உரித்தான கெத்துடன் பெரியவளை
விசாரித்தாள் சிறியவள்...
“ஹ்ம்ம்ம் என்னத்தனு சொல்றது டாக்டரம்மா.... கை கால் எல்லாம்
சோந்து போவுது...முன்ன மாதிரி எல்லாம் இப்ப ஓடியாடி வேலை செய்ய முடியல.
ஒரு மூட்ட உரத்தை அசால்ட்டா தூக்குன நான்... இப்ப தம்மாத்துண்டு தண்ணி குடத்த தூக்கவே
சோர்ந்து போகுது...பழய தெம்பு வர்ற மாதிரி ஏதாவது சத்துமாத்திரையோ, டானிக்கோ எழுதி
கொடுங்க டாக்டரம்மா... “
என்று கிராமத்து பாணியில் நீட்டி முழக்கி வெள்ளந்தியாய் சிரித்தாள்
அந்த பெரியவள்..!
“இல்ல...இல்ல...அப்படி எல்லாம் ஏதாவது மாத்திரையை எழுதி கொடுக்க
முடியாது.. அதோட நீங்க சொன்ன நோவுக்கு நீங்க ஜென்றல் டாக்டரைத் தான் பார்க்கணும்.
நான் ஒரு கார்டியாலஜிஸ்ட்
அதாவது இதயம் சம்பந்தமான வியாதிக்கு மட்டும் தான் நான் வைத்தியம் பார்ப்பேன்..” என்று லேசான புன்னகையோடு சொல்ல, பெரியவளின் முகம் சுருங்கியது.
“அதென்ன? இப்படி சொல்லிபுட்டீங்க..? சாதாரண நோவுக்கு என்ன
மருந்து கொடுக்கிறதுன்னு தெரியாம, நெஞ்சாங்கூட்டுக்குள்ள இருக்கிற இதயத்துக்கு எப்படி உங்களால வைத்தியம்
பார்க்க முடியுங்க? “
என்று வந்த சிரிப்பை
அடக்கியபடி பெரியவள் கிண்டலாக கேட்க, எதிரிலிருந்தவளுக்கோ
கோபம் புசுபுசுவென்று பொங்கி வந்தது
“அதெல்லாம் அப்படித்தான்... நான் இதயத்தை மட்டும் தான்
பார்ப்பேன்... நீங்க போய் வேற டாக்டர
பாருங்க...”
என்று முறைத்தபடி அருகிலிருந்த பெல்லை அழுத்த, அந்த அம்மாவும் முந்தானையை
இழுத்து வாயில் வைத்து சிரிப்பை அடக்கிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே செல்ல, அடுத்ததாக உள்ளே வந்தாள்
பருவ மங்கை ஒருத்தி.
உள்ளே வந்து அந்த
மருத்துவரின் முன்னால் வந்து அமர,
“ஹ்ம்ம்ம் உங்களுக்கு
என்ன செய்யுது? “ என்று பேனாவை ஸ்டைலாக ஆட்டியபடி கேட்க, அந்த பெண்ணும்
“அப்பப்ப இதயம் படபடன்னு அடிச்சுக்குது டாக்டர்... நைட்டெல்லாம் தூக்கம் வரமாட்டேங்குது..
எப்படா விடியும் னு இருக்கு...” என்று அவள் முடிக்கும் முன்னே
“ஹ்ம்ம்ம் அப்புறம் பசி எடுக்காது..அப்படியே பசிச்சாலும் சாப்பிட
முடியாது... நடக்கிறப்ப எதிர்ல யார் வந்தாலும் தெரியாது...” என்று அந்த மருத்துவரும் பட்டியலிட, எதிரில் அமர்ந்திருந்த இளையவளின்
கண்கள் பெரிதாக விரிந்தன..!
“அதே...அதே...அதேதான்.. டாக்டர்...” என்று துள்ளி குதிக்க,
“ஆமா...இந்த வியாதி எத்தனை நாளா இருக்கு? “ என்று இளையவளை ஊடுருவி
பார்த்தவாறு அந்த மருத்துவர் கேட்க
“ஒரு ஆறு மாசமா தான் டாக்டர்....”
“ஹ்ம்ம்ம் அப்படியா... நீங்க சொல்றத வச்சு பார்த்தா இந்த வியாதி
அவ்வளவு சீக்கிரம் குணமாகிற வியாதி மாதிரி தெரியலை...இது ரொம்ப மோசமான வைரஸ் ஆதான்
இருக்கும்...” என்று யோசனையுடன் தன் தாடையை தடவ,
“ஐய்யய்யோ... அப்படியா..? அப்படி என்ன வியாதி டாக்டர்? கொரானா மாதிரி ஏதாவது பெரிய வைரஸ் ஆ? ” என்று பதற்றத்துடன்
கேட்க, அந்த மருத்துவரும் கிட்ட வா என்று சைகை செய்ய,
அந்த பெண்ணும் குனிந்து
அந்த மருத்துவரின் அருகில் வந்தவள்,
“சொல்லுங்க டாக்டர்.. என்ன வைரஸ் இது? “ என்று கலவரத்துடன் கேட்க,
“அதுவா... அதுதான் காதல் வைரஸ்...உங்களுக்கு வந்திருக்கிற
வியாதிக்கு பேரு காதல்...” சரிதானே என்று குறும்பாக கண்சிமிட்ட, அதுவரை ஒருவித கலவரத்துடன் எதிரில் அமர்ந்திருந்த இளையவளின் கன்னங்கள் இப்பொழுது குங்குமமாய் சிவந்து
போனது..!
தன் முகத்தில் பரவிய வெட்கத்தை மறைத்துக்கொண்டு
“என்ன சொல்றிங்க டாக்டர்...”
என்று பதற்றத்துடன் சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு யாருமில்லை என்பதை
உறுதி செய்து கொண்டு ஒரு நிம்மதி மூச்சுடன் அந்த மருத்துவரை பார்க்க,
“ஹா ஹா ஹா நான் சொன்னது சரிதானே... உங்களுக்கு அட்டாக் ஆகி
இருப்பது காதல் வைரஸ் தானே...” என்று அந்த
மருத்துவர் மீண்டும் கண் சிமிட்டி சிரித்தவாறு கேட்க
“அதெல்லாம் இல்ல டாக்டர்...” என்று மறைக்க முயல,
“ஹா ஹா ஹா டாக்டர் கிட்டயும், வக்கீல் கிட்டயும் பொய்
சொல்லக் கூடாதுன்னு கேள்விப்பட்டதில்லை…அதனால மறைக்காமல் உண்மையை சொல்லுங்க.
எங்க எப்படி இந்த வியாதி தொற்றியது?” என்று சிறு அதட்டலுடன் இளையவளை வினவ,
“தெரியலையே டாக்டர்...” என்று உதட்டை பிதுக்கினாள்..!
“ஹ்ம்ம்ம் இந்த வயசுல இதெல்லாம் தேவையா? “ என்று முறைத்த படி கேட்க
“ஹி.. ஹி..ஹி… அதெல்லாம் இந்த
வயசுல வர்றதுதான் டாக்டர்.. அதோட இதெல்லாம் எப்ப எப்படி எங்க யாருக்கு வரும் னு எல்லாம்
சொல்ல முடியாது..! இதெல்லாம் உங்களுக்கு சொன்னாலும்
புரியாது...” என்று வெட்கத்தோடு சொல்ல,
“சரி சரி எப்படியோ போய் தொலைங்க...சீக்கிரம் வீட்ல சொல்லிடுங்க...”
என்று அந்த மருத்துவரும் சலித்துக் கொள்ள,
“ஓகே டாக்டர்... அப்புறம் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிடாதிங்க..”
என்று கெஞ்சலுடன் சொல்ல,
“ஹ்ம்ம் அப்படி சொல்லாமல் இருக்கணும்னா எனக்கு என்ன தருவீங்க? “ என்று அந்த மருத்துவளும் பேரம் பேச,
“உங்களுக்கு சாக்லேட் வாங்கி தரேன்...” என்று புன்னகையோடு சொல்ல,
“அப்பனா சரி... சரி நீங்க போயிட்டு அடுத்த பேஷண்ட் ஐ
அனுப்புங்க...” என்று அவளை வெளியே அனுப்ப, அடுத்து உள்ளே
நுழைந்தான் விடலைப் பருவத்தில் அடியெடுத்து வைத்திருந்த வாலிபன் ஒருவன்.
அப்பொழுதுதான் அரும்பு மீசை முளைத்திருக்க அதை தன் கையால் முறுக்கி
விட்டவாறு எதிரில் வந்து அமர, அந்த மருத்துவரும்
மிடுக்குடன் நிமிர்ந்து பார்த்தவள்
“ஹ்ம்ம் சொல்லுங்க தம்பி...உங்களுக்கு என்ன பிரச்சனை? “ என்று கேட்க
“என்னது தம்பியா? அடியே நான் உனக்கு தம்பியா? “ என்று அவளை முறைக்க,
“பின்ன இல்லயா? “ என்று அவளும் குறும்புடன் சிரிக்க,
“ஹோய்...இங்க பார்... இப்ப எனக்கு மீசை கூட வந்துடுச்சு டி நானும் ஆம்பளதான்...” என்று தன்
அரும்பு மீசையை முறுக்கி விட, அவளோ களுக்கென்று கிளுக்கி சிரித்தாள்.
“ஹா ஹா ஹா மீசை வந்தா
மட்டும் போதுமா? உடம்பு தேற வேண்டாமா? “ என்று நக்கலாக சிரித்தவள்
“சரி சொல்லுங்க தம்பி...” என்று மீண்டும் ஆரம்பிக்க,
“ஹோய்... இன்னொரு தரம்
என்னை தம்பினு சொன்ன... அவ்வளவுதான் ...” என்று அவன் தன் கை முஷ்டியை இறுக்க, அதுவரை சிரித்துக் கொண்டிருந்த அவள் முகம் லேசாக கோபம் கொள்ள
“ஹலோ தம்பி... இங்க
நான் டாக்டர்... நீங்க பேஷன்ட்.. அது நினைவு
இருக்கட்டும்..இப்ப சொல்லுங்க உடம்புக்கு என்ன பண்ணுது? “ என்று ஸ்டைலாக கேட்க, அவனும் தன் கோபத்தை மறந்து இப்பொழுது லேசான குறுநகையுடன்,
“அதுவா டாக்டர்... என் அக்கா மவ ஒரு வாயாடி இருக்கா.... அடிக்கடி
அவளுக்கும் எனக்கும் சண்டை வருது.. என்னை மாமானு மரியாதை கொடுக்காம திமிரா பேசறா ?
அவளை அடக்கறதுக்கு ஏதாவது மருந்து இருந்தா கொடுங்க டாக்டர்...” என்று அடக்கப்பட்ட
சிரிப்புடன் சொல்ல, அவனை முறைத்தவள்,
“நீங்க ஏன் தம்பி அவ கிட்ட வம்புக்கு போறிங்க...அவளே வாயாடினு
தெரியுது இல்ல.. பேசாம ஒதுங்கிக்க வேண்டியதுதான? “ என்று அவளும் நக்கலாக சொல்ல,
“அதெப்படி அப்படி சட்டுனு ஒதுங்கிக்கறதாம்? அப்ப நம்ம கெத்து என்னாவறது? “ என்று மீண்டும் வளராத அந்த மீசையை முறுக்கி கொள்ள, அவளோ தன்னை மறந்து சிரித்து வைத்தாள்.
“இப்படியே முறுக்கிகிட்டு இருந்தனா, மீசையில முளைச்சிருக்கிற நாலு முடியும் கையோட வந்திடும்
தம்பி.. அப்புறம் முறுக்கறதுக்கு எப்பவுமே மீசை மொழைக்காமே போய்டும்.. எப்படி வசதி? “
என்று இதழ்க்கடையோரம் நக்கலாக சிரிக்க, அவன் கையோ பட்டென்று அவன் மீசையில் இருந்து விடுபட்டது...
அதைக்கண்டு ஒரு வெற்றி புன்னகையை செலுத்தியவள்,
“சரி.. சரி உங்க
இதயத்துக்கு என்ன? அதை சொல்லுங்க? “ என்று அவனை நேராக பார்த்து
கேட்க,
“அதுக்கு என்ன வந்தது? அது நல்லா தான்
இருக்கு..! மூளைக்கு தான் கொஞ்சம்
ட்ரீட்மென்ட் வேணும் டாக்டர். படிக்கிறது
எல்லாம் மண்டையில ஏறவே மாட்டேங்குது...
எங்கப்பன் நான் படிக்காட்டினாலும் கண்டுக்கறதில்ல..!
ஆனால் எனக்கே எனக்குனு வந்து வாச்சு இருக்காரே... ஊரு உலகத்துல இல்லாத ஒரு அருமை மாமன்..! அவர் இம்சை தாங்க முடியல..! எப்ப பாரு படி படி னு உசுர எடுக்கறாரு..!
மார்க் கொஞ்சம் கொறஞ்சாலும் ஏன்டா மார்க் கொறஞ்சுதுனு நிக்க
வச்சு கேள்வி கேட்கறார்..ரொம்பவும் என்னை டார்ச்சர் பண்றார்..! இத்தனைக்கு அவர் ரெண்டாம் வகுப்ப தாண்டல...
அவருக்காகத்தான் நான் கஷ்டப்பட்டு
படிச்சுகிட்டு இருக்கேன்..!
அது என்னடான்னா இதயத்துலயே நிக்க மாட்டேங்குது.! எப்ப புக்கை
எடுத்தாலும் புதுசா படிக்கிற மாதிரியே இருக்கு... அதனால படிக்கிறது எல்லா அப்படியே நிக்கறமாதிரி
ஒரு மருந்து கொடுங்க டாக்டர்...”
என்று மூச்சு விடாமல் தன் மனதில் போட்டு புழுங்கி கொண்டிருந்த ஆத்திரத்தை
எல்லாம் கொட்டி தீர்க்க, அவளோ மீண்டும் கலகலவென்று
வாய்விட்டு சிரித்தாள்.
“ஏன்டி சிரிக்கிற? “ என்று சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்திக் கொண்டு
“ஏன் டாக்டர் சிரிக்கிறீங்க? “ என்று யோசனையோடு கேட்க,
“ஹா ஹா ஹா படிக்கிறது எல்லாம் இதயத்துல நிக்காது தம்பி. அது மூளைக்கு போய் அங்கதான் ஸ்டோர் ஆகும்...! அதுக்கு மூளை சம்பந்தமான டாக்டரைத்தான்
பாக்கணும்...
இல்லனா மனசு சம்பந்தமான
சைக்கியாட்ரிஸ்ட் ஐ போர் பார்...” என்று மீண்டும் கலகலத்து சிரிக்க,
“அடிங்... போடி..நீயெல்லாம் ஒரு டாக்டர்? சரியான டுபாக்கூர்
டாக்டர் தான்...” என்று அவனும் சிரிப்புடன்
கிண்டலாக சொல்ல,
அதுவரை சிரித்துக்கொண்டு இருந்தவள், இப்பொழுது புசுபுசுவென்று கோபம் தலைக்கேற, மூக்கு விடைக்க, காது மடல் இரண்டும்
சிலிர்த்துக்கொண்டு நிக்க, அவனை உக்கிரமாக
பார்த்து முறைத்தவள்,
“டேய் மாமா.. யார
பார்த்து டுபாக்கூர் டாக்டர்னு சொன்ன? நான் யார் தெரியுமா தி வேர்ல்ட் ஃபேமஸ் கார்டியாலஜிட்...” என்று தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு மிடுக்குடன் சொல்ல
“ஹா ஹா ஹா ஹா வர்ற பேசன்ட் ஒருத்தருக்கு கூட வைத்தியம் பாக்காம, சும்மா கதை அடிச்சு
அனுப்பி வைக்கிற... நீ எல்லாம் தி வேர்ல்ட் ஃபேமஸ் கார்டியாலஜிட் ஆக்கும்..” என்று அவனும்
மீண்டும் நக்கலாக சிரிக்க,
அந்த மருத்துவர் நரநரவென்று தன் பல்லை கடித்தாள்.
அதே நேரம் அறைக்கு உள்ளே ஏதோ அரவம் கேட்க, அவளின் பார்வை முன்னால் அமர்ந்திருந்தவனை தாண்டி, பின்னால் செல்ல, அப்பொழுது தான் அங்கே நின்றிருந்திருந்த நெடியவனை காணவும் அவள் கண்கள் பெரிதாக விரிந்தன.
இப்பொழுது தன் எதிரில் அமர்ந்திருந்தவனை பார்த்து நக்கலாக புன்னகைத்தவள்,
“சரி... நான் டூபாக்கூர்
டாக்டராவே இருந்துட்டு போறேன்..! இப்ப உன் பிரச்சனைக்கு வரலாம்... செத்த நேரம் முன்னாடி ஏதோ சொன்னியே தம்பி..! உன்னை யாரோ டார்ச்சர் பண்றதா சொன்னியே...இங்க இன்னொரு தரம் திருப்பி சொல்லு...” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல,
அவனோ தனக்கு வைத்திருக்கும் ஆப்பை அறியாமல்,
“இந்த வாயாடி இப்ப
எதுக்கு நான் முன்னாடி புலம்புனதை திரும்ப
சொல்ல சொல்றா?” என்று யோசித்தவாறு, முன்பு சொன்னதை இல்லை இல்லை புலம்பியதை எல்லாம் திருப்பி சொல்ல,
அதுவும் தன் மனக்குமுறலையும் கேட்பதற்கு ஒரு காது கிடைத்துவிட்ட குசியில், தன் மாமனை திட்டியதை இப்பொழுது இன்னுமாய் அழுத்தம் கொடுத்து
திட்டி தீர்க்க, அவளோ வாயில் கையை வைத்து கெக்க பெக்க என்று சிரித்து வைத்தவள், பின் அவன் அருகில் குனிந்து
“மவனே…நானா டுப்பாக்கூர் டாக்டர்...இப்ப நீ ஆகப்போற
டுபாக்கூர்...” என்று கிசுகிசுத்தவள்,
“அப்படியே கொஞ்சம் பின்னாடி திரும்பிப் பார்க்கறிங்களா
தம்பி...” என்று வஞ்சத்துடன் ஒரு வெற்றி சிரிப்பை சிரித்து வைக்க, அவனும் ஒன்றும்
புரியாமல் குழப்பத்துடன் அசால்ட்டாக பின்னால் திரும்பி பார்க்க அடுத்த நொடி
தூக்கிவாரிப் போட, அதிர்ந்து
போனான்..!
அங்கே தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவனை
முறைத்தபடி நின்றிருந்தான் ராசய்யா..! இதுவரை அவன் திட்டி தீர்த்த ஆசை மாமன்..! அவன் அக்கா பூங்கொடியின் கணவன்..!
தன் மாமனின் முறைப்பை கண்டு வெளவெளத்து போனான் அந்த இளைஞன்...
அன்பரசன்..! கை லேசாக நடுங்க, பற்கள் தானாக தந்தி அடிக்க, வார்த்தை வராமல் சிக்கி கொள்ள,
“மா..... மா..... மா..மா.....” என்று அழைத்து வைக்க, அந்த சத்தம் வராமல் வெறும் காற்றுதான் வந்தது..!
அதுவரை தன்னை திட்டிக்கொண்டிருந்த தன் மச்சானை முறைத்துப்
பார்த்த ராசய்யாவின் பார்வை, அடுத்த கணம் அவனை
தாண்டி அவன் எதிரில் அமர்ந்திருந்த அந்த மருத்துவரிடம் சென்றது.
அங்கே அவனுடைய காட்டன் வெள்ளை சட்டையை டாக்டர் கோட் போல அணிந்து
கொண்டு, நேற்று அவன் வாங்கிக் கொடுத்திருந்த ப்ளாஸ்டிக் ஸ்டெதஸ்கோப்
ஐ கழுத்தில் மாட்டிக்கொண்டு ஒய்யாரமாக...ஒரு டாக்டரை போன்ற மிடுக்குடன் அமர்ந்திருந்தாள்
அவனின் ஆறு வயது செல்ல மகள்..!
தன் மச்சான் அன்பரசன் படிப்பதற்காக, ராசய்யா வாங்கிக் கொடுத்திருந்த மேஜையும் நாற்காலியையும் அந்த அறையின் நடுவில் இழுத்து
போட்டு, ஒரு மருத்துவரின் அறைபோல செட்டப் பண்ணி
இருந்தாள்..!
அவள் தாத்தா தணிகாசலத்தின் பழைய சைக்கிளில் இருந்து கழட்டிய சைக்கிள் பெல் தான் அழைப்பு மணி...!
அந்த சைக்கிள் பெல்லை டேபிள் மேல் வைத்துக் கொண்டு, அதை அழைப்பு மணியாக
பயன்படுத்தினாள்.
அவள் கைக்கு அருகில் சிறிய நோட்டுப் புத்தகம்..மற்றும் பேனா..! ப்ரிஸ்க்ரிப்சன் எழுதவாம்..!
வெள்ளை கோர்ட்..! கழுத்தில் ஸ்டெதஸ்..! கண்களிலும்
தேர்க்கடையில் வாங்கிக் கொடுத்திருந்த கருப்பு
கண்ணாடி..! என்று தன் மகளையும், அங்கே இருந்த
செட்டப்பையும், பார்க்க, அச்சு அசல் ஒரு டாக்டராவே
தெரிந்தாள் அவன் கண்ணுக்கு..!
*****
நேற்று ஒரு வேலையாக முசிறியில் இருக்கும் விவசாய
அலுவலகத்துக்கு சென்றிருந்தான் ராசய்யா..!
பேருந்து நிறுத்தத்திற்கு எதிராக, பொம்மை கடை போட்டு இருக்க, அனிச்சையாக அங்கு சென்றவன், கண்களால் அங்கிருக்கும்
பொம்மைகளை ஆராய்ந்தான்.!
பிறந்த குழந்தையில் இருந்து பத்து வயது குழந்தைகள் வரை விளையாடுவதற்கான
விதவிதமான பொம்மைகள் இருந்தன..!
அதை எல்லாம் பார்த்து வந்தவனின் பார்வை , ஒரு இடத்தில் நிலைத்து நின்றது..!
அங்கே கொஞ்சம் பெரிய குழந்தைகள் விளையாடுவதற்கான விதவிதமான மருத்துவ உபகரணங்கள் அடங்கிய டாக்டர்
செட் இருந்தது..!
அதை பார்த்ததும், அவனுக்கு அவனின்
செல்ல மகளின் நினைவுதான் வந்தது..!
உடனே அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவன் தன் மகளிடம் அதை
காட்ட, அவளோ ஐய்யா.... என்று துள்ளி குதித்தாள்..!
அதோடு நெடுநெடுவென்று நின்றிருந்தவன் முட்டியில் கால் வைத்து பனை மரத்தில் ஏறுவதை போல
சரசரவென்று ஏறி, அவன் கழுத்தை
கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் எச்சில் பட, பல முத்தங்களை வாரி வழங்கினாள்..!
தன் ஆசை தீர முத்தமிட்டவள், இன்னுமாய் அவன் கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டு
“ரொம்ப தேங்க்ஸ் பா...” என்று மீண்டும் அழுந்த முத்தமிட்டு அவன் கன்னத்தை கடித்து வைக்க, தன் மகளின் அந்த ஆர்ப்பாட்டத்தில், அவள் தந்தையின் முகத்திலோ அப்படி ஒரு நிறைவான, பெருமையான, கர்வ புன்னகை..!
0 comments:
Post a Comment