மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Saturday, October 1, 2022

கனவே கை சேர வா-3

 


அத்தியாயம்-3

இன்று:

சென்னை..!  

நுங்கம்பாக்கம் மெயின் ரோட்டில் வரிசையாக அணிவகுத்து வீற்றிருக்கும் வணிக கட்டிடங்களில் ஒன்றில்,   எட்டாவது தளத்தில் அமைந்து இருந்தது அந்த சிறிய அலுவலகம்.

சாலையில் இருந்து நிமிர்ந்து பார்க்கும்பொழுது  பொதிகை சாஃப்ட்வேர் சொல்யூசன்ஸ் என சிறிய எழுத்துக்களால் ஆன பெயர்ப்பலகை அழகாக மின்னிக் கொண்டிருந்தது.  

ஒரு இருபது பேர்  அமர்ந்து வேலை செய்யும் சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனம் அது.

அந்த நிறுவனத்தின் நுழைவாயிலின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றால், ஒரு சிறிய ரிசப்சன் இருந்தது .

ஒருவர் மட்டும் அமரும்படி ஒரு சுழல் நாற்காலியும்,  அழகான சிறிய டேபிலும் அதன் மீது சின்ன சின்ன அலங்கார கலைபொருட்கள் அழகாக வைக்கபட்டு இருந்தது.

ரிசப்சனோடு இணைந்தவாறு சிறிய வரவேற்பறை...

மூவர் அமரும் ஒரு நீண்ட சோபா போடப்பட்டு இருந்தது. அதன் முன்னால் இருந்த டீப்பாயில் சில பிசினஸ் மேகசின்ஸ்கள், லேட்டஸ்ட் டெக்னாலஜிஸ் பற்றிய மேகசின்ஸ் வைக்கப்பட்டு இருந்தன.

வரவேற்பரையின் ஒரு மூலையில் குட்டி லைப்ரரி ஒன்று இருந்தது. எல்லாமே கம்யூட்டர் லேங்குவேஜஸ், லேட்டஸ் டெக்னாலஜிஸ் போன்ற பல புத்தகங்கள் அடுக்கப்பட்டு இருந்தன.

அதோடு மட்டும் அல்லாமல், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள், ரிலாக்சேசனுக்காக, பொதுவான புத்தகங்களும் வரிசைபடுத்தப்பட்டு இருந்தன.  

வரவேற்பறையை ஒட்டி கண்ணாடி தடுப்பிலான கதவு இருக்க, அதை திறந்து கொண்டு உள்ளே சென்றால், பெரிய ஹால் போன்று இருந்தது. அதில் இரண்டு வரிசையில் நீளமாக டெஸ்க் அமைக்கபட்டு சிறு சிறு க்யூபிக்கலாக தடுக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு க்யூபிக்களிலும் டெஸ்க்டாப் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஹாலின் ஓரத்தில், ப்ராஜெக்ட் சம்பந்தமாக டிஸ்கஸ் பண்ணுவதற்கு என்று சிறிய கான்ப்ரென்ஸ் அறையாக தடுத்து இருந்தார்கள்.

அந்த கான்ப்ரென்ஸ் அறையை ஒட்டி இருந்தது சிறிய அறை.

அந்த அறையின் கதவில், பொதிகை (மேனேஜிங் டைரக்டர்) என்று பொன்னிற எழுத்துக்கள் மின்னின...

அந்த அறையின் உள்ளே சென்றால் இரண்டு ஆச்சர்யங்கள் காத்திருக்கும்..!

அந்த சிறிய நிறுவனத்தை துணிச்சலாக ஆரம்பித்து நடத்துபவர் ஒரு பெண் என்பது ஆச்சர்யபடத்தக்கது முன்பெல்லாம். . ஆனால் இப்பொழுது நிறைய பெண்கள், சொந்தமாக  நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருவது இயல்பாகி போனது/

அடுத்த ஆச்சர்யம்...எம்.டி என்ற சீட்டில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபரை எதிர்பார்த்தால்,  அங்கே அமர்ந்து இருந்ததோ சிறு இளம்பெண். இவளா இந்த நிறுவனத்தை தைர்யமாக நடத்துகிறாள் என்ற ஆச்சர்யம் வந்து போகும்.

பொதிகை  - வயது இருபத்தி ஐந்து... இவள்தான் இந்த நிறுவனத்தின் சொந்தக்காரி என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்

காலேஜ் கோயிங் கேர்ள் மாதிரி சிறு பெண்ணாக தெரிந்தாள்.  

பெண்களின் சராசரி உயரத்திற்கும் குறைவான  உயரம்... ஒல்லியான தேகம்...பௌர்ணமி நிலா போன்ற வட்ட முகம். கூரான நாசி.  குண்டு கன்னங்கள்.. ஓரிடத்தில் நில்லாமல் இங்கேயும் அங்கேயும் சுழன்று கொண்டிருக்கும் கெண்டை மீன் விழிகள்.

எப்பொழுதுமே எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பதால், நெற்றியில் எப்பொழுதும் வீற்றிருக்கும் சிந்தனை கோடுகள்... எப்பொழுதாவது சிரிக்கும் பொழுது கன்னத்தில் விழும் அழகான குழி.

திரைப்படங்களில் வரும் ஹீரோயினைப் போல சுண்டினால் ரத்தம் வரும் நிறம் இல்லாமல் மாநிறமாய் இருந்தாள். ஆனாலும் முகம் கலையாக, பார்ப்பவர்களை வசீகரிப்பதாய்  இருந்தது

மொத்தத்தில்  திரைப்படங்களில் அடிக்கடி வந்து போகும் ஹீரோயினை போல் அல்லாமல்  அவ்வப்பொழுது வந்து போகும் கதாநாயகியின் தோழியின் தோற்றத்தில் இருந்தாள் பொதிகை.

சென்னை அண்ணாமலை யுனிவர்சிட்டியில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருந்தாள்.  

கேம்பஸ் தேர்வில்,  பெரிய எம்.என்.சியில்  நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருக்க, அதில்  ஒரு வருடம் பணியாற்றினாள்.  

அவளுக்கு சொந்தமாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற லட்சியம்  இருந்ததால்,  கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, பொதிகை சாஃப்ட்வேர் அன்ட் சொல்யூசன்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து சின்ன சின்ன பிராஜெக்ட்களை பண்ணிக்கொண்டு இருந்தாள்.  

கல்லூரி முடிந்ததும், ஒரு வருடம்  வேறு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு அவளுடைய சம்பளத்தை எல்லாம் சேர்த்து வைத்து தன்னுடைய ஸ்டார்ட் அப்பை முழு மூச்சுடன் ஆரம்பித்துவிட்டாள் பொதிகை.

இப்போதைக்கு பத்து பேரை மட்டும் வைத்து தனது கனவு ப்ராஜெக்ட்டை டெவலப் பண்ணிக்கொண்டு இருந்தாள்.  கடந்த மூன்று வருடமாகவே அந்த ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடிக்க இரவு பகல் பாராது உழைத்து வருகிறாள்.

அவளுக்கு உறுதுணையாக இருப்பது அவளுடைய கல்லூரியில் படித்த சீனியர் வெற்றிமாறன்.  

வெற்றிமாறன்,  முசிறி அருகில் இருக்கும் துறையூர் ஜமீன்தார் வம்சத்தை சேர்ந்தவன்.

ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து, இல்லை இல்லை படுத்துக்கொண்டே கூட சாப்பிடும் அளவுக்கு சொத்து பத்துக்கள் ஏராளம்.

இப்பொழுது ஜமீன்தார் முறை ஒழிந்தாலும் இன்னுமே மூதாதையர் விட்டுச்சென்ற பல ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரன்.

அதோடு சென்னையில் பல நிறுவனங்கள் அவன் பெயரில் இயங்கி கொண்டிருக்கின்றன. அவன் தந்தை நெடுமாறன் அதை கவனித்துக்கொண்டிருக்கிறார்.

அண்ணா யுனிவர்சிட்டியில் எம்.டெக் முடித்துவிட்டு ஏனோ தன் தந்தையின் தொழிலை கையில் எடுத்துக்கொள்ளாமல், பொதிகை திட்டமிட்டு வைத்திருந்த ஸ்டார்ட்-அப் ஐடியாக்கள் அவனுக்கு பிடித்துவிட அவளுடன் இணைந்து வொர்க்கிங் பார்ட்னராக இந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறான்.

பல மில்லியன் டாலர் டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தக்காரன், அவன் நிறுவனத்தில் ஒரு பெர்சென்ட் கூட தேறாத இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் வேலை செய்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

அது என்ன என்று விரைவில் தெரிந்து கொள்ளலாம்..!

ப்பொழுது அவளுடைய ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருக்கிறது. அந்த ப்ராஜெக்ட் ன் விசயமாகத்தான் இப்பொழுதும் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் பொதிகை.

தன்னுடைய அறையில், குஷன் வைத்த சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு தன் முன்னாலிருந்த லேப்டாப்பில் பட்டன்களை தட்டிக் கொண்டிருந்தாள் பொதிகை.  

அவ்வப்பொழுது ஏதோ யோசனையோடு நெற்றியில் தட்டிக் கொண்டிருந்தாள்.

எதையோ யோசிப்பதும்,  பிறகு அந்த கணினியில் தட்டுவதுமாய் படு சீரியசாக வேலை செய்து கொண்டு இருந்தாள் பொதிகை.

அடர் நீல நிற ஜீன்ஸ்...அதற்கு பொருத்தமாக லைட் கிரீம் கலர் டாப்சும் அணிந்திருந்தாள். காதில் சிறிய பட்டன் சைஸ் தோடு. கழுத்தில் மெல்லிய தங்கச்சங்கிலி. கையில் டைட்டன் வாட்ச். அவ்வளவுதான் அவளின் அலங்காரம்.

இன்றைய தலைமுறை யுவதிகளை போல தன்னை அலங்கரித்துக்கொள்ள, மணிக்கணக்கில் நேரத்தை விரயம் செய்ய மாட்டாள் பொதிகை. எந்த ஒப்பனையும் இல்லாமலயே கலையாக இருந்தது அவளின் முகம்.

மீண்டும் தன் நெற்றியில் ஆட்காட்டி விரலால் தடவியபடி எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்க, அதே நேரம்,  அந்த அறை கதவை லேசாக தட்டிவிட்டு, பின்  திறந்துகொண்டு   உள்ளே வந்தான்  வெற்றிமாறன்.

அங்கே யோசனையுடன் எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பவளை கண்டவன்,  

“ஹே பொதி... மணி என்ன ஆகுது பாரு... வீட்டுக்கு கிளம்பலையா? இன்னும் என்ன பண்ணிகிட்டிருக்க? என்றபடி  உள்ளே வந்தான் வெற்றிமாறன்.  

அப்பொழுதுதான் அவளுக்கு கடிகாரம் என்ற ஒன்று இருப்பதே ஞாபகம் வந்தது.

தலையை நிமிர்ந்து சுவரில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள். அது ஒன்பது என காட்டவும்,  

“அச்சோ அதுக்குள்ள ஒன்பது  ஆயிடுச்சா? சை...  ஏன் தான் இந்த நேரம் இவ்வளவு பாஸ்டா ஓடுதோ? “ என்று சலித்துக் கொண்டாள் பொதிகை.

“அம்மா தாயே... நீ வருங்கால லேடி பில்கேட்ஸ்...இல்லைனா அடுத்த முகேஸ் அம்பானி.. ரத்தன் டாட்டா னு  ஒத்துக்குறேன். அதுக்காக 24 மணி நேரம் பத்தலை னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்...” என்று நக்கலாக சிரிக்க, அவனை பார்த்து முறைத்தாள் பொதிகை.  

“நான் எங்க டா 24 மணி நேரம் பத்தலைனு சொன்னேன்? அதுக்குள்ள ஒன்பது  மணி ஆய்டுச்சேனுதான் ஷாக்கா இருந்துச்சு..சீக்கிரம் நேரம் ஆய்டுது..” என்று குறைபட்டுக்கொள்ள,  அதைக்கேட்டு சிரித்தான் வெற்றிமாறன்.

“ஹா ஹா ஹா எல்லாரும் எப்படா இந்த நாள் முடியும் னு காத்துக்கிட்டு இருக்காங்க...பொழுது போக்குக்கு என்று இப்பல்லாம் எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன...

நீ என்னடாவென்றால் இந்த நேரம் ஏன் இவ்வளவு வேகமாக ஓடுதுனு குறைபட்டுக்கிற... ஹ்ம்ம் என்னத்த சொல்ல.

அது சரி..அப்படி என்னத்த தீவிரமா யோசிச்சுகிட்டிருந்த? நேரம் ஆனது கூட தெரியாமல்?  “ அக்கறையுன் விசாரித்தான் வெற்றிமாறன்.  

நம்ம ப்ராடெக்ட்டில் இன்னொரு மாடுல் கடைசியா  ஆட் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம் இல்லையா? அதுக்கான டிசைனைத்தான் பண்ணிக்கிட்டிருக்கேன்.  ஒரு யூஸ்கேஸ் மட்டும் செட்டாக  மாட்டேங்குது

நானும் காலையிலிருந்து மண்டையை போட்டு உடைச்சுக்கிட்டு இருக்கேன். ஐடியாதான் வரமாட்டேங்குது...” என்று தன்  உதட்டைப் பிதுக்கி, பாவமான முகத்துடன்  சிறுபிள்ளையாக கூற,  அதை கண்ட வெற்றிமாறன் விழிகள் பளிச்சிட்டு மின்னின.

அவளின் திரண்டு செழித்த செர்ரி இதழ்களை ஒரு நொடி  தாபத்துடன் பார்த்தவன்,  அடுத்த நொடி தன் தலையை உலுக்கிக் கொண்டு அவள் அருகில் சென்றான்.  

இயல்பாக ஒரு இருக்கையை இழுத்துப்போட்டு அவள் அருகில் அமர்ந்தவன்,  

“எங்கே காட்டு பார்க்கலாம்...”  என்க, பொதிகையும் கணினியை அவன் பக்கமாய் நகர்த்தி வைத்து அவனுக்கு காட்ட முயன்றாள்.  

வெற்றிமாறன் கொஞ்சம் தள்ளி அமர்ந்து இருந்ததால், எக்கி அவனிடம் காட்டி விளக்க, அவளின் தோள் அவனின் தோளோடு உரச,  அவளின் விரல்கள் அவன் விரலோடு அனிச்சையாய் உரசி நலம் விசாரிக்க, அது வெற்றிமாறன் உள்ளே மோகத் தீயை  பற்ற வைத்தது

அவளின் அந்த நெருக்கம்...அருகாமையில் அவள் மீது இருந்து வந்த பிரத்யேக வாசம்... அவனின் ஆண்மை விழித்துக் கொள்ள,  அவனின் பார்வை, அவள் சுட்டி காட்டிய கணினியின் திரைக்கு செல்லாமல் அவளின் முன்னழகை தாபத்துடன் பார்த்து வைத்தது. .  

அடுத்த நொடி பட்டென்று அவன் தொடையில் விழுந்தது ஒரு அடி.  

அதில் திடுக்கிட்டு விழித்துக்கொண்டவன் , அவன் பார்வை நிலைத்து நின்றிருந்த இடத்தில் இருந்து கஷ்டபட்டு மீட்டெடுத்தவன்,  திரும்பி அவளை பார்க்க, அவளோ கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.

“டேய்...இதுதான் நீ எனக்கு ஹெல்ப் பண்ற லட்சணமா?  நான் காட்டிய இந்த ப்ராஜெக்ட் டிசைனை    பார்க்க சொன்னா,  நீ எங்க பார்த்து வைக்கிற? திருடா...”  என்று கோபமாக முறைக்க ஆரம்பித்தவள், பின் குரல் குழைந்து செல்லமாக கடிந்து கொண்டாள்.

வெற்றிமாறனும் அவள் தன்னை கண்டு கொண்டதை கண்டு  அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான்.  

“ஏன்டி... இவ்வளவு பக்கத்துல, இப்படி ஒட்டி உரசி உட்கார்ந்தால்  மனுஷன் என்ன பண்ணுவான்? சூடாகாதா? நானும் மனுஷன் தான்டி... எனக்கும் உணர்வுகள், ஆசா பாசங்கள் இருக்கும் தானே...”  என்றான் இன்னுமே அவளை தாபத்துடன்  பார்த்தவாறு.

“ஐய...இது என்ன உங்க அந்தப்புரமா? இது ஆபிஸ் மிஸ்டர் வெற்றிமாறன்... இங்க எல்லாம் இந்த மாதிரி பார்வையை அலைபாய விடக்கூடாது...

இன்னொருதரம் உங்க பார்வை எக்கு தப்பா போச்சு, ஈவ்டீசிங், வொர்க்ப்ளேஸ் ஹரஸ்மென்ட் னு நான் சிவியரா ஆக்சன் எடுக்க வேண்டி இருக்கும்... ஜாக்கிரதை...”  என்று விரல் நீட்டி  மிரட்டி எச்சரித்தாள் பொதிகை.

அவனோ அவளின் மிரட்டலை கொஞ்சமும் சட்டை செய்யாமல், நீட்டியிருந்த அவளின் விரலை பற்றி இழுத்து அழுந்த முத்தமிட்டவன்

“ஹா ஹா ஹா உங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ் எல்லாம்  ஆறு மணிக்கு வரைக்கும்தான் மேனேஜர் அம்மா.  இப்ப மணி ஒன்பது  ஆச்சு.... ஆக்சுவலா இது ஆபிஸ் டைம் இல்ல.  நம்ம பெர்சனல் டைம்...”

என்று ஹஸ்கி குரலில் தாபத்துடன் இழைந்து  கண்சிமிட்டி மந்தகாசமாக புன்னகைக்க,  அதில் பெண்ணவள் முகம் சிவந்து போனாலும்,  அதை மறைத்துக்கொண்டு வரவழைத்த கோபத்துடன் அவனை முறைத்தாள்.  

“ப்ச்... இன்னைக்கு நீ சரியில்ல வெற்றி... ஒரு மாதிரியா இருக்க...ஏதேதோ உளறி கிட்டு  இருக்க. தப்பு தப்பா பார்த்து வைக்கிற...நீ இன்னைக்கு பேட் பாய்,  மேன்...” என்று முறைக்க

“அடிப்பாவி.. ஒரு மாதிரினா...?  லூசு மாதிரியா  இருக்கேன்? “ என்றான் லேசான பொய்க்கோபத்துடன்.

“ஆமா  அப்படித்தான் இருக்கு...”  கழுத்தை நொடித்து கிளுக்கி சிரித்தாள் பொதிகை

“ஹ்ம்ம் சொல்லுவ டி சொல்லுவ. உனக்காக ஏழு வருஷமா காத்துக்கிட்டு  இருக்கேன் இல்ல.  என்னை பார்த்து லூசுனுதான்  சொல்லுவ..”  என்று முறைத்தான் வெற்றிமாறன்

“ஹா ஹா ஹா உன்னை யாரு காத்துகிட்டு இருக்க சொன்னாங்களாம்.  நான் தான் அப்பவே சொல்லிட்டேனே... நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ. எனக்காக காத்துகிட்டு  இருக்க வேண்டாம்னு...

அதை கேட்காம எனக்காக வெய்ட் பண்ணிகிட்டிருந்தா,   அதுக்கெல்லாம் கம்பெனி பொறுப்பேற்காது… ”  என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள் பொதிகை.

இதுவரை பொறுப்பான எம்.டி யாக தலையை பிய்த்துக்கொண்டு இருந்தவள், இப்பொழுது அவனின் காதலியாக மாறி குறும்புடன் அவனை வம்பு இழுக்க, அவனுக்கும் உற்சாகம் பொங்கி வந்தது.

அவளுடன் அவனும் வம்புக்கு சென்றான்...  

“ஹ்ம்ம்ம் நீ சொல்றது கரெக்டு தான் டி. எத்தனையோ பொண்ணுங்க என் பின்னாலயே  சுத்திகிட்டு இருந்தாங்க.. அவங்களை  எல்லாம்  விட்டுப்போட்டு உன்கிட்டே கவுந்தேன் பாரு...

எனக்கு இதுவும் வேணும்...இன்னமும் வேணும்...” தன் மனக்குமுறலை எல்லாம் புலம்பலாக பொரிந்து  தள்ளினான் வெற்றிமாறன்.  

“ஹா ஹா ஹா அப்படியா? நீயா  சொல்லிக்க வேண்டியதுதான். உங்க பின்னாடி வந்த பொண்ணுங்க  எல்லாம் உங்களுக்காக இல்ல ஆபிசர் சார். உன் கூட இருந்த புகழ் அண்ணாவுக்காக.

உன்ன போய் என்ன தவிர வேற எவளாவது காதலிக்க முடியமாக்கும்? என்று வாரினாள் பொதிகை.  

“என்னது? நீ காதலிச்சியா? உன் கிட்ட இருந்து ஐ.லவ்..யூ  மூனு வார்த்தையை சொல்ல வைப்பதற்குள்  எனக்கு நாக்கு தள்ளிடுச்சு.. .கருவாச்சி...  என்னை எப்படியெல்லாம் சுத்தவச்ச...”

பேச்சுவாக்கில் வாய் தவறி அவளை கருவாச்சி என்று அழைத்து விட,  அவ்வளவுதான்...  

அதுவரை இலகுவாக பேசிக் கொண்டிருந்தவள்,  அடுத்த கணம்  உடல் விறைக்க, மூக்கு குடைமிளகாய் போல விடைத்து சிவந்து போக, காது மடல்  விடைக்க, முகத்தில் புசுபுசுவென்று கோபம்  பொங்கி வந்தது

“டேய் வெள்ளப்பன்னி... இன்னொரு தரம் என்னை கருவாச்சி னு சொன்ன,  அம்புட்டுதான்.  

எனக்கு தமிழில்  பிடிக்காத ஒரே வார்த்தை கருவாச்சியாக்கும்    இன்னொரு தரம் என்னை அப்படி கூப்பிட்ட, என்ன செய்வேனு எனக்கே தெரியாது... ஜாக்கிரதை... அம்புட்டுதான்... சொல்லிபுட்டேன்......” என்று படபடவென்று பொரிந்தாள் பொதிகை.

அதைக்கண்டவனுக்கு  மனம் கிளர்ந்தது..! அவனின் அழுத்தமான இதழ் ஓரம் குறுஞ்சிரிப்பு எட்டிபார்த்தது. கோபத்துடன் பொங்கி கொண்டிருந்தவளை  இன்னும் இன்னுமாய் ரசனையுடன் ரசித்து பார்த்தான் வெற்றிமாறன்.

அப்படியே ஏழு வருடம் முன்பு பார்த்த பொதிகை கண்முன்னே வந்தாள்..!

Share:

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews