அத்தியாயம்-30
பெங்களூரிலேயே புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்
ஒன்றான லீலா பேலஸ்... முழுவதுமே வண்ண விளக்குகளால் தகதகத்துக் கொண்டிருந்தது..!
அதன் வெளித்தோற்றமே பார்ப்பதற்கு அரண்மனை போன்ற பிரம்மாண்டத்தை
தரும்..!
இன்று இன்னுமாய் அலங்கரித்திருக்க, அப்படியே அந்த காலத்து அரண்மனையை பார்ப்பதைப் போலவே அவ்வளவு ரம்யமாய் ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தது..!
கர்ணிகா வின் மூன்றாவது
பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!
தன் மகள்...தன் குட்டி இளவரசி...தன்னிடம் வந்த பிறகு கொண்டாடும்
முதல் விழா என்பதால், அவளின் பிறந்தநாளை
பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று அந்த பெரிய ஹோட்டலை புக் பண்ணியிருந்தான்.
அதோடு இந்த உலகுக்கு தன் மனைவியையும், மகளையும் அறிமுக படுத்த
வேண்டும் என்ற நோக்கமும் சேர்ந்து கொள்ள, பெரிய அளவில் அந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தான்
விகர்த்தனன்.
விழாவிற்கு என்று சீக்கிரமாகவே தயாராகி வந்திருந்தனர் மூவரும்.
மூவருக்கும் ஒரே நிறத்திலான ஆடை..!
நிகாவுக்கு சின்றெல்லா ரொம்பவும் பிடிக்கும் என்பதால் அந்த
விழாவிற்கு தீமாக சின்றெல்லாவும், ஸ்கை ப்ளூ கலரும்
தேர்ந்தெடுத்து இருந்தான்.
ஸ்கை ப்ளூ கலரிலான நீண்ட ப்ராக்
அணிந்திருந்தாள் நிகா...
தலையில் அந்த குட்டி இளவரசிக்கான ப்ளாட்டினத்தில் வைரங்கள்
பதித்த சின்ன கிரீடம்... காலில்
சின்ட்ரெல்லாவை போன்று, ஆனால் அவள்
நடப்பதற்கு இலகுவாக கொஞ்சமாக ஹீல்ஸ்
வைத்து அவளுக்கென்று பிரத்தியேகமாக வடிவமைத்த செருப்பு..!
கழுத்தில் வைர நெக்லஸ் பளபளக்க, அவள் திரும்பும் பொழுது
எல்லாம் தலையில் இருந்த கிரீடம், கழுத்தில் இருந்த
வைர நெக்லஸ்...
ஆடையில் ஆங்காங்கே ஒளிர்ந்த குட்டி நட்சத்திரங்கள்.. எல்லாம் ஒளியை
வாரி இறைத்து, அந்த சின்ரெல்லாவே நேரில் வந்ததை போல மிளிர்ந்தாள் கர்ணிகா.
அவளுக்கு கொஞ்சமும் சளைக்காமல், அழகிய வேலைப்பாடு மிக்க
டிசைனர் புடவையில், பட்டத்து ராணியாக ஜொலித்தாள்
சுரபி..!
அதுவரை பெரிதாக அலங்காரம் என்று செய்து கொண்டிராதவள்..
இப்பொழுதும் தனக்கு எதுவும் வேண்டாம் என்று மறுக்க, விகர்த்தனன் தான் அவளை
கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்து புகழ்பெற்ற
பியூட்டிசியன்களை வரவழைத்து இருந்தான்.
“லுக் சுரபி...இத்தனை நாள் நீ எப்படி வேணா இருந்திருக்கலாம்...
ஆனால் இப்ப நீ என் மனைவி...அப்படித்தான்
இந்த உலகத்தின் பார்வையில் பட்டு வைக்கும்.
தி கிரேட் இன்டஸ்ட்ரியலிஸ்ட்... பிசினஸ் மேக்னெட் விகர்த்தனன்
வைப்னா சும்மாவா? நீ எனக்கு
கொஞ்சமாவது பொருத்தமாக இருக்க வேண்டாமா?
நம்மை பார்த்ததும் மேட் பார் ஈச் அதர் .. பெர்பெக்ட் மேட்ச் என்று
பசக் என்று மற்றவர்கள் மனதில் ஒட்டிக்
கொள்ள வேண்டும்.
அதற்கு இந்த மாதிரி எல்லாம் சில மேக்கப்களை போட்டாகணும்..! அதனால் பிடிவாதம் பிடிக்காமல் அவர்கள் சொல்ற
மாதிரி கோஆப்பரேட் பண்ணு.. ...” என்று அமர்த்தலாக சொல்லி, அவள் வாயை அடைத்து
விட்டான்.
அவளும் அதற்கு மேல் மறுக்க முடியாமல், அவனை முறைத்தபடி அறைக்குள் சென்று விட்டாள்.
கிட்டதட்ட ஒரு மணி நேரம் கழித்து, அறையை விட்டு வெளியில்
வந்தவளை கண்டு அப்படியே ப்ரிஸாகி போனான் விகர்த்தனன்.
அந்த வானத்து தேவதையே தரை இறங்கி வந்ததை போல... அதீத அழகும் சௌந்தர்யமும் மிளிர, அப்சரஸ்ஸாக மிளிர்ந்தாள் சுரபி.
விகர்த்தனன் இத்தனை அழகை அவளிடம் எதிர்பார்த்திருக்கவில்லை..!
எப்பொழுதும் எளிமையான அலங்காரத்தில், ஒரு சிம்பிலான காட்டன் புடவை…இல்லையென்றால் காட்டன் சுடிதாரில் எளிமையாக தெரிந்தவள்.
அந்த அழகு நிலைய பெண்களின் கை வண்ணத்தில் பேரழகியாக மிளிர்ந்தாள்...!
தன்னவளைப் பார்த்ததும். அதுவரை அவன் பார்த்து, பழகி, அனுபவித்த உலக அழகிகள் எல்லாம் பின்னுக்கு
போயினர்..!
அவன் கண்களுக்கு தன் மனைவிதான் பேரழகியாக தெரிந்தாள்.
அதை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது..!
இதைத்தான் உலகத்திலேயே பேரழகி யாரென்றால் தன் மனைவி என்பானாம்
ஒரு ஆண்.
அது தன் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது..!
இதுவரை அவளை கண்டுகொள்ளாமல்இருந்தவன்... அவள் கழுத்தில் தாலியை கட்டி தன் மனைவியாக்கிக்
கொண்டதும் உடனேயே அவள் உலக அழகி ஆகிவிட்டாள்..!
எந்த ஒரு ஒப்பனையும் கூட இல்லாமலேயே அவன் ஆழ்மனம் அவளிடம்
தடுமாறிப் போனதுதானே..? அது ஏன்..?
இப்பொழுது எதையும் யோசிக்க மறந்து தன் மனைவியின் அதீத அழகை இமைக்க மறந்து ரசித்து
பார்த்திருந்தான் விகர்த்தனன்.
அவனின் அந்த கணவன் பார்வையை கண்ட சுரபிக்கு உடலில் மின்சாரம்
பாய்ந்ததை போல இருந்தது...
உடலில் மிதமான வெப்பம் பரவ, கன்னங்கள் இரண்டிலும் ரோஜாக்கள்
பூக்க, முகம் அந்தி வானத்து குங்குமமாய் சிவந்து போனது.
தன் நாணத்தை மறைக்க, உடனே தன் கீழ் உதட்டை கடித்துக்கொண்டு மெல்ல தலையை
குனிந்து கொண்டாள்..!
“மேடம்... இப்படி
எல்லாம் உதட்டை கடிக்க கூடாது... லிப்
கிளாஸ் போட்டிருக்கோம்... கொஞ்சம்
பார்த்து...” என்று அழகு நிலையம் பெண்கள்
அவளுக்கு அறிவுறுத்த, அவளோ சங்கடத்தில்
நெழிய, அந்த விஷமக்கார கண்ணனோ, அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி, விஷமமாக சிரித்து வைத்தான்.
அவன் முகத்தில் மலர்ந்திருந்த அந்த குறும்பு புன்னகையை இமைக்க
மறந்து ரசிப்பது இப்பொழுது பெண்ணவளின் முறையாயிற்று..!
எத்தனை நாள் ஆயிற்று அவனிடம்
இந்த மாதிரியான குறும்பு பார்வையை பார்த்து..!
*******
முன்பெல்லாம் அடிக்கடி இந்த மாதிரி அவளை
ஓரக்கண்ணால் பார்த்து வைப்பான்..!
அதை கண்டு உள்ளுக்குள் படபடத்தாலும், காணாததை போல இருந்து விடுவாள் சுரபி.
கடைசியாக அந்த ஸ்ருதி வருவதற்கு முதல் நாள், அவளை அள்ளி அணைத்ததும்...
மறுநாள் ஸ்ருதி வந்து அவளிடம் ஏதேதோ சொல்லி குழப்பி விட்டு சென்று விடவும், அதையெல்லாம் அன்று இரவு
தன் கணவனிடம் கொட்டி இருக்க, அதைக்கண்டு
கடுப்பானவன்...
அவளுக்கு அவனைப் பற்றிய விளக்கம் அளித்துவிட்டு சென்றவன் தான்..!
அதன் பிறகு அவள் பக்கம்
பார்க்கவே இல்லை..!
மீண்டும் பழையபடி தன் மகள் மட்டும்தான் அவன் கண்ணுக்கு
தெரிந்தாள்..! சுரபியை கண்டுகொள்ளவே இல்லை.
அவள் தான் தவித்துப் போனாள்.
அதுவரை ஒரு ஆணின் மெய் தீண்டல் எப்படி இருக்கும் என்று
அனுபவித்திராதவள்...!
ஒரே ஒரு நாள் அனுபவித்த அவனின் தீண்டலும், இதழ் அணைப்பும்
அவளுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
அன்று அவனை மறுத்து, விலக்கி நிறுத்தி
வைத்து இருந்தாலும், அவனைப் பற்றி
விளக்கம் அளித்த பிறகு ஏனோ அவன் மீதான கோபம் மறைந்து இருந்தது.
மாறாக கன்னிமனம் அவன் பால் முழுவதுமாக சாய்ந்து விட்டது.
மனம் மட்டும் அல்லாமல் அவளின் உடலும் அவன் பக்கமாக சாய்ந்து
விட்டது.
மீண்டும் அவனின் அந்த இறுகிய அணைப்பு கிடைக்காதா? இதழ் யுத்தம் நடக்காதா? என்று ஏங்கி தவிக்கத்தான்
செய்தாள் பெண்.
அவள் உள்ளம் படும் பாட்டை அறியாதவன் போல, அவனோ கல்லையும் மண்ணையும் பார்ப்பதை போலத்தான் அவளை பார்த்து வைத்தான்.
அவளுக்கும் தன் வெட்கம் விட்டு தன் மாற்றத்தை அவனிடம் சொல்ல தயக்கமாக இருந்தது...!
வெளிப்படையாக பலமுறை அவனுக்கு குறிப்பு காட்டிவிட்டாள்.
குடும்பத்தோடு வெளியில் செல்லும்பொழுது, தன் மகளை தூக்கி கொண்டு செல்பவன் அருகில் ஒட்டி உரசியபடி
நடப்பதும், அவன் கை விரல்களோடு
அவள் கை விரல்களை அவ்வபொழுது பிணைத்துக் கொள்வதும்...!
இரவு தன் மகளுக்கு விகர்த்தனன் கதை சொல்லும் பொழுது அதுவரை யாருக்கு வந்த
விருந்தோ என்று கண்டு கொள்ளாமல் விட்டேத்தியாக கண்ணை மூடிக்கொண்டு
படுத்துக்கொள்பவள்...!
இப்பொழுதோ அவளும் தன் மகளோடு சேர்ந்து, தலைக்கு முட்டு கொடுத்து, அவன் பக்கமாக பார்த்தவாறு படுத்துக் கொண்டு ஆர்வமாக கதை
கேட்பதும்,
தூக்கத்தில் தெரியாமல் படுவதை போல, வேண்டுமென்றே அவன் மீது
கை போட்டு அணைத்தபடி உறங்குவது என சிலபல குறுக்கு வழிகளில் முயன்று பார்த்தாள்.
ஆனால் அது எதுவும் அவனிடம் வேலைக்கு ஆகாமல் போய்விட, அடுத்த கட்டத்துக்கு முன்னேறினாள்.
சில நாட்கள் தன் மகள் உறங்கியதும், புடவையை மாற்றி விட்டு செக்ஸியான நைட்டியில், அவன் பார்வையில் படும்படி அந்த அறைக்குள் உலா வந்தாள்.
சில நேரம் வேண்டுமென்றே தன் முந்தானையை நழுவ விட்டு, அவனுக்கு தரிசனம் கொடுத்தாள்.
“ம்கூம்...எதுவும் அவனிடத்தில் பலிக்கவில்லை.
அவள் இந்த மாதிரி ஏதாவது கிறுக்குத்தனமாக செய்து வைக்கும்
பொழுது அவளை புருவம் சுருக்கி, சாதாரணமாக யோசனையோடு பார்ப்பதோடு சரி.
அதற்குமேல் அவள் எதிர்பார்த்த வேற ஒன்றும் கிடைக்கவில்லை
அவனிடமிருந்து.
அதில் கடுப்பானவள்,
“சை... ஒருவேளை சரியான சாமியார் ஆகிட்டானா? ரொம்பத்தான் படுத்தறான் இந்த நெட்டை..! அன்றைக்கு மட்டும்
எப்படி அப்படி நடந்து கொண்டான்? இப்ப என்ன
வந்துச்சாம்? “ என்று
தன் கணவனை தனக்குள்ளே திட்டி தீர்த்துக் கொண்டாள் பெண்.
அவளின் மாற்றம் அவனுக்கும் புரிந்தது தான்..!
அவள் மனமாற்றத்தையும், உடல் மாற்றத்தையும்
புரிந்து கொண்டான் தான்...அவள் அவனை தேடுகிறாள் என்பதும் தெளிவாகவே புரிந்தது.
ஆனாலும் அவளாகவே வாய்விட்டு சொல்லட்டும் என்று போக்கு
காட்டினான் அந்த மாயக்கண்ணன்..!
அதோடு அவனின் கவனத்தை கவர்வதற்காக அவள் செய்த செய்கை எல்லாம் அவனுக்கு வித்தியாசமாக...
சுவாரஸ்யமாக இருக்க... தெரிந்தே அந்த கேமை விளையாண்டான் விகர்த்தனன்..!
******
இதுவரை எத்தனையோ வழிகளில் முயன்றும் தன்னை கண்டு
கொண்டிராத தன் கணவன்... இன்று மீண்டும் அவளை விழுங்கி விடுபவனை போல ரசனையோடு
பார்த்து வைக்க, அந்த பார்வை, பாவைக்கு டகீலா, மொஜிட்டோ என்று எந்த சரக்கையும் அடிக்காமலயே போதை ஏற்றியது.
அவர்களின் உடைக்கு பொருத்தமாக அவனும் பார்மல் பேன்ட்ம், டக்கின் செய்யப்பட்ட வெள்ளை நிற ரேமண்ட் ஷர்ட் ..அதன்மீது அணிந்திருந்த
ஸ்கை ப்ளூ கலரிலான ப்ளேசர்... அவனுக்கு அப்படி ஒரு கம்பீரத்தை கொடுத்தது.
கருப்பு நிற ஷூம், ப்ளேசரின் பாக்கெட்டில் அழகிய சிவப்பு நிற ரோஜாவை சொருகி
இருந்தான்..!
ஜெல் வைத்து சீவி இருந்த கேசம், அப்பொழுதும் அடங்காமல் அவ்வபொழுது அசைந்தாட, அதை அவ்வப்போது
ஸ்டைலாக கோதிவிட்டு கொண்ட அழகும் மனதை அள்ளியது.
தன்னவனையே இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருந்தாள்..!
*****
விழா நடைபெறும் ஹோட்டலுக்கு, முத்து காரை செலுத்த, அந்த ஹோட்டலுக்கு, வந்து இறங்கியதும் ஹோட்டலின் மேனேஜர் ஓடிவந்து இருவருக்கும்
பொக்கே கொடுத்து வரவேற்றார்.
வெளியில் பெரிய பேனரில் ஹாப்பி பர்த்டே கர்ணிகா என்று அவளின்
சின்றெல்லா உடையிலான பெரிய புகைப்படம் ஒன்றும், அடுத்ததில் அவர்கள் மூவரின் புகைப்படமும் நின்று அனைவரையும்
வரவேற்கும் அளவில் பெரியதாக வைக்கப்பட்டிருந்தது.
அதைக்கண்டு வாவ் என்று கண்களை அகல விரித்தாள் சுரபி..!
அரண்மனை போன்ற அந்த ஹோட்டலின் வெளித்தோற்றமும், முகப்பில் இருந்த அவர்களின் புகைப்படம்.. அலங்கார விளக்குகள்
எல்லாமே அவர்கள் ஏதோ ஒரு தேவலோகத்திற்கு வந்ததை போல பிரமிப்பாக இருந்தது.
அதை எல்லாம் வாயை பிளந்து ரசித்து பார்த்து கொண்டிருக்க, விழா ஏற்பாட்டை
கவனித்துக் கொண்டிருந்த விஷ்வா அவர்கள் அருகில் ஓடி வந்தான்.
“என்ன விஷ்வா? எல்லா ஏற்பாடும் சரியா இருக்கா? “ என்று விசாரிக்க
“எல்லாம் பக்காவா இருக்கு பாஸ்...” என்றவன், சுரபியின் பக்கம் திரும்பி, பழக்க தோஷத்தில்
“ஹாய் சுரபி...” என்று அழைத்து விட்டு, பின் தவறை உணர்ந்து தன் நாக்கை கடித்துக் கொண்டவன்,
“சாரி மேடம்...” என்றான் அவசரமாக.
சுரபிக்கோ அவனின் மேடம் என்ற அழைப்பு என்னவோ போல இருக்க,
“இட்ஸ் ஓகே விஷ்வா... என்னை எப்பவும் போல சுரபினே கூப்பிடுங்க...” என்றவள், சம்மதத்திற்காக தன்
கணவன் முகம் பார்க்க,
“இல்லை சுரபி ... பொது இடத்தில் அது சரிவராது. பெர்சனலாக
சந்திக்கும்பொழுது விஷ்வா எப்படி வேண்டுமானாலும்
அழைக்கட்டும்.
ஆனால் இந்த மாதிரி விழாக்களில்... அலுவலக ரீதியான
சந்திப்புகளில்... நீ என் மனைவி என்று வரும் பொழுது, நீயும் அவனுக்கு பாஸ்தான்.
அதனால் மேடம் என்று அழைப்பதுதான் சரியானது...” என்று அவளுக்கு தன் மேல்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை
கற்பித்தான்.
சுரபிக்கோ அது சுத்தமாக
பிடிக்காமல் முகத்தை சுளிக்க,
“இந்த அப்பர் க்ளாஸ் லைஃப் ல இது மாதிரி சிலதை அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும்
சுரபி... நோ சாய்ஸ்... சோ அட்ஜஸ்ட்
பண்ணிக்கோ...சீக்கிரம் உனக்கு இதெல்லாம் பழகிவிடும்..”
என்று சொல்ல, அதே நேரம்
மற்றவர்களும் வந்து அவர்களை வரவேற்க, தன் மகளை கையில் அள்ளிக்கொண்டு, தன் மனைவியின் கழுத்தை சுற்றி மறுபக்க தோளின் மீது கை போட்டு
மென்மையாக அணைத்தபடி, மனம் கொள்ளா பூரிப்புடன் விழா நடைபெறும் ஹாலுக்கு சென்றான்
விகர்த்தனன்.
அந்த ஹோட்டலின் வெளிப்புற அலங்காரத்தையே பார்த்து மயங்கி
நின்றவள்... உள்ளே, அந்த ஹாலில் இருந்த
அலங்காரத்தை பார்த்தவள், மீண்டும் வாவ் என்று பெரிதாக
கண்களை விரித்தாள்.
அப்பொழுதுதான் ஒரு மல்டி மில்லினர் வீட்டு விசேஷம் எப்படி
இருக்குமென்று நினைவுபடுத்திக் கொண்டவள், தன் மகளுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா என்று
ஆச்சர்யமாக இருந்தது.
அந்த சின்றெல்லா கதையில் ஒரு ராஜகுமாரன் வந்து சின்ரெல்லாவை தூக்கிக் கொண்டு சென்று அவளை இளவரசியாக்கியதை போல,
இந்த விகர்த்தனன் மகாராஜா திடீரென்று வந்து இந்த சின்றெல்லா குட்டியை
தூக்கி கொண்டு போய், இதோ அவனுடைய சாம்ராஜ்ஜியத்திற்கே அவளை இளவரசியாக்கி
விட்டான் என்று பெருமையாக இருந்தது.
******
விழா நடை பெற இருந்த ஹாலிற்கு வந்ததும், அங்கு ஏற்கனவே வந்திருந்த அனைவரையும் கை கூப்பி வரவேற்றனர்.
சற்று நேரத்தில் எல்லா முக்கிய
வி.ஐ.பிக்களும் வந்து சேர்ந்திருக்க, விகர்த்தனன்
அங்கிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளரின் கையில் இருந்த மைக்கை வாங்கி ஒரு முறை தொண்டையை
செருமிக்கொண்டு கணீர் குரலில் பேச ஆரம்பித்தான்..!
“குட் ஈவினிங் லேடீஸ்
அன்ட் ஜென்டில்மென்...மை டியர் பிரண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் அன்ட் மை வெல் விஷர்ஸ்...! வெல்கம் டு அவர்
பிலவ்ட் டாட்டர்ஸ் தேர்ட் பர்த்டே செலப்ரேஸன்...”
என்று ஆரம்பித்து ஸ்டைலாக ஆரம்பித்து, விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று, அவர்களுக்கு நன்றி
சொல்லி, தன் மகளையும், மனைவியையும்
அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
“சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவர்களை முன்பே
அறிமுகப்படுத்த முடியவில்லை...” என்று
சிறு சங்கடத்துடன் ஆரம்பித்தவன், முன்னால் இருந்த
அனைவரையும் ஒரு முறை பார்த்து லேசாக, வெட்கப்பட்டு புன்னகைத்தவன்,
“மீட் மை வைஃப்... மிஸஸ் சுரபி விகர்த்தனன்....” என்று சுரபியின் பக்கம் கை காட்ட, அதைக்கேட்ட சுரபியோ இன்பமாய் அதிர்ந்து போனாள்.
மனதிற்குல் சில்லென்று
பனி மழை பொழிந்தது..!
முதன்முறையாக தன் பெயரை சுரபி விகர்த்தனன் என்று சொல்லிப்
பார்த்துக் கொள்ள, அவள் உடலில் அப்படி ஒரு சிலிர்ப்பு..!
அந்த பெயரை சொல்லி பார்க்கையில்
அவளின் நாக்கிலிருந்து, உடலின் ஒவ்வொரு
அனுவும் தித்தித்தது..!
அதே பூரிப்பில் தாமரை மொட்டை போன்று, தன் இரு மென் கரங்களை குவித்து, லேசாக முன்னால் தலை
சாய்த்து, அனைவருக்கும் வணக்கம் சொன்னாள் சுரபி.
அவளின் அந்த நளினமும், தேவதையாய்
ஜொலித்தவளின் அதீத அழகும், அவளின் மென்
புன்னகை என அனைத்திலும் முற்றிலுமாக தொலைந்து தான் போனான் விகர்த்தனன்.
அவன் உள்ளே அலை அலையாக பொங்கிய உணர்வுகளை முயன்று கட்டி
போட்டவன், அவள் அருகில் மெல்ல
நெருங்கி வந்து அவளை மெல்ல தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், அடுத்து தன் மகளை...அந்த
குட்டி இளவரசியை அறிமுகப்படுத்தினான்.
“நெக்ஸ்ட் மீட் மை பிலவ்ட் பிரின்சஸ்... மை ஏஞ்சல்... அன்ட் அவர்
சினட்ரெல்லா...பேபி கர்ணிகா விகர்த்தனன்...” என்று தன் மகளை அறிமுகப்படுத்த, அந்த குட்டி இளவரசிக்கோ பெருமை தாங்க முடியவில்லை.
அவள் தந்தை ஏற்கனவே சொல்லிக் கொடுத்து இருந்தபடி, தன் இடைவரை குனிந்து, பார்வையாளர்களை
பார்த்து, தன் குட்டி கரங்களைக் குவித்து ஸ்டைலாக வணக்கம்
சொன்னாள்.
அவளின் செய்கையில் அனைவரும் ஆரவரித்து கைதட்டினர்..!
அவர்களின் சிரிப்பையும், கை தட்டல்களையும் கண்டு, வெட்கப்பட்டு சிரித்தபடி ஓடிச்சென்று தன் தந்தையின் காலை
கட்டிக் கொண்டாள் நிகா குட்டி.
அவனும் புன்னகைத்தபடி தன் மகளின் கன்னத்தை வருடியபடி, மேலும் ஓரிரு நிமிடங்கள் சுருக்கமாக அவர்களை பற்றி சொல்லிவிட்டு, தன் உரையை முடித்து
விட்டான்.
எல்லாருக்குமே நிறைய கேள்விகள், குழப்பங்கள் இருந்தன..!
ஆனாலும் யாருக்கும் அதை வாய்விட்டு கேட்க தைர்யம் வரவில்லை..!
அதனால் ஒருவரை ஒருவர் பார்த்து அசட்டு சிரிப்பை சிரித்துக்கொண்டனர் .
*****
அடுத்ததாக கேக் கட்டிங் ஆரம்பமானது..!
அந்த ஹாலின் ஓரமாக இருந்த மேடையில், நடுவில் வைக்கப்பட்டிருந்த, பெரிய மேஜை மீது வைக்கப்பட்டிருந்தது அந்த குட்டியின் உயரத்திற்கான
சின்றெல்லா சிலை போன்ற கேக்..!
அவளின் ஆடையை போன்றே...அவள் அலங்காரத்தை போன்றே அந்த கேக்கும்
மேஜை மீது நின்றிருக்க, அதைக்கண்ட அந்த
குட்டி துள்ளி குதித்தாள்.
தன் இரு கையையும் தட்டி
“வாவ்... சூப்பர் பா.... “ என்று அவன் கை பிடித்து இழுத்து, அவனை குனிய வைத்து, அவன் கன்னத்தில்
பசக் என்று முத்தம் வைத்தாள்.
அவனும் இன்னுமாய் பூரித்தவன்...தன் மகளை கைகளில் அள்ளிக்கொண்டு, மேஜை அருகில் வந்தான்.
தன் அருகில் தன் மனைவியையும் வைத்துக்கொண்டு, கேக்கின் மீதிருந்த மெழுகுவர்த்தியை ஊதி அனைக்க சொல்ல, அவளும், முகம் கொள்ளா
பூரிப்பும், சந்தோஷத்துடன் அந்த
மெழுகுவர்த்தியை ஊதி அனைத்து, கேக்கை வெட்டினாள்.
முதலில் ஒரு துண்டை எடுத்து தன் தந்தைக்கு ஊட்ட, அவனும் பூரிப்புடன் அதை வாங்கிக் கொண்டான்.
அடுத்து சுரபிக்கு ஊட்ட, அவளும் கண்ணோரம் துளிர்த்த நீருடன் தன் மகளின் பிஞ்சு கரத்தால்
அந்த கேக்கை வாங்கிக் கொண்டாள்...!
அடுத்ததாய் சுரபியின் மாமியார், மாமனார் அவர் குடும்பத்தார் என்று எல்லாரும் அந்த குட்டிக்கு
கேக்கை ஊட்டி அவளை திக்கு முக்காட வைத்து விட்டார்கள்.!
கேக்கை வெட்டி முட்டி முடித்ததும், அடுத்து விருந்தினர்கள் ஒவ்வொருவரும் வந்து , அந்த குட்டியை வாழ்த்தி பரிசினை கொடுத்துச் சென்றார்கள்.
அப்பொழுதுதான் அது நிகழ்ந்தது...!
******
விகர்த்தனனை
பிடிக்காத ஒரு சிலர்...அவன் எப்பொழுது கீழ விழுவான்... அவனை வீழ்த்த
வேண்டும் என்று காத்திருந்த சிலர், அந்த குட்டியை
வாழ்த்த வரும் சாக்கில் மேடைக்கு வந்தவர்கள்,
“அது எப்படி மிஸ்டர் விகர்த்தனன்? முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இவ்வளவு பெரிய பிள்ளையை
எங்களுக்கு காட்டாமல் மறைத்து வைத்து விட்டீர்களே..! “ என்று கிண்டல் அடித்தனர்..!
இன்னும் சிலர்
“எப்படி மிஸ்டர்
விகர்த்தனன்...! உங்க பர்ஸ்ட் வைப் இறந்து மூன்று வருடங்கள் தான் ஆகுது... உங்க
குழந்தைக்கு மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடறிங்க.! அது எப்படி? புரியலையே..?
அப்ப உங்க பர்ஸ்ட் வைப் உயிரோட இருந்தப்பவே........ “ என்று கேட்க
வந்ததை முழுவதுமாக முடிக்காமல், ஏளனமாக பார்த்து, நக்கலாக கேட்டு, அவனை சங்கடத்தில் ஆழ்த்தி வைத்தனர்.
அவர்களின் விமர்சினத்திற்கு எப்படியும் விகர்த்தனன்
கடுப்பாவான்... அவனை கொஞ்சமாச்சும் கடுப்பாக்கி பார்க்க வேண்டும் என்றுதான் அவனை
மட்டம் தட்ட எண்ணி அப்படி கேட்டு வைத்தது.
அவர்கள் எதிர்பார்த்தபடியே தான் நடந்தது..!
இப்படி தன் மகளை பற்றிய ஒவ்வொருவரின் விமர்சினத்துக்கும் உள்ளுக்குள் பல்லை நறநறவென்று
கடித்து வைத்தான் விகர்த்தனன் ..!
தன் மகளை பற்றி கேலியாக கேட்டு வைத்த ஒவ்வொருத்தரின்
வாயிலிருக்கும் முப்பத்திரண்டு பல்லையும் பெயர்த்தெடுக்கும் ஆவேசம் அவன் உள்ளே
குமுறிக்கொண்டுதான் இருந்தது.
ஆனாலும் இடம்..பொருள் ஏவல் என்பதை கருத்தில் கொண்டு, அவன் அவசரபட்டு ஏதாவது செய்து வைத்தால், அது மீடியாவுக்கு
சென்று விடும். அப்புறம் வேற வினையே வேண்டாம்... !
நரியையும் பரியாக்கி காட்டுவது மீடியா என்பதால், தன் கை முஷ்டியை யாருக்கும் தெரியாமல் முறுக்கி, தன் கோபத்தை, ஆத்திரத்தை கட்டு
படுத்திக் கொண்டிருந்தான்...!
அதோடு அவனை கிண்டல் அடித்த, கேலி செய்த, நக்கல் நையாண்டி
பண்ணிய, ஒவ்வொருவரின் பெயரையும் மனதில்
பதித்துக்கொண்டவன் பக்கவாட்டில் நின்றிருந்த விஷ்வாவிடம் ஜாடை செய்யவும்
மறக்கவில்லை.
அடுத்த வாரத்திலயே அவனை விமர்சினம் செய்தவர்கள் எல்லாரும்
தலையில் கை வைத்து மூலையில் உட்கார்ந்து அழ போகிறார்கள்..! அழ வைக்க போகிறான்
விகர்த்தனன் என்று பாவம் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
ஒவ்வொருவரையும் எங்க எப்படி அடிக்க வேண்டும் என்ற வித்தையை
கற்று இருந்தவனை பற்றி முழுவதுமாக தெரிந்திருக்கவில்லை அந்த நபர்களுக்கு.
உள்ளுக்குள் வஞ்சத்தை வைத்துக்கொண்டு, வெளியில் எல்லாருக்கும், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் எதுவும் சொல்லாமல், புன்னகையை பதிலளித்து சமாளித்து வைத்தான் அந்த
அழுத்தக்காரன்...
கூடவே அவன் அருகில் நின்றிருந்த சுரபியை முறைக்கவும் தவறவில்லை.
“இதற்கெல்லாம் நீதான்டி காரணம்... “ என்று ஓரக்கண்ணால் அவளை
எரிக்கும் பார்வை பார்த்து முறைத்து வைத்தான்.
அப்பொழுதுதான் சுரபிக்கு அவள் செய்து வைத்த செயலின் வீரியம் புரிந்தது.
விளையாட்டுப் பிள்ளையாக... எதுவும் அலசி ஆராயமல்… நாலையும் யோசிக்காமல்...
அவள் செய்து வைத்த காரியம்... இவனை எந்தளவுக்கு சங்கடத்தில் ஆழ்த்துகிறது என்று
அப்பொழுதுதான் புரிந்தது.
இப்பொழுது மட்டுமல்ல..! முன்பு கூட எத்தனையோ பேர் அவளிடமும் இதையேதான் கேட்டு வைத்தார்கள்..!
நிகாவை பற்றியும், அவளின் பிறப்பின்
ரகசியத்தையும் பற்றி எத்தனையோ பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் விசாரித்து விட்டார்கள்.
எப்படி விகர்த்தனன் குழந்தை உங்களிடம்..? என்று புருவம் உயர்த்தாத ஆட்கள் இல்லை..!
தன் மகளின் பிறப்பை வைத்து, அவளின் கேரக்டரை கூட
தவறாக சித்தரித்து விட்டார்களே..! ஏன் அந்த ஸ்ருதி கூட கேட்டு வைத்தாளே..! என்று மனம் வேதனை கொண்டது..!
அந்த வேதனை தீயில் இன்னுமாய் எண்ணையை ஊற்றி எரிய வைக்க என்றே
அடுத்து மேடை ஏறி இருந்தனர் அவளுடைய அலுவலக கேங்...
சுரபியின் அலுவலக நண்பர்கள்...!
0 comments:
Post a Comment