அத்தியாயம்-5
காலையில் எழுந்ததும் பல்லை மட்டும் துலக்கிக்
கொண்டு, பாலைக்கூட குடிக்காமல், தன் தந்தை வாங்கி கொடுத்திருந்த டாக்டர் செட்டை எடுத்துக்கொண்டு
தன் பாட்டியின் வீட்டுக்கு ஓடி வந்து விட்டாள்
அந்த குட்டி.
இங்க வந்ததும், உடனே அறையில் இருந்த டேபிளை இழுத்துப் போட்டு, நாற்காலியையும் இழுத்து மறுபக்கத்தில் போட்டு, மருத்துவர் அறை மாதிரி செட்டப் பண்ணியவள்,
தன் ஆயா...தாத்தா... சித்தி மலர்க்கொடி மாமா அன்பரசன் என்று எல்லோரையும் பேஷன்ட் ஆக்கி, ஒவ்வொருவராக உள்ளே வர
சொல்லி அவர்களுக்கு வைத்தியம் பார்ப்பது போல விளையாண்டு கொண்டு இருந்தாள்..!
வயலுக்கு சென்று இருந்த ராசய்யா, வீட்டிற்கு திரும்பி வந்தவன் தன் மகளைத்தேட, அவள் அங்கு இல்லாததால், அவனும் காலை உணவைக்கூட உண்ணாமல், தன் மகளை காணாமல், அங்கு இருக்க முடியாமல் அவளைத் தேடிக்கொண்டு பூங்கொடி
வீட்டுக்கு வந்து விட்டான்..!
அறைக்கு உள்ளே வந்த ராசய்யா தன் மகளின் தோற்றத்தையும்...! அவள் தன்னை டாக்டராக பாவித்து மற்றவர்களை பரிசோதித்ததையும் காண, இப்பொழுது அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது.
தன்னை திட்டிக்கொண்டிருந்த தன் மச்சானைக்கூட விட்டு விட்டு, இமைக்க மறந்து தன் மகளையே பார்த்திருக்க, தன் தந்தையின் கண்களில் தெரிந்த ஆர்வத்தையும்,
ஆனந்தத்தையும் கண்ட அவன் மகளும் இப்பொழுது அவள் அமர்ந்து இருந்த
நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு, அப்பா... என்று சந்தோஷ
கூச்சலிட்டவாறு, ஓடி வந்து தன்
தந்தையின் இடுப்பை கட்டிக் கொண்டாள்..!
ராசய்யாவும் தன் மகளை அணைத்து, அவளின் நெற்றியில் முத்தமிட, அதில் சிலிர்த்தவள், பின் தன் தந்தையை விட்டு விலகி சற்று தள்ளி நின்றவள்
“அப்பா..... நான் எப்படி இருக்கேன்? “ என்று கழுத்தில்
கிடந்த ஸ்டெதஸ்ஸை சரி செய்து, நேராக மாட்டிக்கொண்டு
அவள் அணிந்திருந்த சட்டையின் பக்கவாட்டில் கையை விட்டுக்கொண்டு, இப்படியும் அப்படியுமாய் அவளை திருப்பி காட்ட, அடுத்த கணம் கண்கள் பணிக்க, தன் மகளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டான் அந்த பாசக்கார
தந்தை..!
“என் ராசாத்தி...அப்படியே நிஜ டாக்டர் மாதிரியே இருக்கடா
பட்டுக்குட்டி..! சீக்கிரம் நீ பெரிய
ஆளாகி, டாக்டராகி இந்த அப்பாக்கு நீதான் வைத்தியம்
பாக்கணும்...” என்று மகிழ்ச்சியில்
தழுதழுக்க,
“கண்டிப்பா பா... உனக்கு மட்டும் அல்ல... தாத்தா.. ஆயா...
அம்மா.. சித்தி.... எல்லாருக்கும் நான்தான் ட்ரீட்மென்ட் பார்ப்பேன்..”
என்று தன் கையை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு பெருமையுடன்
சொல்ல, அதில் இன்னுமாய் நெகிழ்ந்தவன் தன் மகளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்..!
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டிருக்க, அதே நேரம் அங்கு தன் மாமனை
எதிர்பார்த்திராத அன்பரசன் அவனை பற்றி உளறி வைத்ததை தன் மாமன் கேட்டிருக்க போறாரோ என்று கலங்கிப்
போயிருந்தவன்...!
இப்பொழுது தன் மாமன் தன் மகளுடன் ஐக்கியமாகி விட்டது புரிய,
“அப்பாடா தப்பிச்சோம்...தலை தப்பியது தம்புரான் புண்ணியம்..!
இனிமேல் இந்த வாயாடி கிட்ட கூட பார்த்து
தான் பேசணும்...” என்று தனக்குள்ளே புலம்பியவன், அமர்ந்து இருந்த இருக்கையிலிருந்து எழுந்து மெல்ல நழுவ பார்க்க, அதை கண்டு கொண்டவள்,
“அப்பா.... மாமா நழுவறான்..!
செத்த நேரம் முன்னாடி உன்னை என்னமா திட்டினான் தெரியுமா? என்னானு கேளுப்பா...” என்று
போட்டுக் கொடுக்க,
“ஆகான்..! இந்தக்
குட்டி நம்பியார் போட்டு குடுத்துட்டாளே..! இன்னைக்கு செத்தான்டா சேகரு... அதுக்குள்ள எஸ்கேப்...” என்று தனக்குள்ளே
சொல்லியவன்...
தன் மாமனை திசை திருப்ப எண்ணி.
“மாம்ஸ்.. கொஞ்ச நேரம் முன்னாடியே வராம போய்ட்டிங்களே..! உங்க
மவ என்னமா வைத்தியம் பாக்கறா தெரியுமா?
அப்பாவுக்கு
இதயத்துல என்ன பிரச்சனைனு அப்படியே புட்டு புட்டு வைக்கிறா..
சான்சே இல்ல.. கண்டிப்பா இவ டாக்டராகத்தான் போறா...” என்று
எக்ஸ்ட்ரா பில்டப் கொடுத்து தன் மாமனை ஐஸ் மழையில் நனைய வைத்தான் பாசக்கார
மச்சான்.!
ராசய்யாவும் தன் மகளைப்பற்றி தன் மச்சான் சொன்ன புகழ் மழையில்
நனைந்தவன், தன் மகளை
பெருமையுடன் பார்த்தவன்,
“அப்படியா குட்டிமா..! தாத்தாவுக்கு எல்லாம் வைத்தியம் பாத்தியா?” என்று கனிவுடன் கேட்க, அவளும் இன்னுமாய் பூரித்தவள்,
“ஆமாம் பா... தாத்தா இதயத்தை செக்கப் பண்ணி, மருந்து மாத்திரை
எல்லாம் கூட எழுதிக் கொடுத்து இருக்கேன்...” என்று பெருமையாக சொல்ல, அதில் இன்னுமாய் நெகிழ்ந்து போனவன், தன் மகளை மெல்ல அணைத்துக்கொண்டான்..!
தன் மாமனின் நெகிழ்ச்சியை கண்டு, தான் போட்ட திட்டம் வெற்றி என்று உள்ளுக்குள் துள்ளி குதித்த
அன்பரசன், இதுதான் சமயம் என்று வேகமாக அறையை விட்டு வேகமாக
ஓடப் பாக்க, அதற்குள்
விழித்துக்கொண்ட ராசய்யா எட்டி, அவன் கையை பிடித்துக் கொண்டான்..!
“எங்கடா ஓடற மச்சான்? “ என்று முறைக்க,
“ஹீ ஹீ ஹீ ஓடவெல்லாம் இல்ல மாம்ஸ்... இந்த வீட்டு மாப்பிள்ளை வந்திருக்கீங்களா...!
அதான் அம்மா கிட்ட சொல்லி மாப்பிள்ளையை நல்லா
கவனிக்க சொல்லலாம்னு...” என்று இழுக்க
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்....ஆமா நான் வர்றதுக்கு முன்னாடி என்னைப்பத்தி
என்னமோ சொன்னியே... என்ன சொன்ன? “ என்று முறைத்தபடி கேட்க,
“நானா? உங்களைப் பத்தி ஏதோ சொன்னேனா? அப்படி எதுவும் ஞாபகம்
இல்லையே மாம்ஸ்..” என்று தன் தாடையை தடவி
யோசிப்பதை போல பாவணை செய்ய,
“இல்லப்பா... உங்களை திட்டினான் மாமா...” என்று சற்றுமுன் அவன் மனக்குமுறலை வெளியில் கொட்டியதை எல்லாம்
அந்த குட்டி, அதே ஏற்ற
இறக்கத்துடன் அவன் குரலாக அவன் சொன்னதை
திருப்பி சொல்ல,
“அடிப்பாவி...நான் ஏதோ ஆதங்கத்துல உளறினதை எல்லாம் ஒரு கமா ஃபுல்
ஸ்டாப் மாறாமல் அப்படியே ஒப்பிக்கிறாளே..! சரியான குட்டி பிசாசு தான்..! “
என்று மனதிற்குள் பொருமியவன் தன் அக்கா மகளை பார்த்து முறைத்து
விட்டு, அடுத்த
கணம் தன் மாமனை பார்த்து அசடு வழிய சிரித்தான்..!
“ஹி... ஹி... ஹி சும்மா...! உங்க மேல இருக்கிற பாசத்துல, ஒரு ஜோக்குக்காக அப்படி சொன்னேன் மாமா..!
உங்கள போய் டார்ச்சர்னு எல்லாம் சொல்வேனா? நீங்க யாரு? “ என்று இன்னும் எக்ஸ்ட்ரா
பில்டப் கொடுத்து தன் மாமனை புகழ்ந்து தள்ள, ராசய்யாவும் உடனே அவன் முகத்துக்கு நேராக கையை
உயர்த்தி,
“போதும் நிறுத்து டா... உன்ன பத்தி எனக்கு தெரியாதா? நீ யாரு? யாரோட தம்பி..? உன் அக்கா மாதிரியே
நீ எப்ப, எப்படி டைப் டைப்பா உன் மூஞ்சியும் பேச்சையும் மாத்துவனு
எனக்கு தெரியாதாக்கும்...!
“அது சரி நேத்து
பரிட்சை பேப்பர் கொடுத்திருப்பாங்களே? எவ்வளவு மார்க் வாங்கின? “ என்று அவனை குறுக்கு விசாரணை செய்ய,
“ஹீ ஹீ ஹீ போங்க மாம்ஸ்...முதன்
முதலா உங்க மவ... டாக்டரா வேஷம் போட்டிருக்கா.. அதை பார்த்து ரசிச்சு கொண்டாடுங்க மாம்ஸ்..
என்னோட மார்க்கெல்லாம் ஒரு மேட்டரா? “ என்று நழுவ பார்க்க,
“அதெல்லாம் எனக்கு எப்படி கொண்டாடனும்னு தெரியும் டா...நீ எஸ்
ஆவாத... ஆமா எம்புட்டு மார்க் வாங்கின? “ என்று தன்
மச்சானை முறைக்க,
அவனோ தான் வாங்கிய மார்க்கை எப்படி சொல்வது என்று தலையை
குனிந்தபடி சங்கடத்துடன் கூடவே கொஞ்சம் கலவரத்துடன் நின்றிருந்தான்..!
அவன் நின்றிருந்த தோரணையே அவன் மதிப்பெண் ஊத்திக்கிச்சு என்று
புரிய,
“டேய் மாமா... என்னை
பார்த்தா நீ கலாய்ச்ச... நான் உன்னை இன்னும் எப்படி மாட்டி விடறேன் பாரு...”
என்றவள் குடுகுடுவென்று ஓடிச்சென்று அந்த அறையின் மூலையில்
இருந்த அன்பரசனின் ஸ்கூல் பேக்கை திறந்து
உள்ளே இருந்த விடைத்தாளை எடுத்துக் கொண்டு ஓடி வந்து தன் தந்தையிடம் காண்பித்தாள்..!
அதை வாங்கிப் பார்த்தவன் முகம் கடுகடுத்தது..!
பாஸ்மார்க்குக்கு கொஞ்சமே கொஞ்சம் அதிகமாக வாங்கி இருந்தான்..!
அதை பார்த்தவன்,
“என்னடா இது? “ என்று முறைக்க,
“ஹீ ஹீ ஹீ நல்ல மார்க்கு தான் மாமா... நான் பாஸாயிட்டேன்...” என்று சமாளிக்க
“ஹ்ம்ம்ம் பாஸ் மார்க் வாங்கறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல டா...! மேல்படிப்புக்கு பெரிய காலேஜ் போகணும்னா நிறைய மார்க் வாங்கணுமாம்..!
உன் கிளாஸ் வாத்தியாரை நேத்து மார்க்கெட்ல பார்த்தேன்.. நீ
எப்படி படிக்கிறனு கேட்டதுக்கு அவர் தான் சொன்னார்..! நீ ப்ளஸ் டூ பாஸ்
பண்ணிடுவியாம்.. ஆனால் நீ வாங்கற
மார்க்குக்கு பெரிய காலேஜ் எல்லாம் போக முடியாதாம்..!
உன் சின்னக்கா மலர
பார்த்த இல்ல..! எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சா!
அப்படி படிக்க போய்தானே அவளுக்கு பெரிய
காலேஜ் ல இன்ஜினியரிங் சீட் கிடைச்சது..!
இப்ப அவ படிப்ப முடிச்ச
உடனேயே வேலையும் கொடுத்துட்டாங்க..!
இன்னும் ரெண்டு மாசத்துல வேலைக்கு போக போறா..! ஆனா நீ இப்படி மார்க் வாங்கி வச்சிருக்க..! இத வச்சு நம்ம ஊரு கவர்மெண்ட் காலேஜுக்கு தான்
போக முடியும்..” என்று மேலும் அவனை திட்டி
தீர்க்க,
“ஏன் மாமா..! கவர்மென்ட் காலேஜ் போனா என்ன? “ என்று சமாளிக்க முயல,
“அங்கே எல்லாம் படிச்சா வேலை தேடறது கஷ்டமாம்...! அப்புறம் நீயும் என்ன மாதிரியும், மாமா மாதிரியும் சேத்துல நிக்க வேண்டியதுதான்..!
வேகாத வெயில்ல வெந்து சாக வேண்டியதுதான்..! நாங்க படற அந்த கஷ்டம் உனக்கு எல்லாம் வேண்டாம்..! அது தான் தலையால அடிச்சுக்கிறேன்..!
என் வயசுல தான் புத்தி சொல்ல..எடுத்து சொல்ல யாருமில்லை..! பள்ளிக்கூடம் போகாம, தருதலையா சுத்திகிட்டு இருந்தேன்..! ஆனா நீ அப்படி இல்ல..!
உனக்கு எடுத்து சொல்ல எத்தனை பேரு இருக்காங்க... அதனால நல்லா
பொறுப்பா படி டா...” என்று இன்னும் சில பல அறிவுரைகளை வாரி வழங்க, அந்த குட்டியோ அவனைப் பார்த்து மீண்டும் வாயில் கையை
வைத்துக்கொண்டு அடக்கப்பட்ட சிரிப்புடன் சிரித்து வைத்தாள்..!
தன் மாமன் பக்கம் பக்கமாக சொன்ன டயலாக் ஐ எல்லாம் காதிலயே வாங்கி கொள்ளாதவன்..!
அதை எல்லாம் கண்டுகொள்ளாதவன்..! தன் அக்கா
மகளை முறைத்து கண்ணாலேயே அவளை திட்டிக் கொண்டிருந்தான்..!
“ஹ்ம்ம்ம் என்னடா... புரிஞ்சுதா? “ என்று ராசய்யா
திடீர் என்று கேட்கவும், அதுவரை தன் மாமன் சொன்னதை
காதிலேயே வாங்காமல் நின்றிருந்தவன்...இப்பொழுது அவர் புரிஞ்சுதா என்று கேட்கவும் ஒருவாறு
தன்னை சமாளித்துக் கொண்டு
“ஆங். புரிஞ்சது மாம்ஸ்..” என்று சொல்லி வைத்தான்..!
சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்க யோசிக்கிறான்..என்பது போல, அவன் அக்கா மகள் இன்னுமாய் அவன் மாமனை ஏத்திவிட்டாள்..!
“ஆங்... என்ன புரிஞ்சதுனு
கேளுங்கப்பா ? “ என்று அவன் அக்கா மகள் மீண்டும் மாட்டிவிட,
“ஹ்ம்ம்ம் ஏதோ புரிஞ்சுது..! நீ குறுக்க வராத டி கருவாச்சி...” என்று பல்லைக் கடித்துக் கொண்டு குரலை
கஷ்டப்பட்டு அடக்கி, சிறியவளை அதட்ட,
“என்னது கருவாச்சி யா? “ என்று அவள் சண்டைக்கு நிற்க,
“ஆமான் டி குட்டி கருவாச்சி...” என்று சொல்லி நக்கலாக சிரிக்க,
அவ்வளவுதான்..! இப்பொழுது அப்பாவும் மகளும் அவனை அட்டாக் பண்ண
தயாராக, அடுத்த
நொடி தன் மாமன் கையில் இருந்த தன் கையை உறுவிக் கொண்டு வெளியில் ஓடி விட்டான்
அன்பரசன்..!
“அப்பா…மாமா ஓடறான்...” என்று அந்த
குட்டி கத்த,
“இருடா வர்றேன்..” என்று கத்தியவாறு ராசய்யாவும் அவனை
துரத்திக் கொண்டு வெளியில் ஓட, அந்த குட்டியும் தன் தந்தை பின்னால் ஓடினாள்.
******
அதே நேரம் வாசல் கேட்டை திறந்து கொண்டு பூங்கொடி உள்ளே
வர, அதைக் கண்டதும் முகம் மலர, ஓடிச்சென்று அவளின்
பின்னால் சென்று நின்று கொண்டவன்,
“பூங்கொடிக்கா... கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி, சரியான நேரத்துக்கு நீ
இங்க வந்துட்ட... உன் புருஷன் கிட்ட
இருந்தும், உன்
புள்ளைகிட்டயும் இருந்தும் நீதான் என்னை காப்பாத்தணும்...”
என்று புலம்பியபடி தஞ்சமடைய, பூங்கொடியோ ஒன்றும் புரியாமல் முழித்தவள்,
“என்னடா ஆச்சு? எதுக்கு நீ இப்படி தலை தெறிக்க ஓடி வர? “ என்று தன் தம்பியை விசாரிக்க, அதற்குள் அவனை துரத்திக்கொண்டு வந்த ராசய்யா, தன் மகள் அறை வாயிலின் நிலைப்படியில் இடித்துக்கொள்ள இருக்க, அவளை அப்படியே தூக்கிக்கொண்டு, தன் மச்சானை விரட்டிக்கொண்டு வந்து இருந்தான்..!
அவளும் தன் தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு, தன் மாமா அடிவாங்கும் காட்சியை பார்க்க ஆவலாக சிரித்தபடி
இருக்க, தன் கணவனையும், அவன் கழுத்தை கட்டிக்கொண்டு இருந்த தன் மகளையும் கண்டதும் வழக்கம்போல
அவளுக்கு பொறாமை பொங்கி வந்தது..!
“சை... எப்பப்பாரு இந்த மனுஷன் இவளோடயே சுத்திகிட்டு
இருக்காரே... “ என ஆத்திரம் வந்தது.
தன் மகளை பார்த்து முறைத்தவள்
“அடியே....உனக்கு ஏழு கழுத வயசாகுது...இன்னும் உங்க அப்பா இடுப்பில இப்படி ஏறி உட்கார்ந்து
கிட்டு இருக்க..பார்க்கிறவங்க எல்லாம் என்ன சொல்லுவாங்க...” என்று அதட்ட, அவள் மகளோ கொஞ்சமும் அசராமல்,
“சொல்றவங்க என்னவேணா சொல்லிகிட்டும்...என் அப்பா...அவர் இடுப்புல
நான் உட்கார்ந்துக்குவேன்.. அவர் கழுத்தை நான் எப்படி வேணா கட்டிக்குவேன்....
உனக்கு ஆசையா இருந்தா நீயும் உங்க அப்பா இடுப்பில உக்காந்துக்கோ...”
என்று நக்கலாக சிரிக்க, தன் அக்கா முதுகுக்கு பின்னால் நின்றிருந்த அன்பரசனோ தன்னை
மறந்து ஹா ஹா ஹா என்று வாய்விட்டு சிரித்தான்..!
தன் அக்கா தன் அப்பாவின் இடுப்பில் அமர்ந்தால் எப்படி இருக்கும்
என்று நினைத்து பார்க்க, தன்னை மறந்து
சிரிப்பு பொங்கி வந்தது அவனுக்கு.
அதை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்து வைத்தான்
தன் மச்சானின் சிரிப்பை கண்டு, ராசய்யாவுக்கும் அவன் என்ன நினைத்திருப்பான் என்று புரிய வர, அந்த காட்சியை நினைத்து அவனும் வாய்விட்டு சிரிக்க, தன் தந்தையின் சிரிப்புக்கான காரணம் தெரியாவிட்டாலும், அந்த குட்டியும் சிரித்து வைத்தாள்.
எல்லாரும் தன்னை பார்த்து சிரிப்பதை கண்டு கொண்டவள்,
“இப்ப எதுக்கு எல்லாரும் சிரிக்கறிங்க.? “ என்று தன் கணவனையும், மகளையும் பார்த்து முறைக்க, ராசய்யாவோ இன்னுமாய் சிரித்துக் கொண்டிருந்தான்.
“என்ன இளிப்பு? ரெண்டுபேருக்கும்
என்னைய பாத்தா ஜோக்கர் மாதிரியா இருக்கு? “ என்று அதட்ட,
“ஹா ஹா ஹா அத உன் தம்பி… தங்க கம்பிகிட்ட கேளுடி.. அவன் தான் ஆரம்பிச்சு வச்சான்...” என்று தன் மச்சானை கோர்த்துவிட, இப்பொழுது பூங்கொடி தன் தம்பியை பார்த்து முறைத்தாள்.
“என்னடா சிரிப்பு? எதுக்கு எல்லாரும்
இப்படி கெக்க பெக்கெனு சிரிச்சு வைக்கறிங்க?” என்று அதட்ட, அதற்குமேல்
சமாளிக்க முடியாமல்,
“அது ஒன்னும் இல்ல பூவுக்கா...உன் மவ சொன்ன மாதிரி நம்ம அப்பா
இடுப்புல நீ உட்கார்ந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன்..சிரிப்பு வந்துடுச்சு ...”
என்று மீண்டும் சிரிக்க
அதைக் கேட்டு தன் தம்பியை முறைத்தவள்,
“உன்னை என் புருஷன் விரட்டுவதில் தப்பே இல்லடா... மாமா..இந்தாங்க...
சிக்கிட்டான்..! நல்லா ரெண்டு வாங்கி விடுங்க...”
என்று தனக்கு பின்னால் நின்றிருந்த தன் தம்பியின் கையை பிடித்து இழுத்து, முன்னால் இருந்த தன் கணவனிடம் கொடுக்க, அதற்குள் அவள் கையில்
இருந்து தன் கையை உருவிக்கொண்டு
“ஹா ஹா ஹா அவ்வளவு ஈசியா மாட்ட மாட்டான் இந்த அன்பரசன்...” என்று
அவன் அணிந்திருந்த ரௌன்ட் நெக் டீசர்ட்டில், இல்லாத காலரை தூக்கி விட்டவாறு தள்ளி நின்று
கொண்டான்.
அதற்குள் தன் மகளின் குரல் கேட்டு சமையல் அறையிலிருந்து வெளியே
வந்த சிலம்பாயி தன் மகளை பார்த்தவர்,
“என்னடி வேலைக்கு போகாம இங்க வந்திருக்க? “ என்று வினவ,
“ஹ்ம்ம்ம் வேலைக்கு போகணும் மா... அதுக்குள்ள இந்த மனுசன் தன் புள்ளையைக் காணாம சாப்பிடாம கொல்லாம இங்க வந்திட்டார்... இன்னும் சாப்பிடல...அதான் சாப்பாடு போட்டுட்டு போலாம்னு வந்தேன்...” என்று நீட்டி முழக்க,
“ஏன்க்கா... மாமாக்கு சாப்பாடு போடறதுக்கா இம்புட்டு தூரம் தேடி
வந்த? ஏன்.. நாங்க எல்லாம் மாமாவுக்கு சாப்பாடு போடாம, பட்டினியாவா போட்டுடுவோம்...
ஆமா எனக்கு ஒரு சந்தேகம்.. நீ நிஜமாகவே மாமாவுக்கு சாப்பாடு
போடத்தான் வந்தியா? இல்ல சந்தடி
சாக்கில் அவர சைட் அடிச்சிட்டு போலாம்னு வந்தியா? “
என்று அங்கு வந்த மலர்க்கொடி விஷமமாக கண்சிமிட்ட, மறுகணம் பூங்கொடியின் கன்னங்கள் சிவந்து போனது.
தன் மனதை கண்டு கொண்ட தன் தங்கையை முறைத்து பார்த்தவள்,
“ஹ்ம்ம்ம் இவளுக்கு
எல்லாம் கூட தெரியுது... நான் இந்த
கருவாயன் மீது எம்புட்டு ஆசை, காதல்
வச்சிருக்கேனு..! ஆனால் அந்த கருவாயனுக்கு தெரிய மாட்டேங்குதே..!”
என்று தனக்குள்ளே சொல்லிகொள்வதாய் எண்ணி கொஞ்சம் வாய்விட்டு
சத்தமாக புலம்பி வைக்க, அதைக்கேட்ட ராசய்யா
கடுப்பானான்..!
“அடியே கருவாச்சி..! இந்த கருவாயன் தான்
வேணும்னு என் கன்னத்துல அறைவிட்டு என்னை கட்டாயபடுத்தி தாலி கட்ட சொல்லி, தாலி கட்டிக்கிட்டவ...இப்பதான் நான்
கருவாயனு தெரியுதாக்கும்...” என்று ராசய்யா அவளை செல்லமாக முறைக்க
“ஹ்ம்ம்ம்ம் அன்னைக்கு ஏதோ அவசரத்துல, முட்டாள்தனமா பண்ணினதுக்குத்தான் இப்ப அனுபவிக்கிறேன்…” என்று பெருமூச்சு விட்டு, மூக்கை சிந்துவதைப் போல பாவணை செய்ய,
“அடி செருப்பால...! ஆறுவயசு புள்ளைய வச்சுகிட்டு பேசற பேச்ச
பாரு... ஏன் டி..எங்க மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சலாம்...உன்னை தங்க தட்டில வச்சு
தாங்காத குறையா கவனிச்சுக்கிறார் இல்ல.. நீ இதுவும்
பேசுவ..இன்னமும் பேசுவ..!
எல்லாம் இந்த வாயில்லா மாப்பிள்ளை உனக்கு கொடுத்து வச்சிருக்கிற
இடம் டி. அதான் நீ நெட்டூரம் இழுக்கற..
எட்டூரு ஜில்லா... அம்புட்டு ஏன்.. சீமைக்கே
போய் தேடினாக்கூட என் மாப்பிள்ளை மாதிரி ஒருத்தரை பார்க்க முடியுமா? சொக்கத்தங்கம் டி..அவரு...”
என்று வரிந்து கட்டிக்கொண்டு சிலம்பாயி தன் மாப்பிள்ளைக்கு சப்போர்ட்க்கு வர,
“எப்புடி..? “என்று ராசய்யா தன்னவளை
பார்த்து கர்வத்துடன் தன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க, அதில் சிரிப்பு வந்தாலும் வேண்டுமென்றே வம்பு இழுத்தாள் அந்த
வாயாடி.
பின்ன..! எவ்வளவு ஆசை ஆசையா தன் கணவனுக்காக ஆட்டுக்கால் சூப்
வைத்து வயலுக்கு சென்று வந்தவனுக்கு கொடுக்கலாம் என்று காத்திருக்க, அவனோ வீட்டுக்கு வந்ததும், வராததுமாய் தன் மகளை தேடிக்கொண்டு இங்கு வந்துவிட்டான்..!
சூடான சூப்பு ஆறிப்போக, ஆறி இருந்த பூங்கொடி சூடாகிப்போனாள்..!
உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த சூட்டோடும், கோபத்தோடும், செருப்பை
மாட்டிக்கொண்டு, தன் ஸ்கூட்டியை
எடுத்துக்கொண்டு தன் அம்மா வீட்டிற்கு வந்தாள்.
அவள் எதிர்பார்த்த மாதிரியே தன் மகளை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு நிக்கும் தன்
கணவனை பார்த்து இன்னும் கொலவெறியானாள்.!
அதனாலயே அவனை மட்டம் தட்டி பேசி வைத்தாள்..!
“ஆமாமாம்.. சொல்லிகிட்டாங்க...” என்று ராகம் இழுத்து கழுத்தை
நொடிக்க, சிலம்பாயி தன் மகளை
முறைத்து அருகில் இருந்த விளக்குமாத்தை எடுத்து அதன் அடியை ஒரு தட்டு தட்டி அவளை
அடிக்கும் விதமாய் பாவனை செய்ய, அதில் அரண்டவள் போல
நடித்தவள்,
“அம்மா தாய்க்குலமே....! உன் மாப்பிள்ளையை ஒரு வார்த்தை
சொன்னதுக்கு இந்த கொலவெறி எதுக்கு? உன்கிட்ட நான்
வாங்கின விளக்குமாத்து அடியெல்லாம் போதும்..! இப்பவும் ஒய் திஸ் கொலவெறி..!
சரி..சரி... ஒத்துக்கிறேன்..! உன் மாப்பிள்ளை தான் ஊரிலேயே ஏன் இந்த உலகத்திலயே நல்லவன்.. வல்லவன்.
வீராதிவீரான்..சூராதி சூரன்..” என்று நக்கலாக சொல்ல,
“ஹ்ம்ம்ம் அப்படி
சொல்லு பாப்பா....இந்த ஜில்லாவிலயே நம்ம மாப்பிள்ளை மாதிரி வருமா?
போனமாசம் ஒரு கிலோ பவுனும் பத்து லட்சம் பொட்டி பணம் கொடுத்து, ஜாம் ஜாம்னு பெரிய இடத்துல சம்பந்தம் பண்ணின பக்கத்து ஊர் கோவிந்தன் இப்ப கண்ணீர் விடறான்..!
மாப்பிள்ளைக்கு ஏதோ ஆடி காராம்... அத வாங்கி தரலைனு மாமியாக்காரி
குத்தலா பேசறாளாம்..
புருஷனும் இந்த புள்ளைய சரியா கண்டுக்கறது இல்ல போல.. வேற ஒரு
பொண்ணோட குடும்பம் நடத்தறான் போல...
அவனோட ஆயி அப்பனுக்காக பேருக்கு இந்த கண்ணாலத்தை பண்ணி
கிட்டானாம்..! அது தெரிஞ்சதும் அந்த புள்ள பொட்டிய தூக்கிட்டு இப்ப பொறந்த
வூட்டுக்கே வந்துடுச்சு..! இனிமேல் அங்க போய் வாழமாட்டேனு ஒரே அழுகாச்சாம்..!
நம்ம கோவிந்தன் மாப்பிள்ளை வூட்ல போய் நியாயம் கேட்டா, அவங்க இவன ஒரு பொருட்டாவே மதிக்கிலையாம்..
பெரிய இடத்து பையன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வான்.. உங்க
பொண்ணுதான் அனுசரிச்சு போகணும் னு விட்டேத்தியா சொல்லிட்டாங்களாம்..!
பாவம்..! மனசு உடஞ்சு
போயிட்டான்..! இப்ப புலம்பறான்..! உன்ன மாதிரி ஒரு இல்லாதவனுக்கு கொடுத்து இருந்தா
கூட என் பொண்ணு உன் பொண்ணு மாதிரி ராணி
மாதிரி இருந்திருப்பா.. இப்ப வாழாவெட்டியா வந்துட்டா...னு புலம்பி தள்ளிட்டான்...
எனக்கு எம்புட்டு பெருமையா இருந்துச்சு தெரியுமா? நம்ம மாப்பிள்ளையை பத்தி கோவிந்தன் மட்டும் அல்ல. இந்த
ஜில்லாவே இல்ல பெருமையா பேசிக்குது...”
என்று தன் மாப்பிள்ளை புராணத்தை பாட, ராசய்யாவோ தன் மனையாளை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி, தன் காலரை தூக்கி விட்டுக்கொள்ள, மற்ற நேரமாக இருந்திருந்தால், தன் கணவனின் செய்கையை மையலுடன் ரசித்திருப்பாள் பெண்ணவள்...
ஆனால் இப்பொழுது அதை எல்லாம் காதில் வாங்காதவளாய், கண்டு கொள்ளாதவளாய்,
“ஆமா.. யாருப்பா அந்த
கோவிந்தன்? “ என்று தன்
தந்தையை ஒரு வித காட்டத்தோடு பார்த்து வைக்க, தன் மகளின் முகத்தில் தெரிந்த கோபத்தை கண்டிராத அந்த பெரியவரும்
வெள்ளந்தியாய் விவரித்தார்..!
“அதான் மா... என்னுடைய பால்ய சிநேகிதன்... பக்கத்து ஊர்ல இருக்கான்..! தோட்டம் தொறவு
ஏக்கர் கணக்குல வச்சிருக்கானே..!
அவன் பொண்ணு கல்யாணத்துக்கு கூட நம்ம வீடு தேடி வந்து பத்திரிக்கை
வச்சு கூப்பிட்டுட்டு போனானே..! நினைப்பு
இல்லையா? “ என்று கோவிந்தனை பற்றி நினைவு படுத்த முயல,
“ஓஹோ அவரா? ஆமா அவருக்கு
எவ்வளவு தைரியம் இருந்தா என் புருஷனை ஒன்னும் இல்லாத வெட்டி பயன்னு சொல்லலாம்? என் புருஷனுக்கு என்ன
குறைச்சலாம்?
எதை வச்சு ஒன்னும் இல்லாதவன் னு சொன்னாராம்?” என்று தன் தந்தையிடம்
சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு சென்றாள் பூங்கொடி.
அப்பொழுதுதான் தனிகாசலத்திற்கு அந்த கோவிந்தன் சொன்னதை அப்படியே
இங்க சொல்லி வைத்தது உரைத்தது..!
அதோடு மாப்பிள்ளை முன்பாகவே அப்படி சொல்லி வைத்தது இப்பொழுது
குற்ற உணர்வாக இருந்தது..!
ஆனால் ராசய்யாவோ தன்னை குறித்து குறைவாக ஒருவர் சொல்லி
இருந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்
“உண்மையைத்தானே சொன்னார் பூவு... ஒரு காலத்துல நான் ஒன்னும்
இல்லாத வெட்டிப்பயலா தான இருந்தேன்..! அவர் அப்பத்த நிலையை சொல்லி இருப்பார்..!
அதுக்கு எதுக்கு மாமா மேல ஏறர? “ என்று தன்
மாமனாருக்கு சப்போர்ட்டுக்கு வர,
“இல்ல... அது எப்படி
என் புருஷனை பார்த்து அப்படி சொல்லலாம்? இவரும் அதை அப்படியே கேட்டுட்டு வந்திருக்காரு..
திருப்பி அந்த கோவிந்தனோ கோவாதிந்தனோ, அவரை நாலு வாங்கு வாங்குவதில்லை.
வரட்டும்... ஏதாவது கையெழுத்துக்கு ன்னு பஞ்சாயத்து ஆபீஸுக்கு
வருவாரில்லை.. இல்லைனா கூட என் கண்ணுல
மாட்டாமலயே போய்டுவார்...! அன்னைக்கு இருக்கு அந்த கோவாதிந்தனுக்கு...” என்று படபடவென்று பொரிய, தணிகாசலம் விக்கித்து போனார்.
இன்னும் கொஞ்ச நாளைக்கு அந்த கோவிந்தன் பாப்பா கண்ணுல
பட்டுடக்கூடாது என்று மானசீகமாக குலதெய்வத்தை வேண்டிக்கொண்டார்...!
ராசய்யாவுக்கு பெருமையாக இருந்தது..!
என்ன தான் அவனை சீண்டி வம்பு இழுத்தாலும் அவனுக்கு கிடைக்கும்
மரியாதையை எள்ளளவும் விட்டுக் கொடுக்க தன் மனையாள் தயாரில்லை என்பது அவளின் கோபத்திலிருந்து
புரிந்தது..!
காதலுடன் தன்னவளை நோக்க, அவளோ இன்னும் தன் தந்தையை பிடி பிடி என்றும்
பிடித்துக்கொண்டு இருந்தாள்.
அவன் தான் அவளை சமாதானம் செய்து அமைதிப்படுத்தினான்..! தணிகாசலம் தன் மாப்பிள்ளைக்கு நன்றி சொன்னவர் பின் அந்த டாப்பிக்கை மாற்ற எண்ணி
“என்னை மன்னிச்சுக்க பாப்பா..! ஏதோ புத்திக்கெட்டு போய் அந்த ஆளு சொன்னதை அப்படியே சொல்லிபுட்டேன்..! சரி..
அந்த கோவிந்தன் கதையை விடு..! என் பேத்தி கதைய கேளு
எம்புட்டு ஜோரா வைத்தியம் பாக்கிறா தெரியுமா? இப்பயே பாதி டாக்டர் ஆன மாதிரி இருக்கா...” என்று இன்னுமாய்
தன் பேத்தி வைத்தியம் பார்த்த அழகை தன் மகளிடம் விவரித்தார்..!
“ஹா.. ஹா..ஹா... இந்த பெரிசுக்கு ஆனாலும் இவ்வளவு பில்டப்
ஆகாது. அந்த வாயாடி, டாக்டர் மாதிரி வாய்
மட்டும்தான் அடிச்சா... கூட நோட்டுல ஏதோ கிறுக்கினதுக்கே
இம்புட்டு அலப்பறை...”
என்று அன்பரசன் உள்ளுக்குள் நக்கலடிக்க, தன் மகளின் பெருமையை கேட்ட பூங்கொடியும் தன் கோபத்தை எல்லாம்
மறந்து ஆச்சர்யபட்டாள்..!
“அப்படியாப்பா..!
அப்படி என்ன பண்ணா உன் அருமை பேத்தி? “ என்று ஆவலாக பூங்கொடியும் விசாரிக்க, சிலம்பாயும் கூட சமையல் அறையில் இருந்து தன் வேலையை
முடித்துவிட்டு, வந்து தன் கணவனுடன்
இணைந்து கொண்டு, சற்று முன் நடந்ததை
எல்லாம் சொல்லி, தன் பேத்தியை மாறி
மாறி புகழ்ந்தனர்..!
அந்த குட்டிக்கோ விண்ணில் பறப்பதை போல இருந்தது..!
தான் டாக்டர் செட்டை வைத்துக்கொண்டு, டாக்டரைப் போல நடித்ததுக்கே தன் தாத்தாவும் , ஆயாவும் இவ்வளவு தூரம் சிலாகித்துக்கொள்ள, எப்படியாவது தான் டாக்டராக வேண்டும் என்று அந்த பிஞ்சு மனதில்
இன்னுமாய் ஆழ பதிய வைத்துக்கொண்டாள்..!
தன் பெற்றோர் தன் மகளைப்பற்றி பாடிய புகழாரத்தை கேட்ட
பூங்கொடிக்கும் பெருமையாகத்தான் இருந்தது..!
அத்தோடு கொஞ்சம் பயமும் தான் இலவச இணைப்பாக வந்து
ஒட்டிக்கொண்டது..!
*****
தன் மகள் பிறந்த ஒரு வருடத்தில் யாரோ ஒருவர் ராசய்யாவிடம்
உன் மகள் என்ன படிக்கப் போகிறாள் என்று கேட்டு வைக்க, கொஞ்ச நேரம் யோசித்தவன்,
எம்புள்ள டாக்டருக்கு படிக்கப் போறா.... என்று சொல்லி வைத்தான்.!
அப்போதைக்கு ஏதோ சொல்லி வைக்கிறேன் என்று பூங்கொடி எண்ணி இருக்க, ராசய்யாவோ ஏதோ பேச்சுக்கு என்று விட்டுவிடாமல் , அவன் மகளின் மனதில் தன்
விருப்பத்தை விதைத்து வந்தான்..!
தினமும் இரவில் அவளை தன் மார்பில் படுக்க வைத்துக்கொண்டு,
“குட்டிம்மா... நீ பெரியவள் ஆனதும் நல்லா படிச்சு டாக்டராக வேணும். டாக்டராகி யாருக்கும் முடியாது
என்று சொல்லாமல் எந்நேரம் ஆனாலும் நீ வைத்தியம் பார்க்கணும்...”
என்று கனவோடு சொல்ல, அந்த வயதில் தன்
தந்தை சொல்லே மந்திரமாய் திரிந்த அந்த
குட்டியும் அதைப் பிடித்துக்கொண்டு டாக்டருக்கு படிக்கணும்...நான் டாக்டர் ஆகணும் என்று தன் மனதில் பதித்து கொண்டாள்..!
ஆரம்பத்தில் புள்ளை விளையாட்டுத்தனமாக ஏதோ சொல்கிறாள் என்று
பூங்கொடியும் விட்டுவிட, அவள் வளர வளர டாக்டர் படிப்பு
மீதான மோகம் கூடியதே தவிர குறையவில்லை..!
தெருவில் பிள்ளைகளெல்லாம் நொண்டி ஆடுவதும், பல்லாங்குழி, கோகோ மற்றும் தெள்ளு விளையாடுவதுமாய் இருக்க, இவளோ ஏதாவது ஒரு கயிற்றை எடுத்து அதன் ஓரத்தில் பெரிய முடிச்சாக போட்டு, அதை மடித்து, ஸ்டெதஸ் ஐ போல கழுத்தில் மாட்டிக்கொண்டு,
அங்கு விளையாடும் பிள்ளைகள் ஒவ்வொன்றையும் வரிசையில் நிக்க
வைத்து அவர்களின் நாடித்துடிப்பை சரிபார்ப்பதும், அவர்களின் இதயத்தில் ஸ்டெதஸை வைத்து இதய துடிப்பை
சரிபார்ப்பதுமாய் , விளையாண்டாள்..!
சிறுவயதிலேயே நமது உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றின் பெயரையும், ஒவ்வொரு உறுப்புக்கும் மருத்துவத்தில் என்ன பெயர்? அது எப்படி இருக்கும்
என்று சிறுபிள்ளைகளுக்கு எளிதாக விளங்கும் வகையில் விளக்கப்படத்துடன்
கூடிய புத்தகத்தை ராசய்யா வாங்கி கொடுக்க, அவளும் அதை ஆர்வமாக
படித்தாள்.!
அதை எத்தனை முறை படித்திருப்பாள்...புரட்டியிருப்பாள் என்று
அவளுக்கே தெரியாது..! அந்த புத்தகம் வாய் விட்டு கதறி அழும் அளவுக்கு அதை
புரட்டியிருப்பாள்..!
மற்ற பிள்ளைகள் சொப்பு வைத்து விளையாடும் குக்கிங் செட்... வீடு
கட்டுதல்(ப்லாக்ஸ்)...போன்ற விளையாட்டுகளை
விளையாட, இவளோ டாக்டர் செட்டிலேயே விதவிதமாக விளையாண்டாள்..!
ராசய்யா வெளியூர் செல்லும் பொழுதெல்லாம் தன் மகளுக்குப்
புரியும் வகையில் சின்னச்சின்ன எளிதான மருத்துவம் சம்பந்தமான புத்தகத்தை வாங்கி
வந்து விடுவான்..!
இவ்வாறாக, டாக்டராக வேண்டும்
என்ற ஒரு சிறு விதையாக அந்த பிஞ்சு மனதில் விழுந்தது...இப்பொழுது முளை விட்டு
கொஞ்சம் கொஞ்சமாக செடியாக வளர ஆரம்பித்து இருந்தது..!
தான் ஒரு டாக்டராக வேண்டும் என்ற கனவு அவள் மனதில் ஆழ பதிந்து
போனது இப்பொழுது அவளின் ஒவ்வொரு செயலிலும் தெரிந்தது..!
அதை நினைத்து ஒருபக்கம் பெருமையாக இருந்தாலும் இன்னொரு பக்கம்
கொஞ்சம்... இல்ல இல்ல ரொம்பவுமே பயமாக இருந்தது பூங்கொடிக்கு.
எப்பொழுதும் நாலையும் அலசி ஆராயும் பக்குவம் ஆண்களை விட
பெண்களுக்கு அதிகம்..!
எந்த ஒரு விஷயத்திலும் பாசத்திற்கு மட்டுமே முதல் இடம் கொடுத்து
பார்த்து வைப்பார்கள் ஆண்கள்..!
ஆனால் பெண்கள்தான் எந்த ஒன்றிலும் இருக்கும் சாதக பாதகங்களை
அலசி ஆராய்ந்து, எப்படி சமாளிப்பது என்று அனைத்தையும் பார்த்து
வைப்பார்கள்..!
அதனாலேயே தன் மகளின் இந்த மருத்துவராகும் கனவை காணக்காண
வயிற்றுக்குள் ஏதோ புரண்டது..!
தங்களால் அவளை டாக்டருக்கு படிக்க வைக்க முடியுமா? அதற்கு எவ்வளவு
செலவாகும் என்று அவளுக்கு தெரியும்..!
படிப்பறிவில்லாத... அந்தப் படிப்பை பற்றி தெரியாத தன் கணவனுக்கு
இதில் இருக்கும் பாதகத்தை பற்றி தெரியாதே..!
ஒருவேளை அவளால் மருத்துவம் படிக்க முடியாமல் போய் விட்டால் என்ன
ஆகும் என்பதை யோசிக்காமல் விடுகிறான் என்பதை விட, பிடிவாதமாக இருக்கிறான்
ராசய்யா...!
எத்தனையோ முறை தன் கணவனிடம் ஜாடைமாடையாக சொல்லி பார்த்து விட்டாள்..!
டாக்டருக்கு படிக்க ரொம்ப செலவாகும் என்று..!
அவனோ
“அதனாலென்ன டி.. என்
சொத்தை எல்லாம் வித்தாவது என் புள்ளைய டாக்டர் ஆக்குவேன்...” என்று மீசையை முறுக்கிக் கொண்டான்.!
அவனுக்கு தெரியவில்லை..! அவனுடைய சொத்து மதிப்பு, டாக்டர் சீட்டு வாங்க, பத்து பர்சன்ட் கூட தேறாது
என்று. அது படித்த பூங்கொடிக்கு தெரிந்தது.
அதை எடுத்துச் சொன்னால், காதில் போட்டுக்கொள்வதில்லை..!
“அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம் டி... அதுக்குள்ள நாம இப்படியேவா
இருந்திடுவோம்? எப்படியாவது கஷ்டப்பட்டு குட்டிம்மா பன்னிரண்டாம் வகுப்பு
வர்றதுக்குள்ள கஷ்டப்பட்டு சம்பாதிச்சு நல்ல நிலைக்கு வந்துடுவேனாக்கும்..! நீ கவலையை விடு...”
என்று தன் மனைவியை சமாதானப்படுத்தி விடுவான்.!
இப்பொழுது தன் மகளின் ஆர்வத்தை பார்த்தவளுக்கு பயமாகத்தான்
இருந்தது..!
ஆனாலும் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று தோன்ற, நடக்கிறது நடக்கட்டும்
என்று ஒரு பெருமூச்சு விட்டாள்..!
தன் புருஷனுக்காகவாது...அவன் கனவுக்காகவாது தன் மகள்
எப்படியாவது டாக்டராக வேண்டும் என்று அந்த கருப்பண்ணசாமியை வேண்டிக் கொண்டாள்..!
அவளின் வேண்டுதல் பலிக்குமா? பார்க்கலாம்..!
Raasayya dream palikumaaaa??????🤔🤔
ReplyDelete