அத்தியாயம்-33
திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு, அலுவலகத்தில் இருந்து, அவளின் அன்னையை
அழைத்து வருவதற்காக
அவ்வளவு காதலோடு, அவளை தன் கண்களுக்குள் நிறைத்துக் கொண்டு... துள்ளலுடன், விசில் அடித்தபடி சென்ற
ஷ்யாமை அவள் அடுத்து பார்த்தது குற்றுயிரும் குலையுயிருமாக மருத்துவமனையில்
கிடந்தவனைத்தான்..!
தன் அன்னையை பிக்கப் பண்ண சென்றவன்... அவரை ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில், நெடுஞ்சாலையில் வந்து
கொண்டிருக்க,
யாரோ சில இளைஞர்கள் குடித்துவிட்டு வேகமாக காரை ஓட்டி வர, அந்த கார் பாலன்ஸ் தவறி, குறுக்கே பாய்ந்து, முன்னால் சென்று
கொண்டிருந்த ஷ்யாம் பைக் மேல் மோதியது..!
வேகமாக வந்து மோதியதால், வண்டியில் அமர்ந்து இருந்த இருவரும் தூக்கி
வீசப்பட்டனர்..!
இரவுதானே...! போலிஸ் இருக்க மாட்டார்கள் என்று தலைக்கவசம்
அணியாமல் பைக்கை ஓட்டி வந்திருந்தான் ஷ்யாம்..!
சுகுந்தலையும் அதேதான்..! தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை..!
தூக்கி எறியப்பட்டதில், சாலையின் நடுவிலிருந்த டிவைடரின் மீது தலை மோதி அவள் அன்னை
அந்த இடத்திலேயே உயிரை விட்டுவிட, ஷ்யாம் மட்டும்
எப்படியோ தன் உயிரை கொஞ்சம் இழுத்து
பிடித்து வைத்திருந்தான் போல..!
நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் கை, காலை இழுத்துக்கொண்டு துடித்துக் கொண்டிருந்தனவனை எப்படியோ இரக்க குணம் உள்ள ஒரு சிலர் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து விட்டு
அவளுக்கு தகவல் கொடுக்க, பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினாள்
சுரபி..!
வேகமாக ஐ.சி.யு க்குள்
செல்ல, அங்கே உடலெல்லாம் கட்டுகள் போடப்பட்டு கண்ணில் தன் உயிரை
தேக்கி வைத்துக் கொண்டு, அந்த அறை வாயிலையே
பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்..!
பதற்றத்துடன் உள்ளே ஓடி வந்த தன்னவளின் முகத்தை கண்டதும், அவன் கண்களில் அப்படி
ஒரு மின்னல்..!
வேகமாக அவனருகில் ஓடிச்சென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு, ஷ்யாம்....! என்று கதற, அவனோ தன் தலையை
இருபக்கமும் மறுப்பாக ஆட்டி அவளை அழக்கூடாது என்று பார்வையால் அதட்டினான்..!
அதைக் கண்டு இன்னும் பொங்கி அழுதாள் சுரபி..!
மெல்ல மெல்ல திக்கித் திணறி ஷ்யாம் இறுதியாக பேசியது இதுதான்..!
அவளின் கையை மெல்ல பற்றியவன்,
“உன்னை திகட்டத் திகட்ட காதலிக்க வேண்டும்... இனிக்க இனிக்க உன்னோடு வாழ வேண்டும்... என்று எப்படி எல்லாம் கனவு கண்டேன் சுரபி மா
என்னால் அந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை..! உன்னை தவிக்க விட்டு போகிறேன் என்று தான்
வருத்தம்..!
ஆனாலும் இந்த மூன்று வருடங்களாக உன்னை காதலித்த அந்த நாட்களே எனக்கு
நிறைவாக இருக்கிறது..! அது போதும்...! ஐ
லவ் யூ சுரபி...” என்று தழுதழுக்க, அவளோ அவன் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு
கதறினாள்..!
எத்தனையோ முறை அவன் கண்களில் காதலை தேக்கி வைத்துக் கொண்டு அவளுடன் பேசிய பொழுதெல்லாம், அதை..அவனை...அவன் காதலை
கண்டுகொள்ளாமல் நிராகரித்தது எவ்வளவு
பெரிய மடத்தனம் என்று இப்பொழுது புரிந்தது..!
தன்னை இந்த அளவுக்கு காதலித்தவன் காதலை ஏற்றுக் கொண்டதாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை
ஆனால் அவன் எந்த அளவுக்கு தன்னை காதலித்து இருக்கிறான் என்பது, இறக்கும்
தருவாயிலும், அவனின் கண்களில்
இருந்த எல்லையில்லா காதலில் இருந்தே புரிந்தது...!
“உனக்கு ஒன்றும் ஆகாது ஷ்யாம்..! நீ சரியாயிடுவ...! என்னோடு சேர்ந்து வாழத்தான் போற..! “ என்று அவனுக்கு தைரியமூட்ட,
அவனோ இல்லை என்று தலையசைத்தான்..!
“நான் அந்த எமனுடன் போராடி கொண்டிருக்கிறேன் சுரபிமா..! எப்பயோ
போயிருக்க வேண்டியது என் உயிர்..!
எப்படியாவது உன்னை கடைசியாக ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்றுதான்
போக இருந்த என் உயிரை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்..!
இப்பொழுது கடைசியாக உன் முகத்தை பார்த்து விட்டேன்..! இனி நிம்மதியாக போயிருவேன்...! ஐ லவ் யூ சுரபி..!
நீ தைர்யமா இரு... பத்திரமா இரு...! அப்புறம் முடிந்தால் என்
குடும்பத்தையும் பார்த்துக்கோ..! அவர்களையும்
நட்டாற்றில் விட்டு செல்வது இன்னொரு வேதனை எனக்கு..!
முடிந்தால் அவர்களை பார்த்துக்கொள்...! ஐ லவ் யூ...லவ் யூ லாட்..!” என்று கண்கள் பளபளக்க சொன்னவன் கண்கள் அப்படியே சொருகி
போனான்..!
அந்த கண்களில் இருந்த காதல் அப்படியேதான் இருந்தது..!
அதைக்கண்டு தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள் சுரபி..!
ஒரே நேரத்தில் தன்னை வளர்த்த..அவளுக்கு ஒரே ஆதரவான அன்னையையும், தன் எதிர்காலம் என்று எண்ணி
இருந்த, கணவனாகப்
போகிறவன் இருவரையும் இழந்த துயரம் அவளை
புரட்டி போட்டது..!
என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்..!
பின் மெல்ல சுதாரித்து ஷ்யாமின்
வீட்டிற்கு தகவல் சொல்லியவள்...முயன்று தன் நண்பர்களுக்கும் தகவல் சொல்லிவிட, அனைவரும் உடனேயே அந்த மருத்தவமனைக்கு ஓடி வந்து விட்டனர்..!
அதன்பின் எல்லாம் மலமலவென்று நடந்தேறியது..!
இருவரின் உடலையும் தகனம் செய்த பொழுது சுரபி கதறிய கதறல் அனைவர்
கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது..!
******
அடுத்த இரண்டு நாட்களில் அவளுக்கு துணை இருந்த
ஒன்றிரண்டு உறவுக்காரர்களும், அவர்களது ஜோலியை பார்க்க கிளம்பிவிட, சுரபி மட்டும் தணித்து இருந்தாள்..,!
தாயும் மகளுமாக இருந்த அந்த வீட்டில், இப்பொழுது அவள் மட்டுமே
தனித்து இருப்பது கொடுமையாக இருந்தது..!
திரும்பிய பக்கமெல்லாம் அவள் தாயுடன் உரையாடிய நினைவுகளும்... அவரிடம் செல்ல சண்டை போட்ட காட்சிகள்..அவரை
கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சி நிகழ்வுகள்
எல்லாம் கண் முன்னே வர, ரொம்பவும் துடித்துப் போனாள்.
இங்கே இப்படி என்றால் ஷ்யாம் வீட்டிலோ சொல்லவே தேவையில்லை..!
தலைமகனான அந்த வீட்டின் செல்ல மகனான மூத்த மகனை இழந்த அந்த
குடும்பம் நட்டாற்றில் துடுப்பில்லாமல் தனித்து விடப்பட்ட படகை போல தள்ளாட
ஆரம்பித்தது..!
ஷ்யாம், தம்பி தங்கைகள்
இருவருமே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர்
அவனின் அப்பா சந்திரசேகர் வி.ஆர்.எஸ் வாங்கிக்கொண்டவர்...வந்த
பணத்தை போட்டுத்தான் சொந்தமாக அந்த வீட்டை கட்டி இருந்தனர்.
இப்பொழுது அவருக்கு என்று எந்த வருமானமும் இல்லை..!
ஷ்யாமின் வருமானத்தில் தான்
அந்த குடும்பத்தின் வண்டி ஓடிக்கொண்டிருந்தது..! இப்பொழுது அவனின் வருமானம் இல்லை என்ற பொழுது
அந்தக் குடும்பம் தத்தளிக்க ஆரம்பித்தது.
அதோடு தன் உயிரான மகனை இழந்த சோகம், அவன் அன்னை சுந்தரியை ரொம்பவுமே தாக்கியது..!
யாரும் எதுவும் சாப்பிடாமல் அப்படியே இடிந்துபோய் அமர்ந்திருந்து
விட்டனர்...!
*****
இரண்டு நாட்கள் இப்படியே விட்டத்தை வெறித்து
பார்த்தவாறு கழிந்து விட, அப்பொழுதுதான் ஷ்யாம் கடைசியாக சொன்னது நினைவு
வந்தது சுரபிக்கு..!
“முடிந்தால் என்
குடும்பத்தை பார்த்துக்க சுரபி...” என்று பாவமாக
கேட்டது திரும்பத் திரும்ப உறைக்க,
தனக்காக போய் தானே அவன் உயிரை விட்டான்..!
“நான் மட்டும் என் அன்னையை அழைத்துவர அனுப்பியிருக்கா விட்டால், இந்நேரம் அவர் உயிரோடு இருந்திருப்பார்..!
எல்லாம் என்னால் தான்...”
என்ற குற்ற உணர்வு அவளை கொன்றது..!
அன்று இரவு முழுவதும் யோசித்தவள், மறுநாள் காலை தன் பொருட்களை... அத்தியாவசிய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு
சுந்தரியின் வீட்டிற்கு சென்று விட்டாள்.
இன்னும் ஒரு வாரத்தில் வலது காலை எடுத்து வைத்து, இந்த வீட்டு மருமகளாய் மணக்கோலத்தில் வந்திருக்க வேண்டியவள்..!
இப்படி தனியாக... தன்
மகன் இல்லாமல்...அவள் மட்டும் தனியாக வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும், சுந்தரி ஓ வென்று கதறி, அவளை கட்டிக்கொண்டு
கதறி விட்டாள்
சுரபிக்கும் சொல்ல முடியாத வேதனைதான்..!
ஆனாலும் அதை உள்ளுக்குள் போட்டு பூட்டிக்கொண்டு, அந்த குடும்பத்தை தேற்ற
முயன்றாள் சுரபி.
வெறும் வார்த்தைக்காக தேற்றாமல், அவள் ஷ்யாம் இடத்திலிருந்து இந்த குடும்பத்தை இனி நான்
தாங்குவேன் என்று சொல்ல, மற்ற நால்வரும் அதிர்ந்து போயினர்..!
தலைமகனை மற்றும் அந்த குடும்பத்தின் ஒரே ஆதாரமான தங்கள் செல்ல
மகனை இழந்ததும், இனி வாழ்க்கையை
எப்படி சமாளிக்க போகிறோம் என்ற அச்சம் பெற்றவர்கள் இருவரின் மனதிலும் இருக்கத்தான்
செய்தது..!
அதற்காக ஒரு இளம்பெண்ணின் உழைப்பை சுரண்ட, உழைப்பை விட, அவள் இனி வேற
ஒருவர் வீட்டில் வாழப்போகிறவள்.. அவளுக்கென்று ஒரு எதிர்காலம் இருக்கும்.
அதை தங்களுக்காக, தங்கள்
குடும்பத்துக்காக தொலைத்து விடக்கூடாது என்று சுரபியின் பக்கமாக பார்த்து அவள்
உதவியை மறுத்தனர்..!
“வேண்டாம் சுரபி மா.. நீ வாழ வேண்டிய பொண்ணு..! இன்னும் கொஞ்ச நாள்
கழித்து வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ நீயும் எங்களோடு சேர்ந்து கஷ்டப்பட
வேண்டாம்...” என்ற சுந்தரி வேதனையோடு மறுக்க, அவனை செல்லமாக
முறைத்தாள் சுரபி..!
“அத்தை...இதே உங்க புள்ள என் கழுத்தில் தாலி கட்டிய பிறகு உங்க புள்ள இறந்திருந்தால் என்ன செய்வீங்க? “ என்று கேட்க, அவரோ மீண்டும் கண்களில்
நீர் பொங்க,
“அதற்குத்தான் எங்களுக்கு கொடுப்பினை இல்லாமல் போய்விட்டதே..!
எங்க பையனுக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்க முடியாம, நீ மருமகளா இந்த வீட்டுக்கு உரிமையோடு அடி எடுத்து வைக்க
முடியாம…அந்த ஆண்டவன்
எல்லாத்தையும் கழச்சுபுட்டானே..!
என் பையன்...எவ்வளவு கனவுகளோட இருந்தான்..! எல்லாம் கனவாகவே
போய்டுச்சே...! “ என்று ஒரு மூச்சு அழுது, புலம்பி தீர்த்தார்..!
சுரபிக்கும் கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில்
வழிந்தோடியது..!
அவள் அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து கண்களை
துடைத்துக் கொண்டவள்,
“சொல்லுங்க அத்தை...! என்
கழுத்தில் தாலி கட்டிய பிறகு உங்க புள்ள இறந்திருந்தால் என்ன செய்வீங்க? என்னை எப்படியோ போனு அம்போனு விட்டுடுவிங்களா? “ என்று நெஞ்சம் விம்ம கேட்க,
“ஐயோ தங்கம்..உன்னைப்போய் எப்படி டா எப்படியோ போனு அம்போனு
விட்டுடுவோம். நீ எங்க வீட்டுக்கு
முறைப்படி மருமகளா வந்திருந்தா இந்த பேச்சுக்கே இடமில்லையே..! நீயும் எங்களில்
ஒருத்தி டா..” என்று அவளின் கன்னம் வருடி தழுதழுத்தார்...!
“அப்புறம் என்ன அத்தை..! நிச்சயம் ஆகிடுச்சுன்னாலே பாதி
கல்யாணம் முடிந்த மாதிரினு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க! அப்படி பார்த்தால்
எங்களுக்கு நிச்சயம் ஆகி மூனுமாசமும் ஆகிடுச்சு..!
அப்படியே இன்னொன்னையும் தெரிஞ்சுக்கோங்க...! என் கழுத்தில் உங்க புள்ளை கட்டி இருக்கவேண்டிய தாலி
ஏறவில்லை..! அவ்வளவுதான்..!
மற்றபடி நான்தான் உங்க மருமகள்...ஷ்யாம் சுந்தரின் மனைவி..! எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ண எல்லாம் ஐடியா
இல்லை..! இனிமேல் எனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை..!
நான் உங்க மருமகளாக, ஷ்யாமின் மனைவியாக
இந்த வீட்டில்தான் இருக்க போகிறேன்..! என்னை யாரும் தடுக்காதிங்க...” என்று அனைவரின் வாயை அடைத்தவள்... சொன்னபடியே செய்தும் காட்டினாள்
சுரபி...!
*******
அடுத்த வருடம், ஷ்யாம் பிரகாஷ் தன் கல்லூரி படிப்பை முடித்திருக்க, அவனுக்கு கேம்பஸ் செலக்சனில் வேலையும் கிடைத்து விட்டது..!
ஷ்யாமின் தங்கை ஷ்யாமளா...மேல படிக்க விருப்பம் இல்லாததால், நல்ல வரனாக பார்த்து அவளுக்கு
திருமணத்தை முடித்து வைத்தாள்..!
இப்பொழுது ஷ்யாம் பிரகாஷ் ம் வேலைக்கு போய் சம்பாதிக்க, அந்த குடும்பம்
ஓரளவுக்கு தலை நிமிர்ந்தது.
அடுத்து வருடங்கள் உருண்டோட ஷ்யாம் பிரகாஷ் க்கும் திருமண வயது
வந்துவிட, உறவுக்காரர்கள் சிலர், அவனையே சுரபியை திருமணம் செய்து கொள்ள சொல்லினர்..!
கொஞ்சம் வயது வித்தியாசம் இருந்தாலும், சுரபி பார்ப்பதற்கு சிறு பெண்ணாக இருந்ததால், ப்ரகாஷிற்கு பொருத்தமாக இருப்பாள் என்று சொல்லி வைக்க, அதைக்கேட்ட சுரபிதான் நெருப்பை சுட்டது போல துடித்துப் போனாள்..!
ஷ்யாமின் தம்பி... அவளுக்கும் தம்பி அல்லவா ? அதுவரை அவளை அண்ணி
என்று மரியாதையுடன் அழைத்தவன்...! அவன் போய் அவளின் கணவனா...? சீ சீ சீ என்று அருவருப்பாக இருந்தது..!
இந்த பேச்சு அடிபடவும் அவளுக்கு ஏனோ ஷ்யாமின் வீட்டில் இயல்பாக
இருக்க முடியவில்லை..!
உறவினர்கள் சொன்னதை கேட்டு , சுந்தரி முதலில் திகைத்தாலும், அவருக்குமே அப்படி பண்ணினால் என்ன தப்பு என்று தோன்ற
ஆரம்பித்து விட்டது..!
தங்கள் குடும்பத்துக்காகவே உழைத்து கொட்டுபவள்..! அவளுக்கென்று
யாரும் இல்லாமல்... அவளுக்கென்று ஒரு வாழ்க்கை இல்லாமல்... இப்படி தங்கள்
குடும்பத்துக்காக பார்த்து பார்த்து செய்யும் அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்து
கொடுப்பது தங்கள் கடமை இல்லையா?
அவளே வேற எங்கயோ அனுப்புவதற்கு பதிலாக , தன் மருமகளாக தன் வீட்டிலயே வைத்துக்கொள்ள அவருக்கும்
சந்தோஷம்தான்..!
ஷ்யாம் ப்ரகாஷ் ம் சுரபி சம்மதித்தால் சரி என்று விட்டான்..!
அது, அவள் தன் குடும்பத்துக்கு செய்த உதவிக்கு
நன்றிக்கடனா? தன் அண்ணனுக்காக, வயதில் அவனைவிட
மூத்தவளை மணக்க முன் வந்தானா? இல்லை அவனுக்கு அவளை பிடித்து விட்டதா?
கடைசி வாய்ப்பை நினைத்து பார்க்கும்பொழுது குமட்டிக்கொண்டு
வந்தது சுரபிக்கு..!
“இல்லை.. ப்ரகாஷ் அப்படி எல்லாம் என்னை எண்ணி இருக்க
மாட்டான்..! மற்றவர்களுக்காகத்தான் தலையை ஆட்டி வைத்திருப்பான்..! அவனுக்கு இப்படி
ஒரு இக்கட்டான நிலையை நான் கொடுக்க கூடாது..!
அவன் நன்றாக இருக்க வேண்டும்..! நல்ல பெண்ணை மணந்து சந்தோஷமாக
வாழ வேண்டும்...” என்று முடிவு செய்தவள், அனைவரையும் அழைத்து தன் முடிவை சொல்லிவிட்டாள்..!
“எனக்கு ப்ரகாஷ் தம்பி மாதிரி..! அதோடு நான் முன்பு சொன்ன
மாதிரி எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது..! நான் ஷ்யாமின் மனைவி..! எனக்கு இன்னொரு திருமணம் என்ற பேச்சுக்கே
இடமில்லை..!
அதோடு ப்ரகாஷிற்கு வேற ஒரு பொண்ணை பார்த்து திருமணம் செய்து
வைப்பது என் கடமை...” என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாள்..!
அதோடு விரைவிலேயே நல்ல ஒரு பெண்ணாக பார்த்து, அவனுக்கு திருமணத்தையும் முடித்து வைத்தாள்..!
ரம்யா--- அவளைப்போலவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் நின்று போய்விட, முதல் திருமணம் நின்று போனதால், அதற்கடுத்து வந்த வரன்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்காக தட்டிப் போய்க் கொண்டே இருந்தது..!
அவளின் கதையை கேட்டதும், சுரபிக்கு மனம் நெகிழ்ந்து போனது..!
ரம்யாவின் குணமும் சுரபிக்கு பிடித்து விட, உடனே ரம்யாவின் குடும்பத்தில் பேசி, அடுத்த முகூர்த்தத்திலயே அவர்களின் திருமணத்தை நடத்தி
விட்டாள்..!
******
ஷ்யாம் இருந்த இடத்தில், அவள் இருந்து, தன் கடமைகளை எல்லாம் முடித்த பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக
இருந்தது..!
அதோடு இப்பொழுது ஷ்யாம் ப்ரகாஷ் அவன் மனைவியுடன் அதே வீட்டில்
வசிக்க, திருமணம் ஆகாமல், முதிர் கன்னியாக அந்த வீட்டில் வளைய வருவது அவளுக்கு சங்கடமாக
இருந்தது..!
புதுமண தம்பதிகளுக்கே உரித்தான சில்மிஷங்கள்... தீண்டல்கள்...
அவர்களுக்கு இடையேயான அன்னியோன்யத்தை எல்லாம் காணும் பொழுது அவளின்
கன்னிமனம் தவித்து போகும்..!
அவளுக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லையே என்ற ஆற்றாமை
அவளையும் மறந்து அவள் நெஞ்சுக்குள் பரவ ஆரம்பித்தது..!
அதில் விதிர்விதிர்த்து போனாள் சுரபி..!
எங்கே தன்னை மறந்து அவள் விடும் ஏக்க பெருமூச்சு...! அவளுடைய
பொறாமை, அந்த சின்னஞ்சிறுசுகளின் வாழ்க்கையையும் பொசுக்கி
விடுமோ என்று பயமாக இருந்தது.
அதோடு ப்ரகாஷ் அவன் மனைவியுடன் சரசமாடிக்கொண்டிருக்க, அனிச்சையாய் அந்த பக்கம் சுரபி வந்து விட்டால், அவன் முகத்தில் ஒரு சங்கடமும், குற்ற உணர்வும் வந்து போகும்..!
அவர்கள் குடும்பத்துக்காக சிலுவை சுமந்தவள்... அவள் தனித்து
இருக்க, தான் மட்டும் சந்தோஷமாக இருப்பதா என்று அவனின்
உற்சாகம் வடிந்து போகும்..!
அதைக் கண்டு கொண்ட சுரபிக்கு, இனி தான் அந்த வீட்டில் வசிப்பது சரியில்லை என்று தோன்றியது..!
என்னதான் தாலிகட்டிக்காமலயே தன்னை அந்த வீட்டின் மருமகள் என்று
அவள் சொல்லிக்கொண்டாலும், அவளின் கடமைகள்
எல்லாம் முடிந்தபிறகு அவள் அந்த வீட்டிற்கு தேவையில்லாதவள் தானே..!
மற்றவர்கள் அப்படி சொல்லவில்லை என்றாலும் சுரபிக்கு கொஞ்சம்
கில்ட்டியாக இருந்தது..!
அதனால் ஷ்யாம் வீட்டில் அனைவரிடமும் தன்மையாக பேசி, சம்மதிக்க வைத்து, முன்பு தன்
அன்னையுடன் வசித்த பழைய வீட்டிற்கு வந்துவிட்டாள் சுரபி..!
சுந்தரி எவ்வளவோ தடுத்து பார்த்தும், சுரபி நயமாக பேசி அவரை சம்மதிக்க வைத்து விட்டாள்..!
ஒரு வேகத்தில் அங்கிருந்து வந்து விட்டவளுக்கு, இப்பொழுது இந்த வீட்டில் அவள் ஒருத்தி மட்டும் தனியாக வசிப்பது
என்னவோ போல இருந்தது..!
இங்கு வந்ததும் தனிமை ரொம்பவும் வாட்டியது..!
அவளின் எதிர்காலத்தை
பற்றி நினைக்கவே பயமாக இருந்தது..!
இதுவரை ஷ்யாம் குடும்பத்தை தூக்கி நிறுத்துவது ஒன்றே தன்
கடமையாக எண்ணி ஓடிக்கொண்டிருந்தவளுக்கு, இப்பொழுது அந்த கடமையை நிறைவேற்றிவிட்டு, ஆசுவாசமாக அமர்ந்த பொழுதுதான் அவளுக்கு அவள் ஓடி வந்திருந்த
தூரம் தெரிந்தது..!
அவள் ஓடி வந்திருந்த தூரத்தை திரும்பி பார்க்க, அவளின் வயது இப்பொழுது
முப்பதை தொட்டிருந்தது..!
ஷ்யாம் குடிம்பத்தில் அனைவரும் அவரவர் வாழ்க்கையில் செட்டில் ஆகி
விட, அவள் மட்டும் தனித்து இருப்பது அப்பொழுதுதான்
மண்டையில் உரைத்தது..!
உலகத்திலேயே கொடுமையான வியாதி எது என்றால், அது தனிமை என்று யாரோ எப்போதோ சொன்னது நினைவு வர, உதட்டில் உதிர்ந்த புன்முறுவலுடன் அந்த தனிமை வியாதியுடன் கொஞ்சம் கொஞ்சமாக போரடித்தான் பார்த்தாள்.!
தங்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டாலும், ஷ்யாமின் பெற்றோர்கள் அவளை அப்படியே விட்டுவிடவில்லைதான்..!
தினமும் இருவரும் சுரபியை அழைத்து பேசிவிடுவார்கள்..!
வார விடுமுறைகளில் அவளை பார்க்க வந்துவிடுவார்கள்..!
அவர்களுக்கும் இந்த சிறுவயதில் அவள் தனிமரமாக நிற்பதைக் கண்டு
கஷ்டமாக இருந்தது..!
சுந்தரி அவளை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்த, திருமணம் என்றாலே அவளுக்கு
ஷ்யாமின் நினைவு தான் கண் முன்னே வந்தது..!
அவன் இருந்த பொழுது தெரியாத அவனின் காதல்...! அவன் இல்லை என்ற பொழுது தான் அவனை புரிந்து
கொண்டது..!
அவன் காதலை எண்ணி இப்பொழுதும் உருகி போனாள்...! மனம் தவித்தது..!
ஷ்யாம் இடத்தில் தன் கணவனாய் வேற ஒருவனை வைத்து பார்க்க
முடியவில்லை அவளால்..! கணவன் என்றாலே ஷ்யாமின் சிரித்த முகமும், அவன் கண்களில் பொங்கிய காதலும்தான் அவள் முன்னே வந்து
நிக்கும்..!
இத்தனை வருடங்கள் ஆகியும், அவள் நினைவில் கொஞ்சமும் அவன் மறைந்திருக்கவில்லை..! அதனால்
தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாள்..!
ஆனால் தன் எதிர்காலம் என்ன என்று யோசிக்கும் பொழுது கொஞ்சம் பயமாக
இருந்தது..!
வாரம் ஐந்து நாட்களும் அலுவலக வேலைகளில் பிசியாகி விட, அப்பொழுது தெரியாத தனிமை…வார விடுமுறைகளில் அவள் மட்டுமாய் அந்த வீட்டில் தனித்து
இருக்கும் பொழுது கொடுமையாக இருந்தது..!
அதுவும் அலுவலக்த்தில் ஒவ்வொருவரும் அவர்களின் குடும்பம்... கணவன்...குழந்தை
என்று கதை அடிக்கும்பொழுது தனக்கென்று அப்படி யாரும் இல்லையே என்ற ஏக்கம் வந்து
சேர்ந்தது..!
அந்த ஏக்கம் நாளடைவில் பெரும் வேதனையாக மாறிப் போனது..!
அதோடு இன்னொரு பிரச்சனையும் வந்து சேர்ந்தது..!
Nice.....💐💐💐👍
ReplyDeleteThanks pa!
Delete