அத்தியாயம்-9
சென்னை நீலாங்கரையில் உள்ள அந்த அரண்மனை போன்ற
மாளிகையில் தன் அறையில் படுத்திருந்தான் வெற்றிமாறன்.
அந்த அறையின் தோற்றமே அந்த குடும்பத்தின் செல்வ செழிப்பை
பறைசாற்றியது. பைவ் ஸ்டார் ஹோட்டலின் அறையை விட அத்தனை நவீன வசதிகளை உள்ளடக்கி
இருந்தது.
மெத் மெத் என்று படுத்தால் உள்வாங்கி கொண்டு சுகமாக தாலாட்டும்
அன்னையின் மடியைப்போல இருந்த அந்த விலை உயர்ந்த இலவம்பஞ்சு மெத்தையில்,
தலைக்கு பின்னால் தன் இரண்டு கைகளை மடித்து வைத்துக் கொண்டு
மேல் கூரையில் தொங்கி கொண்டிருந்த அலங்கார லஸ்தர் விளக்கை பார்த்து கொண்டிருந்தான் வெற்றிமாறன்.
பார்வை அந்த விளக்கின் மீது படிந்து இருந்தாலும், அவனின் எண்ணங்கள் வேற
எங்கயோ சுற்றிக்கொண்டிருந்தது.
வேற எங்கே..! எல்லாம் அவன் கல்லூரியை சுற்றித்தான் வந்து
கொண்டிருந்தது.
அந்த அளவுக்கு படிப்பின் மீது ஆர்வமா? கல்லூரியின் மீது காதலா என்றால் அதெல்லாம் ஒன்றுமில்லை.
படித்து ஒரு டிகிரி வாங்க வேண்டுமே என்பதற்காகத்தான் அவன் கல்லூரிக்கு
செல்வதே..!
மற்றபடி அவன் படித்து முடித்து கேம்பஸில் தேர்வாகி, வேலைக்கு போய் மாத
சம்பளம் வாங்கித்தான் அவன் குடும்பத்தை காக்கவேண்டும் என்றில்லை.
அவன் தந்தை, பாட்டன், முப்பாட்டன், முப்பாட்டனுக்கு
பாட்டன் என வழிவழியாக பெறுக்கி வைத்த சொத்துபத்துக்களே ஏராளம்.
உட்கார்ந்து சாப்பிட்டாலும் இன்னும் ஏலு தலைமுறைக்கு
உட்கார்ந்து சாப்பிடலாம். அந்த அளவுக்கு வசதி இருந்தது.
அவர்களின் நிறுவனங்களே அண்ணா யுனிவர்சிட்டி, என்.ஐ.டி, ஐ.ஐ.டி போன்ற
புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு சென்று, கேம்பஸ் தேர்வை நடத்தி, தங்கள் நிறுவனங்களுக்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
அப்படி இருக்க, அந்த நிறுவனங்களின்
உரிமையாளன்....கஷ்டபட்டு படிக்க வேண்டுமா?
அதனாலயே பெரிதாக
அலட்டிக்கொள்ளாமல், எந்த ஒரு நுழைவு
தேர்வுக்கும் பிரிப்பேர் பண்ணாமல், பன்னிரெண்டாம்
வகுப்பில் வாங்கிய மதிப்பெண்களின் அடிப்படையில் சென்னையில் உள்ள அண்ணா
பல்கலைகழகத்திலயே சேர்ந்து விட்டான் வெற்றிமாறன்.
அதோடு அரண்மனை போன்ற வீடு இருக்க, கல்லூரி கேம்பஸில் இருக்கும் மாணவர்கள் விடுதியில் தங்காமல்
தினமும் வீட்டிலிருந்து சென்று வந்து கொண்டிருந்தான்.
அப்படியும் சில நாட்கள், கல்லூரி விடுதி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று தோன்றினால், கிளம்பி விடுதிக்கு சென்று அங்கு அலுக்கும் வரை தங்கிவிட்டு
வருவான்.
ஒரே பிள்ளை என்பதால் அவன் விருப்பத்திற்கு வீட்டில் யாரும்
மறுப்பு சொல்வதில்லை. அதனால் வீட்டிலும், கல்லூரி வளாகத்திலும்
முடிசூடா மன்னனாக வளைய வருபவன்...!
அப்படிபட்டவன் நினைவுகள் அந்த இரவு நேரத்திலும் கல்லூரியில்
சுற்றிகொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் பொதிகை.
*****
அதுவரை அவன் சகாக்கள் கலாய்த்து அழுது கொண்டு
செல்லாத பெண்களே இல்லை. ஏன் சில நேரம் ஆண்கள் கூட அழுதுகொண்டே தலை தெறிக்க ஓடி
இருக்கிறார்கள்.
அப்படிபட்ட அந்த கேங்கையே ஒருத்தி கலாய்த்து இருக்கிறாள் என்று
எண்ணும்பொழுது அவனுக்குள் ஆச்சயம்தான் வந்து போனது.
இத்தனைக்கும் அவள்
ஒன்றும் பேரழகி இல்லை... உலக அழகி.. ம்கூம்...பெரிதாக சொல்லிக்கும்படி அழகு என்று
பெரிதாக எதுவும் இல்லைதான்.
ஆனாலும் அவளிடம் இருந்த அந்த திமிர்...நிமிர்ந்த நடை...நேர்
கொண்ட பார்வை...யாருக்கும் அஞ்சாமல், அந்த கேங்கையே
எதிர்த்து கேட்ட துணிச்சல்... கண்களில் தெரிந்த ஒரு தீட்சண்யம்... அவளை மற்ற
பெண்களிடம் இருந்து வித்தியாசபடுத்தி காட்டியது.
அதோடு இறுதியாக அவனை வெள்ளப்பன்னி என்று தைர்யமாக சொல்லி விட்டு
ஓடியது இன்னுமே திரும்ப திரும்ப அவன் மனதில் ரீவைண்ட் ஆகிக் கொண்டு இருந்தது.
அதுவும் அவளின் கோபமான விடைத்த, சிவந்த முகம் நினைவு வரும் பொழுது எல்லாம் அவனுக்குள்
அப்பொழுது தோன்றிய உணர்வுகள் மீண்டும் பொங்கிப் பெருகியது.
இப்பொழுதும் அதே போல அவளின் கோப முகத்தை நினைவு கூர்ந்தவனுக்கு, மீண்டும் அவன் உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன.
அவளை ஆரத்தழுவிக்கொள்ள, அவளின் விடைத்து சிவந்த முகம் முழுவதும் முத்தத்தால் ஆராதித்து
அவள் கோபத்தை தணித்திட, படபடவென்று
பொரியும் அவள் இதழை தன் இதழுக்குள் அடக்கி அவள் கோபத்தை கட்டுபடுத்திட அவனின்
உடலும் மனமும் தவித்தது.
அடுத்த நொடி,
“ஓ மை காட்...” என்று அதிர்ந்து, வாய் விட்டு அலறியவாறு படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்
வெற்றிமாறன். அவன் நினைப்பை எண்ணி அவனுக்கே அசிங்கமாக இருந்தது/
“சை...என் புத்தி ஏன் இப்படி போகுது? இதுவரை யாரிடமும் கிளராத என் மனம் ஏன் இப்படி கிளர்ந்து
போய்கிறது?
ஷ் அப்பா சாமி... அவ ரொம்பவும் டேஞ்சர் ஆனவ போல. நேரில் பார்க்காமலயே, சாதாரணமாக அவளை பற்றி நினைக்கும் பொழுதே என்னை இப்படி படுத்தி
வைக்கிறாளே..!
ம்ஹூம்...இது சரியில்லை...எதுக்கும் அவளை விட்டு தள்ளியே நிக்கணும். இனிமேல் அவள் இருக்கும் பக்கமே தவை
வைத்து படுக்க கூடாது. ஆண்டவா...நீதான் என்னை அவகிட்ட இருந்து காப்பாற்றணும்...”
என்று தனக்குள்ளே புலம்பியவாறு உறுதி செய்து கொண்டான் வெற்றிமாறன்.
ஆனால் அவன் உறுதி மறுநாளே பறிபோக போவதை அறியவில்லை அந்த
ஜமீன்தார் வாரிசு...!
******
மறுநாள் கல்லூரிக்கு சென்றவன், உள்ளே நுழைந்ததும், அவனுக்காகவே
காத்துக்கொண்டிருந்த அவனுடைய நட்பு வட்டத்தை
பார்த்ததும் நேற்றைய சம்பவம் நினைவு வந்தது.
அதோடு நேற்று இரவு அவன் எடுத்துக்கொண்ட உறுதிமொழியும் ஞாபகத்திற்கு வர,
“அந்த கருவாச்சியை நான்
இன்னைக்கு சந்திக்கக் கூடாது...” என்று தனக்குள் உருப்போட்டுக் கொண்டவன், அந்த கேங்கில் கலந்து
கொள்ளாமல் வேலை இருப்பதாக சொல்லி நழுவ முயன்றான் வெற்றிமாறன்.
“டேய் மச்சான்... எங்கடா போற? “ என்று அவர்களும் விசாரிக்க,
“ஒரு முக்கியமான வேலை இருக்குடா... நீங்க என்ஜாய் பண்ணுங்க...” என்று வெற்றிமாறன் நழுவ முயல,
“வேலையா? அப்படி என்ன வேலை எங்களுக்கு தெரியாமல்...” அவனை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியோடு பார்க்க
“ஹீ ஹீ ஹீ ..அது வந்து... அடுத்த வாரம் ஃப்ரெஸ்ஸர்ஸ் பார்ட்டி இருக்கு
இல்லையா...அதற்கான ஏற்பாடுகளை பிரின்சி உடன் கலந்து பேசணும். அதுக்கான
ஏற்பாடுகளை திட்டமிட வேண்டும்...ஓகே டா மச்சான்ஸ். நான் உத்தரவு வாங்கிக்கறேன்...”
என்று ஏதோ உளறி வைத்துவிட்டு அங்கிருந்து நழுவினான் வெற்றிமாறன்.
அதற்குமேல் நின்றால் அவனுக்குள் வந்திருக்கும் தடுமாற்றத்த்தை உளறி வைத்து விடுவோம் என்று அறிந்தவனாய் வேக
நடையுடன் அங்கிருந்து சென்று மறைந்தான் வெற்றிமாறன்..!
*****
எக்ஸ்க்யூஸ் மீ சார் என்ற பெண்ணின் கம்பீரமான
குரலை கேட்டு திரும்பிப் பார்த்தார் அந்த கல்லூரியின் யு.ஜி பிரிவின் முதல்வர்.
அவரைத் தொடர்ந்து அவரின் முன்னால் அமர்ந்து இருந்த
வெற்றிமாறனும் வாசலின் பக்கமாய் திரும்பி பார்க்க, அங்கே நின்றிருந்தவளை கண்டதும் தூக்கிவாரிப் போட அதிர்ந்து
போனான்...
“ஐயோ இவளா? “ என்று
சாக்கடித்ததை போல அதிர்ந்து போனான்.
யார்கிட்ட இருந்து தப்பிக்க வேண்டும் என்று தன் நட்பு வட்டங்களை
கூட கழட்டிவிட்டு ஓடி வந்தானோ அதே அவள்....பொதிகை... அவளாகவே அவனை தேடி வந்து
விட்டாள்...
அந்த அறையின் வாயிலில் மற்றொரு பெண்ணுடன் நின்றிருந்தாள் பொதிகை.
அவள் முகத்திலோ நேற்றை போலவே இன்றும் கோபம் கொந்தளித்துக்
கொண்டிருந்தது. அவள் அருகில் இருந்த
பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.
சற்றுமுன் வரை தேம்பி அழுதிருப்பாள் போல. அதன் அடையாளமாய்
இன்னுமே சன்னமாக விசும்பிக்
கொண்டிருந்தாள்.
அந்த இரு பெண்களையும் பார்த்த முதல்வர்,
“எஸ் கம் இன்...” என்று
அனுமதி அளிக்க, உடனே மற்றொரு பெண்ணின் கையை பிடித்து
கிட்டத்தட்ட இழுத்தவாறு உள்ளே வந்தாள் பொதிகை.
அவரின் அருகில் வந்ததும்
“ஸாரி பார் த டிஸ்டர்பன்ஸ் சார்...” என்று தயக்கத்துடன் இழுக்க,
“பரவாயில்ல மா... சொல்லு...என்ன பிரச்சனை...” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார் முதல்வர்.
பொதிகையும் தன்னை ஒருமுறை ஆசுவாசபடுத்திக்கொண்டு,
“சார்...சட்டப்படி எந்த கல்லூரியிலும் ராக்கிங்
இருக்கக் கூடாது என்றுதானே சொல்லி இருக்கிறார்கள்...”
“யெஸ் அப்கோர்ஸ்...” என்றார் முதல்வர் பெருமிதத்துடன்.
“ஆனால் இங்கே சில பேர் ராக்கிங் என்ற பெயரில், ஃபர்ஸ்ட் இயர்
ஸ்டூடண்ட்ஸ் ஐ கொடுமைப்படுத்துகிறார்கள் சார்...அவர்களை டீஸ் பண்ணி ரொம்பவும்
கஷ்டபடுத்துகிறார்கள் சார்...” என்றாள் வேதனையுடன்.
அதைக்கேட்டு மேலும் அதிர்ந்து போனான் வெற்றிமாறன்.
“என்னது? கொடுமையா? அடிப்பாவி... சும்மா நம்ம பசங்க ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் ஐ கலாய்க்கிறத கொடுமை படுத்தறதா சொல்றாளே...!
அப்படி பார்த்தால் நேற்று இவதான் அவனுங்களை வச்சு
செஞ்சுகிட்டிருந்தா...ஆனால் நேற்றெல்லாம் எதுவும் கம்ப்ளெய்ன்ட் பண்ணாமல்
இன்னைக்கு வந்து நிக்கறாளே..
கூடவே இன்னொரு பொண்ணையும் வேற கூட்டிகிட்டு
வந்திருக்கிறா..! இந்தப் பசங்க இன்னைக்கு
அப்படி என்னத்த பண்ணி தொலைச்சானுங்க… என்ன சொல்லி மாட்டிவிடப்போறாளோ? “ என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டிருந்தான் வெற்றிமாறன்.
******
வெற்றிமாறன் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவின் நான்காம் ஆண்டு மாணவன்.
யு.ஜி மாணவர்களுக்கு அவன்தான் அந்த கல்லூரி மாணவர் சங்கத்தின்
தலைவன்.
அதனால் மாணவர்களுக்கு எந்த தகராறு வந்தாலும், இதைப்போல ராக்கிங் என்று மாணவர்கள் ஏதாவது தவறாக நடந்து
கொண்டாலும் இவன்தான் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
அப்படி இருக்க, இந்த கல்லூரியில் ராக்கிங்
இருக்கு என்று பொதிகை புகார் அளித்தால் அவன்தான் விசாரித்து பதில் அளிக்க
வேண்டும். இதுவரை சீனியர்ஸ் யாரும் ஜூனியர்ஸ் ஐ பெரிதாக ராக்கிங் செய்ததில்லை.
அவனும் அதை அனுமதிக்க மாட்டான்.
சும்மா அவர்கள் பெயரை கேட்டு கிண்டல் அடித்து கலாய்ப்பதோடு நிறுத்திக்கொள்வார்கள். அதனாலயே
யாரும் இதுவரை முதல்வர் வரைக்கும் வந்து புகார் அளித்தது இல்லை.
இப்பொழுது இந்த ஜான்சிராணி சிலிர்த்துக்கொண்டு வந்து பிரின்ஸி
முன்னால் நிக்கவும் அவன் உள்ளுக்குள் சிறு கலக்கம்.
அதோடு அவள் முகம் கோபத்தில் ஜொலி ஜொலிக்க, அவளின் இதழ்கள் விடைத்து துடித்துக் கொண்டிருந்தன.
அந்த கோப முகத்தை கண்டதும், மீண்டுமாய் அவன் உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன
முந்தைய நாளை போலவே இன்றும் அவளை கட்டியணைத்து இதழில் முத்தமிட்டு
அவளின் கோபத்தை தணிக்க அவன் உள்ளே தவித்தது.
அதைக்கண்டு அதிர்ந்து போய், உடனே தன் தலையை இடவலமாக மெல்ல ஆட்டி தன்னை சமனபடுத்திக் கொண்டவன்,
“சை... இந்த கருவாச்சியை இனிமேல் பார்க்கவே கூடாது என்று இருந்தால், தானாகவே என்னை தேடி வந்து நிக்கிறாளே... என்னை கடுப்பேத்தி
பார்க்கனே வந்திருக்கா போல இருக்கு... “
என்று உள்ளுக்குள் அவளை
அர்ச்சனை பண்ணிய்வாறு அவசரமாக பார்வையை வேற பக்கம் திருப்பிக் கொண்டான் வெற்றிமாறன்.
பொதிகை சொன்னதைக்கேட்டு அதிர்ந்த முதல்வரும்,
“நோ...நோ... இங்க ராக்கிங் என்று எதுவும் இதுவரை இருந்ததில்லை... இருக்கவும்
இருக்காது. என்ன வெற்றி...! நான் சொல்வது
சரிதானே? “ என்று
வெற்றிமாறனை பார்க்க, அதுவரை அவனை
கவனித்திராதவள், இப்பொழுது அவன்
பக்கமாய் பார்த்தாள் பொதிகை.
அங்கு இருந்தவனை அவளும் அடையாளம் கண்டு கொண்டாள்...!
நேற்று தன்னை கலாய்த்தவன் இவன்தான்...கலாய்த்ததோடு தன்னை
கருவாச்சி என்றும், பொண்டாட்டி என்றும்
அழைத்தவன் இவன்தான் என்று கண்டு கொண்டவளுக்கு நேற்றைய கோபமும் சேர்ந்து கொண்டது.
அவனை ஓரப்பார்வையால், கோபமாக பார்த்து
முறைக்க, அவனோ அங்கு பொதிகை
என்று ஒருத்தி இருப்பதையே கண்டு
கொள்ளாதவனாய் முதல்வரை பார்த்தபடியே அசட்டு சிரிப்பை சிரித்தவன்
“யெஸ்... அப் கோர்ஸ் சார்... நம்ம பசங்க எல்லாருமே நல்ல பசங்க சார்...
ராக்கிங் என்றெல்லாம் எப்பவும் போனதில்லை...” என்று சொல்லி சமாளிக்க, அதைக்கேட்ட பொதிகை இப்பொழுது
நேரடியாகவே அவனை வெட்டவா குத்தவா என்ற
லுக்கில் எரிக்கும் பார்வை பார்த்து வைத்தாள்.
அவள் முறைப்பதை
ஓரக்கண்ணால் கண்டவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு பொங்கி வந்தது.
“ப்பா...கண்ணகியே தோத்துடுவாங்க போல...இப்படி முறைக்கிறாளே...இவ
கையில நான் தனியா மாட்டினேன் அவ்வளவுதான்...” என்று தனக்குள் சிரித்துக்கொண்டான்.
வெற்றிமாறனை முறைத்து பார்த்துவிட்டு மீண்டும் முதல்வரை
பார்த்தவள்,
“ஸாரி சார்... இந்த கல்லூரி சீனியர் மாணவர்கள் மீது நீங்கள் வைத்திருந்த
நம்பிக்கையை உடைக்க வேண்டியதாகிவிட்டது...” என்று கசப்புடன் சொல்ல,
“வாட் யூ மீன்? “ என்றார் முதல்வர்
தன் புருவத்தை சுருக்கி யோசனையோடு...
“சார்...என் பெயர் பொதிகை....” என்று நிறுத்த,
“பொ...தி...கை.....” என்று ஒவ்வொரு எழுத்தாக சொல்லி பார்த்தவன்
“வாவ்...சூப்பர் பெயர் தான்... பெயரை சொல்றப்பயே அப்படியே அந்த
பொதிகை மலைக்கே போன மாதிரி பீல் ஆகுதே...” என்று தனக்குள்ளே சிலாகித்து கொண்டான்
வெற்றிமாறன்.
“இவள் பெயர் அனிதா...நாங்க ரெண்டு பேரும் ஃபர்ஸ்ட் இயர்
ஸ்டூடண்ட்ஸ். கிராமத்தில் இருந்து
முதன்முறையாக இங்க சிட்டிக்கு படிக்க வந்திருக்கிறோம்.
ராக்கிங் பண்றோம் பேர்வழி என்று ஒரு கும்பல் இவளை மோசமாக நடத்தி
இருக்கிறாங்க.
அதைக்கண்டு ரொம்பவும் பயந்து
போய் விட்டாள். இந்த கல்லூரியே வேண்டாம் சொந்த
ஊருக்கே போய் விடுவதாக அழுகிறாள்.
உங்களுக்கே தெரியும் சார்... கிராமத்தில் இருக்கும் மாணவர்கள், குறிப்பாக பெண்கள், இந்த மாதிரி கல்லூரியில் படிக்க வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு
வரவேண்டியிருக்கிறது.
நன்றாக படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கி இருந்தாலும், இவ்வளவு தூரம் பொம்பள புள்ளையை அனுப்ப மாட்டோம் என்று இன்னுமே
எத்தனையோ கிராமத்து பெற்றோர்கள் மறுத்து விடுகிறார்கள்.
இதுமாதிரி எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த மாதிரி
நகரங்களில் இருக்கும் கல்லூரியில் படிக்க எங்களை அனுமதிக்கிறார்கள்.
இங்கு வந்தாலும், இங்கிருக்கும்
மாணவர்கள் எங்களை கேவலமாக நடத்துவதினாலும், பட்டிக்காடு என்று துச்சமாக மதிப்பதாலும், கூடவே ராக்கிங் என்று
வேதனை படுத்துவதையும் தாங்க முடியவில்லை.
இவளைப் போல எத்தனையோ பேர், இதை எல்லாம் சமாளிக்க முடியாமல் சூசைட் பண்ணிக்
கொள்கிறார்கள். சிலர் படிப்பே வேண்டாம்
என்று மூட்டை கட்டிக் கொண்டு சொந்த ஊருக்கே சென்று விடுகிறார்கள்.
அப்படி நடக்கக் கூடாது என்றுதானே ராக்கிங் இருக்க கூடாது என்று
சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனாலும் இங்கே
மறைமுகமாக ராக்கிங் நடந்து கொண்டுதான் இருக்கிறது சார். நீங்கதான் சரியான ஆக்சன்
எடுக்க வேண்டும்.
அப்பதான் இவளைப்போல
மாணவிகள் தைர்யமாக இங்க படிக்க முடியும்...” என்ற படபடவென்று பொரிந்து வேதனையோடு சொல்ல, அதுவரை தன் அழுகையை நிறுத்தி வைத்திருந்த அந்த பெண்ணும் இப்பொழுது
மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.
அதைக்கண்ட முதல்வர் அதிர்ந்து போய் அவர்களை சமாதானபடுத்தியவர்
“நான் பார்த்துக்கிறேன் மா.. இதுவரை இப்படி நடந்ததில்லை.
கல்லூரியிலயே ஆன்ட்டி ராக்கிங் ஸ்க்வாட் என்ற குழு ஏற்பாடு செய்திருக்கிறொம். இந்த
மாதிரி ராக்கிங் செய்வர்களை கண்டிக்கவும் அவர்களை என்னிடம் புகார் செய்யவும்
ஏற்பாடு செய்திருக்கிறேன்.
அதுக்கு தலைவன் வெற்றிமாறன் தான்...சரி உங்களை ராக்கிங் பண்ணினவர்களை
அடையாளம் கட்ட முடியுமா? “ என்று முதல்வர் கேட்க, பொதிகையின் பார்வையும்
அனிச்சையாய் வெற்றிமாறன் இடம் சென்றது.
அவனோ எங்கே அவள் தன்னை காட்டிக் கொடுத்து விடுவாளோ என்று கலவரமானவன், கண்களால் ஜாடை காட்டி சொல்ல வேண்டாம் என்று மன்றாடினான்.
அதன் அர்த்தத்தை புரிந்து
கொண்டவள், அவனை முறைத்து
பார்த்துவிட்டு தன் பார்வையை மாற்றிக்
கொண்டவள், தன் அருகில் நின்று இருந்த அனிதாவை பார்த்து
“சொல்லு அனிதா...உன்னை
ராக் பண்ணினவர்களை அடையாளம் தெரியுமா? “ என்று கேட்க, அப்பொழுதுதான்
வெற்றி மாறனுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
“எப்படியோ
இப்போதைக்கு நம்மளை நேரடியா பிரின்ஸி கிட்ட போட்டு கொடுக்கலை...” என்ற நிம்மதி
மூச்சு விட்டான்.
அப்படி சொல்லி இருந்தாலும் பெரிதாக கண்டு கொண்டிருக்க மாட்டான்... ஆனால் இதுவரை காத்து
வந்த குட் ஸ்டூடன்ட் என்ற பட்டம்தான் பறந்து போயிருக்கும்.
இதுதான் கடைசி வருஷம். இந்த கல்லூரியை விட்டு போகிறவரைக்கும்
வாங்கின நல்ல பெயரை காத்துக்கொள்ள
வேண்டும் என்றுதான் எண்ணினான்.
அதுக்கு தகுந்த மாதிரி பொதிகையும் இவனை காட்டி கொடுக்காமல்
காத்து விட நிம்மதியாக
இருந்தது.
அதோடு இவன் கேங் ஒரு பொண்ணை அழ வைக்கும் அளவுக்கெல்லாம் போக
மாட்டார்கள்.. இது ஒருவேளை வேற யாராவது செய்த வேலையா இருக்குமோ என்று ஆராய
ஆரம்பித்தான்.
பொதிகை சொன்னதை கேட்ட
அனிதாவும்
“சரியாக தெரியலை சார்... ஆனால் பார்த்தால் அடையாளம் கண்டுகொள்ள முடியும்னு நினைக்கிறேன்...” என்று
அனிதாவும் சொல்ல இப்பொழுது வெற்றிமாறனுக்கு முழுமொத்த நிம்மதியாக இருந்தது.
ஆனாலும் இந்த பொண்ணை அழ
வைக்கும் அளவுக்கு மோசமாக நடந்துகொண்டவர்கள் மீது கோபம் பொங்கி வந்தது.
பொதுவாக அவன் கேங்கில், அவன் இருந்தால், ஜூனியர்களை கொஞ்சமாக கலாய்ப்பது உண்டு. அதற்கு மேல்
அவர்களுடன் நண்பர்களாகி விடுவார்கள்.
இப்படி அழ வைக்கும் அளவுக்கு போக மாட்டார்கள்... அப்படி போகவும் விடமாட்டான் வெற்றிமாறன்.
இன்று அவன் இந்த
கருவாச்சி இடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று அவர்களுடன் சேராமல் ஓடி வந்து விட, அதுவே அவனுக்கு
வினையாகி வந்து நின்றது.
“நான் இல்லை என்றதும் கொஞ்சம் ஓவரா போய்ட்டானுங்களா? இல்லை இது வேற யாரோ செய்த வேலையா? “ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தான் வெற்றிமாறன்.
அனிதா சொன்னதைக்கேட்ட முதல்வரும்
“சரிமா... நீ ஒன்னும் கவலைப்படாத... என் கவனத்திற்கு கொண்டு
வந்துட்டிங்க இல்ல. இனிமேல் நான் பார்த்துக்கிறேன்..
வெற்றி... இந்த பொண்ணை ராக்கிங் பண்ணினவங்க யாருனு உடனே
கண்டுபிடிக்கணும். அவங்க மேல உடனே சிவியரா
ஆக்சன் எடுக்க வேண்டும். இதை வளர விடக்கூடாது.
முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும். ஃபைன்ட்
அவுட் தெம் ஃபாஸ்ட்...” என்று கட்டளையிட, அவனும்
“ஸ்யூர் சார்.. சீக்கிரம் கண்டுபிடிச்சு உங்க முன்னாடி
நிறுத்தறேன்...” என்று உறுதியுடன்
வாக்களித்தான் வெற்றிமாறன்.
பின் பொதிகையை பார்த்தவர்,
“இந்த மாதிரி நடப்பதை என் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு ரொம்ப
தேங்க்ஸ் மா... பெண்கள் எல்லாம் உன்னைப்போல இப்படித்தான் போல்டாக இருக்க வேண்டும்
. கீப் இட் அப் பொதிகை...” என்று
பாராட்டியவர், அனிதாவிடம் திரும்பி,
“பாருமா... உனக்கு ஒரு கஷ்டம், அநியாம நடக்கும்பொழுது உன் தோழி பொதிகையை போல தைர்யமாக
எதிர்த்து நின்று சமாளிக்க வேண்டும். இப்படி கண்ணை கசக்குவதால் நீ உன்னையே பலவீனமாக்கி கொள்கிறாய்.
இப்படி அழாமல் தைர்யமாக உன் கண் முன்னால் நடக்கும் தவறை தட்டி
கேட்கணும். இனிமேல் இந்த மாதிரி அழக்கூடாது...”
என்று சமாதானம் சொல்லி, கூடவே
அறிவுரைகளையும் சொல்லி அனுப்பி
வைத்தார்.
*****
அடுத்த ஒரு மணி நேரத்தில் அனிதாவை ராக்கிங் பண்ணி
இருந்த அத்தனை பேரும் முதல்வர் அறையில் அவரின் முன்னால் நின்றிருந்தனர். நிறுத்தி இருந்தான்
வெற்றிமாறன்.
அனிதா மட்டும் அன்றி இன்னும் நிறைய பேர் இந்த ராக்கிங் ஆல் பாதிக்கபட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி
இருந்தனர். அதைக்கண்டதும் வெற்றியின் மனம் சுட்டது.
தங்களுடைய அற்ப நேர சந்தோஷத்திற்காக அடுத்தவர்களை நோகடிக்க
வைப்பது, வேதனைப்பட வைப்பது
எவ்வளவு பெரிய தப்பு என்று புரிந்தது.
சிலபேர் ஜாலிக்காக ஜூனியர்களை கலாய்ப்பதும், கிண்டல் அடிப்பதும் அவனுக்கு தெரிந்து இருந்ததுதான். ஆனால் அது
ஜூனியர் மாணவர்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று இப்பொழுது உணர்ந்து கொண்டான்.
தங்களின் கிண்டல் கேலிகளை ஒரு சிலர் ஜோவியலாக எடுத்துக் கொண்டாலும் ஒரு
சிலரோ அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாவது புரிந்தது.
மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு தானும் அந்த மாதிரி தப்பை தெரியாமல் செய்து
கொண்டிருந்த மடத்தனம் அந்த நொடியில் புரிந்தது.
நல்ல வேளையாக பொதிகை, சரியான நேரத்தில்
அந்த தவறை சுட்டி காட்டியதால் தான் அவனால் விழித்துக்கொள்ள முடிந்தது என்று
பொதிகைக்கு மனதார நன்றி சொன்னான்.
அதோடு அவன் அறிந்திராத இன்னொன்றையும் கண்டு கொண்டான்.
*******
முதல்வர் அறையில் இருந்து வெளி வந்தவன், நேராக தன் நண்பர்களிடம் சென்று விசாரிக்க, அப்பொழுதுதான்
தெரிந்தது அந்த அனிதாவை ராக்கிங் செய்தது அவர்கள் இல்லை என்று.
அப்படி என்றால் யார் செய்திருப்பார்கள் என்று ஆராய, அப்பொழுதுதான் அந்த கல்லூரியில் இன்னொரு கேங் இருப்பது
தெரிந்தது. அதன் தலைவனாய் அகமத் இருந்ததும் தெரிய வந்தது.
அகமத், வடமாநிலத்தை சேர்ந்தவன். வெளிமாநில கோட்டாவில், அண்ணா யுனிவர்சிட்டியில் சிவில் இஞ்சினியரிங் படித்து
கொண்டிருந்தான்.
வெற்றிமாறனைப் போலவே அகமத் ன் பின்புலமும் பெரிதுதான். பேருக்காக, பி.டெக் டிகிரிக்காக படிக்க வந்தவன். அந்த கல்லூரியில்
வெற்றிமாறனின் புகழ் எங்கும் ஓங்கியிருக்க, அதைக்கண்டு பொறாமை கொண்டான் அகமத்.
அதனாலயே மாணவர் சங்க தேர்தலில் வெற்றி மாறனை எதிர்த்து
போட்டியிட்டான்.. ஆனால் வெற்றி கிடைத்தது வெற்றிமாறனுக்குத்தான்.
அதிலிருந்தே அவனை எப்படியாவது பழி வாங்கவேண்டும் என்று காத்து
கொண்டிருந்தான் அகமத். அதில் ஒன்றுதான் இந்த ராக்கிங்.
******
இன்று காலையில் முதலாமாண்டு மாணவர்களின் பல்கலைக்கழக
வளாகத்தின் நுழைவாயிலில் அமர்ந்திருந்தனர்
அகமத் கேங்.
அப்பொழுது தயக்கத்துடன், கண்களில் மிரட்சியுடனும் உள்ளே நுழைந்த அனிதாவை கண்டதும் , அவளின் முகத்தில் இருந்த வெகுளித்தனத்தை கண்டதும் , வழக்கமான கிண்டல்
கேலியோடு நிறுத்திக் கொள்ளாமல் , கொஞ்சம்
அந்தரங்கமாக அவளை சீண்டி இருந்தனர் அகமத் குழுவினர்.
அதை சகிக்க முடியாமல் தான் அனிதா அழ ஆரம்பித்து விட்டாள்.
அதே நேரம் அந்த வழியாக வந்த பொதிகை , மரத்தடியில் அமர்ந்து அழுது கொண்டு இருந்த அனிதாவை கண்டதும், அவளிடம் சென்று விசாரிக்க, முதலில் தயங்கினாலும் பின் நடந்ததை சொல்லிவிட்டாள் அனிதா.
அதைக்கேட்டு கோபம் கொண்ட பொதிகை, அவளை இழுத்துக்கொண்டு நேராக முதல்வரின் அறைக்கே
சென்றுவிட்டாள்.
தன் விசாரணையில் அகமத் கேங் ஐ பற்றி தெரிந்ததும், உடனே எல்லாரையும் பிடித்து மிரட்டி இழுத்துக்கொண்டு வந்து
முதல்வரின் அறையில் நிறுத்திவிட்டான் வெற்றிமாறன்.
அதோடு தன் நட்பு வட்டத்தில் இருந்தும் சிலபேரை அழைத்து வந்து
முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வைத்தான்.
கூடவே இனிமேல் யாரும் ஜூனியர் மாணவர்களை சாதாரணமாக கூட கிண்டல்
அடிக்க கூடாது என்று கட்டளை இட்டுவிட்டான்.
முதல்வரும் அதையே அனைவருக்கும் சொல்லி இதுதான் முதலும் கடைசியுமாக
இருக்க வேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
அகமத் மட்டும் வெற்றிமாறனை எரித்து விடுவதை போல வஞ்சத்துடன் முறைத்து
பார்த்துவிட்டு சென்றான்..!