மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Saturday, December 31, 2022

கனவே கை சேர வா-17

 


அத்தியாயம்-17

 

அன்று:

வன்  சொன்ன மாதிரியே அடுத்த வாரம் இறுதியில் தன் மகளை அழைத்துக் கொண்டு நாமக்கல் சென்றான் ராசய்யா..!

அங்கிருக்கும் ஒரு பிரபலமான தனியார் கோச்சிங் சென்டருக்கு சென்றனர் இருவரும்..!

அதன் நுழைவாயிலில்   நம்பர்-1 என்று போட்டு சென்ற வருடம் முதலாவதாக வந்திருந்த மாணவியின்  புகைப்படத்துடன் கூடிய பெரிய கட்டவுட் ஐ பார்த்ததும் ராசய்யாவுக்கு  கொஞ்சம் நிம்மதியானது

தன் மகளின்  போட்டோவும் இதே மாதிரி பெரிய கட் அவுட்டாக வர வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டவன்  அந்த சென்டரின்  முதல்வரை சந்தித்தான்..!  

இந்த வருடம் நீட் கட்டாயம் என்று  தீர்ப்பாகி விட, டாக்டராக வேண்டும் என்று கனவுடன் இருந்த நிறைய மாணவர்கள்...! இப்பொழுது இந்த தனியார் கோச்சிங் நிறுவனங்களை நோக்கி படை எடுக்க ஆரம்பித்து இருந்தனர்..!

அதனால் அந்த கோச்சிங் சென்டரில் மக்கள் கூட்டம் அலை மோதியது..!

மக்களிடையே இருக்கும் டிமான்ட் ஐ பார்த்ததும், அந்த நிறுவனமும் திடீரென்று அந்த வாரத்தில் இருந்து தன் கட்டணத்தை உயர்த்தி விட்டனர்..!

இப்பொழுது இருக்கும் கட்டணத்தை கேட்டதும் ராசய்யாவும் கண்ணை கட்டியது..!

ஒரு லட்சம் சேர்க்கவே அவனுக்கு நாக்கு தள்ளியது..! அவன் எப்படி அந்த காசை சேர்த்தான் என்று பூங்கொடியிடம்  கூட சொல்லவில்லை..!  

அவளும் எப்படி எப்படியோ தோண்டி துருவி கேட்டு பார்த்து விட்டாள்..!

“அது எப்படியோ  வந்தது..!  நீ அதை வீடு..எல்லாம் நான் பாத்துக்கிறேன்..! ”  என்று முறைத்து அவள் வாயை அடைத்து விட்டான்.

இப்பொழுது லட்சத்திற்கு மேலாக காசு கேட்கவும் அவனிடம் இப்பொழுது பணம் இல்லை.

தன் மகளின் முன்னால் அதை சொல்ல மனம் வராமல்,  ஒரு நிமிடம் தன் மகனை வெளியே அனுப்பிவிட்டு அந்த சென்டரின் முதல்வரிடம் தன் நிலையை எடுத்துச் சொன்னான்.!  

அதோடு தன் மகளின் திறமையையும், பத்தாம் வகுப்பில் அவள் வாங்கியிருந்த மதிப்பெண்ணையும் எடுத்து சொல்லி, எப்படியாவது அவளை அந்த கோச்சிங் கிளாஸில் சேர்த்துக்க சொல்லி மன்றாடினான்..!

அவரும் தன் நெற்றியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி,  கொஞ்சம் யோசித்துவிட்டு

“ஆல் ரைட்... உங்க பொண்ணு டென்த் ல  நல்ல மார்க் வாங்கியிருக்கறதனால நாங்க கொஞ்சம் கன்சிடர் பண்றோம்..! நீங்க போன வாரம் இருந்த பீஸ்ஐயே கட்டுங்க...” என்று சொல்ல,  ராசய்யாவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது..!   

ஏதோ இந்தவரைக்குமாவது இறங்கி வந்தார்களே  என்று எண்ணியவன், கையோடு  எடுத்துச் சென்ற பணத்தை கட்டினான்..!

வேகாத வெய்யிலில்  வியர்வை சிந்தி சம்பாதித்த காசு..! அதுவும் லோக்கல் மார்க்கெட்டில் வாழைத்தார்  வித்த காசு என்பதால், சில நோட்டுக்கள் கசங்கி இருந்தது..!

அந்த கசங்கிய நோட்டுகளை பார்த்ததும், ஒரு நொடி முகத்தை சுளித்தார் அந்த உரிமையாளர்..!

அடுத்த நொடி, கசங்கி இருந்தாலும் காசு காசு தான் என்று வேகமாக எடுத்து கல்லாவுக்குள்  போட்டுக் கொண்டவர், பின் இளையவளையும் அழைத்து  அந்த பயிற்சி மையத்தின் விதிமுறைகளை...அங்கு வைக்கப்படும்  தேர்வைப் பற்றி எல்லாம் விளக்கினார்..!  

ராசய்யாவுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை..!  ஆனாலும் தன் மகளோடு அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்து விட்டு வெளியே வந்தான்..!

******  

ன்றிலிருந்து நீட் தேர்வுக்காக  தயாராக ஆரம்பித்தாள் பெண்..!

ஆரம்பத்தில் ரொம்பவே தடுமாறிப் போனாள்..!  

இதுவரை அவள் படித்த முறை வேறு..! இந்த நீட் தேர்வுக்கு  தயார் செய்யும் முறை முற்றிலும் வேறாக  இருந்தது

இப்பொழுது அவள் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் எனும் பொழுது ரொம்பவும் கஷ்டப்பட்டாள்..!  

அதோடு அவள் வகுப்புக்கு சேர்ந்த அடுத்த வாரத்தில் இருந்தே கோச்சிங் சென்டரில் வாரம் தோறும் தேர்வு வைத்தனர்..!  அதில் அவளின் மதிப்பெண் ரொம்பவுமே குறைவாக வந்தது

மற்ற மாணவர்கள் ஓரளவுக்கு ஏற்கனவே தயார் பண்ணி இருக்க,  அவர்களால் நன்றாக மார்க் வாங்க முடிந்தது..!  

இதுவரை பள்ளியில்  எப்பொழுதும் முதல் ரேங்கில் வந்து கொண்டிருந்தவள்..!  இப்பொழுது இந்த டெஸ்டுகளில் மதிப்பெண் குறைந்து கடைசி ரேங்கில்  வர,  அதிர்ந்து போனது பெண்..!

அதுவே தன் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லாமல் போக காரணமாகியது..!

ஒவ்வொரு முறை டெஸ்ட்டிலும் மதிப்பெண் குறைவாக  பெறவும், வீட்டிற்கு வந்ததும்  தன் தந்தையை கட்டிக் கொண்டு ஓ வென்று கதறி தீர்த்தாள்..

“என்னால முடியாதாப்பா..?   இந்த டெஸ்ட்லயே என்னால மார்க் வாங்க முடியலையே..! உங்க பொண்ணால டாக்டர் ஆக முடியாதாப்பா?  உங்க கனவை நிறைவேற்ற முடியாதாப்பா? “  என்று கதறி தீர்க்க,  அந்த ஆறடி ஆண்மகனும் தன் மகளோடு சேர்ந்து அழுதான்..!  

“அப்படி எல்லாம் இல்லடா கண்ணம்மா..!  உன்னால முடியும்..!  நீ இப்பதான அந்த க்ளாஸ்க்கு போய் இருக்க.  அதனால ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும் டா குட்டிமா... போக போக சரியாகிடும்..!  

அப்பாக்கு கூட விவசாயத்துல கால் வச்சப்ப ஆரம்பத்துல  ஒன்னுமே தெரியாது..! இப்ப  நல்லா பண்ணிருக்கேன் இல்ல... அதுமாதிரி உனக்கும் வந்திடும்டா...

நீயும் மத்த பசங்கள மாதிரி... இல்ல இல்ல அவங்களை விடவே முதலாவதா வருவ...” என்று அவனுக்குத் தெரிந்த உதாரணத்தை சொல்லியே அவளை சமாதானம் படுத்த முயன்றான்..!

அப்பொழுது கொஞ்சம் மனசு தேறி படிக்க ஆரம்பிப்பாள்..!  

ஆனால் அதற்கு அடுத்த வாரம் வந்த தேர்வில் அதேபோல மதிப்பெண் குறைவாக வர,  மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்து விடுவாள்..!

தன் மகளின் வேதனையையும், அதைக்கண்டு தன் கணவன் படும் பாட்டையும் கண்டு பூங்கொடிக்கும் வேதனையாகத்தான் இருந்தது..!

இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு  உடலையும், மனதையும் நோகடித்து இந்த டாக்டர் படிப்பு தேவையா என்று   ஒரு நொடி யோசித்தாள் பூங்கொடி..!

அதையே தன் கணவனிடம் சொல்லி பார்க்க, அடுத்த நொடி அவளை எரிக்கும் பார்வை பார்த்து வைத்தான்..!

ஏன் டி.. உனக்கு கொஞ்சமாச்சும் மண்டையில மசாலா இருக்கா... என் புள்ள பிறந்ததில் இருந்தே டாக்டராகணும்னு கனவோடு வளர்ந்தவ..!  நம்ம ஊரு நர்ஸ் கிட்ட கேட்டு எப்படி ஊசி போடுறது?   எந்த வியாதிக்கு எந்த மாத்திரை கொடுக்கணும்னு  எல்லாமே  இப்பவே கத்துகிட்டா..!    

இப்பவே கால் டாக்டர் டி அவ..! அப்படிப்பட்ட என் புள்ளைக்கு டாக்டர் சீட் கிடைக்கலன்னா அப்புறம் என்னத்துக்கு அந்த டாக்டர் படிப்பு...” என்று அவள் மீது எரிந்து விழ,   அதன் பிறகு வாயை திறக்கவில்லை பூங்கொடி..!

எப்படியோ போய் தொலைங்க என்று திருப்பிக்கொண்டு போய்விட்டாள்..!

******

வாரம் ஐந்து நாட்கள்,  காலையில் சீக்கிரம் எழுந்து படித்துவிட்டு, பின் பள்ளிக்குச் சென்று மாலை வீடு திரும்பியதும் மீண்டும்  புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு இரவு ஒரு மணி   வரைக்கும் படிப்பாள்.  

காலையிலும் ஐந்து  மணிக்கே எழுந்து மீண்டும் புத்தகத்தை திறந்து வைத்துக் கொள்வாள்..!

அதேபோல வார விடுமுறையிலும்  சீக்கிரமே எழுந்து கோச்சிங் கிளாஸ் சென்று விடுவாள்..! இரவு வீடு திரும்ப வெகு நேரமாகிவிடும்..!   

சரியான  சாப்பாடு,  நல்ல தூக்கம் இல்லாமல்  அவளின் உடல் மெலிய ஆரம்பித்தது..!

உடல் சோர்வு மட்டுமல்லாமல் மனச்சோர்வும் சேர்ந்து கொண்டது..!

அதுக்கு காரணம்...  பள்ளி தேர்வுகளிலும்  அவள் மதிப்பெண்கள் குறைய ஆரம்பித்தது..!

எப்பொழுதும் வகுப்பில்  முதலாம் இடத்தில்  இருப்பவளின் மதிப்பெண்கள் கொஞ்சமாக கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது..!  

அதைக்கண்டு ஹெச்.எம் உட்பட அனைவருமே அதிர்ந்து போயினர்..! பெண்ணுக்குமே பெரும் அதிர்ச்சிதான்..!

அதுவரை   பள்ளி பாடத்தை மட்டும்  நன்றாக அதுவும் உற்சாகத்தோடு  படித்து வந்ததால் அவளால் எளிதாக முதல் ரேங் வாங்க முடிந்தது..!  

இப்பொழுதும் பள்ளி பரிட்சை, நீட் பரிட்சை என இரண்டையும் போட்டு உழற்றிக்கொள்ள, அவளால் இரண்டையுமே  சரியாக பண்ண முடியவில்லை..!

அதோடு இடையில் மீண்டும் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்க, அது கொஞ்சம் மாணவர்களுக்கு நிம்மதியை  இருந்தது..!

ஆனாலும் நீட் வருமா வராதா என்ற கேள்வியுடனே நாட்கள் செல்ல, மாணவர்களும் அந்த குழப்பத்துடனேயே நாட்களை கடத்தி வந்தனர்..!

பெண்ணும்  எப்படியோ கண்ணீரும், அழுகையுமாய் பள்ளித்தேர்வுக்கும், நீட் தேர்வுக்கும் அரைகுறையாக பிரிப்பேர் பண்ணி வந்தாள்..!

அதே குழப்பத்துடனே அந்த வருடம் பள்ளி இறுதித்தேர்வும்  வந்துவிட்டது

அதே நேரம் அந்த வருடம் நீட் தேர்வு கட்டாயம் என்று மீண்டும் தீர்ப்பாகி போனது..!  

அந்த கவலையினால், அவளால் பள்ளி ஆண்டுத் தேர்வில் கவனத்தை செலுத்த முடியவில்லை..!

எப்பொழுதும் வினாத்தாள் கொடுத்ததும்   கடகடவென்று ஒரு துள்ளலுடன் எழுதி முடிப்பவள்..! இன்று அவளுக்கு இருந்த மன உலைச்சளால் அவளால் சரியாக எழுத முடியவில்லை..!  

ஒவ்வொரு பேப்பரையும் எழுதி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ஓவென்று அழுகை..! அதனால்  அடுத்த பரீட்சையும் அவளால் சரியாக பண்ண முடியவில்லை..!

*****  

ள்ளி ஆண்டு தேர்வு முடிந்ததும், எப்படியோ மனதை தேற்றிக்கொண்டு நீட் தேர்வுக்காக கொஞ்சம் மும்முரமாக தயார் பண்ண ஆரம்பித்தாள்..!

ஆனாலும் அவளுக்கு போதிய காலம் பத்தவில்லை..!  இந்த தேர்வுக்காக பதினொன்றாம் வகுப்பில் இருந்தே தயார் பண்ணி இருந்தால், ஓரளவுக்கு நன்றாக தயாராகி இருக்கலாம் என்று அப்பொழுது புரிந்தது..!

ஆனாலும் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாதே என்று வேதனையுடன் தயார் பண்ணிக்கொண்டிருந்தாள்..!

அடுத்து கொஞ்ச நாளிலயே  நீட் தேர்வும்  வந்து விட,  ரொம்பவும் பயத்துடனே சென்று பரிட்சை ஹாலில்  அமர்ந்தவளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது..!  

வினாத்தாளில் எழுத்துக்கள் எல்லாம் தலைகீழாக தெரிய,  ஒரு நிமிடம் அப்படியே மேஜையில் கவிழ்ந்து விட்டாள்..!  

அங்கிருந்த இன்விஜிலேட்டர் ஓடி வந்து அவளை தட்டி எழுப்பி,  தண்ணீரை அருந்த வைக்க,  எப்படியோ அதில் கொஞ்சம் தெளிந்தவள், பின் கண்ணை நன்றாக தேய்த்து விட்டுக் கொண்டு  கேள்விகளுக்கு விடையளிக்க முயன்றாள்..!  

அவள்  தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காவது.. தன் தந்தைக்காவது  எப்படியாவது இந்த பேப்பரை நன்றாக எழுதி விடவேண்டும் என்று வரவழைத்த உற்சாகத்துடன்  கடகடவென்று விடையளிக்க ஆரம்பித்தாள்..!

அவள் பயந்த மாதிரி அப்படி ஒன்றும் கடினம் இல்லைதான்..!  

ஆனால் அவளுக்கு இருந்த பயத்திலும், ஏற்கனவே கொஞ்ச நேரத்தை வீணடித்து விட்டதால், அவளால் கொடுத்த நேரத்தில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடியவில்லை

எத்தனையோ வினாக்களுக்கு விடை தெரிந்த பொழுதும், நேரம் இல்லாததால் அவளால் விடையளிக்க முடியவில்லை..!  

பரிட்சை முடிந்து விட்டதாய் மணி அடித்ததும் அனைத்து மாணவர்களும் விடைத்தாளை கொடுத்த  பின்னரும் அவள் மட்டும் இன்னுமாய் எழுதிக்கொண்டிருந்தாள்..!

பேப்பரை பிடுங்க வந்த இன்விஜிலேட்டரிடம்  ஒரே ஒரு நிமிஷம் சார் என்று கெஞ்ச, அவரும் கொஞ்சம் மனம் இறங்கி அனுமதி வழங்கினார்..!

எத்தனையோ மாணவர்கள் இரண்டு வருடமாக கஷ்டபட்டு படித்திருந்தாலும்  கடைசி நேரத்தில் இந்த மாதிரி ஏதாவது ஆகிவிட்டால்...அவர்களால்  அந்த பேப்பரில் ப்ரசென்ட் பண்ண முடியாமல் போய் விட்டால் அவர்களின் எதிர்காலமே திசை மாறி விடுகிறது..!  

இந்த ஒரு தேர்வை  வைத்துத்தான்  மாணவர்கள் மருத்துவர்  ஆவதற்கு தகுதியானவர்களா  இல்லையா என்று முடிவு செய்வதில் அவருக்குமே  நம்பிக்கை இல்லை..!

எத்தனையோ மருத்துவர் ஆவதற்கு தகுதியான மாணவர்கள்...! கடைசி நேரத்தில் ஏதோ ஒரு தடங்களில் பரிட்சை சரியாக எழுத முடியாமல் போய்விட்டால் அவர்கள் மருத்துவர் ஆக தகுதியில்லை என்று முத்திரை குத்தி விடுகிறது நம்முடையை எஜுகேசன் சிஸ்டம்..!

அந்த இன்விஜிலேட்டர், அந்த பெண்ணவளின் முகத்தில் இருந்த தீவிரத்தையும், எப்படியாவது அனைத்தையும் விடையளித்துவிட வேண்டும் என்று இருந்த வேகத்தையும் பார்த்து கொஞ்சம் மனமிறங்கி அவளுக்கு கூடுதலாக ஒரு ஐந்து நிமிடத்தை கொடுத்தார்

தேர்வு விதியையும் மீறித்தான் செய்தார்..!

அந்த ஐந்து நிமிடத்தில் ஓரளவுக்கு விடையளிக்கு முடிந்தது பெண்ணாள்..

ஆனாலும்  இன்னும் நிறைய வினாக்கள் விடையளிக்க முடியாமல் போய்விட்டது..! அதற்கு மேலும் காத்திருக்க முடியாது என்று விடைத்தாளை பறித்துக்கொண்டார்..!

*****

ப்படியோ  ஓரளவுக்கு எழுதிவிட்டு வெளியில்  வர,  அங்கே அவளுக்காகவே ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த தன்  அப்பா அம்மாவைக் கண்டதும் மீண்டும் கண்கள் கலங்கி போனது..!  

ஓடிச்சென்று தன் தந்தையின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து குழுங்கினாள்..!

அவளின் செய்கையில் இருந்தே அவள் தேர்வை சரியாக எழுதவில்லை என்பது புரிய,  மனம் கலங்கினாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் தன் மகளை  சமாதானம் படுத்தினான் ராசய்யா..!

அதே நேரம் பரிட்சை ஹாலில் இருந்து வெளிவந்த அத்தனை மாணவ மாணவியர்கள்  முகத்திலும் ஒரு திருப்தியின்மை...  கவலை...  ஏமாற்றம் குடிகொண்டிருந்தது..!  

அனைவருமே எப்படியாவது தாங்கள் மருத்துவர் ஆகிவிட வேண்டும் என்று கனவுகளுடன் காத்திருக்க,  திடீரென்று நீட் என்ற ஒரு தேர்வை கொண்டு வந்து அனைத்து மாணவர்களின் கனவையும் கேள்விக்குறியாக்கிவிட்டதை  உணர்ந்து கொள்ள முடிந்தது ராசய்யாவால்..!

அங்கு இருந்த முக்கால்வாசி பேர் கண்களில் கண்ணீருடன் தங்கள் பெற்றோரை நாடிச் சென்றனர்..!  

அவர்களை பார்த்து இன்னுமாய் வேதனை கொண்டான் ராசய்யா..!

தன் வேதனையை மறைத்துக்கொண்டு தன் மகளுக்கு ஆறுதல் சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்தான்..!

*****  

ப்படியோ தேர்வு முடிந்து விட்டது என்று நிம்மதியாக இருக்க முடியவில்லை ராசய்யா தம்பதியினரால்..!  

அடுத்த நாளிலிருந்து அவனின் செல்ல மகள் ரொம்பவும் சுருண்டு கொண்டாள்..!  

எப்பொழுதும் கலகலவென்று எல்லோரிடமும் வாய்  அடிப்பவள்..!  பட்டாம்பூச்சியாய் சுற்றி வருபவள்... இப்பொழுது அத்தனையும் துறந்து தனக்குள்ளே சுருண்டு விட்டாள்

தன் மகளை அப்படி காண வேதனையாக இருந்தது.

அதுவரை மருத்துவ படிப்பை பற்றி பெரிதாக தெரிந்திராவன்..!  இப்பொழுது அதை பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தான்.  

அவனுக்குத் தெரிந்த ஆசிரியர்களிடமும்,  பண்ணையார் வீட்டிலும் சென்று விசாரிக்க,  அப்பொழுதுதான் அவனுக்கு இன்னும் கொஞ்சம் விஷயம் புரிந்தது..!  

Share:

1 comment:

Followers

Total Pageviews