அத்தியாயம்-18
அடுத்த இரண்டு
ஆண்டுகளிலும் அதே கதைதான் தொடர்ந்தது.
பொதிகையை எந்த விதத்திலும் தொந்தரவு
செய்யக்கூடாது என்று வெற்றி தன் காதலை தனக்குள்ளே மறைத்துக்கொண்டு அவளின் படிப்பு
முடிய காத்திருந்தான்.
இந்த நிலையில் தான் வெற்றிமாறனை பற்றிய
பின்புலம் பொதிகைக்கு தெரிய வந்தது.
அவன் பெரும் வசதி மிக்கவன். ஜமீன் பரம்பரையை சேர்ந்தவன் என்று கேள்வி
பட்டதும் அதிர்ந்து போய் விட்டாள் பொதிகை.
வெற்றியை போலவே பொதிகையின் மனதிலும் அவன்
மீதான பாதிப்பு இருக்கத்தான் செய்தது. அவன் மறைந்து நின்று அவளை பார்த்து
ரசிப்பது கண்டு அவள் உள்ளம் துள்ளி
குதிக்கும்.
அவளுக்கு தெரியும்...!
அவளுக்காகத்தான் அவன் நேரடியாக வந்து அவன்
காதலை சொல்ல வில்லை என்று.
அவள் மட்டும் ஒரு ஓரப்பார்வை பார்த்து
வைத்தால், அடுத்த நொடி வெற்றி
அவள் முன்னே வந்து நின்றிருப்பான்.
மற்றவர்களை போல அவர்களும் காதல் பறவைகளாக
சிறகடித்து பறக்கலாம் தான்.
ஆனாலும் அவளுக்கென்று சில கனவுகள், கடமைகள், லட்சியங்கள் அவள் கண் முன்னே வரிசை கட்டி நிக்க, அதை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு அவன் பின்னால் சுற்ற அவளுக்கு பிடிக்கவில்லை.
அதோடு அவளுக்கு இந்த காதல், கத்திரிக்காய் எல்லாம் செட்டாகாது என்று முடிவு செய்தவள்
அவனிடம் இருந்து தள்ளியே நின்று கொண்டாள்.
ஆனாலும் மனதில் ஒரு மூலையில் தினமும் அவனை
பார்த்து ரசிக்க தவறவில்லை.
இந்த நிலையில் வெற்றிமாறனை பற்றிய தகவல்கள்
கிடைத்ததும் ரொம்பவும் அதிர்ந்து போனாள்.
அப்பொழுதுதான் அவள் எட்டிபிடிக்க முடியாத
எட்டாத உயரத்தில் இருப்பவன் என்று புரிந்தது.
முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படக்கூடாது
என்று தன் தலையில் அடித்து தனக்குத்தானே அறிவுறுத்திக்கொண்டவள், அன்றிலிருந்து
அவன் பார்வையில் படாமல் ஒளிந்து கொண்டாள்.
அவன் எப்பொழுது கல்லூரிக்கு வருவான்...
எந்த வழியில் வருவான்...எங்கே நிப்பான்.. என்றெல்லாம் ஏற்கனவே அறிந்து இருந்ததால், அந்த நேரத்தில் அவன் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டாள்.
முதல் இரண்டு நாட்கள் அவள் கண்ணில் படாமல்
போகவும், பயந்து போனான்
வெற்றி.
ஒருவேளை அவளுக்கு உடம்புக்கு எதுவும்
வந்துவிட்டதா என்று தவிப்புடன் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தான்.
அந்த சமயம் தனியாக மதிய வகுப்புக்கு சென்று
கொண்டிருந்த அனிதாவை மடக்கி விசாரிக்க, முதலில் அதிர்ந்தாலும் பின் சமாளித்துக்கொண்டு
“அவளுக்கு ஒன்னும் இல்ல ணா...நல்லாதான் இருக்கா...
அவளுக்கு படிக்க நிறைய இருக்கும் போல. இன்டென்ஷிப்புக்கு
வேறு ப்ரிப்பேர் பண்ணிகிட்டு இருக்கா...அதான் இந்த நேரம் க்ளாஸ்க்கு வராமல்
ஹாஸ்டல் லயே தங்கிக்கறா...” என்று தட்டு தடுமாறி சொல்லி வைத்தாள் அனிதா.
அதைக்கேட்டு புருவங்கள் முடிச்சிட, அவளை கூர்ந்து பார்த்தான் வெற்றி.
“ஆமா...நீயும் அவள் க்ளாஸ்தானே...உனக்கு
படிக்க எதுவும் இல்லை? “ என்று கண்கள்
இடுங்க கேட்க, அவனின் நேர்
பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறியவள்
“வந்து ... அது வந்து... ஆங்... நான்
ஏற்கனவே படிச்சிட்டேன் ணா...” அசடு வழிய பெண் புன்னகைக்க, அவள் ஏதோ சமாளிக்கிறாள் என்பது நன்றாகவே புரிந்தது.
“லுக் அனிதா... உன் ப்ரெண்ட் கிட்ட சொல்லி
வை... என்கிட்ட இருந்து அவள் ரொம்ப நாளைக்கு ஓடி ஒளிய முடியாதுனு. என்கிட்ட
எப்படியும் ஒரு நாள் மாட்டுவா தானே... அன்னைக்கு இருக்கு அவளுக்கு கச்சேரி என்று
சொல்லி வை....”
என்று வெறுப்புடன் சொல்லி விட்டு
விறுவிறுவென்று சென்று விட்டான் வெற்றிமாறன்.
*****
மாலை வகுப்புகள்
முடிந்து திரும்பி ஹாஸ்டலுக்கு வந்த அனிதா, தன் படுக்கையில் அமர்ந்து முதுகுக்கு ஒரு தலையணையை வைத்து
சுவற்றோடு சாய்ந்து அமர்ந்து கொண்டு, மடியில்
வைத்திருந்த லேப்டாப்பில் எதையோ தீவிரமாக படித்து கொண்டிருந்த பொதிகையை பிடித்துக்
கொண்டாள்.
“ஏன் டி எரும.. ஏன் டி இப்படி பண்ற? “ என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள் அனிதா.
திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு
நிமிர்ந்து பார்த்தவள் , தன் தோழி, கோபத்துடன் இடுப்பில் கை வைத்து முறைத்தபடி நிற்பதை கண்டு
பக்கென சிரித்தவள்,
“என்னடி? மதியம் நல்லா மொக்கிட்டு, க்ளாஸ்க்கு நல்லாதானே போன? இப்ப ஏன் இப்படி காளியாத்தா மாதிரி வந்து நிக்கற? “ என்று சிரித்தாள் பொதிகை.
அதைக்கண்டு இன்னுமாய் கடுப்பானவள், மீண்டும் முறைத்து
“ஏன் டி இப்படி பண்ற?” என்றாள் கோபமாக.
“எப்படி பண்றேன்?” என்றாள் பொதிகை புரியாமல்.
“புரிஞ்சுகிட்டே புரியாத மாதிரி நடிக்காத
டி... ஏன் இந்த நாடகம்? “ என்றாள் மீண்டும்
முறைத்தவாறு.
“என்ன நாடகம்? என்ன நடிக்கிறேன்?” என்றாள் உள்ளுக்குள் சிரித்தபடி.
அனிதா எதைப்பற்றி கேட்கிறாள் என்று
தெரிந்து கொண்டே தெரியாதவளை போல அவளிடம் வம்பிழுத்தாள் பொதிகை.
“போதும் டி.. வடிவேல் மாதிரி இந்த என்ன
போட்டு பேசறதை விடு...”
“என்ன விடறது? “ என்று மீண்டும் சிரிக்காமல் கேட்டு வைக்க, அதில் கொல வெறியான அனிதா, அருகில் கிடந்த ஒரு புத்தகத்தை தூக்கி பொதிகை மீது எறிந்தாள்.
அவளோ அதை லாவகமாக பிடித்துக் கொண்டவள்
“நோ வயலன்ஸ் செல்லம்...பேச்சு பேச்சாதான்
இருக்கணும்...பேசிகிட்டு இருக்கும்பொழுது பொசுக்குனு எதுக்குடி ஆயுதத்தை எடுக்கற? “ என்று கெஞ்சலுடன் ஆரம்பித்து செல்ல கோபத்துடன் முடித்தாள்
பொதிகை.
அறை வாசலில் நின்று கொண்டிருந்த அனிதா, தன் பின்னால் மாட்டி இருந்த பேக் பேக்கை தூக்கி அவள் கட்டிலில்
போட்டு விட்டு, பொதிகையின் அருகில் வந்து அவள் கட்டிலில் ஏறி அவள்
அருகில் அமர்ந்து கொண்டவள்
“உனக்கும், வெற்றி அண்ணாவுக்கும் நடுவுல என்னாச்சு டி? “ என்றாள் அக்கறையுடன்.
“வெற்றி அண்ணாவா? அது யாரு டி? உனக்கு ஒரே ஒரு
அண்ணா... அவர் பேர் குமார் தானே..” என்று தாடையை தடவியபடி யோசிக்க, அவள் முதுகில் ஓங்கி அடித்தவள்,
“ஹ்ம்ம்ம் நான் எந்த வெற்றியை சொல்றேன் னு
மேடம்க்கு தெரியலையாக்கும்? “ என்றாள்
முறைத்தபடி.
“தெரியலையே டி...ஒருவேளை நம்ம க்ளாஸ்மேட்
வெற்றிச்செல்வனையா? இல்லை நேற்று நாம
மீட் பண்ணின பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட் வெற்றிவேலா?
இரண்டு பேருமே உனக்கு அண்ணாஸ் ஆக
மாட்டானுங்க.. அப்ப வேற யாரு? ” என்றாள் பாவமாக
முகத்தை வைத்துக்கொண்டு யோசிப்பவளாய்...
“ஹ்ம்ம்ம்ம் எல்லா வெற்றியையும் சொன்னியே
எரும... மூனு வருசமா இந்த அரை லூசை ஒரு
முழு லூசு சுத்தி சுத்தி வந்து லவ்ஸ் விட்டுகிட்டு இருக்கே.... அந்த
வெற்றிமாறனை மட்டும் ஏன் செல்லம் சொல்லாமல் விட்டுட்ட...” என்று நக்கலாக சிரித்து
அவள் கன்னத்தை கிள்ளினாள் அனிதா.
அதைக்கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து
அனிதாவை பார்த்தவள்
“அனி.....? “ என்று கேள்வியாக பார்க்க,
“ஹீ ஹீ ஹீ உங்கள் காதல் காவியம் எனக்கு
தெரியும் டி... எனக்கு மட்டும் அல்ல.. நம்ம
காலேஜ்க்கே தெரியுமாக்கும்... பின்ன வெற்றி அண்ணா எப்படிபட்ட பெரிய ஆள்... அவர்
ஒரு லூசை லவ்ஸ் விட்டா அது எல்லாருக்கும் தெரியாமலயா இருக்கும்...
அவர் உன்னை லவ் பண்றதும் தெரியும்.
உனக்காகவே இங்க எம்.டெக் சேர்ந்ததும் தெரியும்... நீ போகும் பாதையில் மனசு போகுதே
மானேனு மனசுக்குள்ளயே பாடிகிட்டு தினமும் மறைஞ்சு நின்னு உன்னை சைட் அடிப்பதும்
தெரியும்....
அதைவிட டாப், இந்த அம்மணியும் அப்படியே அவரை பார்க்காத மாதிரி ஓரக்கண்ணால் பார்த்து
ரசிச்சுகிட்டே கடந்து போறதும் தெரியும் டி...” என்று சிரித்தாள் அனிதா...
அதைக்கேட்டு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது
பொதிகைக்கு.
யார் வாய்க்கும் தான் அவல்
ஆகிவிடக்கூடாது...யாரும் தன்னை பற்றி தப்பாக பேசிவிடக்கூடாது என்றுதான் அவள்
வெற்றியிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை.
வெற்றி எத்தனையோ முறை அவளை நெருங்கி வர
முயன்றபொழுதெல்லாம் ஏதாவது காரணத்தை சொல்லி அவனிடம் நின்று பேசாமல் ஓடி வந்து
விடுவாள்.
அவனுக்கும் அவளுடைய மனநிலை புரிந்ததால்தான்
அதன் பிறகு அவளிடம் நேரில் வந்து பேசாமல் தள்ளி நின்று பார்த்து ரசித்தது.
“ஆனால் வெற்றி
விசயம், இவள் வரைக்கும்
தெரிஞ்சிருக்கிறதே..அப்படி என்றால் அனிதா சொல்வதைப்போல எல்லாருக்கும் தெரிந்துவிட்டதா? “ என்று மனம் சஞ்சலப்பட்டது.
“சை... எப்படி கவனமாக இருந்தாலும் இப்படி
ஒரு இக்கட்டான நிலை வந்து தொலைத்து விட்டதே.. எனக்கு காதல் கீதல் எதுவும் இல்லை. எதுவும்
வரக்கூடாது...வரவும் விடமாட்டேன்..” என்று தலையை சிலுப்பிக் கொண்டவள், அனிதாவை முறைத்து
“ஏன் டி... ஒரு அழகான வயசுப் பொண்ணு நடந்து
போனால், எல்லா வயசு பசங்களும் திரும்பி
பார்த்து ரசித்து பார்ப்பது வழக்கம்தானே. அது மாதிரிதான் உன் வெற்றி அண்ணன்
நொண்ணனும் என்னை பார்த்திருப்பான்.
அதுக்கு போய் ஏன் காதல் , கத்திரிக்காய் னு கதை கட்டிகிட்டிருக்க... போடி..போய் உன் வேலையைப் பார்...” என்று முறைத்தாள் பொதிகை.
“அடிப்பாவி... இது உனக்கே அடுக்குமா? “ என்று திருப்பி முறைத்தாள் அனிதா.
“என்ன அடுக்குமா?” என்றாள் பொதிகை தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி.
“உன்னை
பார்த்து வயசு பொண்ணுனு சொல்லு... ஒத்துக்கறேன்.. ஆனால் அழகான வயசுப்பொண்ணு னு சொல்றியே... அது
அடுக்குமா? எனக்கு நெஞ்சுவலியே
வந்துடுச்சுடி...
எனக்கு என்ன டவுட் னா, உனக்கும், வெற்றி அண்ணா க்கும் ஆறு வித்தியாசம்... இல்ல..இல்ல..
அறுபதாயிரம் வித்தியாசம்.
உதாரணத்துக்கு உன் கலரையே எடுத்துக்க...
வெற்றி அண்ணா வெள்ளை வெளேர்னு வெள்ளக்கார
துரை மாதிரி எவ்வளவு அம்சமா, அமுல் பேபி...சாக்லெட் பாய் மாதிரி ...ஹீரோ கணக்கா இருக்கார்.
ஆனால் நீயோ கருகருனு கருவண்டு மாதிரி இருக்க.
ரெண்டு பேரும் சேர்ந்து போனா கருப்பு
வெள்ளை படம் பார்க்கிற மாதிரிதான் இருக்கும்.
அப்புறம் அவர் ஹைட் என்ன?... நீயோ குள்ளக்கத்திரிக்கா மாதிரி அவர் தோளுக்கு கூட இல்லை.
இப்படி அடிப்படையிலயே இத்தனை வித்தியாசம் இருக்க, அவருக்கு போய் எப்படி டி உன் மேல காதல் வந்தது.
அதை விட பெரிய டவுட்... உன்னை விட நான் எம்புட்டு
கலரா, அழகா இருக்கேன்... உன்
கூடவேதான் ஒன்னா சுத்தறேன். ஆனால் என்னை பார்க்காமல் அது எப்படி டி உன்னை மட்டும்
பார்த்து உன்னிடம் மயங்கி போனார்.
இதுதான் காதலுக்கு கண்ணு இல்லை என்பதோ? “ என்று அவள் தன் புலம்பலை அடுக்கிக்கொண்டே போக, அதுவரை அவளிடம் ஜாலியாக கலாய்த்துக் கொண்டிருந்த பொதிகையின்
முகம் வாடிப்போனது.
அவள் சொன்ன நிறத்தில், அவளை கருப்பு என்று சுட்டிக்காட்டியதில் அடிபட்டு போனாள்
பொதிகை.
இப்பொழுது மட்டும் அல்ல... அவள் ஊரிலும் சரி... பள்ளிக்கு சென்ற பொழுதும் சரி..
எல்லாரும் அவளின் நிறத்தை வைத்து கேலி செய்து சிரித்திருக்கிறார்கள்.
அது இன்னுமே தொடர்ந்து கொண்டு இருப்பதுதான்
வேதனையாக இருந்தது.
அதுவும் அவளின் நெருங்கிய தோழியே அவளை
கருப்பு என்று சொல்லிக்காட்ட, அவளுக்கு நெஞ்சை
அடைத்தது.
கண்ணோரம் கரித்துக்கொண்டு வர, அந்த நேரம் அவள் கண் முன்னே வந்து நின்றார் அவள் அப்பா...
“கண்ணம்மா? எதுக்கு டா செல்லம் கண் கலங்கற? கருப்புதான் நம்ம மண்ணோட கலருடா குட்டிமா. நீ அப்பா மாதிரி...
உன்னை யாராவது கருப்புனு சொன்னா, கண்ணை கசக்க கூடாது... ஆமாம்.. நான் கருப்புதான். இப்ப அதுக்கு
என்ன? வெள்ளையா பொறந்த
நீங்க சாதிக்கிறதை விட, கருப்பா இருக்கும்
நான் சாதிக்கத்தான் போறேன்...
என்று நெஞ்சை நிமிர்த்தி அவங்க முகத்துக்கு
நேரா சொல்லி அவங்க மூஞ்சியில கரிய பூசணும்... ஒரு நாளும் கண்ணை கசக்க கூடாது..நம்மளை
நாமே தாழ்வா எண்ணிவிடக்கூடாது...”
என்று தன் மார் மீது போட்டுக்கொண்டு அவர் சொல்லி கொடுத்து இருந்த பாடம் நினைவு வர, அடுத்த கணம் வெளிவர இருந்த கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு தன்
முழு உயரத்துக்குமாய் நிமிர்ந்து தன் தோழியை பார்த்தவள்,
“ஹ்ம்ம்ம் தெரியுதுல்ல... உனக்கே தெரியுதுல்ல..
எனக்கும் அவருக்கும் செட்டாகாதுனு புள்ள பூச்சி உனக்கே தெரியுதுல்ல. அப்ப அவருக்கு
தெரியாதாக்கும். என்னை சைட் அடிக்கிறேன் னு சுத்திகிட்டு சீன் போடறதெல்லாம் சும்மா டைம் பாஸ்க்கு.
கல்லூரி லைப் முடிஞ்சதும் பாசிங் க்ளௌட்ஸ்
மாதிரி இதெல்லாம் காணாம போய்டும் டி.
போய் சொல்லு உன் அண்ணன் நொண்ணன் கிட்ட...
என்னை சுத்தறத விட்டுபுட்டு உருப்படியா
அவர் ஜோலிய பார்க்க சொல்...” என்று
பொரிந்து தள்ளியவள் மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள் பொதிகை.
******
மறுநாள் காலை வகுப்பறையில் அமர்ந்து கொண்டு பேராசிரியர் விளக்கி கொண்டிருந்த “டேட்டா
ஸ்ட்ரக்சர்..” பாடத்தை ஆழந்து கவனித்துக் கொண்டிருந்தாள்
பொதிகை.
மற்ற எல்லா பேப்பரையும் விட, டேட்டா ஸ்ட்ரக்சர் ரொம்பவும் முக்கியமானது.
இன்டென்ஷிப்புக்கோ, இல்லை கேம்பஸ் செலக்சன்ஸ் க்கு வரும் எல்லா நிறுவனங்களும்
டேட்டா ஸ்ட்ரக்சர். ல் தான் அதிக கேள்விகளை கேட்பார்கள் என்பதால் அதை ஆர்வமாக
கவனித்துக் கொண்டிருந்தாள் பெண்.
அப்பொழுது அவளுடைய அலைபேசிக்கு அழைப்பு வர, பெயர் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வரவும், டக்கென்று அதை கட் பண்ணினாள்.
அதுவோ அதோடு அடங்காமல், மீண்டும் ஒலிக்க, மீண்டும் கட்
பண்ணினாள்
வகுப்பறையில் தன் அலைபேசியை சைலன்டில்
வைத்து இருந்ததால் பேராசிரியருக்கு தெரியவில்லை.
ஆனாலும் அடிக்கடி அழைப்பு வருவது அவளுக்கு டிஸ்டப்ர்ட்
ஆக இருக்க, உடனே அதை ஸ்விட்ச்
ஆப் பண்ணி வைத்து விட்டாள்.
சற்று நேரத்தில் பேராசிரியர் தன் வகுப்பை
முடித்துவிட்டு வெளியேற , அடுத்த கணம் புயலென
உள்ளே வந்தான் வெற்றிமாறன்.
பொதிகையின் பாரா முகத்திற்கும், அவனை விட்டு அவள் விலகி செல்லும் இந்த திடீர்
மாற்றத்திற்கான காரணம் புரியாமல், வேலையிலும் கவனம்
செலுத்த முடியாமல் தவித்த வெற்றி, அலுவலகத்தில் இருந்து நேராக கல்லூரிக்கு வந்து விட்டான்.
நேராக அவளின் இருக்கைக்கு சென்றவன், அவள் முன்னால் இருந்த மேஜையில் தன் இரு கையையும் ஊன்றி, நேருக்கு நேர் அவளை முறைத்து பார்க்க, திடீர் என்று தன்
முன்னே வந்து நின்றவனைக் கண்டு திடுக்கிட்டு போனாள் பெண்.
அதிர்ச்சியோடு அவனை பார்த்து வைக்க,
“உன் கூட பேசணும். வெளியில் வா...” என்று வெற்றி அவளை அதட்ட, வகுப்பில் இருந்த எல்லாரும்
திரும்பி அவர்களைப் பார்த்தனர்
பொதிக்கோ சங்கடமாக
இருந்தது
அனிதா சொன்னது போல ஏற்கனவே ஓரளவுக்கு இவள் மீதான வெற்றியின் காதல் எல்லாருக்கும் தெரிந்தே இருந்தது தான்.
ஆனால் இவள் அதை ஏற்று கொள்ளாதவளாய், யாரோ என்னவோ சொல்லிவிட்டு போகட்டும் என்று கண்டு கொள்ளாமல் தன்
தோளை குலுக்கி விட்டு சென்று விடுவாள்.
இதுவரை இருவரும் ஒன்றாக
வெளியில் சுற்றியது கூட இல்லை.
இப்பொழுது அவன் இப்படி
நேரில் வந்து தனியாக பேசவேண்டும் என்று அழைத்தால், இவளும் உடன் சென்றால்
ஏற்கனவே கதை, கற்பனையில்
இருவரையும் சேர்த்து வைத்து ஓட்டுவது நிஜம் ஆகி விடாதா என்று தவித்து, விதிர்விதிர்த்து போனாள் பொதிகை.
“எனக்கு கிளாஸ் இப்போ ஆரம்பிக்கப் போகுது.. நீங்க போங்க... “ என்று அவனை அகற்ற முயல,
அவனோ கொஞ்சமும் அசையாமல் அவளையே வெறித்து பார்த்தவன்,
“அதெல்லாம் அப்புறம் வந்து கவனிச்சுக்கலாம். நீ இப்ப என்கூட வா…” என்று சிடுசிடுத்தான்.
அதில் இன்னுமாய் அரண்டவள், அருகில் அமர்ந்து
இருந்த அனிதாவை பார்க்க, அவளும் போய் வா
என்று கண்ணால் சைகை செய்தாள்.
ஆனால் பொதிகை இன்னுமே தயங்க
“உன்னை ரேப் எதுவும் பண்ணிட மாட்டேன் டி. ஒரு ஃபைவ் மினிட்ஸ் பேசணும். அவ்வளவுதான்... வெளியில் வா...
இல்லைனா நம்ம பெர்சனல் மேட்டரை இப்படி எல்லார் முன்னாடியும் பப்ளிக்கா பேச வேண்டி
இருக்கும்... ஸோ கம் வித் மி... “ என்றவன்
அவளின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் விடுவிடுவென்று வெளியே நடந்தான்.
பொதிகையும் அதற்குமேல் மறுக்க
முடியாமல் மந்திரத்திற்கு கட்டுண்டவளாய், இருக்கையில்
இருந்து எழுந்து அவன் பின்னே சென்றாள்.
*******
அந்த கல்லூரி வளாகத்திலேயே இருந்த ஒரு சிறிய அம்மன்
கோவிலுக்கு சென்றான் வெற்றிமாறன்.
“இங்கே எதுக்கு
போறான்? “ என்று யோசித்தவாறு ஓட்டமும் நடையுமாக அவனை பின்
தொடர்ந்தாள் பொதிகை.
கோவில் உள்ளே சென்றவன், சந்நிதானத்தின் முன்னால் நின்று கொண்டு அவளை பார்த்தவன், இங்கே வா என்று பார்வையால் அழைக்க,
அவளும் உள்ளுக்குள் பயந்தவாறே உள்ளே சென்று அவனை விட்டு சற்று
தள்ளி நிற்க, அடுத்த கணம் அவன் கழுத்தில் இருந்த ஜமீன் பாரம்பரிய
செயினை கழட்டி, கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் கழுத்தில்
போட்டிருந்தான் வெற்றி.
அடுத்து அங்கே இருந்த கம்பிகள் போட்டிருந்த தடுப்பின் ஓரமாக மாட்டியிருந்த
ஒரு கிண்ணத்தில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் வகிட்டில் வைத்தவன்,
“இங்க பாருடி…மற்றவங்க மாதிரி உன் முன்னால் மண்டியிட்டு, ரோஜாவை நீட்டி, ஐ லவ் யூ னு எல்லாம்
எனக்கு சொல்ல வராது.
நான் வாய் திறந்து சொல்லாமலேயே உனக்கும் என் காதல் புரியும். அதே போல உன் மனதிலும் நான் இருக்கேனு எனக்கும் தெரியும். உன்
படிப்பு முடியத்தான் நான் இதுவரைக்கும்
காத்துகிட்டிருந்தேன்.
அதோடு உன்னை வந்து சந்தித்து தினமும் கண்ணே மணியேனு கொஞ்ச இப்ப
எனக்கு நேரமும் இல்லை. உன்னை பார்க்கும்
அந்த ஒரு சில நிமிடங்களே எனக்கு போதும். மனம் நிறைந்து போகும் .
நான் பாட்டுக்கு ஓரமா நின்னுதான உன்னை சைட்
அடிச்சுகிட்டிருந்தேன். நீயும் நான் பார்ப்பதை ரகசியமா பார்த்து ரசித்ததும் தெரியும். நடுவில்
திடீர்னு உனக்கு என்ன குழப்பம் வந்தது?
என்னமோ எனக்கு வந்திருப்பது காதல் இல்லை. வெறும் லஸ்ட் னு
சொன்னியாம். பாசிங் க்ளௌட்ஸ் னு உன்னை கை கழுவி விட்டுட்டு போய்டுவேன் னு நக்கலா
சொன்னியாம்.
நீ எனக்கு வெறும் பாசிங் க்ளௌட்ஸ் இல்லடி. என் மனதில் அழிக்க
முடியாத ஆணியாக, என் இதயத்தில் பதிந்து விட்ட என் சரிபாதி டி நீ . நான்
பெரும் வசதி படைத்தவன் என்று தான் ஒதுங்கி போனியா?
என் வசதி எல்லாம் உனக்கு முன்னால் எனக்கு வெறும் தூசு டி.
இந்த ஜென்மத்தில் நீதான்
எனக்கானவள்... என்னவள்... இதை முதன்முதலாக உன்னைப் பார்த்த நொடியிலேயே
தீர்மானித்து விட்டேன். அதையே இப்பொழுது
செயலிலும் காட்டி விட்டேன்.
நீ இப்பொழுது என் பொண்டாட்டி… ஆயிரம் பேர் கூடி நின்று…அட்சதை தூவி, தாலி கட்டினாதான்
கல்யாணம் னு இல்லை. எப்பொழுது என் மனதில் நீயும், உன் மனதில் நானும் வந்துவிட்டோமா, அப்பொழுதே நாம் இருவரும்
கணவன் மனைவி தான்.
அதை வெளிப்படையாக உறுதிப்படுத்த தான் இந்த தாலி.
என்னை பொறுத்தவரை, இது தான் நான் கட்டின
தாலி. இதை நீ ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்
இந்த ஜென்மத்தில் நீ தான் என் மனைவி.
அதற்குப் பிறகு உன் இஷ்டம். என்னை உனக்கு பிடிக்கலைனா, இதை கலட்டி தூக்கி
போட்டுட்டு தாராளமா நீ வேற கல்யாணம்
பண்ணிக்கலாம். ஆனால் எனக்கு நீ மட்டும்தான்... உன் நினைவிலயே இந்த ஜென்மம்
வாழ்ந்திருப்பேன்.
அப்படி நீ என்னை , என் தாலியை மதிச்சு
இதை கலட்டாமல் இருந்தால், உன் படிப்பு முடிஞ்சதும் உரிமையோடு உன்னை என் வீட்டுக்கு
கூட்டிக்கிட்டு போய்டுவேன். இனிமேலும் என்னை
பார்த்து ஓடி ஒளியாத.
உன்னை பேருக்காக காதலித்து, கழட்டிவிட்டு செல்பவன்
இல்லை இந்த வெற்றிமாறன்.
உன்னை எப்பொழுதும் என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்கிறவன்
தான் இந்த வெற்றிமாறன். முடிவு உன் கையில்...” என்று படபடவென பொரிந்தவன், அவளின் பதிலுக்கு கூட காத்து இருக்காமல், விடுவிடுவென்று
அங்கிருந்து வெளியேறிச் சென்றான்.
திடீர் என்று நடந்து விட்ட அந்த சம்பவத்திலும் அவன் பேசிய பேச்சிலும் அதிர்ந்து போய் சிலையாக சமைந்து
நின்று விட்டாள் பொதிகை..!
Wow sema.....💗💗💗💗💗💗💗💗💗💗💗
ReplyDeleteThanks pa!
DeleteNext ud mam.????.. chilzee la regular update varume !!!!!! Indha sitla mattum regularaaa vara maatengudhu ??????.
ReplyDeletekonjam busy..will try to update regularly :)
Delete