மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Saturday, January 28, 2023

கனவே கை சேர வா-20

 


அத்தியாயம்-20

 

அன்று:

மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிறைய இருக்கின்றன என்று தெரியவர,  மகிழ்ச்சியானது ராசய்யாவுக்கு..!

ஒருவேளை தன் மகளுக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றால், எப்படியாவது தன் மகளை தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்த்து அவளை டாக்டராக்கி விடலாம் என்று நிம்மதி அடைந்தான்..!

ஆனால் தனியார் மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான கட்டணத்தை கேட்டதும் அவன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது

25 லட்சம் முதல்  40 லட்சம் வரை ஆகும்..!

அதுவும் பெரிய பெரிய மருத்துவ கல்லூரிகளில் ஒரு கோடி வரை கொடுத்து டாக்டர் சீட்டு வாங்குகிறார்கள் இன்று தெரியவர அவனுக்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்தது

அத்தனை லட்சத்திற்கு எங்கே போவான்?  

இத்தனைக்கும் பூங்கொடியும் கவர்மெண்ட் வேலை தான் என்றாலும் வி.ஏ.ஓ வேலைக்கு அதிக சம்பளம் வந்து விட வில்லை..!

சம்பளத்தோடு கூட கிம்பளம் வாங்கியிருந்தால்   இத்தனை லட்சங்களை சேர்த்திருக்கலாம் தான்..!

ஆனால் பூங்கொடி யாரிடமும் கை நீட்டியதில்லை.

ராசய்யாவும்  அதற்கு அனுமதித்ததில்லை..!  

அதனால் சேமிப்பு என்று பெரிதாகவும் இல்லை.

தருதலையாக சுத்திக்கொண்டிருந்தவன்..! திருமணத்திற்கு பிறகு அதுவும் அவன் மகள் உருவான பிறகுதான் இந்த விவசாயத்திலேயே ஈடுபட ஆரம்பித்தான்..!  

அப்படியும் இருந்த சேமிப்பை மலர்க்கொடி மற்றும் அன்பரசன் படிப்புக்காக செலவழித்தான்..!  

தணிகாசலம் வயலையும் சேர்த்து அவனே  பாடுபட அவர்களுடைய செலவையும் அவன்தான் ஏற்க நேர்ந்தது..!

கூடவே பூங்கொடி அக்கா பொற்கொடி...  இரண்டாவது குழந்தை பேருக்கு என்று தாய்வீட்டிற்கு வந்துவிட, அந்த  செலவையும் தணிகாசலத்தின் சார்பாக அவன்தான் ஏற்றுக்கொண்டான்..!  

மலர்க்கொடி படிப்பு முடிந்ததும் அடுத்து அவளின் திருமணம்..! தலை தீபாவளி...தலை ஆடி...தலை பொங்கல்...அடுத்து  பிள்ளை பேரு என்று வரிசையாக நின்றது செலவுகள்..!

அத்தனையும் முகம் சுளிக்காமல் அவன் தான் செய்து முடித்தான்..!

அடுத்ததாய் அன்பரசன் இப்பொழுது படிப்பை முடித்துவிட்டு அக்ரி ஆபீஸராக இருக்கிறான் தான்

ஆனாலும் இப்பொழுதுதான் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறான்..!  அவனிடம் அவ்வளவு பணம் இருக்காது.  என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே வீட்டிற்கு வந்தவன் தன் மனைவியிடம் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்க்கும் தன் யோசனையை சொல்ல,    அதிர்ந்து போனாள் பூங்கொடி..!

“அவ்வளவு பணத்துக்கு எங்க மாமா போறது? “ என்று கலக்கத்துடன் சொல்ல,

“கடன் வாங்கலாம்...” என்றான் எங்கோ வெறித்து பார்த்தபடி.

“யோவ் மாமா...  கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா?  இவ்வளவு காசுக்கட்டி அந்த டாக்டர் படிப்பத்தான் படிக்கணுமா?

நம்ம மலரு மாதிரி பேசாம என்ஜினியரிங் படிச்சுட்டு போலாம்..!  அவளுக்கு இப்ப என்ன குறைச்சல்?  

நாலு வருஷத்திலேயே படிப்பு முடிச்ச உடனே வேலை கிடைக்கலையா?  அந்த மாதிரி உன் பொண்ணு என்ஜினியருக்கு  படிச்சுட்டு போகட்டும்.  எதுக்கு இவ்வளவு காசு செலவு பண்ணனும்?

அதுவும் நம்ம கையில இல்லாமல் கடன் வாங்கி எதுக்கு பெரிய படிப்பை படிக்க வைக்கணும்? என்று தன் கணவனை கண்டிக்க,  ராசய்யாவின் முகமும் மீண்டும் யோசனைக்கு உள்ளானது.

தன் கணவனின் முகத்தில் இருந்த யோசனையை கண்டவள்..இன்னுமாய் அவனுக்கு எடுத்துச்சொல்ல முயன்றாள்..!  

குரலை தாழ்த்திக்கொண்டு,

“இங்க பாரு மாமா... கடன் வாங்கினதால எங்க அப்பா பட்ட கஷ்டம் இன்னுமா உனக்கு நினைவில்லை

அந்த மனுஷன் வாங்கின கடனுக்கு,  வட்டி கட்ட முடியாமல் என்னை அடமானம்  வைக்க இருந்தார்..!  

அது மாதிரி நீ உன் புள்ள படிப்புக்காக கடன் வாங்கி வச்சிட்டு கடைசியில அவளையே அடமானம்  வைக்கிற மாதிரி கொண்டு வந்துடாத...” என்று சொல்லி முடிக்கும் முன்னே, கோபம் தலைக்கேற ஏய் என்று அவளை அறைய கையை ஓங்கி விட்டான் ராசய்யா..!  

தன் கணவனின் செயலில் திடுக்கிட்டு அதிர்ந்து போய் நிற்க,  அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டவன்,  ஓங்கிய கையை வேகமாக இழுத்துக் கொண்டான்..!  

இதுவரை தன்னிடம் அதிர்ந்து  கூட பேசியிராத தன் கணவன்... கை ஓங்கும் அவளவுக்கு வந்துவிட்டதை கண்டு  அதிர்ந்து போனாள்..!

“எல்லாம் இவளால் தான்..!  இவளை டாக்டருக்கு படிக்க சொல்லி யார் அழுதா? இந்த குடும்பத்தின்  நிம்மதியே போச்சு...”  என்று தன் மகளை திட்டியபடி வாய்விட்டு ஒப்பாரி வைத்து புலம்பினாள் பூங்கொடி..!

அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்ட ராசய்யா,

“சரிடி... கடன் வாங்க வேண்டாம்..!  கடன் வாங்கினால் தானே அதுக்கு வட்டி கட்ட முடியாமல் போகும்..  பேசாம நம்ம வயலை வித்துடலாம்...”  என்று வேதனையோடு சொல்ல,  அதைக் கேட்டு இன்னுமாய் அதிர்ந்து போனாள் பூங்கொடி.

தன் கணவன் சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை..! அந்த வயலை அவன் எவ்வளவு மதிக்கிறான் என்று அவளுக்கு தெரியும்..!

அப்படிப்பட்ட வயல்காட்டை வித்துடலாம் என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட, பூங்கொடிக்குத்தான் நம்பவே முடியவில்லை..!

“என்னய்யா சொல்ற?  அதுதான் நமக்கு சோறு போடுற சாமி..!  அத போய் விக்க சொல்ற...”  என்று அதிர்ச்சியோடு கேட்க

“சொத்தை விட என் புள்ள சந்தோசம் எனக்கு முக்கியம் டி..!  பார்த்த இல்ல. புள்ள கொஞ்ச நாளா  எப்படி சுருண்டு கிடக்கிறா.  இவளை இப்படி பார்த்துகிட்டு  அந்த சாமி கொடுக்கிற சோறுதான்  உள்ள இறங்குமா?  

எனக்கு என் புள்ள சந்தோசம் முக்கியம்..!  அதான் நீ வேலைக்கு போற.  நானும் வயலை வித்துட்டு  பழையபடி கூலி வேலைக்கு போறேன்.  

என்ன ஒரு அஞ்சு வருஷம் என் புள்ளையை கஷ்டப்பட்டு படிக்க வைத்து விட்டால் போதும்...”  என்று சொல்லும் பொழுதே  அவனுக்கு தொண்டையை அடைத்தது.  

அந்த வயல் தான் அவனின் உயிர் மூச்சு..!  அதோடு அந்த வயலில் தானே அவன் மகள் ஜனித்தாள்.  அதை எப்படி விற்பது என்று தொண்டை அடைத்தது

பூங்கொடிக்கும் அதே எண்ணம்தான்.  அவளுக்கும் மனதை பிசைய

“மாமா நான் சொல்றேன்னு  தப்பா எடுத்துக்காத.  கொஞ்சம் பொறுமையா யோசி.  நீ சொல்றபடியே பாத்தாலும் வயலை வித்தா  கூட அவ்வளவு பணம் சேராது..!

எப்படியோ கடன ஒடன வாங்கி காலேஜ் ல  சேர்த்து விட்டாலும் அது இந்த வருஷத்துக்கான பீஸ் மட்டும்தான்.  அதே மாதிரி அடுத்த வருஷமும் குறைந்தது பத்து லட்சமாவது கட்டணும்.  

வருஷா வருஷம் அவ்வளவு காசு கட்ட நாம எங்க போறது?  அதை ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு.  நமக்கெல்லாம் தனியார் காலேஜ் ஒத்துவராது மாமா.  பேசாம அவளை  என்ஜினியரிங் படிக்க வைக்கலாம்...”  

என்று தன் கணவனை சமாதானப்படுத்த முயல, அதுவரை தாழ்ந்து இருந்தவன் மீண்டும் பொங்க ஆரம்பித்தான்...!  

“வாய மூடு பூங்கொடி... என் தலையை அடமானம் வச்சாவது என் புள்ளைய நான் டாக்டராக்கி காட்டுவேன்.  இந்த விஷயத்துல மட்டும் நீ தலையிடாத...”  

என்று மீண்டும் எரிந்து விழுந்தவன், வேகமாக கட்டிலில் இருந்து எழுந்து  அங்கிருந்த செருப்பை மாட்டிக்கொண்டு விடுவிடுவென்று வெளியே போய்விட்டான்..!

பூங்கொடியோ விக்கித்து போய் அமர்ந்து இருந்தாள்..!  

அறைக்கு உள்ளே கட்டிலில் குப்புறப் படுத்துக்கொண்டு ஏதோ யோசனையாய் இருந்த இளையவள்... வெளியில் நடந்து கொண்டிருந்த அவள்  பெற்றோர்களின் பேச்சை அவளும் கேட்டுக் கொண்டிருந்தாள்  தான்

அதுவும் அவள் தந்தை தனக்காக உயிராய் மதிக்கும் அந்த வயலை  விற்க தயாராகி விட்டதை எண்ணி தவித்துப் போனாள்.  

ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாய் ரிசல்ட் நல்லபடியாக வந்து விடக் கூடாதா?  செலவில்லாமல் கவர்மெண்ட் சீட்டு கிடைத்துவிட்டால் அதற்குப்பிறகு ஆகும் செலவை பார்த்துக் கொள்ளலாம்.  

“கருப்பணாரே...  ரிசல்ட் நல்லபடியாக  வரவேண்டும். எனக்கு ப்ரீ சீட் கிடச்சிடணும்...”  என்று தன் மனதிற்குள்ளே உரு போட்டுக்கொண்டாள்.  

அதோடு தான் இப்படி சுருண்டு கிடப்பது தான் தன் தந்தைக்கு வேதனையை அளிக்கிறது.  அவளால் அவர்களுக்குள்ளும் பிரச்சனை வருகிறது என்று அந்த வயதில் புரிய,  முடிந்தளவு தன்னை இயல்பாக்கி கொண்டது பெண்.  

அடுத்த நாளில் இருந்து வரவழைத்த புன்னகையுடன் தன்னைத் தேற்றிக்கொண்டு நடமாட ஆரம்பிக்க,  தன் மகளின் மாற்றத்தைக் கண்டு ராசய்யா கொஞ்சம் நிம்மதியுடன் நடமாடினான்.  

ஆனால் எப்படி பணத்தை புரட்டுவது என்பதிலேயே அவன் அலைந்து கொண்டிருந்தான்..!

பணத்துக்காக தன் தந்தை படும் கஷ்டத்தை பார்த்தவள், நேராக அவனிடம் சென்று   

“அப்பா...  நீ  பணத்துக்காக ஒன்னும் அலைய வேண்டாம்.  கண்டிப்பா எனக்கு ப்ரீ சீட் கிடைச்சுடும்...!  அதனால நீ  ஒன்னும் அலைய வேண்டாம்...”  என்று ஏதோ காரணம் சொல்லி,  தன் தந்தையை சமாதானப்படுத்தினாள் .

******

ப்படியோ நாட்கள் உருண்டோட,  பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்திருந்தது.  

கொஞ்சம் பயத்துடனேயே தான் தேர்வு முடிவை எதிர்பார்த்து இருந்தனர்..!  ஏனோ பத்தாம் வகுப்பில் இருந்த உற்சாகம் இந்த முறை இல்லை.  

ஆனாலும் ராசய்யா வழக்கம்போல முசிறிக்கு சென்று  பேப்பர் கிராமத்திற்கு வரும் முன்னே  வாங்கிவிட்டான்.  

ஆனால் எதிர்பார்த்தபடி அவளால் ஸ்டேட் பர்ஸ்ட் வரமுடியவில்லை.  அட்லீஸ்ட் மாவட்டத்திலயாவது முதலாவதாக வந்திருக்கிறாளா  என்று ஆசையாக பக்கத்தை புரட்ட, அதிலும் வேற ஒரு மாணவியின் பெயர்தான் இருந்தது.

அதை பார்த்து கொஞ்சம் அதிர்ந்துதான்  போனான் ராசய்யா..!  

தன் மகள்  எப்படியும் மாவட்டத்திலாவது முதலிடத்தை பிடித்து விடுவாள் என்று எண்ணி  இருந்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  

அதோடு தன்னாலேயே இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை என்றால் தன் மகள்  எப்படி தாங்கிக் கொள்வாள்?  

பள்ளியில் கூட நான்காவதாகத்தான் வந்திருந்தாள்.  

ஆரம்பப் பள்ளியிலிருந்து இன்றுவரை எப்பொழுதும் முதலாவதாக வந்து கொண்டிருந்தவள்..!  இப்பொழுது நான்காவதாய் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்க அதைக் கண்டு அவன் மனம் தவித்து போனது.  

அதைவிட பெரும் தவிப்பு இதை தன்மகள் எப்படி எடுத்துக் கொள்வாளோ  என்று கவலையாக இருந்தது.  

வாடிய முகத்துடன் வீட்டிற்கு வர,  பரபரப்புடன் ஓடி வந்து தன் தந்தையின் கையில் இருந்த பேப்பரை வாங்கிப் பார்த்தவள்  பலமாக அதிர்ந்து போனாள்.  

அடுத்த நொடி வழக்கம்போல தன் தந்தையின் இடுப்பை கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.

ராசய்யாவும் சேர்ந்து தன் மகளோடு அழுது புலம்ப, பூங்கொடிதான் அவர்கள் இருவரையும் அதட்டினாள்.  

“சை.. ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்தறிங்களா? பர்ஸ்ட்  மார்க் வாங்குவது எல்லாம் சும்மா.  இப்ப ஸ்டேட் பர்ஸ்ட் வந்துட்டா மட்டும்,  உடனே நம்ம பிரைம் மினிஸ்டர் பதவியை தூக்கி கொடுத்துவாங்களா என்ன?  

இந்த மார்க் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.  வாழ்க்கையில் சாதிக்க இதெல்லாம் ஒரு பொருட்டே  இல்லை

நானும் படிக்கிறப்போ மக்கா தான் இருந்தேன்.  இன்னைக்கு நானே ஒரு கவர்மெண்ட் எம்ப்ளாயி யா வேலை வரலையா?  

அதே மாதிரி என் கூட படிச்ச புள்ள...  முதல் மார்க் வாங்கினா.  இப்ப இடுப்பில ரெண்டு புள்ளையோட தினமும் சமையலறையில போராடிக்கிட்டு இருக்கா.  

அதனால பின்னாடி நம்மளுடைய எதிர்காலம் எப்படி வேணா மாறலாம்.  இந்த மார்க் இந்த ஒரு வருஷத்துக்கு கொண்டாடுவதற்கு மட்டும்தான்.  அப்புறம் அதை யாரும் கண்டுக்க மாட்டாங்க

ஸ்கூல் ஃபர்ஸ்ட் ஸ்டேட் ஃபர்ஸ்ட் அடுத்த வருஷத்துல இருந்து வேற ஒருத்தங்க வருவாங்க.  போன செட் மறந்து போகும்.  இதுக்காக போய் இவ்வளவு தூரம் உங்களை கஷ்ட படுத்திக்கிறீங்க...”  என்று அதட்டி வைக்க அவளின் அதட்டலில்  கொஞ்சம் தெளிந்தனர் இருவரும்.  

அவள் ஆயாவும் தாத்தாவும் வந்து தன் பேத்திக்கு ஆறுதலாக இருக்க,  மலரும் அன்பரசனும்  கூட அவளை  கிண்டல் செய்யாமல்,  பொதுவாக பேசி அவளை அந்த பாதிப்பிலிருந்து வெளிக்கொண்டு வர முயன்றனர்

எல்லாருடைய முயற்சியால் அப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தேறிவந்து இருக்க,  அதை கலைப்பதற்காக வந்து இறங்கியது அடுத்த இடி..!

*****

ள்ளிக்கூடத்தில் நான்காவதாக    வந்திருந்தாலும் மெயின் சப்ஜெக்ட் களில் நன்றாகத்தான் மதிப்பெண்களை வாங்கியிருந்தாள்.  

எல்லா பாடங்களிலுமே கொஞ்சம் மதிப்பெண்கள் குறைந்து இருந்தது. அவள் வாங்கிய  மதிப்பெண்ணிற்கு என்ஜினியரிங்,  அண்ணா யுனிவர்சிட்டிலேயே கிடைத்தது

முதல் 50 ரேங்கில் வந்திருந்தாள்.  

ஆனால் அடுத்து இன்னும் நீட் ரிசல்ட் வரவில்லை.  அதை வைத்துத்தான் மருத்துவர் சீட்டு முடிவு செய்யப்படும்.  

ஆனாலும் மீண்டும்  கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டுதான் இருந்தது

சென்ற வருடத்தை போல, அவளுடைய ப்ளஸ்டு  மதிப்பெண்ணை மட்டும் வைத்து பார்த்தால்,  தாராளமாக அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடும்

ஆனால் இந்த வருடம் நீட் கட்டாயம் என்று சொல்லிவிட,  இப்பொழுது அதன் முடிவை எதிர்பார்க்க வேண்டியதாயிருந்தது.

*****  

ப்படியும் அப்படியுமாய் நாட்கள் ஓடி மறைய, அன்றுதான் நீட் தேர்வின் ரிசல்ட் வந்தது

அன்பரசன் தன்னுடைய செல்போனிலேயே முடிவை பார்த்துக்கொள்ளலாம் என்பதாலும்,  அன்று விடுமுறை என்பதாலும்  ஊருக்கு வந்திருந்தான்.  

அவனும் நடந்ததை எல்லாம் தன் அக்கா மூலமாக தெரிந்து கொண்டு, தன் மாமாவின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டுதான் வந்தான்  

ஆனால் தன் மாமா பிடிவாதத்தை அவனால் தவிர்க்க முடியாது..! தடுக்கவும் முடியாது  என்று தெரியும்.  அதனால் அமைதியாகிவிட்டான்.

அன்று எல்லோருமே ராசய்யா வீட்டிற்கு வந்திருந்தனர்..!     

நீட் ரிசல்ட்க்காக காத்திருந்தனர். ராசய்யாவுக்குத்தான் ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்தது.  

ரிசல்ட் வெளியாகவும் அதுவும் எல்லோரும் ஒரே நேரத்தில் மதிப்பெண்ணை பார்க்க முயல சர்வர் டவுன் ஆகி போனது

வெப்சைட் ஓபன் ஆகாமல் போக,  அதுக்கும் ராசய்யா பல்லைக் கடித்தான்.  

எப்படியோ சற்று நேரத்தில் வெப்சைட் ஓப்பன் ஆகிவிட,  அவளின் போன் நம்பரை போட்டு முடிவை பார்க்க,  அதிர்ந்து போனான்  அன்பரசன்

ரொம்பவுமே குறைவாக வாங்கி இருந்தாள்.   ரேங்க் ரொம்பவுமே கம்மியாக இருந்தது.  அந்த மதிப்பெண்ணிற்கு எப்படியோ பாஸ்மார்க் வாங்கி இருந்தாள்.  

எல்லோரும் ஆவலுடன் அன்பரசன்  முகத்தை பார்க்க, அவனோ  சங்கடத்துடன் எல்லோரையும் பார்த்தவன்  இல்லை என்று தலையாட்ட அவ்வளவுதான்..!  

தன் மாமன் கையிலிருந்த அலைபேசியை வெடுக்கென்று பறித்தவள்... அதில் இருந்த மதிப்பெண்ணை பார்க்கவும் அவ்வளவுதான்..!  

அவளாலேயே நம்ப முடியவில்லை

அவ்வளவு குறைவாக வாங்கியிருந்தாள்.!  

அடுத்த கணம் தன் கையில் இருந்த அலைபேசியை தூக்கி எறிந்து விட்டு வேகமாக அறைக்குள் ஓடிப்போய் கதவை அறைந்து சாத்திக் கொண்டாள்..!  

தன் மகளின் செய்கையில் ஒரு நொடி ராசய்யா அதிந்ர்து சிலையாகிப் போனான்.  

அடுத்த நொடி, சுதாரித்துக் கொண்டவன்,  தன் மகன் விபரீத முடிவு எதுவும் எடுத்து விடுவாளோ என்று அஞ்சி பாய்ந்து சென்று கதவை தட்டினான்.  

மற்றவர்களும் ஓடிவந்து கதவை திறக்க முயல,  அதுவோ உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

அதைக்கண்டு இன்னும் அதிர்ந்தவன், தன் மகளிடம் கெஞ்ச ஆரம்பித்தான்..!  

கதவை திறடா குட்டிமா...! உன்னை எப்படியும் அப்பா டாக்டராக்கிடுவேன் .

இந்த கவர்மெண்ட் சீட்டு இல்லாட்டி போகட்டும்.  என் தலைய வித்தாவது உன்னை தனியார் காலேஜ் ல சேர்த்து டாக்டருக்கு படிக்க வைக்கிறேன்.  

அவசரப்பட்டு எதுவும் பண்ணிக்காத கண்ணம்மா..!  நீ போய் விட்டால், இந்த  அப்பா உசுரோடவே  இருக்க மாட்டேன்.  அப்பா உசுரு வேணுமா வேண்டாமா...” என்று கண்ணீரோடு கதவை வேகமாக தட்ட,  அப்பொழுதும் கதவு திறக்கவில்லை

அனைவருக்குமே  மனம் திக்கென்றது..!  

எத்தனையோ மாணவர்கள் மருத்துவம்  சீட்டு கிடைக்கவில்லை என்று உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் எல்லாம் நினைவு வர ராசய்யாவுக்கு பக்கென்றது

அப்பொழுதுதான் சிறுவயதில் இருந்தே இந்த படிப்பை படிக்கச் சொல்லி தன் மகளின்  மனதில் பதிய வைத்தது  தவறு என்று  புரிந்தது.

ப்ளஸ்டூ முடித்ததும் அவளுக்கு என்ன புடிக்கிறதோ? என்ன கிடைக்கிறதோ அதை  படித்துவிட்டு போகட்டும் என்றில்லாமல் அவள் ஒரு டாக்டர் தான் ஆகவேண்டும் என்று சொல்லி வந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று இப்பொழுது உரைத்தது..!

அப்படி சிறுவயதில் இருந்து கண்ட கனவு நிறைவேறாமல் போனால் அதை பிள்ளைகள் ஏற்றுக் கொள்வது எவ்வளவு கஷ்டம் என்று இப்பொழுது புரிந்தது..!

ஆனாலும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல இனிமேல் உரைத்து என்ன செய்வது.  

எது எப்படி ஆனாலும் நடந்தது நடந்துவிட்டது.  இனி அதை மாற்ற முடியாது தன் மகளை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று அவன் உள்ளம் தவித்தது..!

அன்பரசனும் பதறி வேற ஏதாவது வழி இருக்கிறதா என்று அவசரமாக ஆராய்ந்தான்..!

அனைவரும் திரும்பவும் கதவை தட்டி பார்த்தனர்.. இடித்து பார்த்தனர்.. நல்ல் உயர்ஜாதி மரத்தால் செய்த அந்த காலத்து கதவு என்பதால் அவர்களால் அதை அசைக்க கூட முடியவில்லை

“குட்டிமா...  இப்ப மட்டும் நீ கதவை திறக்கல,  அப்புறம் இந்த அப்பாவை உசுரோடவே பார்க்க முடியாது...”  என்று உறுதியுடன் சொல்லி முடிக்க,  இப்பொழுது பூங்கொடியோ  ஓ என்று ஒப்பாரி வைத்தாள்.

“அடியே... என் மாமியார் மாதிரி, என் புருஷன் உசுரு போன அடுத்த நிமிஷம் நானும் போய் சேர்ந்திடுவேன் .  இதுதான் உனக்கு தேவையா? நம்ம  குடும்பத்தையே நாசமாக்கத்தான் வேணுமா?  

ஒழுங்கா வெளியில வந்துரு...  ஏதாவது பண்ணிக்காத...”  என்று பூங்கொடியும் கோபத்தில் ஆரம்பித்து,  ஆதங்கத்தில் தழுதழுத்து   வேதனையில் அரற்றினாள்.  

மற்றவர்களும் முடிந்த அளவிற்கு கதவை தட்ட,  அதற்குமேல் பொறுமை இழந்த ராசய்யா,

“குட்டிமா ... அப்பா சொன்னமாதிரி இப்ப அதைத்தான் செய்ய போறேன்...”  என்று இப்பொழுது உறுதியான குரலில் சொல்ல,  அடுத்த கணம் படீரென்று கதவு திறந்து கொண்டது.

உள்ளே இருந்து வெளிவந்தாள் பெண்..!  

அனைவரும் அதிர்ச்சியுடன் அவள் முகத்தைப் பார்க்க,  அவள் முகத்தில் இப்பொழுது கண்ணீர் கோடுகள் துளியளவும் இல்லை.  முகத்தில் அதுவரை இருந்த வேதனை கொஞ்சமும் இல்லை.  

துடைத்து வைத்த வெண்கல விளக்கைப் போல முகம் பளிச்சென்று இருக்க கண்களிலும் இப்பொழுது ஒரு தெளிவு வந்திருந்தது.  

சற்று முன் வரை துவண்டு போய் கிடந்தவள்...  வாழ்க்கையே வெறுத்துப் போனதாய் காட்சி அளித்தவள்...  இப்பொழுது ஒருவித நிமிர்வுடன் தெளிவுடன் வெளியில் வர,  அதை பார்த்த அனைவருக்கும் மகிழ்ச்சியாகிப் போனது.  

“குட்டிம்மா..... “ என்றவாறு ராசய்யா வேகமாக ஓடிச்சென்று தன் மகளை இழுத்து அணைத்துக்கொண்டு  கதறி விட்டான்.  

தன் அப்பாவின் இதயம் வேகமாக துடிப்பது அவளுக்குமே கேட்டது

எத்தனை முறை அந்த ஸ்டெதஸ் ஐ  வச்சு அவன் இதயத்துடிப்பை கேட்டிருக்கிறாள்.  

இப்பொழுது அதெல்லாம் நினைவு வர, அவளின்  கண்கள் மீண்டும் கரிக்க ஆரம்பித்தது. ஆனாலும்  அதை உள்ளிழுத்துக் கொண்டவள் மெல்ல தந்தையை விட்டு விலகியவள்,  

“நான் ஏதாவது செஞ்சுக்குவேனு பயந்துட்டிங்களா பா...?   நான் உங்க பொண்ணு...  எந்த காலத்துலயும் அப்படி ஒரு முட்டாள்தனத்தை செய்யமாட்டேன்....  

வாழ்க்கை என்பது நமக்கு எவ்வளவு ஒரு பொக்கிஷம்னு  நீ  தானே எனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தப்பா..!

அம்மா சொன்ன மாதிரி,  மதிப்பெண் ஒன்றும் நம் வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை.  அடுத்த நிலைக்கு செல்வதற்கு ஒரு வழிகாட்டி தான்...”  என்று வார்த்தையில் தெளிவுடனும் குரலில் உறுதியுடனும் சொல்ல, அதைக்கேட்ட  ராசய்யா திகைத்துப் போனான்.  

“குட்டிமா...  டாக்டர் ஆவறது உன் கனவாச்சே..!  அது கை சேராமல் போகுதே...”  என்று தழுதழுக்க,  

“இல்லப்பா... நாம  காணும்  கனவு எல்லாம் பழித்து விடுவதில்லையே..!  என் கனவு கை சேருவதற்காக  எவ்வளவோ  போராடி பார்த்தேன்.  ஆனால் முடியவில்லை.  அது போகட்டும். விட்டுடலாம்...”  என்றாள் பெரிய மனுஷியாக குரலில் தெளிவுடன்..!

“இல்லடா தங்கம்...  நான்  என் வயலை வித்து...  இந்த வீட்டை வித்தாவது உனக்கு டாக்டர் சீட்டு வாங்கி கொடுப்பேன்...நீ மனச தளர விடாத...”  என்று தன் மகளை அணைத்துக்கொள்ள வர,  அவளோ  ஒரு வினாடி நக்கலாக சிரித்து வைத்தாள்..!

“அப்பா... அம்மா சொன்ன மாதிரி நீ ஆளுதான் வளர்ந்திருக்க...கொஞ்சம் கூட உலக நடப்பு புரியல...

இதெல்லாம் வித்து  என்னுடைய முதல் வருட செலவை எப்படியாவது சமாளிக்கலாம்.  ஆனால் அடுத்த வருஷம்?  அதற்கு அடுத்த வருஷம்?  உன்கிட்ட விற்க எதுவும் இல்லையேப்பா...”  என்று விரக்தியோடு சொல்ல,  அதைக்கேட்டு எல்லாருமே கண்கலங்கி போயினர்.  

“ஏன் ப்பா...  இப்படி எல்லாத்தையும் வித்து தான் நான் டாக்டர் ஆகணும்னா,  எனக்கு அந்த டாக்டர் படிப்பு வேண்டாம் பா... “  என்று குரலில் வலியுடன் சொல்ல, அதைக்கேட்டு  அனைவரும் இன்னுமாய் அதிர்ந்து போயினர்.  

“குட்டிமா....  என்று ராசய்யா அதிர்ச்சியோடு இளையவளைப் பார்க்க

“ஆமாம் பா...  எனக்கு டாக்டர் படிப்பு வேண்டாம்.  ஆனால் அதற்காக உங்கள் கனவை நிறைவேற்றாமல் விட மாட்டேன் பா...”  என்றாள் அதே நிமிர்வுடன்.

“என்னடா சொல்ற?  புரியலையே..”  என்று குழப்பத்துடன் பார்த்து வைக்க,

“அப்பா...  உங்க கனவு என்ன? உங்க பொண்ணு டாக்டராகி நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டியது தானே...” என்று கேள்வியாக பார்க்க,  

“ஐயோ...அப்ப நான் ஏதோ ஒரு வேகத்துல அப்படி சொல்லிட்டேன் கண்ணு.  நீ இவ்வளவு கஷ்டப்பட்டெல்லாம் அந்தக் கனவை நிறைவேத்த    வேண்டாம்...”  என்று தலையிலடித்துக் கொள்ள,  

“இல்லப்பா...  உங்க கனவு தான் என் கனவாகி போனது.  சிறு வயதிலிருந்தே ஒரு லட்சியத்தோடு வாழ்ந்திட்ட நான்...  அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.  இப்பவும் சொல்றேன்.  நீங்க கனவு கண்ட மாதிரி உங்க கனவை நிறைவேற்றுவேன்.  

உங்களுக்கு தேவை மருத்துவமனையும் மருத்துவர்களும் தானே..!  

அதை நான் டாக்டராகித்தான் செய்யணுங்கிறது இல்லை. அம்மா சொன்ன மாதிரி, மலரு சித்தி மாதிரி,   நான் இன்ஜினியரிங் படிக்கிறேன்...”   என்று உறுதியுடன் சொல்ல,  ராசய்யாவோ அதிர்ந்து பார்த்தான்.   

“என்னடா சொல்ற? “ என்றான் குழப்பத்துடன்..!

இத்தனை நாளா நீ ஒரு  டாக்டர் டாக்டர் என்று சொல்லிவிட்டு திடீரென்று இன்ஜினியரிங் என்று மகள் சொல்ல,  அவனாலேயே அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  

“வேணாம் டா குட்டிமா.. இந்த காசுக்காக பார்த்து உன் கனவை பாதியில் விட வேண்டாம் டா.  எப்படியாவது இந்த அப்பா பணத்தை புரட்டிடுவேன்.  இல்லைனாலும் இந்த வருஷம் போகட்டும்.  

நீ ஒரு வருஷம் உட்கார்ந்து படிச்சா,  அடுத்த வருஷம் எப்படியும் கவர்ன்மென்ட் காலேஜ் ல சீட்டு வாங்கிடலாம்.  நீ ஒரு வருஷம் உட்காந்து படி டா செல்லம்...”  என்று சமாதானம் சொல்லி தன் மகளின் தலையை வருட

“இல்லப்பா...  நான் முடிவு பண்ணிட்டேன்.  எனக்கு டாக்டர் வேண்டாம் ஆனால் என்னை போல கனவு கண்டு கொண்டிருக்கும் எத்தனையோ ஏழைப் பிள்ளைகளின் கனவை கை சேர்க்க போகிறேன்...”  என்று தீர்க்கமாக பார்த்து சொல்ல,  அவன் புரியாமல் விழித்தான்.  

“ஆமாம் பா...  நான் இஞ்சினியரிங் படிக்க போறேன்.  அதுவும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிச்சா அதுல நல்ல வருமானம் கிடைக்கும்.  நானே சீக்கிரம் சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிச்சு நல்லா கொண்டுவந்த கோடிக்கணக்கில் பணம் புரளும்.

அதை வைத்து எத்தனையோ ஏழைப் பிள்ளைகளின் கனவை நிறைவேற்றுவேன்..!  காசை விட நம் கல்வி தரம் மேம்பட வேண்டும்

இன்னும் நல்ல கோச்சிங் வேண்டும். அதுக்கு எப்படியாவது புதிய முறையை கொண்டுவர வேண்டும்

நான் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் எடுத்துக்கிறேன். கண்டிப்பா என்னால நான் நினைச்சதை சாதிக்க முடியும். ஒரு வழி அடைபட்டால் இன்னொரு வழி  திறக்கும் னு நீங்க தானே சொல்லிக் கொடுத்தீங்க.  

அதனால கண்டிப்பா எனக்கு கடவுள் இன்னொரு வழியை வைத்திருக்கிறார் நான் திட்டமிட்ட பாதையில் போகாவிட்டால் என்ன?  அடுத்த பாதையில் போக வேண்டியதுதான்..!  

அதற்காகவெல்லாம் என் வாழ்க்கையை பாதியில் முடித்துக் கொள்ள மாட்டேன்.  

எனது கனவு கை சேர வில்லை என்றாலும் எத்தனையோ பேரின் கனவை கை சேர்க்க போகிறேன்...”  

என்று தெளிவாக, தீர்க்கமாக, முடிவாக   சொன்ன தன் மகளை,   அப்படியே தன் நெஞ்சுக்குள் புதைத்து கொண்டு கதறி தீர்த்தான் ராசய்யா..!  

Share:

1 comment:

  1. So sad....but ivvlo thelivaa pesuradhu OK.........Mark not a life... superb

    ReplyDelete

Followers

Total Pageviews