மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Thursday, February 2, 2023

கனவே கை சேர வா-21

 


        

 

அத்தியாயம்-21

மெல்ல தன் பழைய நினைவுகளிலிருந்து வெளிவந்தாள்  பொதிகை

அவள் அன்று தன் தந்தையிடம் சொன்னது போலவே பிடிவாதமாக மருத்துவம் சேராமல், அவளுடைய மதிப்பெண்களுக்கு அண்ணா யுனிவர்சிட்டியில்  கம்ப்யூட்டர் சயின்ஸ் கிடைத்திருக்க, அதை எடுத்துக்கொண்டாள்.  

அவள் தந்தை ராசய்யாவால் தான் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..!

இத்தனை நாளாக தன் மகளை  டாக்டர் டாக்டர் என்று சொல்லிவிட்டு இப்பொழுது தன் மகள்  அதை கை விட்டதை எண்ணி வேதனையாக இருந்தது.  

இன்னும் ஒரு வருடம் காத்திருந்து முயற்சி செய்யலாம் என்று சொன்னதைக் கூட அவள் காதில் வாங்கவில்லை.  

இல்லப்பா...  ஒரு வருடம் காத்திருந்து படித்து எழுதினாலும்,  பலன் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்.  அப்படியே காத்திருந்து  படித்து டாக்டர் சீட் கிடைத்தாலும்  நான் ஒருத்தி மட்டும்தான் டாக்டராக முடியும்.  

ஆனால் இன்னும் நம்மை போன்ற கிராமங்களில் இருக்கும் எத்தனையோ பேர் என்னை போலவே கனவை தொலைத்து விட்டு வாழ வேண்டும்.  

இன்னும் சிலரோ தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும். டாக்டராக முடியவில்லையே என்று இதுவரை மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டது போதும்..!

இனிமேலும் அப்படி ஒரு அவலம் நடக்க விடக்கூடாது..! அவர்களை எல்லாம் காக்க எனக்கு ஒரு ஐடியா இருக்கிறது

அதற்காகவே நான் இன்ஜினியரிங் படிக்க வேண்டும்...”  என்று உறுதியுடன் சொல்லி தன் தந்தையின் வாயை அடைத்து விட்டாள்.  

அவள் சொன்ன மாதிரியே அண்ணா யுனிவர்சிட்டியில்  சேர்ந்து நன்றாக படித்துக் கோல்டு மெடல் வாங்கி விட்டாள்.  

அதோடு தனக்கு சொந்தமாக ஒரு  நிறுவனத்தையும்  ஆரம்பித்து விட்டாள்.  

இப்பொழுது அவள்  செய்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் எஜுகேசன் சம்பந்தமானது.  

இந்தியாவில் இஞ்சினியரிங் ற்கு புகழ்பெற்ற ஐ.ஐ.டி(IIT), என்.ஐ.டி(NIT), ட்ரிபில் ஐ.டி.( IIIT) போன்ற தரமான இஞ்சினியரிங் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வான JEE (Joint Entrance Exam),

மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வான  NEET  போன்ற தேர்வுகளுக்கு கிராமத்து மாணவர்கள் இன்னும்  அதிக அளவில் தேர்வாவதில்லை.

சென்னையில் இருக்கும் IIT, திருச்சியில் இருக்கும் NIT கல்லூரிகளில் சேருவதற்கு வெளிமாநிலத்து மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்க, அந்த கல்லூரிகளுக்கு அருகிலயே வசிக்கும் நம் மாணவர்களுக்கு அதை பற்றி பெரிதாக தெரிந்திருக்க வில்லை..!

இந்த கல்லூரிகளில் சேருவதற்கு தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும்  குறைவுதான்..!

அதற்காக  நம் மாணவர்களிடம் அறிவு இல்லை என்று அர்த்தமில்லை.  

அவர்களுக்கு போதிய வழிகாட்டியும் விழிப்புணர்வும் இல்லாததுதான்.

இந்த தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கவென நகரங்களில் பல தனியார் பயிற்சி மையங்கள் பெருகிவிட்டன.

முன்பு ராஜஸ்தானில் உள்ள கோட்டா( Kota) வில்தான்  JEE க்கான பயிற்சி மையங்கள் பெருகி இருந்தது..!

இப்பொழுது தென்னிந்தியாவிலும் அது போன்ற மையங்கள் வேகமாக பெருகி வருகின்றன..!

ஆனால் அந்த பயிற்சி மையங்களில் சேருவதற்கான கட்டணம் மிக அதிகம்..! மேல்தட்டு மக்களுக்கும், அப்பர் மிடில் கிளாஸ் என்று அழைக்கபடும் மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினருக்கும் அந்த கட்டணம் சாத்தியமானது.

ஆனால் நடுத்தர வர்க்கத்தினருக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ இருக்கும் மக்கள்...! குறிப்பாக கீராம மாணவர்களுக்கு அத்தகைய பயிற்சி என்பது எட்டாக்கனிதான்..!

வறுமைகோட்டிற்கு கீழ இருப்பவர்களுக்கு என்று தனியான இட ஒதுக்கீடு இருந்த பொழுதும், அதை பற்றிய விவரம் இல்லாமலும், அதற்கான சரியான பயிற்சி இல்லாமலும், எத்தனையோ கிராமத்து மாணவர்கள் தங்கள் வாய்ப்பை இழந்து வருகின்றனர்..!

இதை மாற்ற வேண்டும்..! கிராமத்து மாணவர்களும் இது போன்ற கடுமையான தேர்வுகளிலும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும்..!

சரியான வழிகாட்டியும், வாய்ப்பும் இல்லாமல் எத்தனையோ சுந்தர் பிச்சைகள் , சத்ய நடேலாக்காள் கிராமங்களில் அழிந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

அவர்களை எல்லாம் கண்டுபிடித்து, பட்டை தீட்டி,  மெருகேற்றி அவர்களையும் ஜொலிக்க வைத்து, அவர்களின் கனவுகளையும் கை சேர்த்து விடுவதுதான் பொதிகையின் கனவு, லட்சியம்..!

இப்பொழுது எல்லோரிடமும் ஸ்மார்ட்  போன் வந்துவிட,  ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலிருந்தே  பயிற்சிபெறும் அளவில் ஒருமொபைல் ஆப் ஐ  உருவாக்குவதுதான் அவளுடைய கனவு.

*****

நீட் மற்றும் JEE தேர்வுகளில் தகுதிபெற அடிப்படை, ஒவ்வொரு பாடத்தையும் மேலோட்டமாக படிக்காமல், அதை பற்றிய ஆழமான புரிதல்..!

பழைய வழக்கப்படி ஒவ்வொரு பாடத்தின் பின்னால் இருக்கும் கேள்விக்கான பதில்களை மட்டும் மனப்பாடம் செய்து எழுதிட முடியாது..!

ஒவ்வொரு பாடத்தையும், அதன் செயல்முறை விளக்கத்தோடு, ஆழமாக அறிந்திருந்தால் மட்டுமே எளிதாக விடையளிக்க முடியும்..!

அந்த வகையில் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்தையும் எளிதாக தமிழில் விளக்கும்படி ப்ரிரெக்கார்டட்   வீடியோக்களை உருவாக்கி இருந்தாள்..!

ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலுமே திறமையானவர்களை கண்டறிந்து, அவர்களை கொண்டு, பாடங்களை ஆழமாக மற்றும் எளிய நடையில்  விளக்கும்படி செய்து வீடியோவாக்கி இருந்தாள்..!

அந்த வீடியோக்கள் எல்லாம் அவளுடையை ஆப்பில் மட்டும்தான் இருக்கும்..!

அதே போல ஒவ்வொரு பாட முடிவிலும் டெஸ்ட் இருக்கும்..! அவர்களாகவே தங்களுடையை புரிதலை பரிசோதித்து கொள்ளலாம்..!

அவர்களுடைய ஸ்கோர் படி, எந்த கான்செப்டில் அவர்கள் இன்னும் நன்றாக படிக்க வேண்டும் என்று சஜஸன் வரும்..! அதே போல ஒவ்வொரு மாத இறுதியிலும் அனைத்து பள்ளிகளுக்குமான காமன் டெஸ்ட்..!

அதிலிருந்தே அவர்கள் தரவரிசைப்பட்டியலில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறோம் என்று அறிந்து கொண்டு எப்படி இன்னும் முன்னேறுவது என்றும் தெரிந்து கொள்ளலாம்..!

மொத்தத்தில், மாணவர்களின் புரிதலை எளிதாக்கி, அதிக பயிற்சி அளித்து, எந்த மாதிரியான வினாக்களுக்கும் விடை அளிக்க வைப்பதுதான் அவளின் திட்டம்.

தமிழக அரசுடன் இணைந்து தன்னுடைய திட்டத்தை அரசு பள்ளிகளில், குறிப்பாக கிராமத்து பள்ளிகளில் செயல் படுத்தவேண்டும்.

அதுவும் அரசாங்க பள்ளிகளில் தன்னுடைய ஆப் ஐ பயன்படுத்த அனுமதி வாங்க வேண்டும்..! அடுத்ததாய் அரசாங்கமே பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் மாணவர்களுக்கு தனிப்பயிற்சி அளிக்க வேண்டும்.  

அதற்கான அத்தனை வசதிகளையும் அவள் நிறுவனமே பார்த்துக்கொள்ளும். அவர்கள் ஒப்புதல் அளித்தால் போதும்..!  

அதற்காகத்தான் கல்வி அமைச்சர் பொன்வண்ணனை  சந்திக்க சென்று கொண்டிருக்கிறாள் பொதிகை.

அவளுடைய ப்ராஜெக்ட்டை பற்றிய விவரம் அடங்கிய பைலையும் தன் கையோடு எடுத்துச் செல்கிறாள்.  

எப்படியாவது கல்வி அமைச்சர் இந்த ப்ராஜெக்ட்டிற்கு சைன் பண்ணியாகணும்.  அப்பொழுதுதான் அவள்  ப்ராஜெக்ட் பாதி வெற்றியடைந்ததுக்கு சமம்.  

அந்தப் பதட்டத்தில் தான் இப்பொழுது நகத்தை கடித்துக்கொண்டு இருந்தாள் பெண்.

******   

ந்த ப்ளாக் கலர் ஆடி காரை லாவகமாக செலுத்திக் கொண்டிருந்தான் வெற்றிமாறன்.  

அவ்வபொழுது தன் அருகில் அமர்ந்து இருந்தவளை  ஓரக்கண்ணால் பார்த்து வந்தான்.  

அவள் கடித்து துப்பும் நகத்தில் இருந்தே , இன்னும் அவள் டென்ஷனாக இருப்பது புரிய,  அவளை  இயல்பாக எண்ணி

“ஹோய் கருவாச்சி..!  என்ன பலத்த யோசனை? 

என்று அவளை வெறுப்பேற்றும் அந்த வார்த்தையை சொல்லி வைக்க,  பெண்ணவளோ அதற்கும் எந்த ஒரு ரியாக்சனும் காட்டாமல் தன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.  

அதேநேரம் வெற்றிமாறன் ஆன் பண்ணி வைத்திருந்த எஃப் எம் இல் இருந்து அந்த பாட்டு ஒலித்தது.

 

கொஞ்சும் மைனாக்களே..!

கொஞ்சும் மைனாக்களே..!  

என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்..!

..

கொஞ்சம் ஆசை..! கொஞ்சம் கனவு

இவை இல்லாமல் வாழ்க்கையா?

நூறு கனவுகள் கண்டாலே

ஆறு கனவுகள் பலிக்காதா?

கனவே கை சேர வா

என்று ஐஸ்வர்யா ராய் கொஞ்சி பாடிக்கொண்டு இருக்க, அதைக்கேட்ட பொதிகையின் முகத்தில் லேசான கலவரம் வந்தது.

காரை ஓட்டிக்கொண்டிருந்தவன் பக்கமாய் திரும்பி,  

“வெற்றி......! “ என்று தயக்கத்துடன் அழைக்க, அவளின் அழைப்பில் இருந்தே அவளின் கலக்கத்தை கண்டு கொண்டவன்...அவளிடம் சீண்டாமல், மென்மையாய்

“சொல்லுடா....” என்றான் கனிவுடன்..!

“வெற்றி...!  என் கனவு கை சேருமா?  நான் டாக்டராக,  ஒரு பேமஸ் கார்டியாலஜிஸ்ட் ஆக ஆகணும் ன்ற சிறுவயது கனவு தான் கை சேராமல் போனது..!

இப்பொழுது மற்றவர்களை டாக்டராக்க வேண்டும் என்ற கனவாவது  கை சேருமா? என்று தழுதழுக்க

“கண்டிப்பா டி...!  உன் கனவு 200% நிறைவேறும். இந்த வெற்றி உன் கூட இருக்க பயமேன்..!  இந்த வெற்றியில் சரிபாதியான உனக்கு ,  இப்பொழுதே பாதி வெற்றி பெற்ற மாதிரி தானே..!   

என்று மந்தகாசமாய் சிரிக்க,  அவளோ அதுவரை இருந்த தன் தவிப்பை, கலக்கத்தை  மறந்து அவனை முறைத்தாள்.

“ஐயா.. சாமி... போதும் இந்த செல்ப் டப்பா... கொஞ்சம் கேப் கிடைச்சாலும் உங்க பெருமையை எப்படித்தான் பீத்திங்கறிங்களோ? “ என்று முறைக்க,

“ஆகான்..! பொண்ணு பார்முக்கு வந்துட்டாளா? அவளின் ட்ரேட் மார்க் முறைப்பு வந்திடுச்சே..! வெற்றி..! சக்ஸஸ்..! இந்த அழுமூஞ்சி கருவாச்சிய பார்முக்கு கொண்டு வந்திட்ட... ” என்று மானசீகமாக தன் காலரை தூக்கி விட்டுக் கொள்ள, 

அதேநேரம் அவளின் அலைபேசி ஒலித்தது..!

அலைபேசியிலும் அதே ஐஸ்வர்யா ராயின் கொஞ்சும் மைனாக்களே பாட்டுதான்..! அதுவும்  

நூறு கனவுகள் கண்டாலே

ஆறு கனவுகள் பலிக்காதா?

கனவே கை சேர வா..!

என்ற வரிகளை மட்டும்தான் திரும்ப திரும்ப ஒலிக்கும்படி செட் பண்ணி இருந்தாள்..!

இந்த வரிகளை கேட்கும்பொழுதெல்லாம் அவளுக்கு ஒரு உற்சாகம் பெறுக வேண்டும் என்றுதான்..!

தன் அலைபேசியின் திரையை பார்த்ததும் அடுத்த கணம் அவள்  முகம் பிரகாசமானது..!

அவள் முகத்தில் வந்திருந்த மலர்ச்சியை கண்டவனுக்கு, அவள் சொல்லாமலே அழைத்தது யாராக இருக்கும் என்று தெரிந்தது..!  

“பாருடா...  இதுவரைக்கும் ப்யூஸ் போன நைட் பல்பு மாதிரி டல்லா இருந்தவ... இப்ப என் மாமனார் போன் காலை பார்த்ததும் உடனே 2000 வாட்ஸ் பல்பு மாதிரி ஜொலிக்கிறா....”

என்று வாய்விட்டு சொல்லி நக்கலடிக்க,  அவளோ  வவ்வே... என்று ஒழுங்கு காட்டிவிட்டு அந்த அழைப்பை ஏற்றாள்.  

“சொல்லுங்கப்பா.....”  என்றவாறு அவள் குரல் துள்ளலுடன் வெளிவர

“குட்டிமா......எப்படிடா இருக்க?  என்றான் ராசய்யா தழுதழுத்தவாறு..!    

“ஹலோ மாமனாரே..! இது உங்களுக்கே ஓவரா இல்ல?  காலையில தானே போன போட்டு உங்க மவள எப்படி இருக்கன்னு விசாரிச்சிங்க?  அடுத்த 2 மணி நேரத்துக்குள்ள உங்க பொண்ணு ஒன்னும்  கரைஞ்சு  போய்ட மாட்டா...”  என்று வெற்றிமாறன் நக்கலாக சிரிக்க,  

“ஹா ஹா ஹா மாப்பிள்ளை...!  பொண்ணைப் பெத்த எல்லா  அப்பன்ங்களுக்கும் இருக்கிற பதட்டம் தான் யா இது..!

என் மவ எம்புட்டு பெரிய ப்ராஜெக்ட் ஐ பண்ணி இருக்கா... அவ கனவு கை சேரணும்னும்னு எம்புட்டு பதட்டமா இருக்கு..!

நாளைக்கு நீயும்  ஒரு புள்ளைய பெத்து பாரு..!  அப்ப தெரியும்..! “ என்று சிரித்துக்கொண்டே சொல்லியவன்,

“சரிதான் குட்டிமா..!  எதுவும் எதுக்கும் டென்ஷன் ஆகக் கூடாது.  கூலா இரு.  மினிஸ்டர்க்கிட்ட நல்லா  தைரியமா பேசு..! நீ பத்தாவதுலயே நம்ம ஊரு கலெக்ட்டருக்கிட்ட தைர்யமா பேசினவளாச்சே..!

அதே தைர்யத்தோட இந்த சுண்டக்கா மினிஸ்டர்கிட்டயும் பேசுடா...  அதான் மாப்பிள்ளையும்  உன் கூடவே இருக்காரு இல்ல.  அதனால எதுவும் டென்ஷன் இல்லாம உன் மனசுல இருக்கற திட்டத்தை எல்லாம் நிதானமா, பொறுமையா எடுத்து சொல்லு..!

கண்டிப்பா மினிஸ்டர் உன் ப்ராஜெக்ட்டிற்கு ஒத்துக்குவார்... அப்படி ஒத்துகிட்டா அடுத்த வாரமே கருப்பணாருக்கு  கெடா வெட்டி பொங்க வைக்கிறதா வேண்டிகிட்டேன்..!

அதனால அந்த கருப்பு எப்பவும் உன் கூட துணைக்கு இருப்பார்...! ஒன்னும் கலங்காத தங்கம்...”  என்று இன்னும் வரிசையாக தன் அறிவுரைகளை வழங்க,  தன் தந்தையின் பாசத்தில் நெகிழ்ந்தவள்  

“சரி பா... எல்லாம் நான் பாத்துக்குறேன்..!  என்னை விட நீங்க தான் டென்ஷனா இருக்கீங்க..!  அதனால முதல்ல உங்க  டென்சனை குறைங்க..

ஏற்கனவே பிபி இருக்குனு செக் பண்ணிட்டேன்... அதனால எதுக்கும் டென்ஷன் ஆகாதிங்க...”  என்று ஒரு அன்னையாய் தன் தந்தையை அதட்டினாள் பெண்.

“சரிடா கண்ணு...  அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்...  நல்லபடியா போய்ட்டு வா...  மாப்பிள்ளை கிட்ட போனை கொடு...” என்று கேட்க,  பொதிகையும்  தன் அலைபேசியை வெற்றியிடம் கொடுத்தாள்.  

அவனும் காரை ஓட்டிக்கொண்டே

“சொல்லுங்க மாமனாரே....”  என்றான்  முகத்தில் முழுமொத்த புன்னகையுடன்..!   

*****

பொதிகை தன் கல்லூரி படிப்பை முடித்ததும், இருவரின் காதல் விஷயம் தெரிந்ததுமே இரண்டு வீட்டிலும் பேசி நிச்சயத்தை முடித்து விட்டனர்.

ஆரம்பத்தில் வெற்றியின் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை..!

பொண்ணு அவர்களைப் போல ஜமீன் பரம்பரையில் வரவில்லை..! ஜமீன் பரம்பரை இல்லையென்றாலும் ஒரு பெரிய தொழிலதிபர், மினிஸ்டர் வீட்டு பொண்ணாக எதிர்பார்த்து இருந்தனர்..!

வெற்றியோ தடாலடியாக பொதிகையைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக நின்றுவிட, ஒரே பையன் என்பதால் அதற்குமேல் அவர்களாலும் மறுக்க முடியவில்லை..!

ராசய்யாவுக்கு முதலில் யோசனையாக இருந்தது..!

அவன் அடிக்கடி தன் மனைவியிடம் சொல்லும் ராஜகுமாரன்...எட்டுபட்டி ஜில்லாவுக்கும் ஜமீனான துறையூர் ஜமீனின் வாரிசு தன் மகளுக்கு இணையாக வருவதில் கொள்ளை சந்தோஷம்..!

ஆனால் இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா என்று யோசித்தான்..!

தன் மச்சினிச்சி மலரின் திருமணத்திற்கே அப்படி யோசித்தவன்...தன் மகளின் திருமணத்தை, அவளின் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் இருப்பானா?

தகுதிக்கு மீறி சம்பந்தம் செய்தால், பின்னால் தன் மகளுக்கு எதுவும் பிரச்சனை வருமோ என்று எல்லா கோணத்திலும் ஆராய்ந்து பார்த்தான்..!

பேசி பழகியதில் வெற்றி அப்படிப்பட்டவன் அல்ல என்று தெரிய வந்தது..!

அதோடு தன் மகளின் மனதிலும் வெற்றி இருக்கிறான் என்று தெரிந்ததும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை..!

அவன் மறுப்பு சொன்னால், அவன் மகளும் அப்பா எவ்வழியோ,  நானும் அவ்வழி என்று வெற்றியை மறந்து விடுவாள் தான்..!

ஆனால் இதுவரை தன் மகள் விருப்பபட்டதையே செய்து பழகியவனுக்கு, அவளின் திருமண விசயத்தில் அவள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்ய முடியவில்லை..!

அதனால் கொஞ்சம் யோசித்து பின் சரியென்று சம்மதித்து விட்டான்..!

அதன்பிறகே இருவீட்டிலும் கலந்து பேசி, பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயத்தை முடித்துவிட்டனர்..!

இருவருமே இப்பொழுது திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்தனர்..!  

பொதிகை தன் இலட்சியத்தை, கனவை  நிறைவேற்ற வேண்டும்..! அதன்பிறகுதான் திருமணம் என்று வெற்றியிடம்  சொல்லி இருக்க, வெற்றியும் அதற்கு சம்மதித்தான்..!

அதனால் வெறும் நிச்சயதார்த்தத்தை  மட்டும் சிம்பிளாக முடித்துக் கொண்டனர்.  

அப்ப இருந்தே  ராசய்யா அவனை தன் மாப்பிள்ளையாக பாவித்தான்..!  

அதே போல வெற்றியும் மாமா என்று தான் உரிமையாக அழைப்பான்..! அவரை வாரவேண்டும் என்றால், மாமனாரே என்று கேலியாக அழைத்து வைப்பான்..!

ராசய்யாவும் அவனுக்கு இணையாக கவுண்டர் கொடுப்பான்..!  

“குட்டிமா கொஞ்சம் பயத்துடன் இருக்கிற மாதிரி இருக்கு...!  மினிஸ்டர்கிட்ட பேசறப்பா, நீங்களும் கொஞ்சம் கூட இருந்து பாத்துக்கங்க...”  என்று அக்கறையுடன் வினவ,

“இதெல்லாம் நீங்க எனக்கு சொல்லனுமா மாமா.... அதெல்லாம் நான் பாத்துக்குறேன் மாமா...  கவலையை விடுங்க...  ஜாலியா என் மாமியாரோட டூயட் பாடுங்க...” என்று சிரிக்க

“இல்ல மாப்பிள்ள...குட்டிம்மாவோட  அஞ்சு வருஷத்து கனவு இது... இந்த கனவு நிறைவேறினால் தான் கல்யாணம் னு பிடிவாதமா நிக்குது..! இதனால் உங்க கல்யாணம் வேற தள்ளிப்போகுது..!  கண்டிப்பா என் பொண்ணு கனவு  நிறைவேறணும்...”  என்று மீண்டுமாய் தழுதழுக்க,  

“ஐயோ மாமா... நான் தான் சொன்னேனே...! அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் டோன்ட்  வொர்ரி...” என்று சமாதானம் செய்ய,

“ஆனாலும் ஒத்த புள்ளையா வளர்ந்தவ...இதுவரைக்கும் ஆசைபட்டு பெருசா எதையும் கேட்டதில்லை...! அவ ஆசைப்பட்ட டாக்டர் படிப்பதான் அப்ப என்னால கொடுக்க முடியல... இப்ப ஆசைப்பட்ட இந்த கனவாவது அவளுக்கு நிறைவேறணும்....” என்று தழுதழுத்தான் ராசய்யா..!

வெற்றிக்கும் தன் மாமனாரின் நிலை புரிந்தது..! தன் மகளின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்று அறிந்தவன் தான்..!  

அவரை சமாதானம் படுத்த வழி தெரியாமல் தடுமாறியவன், அவரை திசை மாற்ற எண்ணி,

“அதுக்குத்தான் மாமா.. எப்பவும் ஒத்த புள்ளையோட நிறுத்திக்க கூடாதுனு சொல்றது...கூட இன்னொரு புள்ளையும் இருந்திருந்தா , இப்படி ஒத்த புள்ளைய நினைச்சு தவிக்க வேண்டாம் பாரு...   

நானெல்லாம் உங்கள மாதிரி ஒத்தப் புள்ளையோட நிறுத்திக்க மாட்டேன்..!  உங்க மாமனார்...அதான் பொதியோட தாத்தா மாதிரி நாலு புள்ளைங்களாவது பெத்துக்குவோம்...” என்று சிரிக்க,

மறுமுனையில் ராசய்யாவும் தன் கலக்கத்தை விடுத்து ஹா ஹா ஹா வென்று வாய்விட்டு சிரித்தவன்,

“ஹ்ம்ம்ம்  பாக்கலாம்... பாக்கலாம்... ஒத்த புள்ளைய பெத்தெடுப்பதற்கு உங்க  பொண்டாட்டி படுற பாட்டை பாத்தா,  அடுத்த புள்ளை  வேண்டவே வேண்டாம்னு சொல்றிங்களா இல்லையானு பாக்கத்தான போறேன்...! “ என்று சிரித்தான்  பெரியவன்.

“ஹா ஹா ஹா... மாம்ஸ்... அதெல்லாம் உங்க பொண்டாட்டி மாதிரி இல்ல என் பொண்டாட்டி. பத்து புள்ளைனாலும் ஜம்முனு பெத்து போட்டுடு வா..அப்படித்தானே பேபி...”   

என்று பொதிகையை பார்த்து கண் சிமிட்ட, ஏதோ யோசனையில் இருந்தவள் அனிச்சையாய் ஆமாம் என்று  தலையை ஆட்டி வைத்தாள்..!  

அதன் பிறகுதான் அவன் என்ன சொல்கிறான் என்பது புரியவும்,  கன்னங்கள் சிவக்க,  உதட்டை ஆழுந்த கடித்துக் கொண்டவள், மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.

அவளின் கன்ன சிவப்பை ரசனையோடு பார்த்தவன்,  

“மாமா...  இதுக்கு மேல என்னால நல்லவனா இருக்க முடியாது.  சீக்கிரம் உங்க சம்பந்திகிட்ட பேசி, கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க..!  

இல்லனா உங்க பேரனையோ,  பேத்தியையோ  மடியில வச்சுக்கிட்டுத்தான்  நான் தாலி கட்ட வேண்டியிருக்கும்... இப்பவே சொல்லிட்டேன்...”  என்று கராராக சொல்லி வைக்க, மறுமுனையில் கேட்டுக்கொண்டிருந்த ராசய்யாவோ இன்னுமாய் வாய் விட்டு சிரித்தான்..!

மறுபக்கம் திரும்பி கொண்டிருந்தாலும், இந்த பக்கமாக காதை தீட்டி வைத்துக்கொண்டிருக்க, அப்பொழுதுதான் மாமனாரும் , மாப்பிள்ளையும் பேசிக்கொண்டிருந்தது அவள் காதிலும் விழுந்து வைத்தது..!

அதில் இன்னுமாய் சிவந்து போனவள், விலுக்கென்று தன்னவன் பக்கமாக திரும்பி, அவனை முறைத்து வைத்தவள்,

“சீ... கருமம் கருமம்...  இப்படியா கொஞ்சம் கூட விவஷ்தை இல்லாம அப்பா கிட்ட பேசுவிங்க..!”  என்று தன் தந்தைக்கு கேட்காதவாறு மெதுவான குரலில் பேசி தலையில் அடித்துக்கொள்ள

ஹா ஹா ஹா நாங்க ஒன்னும் மாமனார் மாப்பிள்ளை இல்லடி செல்லம்.  வி ஆர் ப்ரெண்ட்ஸ்... கரெக்டு தான மாமா? “ என்று தன் மாமனாரையும் கூட்டு சேர்த்துக்கொள்ள,  

“ஆமா குட்டிம்மா...  மாப்ளயும், நானும் ப்ரெண்ட்ஸு.. வி ஆர் ப்ரெண்ட்ஸு...”  என்று அவனும் கிராமத்து ஸ்டைலில் ஆங்கிலத்தில் சொல்ல, அதைக்கேட்டு சிரிப்பு வந்தது பெண்ணுக்கு.  

அதுவரை இருந்த இறுக்கம், அழுத்தம் , கலக்கம் எல்லாம் ஓடிப்போய்விட, கலகலவென்று வாய் விட்டு சிரித்தாள் பொதிகை..!

அலைபேசி வழியாக தன் மகளின் கலகலவென்ற சிரிப்பு சத்தத்தைக் கேட்ட ராசய்யாவுக்கு இப்பொழுதுதான் மனம் நிறைந்து போனது.

மனதில் ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது..!  

இதுக்காகத்தானே...! அவளின் முகத்தில் இப்படி ஒரு சிரிப்பை கொண்டுவரத்தானே  இதுவரை இருவரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  

“அப்பாடா... எப்படியோ மாமனாரே...! கடைசியா  உங்க பொண்ணு...  இல்ல இல்ல என் பொண்டாட்டி சிரிச்சிட்டா... நல்லா காது குளிர கேட்டுக்கோங்க...”  என்று பெரிதாக புன்னகைக்க,

“ஆமாம் மாப்பிள்ளை..!  நானும் கேட்டேன்..!  இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு..!  

குட்டிமா... இதே சிரிச்ச முகத்தோடயே போய்  மினிஸ்டர பாரு..! அவர  பார்த்துட்டு ரிசல்ட் என்ன ஆச்சுனு  போன் பண்ணுங்க..!  அதுவரைக்கும் எனக்கு டென்ஷனாகத்தான் இருக்கும்...”  என்று சொல்லி  போனை அணைத்தான் ராசய்யா..!

Share:

1 comment:

  1. Superb........kanavu kai serumaa ???? We are also in high tension mam

    ReplyDelete

Followers

Total Pageviews