அத்தியாயம்-14
சென்னை அண்ணா சாலையில், ஆங்காங்கே ஜாமாகி
இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே தன் ஆடி காரை லாவகமாக ஓட்டிக் கொண்டிருந்தான்
வெற்றிமாறன்.
சுறுசுறுப்பான காலை வேளையில், மக்கள் எல்லாருமே
காலில் சுடுதண்ணியைக் கொட்டிக் கொண்டதைப் போல, அரக்க பரக்க அலுவலகத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தார்கள்.
இரு வாகனங்களுக்கு இடையில் இருக்கும் சிறிய சந்தை கூட விட்டு
வைக்காமல், எப்படியாவது அந்த குறுகிய சந்தில் குறுக்கும்
நெடுக்குமாய் புகுந்து சென்று கொண்டிருந்த
இரு சக்கர வாகன ஓட்டிகளால் போக்குவரத்து நெரிசல் இன்னுமாய் கூடி இருந்தது.
அதைக்கண்டு எரிச்சலுடன் வெற்றிமாறன் கார் ஸ்டீயரிங் ல் தட்டியும், தாளமிட்டும் கொண்டிருக்க, அவன் அருகில் ஒருவித டென்சனுடன்
அமர்ந்திருந்தாள் பொதிகை.
முன்னால் இருந்த போக்குவரத்து நெரிசல் அவள் கண்ணில் பட்டாலும்
கருத்தில் பதியவில்லை.
அவள் கவனம் வேறு எங்கோ இருந்தது... அவளின் டென்சனை குறைக்கும் விதமாய், நகங்களை கடித்து துப்பிக்கொண்டு
இருந்தாள் பொதிகை.
அவளின் மாநிறத்திற்கு பொருத்தமான சந்தன கலரில் மெல்லியதாய்
பார்டர் வைத்த காட்டன் புடவை. அதே புடவையுடனே ஒட்டி வந்திருந்ததை வெட்டி
தைத்திருந்த சிறிய பார்டர் வைத்த ப்ளவுஸ்.
காதில் சிறிய சந்தனகலர் ப்ளாஸ்டிக் தோடு...நெற்றியில் சந்தன
கலரிலான சிறிய ஸ்டிக்கர் பொட்டு. கழுத்தில் மெல்லியதும் அல்லாமல், தடிமனும் இல்லாததாய் ஒரு சங்கிலி.
முதலில் பார்ப்பவர்களுக்கு அது மாங்கல்யம் போலவே இருக்கும். ஆனால்
மாங்கல்யம் அல்ல. அவளுக்கு அது மாங்கல்யம்
போன்றதுதான்.
ஒரு கையில் ப்ரவுன் கலர் லெதர் ஸ்ரைப்பினாலன டைட்டன்
வாட்ச். மற்றொரு கையில் சிறிய ப்ளெய்னான
தங்க வளையல் ஒன்று.
வழக்கம் போல தோள் வரை தொங்கிய கூந்தலை தூக்கி போனிடெய்ல்
போடாமல், பிரியாக விட்டு
இருந்தாள்.
வெகு எளிமையாய், ஆனால் கண்ணுக்கு
குளிர்ச்சியாய் அமர்ந்து இருந்தாள் பொதிகை.
முன்னால் இருந்த ட்ராபிக் ஜாமின் எரிச்சலில் கடுப்புடன்
பக்கவாட்டில் திரும்பியவன், அருகில் இருந்தவளை
கண்டதும் மனம் ஜில்லிட்டது வெற்றிக்கு.
அதுவும் இன்று புடவையில் அவனை ரொம்பவுமே இம்சித்தாள்.
அலுவலகத்தில் எப்பொழுதும் எளிதான பார்மல் ட்ரெஸ்ல் தான் இருப்பாள் பொதிகை...
கருப்பு அல்லது அடர்
ஊதா நிற ஜீன்ஸ், அதற்கு பொருத்தமாக
முக்கால் கை வைத்த ஒரு காட்டன் டாப்ஸ்...ஏதாவது க்ளைன்ட் மீட்டிங், கான்ப்ரென்ஸ் என்றால் அழகாய் பார்மல் கோட் ஷூட் அணிந்து
கொள்வாள்.
கல்லூரியில் படிக்கும் பொழுதாவது ஏதாவது கல்ச்சுரல் புரோக்ராம் ல்
புடவை கட்டி இருக்கிறாள்.
ஆனால் இந்த அலுவலகத்தை ஆரம்பித்ததில் இருந்து எப்பொழுதாவது
அதிசயமாகத்தான் புடவை கட்டுவாள்.
அவள் புடவை கட்டும் அன்று முழுவதுமே வெற்றிக்குத்தான் பெரும்
சத்திய சோதனையாக இருக்கும். அவன் பார்வையில் இருக்கும் தாபத்தை கண்டதாலோ என்னவோ, அதற்கு என்றே புடவையை தவிர்த்து விடுவாள் பொதிகை.
இன்று வேற வழியில்லாமல் புடவையை கட்ட வேண்டியதாக இருந்தது. ஏனேன்றால்
அவள் போகும் இடம் அப்படி.
*****
காரை ஓட்டிக்கொண்டே அவளை திரும்பி பார்த்தவன், இன்னுமே அவள் தன் நகத்தை கடித்து துப்பி கொண்டிருப்பதில்
இருந்து அவள் டென்சனாக இருக்கிறாள் என்று கண்டு கொண்டவன், அவளின் டென்சனுக்காக
காரணம் புரிந்ததால், அதை தணிக்க முயன்றான்.
“ஹோய் கருவாச்சி...எதுக்கு இவ்வளவு டென்ஷன். டேக் இட் ஈசி டி....” என்று பக்கவாட்டில்
திரும்பி அவளை சமாதானப்படுத்த முயன்றான்.
அவனின் கருவாச்சி என்ற விளிப்பில் அவளின் டென்ஷன் போன இடம்
தெரியவில்லை. அதற்கு பதிலாக கோபம் வந்து குடியேறி விட்டிருந்தது.
அவனை முறைத்து பார்க்க, அவனோ வாய்விட்டு சிரித்தான்.
“ஹா ஹா ஹா... நீ இன்னும் மாறவே இல்ல டி. முதல் முதலில் உன்னை
பார்த்தப்ப, கருவாச்சினு
சொன்னதுக்கு எப்படி கோபப்பட்டியோ அதே கோபம் இம்மியும் குறையாமல் அப்படியேதான்
இருக்கு....” என்று கண் சிமிட்டி உல்லாசமாக சிரித்தான் வெற்றிமாறன்.
அவன் தன்னை இயல்பாக்கத்தான் அவளை வம்புக்கு இழுக்கிறான் என்று கண்டு
கொண்டவள், தன் கோபத்தை கை
விட்டு மீண்டும் டென்ஷனை இழுத்து வைத்துக்கொண்டாள்.
“போடா...நானே டென்சன் ல இருக்கேன்.. நீ வேற என்னை
கடுப்பேத்திகிட்டு இருக்க...” என்று செல்லமாய் சிணுங்கினாள் பெண்.
“எதுக்கு டி டென்சன்...? அதான் நான் உன் பக்கத்துலயே இருக்கேனே...அப்புறம் எதுக்கு
டென்சன்? “ என்றான் கனிந்த
குரலில்.
“ஹ்ம்ம்ம் ஆனாலும் கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவுமே டென்சனா இருக்கு
வெற்றி. எல்லாம் சரியா வருமா? “ என்றாள் கலக்கத்துடன்.
******
அவளுடைய ஏழு வருட கனவு இது.
அவள் ஆரம்பித்த அவளின் கனவு ப்ராஜெக்ட் இப்பொழுது வெற்றிகரமாக
முடிந்துவிட, அடுத்து அதை
செயலாக்க வேண்டும்.
ப்ராஜெக்ட் ஐ முடிப்பது
என்பது அவள் கையில் இருந்தாலும், அடுத்து அது வெற்றி பெறுமா? தோல்வியை தழுவுமா? என்பது அடுத்தவரின்
கையில் அல்லவா இருக்கிறது.
எப்படியாவது இந்த
ப்ராஜெக்ட்டை சக்ஸஸ் ஆக்கி விட வேண்டும். எத்தனையோ பேரின் கனவை நிறைவேற்ற போகும்
ப்ராஜெக்ட் அது. அவள் கனவு கை சேராமல் போனதைப் போல மற்றவர்களின் கனவு கலைந்து
விடக்கூடாது.
ஆசை , கனவு கலைந்தால்
எப்படி உயிர் வலி வதைக்கும் என்பதை அனுபவித்து இருந்ததால் அத்தகையை வலியையும்
வேதனையும் மற்றவர்கள் அனுபவிக்க கூடாது என்றுதான் இந்த ப்ராஜெக்ட் ஐ ஆரம்பித்து
இருந்தாள் பொதிகை.
மூன்றாண்டுகளாக திட்டமிட்டு இரவு பகல் பாராமல் அயராது உழைத்து
இப்பொழுது அதை முடித்தும் ஆயிற்று.
அடுத்து அதை வெற்றிகரமாக்க வெண்டும். அது அவள் சந்திக்கப்போகும்
கல்வி அமைச்சரின் கையில்தான் இருக்கிறது எனும்பொழுது டென்ஷன் இருக்கத்தானே
செய்யும்.
அவளெல்லாம் தூர எட்டி நின்று கூட பார்க்க முடியாத, தமிழகத்தின் கல்வி
அமைச்சரை நேரிலேயே சந்திக்கப் போகிறாள்
பொதிகை.
அவளுடைய ப்ராஜெக்ட்டை பற்றி கல்வி அமைச்சரிடம் விளக்க போகிறாள். அவள் எடுத்துச் சொல்லும் விதத்தில்தான்
இருக்கிறது இந்த ப்ராஜெக்ட்டின் வெற்றி, தோல்வி எனும்பொழுது இன்னுமாய் டென்ஷன் ஏறுகிறது தான்.
உலக நாடுகளில் இருக்கும் எத்தனையோ பெரிய பெரிய வாடிக்கையாளர்களிடம் அசால்ட்டாக, சரளமாக, இயல்பாக பேசியிருக்கிறாள்
தான்.
அப்பொழுதெல்லாம் இந்த மாதிரி டென்ஷன் ஆனதில்லை. இப்பொழுது ஏன் இந்த டென்ஷன்? தான் சந்திக்கப்
போகும் நபர் பெரும்புள்ளி என்பதாலா?
ஏன் அதுவும் சரிதானே..! இந்த கல்வி அமைச்சரின் அப்பாய்ன்ட்மென்ட்க்காக
எத்தனையாய் அலைந்திருக்கிறாள்.
பெரிய பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்களை எல்லாம் இயல்பாக
சந்திக்க அப்பாய்ன்ட்மென்ட் கிடைத்து விட்ட நிலையில், நம் நாட்டில் இந்த மாதிரி அரசியல்
தலைவர்களை சந்திக்க என்பது மட்டும்
சந்திரனுக்கே சென்று வருவது போல கடினமான ஒன்று.
ஏன் சந்திரனுக்கே கூட இப்பொழுதெல்லாம் வெகு எளிதாக சென்று வந்து
விடுகிறார்கள். ஆனால் அந்த காலத்தில் இருந்து இன்றுவரை, முக்கிய நபர்களை சந்திப்பது மட்டும் இயலாத காரியம் ஆகி
விடுகிறது.
அதனால்தான் பலமுறை போராடியும் இறுதியில் வெற்றிமாறனால் தான் அது முடிந்தது.
******
பொதிகை அந்த
ப்ராஜெக்ட் முடிவடையும் நிலையில், அடுத்து இதை செயலாக்க கல்வி அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று வெற்றியிடம் சொன்னாள்.
வெற்றிமாறன் பெரும்பாலும் அவனுடைய குடும்ப தொழில்களை கவனித்துக்
கொண்டாலும், அவனும் இந்த பொதிகை
சாப்ட்வேரில் ஒரு பார்டனர் என்ற வகையில் அந்த நிறுவனத்தில் நடப்பதை எல்லாம் பொதிகை
அவனிடம் சொல்லி விடுவாள்.
அவளை சந்திக்க வேண்டும் என்று தோணும் பொழுதெல்லாம் அவனும் அந்த
அலுவலகத்துகு கிளம்பி வந்துவிடுவான்.
அந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை ஆராய்வது போல பாவ்லா
காட்டினாலும் அவனுக்கு அதன் மீது அக்கறை இல்லை. பொதிகைக்காக மட்டுமே அந்த
நிறுவனத்தில் பங்குதாரர் என்று சேர்ந்தது.
அப்படி இருக்க, அவனுக்கு
கிடைக்கும் சொற்ப நேரத்தில் அவளுடைய அலுவலகத்துக்கு வரும்பொழுது, முக்கால்வாசி நேரம் தன்னவளை சைட் அடிப்பதிலயே மும்முரமாக
இருப்பான்.
அவள் நிறுவனத்தின் நிலையை, ப்ராஜெக்ட்டின் ஸ்டேட்டஸ் ஐ கண்கள் விரிய ஆர்வத்துடன் விளக்கி
கொண்டிருக்கும் பொழுது, அவன் பார்வையோ
அவளையே ஆர்வமாய் மொய்த்துக் கொண்டிருக்கும்.
எதேச்சையாய் விழி உயர்த்தி அவனை பார்த்தால், உடனே தன் பார்வையை
மாற்றிக்கொண்டு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் லுக்குக்கு மாறிவிடுவான் அந்த கள்வன்.
அப்படியும் சில சமயம் சில நேனோ செகண்ட்ஸ் தப்பிவிட்டால், அதற்குள் பொதிகை அவன் பார்வையை கண்டுகொண்டால், உடனே அவன் தலையில் நங் என்று ஓங்கி கொட்டி அவனை முறைத்து
வைப்பாள்.
சில நேரம் அவள் முறைப்பை ரசிக்க என்றே அவளை வெறுப்பேத்துவான்.
*****
பொதிகை சாப்ட்வேர் சொல்யூஸனில் பல
ப்ராஜெக்ட்கள் இருந்தாலும் அவளின் இந்த
கனவு ப்ராஜெக்ட்டில் அவள் எப்படி முன்னேறுகிறாள் என்று சின்சியராக அதிக அக்கறை
காட்டி அதன் முன்னேற்றத்தை கேட்டறிந்து கொள்வான்
வெற்றிமாறன்.
பின்ன...இது அவளுக்கு மட்டும் கனவு ப்ராஜெக்ட் இல்லையே..அவனுக்கு
அவனுடைய கனவை நினைவாக்க போகும் ப்ராஜெக்ட்.
இந்த ப்ராஜெக்ட்ஐ வெற்றிகரமாக முடித்தால்தான் அவர்களின்
திருமணம் என்று ஒரே போடாக போட்டுவிட்டாளே அவனவள்...
அப்படி என்றால் இந்த ப்ராஜெக்ட்டை எப்பாடு பட்டாவது வெற்றி பெற
வைத்துவிட வேண்டும் என்பது அவனின் தற்போதைய குறிக்கோள்.
அதனாலயே அந்த ப்ராஜெக்ட் மீது அதிக அக்கறை எடுத்து கொள்வான்.
பொதிகையும் தனக்கு எழும் சில சந்தேகங்களை வெற்றியிடம் சொல்லி
அவனிடம் இருந்து ஐடியாவையும் வாங்கி கொள்வாள்.
அவன் அலுவலகத்துக்கு செல்ல முடியாத நாட்களில் அவளே அவனை அழைத்து
அன்றைய நடவடிக்கையை சொல்லி விடுவாள்.
அதெல்லாம் அவனுக்கு தேவையே இல்லை என்றாலும் அவளின் குரலை
கேட்கவும், அவள் அலுவலை பற்றி
பேசி முடித்ததும் கொஞ்சநேறம் அவளுடன் ரொமான்ஸ் பண்ணவும் அந்த நேரம்தான் வசதி
என்பதால் அந்த நேரத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பான் வெற்றி.
அந்த ப்ராஜெக்ட் முடியும் நிலையில் அடுத்து கல்வி அமைச்சரை
சந்திக்க வேண்டும் என்று அவள் சொல்ல, அவனும் அவளாகவே
முயற்சி செய்யட்டும் என்று விட்டு விட்டான்.
அவனே முன் வந்து
உதவுகிறேன் என்று வந்தால் முறுக்கி
கொள்வாள். .
எல்லாமே தானே செய்யவேண்டும் அடுத்தவரின் உதவி வேண்டி நிற்கக்கூடாது
என்ற கொள்கை உடையவள் ஆயிற்றே.
அதனால் அவள் போக்கிற்கே விட்டு விட்டான் வெற்றி.
பொதிகையும் எத்தனையோ
வழிகளில் கல்வி அமைச்சர் பொன்வண்ணனை சந்திக்க, அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க போராடி விட்டாள். பலன்தான் பூஜ்ஜியமாக இருந்தது.
எப்பொழுது கேட்டாலும் அவர் பிசி என்றே தட்டி கழித்தனர்.
அவர்களை பொருத்தவரை அவள் ஒரு சாதாரண குடிமகள். அவள் நிறுவனமும்
அவ்வளவு பெரியதில்லை. இப்பொழுதுதான் ஆரம்பித்து வளர்ந்து வரும் நிறுவனம்.
அப்படி இருக்க பொதிகை ப்ரம் பொதிகை சாப்ட்வெர் சொல்யூசன்ஸ் என்றால், ஏளனமாக உதட்டை வளைத்தார் அமைச்சரின் உதவியாளர்.
“இல்ல மேடம். இப்ப சார் ரொம்ப பிசி. இன்னொரு நாள் வாங்க...” என்று திருப்பி அனுப்பிவிடுவார்.
அவரை சந்திக்கவே முடியாதா என்று மனம் தளர்ந்திருந்த பொழுதுதான் வெற்றி உதவிக்கு வந்தான்.
கல்வி அமைச்சரின் உதவியாளர்
வெற்றிமாறன் தந்தைக்கு வேண்டியவர் என்பதால் அவரின் மூலமாக கல்வி அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தான். அப்படித்தான்
அவளிடம் சொல்லி வைத்தான்..!
அதை அவள் மனம் ஏற்கவில்லை தான். அடுத்தவர் ரெக்கமென்டேசனில்
தன் ப்ராஜெக்ட்டை கொண்டு செல்ல விருப்பம் இல்லை அவளுக்கு.
அதைக்கண்டு கடுப்பானான் வெற்றி.
“ஹோய் லூசு... இப்போ எதுக்கு இப்படி எல்லாம் ஈகோ பார்க்கிற? . இந்த கம்பெனியில நானும் ஒரு பார்ட்னர் மேடம். மைன்ட் இட்.
அதோடு, எப்பொழுது நான் உன்னை
கண்டேனோ அப்பொழுதே நீ என் மனதில் வந்து
விட்டாய். அப்பொழுதே எனக்குள் ஒருத்தியாய் நீ ஆகிப்போனாய். நீ வேறு நான் வேறு
இல்லை.
உனக்கு ஒன்று என்றால் எனக்கும் தான். அப்படி இருக்க என் வழியாக கல்வி அமைச்சரை
சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைத்ததை ஏன் இவ்வளவு தூரம் யோசிக்கிற?
நான் ஏற்பாடு பண்ணினாலும் அது நீ செய்த மாதிரிதான். உனக்கு உன்
குறிக்கோள் லட்சியம் தான் முக்கியம். அதை அடைய ஒரு வழி இருக்கிறது என்றால் அதை
பயன்படுத்திக்க வேண்டுமே தவிர இப்படியெல்லாம் ஈகோ பார்க்கக் கூடாது...”
என்று அவளை திட்டி முறைக்க, அதில் ஒருவாறு சமாதானம் அடைந்து விட்டாள் பெண்.
அதன்படி அவரை சந்திக்கத்தான்
இப்பொழுது சென்று கொண்டிருக்கிறாள் பொதிகை.
*****
வெற்றிமாறனும் தன் அலுவல்களை ஒதுக்கிவிட்டு அவளுடன் வந்தான். பொதிகை அவன்
வரவேண்டாம் என்று எவ்வளவோ தடுத்து பார்த்தாள்.
அவளுக்கு தெரியும். அவன் ஒரு நாளில் பார்க்க வேண்டிய வேலை நிறைய
உண்டு என்று.
அவளுடையது ஒரு சிறிய குட்டி நிறுவனம் தான். அதை சமாளிக்கவே அவளுக்கு ஒரு நாள் பத்தாது.
அப்படி இருக்க, மாறன் இன்டஸ்ட்ரிஸ்
பல தொழில்களை கொண்டது.
அவன் பொறுப்பேற்றதும் அவன் தந்தை தொழிலில் இருந்து கொஞ்சம்
கொஞ்சமாக விலகி கொண்டு ஓய்வெடுக்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது எல்லாம்
பொறுப்புகளும் வெற்றியின் தலையில்தான்.
அவன் தினமும் பார்த்து கையொப்பமிட வேண்டிய கோப்புகள் சிறிய மலை
போல இருக்கும். அப்படி இருக்க, அவன் வேலையை
விட்டுவிட்டு அவளோடு வருகிறேன் என்று சொன்னதும் முதலில் மறுத்தாள்.
ஆனால் விட்டுவிடுகிறவனா வெற்றிமாறன்?.
அவள் மறுப்பை சட்டை செய்யாமல் இன்று காலையில் அவள்
அலுவலகத்துக்கு வந்து அவளையும் அழைத்துக்கொண்டு இதோ கிளம்பி விட்டான்.
அவனுக்கு ஏனோ அவளை தனியாக அனுப்ப மனம் வரவில்லை. அதனால் அவள்
மறுப்பை சட்டை செய்யவில்லை.
இப்பொழுது மீண்டுமாய் அமைச்சரை சந்திக்க போவதை எண்ணி பார்த்த
பொழுது அந்த டென்ஷன் தான் அவள் முகத்தில் பிரதிபலித்தது.
******
இன்னுமே அவள் முகம் தெளிவில்லாமல், ஒரு வித பதற்றத்துடன் இருப்பதை கண்டவன்
“ஹே... கூல் பேபி. இந்த அமைச்சரை பார்க்க உனக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்.
அவரும் உனக்கு ஒரு க்ளைன்ட் என்று எண்ணிக்கோ. அப்படியும் இல்லைனா மனசுக்குள்ள அந்த
மினிஸ்டரை பார்த்து நீ என்ன புலியானு
கேட்டுப்பார்
அம்புட்டுதான்... தைர்யம் தானா
வந்திடும். அப்படியும் தைர்யம் வரலைனா , அதான் உன் மாமா கூடவே
இருக்கேனே. என்னை நினைச்சுக்கோ...உனக்கு தைர்யம் தானா
வந்திடும்.”
என்று சில பல அறிவுரைகளை வாரி வழங்க, அவள் முகமோ இன்னுமே தெளிவில்லாமல் இருந்தது.
“ஹே பேப்....வேணும்னா உன் டென்ஷனை குறைக்க என்கிட்ட ஒரு வழி இருக்கு.”
என்று முடிக்கும் முன்னே
“என்ன வழி?
சொல்லுங்க...சொல்லுங்க... “ என்றாள் கண்கள் மின்ன ஆர்வத்துடன்.
“அதெல்லாம் வாயால சொல்ல முடியாது.. வேணும்னா டைரக்ட்டா குட்டி
டெமோ காண்பிக்கவா?“
என்று அவளின் இதழை தாபத்தோடு ஒரு மார்க்கமாய் பார்த்து வைக்க, அவன் பார்வையின்
அர்த்தத்தை கண்டு கொண்டவள் லேசாக கன்னம் சிவந்தது.
அவனை செல்லமாய் முறைத்து அவன் தோள்பட்டையில் பட்டென்று ஒரு அடி
போட்டாள்.
“போங்க வெற்றி...எந்த நேரம் என்ன பேசறதுன்னு விவஷ்தையே இல்ல...”
என்று செல்லமாக முறையிட்டாள் பெண்.
“ஹோய் பொண்டாட்டி.... இப்ப நான் என்ன சொன்னேன்? மருந்து இருக்குன்னு
தானே சொன்னேன். நீ ஏதோ தப்பா அர்த்தம் எடுத்துக் கொண்டால் நான் என்ன
பண்றதாம்?
வர வர நீ பேட் கேர்ளா ஆயிட்டு இருக்க. ஒரு
மாசம் முன்னாடி கூட இப்படித்தான். நான் சும்மா பேசிகிட்டு இருக்கறப்பவே லிப்
டூ லிப் கிஸ் பண்ணின...”
என்று குறும்பாக கண் சிமிட்டி சிரிக்க, அவளுக்குமே அந்த நாள் நினைவு வர, அவள் கன்னம் தானாக
சூடேறி சிவந்தது.
அவள் கன்னத்தின் வெட்கப் சிவப்பு, அவனை சுண்டி இழுக்க, ஒரு கையால்
ஸ்டியரிங்கை வளைத்துக் கொண்டே, மறு கையால் அவளின் பட்டான கன்னத்தை தடவினான்
வெற்றி.
முதலில் அவன் தீண்டலில்
கிறங்கினாலும் அடுத்த கணம், தன்னிலை பெற்றவள், பட்டென்று அவன் கையை தட்டிவிட்டு நறுக்கென்று
அவன் தொடையில் கிள்ளினாள் பெண்.
“ஸ்ஸ்ஸாஆஆஆ வலிக்குதடி....ராட்சசி... இப்படியா கிள்ளி வைப்ப? “ என்று அவளை முறைத்து, வலித்ததை போல நடிக்க,
“ஹா ஹா ஹா ரொம்பவும் ஆக்சன் பண்ண வேண்டாம் ஜமீன்தாரே...
இப்படித்தானே நடித்து என்னை உன் பக்கமா கவுக்க வச்ச...” என்று போலியாக முறைத்தவளின் நினைவுகள் அந்த
பொன்னான கல்லூரி நாட்களை நோக்கி பின்னோக்கி சென்றன.
Superb romantic story 👌
ReplyDelete