மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Thursday, December 1, 2022

கனவே கை சேர வா-13

 


 

அத்தியாயம்-13

அன்று:

ந்த ப்ளாக் கலர் பிரிமியர் பத்மினி கார்  அலுங்கி குலுங்கியபடி திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது..!

அந்த வருடத்தில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றிருந்த, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களை பாராட்டி அவர்களுக்கு கலெக்டர் சார்பில் பரிசளிக்கும் விழா திருச்சியில் ஏற்பாடு செய்திருந்தனர்..!

மொத்த மதிப்பெண் அளவிலும் அதோடு ஒவ்வொரு பாடத்திலும்  முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்திருந்த மாணவர்களை விழாவிற்கு அழைத்து இருந்தனர்.

பத்தாம் வகுப்பில் மொத்த மதிப்பெண் மற்றும் ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களில் ராசய்யா மகள் முதலாவதாக வந்திருக்க, கலெக்டரே தொலைபேசி மூலமாக ராசய்யாவை அழைத்து விழாவிற்கு வரவேற்று இருந்தார்..!

அவ்வளவுதான்..!

ராசய்யாவை கையில் புடிக்க முடியவில்லை..!

கலெக்டர் தன்னிடம் நேரில் பேசியதை அங்கிருக்கும் எல்லா ஊருக்கும் தண்டோரா போடாத குறையாக சொல்லி பெருமை அடித்துக்கொண்டான்..!

அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, தன் குடும்பத்தில்  அனைவருக்கும் புது துணிமணி வாங்கி கொடுத்தான்..!

பண்ணையார் வீட்டில்  இருந்த  பழைய மாடல் பிரிமியர் பத்மினி காரை எடுத்து வந்து தன் குடும்பத்தார் அனைவரையும் ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு கிளம்பி விட்டான்..!

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டு அந்த காரை லாவகமாக ஓட்டிக்கொண்டிருக்க, அவன் அருகில் அவன் மகள் தன் தந்தையை பெருமையாக பார்த்தபடி வளவளத்துகொண்டிருந்தாள்.

பின் இருக்கையில் பூங்கொடி, தணிகாசலம், சிலம்பாயி அமர்ந்து இருந்தனர்..!

மலர் தன் குடும்பத்துடன் அவர்கள் சொந்தமாக வாங்கி இருந்த காரில் வந்தனர். அன்பரசனும் அவள் பரிசு வாங்குவதை பார்க்க என்று கிளம்பி வந்திருந்தான்..!

******

திருச்சியில் உள்ள பெரிய மஹாலில் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்..!

முதல் வரிசையில் அந்த விழாவிற்கு வந்திருந்த விஐபிக்கள் அமர்ந்திருக்க,  அதற்கு அடுத்து ஐந்தாவது வரிசையில் ராசய்யா தன் குடும்பத்துடன் அமர்ந்திருந்தான்..!  

இப்படி எல்லாம் ஒரு விழாவிற்கு அவன் இதுவரை வந்ததில்லை..!  

அங்கிருந்த மேடையில் நின்று கொண்டிருந்த மாவட்ட கலெக்டரை பார்க்கவும் அவனுக்கு பெருமையாக இருந்தது..!  

அழகிய மயில் கழுத்து கலரில், சிவப்பு பார்டர் வைத்த, சில்க் காட்டன் புடவையில் இருந்தாள் பூங்கொடி..!  

தும்பைபூ  போன்ற வெண்மையான வேஷ்டி...!  முழங்கை வரை மடித்து விட்டிருந்த இளமஞ்சள் நிறத்தில் முழுக்கை சட்டை... அவனின் முறுக்கிய மீசையும் ராசய்யாவுக்கு  இன்னுமாய் கம்பீரத்தை  சேர்த்தது

ஏனோ நாகரிகம் என்ற பெயரில் எல்லாரும் பேன்ட் சட்டைக்கு மாறிக் கொண்டிருக்க, ராசய்யாவுக்கு மட்டும் அவன் அணியும் வேஷ்டியை விட முடியவில்லை..!  

பூங்கொடி எத்தனையோ முறை சொல்லி பார்த்து விட்டாள்..!

வேஷ்டியை விடுத்து பேன்ட் ஷர்ட் அணியும்படி சொல்லி பார்த்துவிட்டாள்..!  

அவனின் ஒரு பிறந்த நாளன்று பேண்ட் சர்ட் வாங்கி வந்து அவனை போடச்சொல்லி கட்டாயபடுத்த, அவளின் தொல்லை தாங்காமல் அப்பொழுது மட்டும் போட்டு காட்டிவிட்டு,  பின் அதை  கழட்டி  மடித்து வைத்து விட்டான்..!  

வேஷ்டி, சட்டையிலும் கம்பீரமாக அமர்ந்திருந்த தன் கணவனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி.

அவர்களை அடுத்து மற்றவர்கள் அமர்ந்து கொண்டு அங்கு நடப்பவற்றை ஆர்வத்துடன் பார்த்திருந்தனர்..!

சற்று நேரத்தில் விழா ஆரம்பித்து விட, சிறப்பு விருந்தினர் தன் உரையை முடித்து மாணவர்களுக்கு பரிசு வழங்க ஆரம்பித்து இருந்தனர்..!

ஒவ்வொருவரின்  பெயராக அழைத்து பரிசை கொடுத்துக்  கொண்டு இருந்தனர்..!

அப்பொழுது ராசய்யாவின் மகள் முறை வந்திருக்க, ஒரே ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் ஸ்டேட் பர்ஸ்ட் ஐ மிஸ்  பண்ணி  இருக்கும் மாணவி என்று அந்த குட்டியை  அறிமுகப்படுத்த எல்லாரும் கைதட்டி ஆரவரித்தனர்..!  

தன் தந்தையின் அருகில் நடுக்கத்தோடு அமர்ந்து இருந்தவளை ராசய்யா கையை அழுத்தி கொடுத்து, கண்ணால் ஜாடை காட்டி,  அவளுக்கு தைர்யம் சொல்லி அனுப்பி வைத்தான்..!

அழகான இளமஞ்சள் நிறத்தில், மெருன் கலரில் பார்டர் வைத்த பட்டு பாவாடையும்,  அதற்குப் பொருத்தமான  சட்டை...!  ஒற்றைப் பின்னல் அதில் கொஞ்சம் மல்லிகையை தொங்க விட்டு இருக்க,

அது கழுத்து  வழியாக சரிந்து முன்னால் தொங்கி கொண்டிருக்க, தன் பாவாடை தடுக்கி விடாமல் இருக்க, இரு பக்கமும் லேசாக பிடித்து கொஞ்சமாக தூக்கி பிடித்த படி துள்ளலுடன் மேடையை நோக்கி ஓடினாள்..!

தன் மகளின் ஓட்டத்தில் இருந்த துள்ளலும், உற்சாகமும் ராசய்யாவையும் தொற்றிக்கொள்ள, வேகமாக கை தட்டி ஆரவரித்தான்..!   

சிறியவள் மேடைக்கு வரவும், அங்கு நின்று இருந்த கலெக்டர் அவளைப் பார்த்து புன்னகைக்க,  அதுவரை இருந்த சிறு பயம்,  இப்பொழுது ஓடிவிட, எந்த தயக்கமும் இன்றி அவளும் அவரை பார்த்து புன்னகைத்து அவரிடம் கைகுலுக்கினாள்..!    

அவரும் அவளை பாராட்டி பரிசினை கொடுக்க,  அவளின் பார்வை அனிச்சையாய் அவளின் தந்தை இடம் தான் சென்று நின்றது..!  

அவன் கண்களிலோ ஆனந்த கண்ணீர்..!  

கட்டைவிரலை உயர்த்திக் காட்டி புன்னகைக்க, அவளும் மலர்ந்த சிரிப்புடன் அந்த பரிசினை வாங்கி கொண்டு, அவரின் பாதத்தை தொட்டு வணங்கினாள்..!

அதைக் கண்டு அந்த கலெக்டர் ஒரு நொடி அதிசயித்து நெகிழ்ந்து போனார்..!

முன்பெல்லாம் எந்த  ஒரு விசேஷம் என்றாலும் இளையவர்கள், பெரியவர்களின் காலைத் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம்

அவர்களும் குனிந்து இளையர்வகளை தூக்கி,  தலையை ஆதுரமாக வருடி ஆசிவதிப்பர்..!

அந்த வருடலில் அவர்களின் அனுபவமும் அறிவும் சேர்ந்து ஒருவித நேர்மறை எண்ணங்களை இளையவர்களுக்கு வழங்கும்..!

இப்பொழுது எல்லாம் பெரியவர்களிடம்  ஆசிர்வாதம் வாங்குவது குறைந்து இருக்க,  இதுவரை பரிசு வாங்கியவர்கள் யாரும் தன் காலை தொட்டு செல்லாமல் கை குலுக்களோடு சென்று இருக்க, இந்த பெண் திடீரென்று தன் காலில் விழவும் ரொம்பவும் நெகிழ்ந்து போனார் அந்த கலெக்டர்  

உடனே குனிந்து தூக்கி அவளை  ஆசிர்வதித்தார்

பின் தன்னோடு சேர்த்து மெல்ல அணைத்துக் கொண்டவர், அருகில் இருந்த அறிவிப்பாளரிடம் இருந்த மைக்கை வாங்கி பேச ஆரம்பித்தார்..!

“உங்களுக்கு எல்லாம் இன்னொரு முக்கியமான செய்தியை சொல்ல போகிறேன்

இதுவரை என்னிடம் பரிசு வாங்கியவர்கள் அனைவரும் தனியார் பள்ளியில் படித்தவர்கள்..!  ஒரே ஒரு பெண்...  இவள் மாத்திரம்தான் அரசு பள்ளியில் படித்து மாவட்டத்திலேயே முதலாவதாக வந்திருக்கிறாள்..!  

அதை எண்ணி எனக்கு பெருமையாக இருக்கிறது..!  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அரசு பள்ளியும்  இன்னும் தரம் தாழ்ந்து விடவில்லை என்பதற்கு இவளே சான்று..!

புத்திசாலியான,  நன்றாக படிக்கும் மாணவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக படிப்பார்கள் என்பதற்கு இவளே சான்று..!  

அதை விடுத்து எப்படியாவது தங்கள் பிள்ளை முதல் மார்க் வாங்க வேண்டும் என்று  கண்ணை மூடிக்கொண்டு தனியார் பள்ளியில் சேர்த்து காசை வீணாக்க வேண்டாம்..!

அரசு பள்ளிகளிலும் விரைவில் நல்ல தரமான கல்வியே போதிக்கபடும்...” என்று விளக்கியவர், பின் அந்த குட்டியிடம் மைக்கை நீட்டி,

“நீ படித்து முடித்து  என்னவாக போகிறாய்? என்று கேட்க, அவளும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், கலெக்டர் கையில் இருந்த மைக்கை வாங்கியவள்

“நான் டாக்டர் ஆக வேண்டும் சார்...”  என்றாள் கண்களில் கனவு மின்ன..!

பொதுவாக இது எல்லா முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் சொல்வதுதான் என்றாலும் அவள் சொல்லியதில் ஒரு தீவிரம்...ஒரு நிமிர்வு...ஒரு உறுதி இருந்தது

அப்பொழுதே  தான் ஒரு டாக்டர் என்பதை போல இருந்தது அவளின் நிமிர்வும், அவளின் பேச்சும்..!

கலெக்டரும் அதிசயித்தவாறு,

“இதுதான் உன் கனவா? “ என்று விசாரிக்க,

“இல்லை... இது  என் அப்பா உடைய கனவு..! நான் டாக்டராக வேண்டும் என்பது என் அப்பாவின் கனவு. என் அப்பாவின் கனவுதான்  என் கனவு சார்...”  என்று எந்த ஒரு தயக்கமின்றி சொல்ல, அதைக்கேட்டு ராசய்யாவின் கண்கள் பணித்தன..!

தன் தந்தை மீது அவள் வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு மெய் சிலிரித்து போனது ராசய்யாவுக்கு..!

இதற்கும்  அவள் குழந்தையாக  கருவில் இருந்த பொழுது தன் மனையாளின் நலன் கருதி இந்த குழந்தை வேண்டாம் என்று எவ்வளவோ போராடியவன்..!

ஆனால் அவள்  பிறந்த பிறகு தரையில் நடக்க விடாமல் தாங்கிக் கொண்டான்..!  

அதனாலோ என்னவோ இளையவளும் தன் அன்னையை விட அப்பாவைத் தான் அதிகம் தேடுவாள்.  

லேசான சளி காய்ச்சல் உடம்பு வலி எதுவென்றாலும் தன் தந்தையைத் தான் முதலில் தேடுவாள்.  

அவரிடம் தான் முதலில் சொல்லுவாள்.  

பூங்கொடி எவ்வளவு முயன்றும் ராசய்யா அடுத்த பிள்ளைக்கு ஒத்துக்கொள்ளாததால்  ஒற்றை பிள்ளையாய் நின்று போய்விட்டவள்...!

இந்த சிறுவயதிலயே அவளுக்கு இருந்து உறுதியைக்கண்டு திகைத்து போயினர்..!

குட்டி தேவதையாக நின்றிருந்த தன் மகளை  தங்களையும் மறந்து பார்த்து ரசித்திருந்தனர் ராசய்யாவும் பூங்கொடியும்..!

“வெல்  டன்..! உன் கனவு கை சேர வாழ்த்துக்கள் மை டியர் சைல்ட்...”  என்று அந்த கலெக்டரும் அவளை  வாழ்த்தி,  மீண்டும் அவள் தலையை வாஞ்சையுடன் வருடி கொடுத்து  அனுப்பி வைத்தார்

******  

ப்பா என்று கேட்ட தன் மகளின் அலறலில் கொல்லைப்புறமாக வேலை செய்துகொண்டிருந்த ராசய்யா திடுக்கிட்டுப் போனான்.  

அன்று சனிக்கிழமை என்பதால் அவளுக்கு பள்ளிக்கு விடுமுறை...   

அதனால் ஊருக்குள் சென்று விளையாண்டுவிட்டு  வருவதாக சென்று இருந்தாள்.

அன்று கொல்லைப்புறமாக போட்டிருந்த கீரைபாத்திக்கு  இயற்கை உரத்தை தெளித்தும்,  ஆங்காங்கே தெரியும் புல்லை களை எடுத்துக் கொண்டிருந்தான் ராசய்யா.  

திடீரென்று கேட்ட தன் மகளின் குரலில் அதிர்ந்து போனவன்..!  

தான் செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே போட்டு விட்டு வாசலுக்கு விரைந்து வர, அங்கே வீட்டுத் திண்ணையில் வயிற்றை இறுக்கிப் பிடித்தபடி சுரண்டு  படுத்திருந்தாள் அவன் மகள்..!

சற்றுமுன் புள்ளிமானாய் துள்ளி குதித்தபடி விளையாட ஓடியவள்...இப்பொழுது கசங்கிய மலராய், முகத்தில் வலியுடன் துடிப்பதை கண்டவனுக்கு ஒரு நொடி இதயம் நின்று துடித்தது..!

அடுத்த நொடி சமாளித்துக்கொண்டு, வேகமாக  அவளிடம் ஓடி வந்தவன்

“என்னடா கண்ணு ஆச்சு?” என்று விசாரிக்க , அவளோ இன்னுமாய் வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டு,

“தெரியலப்பா... வயிறு ரொம்ப வலிக்குது...”  என்று வேதனையில் முகத்தை சுருக்க, அதில் பதறியவன்

“ஐயோ... அப்படி என்னத்த உன் ஆத்தா செஞ்சு கொடுத்தா? உனக்கு  வயிறு வலிக்கிற மாதிரி...புள்ளைக்கு எது ஒத்துக்கும், ஒத்துக்காது என்று கொஞ்சம் கூட தெரியலை அந்த கருவாச்சிக்கு...”  என்று ஏக வசனத்தில் தன் மனைவியை திட்டியவன்,  

அவள் வயிற்றை நீவி விட,  அப்பொழுதுதான் அவள் பின்புற பாவாடையில் அங்கங்கே சிவப்பு நிறத்தில் திட்டு திட்டாக இருந்த  கரையை பார்த்தான்..!  

அதை கண்டு இன்னுமாய் பதறியவன்

“என்னடா கண்ணா ஆச்சு? ஏன் உன் பாவாடையில் ரத்தம் மாதிரி இருக்கு? எங்கயாவது கீழ விழுந்திட்டியா?   என்று பதற்றத்துடன் கேட்க,  அவளோ இல்லையென்று தலையை உருட்டினாள்.!

பின் மெல்ல எழுந்து அமர்ந்தவள், அருகில் அமர்ந்து இருந்த தன் தந்தையின் இடுப்பை கட்டிக்கொண்டு,

“அப்பா... நான் செத்து போய்டுவேனா? என்னால டாக்டர் ஆக முடியாதா? “ என்று அழுத படி கேட்டு வைக்க, அவள் இரு கண்களிலும்  நீர் கரகரவென சுரந்தது..!

அதைக்கண்டு இன்னுமாய் துடித்தவன்

“அப்படி எல்லாம் எதுவும் ஆகாது டா குட்டிமா.. எங்கயோ கீழ விழுந்து அடிபட்டு இருக்கு...அதான் இப்படி இருக்கு... நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் ஆகாது கண்ணம்மா....”

என்று தன் மகளை சமாதானம் படுத்த முயன்றபடி, அவசரமாக தன் கைபேசியை எடுத்து பூங்கொடிக்கு அழைத்து அவளை உடனே கிளம்பி வரச்சொன்னான்..!

பஞ்சாயத்து அலுவலகத்தில் தன் வேலையில் பிசியாக இருந்தவள்... தன் கணவனின் குரலில் இருந்த பதற்றத்தை கண்டு அதிர்ந்தவள்... அவள் செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு தன் டி.வி.எஸ் ஃபிப்டிஐ எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்து வந்தாள் பூங்கொடி.  

வீட்டிற்கு வந்தவள் வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே வர,  அங்கே அப்பனும் மகளும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கண்களில் நீர் மல்க அமர்ந்திருக்க, அதைக்கண்டு இன்னுமாய்  திடுக்கிட்டு போனாள் பெண்.

வேகமாக அவர்கள் அருகில் ஓடி வந்தவள்,  

“என்னாச்சு மாமா? ஏன் ரெண்டு பேரும் இப்படி உட்காந்து இருக்கீங்க? “ பதற்றத்துடன் விசாரிக்க, ராசய்யாவுக்கோ தன் மகளின் கண்ணீரையும் அவளின் வேதனையையும் கண்டு நெஞ்சம் பதறிக்கொண்டு இருக்க,  வார்த்தை எதுவும் வெளிவரவில்லை

உடனே தன் மகளை பார்த்தவள்

“என்னடி ஆச்சு?  ஏன் ரெண்டு பேரும் அழுதுகிட்டு  இருக்கீங்க? சீக்கிரம் சொல்லித்தொல...”  என்று அதட்ட, அந்த குட்டியும் இன்னுமாய் தேம்பியவாறு

“அம்மா...  நான் சீக்கிரம் செத்து போகப் போறேன்..!  என் பாவாடை எல்லாம் ரத்தமாய்டுச்சு...கூடவே பயங்கர வயிற்றுவலியும்...நான் சாகப்போறனா மா.. என்னால அப்பா ஆசைப்பட்ட மாதிரி டாக்டராக முடியாதா? 

என்று  கண்ணை கசக்கி கொண்டு தேம்பி தேம்பி அழ, அதைக்கண்டு ராசயயவின் கண்களிலும் கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது..!  

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது குட்டிமா... உனக்கு என்ன ஆகி இருந்தாலும் அப்பா உன்ன விட்டுட மாட்டேன்..! பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்து எவ்வளவு பணம் செலவானாலும் உன்னை நான் காப்பாத்துவேன்..!  

எங்கப்பா ஆத்தா மாதிரி நீயும் என்ன பாதியில விட்டுட்டு போய்டக்கூடாது...உன்னை அப்படி போக விடமாட்டேன்...”  

என்று அழுதபடி ஒப்பாரி வைக்க,  அதற்குள்  ஒரளவுக்கு  விஷயத்தை கிரகித்துக் கொண்டாள்  பூங்கொடி.

தந்தையும் மகளையும்  இருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்து போயிருந்தவளுக்கு அப்பொழுதுதான் மூச்சுவிட முடிந்தது..!

கூடவே இருவரும் பண்ணும் அலப்பறையை பார்த்து சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி கொண்டு முகத்தை கடுகடுவென்று வைத்துக்கொண்டு

“அடச்சே... கம்முனு இருங்க ரெண்டு பேரும்...! அவளுக்கு ஒன்னும் ஆகல...” என்று  இருவரையும் அதட்ட,

“போடி.. உனக்கு என்ன தெரியும்? நீ என்ன டாக்டரா? புள்ள வலியால எப்படி துடிக்கிறா..பாரு....” என்று தன் மனையாளை முறைக்க,  

“யோவ் மாமா... நீ  ஆளுதான் பனைமரத்துல பாதியா  வளர்ந்திருக்க.. கொஞ்சமாவது அறிவு இருக்கா?  நீ எல்லாம் கண்ணாலம் கட்டி, பொண்டாட்டி கூட வாழ்ந்து ஒரு புள்ளையயையும்  பெத்துட்டனு வெளியில் சொல்லாத... சிரிப்பாங்க...”  என்று தன் கணவனை முறைக்க,   

“எதுக்கடி சிரிப்பாங்க? எவன் இந்த ராசய்யாவ பார்த்து சிரிப்பான்? அவன் சிரிக்க வாயில பல்லு இருக்காது...! நீ உன் வியாக்கியானத்தை விட்டுட்டு முதல்ல புள்ளைக்கு என்ன ஆச்சுன்னு பாரு...”  என்று தன் மனைவியை முறைக்க

“ஆமா...  என் கிட்ட தான் உனக்கு முறைக்க தெரியும்...மத்தபடி ஒரு மண்ணும் உனக்கு தெரியாது... சரி..சரி.. நீ செத்த வெளியில போய் இரு... நான் அவளை பார்த்துக்கிறேன்...”  என்று தன் கணவனை விரட்ட,  

“நான் எதுக்கு வெளியில போகணும்..?  என் புள்ளையை விட்டு நான் எங்கயும் போகமாட்டேன்...”  என்று அடம் பிடிக்க

பூங்கொடியோ தன் தலையில் அடித்துக்கொண்டாள்.  

“நீ பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல மாமா...  உன் பொண்ணு இப்ப ஆளாகியிருக்கிறா...  அம்புட்டுதான்...”  என்று தன் எரிச்சலை மறைத்துக்கொண்டு,  கொஞ்சம் குரலை தாழ்த்தி, மெதுவாக சொல்ல,  அவனோ  ஒன்றும் புரியாமல் திருதிருத்தான்.  

தன் தந்தையின் இடையை கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகத்தை புதைத்தவாறு  அழுது கொண்டிருந்த சிறியவளும் தன் தாயின் பதிலில் கொஞ்சம் அழுகையை குறைத்து, தலையை மட்டும் நிமிர்த்தி, தன் தந்தையின் கையை சுரண்டி

“அப்பா... ஆளாவறதுனா என்ன? “ என்று ரகசியமாக கேட்டு வைக்க,  அப்பொழுதுதான் ஓரளவுக்கு விஷயம் மண்டையில் உரைத்தது ராசய்யாவுக்கு..!

தன் மகளை  இன்றுவரை சிறு பெண்ணாகவே பார்த்து வந்தவன்..!  

அவள் பருவமடைந்து முழுப்பெண்ணாக வளர்ந்திருப்பாள்  என்பதையே அவனால் எண்ணி  பார்த்திருக்கவில்லை..!  

இப்பொழுதுதான் அவனுக்கு விஷயம் முழுவதுமாக புரிய,  முகத்தில் லேசான வெட்கம் எட்டி பார்த்தது..!

தன் இடுப்பை கட்டிக்கொண்டு கேள்வி கேட்கும் தன் மகளுக்கு என்ன பதில் சொல்ல என தெரியாமல் முழிக்க, அவளோ விடாமல்,

“சொல்லுப்பா...ஆளாவறதுனா என்ன? “ என்று கேள்வி கேட்க, அதுவரை தன் மகள் கேட்கும் கேள்விக்கெல்லாம் சரளமாக பதில் சொல்லி வந்தவன் இப்பொழுது தடுமாறி நின்றான்..!

என்னதான் பெண் பிள்ளைகளை மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தந்தையே ஆனாலும் ஒரு ஆணாக தன் மகளிடமிருந்து தள்ளி நிற்க வேண்டிவரும் என்பதை அந்த நொடியில் உணர்ந்து கொண்டான் ராசய்யா..!  

இந்த உலகத்தை பற்றி, வாழ்க்கையை பற்றி  எத்தனையோ நீதி கதைகளை தன் மகளுக்கு கூறியவனுக்கு இப்பொழுது தன் மகள் கேட்கும் கேள்விக்கு ஏனோ சரளமாக பதில் சொல்ல முடியவில்லை..!  

சங்கோஜத்தில் நெளிந்தவன்

“அது வந்து குட்டிமா...”  என்று இழுக்க,  தன் கணவனின் தடுமாற்றத்தை கண்டு  பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தாள் பூங்கொடி..!  

என்னதான் விளக்கம் சொல்லப் போகிறான்  என்று பார்க்கலாம் என்று அவளும் ஆர்வத்துடன் ஓரக்கண்ணால் தன் கணவனை பார்த்துக் கொண்டிருக்க,  ராசய்யாவும் கொஞ்ச நேரம் திருதிருத்தவன்  பின் எப்படியோ சமாளித்து

“அது வந்து...  உன் அம்மாகிட்ட கேளு கண்ணு...!  அவதான் விளக்கமா உனக்கு எடுத்துச் சொல்வா..! நான் இதோ வந்துடறேன்...உனக்கு ஒன்னும் ஆகலைடா...எல்லாம் சந்தோஷமான விஷயம்தான்...”

என்று தன் மகள் பெரியவளாகிவிட்டாள் என்ற சந்தோஷத்தில் முகம் மலர, தன் மகளை மார்போடு அணைத்து, அவளின் முன் உச்சியில் முத்தம் பதித்து பின் அங்கிருந்து நைசாக நழுவினான்..!

*****

ன் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினான் ராசய்யா..!  

தன் ஊரில் இருப்பவர்கள் எல்லாம் வாயில் விரலை வைத்து ஆச்சரியபடுமளவுக்கு  பிரமாண்டமாக ஏற்பாடு செய்தான்..!

முசிறியில் உள்ள அவர்களின் திருமணம் நடந்த அந்த பெரிய மண்டபத்திலயே விழாவை ஏற்பாடு செய்தான்..!

பூங்கொடிக்குத் தான் கொஞ்சம் கலக்கமும் கவலையுமாக இருந்தது..!  

தன் மகளின் மீதான தன் கணவனின் கண்மூடித்தனமான பாசமும், அவளுக்காக அவன் இவ்வளவு செலவு செய்வதையும் கண்டு அவள் உள்ளே  அபாய மணியை ஒலிக்க வைத்தது..!  

மெதுவாக தன் கணவனிடம் சொல்லி பார்த்தாள்  

மாமா...  இப்ப எதுக்கு இம்புட்டு செலவு பண்ற?  இந்த பங்சனை சிம்பிளா நாலு பேரை மட்டும் கூப்பிட்டு வச்சு பண்ணிட்டு போகக்கூடாதா? என்று ஆதங்கத்துடன் சொல்ல,

“அடிப்போடி...  எனக்கு இருக்கிறது ஒத்த புள்ள...”  என்று அவன் முடிக்கும் முன்னே  

“பாத்தியா...! பாத்தியா..! அதுக்குத் தான் அப்பவே சொன்னேன்... ஒத்த புள்ளையோட நிறுத்த வேண்டாம். இன்னொரு புள்ளைய பெத்துக்கலாம் னு... நீ தான் கேட்கல...”  என்று சந்தடி சாக்கில் தன் மனக்குறையை போட்டுத் தாக்க,

அவனோ ஹா ஹா ஹா வென்று வாய் விட்டு சிரித்தான்..!

“அடியே..!  என் லூசு பொண்டாட்டி..! ஒத்த புள்ளையா இருக்கிறதாலதான்  அவளுக்கு விமரிசையா இந்த விழாவை செய்ய முடியுது.  

உன் அப்பா அம்மா மாதிரி 2  புள்ளையோ 3  புள்ளையோ பெத்திருந்தா ஒன்னுக்கும்  உருப்படியா செய்ய முடியாமல் போயிருக்கும்..!  

இப்ப புரியுதா இந்த ராசய்யா ஏன் ஒன்னோட நிறுத்திக்கிட்டானு...என் மக்கு பொண்டாட்டி...”  என்று அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்ட,  அவன் கையை பட்டென்று தட்டிவிட்டாள் பெண்ணவள்..!

“ஆமா...  இந்த வியாக்கியானக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..!  இந்த விழாவிற்கு இம்புட்டு செலவு செஞ்சா,  நாளைக்கு உங்க இளவரசி வேற டாக்டருக்கு படிக்கணும் னு சொல்ற... அதற்கெல்லாம் எவ்வளவு செலவாகும்

அப்புறம் அவ கல்யாணத்துக்கு வேற நிறைய சேர்த்து வைக்கணும்..! இருக்கிற காசை இவ வயசுக்கு வந்ததுக்கே வாரி இறைச்சிட்டா, பின்னாடி வர்ற செலவெல்லாம் எப்படி சமாளிப்பதாம்..” என்று பொறுப்புள்ள குடும்ப தலைவியாய் தன் கணவனுக்கு எடுத்துச் சொல்ல,

“ஹோய் கருவாச்சி...! என் புள்ளைய என்ன உன்னை மாதிரி மக்குனு நினச்சுகிட்டியா? அவ எவ்வளவு புத்திசாலி தெரியுமா? பாத்த இல்ல.. பத்தாவதுல ஒத்த மார்க் ல மாநிலத்திலயே முதலாவதா வர்றது மிஸ் ஆய்டுச்சு..!

அப்படிப்பட்ட புத்திசாலி என் புள்ள..!   

அவளுக்கு எல்லாம் ஒத்த பைசா செலவில்லாமல் டாக்டருக்குப் படிக்க சீட்டு கிடச்சிடும்னு சொல்லி இருக்காங்க.  அதனால அவளை படிக்க வைக்கிற செலவை பத்தி நீ கவலை படாத

அடுத்து என்ன சொன்ன? அவ  கல்யாணத்துக்கு பணம் வேணுமா?  அதுவும் தான்டி..!  என் புள்ளையோட படிப்புக்கும் அழகுக்கும் திறமைக்கும் மாப்பிள்ளைங்க நீ நானு போட்டி போட்டுகிட்டு வருவானுங்க..!

அதனால அந்த கவலையும்  விடு..!  அப்படியேனாலும் உன் புருஷன் கை கால் எல்லாம்  இன்னும் நல்லாதான் இருக்கு.  

ரெண்டே வருஷத்துல ரெண்டு போகமும்  நல்லா  விளைஞ்சா  போதும்..! ஜாம் ஜாம்னு என் மவ  கல்யாணத்தை நடத்திடலாம்..! அதுக்குள்ள  என்னால சேத்து வைத்துவிட முடியும்...உன் மாமனுக்கு அந்த தில்லு இருக்குடி...”  

என்று பெருமையுடன் சொல்லி, தன் காலரை தூக்கி விட்டுக்கொள்ள,  அதற்கு மேல் பூங்கொடியின் பேச்சு அவனிடம் எடுபடவில்லை.  

மற்ற எல்லாவற்றிலும் அவளின் பேச்சைக் கேட்பவன்..! அவள் போடும்  தாளத்திற்கு ஆடுபவன்..! இந்த குழந்தை விஷயத்திலும்,  அவனின் மகள்  விஷயத்திலும் மட்டும் தன்னவளின் பேச்சை காது கொடுத்து கேட்பதில்லை..!  

பூங்கொடியும் எத்தனையோ முறை முயன்று பார்த்து விட்டு,  சுவற்றில் முட்டிக் கொண்ட கதையாகி போக எப்படியோ போய் தொலையட்டும் என்று விட்டுவிட்டாள்..!  

*****

தாய்மாமன் சீராக அன்பரசன் காஞ்சிபுரம் பட்டு புடவை எடுத்துக் கொடுத்திருந்தான்..!  

ப்யூட்டி பார்லரிலிருந்து வந்திருந்த பெண்கள் அவளை  அழகாக அலங்கரித்து இருக்க, இளம்பச்சை நிறத்தில் அழகிய பிங்க் நிற பார்டர் வைத்திருந்த காஞ்சிபுரம் பட்டுபுடவை..!

கழுத்தில் டெம்பில் செட் நகை...காதில் அதே நகை செட்டில் இருந்த பெரிய ஜிமிக்கி..! கையில் வங்கி..! கற்கள் பதித்த நெத்திச்சுட்டி... இடுப்பில் சின்னதாய் ஒட்டியானம்..!

அவளின் நீண்ட கூந்தலை ஜடை பின்னி அதில் பூமட்டை  வைத்து தைத்திருக்க, அழகு ஓவியமாய்...சின்ன தேவதையாய் அந்த விழா நடைபெறும் மேடைக்கு வந்த  தன் மகளை கண்டதும் ஒரு கணம் இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றான் ராசய்யா..!  

அதுவரை பாவாடை சட்டையுடன் சுற்றிக் கொண்டிருந்தவள்..!  முதன்முறையாக புடவை கட்டி தலை நிறைய பூ வைத்து இருக்க திடீரென்று நெடுநெடுவென வளர்ந்து குமரியாகி விட்ட தன் மகளை காண  ஆச்சரியமாக இருந்தது.  

அதோடு அந்த புடவையில்,  அப்படியே அவன் தாயை உரித்து வைத்திருந்தாள்..!  ஜாடையில் ராசய்யாவை போலவே இருப்பாள் தான்

ஆனால் இப்பொழுது அந்த பட்டு புடவையில் காண அவனுக்கு தன் அன்னையின் முகம் தான் நினைவு வந்தது..!

இதுவரை அதை கண்டு கொண்டிருக்கவில்லை..!  

இப்பொழுது தன் மகளின் முகத்தில் தன் அன்னையை காண அப்படியே உறைந்து நின்றான்.  

தன் அன்னையே  மறு பிறப்பு எடுத்து வந்ததைப் போல,  அவன் கண்கள் குளிர்ந்து போனது.  

யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவன்  அங்கிருந்தபடியே அனிச்சையாய் திரும்பி, தன் மகளைப் பார்த்ததும் அதிர்ந்து போய் நிற்க,  அவன்  கால்கள் கொஞ்சம் தள்ளாடியது..!  

கண்களில் நீர் கோர்த்து நின்றது ஆனந்தத்தில்..!  

ஏதோ கேட்பதற்காக தன் கணவனின் அருகில் வந்தவள்..., அவன் முகத்தில் இருந்த இலகிய தன்மையும் கண்களில் கோர்த்திருந்த நீரையும் கண்டவள்  தன் கணவனின் நிலை  புரிய மெல்ல  கையை அலுத்திக் கொடுத்தாள் பூங்கொடி.

மாமா என்று மெதுவாக அழைக்க,  அதில் சுயநினைவு பெற்றவனாய், மெல்ல சுதாரித்துக்கொண்டு, தன் மகளிடம் இருந்து கண்ணை கஷ்டபட்டு பிரித்தவன்..!  

வெளிவர இருந்த ஆனந்த கண்ணீரையும் உள்ளே இழுத்துக் கொண்டு அவளை பார்த்து மெல்லியதாய் புன்னகைத்தான்..!

“பாத்தியா பூவு...! என் புள்ள எவ்வளவு பெருசா வளந்துட்டா... எம்புட்டு அழகா இருக்கா..! அப்படியே என் அம்மாவே நேர்ல வந்த மாதிரி இருக்கா....” என்று தழுதழுத்தான்..!

அவளுக்குமே தன் மகளை அந்த கோலத்தில்  காண ஆச்சரியம் தான்..!

அவள் தன் கணவனிடமே அடிக்கடி ஒட்டிக்கொண்டிருப்பதால், அடிக்கடி அவளை திட்டினாலும்,  அவளின் ஆழ்மனதில் இருந்த தாய்ப்பாசம் இப்பொழுது பொங்கி வழிந்தது..!

அம்மன் சிலை போல நெடுநெடுவென்று நின்றிருந்த தன் மகளைக் கண்டு பூரித்து தான் போயிருந்தாள்..!   

“ஆமாம் மாமா... எனக்கே இந்தக் குட்டி கருவாச்சி இம்புட்டு அழகா இருக்கான்னு இத்தனை நாளா தெரியல...”  என்று தன் கணவனை இயல்பாக்க தன் மகளை கருவாச்சி என்று சொல்லி  செல்லமாக திட்ட,  அதைக் கேட்டு அவளை முறைத்தவன்

“யாருடி கருவாச்சி? இப்ப அவளை பார்த்து அப்படி சொல்லு பார்க்கலாம்...” என்று சிலிரித்துக்கொண்டு சண்டைக்கு வர,  எப்படியோ தன் கணவன் இயல்பாகி விட்டான் என்று தனக்குள் சிரித்துக் கொண்டே வேண்டும் என்றே அவனை சீண்டி சகஜமாக்கி விட்டு வந்தவர்களை கவனிக்க சென்றாள்..!

ராசய்யாவும் மனம் எல்லாம் நிறைந்து இருக்க, நொடிக்கொரு தரம் தன் மகளை பார்த்து கண்களில் நிறைத்துக்கொண்டு, உற்சாகத்துடன் வந்தவர்களை கவனித்தான்..!

தன் தந்தையின் பார்வை அடிக்கடி தன்னிடம் வந்து செல்வதை இளையவளும்  கண்டு கொண்டு இன்னுமாய் பூரித்து போனாள்..!

அவளுக்கு அவள் அப்பா சந்தோஷமாக இருக்க வேண்டும்..! அவர் முகத்தில் எப்பொழுதும் சிரிப்பும், பெருமையும் நிறைந்து இருக்க வேண்டும். அதுதான் அவள் ஆசை..! கனவு..! அவளின் கனவு கை சேருமா?

பெருமையை தந்த அவளே தன் தந்தைக்கு வலியையும், வேதனையையும் தரப்போகிறாள் என்று அப்பொழுது அறிந்திருக்கவில்லை அந்த பேதைப் பெண்..!

Share:

1 comment:

Followers

Total Pageviews