அத்தியாயம்-15
அன்று:
மாலை நான்கு மணி..!
முசிறியில் உள்ள அரசு மேல்நிலை
பள்ளிக்கூடத்தில் வேகமாக ஒலிக்கும் மணி சத்தம் தேவகானமாய் காதில் ஒலிக்க, ஹோ வென்று கத்தியபடி எல்லா மாணவர்களும் தங்கள் புத்தகப்
பையை எடுத்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியில் ஓடி வந்தார்கள்..!
அவர்களில் ஒருத்தியாய் தன் புத்தக பையை எடுத்து தோளில் மாட்டிக்
கொண்டு, ஏதோ
யோசனையுடன் பள்ளியை விட்டு வெளியில் வந்தாள் அவள்..!
உடன் நடந்து வந்த தோழி ஏதோ கேட்க, அவளோ இன்னும் ஏதோ யோசனையுடன்
தன் தோழிக்கு பதில் எதுவும் சொல்லாமல் வாயிலை
நோக்கி நடந்தாள்..!
ஊதா கலர் சல்வார் பேன்ட்..! வெள்ளை நிறத்தில் டாப்ஸ்..! அதே ஊதா நிறத்திலான துப்பட்டாவை மடித்து இரு பக்கமும் பின்
போட்டிருக்க, கருநாகம் போன்ற அடர்ந்திருந்த அவளின் கூந்தலை
ரெட்டை ஜடையாக்கி ரிப்பன் வைத்து மடித்துக் கட்டி இருந்தாள்..!
அந்த ஜடையும் தோள்வழியாக வழிந்து அவளின் முன்னங்கழுத்தின் இருபக்கமும் தொங்கிக் கொண்டிருந்தது.
காலையில் அவள் தந்தை பறித்து கட்டிக்கொடுத்து இருந்த
மல்லிகைப்பூ இன்னுமே கொஞ்சமும் வாடாமல் அப்படியே இருக்க, பள்ளி வாயிலை தாண்டி வெளிவந்த தன் மகளைக் கண்டதும் ராசய்யாவின் முகம்
மலர்ந்தது..!
பள்ளி வாயிலை விட்டு வெளி வந்தவள்... பேருந்து நிறுத்தத்தை நோக்கி
சென்றவள், அனிச்சையாய்
நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் ஆச்சரியத்தில்
விரிந்தன
தன் மகளையே இமைக்க மறந்து பார்த்தவாறு நின்றிருந்தான் ராசய்யா..!
தொடை வரை மடித்து கட்டிய வேட்டியும், புஜம் வரை மடித்து விடப்பட்ட கட்டம்போட்ட சட்டையுமாய் பைக்கின் மீது அமர்ந்தபடி, ஒற்றைக் காலை தரையில் ஊன்றி நின்றிருந்த தன் அப்பாவை காணவும், அதுவரை முகத்தில்
இருந்த கலக்கம், கவலை, சிந்தனை எல்லாம் மறந்து போக,
“அப்பா.... “ என்று உற்சாகத்துடன்
அழைத்தவாறே ஓடிவந்து அவன் இடுப்பை கட்டிக் கொண்டாள் பெண்.
அவனும் அவளை மெல்ல அணைத்து நெற்றியில் முத்தமிட்டு வைக்க,, அங்கு நடந்து சென்ற மாணவர்கள் எல்லாரும் அவர்களையே பார்த்து சிரித்து விட்டுச் சென்றனர்.
அப்பொழுதுதான் அந்த குட்டிக்கு தன்னிலை உரைக்க, உடனே வெட்கப்பட்டு தன்
தந்தையிடம் இருந்து சற்று விலகி நின்று கொண்டாள்.
அவனும் சிரித்தபடி தன் பைக்கை ஸ்டார்ட் பண்ண, அவளும் பைக்கில் ஏறி, ரெண்டு பக்கமும் காலை
போட்டு அமர்ந்து கொண்டு அவன் இடுப்பை கட்டிக்கொண்டு முதுகில் முகத்தை
புதைத்துக் கொண்டாள்
எப்பொழுதும் தன் அப்பாவுடன் பைக்கில் செல்வது என்றால் அவ்வளவு
பிடிக்கும்..! அதுவும் இப்படி
ஒட்டிக்கொண்டு செல்வது என்றால் ரொம்ப பிடிக்கும்
தன் அப்பாவின் வாசம்…! நாள் முழுவதும்
அசராமல் உழைத்து கலைத்த அந்த வியர்வை வாசம்..!
ரொம்பவுமே பிடிக்கும்..!
அந்த வாசத்தை ஆழ்ந்து நுகர்ந்ததுமே புத்துணர்ச்சி வந்துவிட்டது
பெண்ணுக்கு..!
துள்ளலுடன் இன்னுமாய் தன் தந்தையை இறுக்கி கட்டிக்கொண்டவள்... அப்பொழுதுதான் நினைவு வந்தவளாய்,
“என்னப்பா திடீர்னு ஸ்கூலுக்கு
வந்து இருக்க? “ என்று தன் தந்தையை விசாரிக்க,
“இன்னைக்கு வயல்ல வேலை
சீக்கிரம் முடிஞ்சுருச்சு கண்ணு..!
அப்புறம் விவசாய ஆபீஸ்ல கொஞ்சம் விதைங்க வாங்க வேண்டி இருந்தது.
கூடவே அந்த ஆபிசரையும் பார்த்து பேசிட்டு போக டவுனுக்கு வந்தேன்..!
அதான் அப்படியே உன்னையும் கூட்டிக்கிட்டு போலாம்னு வந்திட்டேன்..”
என்றான் புன்னகைத்தபடி.
முசிறியில் இருக்கும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், இப்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்..!
எப்பொழுதும் காலையிலும் மாலையிலும் முசிறியில் இருந்து அவர்கள்
ஊருக்கு வந்து செல்லும் அரசு பேருந்திலயே பள்ளிக்கு வந்து செல்வாள்..!
ராசய்யாவுக்கு முசிறியில் வேலை இருக்கும் நாட்களில் மட்டும் தன்
மகளை அவன் பள்ளிக்கு வந்து அழைத்து சென்று விடுவான்..!
தன் மகளை பின்னால் அமர்த்திக்கொண்டு அந்த பைக்கை ஓட்டிச்
சென்றவன் சற்று நேரத்தில் பைக்கை நிறுத்த, தன் தந்தையின் பரந்த முதுகில் முகம் புதைத்திருந்தவள் நிமிர்ந்து பார்க்க, அடுத்த நொடி அவளின்
கண்கள் பெரிதாக விரிந்தது.
அது ஒரு சிறிய உணவகம்..!
அதைப் பார்த்ததும் பைக்கில் இருந்து துள்ளிக்குதித்து கீழ
இறங்கியவள்...தன் தந்தையின் கையோடு கை கோர்த்துக்
கொண்டு, துள்ளலுடன் அந்த உணவகத்தின் உள்ளே சென்றாள்..!
இருவர் மட்டும் அமரும் ஒரு டேபிளில் சென்று இருவரும் அமர்ந்து
கொள்ள, அங்கு
வந்த சர்வர் அவளை பார்த்து புன்னகைத்து,
“நல்லா இருக்கியா குட்டிமா? வழக்கம்போல புரோட்டா
தானே...” என்று சிரிக்க
அவளும் வாயெல்லாம் பல்லாக சிரித்தவள்
“ஆமா தாத்தா... இதை வேற நீங்க கேட்கணுமா? அப்புறம் நீங்க எப்பவும் செய்யற மாதிரி வாழை
இலையில புரோட்டாவை நல்லா பிச்சு போட்டு அதில் மட்டன் குருமாவை ஊத்தி ஊறவச்சு
கொடுங்க...” என்று கண்கள் மின்ன சொன்னது பெண்.
*****
பூங்கொடிக்கு மிகவும் பிடித்த கடை இது..!
அவர்கள் திருமணம் முடிந்து அவள் கல்லூரிக்கு வந்திருந்த பொழுது, அவளை அழைத்து செல்ல வந்தவன்... சாப்பிட்டு போகலாம் என்று இந்த கடைக்கு அவளை
அழைத்து வந்திருந்தான்..!
அதோடு இங்கு பரோட்டா நன்றாக இருக்கும் என்று அவளுக்கு வாங்கி
கொடுக்க, அதிலிருந்து அவள்
பரோட்டா பைத்தியமாகி போனாள்..! அதுவும் அந்த சின்னகடை பரோட்டா என்றால் சொத்தையே
எழுதி கொடுத்து விடுவாள்..!
அந்த அளவுக்கு பிடிக்கும்..!
அதோடு பூங்கொடி கன்சீவ் ஆக இருந்த பொழுது, மாதாமாதம் முசிறியில்
இருக்கும் அரசு மருத்துவமனைக்கு செக்கப்புக்கு வரும் பொழுதெல்லாம், மறக்காமல் தன் மாமனை
இந்த கடைக்கு இழுத்து வந்து விடுவாள்..!
அவள் மகள் வயிற்றில் இருந்த பொழுதே இந்த பரோட்டாவை அதிகம் ருசி பார்த்ததாலோ என்னவோ
இளைஅவளுக்கும் அந்த கடை பரோட்டா என்றால் ரொம்ப பிடிக்கும்..!
தன் மனைவியைப் போலவே தன் மகளுக்கும் பரோட்டா என்றால் உயிர் என்று
கண்டு கொண்டவன்... மாதம் ஒருமுறையாவது தன் மகளை இந்த கடைக்கு அழைத்து வந்து விடுவான்..!
*****
காலையில் தான் அவனுக்கு டாட்டா சொல்லி விட்டு
பள்ளிக்கு கிளம்பி சென்று இருந்தாலும், மதியத்திற்கு பிறகு
தன் மகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிவிட்டால் போதும்..!
ஏதாவது காரணத்தை சொல்லிக் கொண்டு பள்ளிக்கு வந்து விடுவான்..!
அதோடு அவளை இந்த கடைக்கு அழைத்து வந்து பரோட்டாவையும் வாங்கி கொடுத்து உண்ண வைத்து
விடுவான்..!
அவர்கள் சாப்பிட்டு விட்டு போகும் பொழுது, பூங்கொடிக்கும், வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் பார்சல்
கட்டிக் கொண்டு சென்று விடுவான்..!
இன்றும் அப்படித்தான்..!
வயலில் ஆட்கள் வாழை மரங்களுக்கு உரம் வைத்துக்கொண்டிருக்க, அதை மேற்பார்வை இட்டபடி அவனும் வேலை செய்து கொண்டிருந்தன்..!
ஏனோ திடீரென்று தன் மகளை பார்க்க வேண்டும் போல இருந்தது..!
அவளுக்கு ஏதோ சரியில்லை என மனம் அடித்துக்கொள்ள, செய்து கொண்டிருந்த
வேலையை அப்படியே போட்டுவிட்டு ஏதோ காரணத்தைச் சொல்லிக்கொண்டு பள்ளிக்கு வந்து
விட்டான்..!
அவன் உள் மனம் எச்சரித்ததை போலவே, பள்ளியில் இருந்து
வெளியில் வந்தவளின் முகம் வாடிக் கிடந்தது..!
கள்ளம் கபடமற்ற, துருதுருவென்று
இருக்கும் தன் மகளின் முகத்தில் ஏதோ சிந்தனையும் குழப்பமும் கவலையும் மண்டி கிடந்ததை
கண்டு கொண்டான் அந்த தந்தை..!
ஆனால் உடனேயே அதை பற்றி தன் மகளிடம் விசாரிக்காமல், அவளை தன் பைக்கில்
ஏற்றிக்கொண்டு அவளுக்கு பிடித்த உணவகத்துக்கு வந்து விட்டான்.
சற்று நேரம் அன்றைய தன் பள்ளி கதைகளை எல்லாம் அவனிடம் வளவளத்து கொண்டிருந்தவள், அவள் கேட்டபடி பரோட்டா
வந்து விடவும், கதையை மறந்து பரோட்டாவுடன் ஐக்கியமாகிவிட்டாள்..!
ராசய்யாவும் சாப்பிட்டுக்கொண்டே தன் மகளின் முகத்தை ஆர்வமாகப்
பார்த்துக் கொண்டிருந்தான்..!
பள்ளியை விட்டு வரும்பொழுது தொங்கி போயிருந்த முகம் இப்பொழுது
சாதாரணமாகிவிட்டதுதான்..!
ஆனாலும் அப்பொழுது ஏன் அப்படி இருந்தாள் என்ற கேள்வி வண்டாக
அவன் உள்ளே குடைந்து கொண்டிருந்தது..!
தன் மகளின் முக வாட்டத்திற்கான காரணத்தை சொல்லுவாள் என்று
அவளின் முகத்தையே பார்த்திருக்க, அவளோ அப்படி எதுவும் சொல்லாமல் தன் பரோட்டாவை ஒரு கட்டு
கட்டிக்கொண்டிருந்தாள்..!
கீழ குனிந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் அனிச்சையாய் நிமிர்ந்தவள், தன் தந்தையின் முகம்
நோக்க, அவன் முகத்தில் , அந்த பார்வையில் இருந்த கேள்வியை கண்டுகொண்டு
“என்னாச்சுப்பா? ஏன் என்னையவே
பாத்துக்கிட்டிருக்க? “ என்றாள்
கேள்வியுடன்..!
“குட்டிமா....அது வந்து.... நீ என்கிட்ட ஏதாவது சொல்லணுமா? “ என்று பேச்சை
ஆரம்பிக்க, இளையவளோ
“என்ன சொல்லணும்? ஒன்னுமில்லையே...” என்று புரியாதவளாய் அவன் முகம் பார்க்க,
“இல்ல... நீ பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில வர்றப்ப ஏன் உன்
முகம் வாடிக்கிடந்தது? ஏதோ கவலையா இருக்கிற மாதிரி இருந்துச்சே...” என்று கனிவுடன் விசாரிக்க, அதைக்கேட்டு அதிர்ந்தாலும்
தன் முகத்திலிருந்தே தன் அகத்தை கண்டுகொண்ட தன் தந்தையை எண்ணி
பெருமையாக இருந்தது..!
இப்படிப்பட்ட பாசக்கார, தன் மேல் உயிரையே வைத்திருக்கும் தன் தந்தையின் கனவை கை
சேர்க்க முடியாமல் போய்விடுமோ என்று மீண்டும் அவள் கண்கள் கரித்துக்கொண்டு
வந்தது..!
அதுவரை இயல்பாக வளவளத்துக் கொண்டிருந்தவள் முகத்தில் இப்பொழுது
கவலையும் வேதனையும் கலக்கமும் வந்து சூழ்ந்து கொள்ள, அதை கண்டு பதறிப்
போனான் ராசய்யா..!
“என்னடா கண்ணு? ஏன் உன் முகம் வாடி
போச்சு? பள்ளிக்கூடத்துல ஏதாவது பிரச்சனையா? “ என்று பதற்றத்துடன் விசாரிக்க,
“இல்லை...” என்று தலையசைத்தாள் இளையவள்..!
“பின்ன.. வேற என்ன பிரச்சனை? சொல்லு டா குட்டிமா? யாராவது எவனாவது உன்
கிட்ட வம்பு பண்ணினாங்களா? அப்படி இருந்தா சொல்லுடா தங்கம்..! அவன் கையை
கால உடைச்சுடறேன்..” என்று பல்லை கடிக்க,
“அச்சோ... அப்படி எலலம் ஒன்னும் இல்லப்பா.. அப்படியே எவனாவது என்கிட் வம்பு பண்ணினா அவன் கைய கால நானே உடைச்சிடுவேன்..ஏன்னா, நான் இந்த ராசய்யாவோட பொண்ணாக்கும்... ” என்று பெருமையாக சொல்ல,
“இதுதான் என் புள்ள..! வேற யாரும் வம்பு பண்ணலைனா, வேற என்னடா? ஏன் உன் முகம்
கலங்கி போச்சு..? ” என்று மீண்டும்
அக்கறையுடன் விசாரிக்க, இளையவளின் கண்கள் மேலும் கலங்கியது..! ,
“ப்ச்... இது வேற
பிரச்சனை பா...” என்றாள் உதட்டை அழுந்தக்
கடித்து கொண்டு
அதைக்கேட்ட ராசய்யா வுக்கு திக்கென்றது..!
வயசு பொண்ணு பிரச்சினைனு சொல்லவும், அவனுக்கு அவன் செய்தி தாள்களில் படித்திருந்த எல்லா
பிரச்சனைகளும் கண் முன்னே வந்து சென்றது..!
இந்த காலத்து பிள்ளைகள் ஒழுங்காக பள்ளிக்கு சென்று வந்தாலும்
சில தருதலைகள் காதல் கத்தரிக்காய் என்று பிள்ளைகளின் மனதை கலைத்து, காதல் என்ற மாய வலையில் விழ வைத்து அவர்களின் எதிர்காலத்தையே
அழித்துவிடும் எத்தனையோ செய்திகளை அவனும் படித்து இருக்கிறான்..!
இப்பொழுது தன் மகளும் அந்த மாதிரி பதின்வயதில் இருக்கிறாள்..!
அவளுக்கு அந்த மாதிரி யாராவது தொல்லை கொடுக்கிறார்களோ?
அந்த மாதிரி தொல்லை கொடுத்தாலும் அதை எல்லாம் எதிர்த்து நிக்க
வேண்டும்...அதை சமாளிக்க வேண்டும் என்று தன் மகளுக்கு ஏற்கனவே சொல்லி
கொடுத்திருக்கிறான்..!
அவனுக்கு தெரிந்த தற்காப்பு
கலைகளை கூட சொல்லி கொடுத்திருக்கிறான்..!
இதே வயதில் அவன் மனையாள் அப்பொழுதே இடுப்பில் கத்தியை சொருகிக்கொண்டு சுத்திவந்ததை தன் மகளிடம் கிண்டலாக சொல்லி
அவளும் எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று போதித்திருக்கிறான்..!
பாரதியாரின் அச்சமில்லை...அச்சமில்லை கவிதையை எத்தனைமுறை அவள்
வாயால் கேட்டு மகிழ்ந்திருக்கிறான்..!
அப்படி இருக்க, தன் மகள் அந்த
மாதிரி எல்லாம் மனதை அலைபாய விடுகிறவள் அல்ல என்று உறுதியாக தெரிந்தது..!
பின்ன, பிரச்சனை என்றால் வேற
என்னவாக இருக்கும் என்று எல்லாம் கோணத்திலயும் யோசித்து பார்த்தவனுக்கு ஒன்றும்
பிடிபடவில்லை..!
மீண்டும் தன் மகளிடமே விசாரித்தான்..!
“சொல்லுடா கண்ணம்மா? வேற பிரச்சனைனா என்ன பிரச்சனை? எதுவா இருந்தாலும் இந்த அப்பா உன்னோட துணைக்கு நிப்பேன்..! நீ
எதுக்கும் கலங்காமல் தைர்யமா இரு...” என்று சமாதானபடுத்த,
“ஹ்ம்ம்ம்ம் வந்து... உன் கனவு
என்னப்பா? “ கேள்வி கேட்டாள்
பெண்..!
இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாமல் இதை கேட்கிறாள் என்று
யோசித்தவாறு
“என் கனவு, லட்சியம் எல்லாம்
நீ டாக்டர் ஆகணும்ங்கிறதுதான் தங்கம்..!
சரியான மருத்துவ வசதி இல்லாமல் தான் என் அம்மாவையும்
அப்பாவையும் சின்ன வயசுல தொலச்சுட்டு அனாதையா தவிச்சேன்..!
என்னை மாதிரி யாரும் தவிக்கக்கூடாது..! அதனால நீ படிச்சு நல்ல ஒரு டாக்டராக வேண்டும்..! எத்தனையோ பேரை நீ காப்பாத்தணும்..!
உன்னை எப்படியாவது டாக்டராக்கி
பார்த்துவிட்டால் இந்த அப்பா ஆத்மா சாந்தி அடையும்..!
என் பெத்தவங்களை காப்பாத்த முடியலையேங்கிற வேதனை குறையும் டா
குட்டிமா..! அதுக்காகவாவது நீ டாக்டராகிடணும்...”
என்று கண்கள் பளபளக்க, தன் கனவை சொல்லி, அழுந்த கண்களை மூடி
திறந்தான் ராசய்யா..!
தன் தந்தையின் முகத்தில் இருந்த கனவைக் கண்டு கொண்டவள் மீண்டும்
கலங்கி போனாள்..! மெல்ல வாய் திறந்து
“அதுல கொஞ்சம் சிக்கல் இருக்கும் போல இருக்கு பா...” என்று தழுதழுத்தாள்..!
அதைக்கேட்டு அதிர்ந்து போய்
“என்னடா சிக்கல்? எதுல சிக்கல்? “ என்றான் யோசனையாக
“அதுதான் பா... டாக்டர் சீட் கிடைக்கிறதுல தான்...” என்று இழுக்க,
“அதெல்லாம் என் பொண்ணு
சூப்பரா வாங்கிடு வா..! பத்தாவது ல ஒரு மார்க்கில
ஸ்டேட் பர்ஸ்ட் ஐ தவற விட்டுட்டா..!
ஆனால் பிளஸ் டூல விட்டதை புடிச்சிடுவா...! அவ தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரப்போறா ..! அவளுக்குபோய் டாக்டர் சீட் கிடைக்காமல் போய்டுமா?
எல்லா மெடிக்கல் காலேஜ்லயும் கூப்டு சீட்டு கொடுப்பானுங்க... அதுக்கு ஏன் டா நீ கவலைப் படனும்? “
என்று பெரிமையாக பூரிப்புடன் சொன்னவன் இறுதியில் புரியாமல் தன்
மகளை பார்க்க,
“நீ சொல்றது சரிதான் பா..! வெறும் பிளஸ் டூ மார்க்கை வச்சு
டாக்டர் சீட்டு வாங்கிடலாம் தான்..! ஆனால் இப்ப அப்படி முடியாது போல இருக்கு பா..”
என்றாள் வேதனையில் உள்ளே சென்ற குரலுடன்..!
“முடியாதா? என்னடா சொல்ற? கொஞ்சம் விளக்கமா சொல்லேன்..” என்று பதற்றத்துடன் விசாரிக்க,
“ஆமாம் பா... இத்தனை நாளா நாம பிளஸ் டூ ல வாங்கின மார்க்கை
வச்சுத்தான் கவர்ன்மென்ட் மெடிக்கல் காலேஜ் ல டாக்டர் சீட்டு கொடுத்தாங்க...! ஆனா இப்போ புதுசா நீட்(NEET) னு ஒரு எக்ஸாம் கொண்டு வந்திருக்காங்க..!”
“நீட் ஆ? அப்படினா ? “ என்று படிக்காத அந்த
தந்தை குழப்பத்துடன் கேட்க,
“நீட் னா நேஷனல் எளிஜிபிலிடி என்ட்ரன்ஸ் டெஸ்ட் பா...
முன்னாடி நம்ம தமிழ்நாட்டுல இருக்கிற பசங்க மட்டும் வாங்குற மார்க்க
வச்சு, தமிழ்நாட்டுல இருக்கிற மெடிக்கல் காலேஜ் ல சீட் தருவாங்க..!
அதனால ப்ளஸ் டூ ல நல்ல மார்க் வாங்கினாலே டாப் ரேங்க் ல
வந்திடலாம்..! ஆனால் இப்ப இந்தியா முழுவதும் ஒரே காமன் என்ரென்ஸ் டெஸ்ட் னு கொண்டு வந்துட்டாங்க..!
அதோட எல்லா ஸ்டேட்ல இருக்கிற பசங்க வாங்கற மார்க்க வச்சுதான் ரேங்க் போடுவாங்க...! அப்படி ரேங்க் போட்டு அந்த ரேங்க் படி தான் சீட்டு கொடுப்பாங்க..!
வேற மாநிலத்தில இருக்கற பசங்க நம்ம மாநிலத்தில இருக்கிற
மெடிக்கல் காலேஜ்லயும் சேர்ந்துக்கலாம்...! அதனால நம்ம ஸ்டேட் சீட் எல்லாம் வேற
ஸ்டேட் பசங்களுக்கு போய்டும். நமக்கு வாய்ப்பு ரொம்ப கம்மியாய்டும்...” என்று
மீண்டும் வேதனையோடு சொல்ல,
“அது எப்படி கண்ணு? நம்ம பசங்களும் நல்லா படிச்சா டாப் ரேங்க் ல வந்திடலாம் இல்ல?” என்று இன்னுமாய் புரியாமல் விசாரிக்க,
“இந்த என்ட்ரன்ஸ் டெஸ்ட் நம்ம ப்ளஸ் டூ எக்ஸாம் மாதிரி இல்லப்பா..!
ப்ளஸ் டூ எக்ஸாம் னா, பாடப்புத்தகத்தில் இருக்கிற
கேள்விகள் தான் கேட்பாங்க.. புத்தகத்தை மட்டும் நல்லா படிச்சா ஈசியா மார்க்
வாங்கிடலாம்.. ஆனால் இந்த நீட் எக்ஸாம் ல
பாடப்புத்தகத்தில் இல்லாதது..அப்படியே இருந்தாலும் ரொம்ப டீப்பா கேட்பாங்களாம்..!
அதுல வர்ற கேள்விகள்
எல்லாம் கஷ்டமா இருக்குமாம்..
இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஒவ்வொன்னுல
இருந்தும் 45 கேள்விகள் னு மொத்தம் 180
கேள்விகள்
இருக்குமாம்.
ஒரு கேள்விக்கான சரியான விடைக்கு 4 மார்க்; மொத்தம் 720 கார்க்குக்கு ஆன்ஸர் பண்ணனும்.
ஒரு கேள்விக்கு சரியான ஆன்ஸர் பண்ணினால் 4 மார்க். தவறான ஆன்ஸர் பண்ணினால் 1 மார்க் மைனஸ்..
அதுவும் இல்லாமல் 180 கொஸ்டின்ஸ் மூணு மணி நேரத்துல முடிக்கணும்.
அப்படினா வேகமா ஆன்ஸர் பண்ணனும். அப்படி வேகமா எழுதணும்னா எப்படியும் ரெண்டு மூணு வருஷமாவது அதுக்கு பிராக்டிஸ்
பண்ணியிருக்கணும்..!
மத்த ஸ்டேட்ல இருக்கிற பசங்க எல்லாம் எப்போ இருந்தே இதுக்காக பிரிப்பேர்
பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம்..
ஆனா நம்ம ஊர்ல எப்படியும் நீட் இருக்காதுனு அசால்ட்டா
இருந்துட்டோம்...இப்ப திடீர்னு இந்த வருஷம் நீட் மூலமாதான் டாக்டர் சீட் பில் பண்ணனும்னு
சொல்லிட்டாங்க... இப்ப திடீர்னு எப்படிப்பா படிக்கிறது....” என்று கண்களில் கண்ணீர் மல்க விசும்ப ஆரம்பித்தது பெண்..!
உடனே தன் மகளின் தலையை தோளில் சாய்த்துக்கொண்டவன், அவள் கையை மெல்ல
அலுத்திக் கொடுத்தவாறு,
“கவலப்படாத கண்ணு..! நீயும் நல்லா படிக்கிற புத்திசாலி
புள்ளடா...! நல்லா படிச்சு, உன்னாலயும் அந்த
சுண்டக்கா பரிட்சையில முதல் ரேங்க் வாங்க முடியும் தங்கம்...” என்று தன் மகளின்
மீதான அதீத நம்பிக்கையில் அவளை தேற்ற முயன்றான் ராசய்யா..!
ஆனால் அதுவே சின்னவளுக்கு பெரும் வேதனையை தந்தது..!
தன் மீது அலாதி நம்பிக்கையை வைத்திருக்கும் தன் தந்தையின் கனவை
நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற கலக்கம் இன்னுமாய் அவளை சூழ்ந்து கொள்ள, அவள் உடல் நடுங்கியது..!
“நீ நினைக்கிற மாதிரி இது
சுண்டக்கா பரிட்சை இல்லப்பா... ரொம்பவும் கஷ்டமான எக்ஸாம்..! எனக்கு கூட
இந்த பரிட்சையை பத்தி அவ்வளவா தெரியாது..!
இந்த வருஷம் நீட் வராதுனு யாரும் அதைப்பத்தி பெருசா
கண்டுக்கலை..! போர்ட் எக்ஸாம்க்குத்தான் எல்லாரும் படிச்சுகிட்டு இருக்கோம்..!
ஆனால் இன்னைக்குத்தான் ஹெச். எம் மேடம் கூப்பிட்டு சொன்னாங்க..!
இந்த வருஷம் நீட் எக்ஸாமை கட்டாயமாக்கிட்டாங்களாம்..! அதனால
எல்லாரும் இன்னுமே நல்லா படிக்கணும் னு சொல்லி நீட் பத்தி சொன்னாங்க..!
பழைய கொஸ்டின் பேப்பரையும் காட்டுனாங்க..!
அவங்க சொன்னதை கேட்டுத்தான் பயமா இருக்கு பா... அதோட கொஸ்டின்
பேப்பரை பார்த்தால் ஒன்னுமே புரியலை..! எதுவுமே படிக்காத மாதிரி இருக்கு..!
என்னால அந்த நீட் எக்ஸாம் ல நல்ல மார்க் வாங்க முடியுமானு பயமா
இருக்கு பா...”
என்று தேம்பியவாறு தன் தந்தையின் தோளில் இன்னுமாய் முகத்தை
புதைத்துக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள் பிள்ளை..!
ராசய்யாவுக்கோ என்ன
சொல்வதென்று தெரியவைல்லை..! தன் மகள் விளக்கியதில் பாதி புரிந்தும், பாதி புரியாமலும் தான் இருந்தது..!
இரண்டாம் வகுப்புகூட
தாண்டியிராதவனுக்கு தன் மகள் சொன்ன நீட் எக்ஸாம் பற்றியெல்லாம் ஒரு மண்ணும்
புரியவில்லை..!
அவனை பொறுத்தவரை,
பன்னிரெண்டாம்
வகுப்பில் நல்லா படிச்சு, நல்ல மார்க்
வாங்கினால், டாக்டர் சீட்
கிடச்சிடும் என்பது மட்டுமே..!
இப்பொழுது திடீரென்று தன் மகள் என்னென்னவோ சொல்லி தேம்பி அழுவ, ,அவனுக்கு என்ன சொல்வது? எப்படி ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று புரியாமல் அவனுமே கண்
கலங்கினான்..!
ஆனாலும் தன்னை
சமாளித்துக்கொண்டு
“அழுவாத குட்டிமா... கண்டிப்பா ஏதாவது ஒரு வழி
இருக்கும்...அப்புறம் ஹெட்மாஸ்டர் என்ன சொன்னாங்க? ஏன் இந்த பரிட்சையை பத்தி முன்னாடியே சொல்லலை..
போனவாரம் அந்தம்மாவை மார்க்கெட்ல பார்த்தப்ப கூட இப்படி ஒரு
பரிட்சை இருக்குனு சொல்லலையே..உன் பொண்ணுக்கு டாக்டர் சீட் கட்டாயம்னு தானே
சொன்னாங்க...” என்று சிறு கோபத்துடன் விசாரிக்க,
“ப்ச்.. நீட் எக்ஸாமை எதிர்த்து கேஸ் போட்டு இருந்ததால அவங்களும்
நீட் இந்த வருஷம் வராதுன்னு அசால்ட்டா இருந்துட்டாங்க..!
கேஸ் தோத்துடுச்சாம்... இப்ப திடீர்னு நீட் இந்த வருஷம்
கட்டாயம்னு சொல்லிட்டாங்க..!அதான் என்ன பண்றதுனு தெரியலை...? “ என்று இன்னுமாய் குலுங்கி அழுதாள்..!
தன் மகளின் கண்ணீரை கண்டு அந்த தந்தையின் மனம் பதைத்தது.!
“சரிடா கண்ணு...அதுக்கு போய் இப்படி அழுவணுமா? அழுதா பிரச்சனை தீர்ந்திடுமா?
எல்லா பிரச்சனைகளுக்கும் கட்டாயம் ஒரு தீர்வு இருக்கும்..!
கண்டிப்பா இந்த பரிட்சையிலும் நல்லா எழுத ஏதாவது வழி இருக்கும்....” என்று
சொல்லும் முன்னே , தோளில் இருந்து
தலையை மெல்ல நிமிர்த்தியவள்,
ஹெச். எம் ம் ஒரு வழி சொன்னாங்கப்பா...” என்று தயக்கத்துடன்
இழுக்க, ராசய்யாவின் முகத்தில் பெரும் நிம்மதி வந்து
போனது..!
“என்ன வழி டா குட்டிமா? “ என்று ஆர்வமாக கேட்க,
“அது வந்து...நீட் எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்ண என்றே தனியார்
கோச்சிங் கிளாஸ் இருக்காம்..அந்த கோச்சிங் கிளாஸ் ல சேர்ந்தா இன்னும் நல்லா
பிரிப்பேர் பண்ணலாம்..
அவங்க ஏதோ டெக்னிக் எல்லாம் சொல்லி தருவாங்களாம்... நம்ம
கவர்ன்மென்ட் ஸ்கூல் ல அந்த வசதி எல்லாம் இல்ல...அதனால முடிஞ்சா அதுமாதிரி க்ளாஸ்
போய் பாருங்க னு சொன்னாங்க...” என்று
மெல்ல இழுக்க,
அதைக்கேட்டவனின் முகம் பிரகாசமானது..!
“அப்புறம் என்னடா குட்டிம்மா... பெரிய வாத்தியாரம்மாவே சொல்லிட்டாங்க
இல்லை.. அப்ப சரிடா கண்ணு..! நீயும் அதுல
சேர்ந்துக்கோ..! ஆமா அது எங்க இருக்கு? முசிறியில இருக்கா ? “ என்று விசாரிக்க,
“இல்லப்பா...! இங்க அந்த அளவுக்கு இல்ல... நாமக்கல் ல நிறைய இருக்காம்
பா...” என்றாள் பெண்.
அதைக்கேட்டதும் யோசனையானான் ராசய்யா..!
முசிறியில் இருந்து நாமக்கல் செல்ல ஒரு மணி நேரம் ஆகும்..!
அப்படி தினமும் சென்று வர வேண்டுமென்றால் தன் மகள் சோர்ந்து விட மாட்டாளா? என்று யோசிக்க இளையவளும் அதையேதான் சொன்னாள்.
தினமும் இங்கிருந்து அங்க போயிட்டு வரணும்னா டயர்ட் ஆகிடும்
பா.. வேணும்னா வார கடைசியில் நடக்கும் பேச்
ல சேர்ந்துக்கலாம்...” என்று அவளே வழியையும் சொல்ல, எதுவும் யோசிக்காமல்
“சரிடா கண்ணு...அப்படினா நீ சனி, ஞாயிறு மட்டும் போயிட்டு வர்ற மாதிரி பாத்துக்கலாம்... அது
சரி.. அதுக்கு எவ்வளவு செலவாகும்? “ என்று விசாரிக்க, இளையவளும் தயங்கியபடி
“லட்சத்துக்கும் மேல செலவு ஆகும் பா...” என்றாள் மெல்லிய
வெளிவராத குரலில்.
அதைக் கேட்டு அதிர்ந்து போனான் ராசய்யா..!
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க, பள்ளிக்கூடத்திற்கு ஆயிரம் ரூபாய்தான் பீசாக கட்டுகிறான்..! அப்படியிருக்க இந்த தனியார் கோச்சிங் ங்ற்கு லட்ச
ரூபாய் கட்ட வேண்டும் என்றதும் கண்கள் விரிந்தது..!
அதோடு அவனிடம் இப்பொழுது லட்ச ரூபாய் எல்லாம் இருக்க வில்லை..!
கையில் இருந்த சேமிப்பை எல்லாம் தன் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு
செலவழித்து விட்டான்..! மீதி காசை
இப்பொழுது விவசாயத்தில் தான் போட்டு இருக்கிறான்
அறுவடை முடிந்த பிறகுதான் அவன் கையில் கொஞ்சமாவது காசு புலங்கும்..என்ன
செய்ய என்று யோசிக்க, அப்பொழுதுதான் அவன் மனைவி பூங்கொடி இந்த
விழாவிற்கு இவ்வளவு செலவு பண்ண வேண்டாம் என்று சொல்லி தலையால அடித்துக்கொண்டது நினைவு வந்தது..!
ஒரு நிமிஷம் அவ பேச்சைக் கேட்டு இருக்கணுமோ என்று யோசித்தான் ஆனால்
அன்று விழாவில் தன் மகளை அவ்வளவு அழகாக அம்சமாக பார்த்தவன்..!
அவளின் அந்த கோலம் இன்னுமே மனதில் நின்றது..!
தான் அந்த அளவுக்கு செலவு செய்ததில் தப்பே இல்லை என்று மனதை தேற்றிக்
கொண்டவன், இப்பொழுது
பணத்துக்கு என்ன செய்ய என்று கவலை சேர்ந்தது..!
ஆனாலும் தன் மனக்கவலையை வெளிக்காட்டாமல் தன் மகளுக்கு ஆறுதல்
சொன்னான்..!
“அம்புட்டு தான கண்ணு..! கட்டிடலாம்..! நீ அதிலேயே சேர்ந்து படி...” என்று சிரிக்க முயல,
“அப்பா...அவ்வளவு பணம் உன்கிட்ட இருக்கா? “ என்று மகள் சந்தேகமாக
கேட்க
“ஹா ஹா ஹா உன் அப்பன் விவசாயம்தானே பாக்கிறான்..! அவன்கிட்ட என்ன இருக்குன்னு
யோசிக்கிறீயா கண்ணு...? மாச சம்பளம் வாங்குற ஆள விட, விவசாயத்தில் அதிகம் சம்பாதிக்கலாம் டா..!
அதனால பணத்தை பத்திக் கவலைப் படாத..! நீ உன் படிப்பில மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
என் பிள்ளை சூப்பரா படிச்சுட்டு, அவ ஒரு டாக்டராகி வந்தா போதும்...” என்று இன்னுமாய் ஏதேதோ மகளுக்கு அறிவுறுத்தி, அவளை சமாதானப்படுத்தி
வீட்டிற்கு அழைத்து சென்றான் ராசய்யா..!
******
💗💗💗💗💗💗💗💗
ReplyDeleteUpdate mam ??????
ReplyDelete