மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Sunday, December 25, 2022

கனவே கை சேர வா-16

 


அத்தியாயம்-16

 

காரில் பயணித்துக்கொண்டிருந்த பொதிகையின் நினைவுகளில் அவர்களின் கல்லூரி நாட்கள் வந்து நின்றது.

அன்று நடந்த ப்ரெஸ்ஸர்ஸ்  பார்ட்டியில், பொதிகை தான் தன்னவள் என்று உறுதி செய்து கொண்ட வெற்றிமாறனுக்கு உலகமே மாறிப் போனது.  

புதுமனிதனாய் பிறந்ததை போல உள்ளுக்குள் உற்சாகம் குமிழிட்டது.

அதற்காக அடுத்த நாளே அவள் முன்னே மண்டியிட்டு சிவப்பு ரோஜாவை நீட்டி,  அவன் காதலை சொல்லி விடவில்லை.  

அவள் இப்பொழுதுதான் முதலாம் ஆண்டு மாணவி.  அவனோ இன்னும் பைனல் இயர் ஸ்டூடண்ட் தான். இந்த இறுதி வருடத்தை முடித்துவிட்டுத் தான் தன் தந்தையின் தொழிலை கையில்   எடுக்க வேண்டும்.  

படித்து முடித்த உடனே தொழிலில் இறங்கி விடவும் முடியாது.

ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல, படித்து முடித்து இஞ்சினியர் னு பட்டம் வாங்கி விட்டால் உடனே இஞ்சினியர்  ஆகிவிட முடியாதே...

அதுவும் தொழிலை நடத்த வெண்டும் என்றால் அதற்கு கல்லூரி பாடத்தை விட அனுபவ பாடம்தான்  முக்கியம் என்று அறிந்து இருந்தவன்.

அதனால் முதலில் அந்த அனுபவத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி தொழிலில் மனதை செலுத்தும் பொழுது மற்றதில் கவனத்தை சிதறவிடக்கூடாது...

அதோடு அவளும் படித்து முடிக்க வேண்டும். அதனால் இப்பொழுதே தன் காதலை சொல்லி அவளை தொல்லை செய்ய வேண்டாம்என்று தனக்குத்தானே கட்டுப்பாட்டை  விதித்துக் கொண்டாலும், அவளை பார்க்காமல் அவனால்  இருக்க முடியவில்லை.  

அவள் அறியாமல் தினமும் பொதிகை செல்லும் இடங்களில்  அவனும் சென்று நிப்பான். மறைமுகமாக நின்றுகொண்டு  அவளை  பார்த்து சைட் அடிப்பதிலயே அலாதி சந்தோஷம் அவன் உள்ளே...

ஆக மொத்தம் சம்பளம் இல்லாத பாடிகாட் போல அவளை சுற்றி சுற்றி வந்து அவளை பற்றி மேலும் அறிந்து கொண்டான் வெற்றிமாறன்.

*****   

தேனி  போல எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவள்...!

வார விடுமுறைகளில் கூட அயர்ந்து, சோம்பி இருந்தது இல்லை அவள்.

வார விடுமுறைகள் இரண்டு நாளும் ஆங்காங்கே நடக்கும் ஏதாவது ஒரு தொண்டு  நிறுவனம் நடத்தும் மருத்துவ முகாமிற்கு வாலண்டியராக உதவி செய்ய சென்று விடுவாள்.  

மருத்துவ குழுவிற்கு தேவையான உதவிகளை செய்வாள்.

******

ப்படித்தான் ஒரு முறை அவன் நிறுவனங்களில் கிளை நிறுவனங்களில்   ஒன்றான மாறன் ட்ரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம்  நடத்தி வரும்  மருத்துவமுகாமிற்கு பார்வை இட சென்றிருந்தான் வெற்றிமாறன்..

சென்னைக்கு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் அந்த முகாம் ஏற்பாடு செய்திருந்தனர்.

அங்கிருந்த மக்களின் உடல்நிலையை பரிசோதித்து, தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கவும், இருதய அடைப்பு, சிறுநீரக பாதிப்பு, கேன்சர் போன்ற பணக்கார வியாதிகளுக்கு சென்னையில் இருக்கும் அவர்களுடைய மருத்துவமனையிலயே இலவச சிகிச்சை செய்து கொள்ள அனுமதி கடிதம் கொடுத்தல் போன்ற சேவைகள் நடைபெற்று கொண்டிருந்தன.

அதில் ஒரு அங்கமாக, உறுப்புதானமும், ரத்ததான முகாமும் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த ஊர் மக்களுக்கு ரத்த தானத்தை பற்றியும், உறுப்பு தானத்தை  பற்றியும் எடுத்துக்கூறி அவர்களும் அந்த மாதிரி தானம் செய்ய முன் வர வேண்டும் என்று விளக்கி சொல்லி  இருக்க, அதன்படி நிறைய பேர் ரத்ததானத்தில் கலந்து கொண்டனர்.

அதை பார்வையிட்ட வெற்றிமாறனுக்கு அவனும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று தோன்ற, அவனுமே அந்த பகுதிக்கு சென்றான்.

சிறு தடுப்பு வைத்து சிறிய அறை போல உருவாக்கி இருந்தனர்.

அதில் ஒற்றை படுக்கையை போட்டு வருகிறவர்களை அதில் படுக்க வைத்து ரத்தம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

வெற்றிமாறனும் அங்கு இருக்கும் வசதிகள பார்வை இட்டு கொண்டே திரும்பியவன்,  அங்கே ரத்தம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த  பெண்ணைக் கண்டு ஒரு நொடி திகைத்துப் போனான்.

எப்பொழுதும் அவளை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் இது எதுவும் மாயையோ என்று தன் கண்களை சிமிட்டி மீண்டும் உற்று பார்க்க, அவன் காண்பது பொய்யல்ல...

மெய்தான் என்று உறுதி செய்பவளாய் தன் அழகான முத்துபற்கள் பளிச்சிட புன்னகையுடன் படுக்கையில் படுத்திருந்தவரிடம் ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் அவள்...!

பொதிகை...! அவன் மனம் கவர்ந்தவள்..!     

அவளைக் கண்டதும் ஆச்சர்யத்தில் அவன் கண்கள் விரிய, இரண்டு நாட்கள் அவளை பார்க்க முடியாதே என்று ஏங்கி இருந்த அவன் மனமோ மகிழ்ச்சியில் எகிறி குதித்தது. அதோடு

“அவள் எங்க இங்கே?  இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? பி.டெக் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங்  மாணவிக்கு இங்க என்ன வேலை? அதுவும் இப்படி அழகாக வலிக்காமல் குத்தி ரத்தம் எடுக்கும்  வேலை எப்படி தெரிந்தது?

என்று ஆச்சரியத்துடன் அவளையே ரசித்து பார்க்க, அனிச்சையாய் திரும்பிய பொதிகையும் அவனைப் பார்த்து ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள்.

அவளும் அவள் காண்பதை நம்பாதவளாய் தன் இமைகளை படபடவென்று கொட்டி மீண்டும் அவனை உற்று பார்க்க, தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு அவளையே குறுகுறுவென்று பார்த்திருந்தான் வெற்றி.

அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவள், அவனின் ஆச்சர்யமான பார்வையை பார்த்து

“என்ன சீனியரே...நீங்க எங்க இங்கே? “ என்றாள் ஆச்சர்யத்துடன்.

அவன் பதில் எதுவும் சொல்லாமல் மீண்டும் அவளையும் அவள் செய்யும் வேலையும் யோசனையோடு பார்த்து கொண்டிருக்க, படுக்கையில் இருந்தவருக்கு வேண்டியதை செய்துவிட்டு மீண்டும் அவனை பார்த்தவள்,

“என்ன அப்படி பார்க்கறிங்க சீனியரே... ஓ... இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்று யோசிக்கிறீர்களா? அது ஒன்னும் இல்ல. களவும் கற்று மற என்று கேள்விப்பட்டதில்லை.  

அது மாதிரி எனக்கு இந்த மருத்துவ சேவையும் ரொம்ப பிடிக்கும்.  அதனால தான் இதை படிக்காமலேயே நானாக கற்றுக் கொண்டேன்…”  என்றவாறு  புன்னகைத்தாள் பொதிகை...

அந்த முதல் நாள் ராக்கிங் சம்பவத்திற்கு பிறகு, பொதிகையும் அவனை பார்க்கும் பொழுதெல்லாம் நட்புடன் பேசி சிரிப்பாள். அதுவும் சீனியரே என்று இழுத்து அழைத்து அவனை கிண்டல் செய்யும் அவள் தொனி அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

இப்பொழுதும் அதே மாதிரி சீனியரே என்று அழைத்து வெள்ளந்தியாய்  புன்னகைத்த, அவள் புன்னகையில் பளீரென்று  மின்னிய அவளின் பச்சரி பற்கள் கூட அவனை கட்டி இழுத்தது.

அதோடு அவன் மனதில் நினைத்ததையே அவளும் சொல்லி வைக்க, இன்னுமாய் ஆச்சர்யம்...!  

“வெரிகுட்... நல்ல கொள்கை... கீப் இட் அப்..” என்று  புன்னகைத்தவாறு அவள் அருகில் செல்ல,

“ஆமா சீனியரே...இப்ப நான் கேட்கறேன்... இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? நீங்க எங்க இங்க? “ என்று ஆச்சர்யத்துடன் விசாரித்தாள்.

அவளின் அகன்ற விழிகளை இமை தட்டி பார்த்து ரசித்தவன், பின் தன்னை உலுக்கி கொண்டு, தன் பின்னந்தலையை ஒற்றைக் கரத்தால் தடவிக் கொண்டே இது... என்று ஆரம்பித்தவன் பாதியில் நிறுத்திக் கொண்டான்.

இது அவர்கள் நிறுவனம் நடத்தும் முகாம்... அதை பார்வையிட வந்திருக்கிறேன் என்று சொல்ல வந்தவன் , அதை பாதியில் நிறுத்திக் கொண்டான்.

அவளுக்கு தன்னை பற்றி எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியாது அவனுக்கு.

அதோடு அவனை பற்றி யாருக்கும் சொல்லக்கூடாது என்று அவன் வீட்டில் அவனுக்கு பாடம் நடத்தி இருக்கிறார்கள்.

ஒருசில இடங்களில் அவனை பற்றி...அவன் வசதியை, பரம்பரையை பற்றி தெரிந்து கொண்டு, நிறைய  பெண்கள் அவன் மீது வந்து விழுந்து வைக்க, அதில் இருந்து தப்பிக்க என்றே தன்னை பற்றி மற்றவர்களிடம் சொல்வதில் கவனமாக இருப்பான்.

மற்ற பெண்களைப்போல தன் வசதியை, செல்வ நிலையை கண்டு அவன் மீது வந்து விழமாட்டாள்தான் பொதிகை.

ஆனாலும் எப்படி எடுத்துக் கொள்வாளோ...தன் வசதியை அறிந்து தள்ளி சென்று விடுவாளோ  என்று  அவசரமாக யோசித்தவன், இப்போதைக்கு தன்னைப்பற்றி அவளிடம் சொல்ல வேண்டாம்.  

அவளாகவே என்னை பற்றி தெரிந்து கொள்ளட்டும் என்று மறைத்துக் கொண்டவன் ஒரு ட்ரேட் மார்க் புன்னகையை செலுத்தி,

“ஏன்... அம்மணி மட்டும்தான் களவும் கற்று மற கொள்கையோ.. மற்றவர்களுக்கு அது பொருந்தாதா? “ என்று புன்னகைத்தவாறு தன் புருவத்தை உயர்த்த

“அப்படீனா உங்களுக்கும் இந்த மருத்துவ தொழில் மீது ஆர்வமா? நீங்களும் கத்து இருக்கீங்களா?”  என்றாள் கண்கள் பளபளக்க.

“இப்ப ஏன் இவ்வளவு எக்சைட் ஆகறா?”  என்று யோசித்தவாறு

“உன் அளவுக்கு இல்ல மா...ஆனால் இந்த மாதிரி முகாமுக்கு என்னால் ஆன உதவியை செய்வேன்... இப்பொழுது நானும் ரத்ததானம் செய்ய வந்திருக்கேன்... “ என்று புன்னகைக்க,

“வெரி குட்..கீப் இட் அப்...” என்று அவன் வார்த்தையை திருப்பி கொடுத்தவள், திரும்பி ரத்தம் நிரம்பி இருந்த பேக்கை மூடியவள், ரத்தம் கொடுத்தவரை எழுப்பி அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்து அவருக்கு ஒரு பழச்சாற்றை கொடுத்து குடிக்க வைத்தாள்.

அடுத்து வெற்றியின் முறை என்பதால், அவனை பார்த்து

“சரி.. இப்படி வந்து படுங்க..” என்று அவனை அங்கிருந்த படுக்கையில் படுக்க வைத்தாள்.

அவனும் அன்று டிசர்ட் அணிந்து வந்திருந்ததால், தன் டிசர்ட் ஐ  கழற்றிவிட்டு வெற்று மார்புடன் அந்த படுக்கையில் படுக்க, அவனை வெற்று மார்புடன் பார்க்க, அவள் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.

அடுத்த நொடி தன் இமைகளை தாழ்த்திக்கொண்டவள், பின் அவன்  கரத்தை எடுத்து பல்ஸ் பார்க்க ஆரம்பிக்க, அவள் தொட்ட அந்த நொடி அவன் உள்ளே மின்சாரம் பாய்ந்ததை போல சிலிர்த்துப் போனது.  

இதுவரை அவளை காணும்பொழுதெல்லாம் மனதில் எழுந்த பாதிப்பு இப்பொழுது அவளின் தொடுகையில் அவன் உடலிலும் தெரிந்தது.  

இதுவரை  யாருடைய தொடுகைக்கும், தீண்டலுக்கும் சிலிர்க்காத அவன் தேகம்,  அவளின் சிறு விரல் பட்டதும் அவன் உடல் தூக்கி போட்டது.

மனதிற்குள் திடீரென்று ஒரு இனம்புரியாத பரவசம்..!

பெண்ணவளுக்கும்  அதுபோலத்தான் இருந்ததோ..? என்று அவள் முகத்தை ஏறிட்டு பார்க்க,  அவளுக்கும் அதே நிலைதான் போல.  

அவன் கையை தொட்டதும் மின்சாரம் பாய்ந்தது போல சிலிர்க்க,  அவளையும் அறியாமல் அவள் முகம் சிவந்து போனது.  

கையை வெடுக்கென்று இழுத்துக்கொண்டாள்.

அதுவரை அவனை நேருக்கு நேர் பார்த்து,  வாதாடி கொண்டிருந்தவள்,  பார்வை மீண்டும் ஒரு முறை சட்டையில்லாமல்  வெற்று மார்புடன் படுத்திருந்தவன் மீது படிந்து மீண்டது.

நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் முறுக்கேறிய  அவனின் திடகாத்திரமான உடலையும், கொஞ்சமும் சதை பிடிப்பில்லாமல் சிக் என்று வைத்திருந்த சிக்ஸ் பேக் வயிற்றையும், திரண்டிருந்த அவன் புஜங்களையும் கண்டவளுக்கு இன்னுமாய் சிவந்து போனாள்.  

அவளின் முகத்தில் வந்து போன வெட்க சிவப்பும், கண்களில் மின்னிய ரசனையையும்,  ஆர்வத்தையும் கண்டு கொண்டவன், அவளையே குறுகுறுவென்று பார்த்திருக்க, அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்டவள், மீண்டும் தன்னை நிலைபடுத்திக்கொண்டு பேசிக் ப்ரசிஜரை ஆரம்பித்தாள்.

அவன் பார்வையோ அவளை விழுங்கி விடுவதை போல அவள் மீதே நிலைத்து இருந்தது.

கொஞ்சம் கூட அஞ்சாமல், தயங்காமல், தைர்யமாக அவளை நேராக மையலுடன் பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வை பெண்ணவளுக்குள் என்னென்னவோ ரசாயன மாற்றங்களை செய்தது.

“ஹலோ சீனியரே... பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்த மாதிரி இங்க என்ன லுக்..?  முன்ன பின்ன பொண்ணுங்களை பார்த்ததில்லையா? “ என்றாள் அவனை முறைத்தபடி.

“ஹீ ஹீ ஹீ இல்லையே பேபி... பொண்ணுங்களை பார்த்திருக்கிறேன்... ஆனால் உன்னை மாதிரி ஒரு அழகியை பார்த்ததில்லையே...” என்றான் அவனும் இன்னுமாய் சிரித்தபடி...

“அழகி...? நானு? க்ரேட் ஜோக்... பக்கத்து தடுப்புல நடந்து கிட்டிருக்கிற கண்  செக்கப் ல போய் முதல்ல உங்க கண்ணை செக் பண்ணுங்க சீனியரே.. என்னைப் போய் அழகினு சொன்ன முதல் ஆள் நீங்கதான்...”  என்றாள் கிண்டலாகவே...

அவளுக்கு எப்பொழுதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு.

மற்றவர்களைப்போல அவள் அழகாக, வெள்ளையாய் இல்லை என்ற குறை. அதுவே இப்பொழுது வாய் மொழியாகவும் வந்து இருந்தது.

“ப்ச்... குப்பையை கிளறுகிற கோழிக்கு தெரியுமா அதில் இருக்கும் வைரத்தோட மதிப்பு...அதுபோல உன் மதிப்பு உனக்கு தெரில  செல்லம்...எனக்கு தெரியும் அது...“ என்று வெற்றியும் சிரிக்க,

“ஓகோ... உங்க கண்ணுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சதாம்...? ” என்று மார்புக்கு குறுக்காக கைகளை மடித்து வைத்துக்கொண்டு,  அவனை நேராக பார்த்து முறைக்க,

“ஹீ ஹீ ஹீ அதெல்லாம் வெற்றிமாறனுக்கு தெரியுமாக்கும்..! “  என்று சமாளிக்க,

“எப்படி...?  சம்பளம் இல்லாத பாடிகாட் மாதிரி என்னை தினமும் சுத்தி சுத்தி வந்து தெரிஞ்சுகிட்டிங்களாக்கும்? “ என்று தன் ஒற்றை புருவத்தை ஸ்டைலாக ஏற்றி இறக்கினாள் பெண்.

அதைக்கண்டு ஒரு நொடி வியந்து போனான் வெற்றிமாறன்.

அதோடு அவள் தன்னை கண்டு கொண்டாளே என்று அசடு வழிந்தவன்

“தெரிஞ்சிடுச்சா செல்லம்...?” என்று இழுக்க

“அதான்... போஸ்டர் அடிச்சு ஒட்டாத குறையாக எல்லாரும் உங்களை பற்றிதான் பேசிகிட்டு இருக்காங்களே...

லுக் சீனியரே... இதெல்லாம் நல்லா இல்லை...டைம் வேஸ்ட்... நீங்க எப்படித்தான் சுத்தி சுத்தி வந்தாலும் நீங்க நினைக்கிறது நடக்காது?

“அப்படியா? அப்படி என்ன நினைச்சேன்? எது நடக்காது? “ என்று மந்தகாசமாய் புன்னகைக்க, அதில் அவள் மனம் வழுக்கி சென்றாலும் அதை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டவள்

“நீங்க நினைக்கிறது உங்களுக்குத்தானே தெரியும்..!  இனிமேல் என் பின்னாடி சுத்தாம உருப்படியா படிக்கிற வழியை பாருங்க... “ 

என்று பொரிந்தவள், அப்பொழுதுதான் மற்றவர்களும் வரிசையில் காத்திருக்கிறார்கள் என்பது உறைக்க, தன் சண்டையை நிறுத்திவிட்டு வேலையை துரிதபடுத்தினாள் பொதிகை.

பேசிக் புரசிஜரை முடித்து, அவன் கையில் ரத்தம் எடுப்பதறாக ஊசியை எடுத்துக்கொண்டு  அவன் அருகில் வந்தாள்.

அடுத்த கணம் அவள் கை நடுங்க ஆரம்பித்தது.

ஏனோ அவன் உடலில் அந்த ஊசியை குத்த முடியவில்லை அவளால்.

அவனுக்கு வலிக்குமோ என்று ஆழ் மனதில் ஒரு வலி எழும்ப, அதன் பலனாய் அவள் கை கிடுகிடுவென நடுங்கியது.

அதைக்கண்டு திடுக்கிட்டு போனாள் பொதிகை.

“சை.. ஏன் இப்படி ஆகிறது? இவன் ஒரு பேசன்ட்... அவனுக்கு நான் இப்பொழுது ரத்தம் எடுக்க வேண்டும். அதற்கு இந்த ஊசியை குத்தவேண்டும்..

சின்ன வலிதான்.. இந்த எருமை அதை தாங்க மாட்டானா?”  என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவள், மீண்டும் ஊசியை அவன் அருகில் கொண்டு செல்ல, இன்னுமே வேகமாய் நடுங்கியது அவளின் கரம்.

ஏனோ அவனுக்கு வலிக்குமே என்ற எண்ணமே அவளுக்கு வலியை கொடுத்தது.  அதனாலேயே அந்த ஊசியை அவன் தேகத்தில் குத்த முடியவில்லை

தனக்குள்ளயே சற்று நேரம் போராடியவள்,  அடுத்த கணம் தன்னால் இது முடியாது என்று உணர்ந்தவள்,

“ஒரு நிமிஷம் சீனியரே...இதோ  வந்திடறேன்...”  என்று சொல்லிவிட்டு வெளியில் ஓடிவிட, அவளின் உணர்வுகளை அனுஅனுவாய் ரசித்துக் கொண்டிருந்தவன். அவளின் செயலைக் கண்டு உல்லாசமாக சிரித்துக் கொண்டான் வெற்றிமாறன்.

“ஆஹான்... பொண்ணுக்கும் நம்ம மேல கண்ணுதான் போல. அவள் மனதிலும் நான் இருக்கிறேன்.. டேய் வெற்றி..அப்ப உன் வேலை ஈசிதான்.. நீ கலக்கிட்டடா... “  என்று தனக்குத்தானே ஹை பை கொடுத்துக்கொண்டான்.

வெளியில் சென்ற பொதிகை  அவளுக்கு பதிலாக மற்றொரு பெண்ணை அனுப்பி அவனிடமிருந்து ரத்தம் எடுத்தாள்.  

*****

டுத்து நாட்கள் வேகமாக ஓட, அந்த வருடமும்  முடிந்து இருந்தது..

பொதிகை இரண்டாவது வருடத்தில் அடி எடுத்து வைத்திருந்தாள்.

இப்பொழுது வெற்றிமாறனின் கல்லூரி படிப்பும்  முடிந்து இருக்க,  தன்னவளை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அடுத்த வருடம் பகுதி நேரமாக அந்தக் கல்லூரியிலேயே எம்.டெக் சேர்ந்துவிட்டான் வெற்றிமாறன்.

காலை வேளையில், தன் தந்தையின் தொழிலை கற்றுக் கொண்டும்,  மாலை வேளையில் கல்லூரி என ஓடிக்கொண்டிருந்தான்.

முன்பு அவளை அந்த முகாமில் சந்தித்த பிறகு பொதிகையை தனியாக சந்திக்க முடியவில்லை அவனால்.

வருட இறுதி பரிட்சை நெருங்கி விட, அவனுக்கும் படிப்பு மற்றும் ப்ராஜெக்ட்   என நேரம் பிடித்துக்கொண்டது.

ஆனாலும் அவ்வபொழுது பொதிகையை எட்டி நின்று பார்த்து ரசித்து கொண்டுதான் இருந்தான்.

அவள் பரிட்சை முடிந்து  விடுமுறைக்காக அவளின் சொந்த ஊருக்கு சென்று விட்டாள்.  

அந்த இரண்டு மாதங்கள் வெற்றிமாறன் ரொம்பவுமே தவித்து போய்விட்டான்.

அவனாலயே நம்பமுடியவில்லை. இந்த அளவுக்கு அவளை தான் காதலிக்கிறேனா என்பதை அப்பொழுதுதான்  முழுவதுமாக உணர்ந்தான்.

அவளின் பிரிவை சமாளிக்க என்றே நெருப்புக்கோழியை போல தன் தந்தையின் தொழிலில் தன் தலையை நுழைத்துக் கொண்டான்.

எப்படா இரண்டு மாதங்கள் முடியும் என்று தவித்து போனான்.

அதனாலயே தேவையே இல்லை என்றாலும் மாஸ்டர் படிக்க வேண்டும் என்று அங்கயே எம்.டெக் சேர்ந்துவிட்டான்.

*****

ரண்டு மாதங்கள் கழித்து திரும்பி வந்தவளை பார்த்ததும்தான் அதுவரை இருந்த தவிப்பு அடங்கி அவன் மனதில் ஒரு அமைதி நிலவியது.

ஓடிச்சென்று அவளை அப்படியே தூக்கி தட்டாமலை சுற்றி,  அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக்கொள்ள தவித்த அவன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர தவித்து போனான் வெற்றி.

தன் தோழி அனிதாவுடன் இரண்டாம் வருட ப்ளாக்கை நோக்கி சென்று கொண்டிருந்த பொதிகை, சற்று தள்ளி நின்றிருந்த வெற்றியின் பார்வையை கண்டு கொண்டாள். 

அவனைக் கண்டதும் அவள் கண்களிலும் அப்படி ஒரு பளிச்.

முகம் விகாசிக்க, அவளை மறந்து அவள் மகிழ்ச்சியை வெளிக்காட்டி இருந்தாள்

ஆனால் சில நொடிகள் தான். அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்டவள், அவனை பார்க்காததை போல அனிதா உடன் பேசியவாறு வேகமாக வகுப்பறையை நோக்கி சென்று விட்டாள்.

வெற்றிக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ஒரு கணம் அவள் முகத்தில் வந்து போன பளிச் ஒன்றே அவளின் மனதை அவனுக்கு காட்டி விட்டது.

துள்ளலுடன் தன் வகுப்பிற்கு சென்றான்.

***** 

Share:

1 comment:

Followers

Total Pageviews