மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Saturday, February 25, 2023

கனவே கை சேர வா-23(Pre-Final)

 

அத்தியாயம்-23

 



இந்த நாவல் இப்பொழுது ஆடியோ நாவலாக நம் சேனலில் வெளியாகி உள்ளது. கேட்டுப் பாருங்க..!


ஐந்து வருடங்களுக்கு பிறகு:

சென்னையிலயே புகழ்பெற்ற அந்த அண்ணா கலையரங்கம் பல மினிஸ்டர்களாலும்,  எம்.எல்.ஏக்களாலும் மற்றும் பல பெரும் புள்ளிகளாலும் நிரம்பி வழிந்து  கொண்டிருந்தது.

அன்றைய வருடத்திற்கான NEET மற்றும் JEE  அட்வான்ஸ் தேர்வின் முடிவுகள் சென்றவாரம் வெளிவந்து இருந்தது..!  

அந்த முடிவு தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்து இருந்தது..!    

இந்த வருடம் அதிக அளவில் நீட் தேர்விலும்,  JEE  அட்வான்ஸ் தேர்விலும் அதிக மாணவர்கள் தேர்வாகி இருந்தது தமிழகத்தில் தான்.  

அதுவும் அதிக விழுக்காடு அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களே   என்ற  செய்தி எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சியையும், பெருமையையும் கொண்டு வந்து இருந்தது.

இதுவரை அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் ஆந்திரா,  தெலுங்கானாவை விடுத்து இந்த முறை தமிழகம் முன்னேறி இருந்தது.

நீட் என்றால் எதிர்த்து வந்த தமிழக மக்கள் இப்பொழுது அதை ஆர்வமாக வரவேற்றனர்.

முன்பு தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில்  மட்டும்தான் தமிழக மாணவர்களுக்கு சீட் கிடைத்தது என்ற நிலை மாறி,  மற்ற மாநிலங்களில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இப்பொழுது தமிழக மாணவர்கள் நிறையவே ஆக்கிரமித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தனர்.

அதனால் தமிழகத்தில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வாகும் மாணவர்கள் எண்ணிக்கை ரொம்பவுமே உயர்ந்து இருந்தது..! 

அதோடு இந்தியாவில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் தரவரிசை பட்டியலில், முதலாம் இடத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரியான AIIMS மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கும்  ஜிப்மெர்(JIPMER) போன்ற பல பெரிய மருத்துவக் கல்லூரிகளிலும்,  தமிழக மாணவர்கள் எளிதாக நுழைய முடிந்தது.  

நீட் மற்றும் JEE எக்ஸாம் என்றால் என்ன என்று மூலைமுடுக்குகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு கூட தெரியும் அளவுக்கு தமிழகத்தில் விழிப்புணர்வு வந்திருந்தது.  

அப்படி கொண்டு வர வைத்திருந்தாள்  பொதிகை..!  

எல்லாமே அவளுடைய I CAN”(“என்னால் முடியும்”) என்ற மொபைல் ஆப் சாப்ட்வேர் ஆல் தான்..!

****

ன்று கல்வி அமைச்சரை சந்தித்துவிட்டு வந்ததுமே பொதிகைக்கு   நம்பிக்கை வந்துவிட்டது..!  

இன்னுமாய் உற்சாகத்துடன் தன்னுடைய ப்ராஜெக்ட்டில்  ஈடுபட்டாள்..! வழக்கம்போல  வெற்றியும் அவளுக்கு துணை நின்றான்..!

பொதிகை அறியாமல், இரண்டு மூன்று முறை அமைச்சரை  நேரில் சென்று சந்தித்து வந்தான்..!

அதன் பலனாக, இரண்டு வாரத்தில் மீண்டும் தலைமை செயலகத்தில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது..!

துள்ளலுடன் சென்றது பெண்..!

அன்று கல்வி அமைச்சருடன் முதலமைச்சரும் உடன் இருந்தார். அதை எதிர்பார்த்திருக்கவில்லை பெண்..!

திடீரென்று முதலமைச்சரை அங்கே பார்த்ததும், ஒரு நொடி அவளின் இதயம் நின்று துடித்தது..!

இந்த முறையும் வெற்றியும் அவளுடன்..!

அதனால் அருகில் இருந்தவன் கையை பற்றிக்கொள்ள, அவளின் பதட்டம் புரிந்து அவளின் கையை மெல்ல அழுத்திக்கொடுத்து, கண்களால் அவளுக்கு தைர்யம் சொன்னான்..!

அடுத்த கணம் சமாளித்துக்கொண்டவள் சிறு புன்னகையுடன் அங்கிருந்தவர்களை எதிர்கொண்டாள்.

முதலமைச்சர் உள்பட பலபேர் அங்கிருக்க, ஒவ்வொருவரும் சில வினாக்களை எழுப்ப, அதற்கெல்லாம் பொறுமையாக பதில் அளித்து விளக்க, அன்றே அவளின் ப்ராஜெக்ட்டிற்கான சாங்சன் ஆர்டர் அவள் கையில்..!

அந்த ப்ராஜெக்ட்டின் முழு பொறுப்பையும் பொதிகை சாப்ட்வேரிடம் கொடுத்துவிட்டனர்..! மாதந்தோறும் அவளுக்கு உரிய தொகை வந்துவிடும்..!

அவ்வளவுதான்..!

உற்சாகத்தில் வானத்துக்கும், பூமிக்குமாய் துள்ளி குதித்தாள்..!

அன்றும் தூண் மறைவில்,  வெற்றிக்கு தன்னவளிடம் இருந்து ஒரு வெஜிடேரியன் விருந்து கிடைத்தது.  

அவனோ அதை அனுஅனுவாய் ரசித்தாலும்,

“ஹோய் பொண்டாட்டி...!   இன்னைக்கும் வெஜ் தானா? இந்த வெஜ் போர் அடிக்குது டி...பேசாம  நான்வெஜ் போகலாமா? என்று குறும்பாக கேட்க

“நான் வெஜ் ஆ?  அப்படினா..? என்று பெண் புரியாமல் முழிக்க

“ஹா ஹா ஹா அதையெல்லாம் வாயால விளக்க முடியாது டி.  வேணும் னா டெமோ காட்டவா? “ என்று அவளை இன்னுமாய் தாபத்துடன் பார்த்து வைக்க அப்பொழுதுதான் பெண்ணுக்கு அவன் சொல்ல வருவது புரிந்தது.  

உடனே கன்னங்கள் சிவக்க

“போடா...வெற்றி...” என்று அவன் முதுகில் செல்லமாக அடித்துவிட்டு ஓடிவிட்டாள்.  

*****

டுத்து வந்த நாட்கள் ரெக்கை கட்டி பறந்தது இருவருக்கும்..!

அவள் ப்ராஜெக்ட் கையெழுத்தானதும்,  மடமடவென்று தன் வேலையில் இறங்கி விட்டாள் பெண்..!

வெற்றிக்கும், இந்த ப்ராஜெக்ட்டிற்கும் நேரடி சம்பந்தம் இல்லை என்றாலும், தன் அலுவலக வேலைக்கு நடுவிலும், தன்னவளுக்கு உறுதுணையாக இருந்தான்..!

அவளும் தன் திட்டத்தை எல்லாம் வெற்றியிடம் ஒரு முறை விவரித்து அவனின் கருத்துக்களையும் கேட்டு கொள்வாள்..!

கல்வி அமைச்சரின் ஆணைப்படி, அரசு  பள்ளிகளில் பயிலும் பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையில் மாற்றத்தை கொண்டு வந்திருந்தனர்..!

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, அங்கு இருந்த ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று பதினொன்றாம் வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு நீட் மற்றும் JEE தேர்வை பற்றிய விளக்கத்தை  அளித்தாள்..!

தன்னுடைய ஆப் ஐ எப்படி பயன்படுத்துவது என்று விளக்கம் அளித்தாள்.

ஆசிரியர்களுக்கு பிரத்தியேக பயிற்சியும் அளிக்கப்பட்டது..!

அதோடு அந்தந்த பாடங்களில் எழும் சந்தேகங்களை தீர்க்க என்று ஒவ்வொரு பாடத்திலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்கினர்.  

மாணவர்கள் எந்த மூலையில் இருந்தாலும்,  அவர்களுடைய சந்தேகங்களை கேட்கவும் அதை உடனே தெளிவுபடுத்தவும்  வேண்டிய  வசதியை செய்து இருந்தனர்.

கூடவே அவளுடைய சாஃப்ட்வேர் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் என்று ரெஸ்ட்ரிக்சன் இருக்க, அதோடு  அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் படித்த மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி இருக்க,

அதனாலேயே கடந்த இரண்டு வருடங்களாக தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து இப்பொழுது அரசு பள்ளிகளில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.  

அதோடு ஆசிரியர்களும் கடமைக்கு என பள்ளிக்கு வந்து போகாமல்,  உண்மையாகவே தங்கள் மாணவர்கள் முன்னேற வேண்டும்... அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று உற்சாகத்தோடு கை கோர்த்தனர்..!  

இன்னும் சில பல திட்டங்களைத் தீட்டி,  தன் ப்ராஜெக்ட்டை அனைத்து பள்ளிகளிலும், அமுல்படுத்திவிட, அந்த வருடமே ஓரளவுக்கு நல்ல ரிசல்ட் வந்தது.  

ஆனாலும் பெரிதாக பாராட்டும் அளவில் இல்லை.  

அது எதிர்பார்த்ததுதான்..!  

திடீரென்று மாணவர்களுக்கு புதிய முறையை கொண்டு வரும் பொழுது,  அதன் பலன் உடனே கிடைக்காது என்று எதிர்பார்த்து  இருந்ததால்,  பெரிதாக ஏமாற்றம் அடையவில்லை பொதிகை.  

தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, கூடவே ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விழிப்புணர்வை கொண்டு வந்து ஒன்பதாம் வகுப்பில் இருந்தே மாணவர்களை தயார் படுத்தினர்..!

ஐந்து ஆண்டுகள் கடும் போராட்டத்திற்கு பிறகு, பொதிகைக்கு வெற்றி கிடைத்தது..!

அவள் மற்றும் அவளுக்கு துணை நின்ற அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரின் கடின உழைப்பின்  பலன் இப்பொழுது அந்த அரங்கத்தில் இருந்த பெரிய திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

இந்திய அளவில் முதல் பத்து இடத்தையும் தமிழகமே  பிடித்திருந்தது..!

அந்த வருட சாதனையை பாராட்டி, சிறப்பாக தேர்வாகி இருந்த மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், மற்றவர்களையும் பாராட்டி பரிசு வழங்கும் விழா அது..!

******

விழா ஆரம்பித்து இருக்க, தமிழக  முதலமைச்சர் மேடையில் நின்று இருந்தார்..!

தமிழகத்தின் மாணவர்களின் சாதனையை  பாராட்டி புகழ்ந்து பேசினார்..!  கூடவே கல்வி அமைச்சரையும் புகழ்ந்து பாராட்டியவர்...ஆசிரியர்களையும் பாராட்டி தன் உரையை முடித்தார்..!

அடுத்ததாக கல்வி அமைச்சர் பொன்வண்ணன் மேடைக்கு வர,  அவரும் தனக்கு உதவி செய்த அத்தனை பேரையும் பாராட்டி, நன்றி சொல்லியவர்,  

இறுதியாக இத்தனைக்கும் காரணமானவர்  பொதிகை சாப்ட்வேர் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் பொதிகை வெற்றிமாறன் தான் என்று பெருமையாக சொல்ல,  அரங்கமே அதிர கைதட்டினர் அனைவரும்.

அத்தனை கைத்தட்டல்களுக்கு  நடுவில் வேகமாக கேட்டது விசில் சத்தம் ஒன்று..!

எல்லாரும் திரும்பிப் பார்க்க,  அங்கே தன் இரண்டு வயது பேத்தியை மடியில் வைத்துக்கொண்டு,  வாயில் விரலை வைத்து வேகமாக விசில் அடித்துக் கொண்டிருந்தான் ராசய்யா..!  

*****

பொதிகை தன் ப்ராஜெக்ட்டை அமுல் படுத்திய அடுத்த ஆண்டு, மீண்டும் அவர்களின் திருமண பேச்சை ஆரம்பித்தனர்..!

அதுவரை காத்திருந்தது போதும் என்று இரு வீட்டினரும் திருமணத்திற்கு இருவரையும் கட்டாயப்படுத்த,  வெற்றியோ  பொதிக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே என்று பந்தை அவளிடம் போட்டு விட்டான்..!  

அவள் நினைத்தபடியே அவளுடைய ப்ராஜெக்ட்டை இம்ளிமென்ட் பண்ணியாகிவிட்டது..!

இனிமேல் மேற்பார்வை இடுவது மற்றும் இன்னும் கொஞ்சம் மாற்றங்கள் மட்டும்தான் கொண்டு வரவேண்டும் என்றதால், அதற்கு மேலும் தாமதிக்க முடியாமல் பொதியும் சரி என்று தலையாட்டி விட்டாள்..!  

இதுவரை ஜமீன்தார் காத்திருந்ததே ஆச்சர்யம்தான்..! அவர்களை அதற்குமேல் காத்திருக்க வைக்காமல் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாள்..!

முதலாமாண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்த அடுத்த மாதத்திலேயே,  இருவரின் திருமணமும் கோலாகலமாக நடந்தேறியது..!  

ராசய்யாவுக்கு அத்தனை அத்தனை மகிழ்ச்சி..!  

அவன் தன் மனைவியிடம் அடிக்கடி சொல்லி பெருமை அடித்துக் கொண்டதைப் போலவே ஜமீன்தாரின்  வாரிசே  தன் மகளை தேடி வந்து விட, இப்பொழுது  தன் மனைவியிடம் அதை சொல்லி சொல்லி பூரித்துப் போனான்..!

சுற்றி இருந்த எட்டு பட்டியிலும் சாதாரண விவசாயியான ராசய்யா, ஜமீன்தாருக்கு சம்பந்தி ஆவதுதான் ஹைலைட்டான நியூஸ் ஆகிப்போனது..!

பண்ணையார் கூட ராசய்யாவை அழைத்து அவரின் மகிழ்ச்சியை தெரிவித்தார்..!    

அதுவும் ஜமீன் முறைப்படி திருமணம் துறையூர் ஜமீன் மாளிகையில் தான் நடந்தது..!

மாப்பிள்ளை அழைப்பின் பொழுது, வெள்ளை நிற சேர்வானியில், தலையில் வைரங்கள் பதித்த கிரீடத்துடன்  குதிரையில் கம்பீரமாக வந்து இறங்கிய தன் மருமகனைக் காணவும்,  

அப்படியே அந்த காலத்தில் ராஜகுமாரன் குதிரையில்  வந்து இறங்குவதைப் போல இருக்க,  தன்னை மறந்து தன் மாப்பிள்ளையை ரசித்து பார்த்து வைத்தான் ராசய்யா..! 

மாமனாரே தன் மருமகனை  வாயை திறந்து கொண்டு சைட் அடித்தார் என்றால், அவர் பெத்த பொண்ணுக்கு சொல்லவா வேண்டும்..!

தன்னவனை அப்படி பார்க்க இன்னுமாய் சிலிர்த்து போனது பெண்ணுக்கு..!  

அதோடு அவர்களின் திருமணத்திற்கு, முதலமைச்சர், கல்வி அமைச்சர் உட்பட, பல மத்திய , மாநிலை அமைச்சர்களும், பெரிய முக்கிய அரசியல்  பிரமுகர்களும், பெரிய பெரிய தொழில் அதிபர்கள் என வந்து நிறைந்து இருக்க, அதில் இருந்தே தன்னவனின் பின்புலம் பெண்ணுக்கு புரிந்தது..!

ஆனால் வெற்றியோ தன் செல்வநிலையை ஒருநாளும் அவளிடம் காட்டியதில்லை..! எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாகத்தான் பழகுவான்..!

அதோடு அவன் கடைக்கண் பார்வைக்காக எத்தனையோ பெரிய இடத்து அழகிகள் எல்லாம் காத்து இருந்தனர் தான்..!

ஆனால் அவர்களை விடுத்து, அழகிலும் அந்தஸ்திலும் கொஞ்சமும் பொருத்தம் இல்லாத தன்னைப்போய் காதலித்திருக்கிறானே..!

அதுவும் கல்லூரியில் அவளை துரத்தி துரத்தி அல்லவா காதலித்தான்..!

கூடவே இவ்வளவு பெரிய ஆள்...  தனக்காக இத்தனை நாள் காத்திருந்தானே..! எப்படிப்பட்ட காதல் இது?  என்று தன்னவன் மீதான  காதலில் அவள் மனம் விம்மியது.  

இவன் என்னவன்..! என்ற பெருமையோடும், பூரிப்போடும்,  அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த  சடங்குகளில் ஈடுபட,  வெற்றியும் திருமண அலங்காரத்தில் அழகு பதுமையாய் ஜொலித்த தன்னவளை அவ்வபொழுது சைட் அடித்தும், சீண்டியுமாய், சடங்குகளில் ஈடுபட்டான்..!

அவன் மனதிலும் அத்தனை அத்தனை மகிழ்ச்சி..!

அவனுக்குமே இன்னும் ஆச்சரியம் தான்..!

எத்தனையோ அழகிகளை சந்தித்த போதும், எப்படி இந்த கருவாச்சியிடம் கவிழ்ந்தேன் என்று பலமுறை யோசித்திருக்கிறான்..!

இதுதான் காதலுக்கு கண் இல்லை என்பதாக்கும்..! என்று அவன் மனஸ் நக்கலாக சிரித்து வைத்தது..!

அது உண்மைதான்..! உலகத்திலயே பேரழகி யாரென்றால் தன் மனைவி என்பானான் ஒரு ஆண்...!

அதே தான் வெற்றிக்கும்..! 

அவளை பார்த்த அன்றே அவள் மீது ஈர்ப்பு வந்துவிட்டது..!

அவன் பின்புலம் தெரிந்து அவன் காதலை ஏற்க மறுத்த பொழுது, கட்டாயபடுத்தி அவள் கழுத்தில் செயினை போட்டு அவள்தான் தன்னவள் என்று அவளுக்கு உறுதி படுத்திக் கொண்டான்..!

அதோடு விட்டுவிடாமல் அவளை கட்டாயபடுத்தி காதலிக்கவும் வைத்துவிட்டான்..!

அனைத்திற்கும் காரணம் அவள் மீது அவன் கொண்ட காதல்..!

தன்னவள் மீது அவன் கொண்டிருந்த எல்லையில்லா காதலுடன், இத்தனை வருடங்களாக காத்திருந்தவன்,  அன்று தன்  மனம் கவர்ந்தவளை  ஊரறிய தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டான் பூரிப்புடன்..!

அதோடு அவளின் கடமைக்கும் துணை நின்றான்..!

*****

பொதிகையின் ப்ராஜெக்ட்டிற்கு அவள் நிறைய அலைய வேண்டும் என்பதால், இப்போதைக்கு  குழந்தை வேண்டாம் என்று தள்ளி வைத்தனர்..!

அடுத்த வருடம் ஓரளவுக்கு அவளின் வேலை முடிந்து விட, இனிமேல் மேற்பார்வை இடுவது மட்டும்தான் என வர, பொதிகையின் I CAN ஆப் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது..!

அதைத்தொடர்ந்து பொதிகை சாப்ட்வேர் நிறுவனத்திற்கு கல்வித்துறை சம்பந்தமான பல ப்ராஜெக்ட்கள் வந்து குவிந்தன. 

அதே போன்று மற்ற சாப்ட்வேர்களை பண்ணிக் கொடுக்க சொல்லி தனியார் கல்வி நிறுவனங்களும் அவர்களை அணுக,  பொதிகை சாப்ட்வேர் இப்பொழுது கிடுகிடுவென வளர்ந்தது.  

இப்பொழுது ஆயிரம் பேருக்கு மேலாக  வேலை செய்யும் நிறுவனமாக வளர்ந்தது.  

*****

ரு வருடத்திற்கு மேல் இருவருக்குமே குழந்தை வேண்டும் என்று ஆசை வந்து விட,  அடுத்த வருடமே தன் மகளை பெற்றெடுத்த விட்டாள் பொதிகை..!  

பெற்றது மட்டும்தான் பொதிகை..! மற்றதெல்லாம் அவளின் தந்தை ராசய்யாதான் பார்த்துக் கொண்டான்..!

பேத்தி வந்த சந்தோஷத்தில் ராசய்யாவை கையில் பிடிக்க முடியவில்லை.  

வயலில் விவசாயத்தை பார்க்க இப்பொழுது ஆட்களை நியமித்து விட்டு,  தன் மனைவியோடு அடிக்கடி வந்து சென்னையிலேயே தங்கி விடுவான்..!  

எப்படி பொண்ணு கொடுத்த வீட்டில் போய் அடிக்கடி தங்கி இருப்பது என்று ஆரம்பத்தில் பூங்கொடிக்குத்தான் சங்கடமாக இருந்தது..!    

ராசய்யாவோ அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை..!  

“நம்ம பொண்ணு டி..!  அவ வீட்டுக்கு நாம அடிக்கடி போக உரிமை இல்லையா? என்று அதட்டி விட்டான்..!  

வேறு வழியில்லாமல் பூங்கொடியும் தன் கணவனுடன் சென்னை வரவேண்டியிருந்தது.

******

ன் மனைவியின் பிரசவத்தை சென்னையில் தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வெற்றிமாறன் கறாராக சொல்லிவிட, பூங்கொடியும் வேலையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு, தன் மகளுக்கு  துணையாக அங்கு வந்து விட்டாள்..!

மருமகன் வீட்டில் தங்க வேண்டி இருக்கிறதே என்று கொஞ்சம் சங்கத்துடனே வளைய வந்தாள்..!

ஆனாலும் தன் பேத்தியை பார்த்ததும் மனம் கரைந்து போனது..! சங்கடங்கள் எல்லாம் மறைந்து போனது..!  

வெள்ளை வெளேரென்று வெற்றியின் நிறத்தையும், சாயலையும் உரித்து வைத்து பிறந்து இருந்தாள் வெற்றியின் மகள்..!

பால் சதையுடன் கொழுகொழுவென்று இருந்த தன் பேத்தியை கையில் வாங்கியதுமே சிலிர்த்துப் போனாள் பூங்கொடி.  

தன் மகளை கையில் வாங்கிய பொழுது கூட இல்லாத சிலிர்ப்பு பூங்கொடிக்கு தன் பேத்தியை கையில் ஏந்தியதும்  வந்து சேர்ந்தது..!

அதனால் இப்போதெல்லாம் தன் மகள் வீட்டிற்கு வருவதற்கு ராசய்யா ஏதாவது ஈகோ பார்த்தால் கூட பூங்கடி விடுவதில்லை..!  

தன் மகளையும் பேத்தியும் பார்க்க என்று அடிக்கடி தன் கணவனை இழுத்துக்கொண்டு சென்னைக்கு வந்து விடுவாள்.

*****

ப்பொழுதும் தன் மகளின் சாதனையை பாராட்டி, அவளுக்கு பரிசு வழங்கும் விழாவிற்காக, முசிறியில் இருந்து வந்திருந்தனர் ராசய்யாவும், பூங்கொடியும்..!

அவன் வந்ததில் இருந்து சிறியவள் தாத்தா தாத்தா என்று அவனிடமே ஒட்டிக்கொண்டாள்..!

விழாவிலும் தன் பேத்தியை மடியில் வைத்துக்கொண்டு, மகிழ்ச்சியும், பெருமையுமாய் வாயில் விரலை வைத்து விசில் அடித்துக்கொண்டிருந்தான் அந்த பாசக்கார தந்தை..!

அவனை ஒட்டி அமர்ந்து இருந்த அவன் குடும்பத்தாருக்கும், மற்றும் இப்பொழுது சம்பந்தியாகி இருக்கும் ஜமீன்தார் குடும்பத்துக்கும் சங்கடமாக இருக்க,  அவனோ  அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை

தலைமுடி கொஞ்சமாக  நரைத்து இருந்த பொழுதும்,  இன்னும் அதே மிடுக்கும் இளமையும் கம்பீரமும் கொஞ்சமும் குறையாமல், கம்பீரத்துடன் அமர்ந்து இருந்தவன்..! தன் பேத்தியை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு விசில் அடித்துக் கொண்டிருந்தான்..!

மற்றவர்கள் லேசாக முகம் சுளித்தாலும், பொதிகைக்கு தன் அப்பாவின் செயலில் அத்தனை அத்தனையாய் மகிழ்ச்சி..!

அருகில் அமர்ந்து இருந்தவனின் தோளில் சலுகையோடு சாய்ந்து கொண்டாள்..!

கல்வி அமைச்சரும் சிறு புன்னகையோடு பொதிகையை மேடைக்கு அழைக்க, எப்பொழுதும் போலவே சிறு நடுக்கம் வந்து சென்றதுதான்..!

ஒரு பக்கம் அவள் தந்தையும், மறுபக்கம் அவள் கணவனும் அவளின் கையை அழுத்தி கொடுத்து, சொல்லாமல் தைர்யம் சொல்ல, இருவரின் அழுத்தமும் ஒன்றாகவே தோன்றியது..!

இருவரையும் பார்த்து மெல்ல புன்னகைத்துவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்தவள், கம்பீரமாக, அதே சமயம் நிமிர்வுடன் மேடைக்கு விரைந்தாள்..!

சந்தன நிறத்தில் மெல்லிய சிவப்பு கரையிடப்பட்ட காஞ்சிபுர பட்டு புடவை... புடவைக்கு பொருத்தமாக முழங்கை வரைக்குமான போட்நெக் ப்ளவுஸ்..! உயர்த்தி போட்டிருந்த நதியா ஸ்டைல் கொண்டை...நடையில் தெரிந்த நிமிர்வு  அவளுக்கு அப்படி ஒரு கம்பீரத்தை கொடுத்தது..!

துள்ளலுடன் மேடைக்கு சென்ற தன் மருமகளையே ரசித்து பார்த்திருந்தார் ஜமீன்தார் நெடுமாறன்..!

******

ன் மகன் மாறன் ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்று சொன்னபொழுது எப்படியும் அவள் ஜமீனுக்கு பொருத்தமாக ஒரு பேரழகியாக இருப்பாள் என்று எதிர்பார்த்து இருந்தார்..!

ஆனால் அவரின் எதிர்பார்ப்பு பொய்த்துபோகும் படியாக, அழகில் அப்படி ஒன்றும் அழகியில்லை..! அந்தஸ்திலும் கீழ்த்தட்டு குடும்பத்தை சேர்ந்தவள் என்று தெரிந்தபொழுது தன் எதிர்ப்பை தெரிவித்தார்.

ஆனால் தன் மகன் ஒரே பிடிவாதமாக நின்றுவிட, வேற வழியில்லாமல்  தான் இந்த திருமணத்தை விருப்பம் இல்லாமல் நடத்தி வைத்தார்..!

ஆனாலும் தன்னுடைய மகன் மற்றும் மருமகள் வாழ்க்கையில் தலையிடாமல் ஓரமாக ஒதுங்கி இருந்தார்..!

தன் மருமகளின் இந்த ப்ராஜெக்ட்டை பற்றி கல்வி அமைச்சர் பொன்வண்ணன் அடிக்கடி ஜமீன்தாரிடம் பெருமையாக பேச, அதை கண்டு கொள்ளாதவராய் காதில் வாங்கி கொள்வார்தான்..!

ஆனால் இன்று கல்வித்துறையில் தமிழகம் இத்தனை பெருமையாய் தலை நிமிர்ந்து நிக்க, தன் மருமகள் முக்கிய காரணம் என்று அறிந்தபொழுது அவருக்கும் பெருமையாக இருந்தது..!

தற்பொழுது நிமிர்வுடன் கம்பீரமாய் மேடையை நோக்கி செல்லும் தன் மருமகளை பார்க்க, அவளின் தோற்றத்தில் அப்படியே ஜமீன் களை கொட்டி கிடந்தது தெரிந்தது..!

அவர் எதிர்பார்த்த மாதிரி ஒரு பேரழகி தனக்கு மருமகளாக  வந்திருந்தால் கூட இந்த அளவுக்கு ஜமீனுக்கு பெருமை சேர்த்திருக்க மாட்டாள்...

ஒரு பெண்ணிற்கு அழகு என்பது புறத்தோற்றத்தில் மட்டும் வந்து சேருவதில்லை..! அப்படி புறத்தோற்றத்தில் பேரழகியாக இருக்கும் அழகு நீண்ட நாட்கள் நீடிக்காது..!

நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும், அடுத்தவர்களுக்கு உதவும் தாராள குணமும் தான் ஒரு பெண்ணை பேரழகியாக்குவது என்று அந்த நொடி புரிந்து கொண்டார் பெரியவர்..!

நிமிர்வுடன்,  கம்பீரமாய்,  உதட்டில் சிறு புன்னகையுமாய்,  துள்ளலுடன் மேடையை நோக்கி செல்லும் தன் மருமகள்தான் இப்பொழுது பேரழகியாக தெரிந்தாள் ஜமீன்தாருக்கு..!

தன் மகன் சரியான இணையைத்தான் கண்டுபிடித்து இருக்கிறான் என்று இப்பொழுது புரிந்தது..!

அதோடு வெற்றிமாறனுக்கு ஜமீன் பொறுப்புகளை எல்லாம் கவனித்துக் கொள்வதில் விருப்பம் இருந்ததில்லை..! தொழிலை பெருக்குவதிலும், வளர்ப்பதிலும் மட்டும்தான் அவன் கவனம் இருக்கும்..!

தன்னைப்போலவே மற்றவர்களுக்கு உதவும் குணம் தன் மகனை விட, மருமகளிடம் அதிகம் இருப்பது அப்பொழுதுதான் புரிந்தது..!

தனக்கு பின் ஜமீன் பொறுப்புகளை கவனித்துக்கொள்ள தனக்கொரு வாரிசு வந்துவிட்டதாய் மகிழ்ந்து போனார்..!

“என் மருமகள்...” என்று தன் மீசையை நீவிவிட்டுகொண்டு அருகில் அமர்ந்து இருந்த தன் மனைவியிடம் பெருமையாக சொல்லிக் கொண்டார் நெருமாறன் ஜமீன்தார்...!

******

மேடையேறிய பொதிகையின் பார்வை அனிச்சையாய் இரண்டாவது வரிசையில்  அமர்ந்து இருந்த தன் குடும்பத்திடம் சென்றது..!

அதிலும் முதன்முதலாய் தன் மாமனாரின் முகத்தில் தெரிந்த பூரிப்பு, சிறுபுன்னகை அவளுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்தது..!

அவர்களின் திருமணம் முடிந்ததில் இருந்து, இதுவரை அவளிடம் பெரிதாக எதுவும் பேசியிராதவர்..!

இன்று அவள் பரிசு வாங்கும் விழாவிற்கு அவர் வந்திருக்கிறார் என்றதே மகிழ்ச்சியாக இருக்க, இப்பொழுது அவரின் முகத்தில் பூத்திருந்த பெருமை இன்னுமாய் சந்தோஷத்தை கொடுத்தது..!

அதே நேரம் ராசய்யாவின் விசில் சத்தம் இன்னுமே அந்த அரங்கத்தை அதிர வைத்துக்கொண்டு இருக்க, இப்பொழுது அவள் பார்வை  தன் தந்தையிடம் சென்றது..!

அவரை  நினைத்து பெருமையும் கர்வமும் கூடவே சிரிப்பும் வந்தது.  

தன் அப்பாவை பார்த்து லேசாக கண்ணடித்துவிட்டு மேடை  ஏறியவள், பின்  முதலமைச்சரின் காலைத்தொட்டு வணங்கி,  அவர் கொடுத்த சிறப்புப் பரிசை மனம்கொள்ளா மகிழ்ச்சியும் பூரிப்புமாய் வாங்கிக் கொண்டாள்..!

அதே நேரம் அவள்  கையில் வந்து சேர்ந்தது மைக் ஒன்று..!  

“சொல்லுங்க மிஸஸ் பொதிகை வெற்றிமாறன்...! எப்படி உங்களுக்கு இப்படி ஒரு ஐடியா வந்தது? என்று பொதிகையிடம் அந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர் கேள்வியை தொடங்க,  

“எல்லாம் என் அப்பாவுடைய கனவுனாலதான்..!  நான் ஒரு மருத்துவராக,  அதுவும் கார்டியாலஜிஸ்ட் ஆகணும்னு  என் அப்பா கனவு கண்டார்.  அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.  

அதனால் என்னைப்போன்று கனவு கண்டு கொண்டிருக்கும் மாணவர்களின் கனவை கை சேர்க்க வேண்டும் என்பது என் கனவாகி போனது..!

இப்பொழுது என் கனவு கை சேர்ந்ததில் பெரும் மகிழ்ச்சி..!

நான் ஒரு மருத்துவராக முடியாவிட்டாலும், இன்று என்னை மாதிரி மருத்தவராக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்த  எத்தனையோ பிள்ளைகளை மருத்துவராக்கி விட்ட பெருமை...!

அவர்களின் கனவை கை சேர்த்துவிட்ட ஒரு திருப்தி...! அத்தோடு என் கனவும் இப்பொழுது கை சேர்ந்தது..!

இங்கு கூடி இருக்கும்  எல்லா நாளைய மருத்துவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்..!  

மார்க்  வாங்கி மருத்துவ  சீட்டு வாங்கியதோடு மட்டும் நின்று போவதில்லை.  

நீங்கள் எல்லாம் மற்ற உயிர்களை காப்பாற்ற வேண்டும்.. எந்த நேரத்திலும் எமர்ஜென்சி என்று வந்தாலும் முகம் சுழிக்காமல் உதவி செய்யும்  மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  

அன்றைய கால கட்டத்தில் சரியான மருத்துவ  வசதி இல்லாததாலும், மருத்துவரின்  அஜாக்கிரதையினாலும் தான்  என் தந்தை அவருடைய அப்பா அம்மாவை இழந்து அனாதையாக நிற்க வேண்டி இருந்தது..! 

இப்பொழுது கூட இன்னும் எத்தனையோ அரசு மருத்துவமனைகளில், இது  அரசு மருத்துவமனை தானே...நம்மை கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் கேர்லெஸ்ஸாக இருக்கும் நிலைதான் இருக்கிறது.  

நீங்கள் எல்லாம் புது ரத்தம்..!  புது ஜெனரேசன்..! நீங்கள் எல்லாம்  அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும். அரசு பள்ளிகளில் படித்து மருத்துவராகும்,  நீங்கள்...நீங்கள் கற்றதை அதே அரசு மருத்துவமனைக்கு திருப்பிக் கொடுக்கவேண்டும்.  

சம்பளம் அதிகம் வருகிறது என்று பெரிய பெரிய தனியார் மருத்துவமனையை மட்டும் நாடாமல்,  உங்கள் சேவையை அரசு மருத்துவமனைகளிலும் தொடர வேண்டும்.  

அனைவரின் கனவு கை சேர என் வாழ்த்துக்கள்..!  

அதோடு என்னுடைய இந்த வெற்றிக்கு முழுமொத்தம் காரணம் எனது குடும்பத்தார்..!  

என் பிறந்த குடும்பம்,  புகுந்த குடும்பம்  இரண்டுமே  எனக்கு உறுதுணையாக இருந்ததால் தான் என்னால் இதை சாதிக்க முடிந்தது.  

அதுவும் எனது இரண்டு கண்களான  என் கணவனும்,  என் தந்தையும் தான் இதற்கு முக்கிய காரணம்..!  

சிறுவயதில் இருந்தே வாழ்க்கையில் ஏதாவது வித்தியாசமாக சாதிக்க வேண்டும் என்ற கனவை என் தந்தை விதைத்து,  என்னை இளவரசியாக பார்த்துக்கொண்டார் என்றால்,

அந்த கனவு கை சேர எனக்கு பக்க பலமாய் இருந்து  என்னை மகாராணியாக தாங்குவது மை டியர் ஹஸ்பென்ட்  மிஸ்டர் வெற்றிமாறன்.!  

எனக்கு இப்படி ஒரு குடும்பத்தையும், என் கனவை நிறைவேற்ற ஒரு வாய்ப்பையும் கொடுத்த  அந்த ஆண்டவனுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்..!  நன்றி..! வணக்கம்..! “  என்று உரையை முடிக்க,  மீண்டும் எல்லாரும் பலத்த கைத்தட்டல்..!  

அந்த அரங்கமே  அதிர ஆரவரித்தனர்.

ராசய்யாவின் கண்களிலோ ஆனந்த கண்ணீர்..!

Share:

Followers

Total Pageviews