மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Thursday, November 10, 2022

கனவே கை சேர வா-11

 


அத்தியாயம்-11

 

டுத்த வாரம் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விதமான விழா அண்ணா பல்கலைகழகத்தில் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.

அதுவரை சீனியர்களை பார்த்து அலறி அடித்து, ஓடி ஒளிந்து மறைந்து வந்த முதலாமாண்டு மாணவர்கள், சீனியர்ஸ் தங்களுக்கு அளித்த வரவேற்பை பார்த்து அசந்து போயினர்.

அவர்களா இவர்கள் என்று நம்ப முடியாததாய்  மிகச்சிறந்த வரவேற்பறை அளித்தனர் சீனியர்கள்.

அதுவும் ராக்கிங் பற்றி பொதிகை, கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்த பிறகு, வெற்றியின் தலைமையில் எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சனால், அதன்பிறகு ராக்கிங் எதுவும் அந்த வளாகத்தில் இல்லை.

அதனாலயே கொஞ்சம் சுதந்திரமாக சுற்றி வர ஆரம்பித்து இருந்தனர் முதலாமாண்டு மாணவர்கள்.

இப்பொழுது இந்த விழா வேறு அவர்களுக்கு உற்சாகத்தை தர, பட்டாம்பூச்சிகளாய் அந்த விழாவில் சுற்றி வந்தனர்.

 *****

முதலாமாண்டு மாணவர்களின் தனித்திறமையை காட்டும் விதமாக பல்வேறு போட்டிகளை வைத்திருந்தனர்.

அதன்படி ஒவ்வொருவரும் அவரவருடைய திறமையை வெளிக்காட்ட பொதிகையும்  எல்லாவற்றிலும் பங்கெடுத்திருந்தாள்.  

கோலப் போட்டி, ஓவிய போட்டியில் இருந்து சோலோ டான்ஸ் வரைக்கும் எல்லாவற்றிலும் தயக்கம் இன்றி பங்கெடுத்துக் கொண்டிருந்தாள்.

வெற்றிமாறன்,  மாணவர் சங்கத்தின்  தலைவன் என்பதால் அந்த விழாவை பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்தான். அவன் தலைமையிலான குழு க்கு அவ்வபொழுது கட்டளைகளை பிரப்பித்தபடி, படு மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான்.

ஒரு பக்க ஆடிட்டோரியத்தில் மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்க, அருகில் இருந்த மற்றோரு அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது.

வெற்றிமாறன் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த அரங்கத்தில்  நின்று கொண்டு சில ஏற்பாடுகளை சொல்லிக் கொண்டிருந்தான்.   

அப்பொழுது பக்கத்து ஆடிட்டோடியத்தில் இருந்து கம்பீரமாக ஒலித்தது பெண் குரல் ஒன்று..!

பாரதியின் கவிதை வாசிக்கும் போட்டி அது..! 

அவரின் கவிதையை ஏற்ற இறக்கத்துடன்  வாசிக்க வேண்டும். அப்படி வாசித்த ஒரு பெண்ணின் கணீர் என்ற குரல்தான் அவன் செவியில் விழுந்தது.

அந்த குரல் அவன் உள்ளே புகுந்து உயிர்வரை தீண்டுவதாய் ஒரு உணர்வு.

அடுத்த கணம், அவன் பேசிக்கொண்டிருந்ததை அப்படியே நிறுத்திவிட்டு, அவன் கால்கள் தானாக ஆடிட்டோரியத்தை நோக்கி சென்றது.

 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

 

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே..!

 

என்று பாரதியின் கவிதையை கம்பீரமாக வாசித்துக் கொண்டிருந்தாள் பொதிகை

அந்த கவிதையின் வரிகளுக்கு ஏற்ப அவள் முகத்தில் கோபம் பொங்கி கொண்டிருந்தது.

வெள்ளை சல்வாரில் ஆங்காங்கே பூக்கள் போட்டிருக்க, அதற்கு மேல கருப்பு கோட் போல அணிந்திருந்தவள், ஒரு கையில் மைக்கை பிடித்தபடி, மற்றொரு கையை ஆட்டி ஆட்டி கம்பீரமாக அந்த கவிதையை எந்த குறிப்பையும் பாராமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் கண்களில் ரத்த வரி ஓடிக்கிடக்க, முகம் சிவந்து, காது மடல் விடைத்து, முழு உணர்ச்சி வேகத்துடன் அந்த கவிதையை சொல்லிக் கொண்டிருந்தாள்.

அப்படியே பாரதியே நேரில் வந்து, அவர் மனதில் அப்பொழுது பொங்கிய ரௌத்திரத்துடன் அந்த பாடலை பாடுவதை போல இருக்க,  ஒரு கணம் மெய் மறந்து நின்று விட்டான் வெற்றிமாறன்.

அதோடு அவளின் கோப முகத்தை கண்டதும் அதுவாய் சுரக்கிறது இதுவரை மறைந்திருந்த அவன் உணர்வுகள்.

வழக்கமாய் வரும் அதே இறுக்க  கட்டி அணைத்து, கோபத்தில் விடைத்துக்கொண்டிருக்கும் அவள் செவ்விதழின் கோபத்தை தணிக்க துடிக்கும் உணர்வுகள்...

அடுத்த நொடி அவனை நினைத்து அவனுக்கே வெட்கமாகவும், கோபமாகவும், சிரிப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது.

ஏன் இப்படி ஒரு உணர்வு அவனை அலைகழிக்கிறது? அதுவும் அவளின் கோபத்தை பார்க்கும் பொழுது மட்டும் இப்படி தோன்றுவது ஏன்? என்று பலமுறை தனக்குள்ளே கேட்டுக்கொண்டான்.

ஆனால் விடைதான் கிடைக்கவில்லை.

மாறாக இதழ்களில் வந்து சேருகிறது குறுநகை ஒன்று..!

அதே இளநகையுடன், தன் பின்னந்தலையை தன் வலக்கரத்தால் கோதி விட்டுக் கொண்டு, பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டவாறு அந்த ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேற   முயல, அதே நேரம் ஆடிட்டோரியத்தின்  முன்னால் இருந்து ஓடிவந்தான் ஒருவன்.

“தல...அடுத்து சோலோ டான்ஸ் போட்டி...ஜட்ஜ்க்கு ஒரு ஆள் குறையுது. பேசாம நீங்களே ஜட்ஜ் ஆ வந்திடுங்களேன்...” என்று அவன் பிரச்சனையை சொல்ல

“இல்ல விக்ரம்... எனக்கு மற்ற வேலை இருக்கு. நீ வேற யாரையாவது கூப்டுக்கோ..” நழுவ முயன்றான் வெற்றி.

ஏற்கனவே எல்லாரையும் கேட்டுட்டேன் தல. ஆனால் யரும் இந்த நேரம்  ஃப்ரியா இல்ல.. ஒரு ஒருமணி நேரம்தான்...ப்ளீஸ் தல..” என்று கெஞ்ச, வேற வழியில்லாமல் ஆடிட்டோரியத்தின் முன்னால் நடக்க தொடங்கினான் வெற்றி.

அடுத்து சில நிமிடங்களில் போட்டி ஆரம்பித்திருக்க, ஆண்களும் பெண்களுமாய் தங்கள் நடன திறமையை வெளிக்காட்டி கொண்டிருந்தனர். வெற்றிமாறனும் அதை கவனித்து மதிப்பெண்களை குறித்து கொண்டிருந்தான்.

இறுதியாக வந்தாள் பொதிகை..!

இதுவரை ஆடிய எல்லாருமே வெஸ்டர்ன், க்ளாசிக்கல் என்று கலக்கியிருக்க, அவள் வந்து நின்றதோ கிராமத்து பெண் ஸ்டைலில்.

அடர் ஊதா, வாடாமல்லி, சிவப்பு, ஆரஞ்சு என அனைத்து நிறத்திலும் பெரிய பெரிய கட்டங்கள் போட்டிருந்த, எட்டுமுழ கண்டாங்கி சேலையை, பின் கொசுவம் வைத்து கட்டியிருந்தாள்.

தன் கூந்தலையும் கிராமத்து பாணியில் அள்ளி முடிந்து பக்கவாட்டில் கொண்டையாக்கி இருந்தாள்.

பின் கொசுவம் வைத்து கட்டி இருந்ததால், அவளின் வெற்றிடை அப்படியே பார்வைக்கு வந்தது. அதை மறைப்பதற்கு என்றே ஒரு மூங்கில் கூடையை இடையிலும் வைத்திருந்தாள்.

அவளின் மக்காச்சோள நிறத்திற்கு, ஆளை அடிக்கும் அந்த கண்டாங்கி சேலை அவ்வளவு பாந்தமாக பொருந்தியிருக்க, முகத்திற்கும் எந்த ஒப்பனையும் இடாமல், நேச்சுரலாய் வந்து நின்றவளை காண,  அப்படியே கிராமத்து பெண்ணே நேரில் வந்து நிற்பதை போலிருந்தாள் பொதிகை...!

ஒரு நொடி இமைக்க மறந்து போனான் வெற்றிமாறன்..!

அதே நேரம் நடனம் ஆரம்பித்திருக்க, அடுத்த ஆச்சர்யம் அவனுக்கு.

இதுவரை வந்தவர்கள் எல்லாருமே ஏதாவதொரு திரைப்பட பாடல்களுக்குத்தான் நடனமாடி சென்றிருந்தனர். ஆனால் பொதிகையின்  நடனத்தின் பாடல் எந்த திரைப்படத்திலும் வந்த மாதிரி தெரியவில்லை.

அவனும் அவசரமாக தன் அலைபேசியை எடுத்து அந்த பாடலை தேடிப்பார்க்க, அப்படி ஒரு பாடல் இணையத்தில் கூட இல்லை.

அப்புறம் எப்படி என்று யோசித்தவனுக்கு புரிந்துவிட்டது.

இது அவளாகவே எழுதி, யாரோ இசை அமைத்து கொடுத்த அவளின் சொந்த பாடல் என்று.

அது ஒரு கிராமத்து வாழ்க்கை முறையை விவரிக்கும் கதை மாதிரியான பாடல். பாடல் வரிகளும் அவளின் நடன அசைவுகளும் கிராமத்து வாழ்க்கையை கண் முன்னே நிறுத்தியிருந்தது.

அதுவும் கிராமத்தில் விவசாயி படும் வேதனைகளை, நாம் சாப்பிடும் உணவை விளைவிக்க, அவன் படும் போராட்டங்களை உணர்ச்சி பெருக்குடன் விவரித்தாள் தன் நடனத்தின் மூலமாக.

அடுத்ததாய் கிராமத்து காதலையும் விட்டு வைக்கவில்லை.

*****

ன்றைய டிஜிட்டல் உலகத்தில் அழிந்து வருவது விவசாயம் மட்டும் அல்ல. தமிழனின் பெருமைகளில் ஒன்றான காதல் வாழ்க்கையும்தான்.

இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயம்.

பொருள் ஈட்டுவதற்காக அதிகம் சம்பளம் கிடைக்கும் தொழிலை நாடிச்செல்வது. கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கு நைட் ஷிப்ட் என்றால் மற்றவருக்கு டே ஷிப்.

அப்படி இருக்க, தங்களின் இணையை, ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வதே விடுமுறை நாட்களில் தான்.

மற்ற நாட்களில் அலைபேசி வழியாகவோ, இல்லை வாட்ஸ்அப் மெசேஜ் மூலமாகத்தான் பேசிக்கொள்வது.

அதுவும் வார இறுதியில், கிடைக்கும் நேரத்திலும் அடுத்த வாரத்திற்கான பொருட்களை வாங்க, வீட்டை சுத்தம் செய்ய,  என நேரம் ஓடிச்செல்ல, இதில் ஆற அமர உட்கார்ந்து காதலிக்க ஏது நேரம்?

ஆனால் அன்றைய கிராமத்து காதல் எவ்வாறு இருந்தது? எப்படி காதலனும் காதலியும் திகட்ட திகட்ட காதலித்தார்கள்...என்பதை தன் நடனத்தின் மூலமாக விளக்க, வெற்றிமாறனோ மீண்டுமாய் பேச்சிழந்து போனான்.

சற்றுமுன் பாரதியின் கவிதையை அவள் வாசித்தபொழுது, தெரிந்த ரௌத்திரமான முகம்கிராமத்து விவசாயிகளின் நிலையை விவரிக்கும்பொழுது தெரிந்த வேதனையான முகம்...

அதே காதலை பற்றி சொல்லும்பொழுது, நாணத்துடன் ஜொலித்த அவளின் இலகிய முகம் என பல பரிமாணங்களை, பொதிகையின்  பல அவதாரங்களை கண்டு அசந்து நின்றான்.

அதோடு காதலிக்கும் பெண்ணின் உணர்வுகளை அப்படியே பிரதிபளித்து கொண்டிருக்க, அவளின் அந்த வெட்கம் கலந்த சிவந்த முகத்தை கண்டதும் இன்னுமாய் கவிழ்ந்து போனான் வெற்றிமாறன்.

அவளின் வெட்கம் கலந்த தோற்றத்தில்... அவளின் அங்கங்களின் அழகான நடன அசைவில்...  அதிலும் முகத்தில் வந்து போன பல வண்ண பாவனைகளிலும் அவனை கட்டி இழுத்தாள் பொதிகை.

அவளின் ஒவ்வொரு செயலிலும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து கொண்டிருந்தவன்  அந்த நடனத்தை முழுவதுமாக கண்டதும் முழுவதுமாக அவளிடம் தொலைந்து போனான்.

இவள்தான் என் சரிபாதி... என்னவள்...எனக்காக பிறந்தவள்...என்று அந்த  கணமே  முடிவு செய்து விட்டான் வெற்றிமாறன்..!


Share:

1 comment:

Followers

Total Pageviews