மனதுக்கு இதமான காதல் கதைகளின் களஞ்சியம்..!

Sweet Romantic Novels

Saturday, March 4, 2023

கனவே கை சேர வா-24(Final)

 


அத்தியாயம்-24


ன்றிரவு பால் டம்ளருடன் தங்கள் அறைக்கு உள்ளே வந்தவளை இழுத்து தன் மடியில் போட்டு இறுக்கி அணைத்துக் கொண்டான்  வெற்றி..  

“ஐயோ விடுங்க வெற்றி...”  என்று சிணுங்கினாள் பெண்..!

“என்னது? விடறதா..? நான்   இப்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி..!  “ என்று  அவள் இடையில் அழுத்தம் கொடுத்து அவன் சந்தோஷத்தை அவளுக்கு உணர்த்த, அவளும் வேண்டும் என்றே சீண்டினாள்..!

“அப்படியா? ஏனாம் ? “ என்றாள் ஒன்றும் தெரியாதவளாய்...!

“ஹா ஹா ஹா...இதுதான் முசிறிக்காரி லொல்லு என்பது..! ஏன்னு தெரிஞ்சுகிட்டே தெரியாத மாதிரி கேட்கறீயேடி என் கருவாச்சி...” என்று அவள் கன்னத்தை செல்லமாக கடிக்க,  

“ப்ச்... நிஜமாலுமே தெரியல.. சொல்லுங்க வெற்றி...” என்று அவன் சட்டையில் இருந்த பட்டணை திருக,

“ஹா ஹா ஹா என் பொண்டாட்டி நினைச்சதை சாதிச்சிட்டா எனக்கு பெருமை இல்லையா?  சந்தோஷமா இருக்காதா? இன்னைக்குத்தான் அவள் முகத்தில் ஒரு பூரண சந்தோஷம் தெரிந்தது...அதுதான் எனக்கும் சந்தோஷம்....“  என்று ஒரு முத்தத்தை அவளின் நெற்றியில் பதித்துவிட்டு அவளிடம் கிசுகிசுத்தான்..!

தன் கணவனின் காதலில் பெண்ணவளும் உருகித்தான் போனாள்..!

என் சந்தோஷத்தை காண அவனுக்கு சந்தோஷமாமே..! ஆனால் இன்றுவரை அவனுக்காக, அவன் சந்தோஷத்திற்காக என்று அவள் ஒன்றுமே செய்ததில்லை..!

அவளுக்காக அவன்தான் பார்த்து பார்த்து எத்தனையோ செய்திருக்கிறான் என்று புரிய, இன்று அவள் வாங்கிய பாராட்டை , பரிசை விட, இவனை தன் கணவனாக பெற்றதுதான் பெரும் வரம் என அவள் மனம் பூரிந்து போனது..!

என் கணவன் என்று பெருமை பொங்க, தன்னவனை காதலுடன் பார்த்தவள்,

“ஹ்ம்ம்ம்  அப்படினா சாதிச்ச உங்க பொண்டாட்டிக்கு என்ன கிப்ட் கொடுக்க போறிங்களாம்...? “ சுற்றி வளைத்து பாய்ண்டுக்கு வந்தாள் பெண்..!

“உனக்கு இல்லாததா செல்லம்? உனக்கு என்ன வேணும்னு  சொல்லு...இப்பயே வாங்கி கொடுத்திடறேன்....”  என்றான் கரகரப்பான குரலில் அவளின்  காதோரம் மீசை உரச.  

அதே நேரம் நெற்றியில் இருந்த அவன் இதழ்கள் இப்பொழுது அவளின் சங்கு  கழுத்தில் ஊர்வலம் வர ஆரம்பித்து இருந்தது..!

அதில் இன்ப அவஷ்தையை அனுபவித்தாலும், கணவன் குழைந்து இருக்கும் நேரம் தான் மனைவிக்கு பொன்னான வாய்ப்பு..!

இந்த நொடியை வைத்துத்தான் தன் கணவனிடம் சாதித்துக்கொள்ள முடியும் என்று எழுதப்படாத நியதிப்படி, பொதிகையும் அவனோடு இழைந்தவள்

“நிஜமாகவா? நான் என்ன கேட்டாலும் கிடைக்குமா? “ என்று மையலுடன் அவன் முகம் பார்த்து கேட்க,

“யெஸ் டி.. மை டியர் பொண்டாட்டி... இந்த வெற்றியையே உன்னிடம் தந்துவிட்ட பிறகு, பிசாத்து... நீ கேட்கறத கொடுக்க முடியாதா? “ என்று பெருமையுடன் சொல்ல,

“ஆர் யூ ஸ்யூர்?.... அப்புறம் பேச்சை மாற்றக் கூடாது...”  என்று பெண்ணவளும் இழுக்க

“அப்படியெல்லாம் பேச்சு மாற மாட்டான் இந்த வெற்றிமாறன்..! ஒரு சொல்...ஒரு வில்..ஒரு இல்.. என்பதுதான் அவனின் தாரக மந்திரமாக்கும்..! நீ கேட்க வந்ததை தயங்காம கேளுடி செல்லம்..!

டைம் போய்கிட்டு இருக்கு.. இன்னைக்கு புல் டே மேட்ச்க்கு ப்ளான் பண்ணி இருக்கேன்..! அதனால நேரத்தை வீணாக்காமல், சட்டு புட்டுனு உனக்கு வேண்டியதை கேள்...” என்று அவசரபடுத்தினான் அந்த காதல் கணவன்..!   

“அது... அது... அது வந்து...  எனக்கு வெற்றி மாதிரி ஒரு பையன் வேண்டும்...”  என்று ஆசையும், தயக்கமும், வெட்கமுமாய் பெண் முடிக்க,  

அவ்வளவுதான்..! அடுத்த கணம்  அவனின் உடல் இறுக  ஆரம்பித்தது..!   

தன் வலிய கரங்களால் சுற்றி அணைத்து இருந்தவளை இன்னுமாய்  இறுக்கி அணைத்துக் கொண்டான்..!  

முந்தைய அணைப்புக்கும் இப்போதைய அணைப்புக்கும் நன்றாகவே வித்தியாசம் தெரிந்தது பொண்ணுக்கு.  

முந்தைய  அணைப்பு மோகத்துடனான தாப அழைப்பு..!  இப்போதைய அணைப்பு அவளை பத்திரமாக தன்னுள்ளே போட்டு பூட்டி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தவிப்பும், அக்கறையுமான  அணைப்பு..!

*****

ன்றொரு நாள் அவன் மாமனார் சொன்னது போலவே தன் மனைவியின் முதல் பிரசவத்தின் பொழுது ரொம்பவுமே தவித்து போய் விட்டான் வெற்றிமாறன்.!

பொதிகையின் பிரசவம் கொஞ்சம் சிக்கலாகி விட, அவள் படும் வலியையும், வேதனையும் கண்டு நொறுங்கி போனான்..!   

அவன் மாமனார் அனுபவித்த வலியையும் வேதனையும் விட பல மடங்கு வேதனையை அனுபவித்து மீண்டு வந்தான் வெற்றிமாறன்..!  

அதனால் அன்றே முடிவு செய்துவிட்டான்..!  ஒன்றே போதுமென்று

அப்பொழுதுதான் அன்று தன் மாமனார் சொன்னது எவ்வளவு பெரிய சத்தியவாக்கு என்று புரிந்தது

அதனாலேயே தனக்கு ஒரு மகள் மட்டும் போதும் என்று பிடிவாதம் பிடிக்கிறான்..!  

ஆனால் பொதிகை அதை எதிர்த்துக் கொண்டு இருக்கிறாள்..!

தன்னைப்போலவே தன் மகளும் ஒற்றை பிள்ளையாய் நின்று போய் விடக் கூடாது என்று தன் கணவனிடம் இப்பொழுது இருந்தே போராடி வருகிறாள்..!

“ஹ்ம்ம் சொல்லுங்க ஜமீன்தாரே..!  நான் கேட்டது எப்ப கிடைக்கும்?” என்று அவனின் மஞ்சத்தில் தன் சுண்டு விரலால் கோலமிட்டபடி மையலுடன் கேட்க, அவனோ இன்னுமாய் இறுகிப்போனவன்

“இல்ல மா... அது மட்டும் வேண்டாம்...! காலம் காலமாகவே நம்ம ஜமீனுக்கு ஒற்றை வாரிசுதான்..! என் தாத்தா...என் அப்பா...நான்....எல்லாமே ஒற்றை பிள்ளைதான்..! அதனால நமக்கும் நம்ம பொண்ணு மட்டும் போதும்...”  என்று பொறுமையாக அவளுக்கு விளக்க,

“ப்ச்...எனக்கு போதாதே..! நான் தான் ஒற்றை பிள்ளையாக நின்று போனேன்..! ஆனாம் நம்ம பொண்ணு அப்படி இருக்க கூடாது...

அதோடு....எனக்கு உன்னைப்போலவே ஒரு பையன் வேண்டும் வெற்றி...

பாப்பா வயிற்றில இருந்தப்பதான் ப்ராஜெக்ட் சம்பந்தமாக கொஞ்சம் அலைந்து கொண்டு இருந்ததால், உன் கவனிப்பை எல்லாம் என்னால முழுமையாக அனுபவிக்க முடியவில்லை..!

ஆனால் இப்பொழுது பொறுமையாக, நீ என்னை தாங்குவதை எல்லாம் அனுஅனுவாக ரசிக்க வேண்டும்...! ” என்று நாணத்தோடு சொல்ல,

அதுக்கு ஏன் டி ஒரு புள்ளைய சுமந்தாதான் நான் உன்னை தாங்குவேனா? இப்பவும் அப்படித்தான உன்னை தாங்கறேன்...!” என்று குறும்பாக கண் சிமிட்டி மந்தகாசமாக சிரிக்க,

ஆனாலும் அதுமாதிரி வராது..! ப்ளீஸ் வெற்றி..” என்று கெஞ்ச,

“ம்கூம் நீ என்னதான் ப்ளீஸ் போட்டு கெஞ்சினாலும் கொஞ்சினாலும் இதுக்கு மட்டும் நான் சம்மதிக்க மாட்டேன்....” என்று பிடிவாதமாக மறுக்க,

“யோவ்...நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? அன்னைக்கு ஒரு நாள் என்னவோ உன் மாமனார் கிட்ட அப்படி பீத்திகிட்ட... என் தாத்தாவைப்போல நாலு புள்ளைய பெத்துக்குவேன்னு சவடால் விட்ட...இப்ப எங்க போச்சு உன் வீர, தீர பராக்கிரமம் எல்லாம்...” என்று முறைத்தபடி அவனை சீண்ட ,

“ஹா ஹா ஹா என் வீர தீர பராக்கிரமம் எல்லாம் அப்படியே பத்திரமா என்கிட்ட தான் டி இருக்கு...அப்புறம் நான் ஆம்பளையா இல்லையானு காட்ட வேண்டிய நேரத்துல காட்டறேன்...” என்று சிரித்தபடி அவளை மடக்க, தன் சீண்டல் அவனிடம் எடுபடவில்லை எனவும் அடுத்த ஆயுதத்தை எடுத்தாள்..!

“ப்ளீஸ் வெற்றி...! நீங்க பயப்படற அளவுக்கெல்லாம் டெலிவரி ஒன்னும் கஷ்டமே இல்லை..! ஏனோ பர்ஸ்ட் டெலிவரி அப்ப நான் கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்திட்டேன்..! அடுத்த பாப்பாவுக்கு ரொம்ப கேர்புல்லா இருப்பேன்..!

அதோடு இப்பொழுதெல்லாம் டெலிவரி டேட் வரைக்கும் காத்திருக்க  தேவையில்லை. பிரசவ வலி வரும்முன்னே  டைரக்டா  சிசேரியன் பண்ணிக்கலாம். ஒரு பிரச்சனையும் இருக்காது...”

என்று இன்னும் ஏதேதோ விளக்கத்தை சொல்லி தன் கணவனை சமாதானம் படுத்த முயன்றது பெண்..!

ஆனால் அதையெல்லாம் காது கொடுத்து கூட கேட்கவில்லை அவன்..!

அதெல்லாம் முடியவே முடியாது என்று ஒரே அடியாக மறுத்துவிட்டான்  வெற்றி.  

“என்னதான் சொல்லு கருவாச்சி..! அந்த ரிஸ்க் எல்லாம் நமக்கு வேண்டாம்...எப்பவும் நாம் இருவர்...நமக்கு ஒருவர் மட்டும்தான்....”  என்று வேண்டுமென்றே கருவாச்சியை  அழுத்திச் சொல்ல,  அவ்வளவு தான்..!

அவனின் கருவாச்சி என்ற அழைப்பில், அதுவரை அவள் கெஞ்சி கொண்டிருந்த விஷயம் மறந்து போக,  முகத்தில் ஜிவ்வென்று கோபம் பொங்கி வந்தது..!  

“யாருடா கருவாச்சி? “ என்று அவளின் திரண்ட உதடுகள் கோபத்தில் துடிக்க, நுனி  மூக்கு விடைக்க, ரௌத்திரத்துடன்  அவனை முறைத்துப் பார்க்க

“இது இது இது தான் எனக்கு வேணும்...! இதைத்தான் எதிர்பார்த்தேன்..!  என் பொண்டாட்டி இப்படி இருந்தா தான் இன்னும் கிக் ஏறும்...”  என்றவாறு  அவளை  தாபத்தோடு இழுத்து, தன் மீது போட்டுக்கொண்டவன், அவளை இறுக்கி அணைத்து அவளின்  கோபத்தை குளிர வைக்க ஆரம்பித்தான் அந்த காதல் கணவன்.!  

******

ற்றொரு அறையில் தன் பேத்தியை மார்பின் மீது  போட்டு தட்டிக் கொடுத்து அவளை தூங்க வைத்துக்கொண்டு  இருந்தான் ராசய்யா..!

எப்பொழுதும் மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு, லேசாக  முறைத்துக் கொண்டு இருக்கும் ஜமீன் தாத்தாவை விட, அவளை தூக்கி தன் முதுகின் மீது உட்கார வைத்துக்கொண்டு யானை சவாரி செய்யும் ராசு தாத்தாவைத்தான் அந்த இளையவளுக்கு ரொம்ப பிடிக்கும்..!

ராசய்யா வந்துவிட்டால் போதும்...!

ராசு தாத்தா என்று அவனோடுதான் சுற்றிக்கொண்டிருப்பாள் அந்த குட்டி தேவதை...!

அவனுக்கு அடுத்துதான் பூங்கொடியிடம் வருவாள்..!

இன்றும் காலையில் இருந்தே ராசய்யாவை சுற்றிக்கொண்டிருந்தவள்..! தன் இரவு உணவை முடித்தபிறகு தாத்தா உடனேயே அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்துவிட்டாள்..!

ராசய்யாவும் தன் பேத்தியுடன் கதை சொல்லி விளையாண்டவன் இப்பொழுதுதான் களைத்துபோய் அவளை தன் மார்பின் மீது படுக்க வைத்தவாறு தட்டி கொண்டுத்து கொண்டிருந்தான்..!

அவன் முகத்திலோ அப்படி ஒரு பூரிப்பு..!  எங்கயோ ஒரு குக்கிராமத்தில் இருந்தவனை கொண்டு வந்து ஜமீன்தாருக்கு சம்பந்தி ஆக்கிவிட்டாள்..!

அதோடு இன்று பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் கூட அவனை திரும்பி பார்க்கும் அளவுக்கு தனக்கு பெருமை சேர்த்துவிட்டாள் தன் மகள் என்று அவன் மனம் பூரித்து இருந்தது..!

ஆனால் அவனுக்கு எதிர்மறையாக, அவன் அருகில் படுத்து இருந்த அவன் மனையாள் பூங்கொடியின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது..!    

“சை... எனக்குன்னு வந்து வாய்ச்சது பார்....” என்று ஏதேதோ சொல்லி வாய்க்குள் முனுமுனுத்தவள், பின் தன் கணவன் பக்கமாக ஒருக்களித்து படுத்துக்கொண்டவள்  

“யோவ்  மாமா...!  உன் புள்ள பொறந்ததும்   புள்ள புள்ளைனு புள்ளயவே   தூக்கி வச்சு கொஞ்சிக்கிட்டு இருந்த..!  அப்புறம் என் புள்ளையோட கனவு கை சேரணும்னு சதா அவளிடமே ஒட்டிகிட்டு இருந்த..!

இப்பதான் உன் புள்ள சாதிச்சுட்டா இல்ல...! இனிமேலாவது இந்த பொண்டாட்டிய கொஞ்சம் கண்டுக்கலாம் இல்ல...”  என்று கோபத்தோடு ஆரம்பித்து ஆதங்கத்தோடு முடித்தாள் பெரியவள்..!  

“ஹா ஹா ஹா....” என்று பெருங்குரல் எடுத்து சிரித்தவன்

“இப்ப என் பேத்தி வந்துட்டாளே..! என் பேத்திய நல்லா வளர்த்து,  அவளை டாக்டர் ஆக்கணும்...”  என்று சொல்ல வர,  பட்டென்று அவன் வாயில் கையை வைத்து மூடினாள் பூங்கொடி.  

“ஐயா சாமி...  இந்த மாதிரி எதையாவது சொல்லி வைக்காதீங்க..!  எல்லாம் அவ  பெருசானதும் என்னவாக ஆகணும்னு தோணுதோ அதுப்படி படிச்சுட்டு போகட்டும்..!  

சின்ன வயசுல இருந்தே அது ஆவணும், இது ஆவணும் னு   எதையாவது சொல்லி வச்சு,  அப்புறம் அது நிறைவேறாமல் போனால்,   எத்தனை கஷ்டம்... மன வேதனை...!

அப்பப்பா...போதும் டா சாமி..! நம்ம பொண்ணு விஷயத்தில் நாம பட்ட க்ஷ்டம் போதும்..! எப்படியோ அவளை அந்த கஷ்டத்தில் இருந்து மீட்டெடுத்துட்டோம்... அது மாதிரி யாருக்கும் வரக்கூடாது..!  

தயவு செஞ்சு இனிமே இப்படி ஏதாவது உளறுவதை விடுங்க...” என்று ஏக வசனத்தில் திட்டி வைத்தாள் பூங்கொடி.

தன் மனைவியின் கோபத்தை தன்னை மறந்து ரசித்தான் ராசய்யா...!   

இப்பொழுது அவளும் தன் பேத்திக்கு பாட்டி ஆனாலும்,  இன்னும் இளமை ததும்பும் தன்னவளை தாபத்தோடு பார்த்தவன்,

வயசானாலும் உன் அழகும் இளமையும் கொஞ்சமும் குறையலடி...என்ன ரகசியம் டி? “ என்று காதோரம் கிசுகிசுக்க,

எப்படியோ தன் கணவன் பார்வை தன்னிடம் வந்துவிட்டதை கண்டு மலர்ந்தவள், தன் கோபத்தை மறந்து தன் கணவன் உடன் சரசமாடினாள்..!

“அங்க மட்டும் என்னவாம்..? இப்ப நீங்க தாத்தா ஆனாலும் இன்னும் உங்க மிடுக்கும், கம்பீரமும் கொஞ்சமும் குறையலையே மாமா ...” என்று காதலுடன் சொல்ல,

அதுக்கு காரணம் நீதான் டி...!  ஒருத்தனுக்கு மனசுல நிம்மதியும், சதோஷமும் ரொம்ப இருந்தாலே கம்பீரமும், மிடுக்கும் தானா வந்திடுமாம்..!

அப்படி எனக்கு எவ்வளவு கஷ்ட, நஷ்டத்திலும் துணை நின்று தாங்கி, நம்ம பொண்ணையும் இன்னைக்கு நல்ல நிலைக்கு கொண்டுவர, எனக்கு பக்கபலமாய் இருந்தவ நீதான்..!

நீ மட்டும் என் வாழ்வில் வராமல் போயிருந்தால் என் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி இருக்கும்..!

இன்னைக்கு பாத்த இல்ல... முதலலைச்சரை எல்லாம் நேர்ல பார்க்கிற பாக்கியம் நம்ம பொண்ணால நமக்கு கிடைச்சது..! அப்படிப்பட்ட பொண்ணை பெத்துக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி டி...”  என்று தழுதழுக்க,

“அச்சோ மாமா...இதுக்குப்போய் யாராவது கண் கலங்குவாங்களா? உன் பேத்தி பாத்தா ஷேம் ஷேம் பப்பி ஷேம் னு தலையில அடிச்சுக்குவா...” என்று தன் கணவனை சமாதானபடுத்த முயல,

“ஹீ ஹீ ஹீ என் கண்ணு ஒன்னும் கலங்கலடி... அது கொஞ்சம் வேக்குது...அவ்வளவுதான்....” என்று அசட்டையாக சிரிக்க,

“அதான பாத்தேன்....கீழ வுழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைங்கிற புத்தி இன்னும் போகல...” என்று கிண்டலாக சிரிக்க,  மலர்ந்து சிரித்த தன் மனையாளை தாபத்தோடு இழுத்து அணைத்துக்  கொண்டான்  ராசய்யா..!  

இந்த இரண்டு ஜோடிகளும் இன்னும் பல ஜென்மங்கள் இதே அன்பும், காதலும் கொஞ்சமும் குறையாமல் வாழ, வாழ்த்தி விடை பெறுவோம்.  நன்றி..!  

***** சுபம் ******

இந்த கதையை பொறுமையாக வாசித்து ரசித்த அனைத்து வாசகர்   தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

மீண்டும் ஒரு புதிய கதையுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்...நன்றி!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்.

Share:

3 comments:

  1. Nice story...all characters are so good 👍....also this story is motivated to achieve our goal......vetri and raasu are very good husband and a father..they both love his black colour wife without hesitation..........💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

    ReplyDelete
  2. Keep writing.....all the best for your success

    ReplyDelete
  3. Thanks pa! will start new story soon!!

    ReplyDelete

Followers

Total Pageviews